யார் இந்த நிலவு-46
கௌரி பூஜை, ஆதிசக்தி அவதாரமான பார்வதி தேவி சிவனாரை அடைய, கைலாச மலையில் கடும் தவம் புரிந்தார். அதில் ஒன்று தான் இந்தக் கௌரி பூஜை. மூன்று, ஐந்து, ஏழு, பதினாறு என அவரவர் மனதுக்கு உகந்தபடி, நல்ல வரன் அமையவும், கணவரின் ஆயுள், மாங்கல்ய பலனுக்காகவும், குடும்பம் சிறக்கவும் வேண்டி கௌரி விரதமிருப்பார்கள்.
பார்வதி தேவி, தன் பூஜைக்காக மண்ணால் ஆன சிவலிங்கத்தை வடிக்க முனையும் போது, சிவனார் அதிலும் பல சோதனைகளைச் செய்தார். தன் தங்கையான பார்வதி தேவிக்கு நாராயணனே உதவி புரிந்து, இறைவனாலும் மறுக்க இயலாத சிவலிங்கத்தைