யார் இந்த நிலவு- 42.
”அம்மா, ஆயி, மா, மாதா, மம்மி , மாம் “ எத்தனை மொழிகளில் எப்படி அழைத்தாலும் ,அந்த வார்த்தை தரும் உணர்வுக்கு உலகில் நிகரானது எதுவும் இல்லை. எத்தனை வயது ஆன போதும், அவருக்கு ஒரு தாய் இருந்தால், அந்த வயதிலும் அவர் சேயாகி, செல்லம் கொஞ்சிக் கொள்ளலாம்.
பைரவி பாய் கைலாஷ் ராஜ் போஸ்லே, பிறந்த இடம், புகழ் மிக்கதாய், செல்வ வளத்தோடு இருந்ததே, அவர் பிரச்சனையாக, இருபத்திரண்டு வருட போராட்டத்துக்குப் பிறகு, குடும்பத்தோடு சேர்ந்துள்ளார். தன பொறுப்பு, என மகளைக் காப்பாற்றி இருப்பதில், சாம, பேத , தண்டம் என அத்தனையும் பயன்படுத்தி, எப்போதும் தீவிரமான சிந்தனை, பொறுப்பு என இருந்தவர், கணவரிடம் வரவுமே , சாய்ந்து கொள்ளத் தோள் கிடைத்தது என ஆசுவாசம் அடைந்தார். வாரிசாக ஓர் மகனும் இருப்பதில், நிம்மதியடைந்தவர், தன தாயைப் பார்க்கவும், இது நாள் வரை சுமந்த அத்தனை பாரத்தையும் துறந்து, பதின்ம வயது மங்கை போல், மீண்டும் மணாளன் கரம் பிடிக்க, ஆர்வமானார், ஆனால் ரமாபாயின் அதிரடி முடிவுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் எனப் பார்க்க வேண்டும்.
ரமாபாய் போஸ்லே, சுற்றம், சொந்தம் சூழ ஆர்ப்பாட்டமாய்க் கே ஆர் மில் வளாகத்துக்குள் வந்தது சேர, எதிர் சேவையை ,எதிர்பார்ப்பதாய் , ஏற்கனவே மகளுக்குச் செய்தி அனுப்பி விட, சௌந்தரி நொடித்தாலும், பரபரவென ஆட்களை வைத்து ஆரத்தியைத் தயார் செய்தார்.
சம்மந்தியை வரவேற்க, கே ஆர் மில் வாசலுக்குப் பாலநாயகம், நண்பர்களோடு, அறிமுகத்துக்கு விஜயனை அழைத்துச் செல்ல, கைலாஷ் ராஜ், புது மாப்பிள்ளையாகக் கெத்தாக வீட்டில் தான் இருந்தார். அம்மா, மனைவி , மகள், அத்தை, சித்தி எனப் பெண்கள் கூட்டத்துக்கு நடுவிலிருந்தாலும், தன் மொபைலில், செக்யூரிட்டி கேமரா வழியாக, வாசலில் நடப்பதைப் பார்த்திருந்தார்.
“ராஜ், ஆயி வந்துட்டாங்களா” என அவர் அருகில் அமர்ந்து, அலைப்பேசியை எட்டிப் பார்க்க, “ஏனுங்க அம்மணி, சின்னபுள்ளையாட்டமா கேக்குற, ஆயியை கடைசியா எப்ப பார்த்த” என வினவினார்.
“குன்னூர் போகும் முன்ன, இரெண்டு வருஷம் இருக்கும், ஆனால் வீடியோ கால்ல பேசுவேன்” என விவரம் சொன்னவர், “ரஜ்ஜுமாவை, ஆயி குழந்தையில் பார்த்தது தான். போட்டோ மட்டும் அனுப்பி விடுவேன்” என விவரம் சொல்ல, “நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, பாவு போட்டுக் கொடுத்து நானிட்ட பேசினேன் ஆயி “ என ஆதிராவும் தகவல் தந்தாள்.
அதற்குள் டோல் வாசிப்பவர்கள் சத்தம், காதை பிளக்க, மற்ற வாகனங்கள் ஒதுங்கி நிற்க, எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு வந்து இரண்டு வாகனங்கள் நின்றது. முதலில் வந்ததிலிருந்து,இறங்கிய ஆதர்ஷ் எதிரே நின்ற தாத்தா பாலநாயகத்தின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்க” நல்லா இரு கண்ணு” என வாழ்த்தினார்.
விஜயன், ரமாபாய்க்கு காருக்குள் குனிந்து பார்த்து வணக்கம் சொல்ல, அவரும் பதில் வணக்கம் சொல்லி இறங்கப் போக, நாயகம், “மாப்பிள்ளை, அவிகளை வீட்ட்டுக்கு வந்து இறங்கச் சொல்லுங்க, இங்க வேண்டாம் “ எனக் குரல் கொடுத்து, பேரனோடு கார் அருகே வர, “நமஸ்காரம் பாய்ஸாப் “ என்றார் ராமாபாய். அவரும் திருப்பி வணக்கம் சொல்லி, கேஆர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.
கைலாஷ். மனைவியின் கையைப் பிடித்தவர் “பாரு, ரொம்ப எமோஷனல் ஆகாத” என அழுத்தம் கொடுக்கவும், “ கண்ட்ரோலா தான் இருக்கேன் ராஜ், இருந்தாலும் ஆயியை பாத்தவுடனே உடைச்சிடுவேனோன்னு பயமா இருக்கு” என மற்றொரு கையாளும், அவரைப் பிடித்துக் கொள்ள, “போற போக்குல, சிங்கப்பெண் காணாத போயி, குழந்தை ஆயிவிடுயாட்டத்துக்கு “ எனக் கேலி செய்தார் ராஜன்.
“நீங்க வேண்டும்னா,தாலாட்டு பாடுங்க” என்றவரை, “அதுக்குத் தான் ராஜமாதா வர்றாபடியில்ல , நமக்குப் படே அச்சே லக்தே ஹை … தான் “ எனக் கண் சிமிட்டி சிரிக்க, “ ச்சு,சும்மா வாங்க ராஜ் ” எனக் கன்னங்கள் சிவக்க , கணவரின் சிரிப்பு சத்தத்தோடு, பைரவி தன் ஆயியை எதிர்நோக்கியிருந்தார்.
கௌரி, கஸ்தூரி , சாரதா முதலிலேயே போர்டி கோவில் நிற்க, ஆதிரா,சௌந்தரி கையையும், ரஞ்சனி அபரஞ்சி கையையும் பிடித்து அழைத்துச் சென்றனர். சாரதா தான், ரமாபாயை பார்க்க ஆவலாக இருந்தார்.
போர்டிகோவில் வண்டிகள் வரிசையாக வந்து நின்று பெரியவர்கள் இறங்க, ஆதர்ஷ், நானியை கை பிடித்து இறக்கி விட, ஆதிரா சௌந்தரியுடன் எதிரே நின்றாள். ஆதர்ஷ், தன் இரட்டையை ,நேற்று இந்த நேரம் தானே கடத்தப் பட்டாள் , என்பது நினைவு வர,”ஆது , தூ டீக் ஹை னா “ என, கை நீட்ட, “நீங்க வந்துட்டிங்களே , இனிமே என்ன, டிக் ஹூம் பாவு ” எனக் கட்டி அணைத்து விலக்கியவள், அவன் கண் காட்டவும்,அவள் நானிமாவிடம் செல்ல, இவன் ஆத்தாவிடம் வந்து , இரட்டைகள் இடம் மாறி, தாய் வழி , தந்தை வழி பாட்டிகள் காலைத் தொட்டு வணங்கினர்.
“ஆதர்ஷ் கண்ணு, வாயா “எனச் சௌந்தரி பேரனைக் கட்டிக் கொள்ள, ரமபாய் , தங்களின் அம்சமாய் நிற்கும் பேத்தியைக் கன்னம் வழித்துக் கொஞ்சி, ஆசீர்வாதம் செய்தவர், அந்தக் கணமே, தன கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழட்டி, பேத்தியின் கழுத்தில் போட்டார்.
"ஆயி பவானி, உனக்கு எல்லாச் சுகத்தையும் தரட்டும் " என உணர்ச்சி வயப்பட்டவராக ,மீண்டும் உச்சி முகர்ந்தவர், "அப்படியே, என் பையு தான்" எனக் கட்டிக் கொண்டார்.
சௌந்தரிக்கு , சம்மந்தியம்மா, வந்ததும் வராததுமாகப் பேத்தியை தன பக்கம் இழுக்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது, ஆனால் நீண்ட காலமாகப் பேத்தியை நிழற் படமாக மட்டுமே பார்த்தவர், நிஜத்தில் அவளைக் காண எவ்வளவு ஏக்கம் கொண்டிருந்தார் என்பதை அறிந்தார் இல்லை. இரண்டு பாட்டிமார்களும், அக்னி நட்சத்திரம், கார்த்தி, பிரபு போல் , பேரன், பேத்தியைக் கொஞ்சிக் கொண்டு எதிர், எதிர் நின்றனர்.
சௌந்தரி, மாப்பிள்ளை வீட்டுக் கெத்தை காட்டி நிற்க, பால நாயகம் சம்பந்தியை வரவேற்க வந்து விட்டார். அதற்கு முன்பே, “ நமஸ்காரம் சம்மந்தியம்மா, ரொம்பக் காலம் முன்னாடியே நாம சந்திச்சு இருக்க வேண்டியது , காலத் தைமாதம் ஆகிடுச்சு” என ரமா வணக்கம் வைக்கவும். சௌந்தரி பதில் வணக்கம் வைத்தவர்,
“ பொண்ணைப் பெத்தவிக, நீங்க வந்திருக்கணும், என்ர மகனுக்கு, உங்க மகளைக் கமுக்கமா கல்யாணம் கட்டி வச்சதும் இல்லாமல் , என்ர மருமகளையும் என்கிட்ட இருந்து பிரிச்சு போட்டீங்க, இப்பவாவது , உரிமை பட்டவிககிட்ட ஒப்படைக்க வந்தீங்களே, அதோட சந்தோஷமுங்க, வாங்க” என வரவேற்பிலேயே, ஒரு காட்டுக் காட்ட, நாயகம் மனைவியை அடக்க ஒரு ஹுங்காரம் செய்தார், அவரை ஒரு பார்வை முறைத்து விட்டு, சௌந்தரி, கஸ்தூரி கையிலிருந்து சந்தன மாலையை வாங்கி, ரமாபாய் கழுத்தில் போட்டு வரவேற்றார்.
ரமாபாய் , புன்னகையோடு, “ உங்க மருமகளைத் தான் உங்க சேவைக்கு ஒருவருடம் முன்னாடியே அனுப்பி விட்டுட்டேனே “எனப் பதில் தந்தவர், தங்கை மகள் , ராதாபாய், பாலாஜி ராவ் மற்றும் மகள் ஆராதனா ஆகியோரை அறிமுகப் படுத்தி வைத்தார். அவர்களும் எல்லாருக்குமாக வணக்கம் வைத்து விட்டு, ஆதிராவை அழைத்துக் கொஞ்ச, ஆராதனாவை , “ஆது , இது ஆரா, நம்ம இரண்டு பேருக்கும் சோட்டி “ எனத் தங்கையை ஆதர்ஷ் அறிமுகப்படுத்தினான்.
“ மஸ்து , படியா மஸ்து , ஒரு சோட்டி வேற கிடைச்சிட்டா” என மகிழ்ந்தவள், “ரஞ்சி , இங்க பாரு “ என அவளுக்கும் அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருக்க, அவள் ஆதர்ஷ் கண்டு கொள்ளாததில் அவனைத் தவிர்த்து, அவன் தங்கைகளிடம் உரையாடினாள்.
பெரியவர்கள் அறிமுகமாக, “பொண்ணு வீட்டுப் பக்கம் நீங்க ஒருத்தவிக மட்டும் தானா, இதுக்குத் தான் இந்த ஆர்பாட்டமா “என வம்பிழுத்தார் சௌந்தரி, ரமாபாய் , விசுவாசமான வேலைக்காரர்கள், பாதுகாப்புப் படை, சீர் வரிசைகளோடு வந்திருந்தவர், உறவென ராதா தம்பதியைக் காட்டவும்,
“அவிக, எங்க முறைக்கு இல்ல வருவாங்க, பொண்ணு வீட்டுக்காரங்க, யாரை கூட்டிட்டு வந்தீங்க சொல்லுங்க, சம்பந்தி மரியாதை செய்யணுமுல்ல “ எனச் சௌந்தரி வினயமாகக் கேட்கவும், ரமாபாய் ஒரு நொடி விழித்தவர், ஆதரஸை கைகாட்ட, “அவன், எங்க வம்சம்” என்றார் சௌந்தரி.
பாலாஜி, “சாசுமாவுக்கு ஏத்த சம்பந்தி தான்” என மனைவி காதில் கிசுகிசுக்க, “ படி ஆயி, மூவ் என்னனு பார்ப்போம் இருங்க”என்றார் ராதா. இதேபோல்தான் சுற்றமும் அவர்களைப் பார்த்திருந்து.
ரமாபாய் “ஓ,” என்றவர், விஜயனை அழைத்து, “ பேட்டாஜி, உங்க மனைவி, மக்கள், அப்பா, அம்மாவை கூப்பிடுங்க, பைரவிக்குப் பிறந்த வீடா நிக்கணும் “ எனவும், சாரதா, “அவிக, எங்க சம்மந்தியில்ல “ என வம்பு பேச, “என் மகள் உங்கள் ஆளுன்னா, உங்க மகள் என் ஆளு தானே பாபி “எனச் சாராதவையும் சாய்க்க,
“ஆமாம், பவானி எனக்கு மகளாகுது “ என ராமசாமியும், பன்னீரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ள, “பையு, சொல்லியிருக்கா, கொழுந்தனாரை இங்க எப்படி முறை சொல்றது, உங்களை விட நான் சின்னவளா தன இருப்பேன், ஜீஜாஜினு சொல்லலாங்களா, அபி தீதி நீங்க சொல்லுங்க” என ராமாபாய் நிமிடத்தில் , சௌந்தரியின் நட்புகளை, தன பக்க சொந்தமாக்கிக் கொள்ள,
“ ஜீஜாஜினா , மச்சி, மாமான்னு கூப்பிடறது தானுங்களே, நல்ல கூப்பிடலாம் அம்மணி, சரியான முறை தான்” என ராமசாமி ஜால்ரா அடிக்க, பன்னீரும் ராமாபாய்க்கு ஒத்து ஊதினார். சுப்பு , பாலாவிடம் கண்ணைக் காட்டினார். “ராணியம்மா நம்மளுக்குத் தங்கச்சி முறையாகுது, விடு ” என்றார் பாலா.
சௌந்தரி, சாரதா, சுப்பு, ராதா, பாலாஜி, பேரன் , பேத்தியையும் தன அணியில் இழுக்க, ரமா “விஜி, உங்க முல்கா , முல்கி எங்க “என வினவ, ஆதிரா முகம் வாடிப் போனாள் , ஆதர்ஷ் கண்ணால் வினவ ,”பாபா” என்று மட்டும் வாயசைத்தாள் . ரஞ்சனியை அறிமுகம் செய்தவர், “அபி, வீட்டில் இருக்கான்” எனவும் “வரச்சொல்லுங்க”என ராஜமாதா கட்டளையிட்டார்.
ஒரு வழியாக, சமந்த முறைக்கு, ரமாபாயோடு, ராமசாமி,அபரஞ்சி, பன்னீர்,விஜயன் குடும்பத்தையும் நிற்க வைத்து, பாலா சுப்பு சந்தன மாலைகளை அனுவிக்கச் சௌந்தரி, சாரதா ஆராத்தி எடுக்க, “பொண்ணு வீட்டுகாரவிக தான் , இதையெல்லாம் செய்யோணும்” எனக் குறை பட்டவரிடம், “பாரத் வருவீங்கல்ல, அப்ப செய்வோம்” என்ற ரமாபாய், அடுத்து சௌந்தரியின் சந்தேகத்தைத் தீர்க்கும் பொறுப்பை, தன்னை வந்து வணங்கிய கௌரியிடம் கொடுத்து விட்டு, மகள், மருமகனிடம் முன்னேறினார்.
விஜயன் மற்றவர்களை உள்ளே அழைக்க, பாலாஜி ராவ், போஸ்லே குடும்பச் சார்பாகக் கொண்டு வந்த பரிசுப் பொருட்களைத் தங்கள் ஆட்களைக் கொண்டே உள்ளே வைக்கச் சொன்னார். கௌரி சொந்தரியிடம் சொல்லி விட்டு உள்ளே எடுத்து வைத்தார்.
எவ்வளவு கட்டுப் பாடோடு, கைலாஷ் கைப்பிடியில் நின்ற போதும், தன் அம்மாவைக் கண்ட பைரவி, “ஆயி “ என அவரை நோக்கி வந்து காலை தொட்டு வணங்கக் குனிய, கைலாஷும் ,”வநம்மமுக்கச் சாஸுமா” என்றபடி சேர்ந்து குனிந்தார்.
பாலா, சௌந்தரியிடம், “உன்ர மகன்,நம்ம கால்ல எப்பவாவது விழுந்திருக்கான்” எனக் கிசுகிசுத்தார், “ மாமியா , ராணியம்மால்ல ,பிடிப்பான்” என இன்று மகனுக்குக் கோடி பிடிக்க மறந்து , கணவருக்குப் பின் பாட்டுப் பாட, பன்னீர் ஆட்சேபித்தார்.
ஆனால், ரமாபாய் மக்களும்,மருமகனும் காலில் விழும் முன் , இரண்டு கைகளாலும் அவர்களைப் பற்றியவர், “ஜீத்தே ரஹோ ,ஆயி பவானி உங்களுக்கு அருளட்டும்” என்றவர், மகளைத் தலை முதல் பாதம் வரை பார்த்தார். “நான் கண்ணை மூடும் முன்னை, தாமாத் ஜியோட உன்னைச் சேர்த்து வச்சு பார்க்கணும்னு ஆசைப் பட்டேன் , பார்த்துட்டேன், இனிமே நிம்மதியா கண்ணை மூடுவேன் “ எனவும் ,”ஆயி, சுபமா பேசுங்க” என உரிமையாகக் கோபித்தார் பைரவி.
மகளைத் தழுவி, உச்சிமுகர்ந்து, “நான் மட்டும் சுபமா பேசணும், நீ என்ன செஞ்ச, எல்லாம் கூடி வர்ற நேரம், விட்டுவிட்டுப் போகப் பார்த்தியே, அன்னைக்குப் பயந்துட்டேன்டி பையூ “ எனக் கண்ணீர் சொரிய, பைரவி அதற்கு மேல், உணர்ச்சி வயப்பட்டு , ‘இவ்வளவு பெரிய ஷாக் கொடுத்தா, ஏன் ஆயி எனக்கு மகன் பிறந்ததையே மாறிச்சீங்க ” என,ஆதர்ஷை காட்டி அம்மாவிடம் கோபிக்க, “அம்மணி, அதையே நான் சொல்லணும் “ என்றார் கைலாஷ்.
" உனக்குத் தெரிஞ்சா பார்க்கணும்னு ஆடம் பிடிப்ப, உன் மகளைக் காப்பாத்துறதுக்குள்ளையே எத்தனை பாடு, ஒண்ணாவது பொழைச்சு கிடைக்கட்டுமேன்னு பார்த்தேன்" என மக்களுக்குச் சமாதானம் சொல்லி விட்டு,
“ நான் மன்னிப்பு கேட்கணும்னா, அது உங்க கிட்டத் தான் கேட்கணும் தாமாத்ஜி, எனக்கு அன்னைக்கு இருந்த சூழ்நிலை, தாயும் பிள்ளைகளையும் காப்பாற்றும் முன்ன, நான் பட்ட பாடு, ஆயிபவானிக்கு தான் வெளிச்சம், இருந்தாலும் தப்புத் தப்பு தானே,” எனத் தன் கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்கவும் ,
அவர் கைகளைப் பற்றிய ராஜன், “ நான் அன்னைக்குச் சந்தனக்கட்டிலிருந்து , பாருவையும் சேர்த்திக் கூட்டிட்டு வந்திருக்கோணுமுங்க , அதுக்கான தண்டனை தான் அனுபவிச்சிட்டேன், என் குடும்பத்தைக் காப்பாற்றிக் குடுத்துருக்கீங்களே அதுவே போதுமுங்க” என்றார்.
“இன்னும் எதுவும் முடியலை தாமாத்ஜி, க்ளைமாக்ஸ் ல இருக்கோம், அன்னைக்கு இருந்த அத்தனை ஆபத்தும் இப்பவும் இருக்கு “ என ரமாபாய் அழுத்தமாகச் சொல்லவும், பைரவி அவரை அதிர்ந்து பார்க்க, அவருக்குச் சூசகமாய் உரைத்தவர்,
மருமகனிடம், “ஆனால் உங்க வளர்ச்சி, ஒரு பெரிய மாற்றம், நம்பிக்கை . சொல்லப் போனால் உங்களை வச்சு தான் காயை நகர்த்துறேன், இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டேன்” என ரமாபாய் நிறுத்தினார்.
“ என்னை வச்சு தான் நகர்த்துறீங்கன்னு, உங்க சிப்பாய் வந்த அன்னைக்கே புரிஞ்சு போச்சுங்க , இனிமே நான் பார்த்துக்குறேனுங்க சாஸுமா, நீங்க ஓய்வெடுங்க “ எனக் கைலாஷ் நம்பிக்கை தந்தார்.
“ நீங்க பார்த்துக்குவீங்கன்னு தான் வந்திருக்கேன் தாமாத்ஜி, படே தாமாத்ஜிக்கு , என்ன ஆனதுன்னு தெரிஞ்சுகிட்டேன், சபாஷ் “ என அவர் சிரிக்க, “ஆயி, அவர் சும்மாவே ஆடுவார்.நீங்க ஏத்தி விடாதீங்க” எனப் பைரவி தாயை அடக்கினார்.
“பாரு, உனக்குத் தொல்லை தந்தவங்க யாரா இருந்தாலும் அனுபவிப்பாங்க ” என்ற கைலாஷ், மனைவியையும்,மாமியாரையும் அழைத்துச் சென்று சோபாவின் ஒரு புறத்தில் அமர்த்தினார்.
ஆதர்ஷ், “ஆயி” என வந்து பெற்றவர்கள் அவர்கள் காலில் விழ , அவனை நிறுத்தி, அனைத்துக் கொண்ட கைலாஷ், “மரியாதை,மனசில் இருந்தா போதும் கண்ணு” என்றார். பைரவி,மகனை உச்சி முகர்ந்தவருக்கு ,தன் ஆயியிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தது.
அதற்குள், ராதாபாய், “தீதி “ என் வந்து பைரவி கையைப் பிடிக்க, கைலாஷ் பாலாஜி ராவிடம் , ஆதர்ஷை வளர்த்த விதம் குறித்துப் பாராட்டி, நன்றியையும் சொன்னார். ராதாபாய், “ஒருமாச குழந்தையா, படி ஆயி, ஆஷுவை எங்க கொடுத்தாங்க, எங்க பையனா தான் அவனை வளர்த்திருக்கோம், என்னைவிட ,ஆஷுவோட பாபா, அவன் மேல உயிரையே வச்சிருக்கார்” என ராதா,பேச்சுக்குப் பேச்சு ஆதர்ஷ் மேல் உரிமையை நிலை நாட்ட
"எஸ் மாம், நீங்களும், பாஜி டேட் இரெண்டு பேரும் இல்லைனா நான் இல்லை, நான் என்னைக்குமே உங்களுக்குக் கடமை பட்டவன்" என ஆதர்ஷ் பெற்றவர்கள் முன்னே சொல்லவும் , கைலாஷ், பாரு இருவருமே ஓர் இயலாமையோடு தான் பார்த்திருந்தனர்,
மகளின் பார்வை புரிந்து, ரமா பாய், ராதாவைப் பேச்சில் திருப்பி, நிலைமையைச் சமாளித்தார். ஆதிராவும் கௌரியிடம் தான் வளர்ந்தாள் , ஆனால் மகள் மீது உள்ள உரிமை கூட மகன் மீது இல்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவன் கைலாஷை பாஸ் என அழைப்பதற்கும், ஏதோ காரணம் இருக்கிறது எனவும் புரிந்து கொண்டார்கள்.
ஆதிரா, “பாபா, எனக்கு ஒரு சோட்டி , கிடைச்சிருக்கா “என்ற மகளை , “அப்புறம் என்ன, ரஜ்ஜும்மாவுக்கு மஸ்து தான் “ என மகளை வம்பிழுத்தார் ராஜ். “பாஸ், என் பெஹனா, மஸ்துக்குத் தான், நீங்க தண்டனை கொடுத்திங்களாமே “ என ஆதர்ஷ், தங்கைக்காக நியாயம் கேட்க, ஆதிரா முகம் வாடினாள்.
“ஓ,என் நாதியை இன்னைக்குத் தான் பார்க்கிறேன், தாமாத்ஜி எனக்காக , தண்டனையை ரத்து பண்ணுங்க. அவங்க தண்டனை எல்லாம் நான் ஏத்துகிறேன் “ என்றார் ரமாபாய் , ராஜன் பைரவியைப் பார்க்கவும், “ப்ளீஸ் “ எனக் கண்களால் கேட்க.
விஜயனைப் பார்த்து, “அவனை வரச், சொல்றா “ எனவும், “மாமா கூப்புட்டிங்களா ” என அவர் வீட்டுக்குள்ளே இருந்து வந்த அபிராமை , “அட ராஸ்கோலு , உன்னைய என்றா சொன்னேன், என்ர வார்த்தைக்கு மதிப்பே கிடையாது ” என்றார்.
“அப்புச்சி தானுங்க மாமா, போன் போட்டு கூப்புட்டாங்கங்க, மாட்டேன்னு எப்படிங்க சொல்றது, உங்களுக்கு முன்னாடியே வந்துட்டேனுங்க, மத்திய சாப்பாடே இங்க தானுங்க ” எனவும், ராஜன் நாயகத்தைப் பார்க்க, அவர் ,வந்தவர்களைக் கவனிப்பதில் மும்மரமாக இருந்தார்.
“ மாமா,ஆரா பேபியை தானே பார்க்க கூடாதுன்னு சொன்னீங்க , நான் பார்க்கவே இல்லிங்களே “என அபிராம், அப்போதும் ஆதிரா பக்கம் திரும்பாமல் நின்று மாமனைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்.
“படேபாபா , நான் இப்போதான வர்றேன், இவங்க யாரு, நீங்க ஏன் என்னைப் பார்க்க கூடாதுன்னு சொன்னீங்க” என ரஞ்சனி வயதை ஒத்த, ஆராதனா ராஜனைக் கேள்வி எழுப்ப, “நான் எப்ப கண்ணு சொன்னேன்” எனப் புதிதாய் பார்த்த, மகளையும் ராஜன் வாஞ்சையாய் கொஞ்ச, “ஆராபேபி ன்னு சொன்னாங்களே “ என ஆராதனா சொல்லவும் , ஆதிரா அபிராமை முறைக்க,
“அய்ய , அம்மணி, நான் என்ர ஆராவை , ஆதிராவை சொன்னேனுங்க” என அவசரமாக விளக்கம் தர, ஆதர்ஷ், “மச்சி, செல்லப் பேர் வைக்கிறதே,ஸ்பெஷலா கூப்பிடத்தான், ஆதிராங்கிற பேரே ஸ்பெசல் தான், அதில ஒரு எழுத்தை குறைச்சு, இப்படி அநியாயமா என் ரெண்டு தங்கச்சிகள்கிட்ட மாட்டிகிட்டீங்களே ” என வம்பிழுத்தபடி , பெரியவர்கள் பேச இடம் கொடுத்துச் சிறியவர்கள் ஓரம் கட்டினர். ஆனாலும், அபிராமோ, ஆதிராவோ ஒருவரையோ ஒருவர் பார்க்கவோ, பேசவோ முயலவில்லை, ரஞ்சனியின் முயற்சிகளும் பலன் தரவில்லை , இருவரும் கட்டுப் பாட்டோடு இருந்தனர், மற்ற மூவரும் கேட்ட போது கூட, கைலாஷ் ராஜனின் வார்த்தைகளை மீற மாட்டோம் என அவரவர் வார்த்தைகளில் மொழிந்தனர்.
ஆதர்ஷ்க்கு, தன் பாபா மேல் , அபிராம் வைத்திருக்கும் மரியாதை, ஆச்சரியத்தைத் தந்தது, ஒரு நேரம்,மாமன் மருமகன், நண்பர்களைப் போல் பழகுவார்கள், மறு நேரம், குரு-சிஷ்யனாய், தந்தை-மகன் போல் என அவர்கள் உறவு ஆச்சரியத்தைத் தந்தது. பாலாஜி ராவ் -ஆதர்ஷ் உறவில், எப்போதும் அன்பும், பாசமும் இருந்தாலும், கடமை உணர்வும், மரியாதையும் அதிகமாக இருக்கும். இவர்களைப் போல், கேலி கிண்டலுக்கு இடமிருக்காது. ஆதர்ஷும் , கைலாஷின் தந்தை பாசத்துக்காக ஏங்கினான், ஆனால் ராதா-பாலாஜி இருக்கும் போது மேலும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது.
வசந்த விலாசத்துகாரர்கள், ராதா பாய் குடும்பமும் அங்கே , மறுபுறம் அமர்ந்து, ஒரு குழுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். ரமாபாய் , கௌரியை அழைத்து, பரிசுப் பொருட்கள் அடங்கிய தட்டுகளை அடையாளம் சொல்லி, அவர் எடுத்துத் தரவும், தன கையாலேயே பாலநாயகம், சௌந்தரி முதல் , பெரியவர் சிறியவர் என ஒவ்வொருவருக்காய், அவர்கள் விருப்பம் அறிந்து பரிசுப் பொருட்களைத் தந்தார்.
“ராணியம்மா,இது எப்படிங்க” எனப் பன்னீர் வியந்தபடி கேட்டே விட்டார், “ என் மகள், உங்க எல்லாருக்கும் கேர் டேக்கரா தான் வந்தா, நீங்க எல்லாரும் அவளை மகளா,மருமகளா பார்த்துக்கிட்டீங்களே, அவள் சொன்னதை வச்சு வாங்கினது. “என்ற ரமாபாய் மீது, எல்லாருக்குமே பெரும் மதிப்பு தான் வந்தது.
அடுத்தடுத்த நிகழ்வுகள், கல்யாணம் வரை யார் முறைப் படி திருமணத்தை நடத்துவது என ஆளாளுக்கு ஒன்று பேச, சம்மந்தி சண்டையானது. கடைசியில் , சௌந்தரி “நாளைக்கு என்ர பொண்ணுங்க வர்றாங்கங்க , அவிககிட்டையும் கலந்து கிட்டு எங்க முறைப் படி தான் செய்யோணும் “ எனச் சௌந்தரி முடிக்க, ரமாபாய் , விஜயனையும், பைரவியையும் அர்த்தமாய்ப் பார்த்தார்.
பைரவி,தன் ஆயியின் கையைப் பிடித்து, எதுவும் பேச வேண்டாம் என அமைதிப் படுத்தினார். மற்றவர்கள் கிளம்பட்டும் என அமைதி காத்த ரமா பாய் , தன் ஜாகைக்குச் செல்லும் முன், மருமகனிடம் வந்தார்.
“தாமாத்ஜி, என் மகளும் , பேரன், பேத்தி எங்க இருந்தாலும், அவங்க பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது என் ,பொறுப்பு. “ எனப் பீடிகை போட்டவர், “ “நீங்க சம்பாதிச்ச, சொத்து முழுசும், உங்க மகன்,மகள் பேரில் எழுதுங்க, நெருப்புன்னா வாய் வெந்திடாது, ஆயி பவானி என் குடும்பத்தைக் காப்பாற்றட்டும்” என வேண்டியவர்,
“ உங்க மகன்,மகளுக்கு எதுவும் ஆனால், அந்தச் சொத்து தர்மத்துக்குப் போகும், வேற யாரும் அனுபவிக்க முடியாதுன்னு எழுதுங்க, நான் , உங்க குடும்பத்தை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்” என ஒரு நிபந்தனையை வைக்கவும் , கே ஆர் குடும்பமே அதிர்ச்சியாகப் பார்த்தது.
இவ்வளவு நேரம் , சரியாகப் பேசிக் கொண்டிருந்த ரமாபாய், சௌந்தரி மகள்கள் வருகின்றனர் எனச் சொல்லவும், சொத்தை எழுதி வைக்கச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன, கைலாஷ்-பாருவின் பிரிவில் , அவர்கள் கை உள்ளதா, நாளை கைலாஷின் சகோதரிகள் வரவும், என்ன நடக்கும்.
நிலவு வளரும்...
No comments:
Post a Comment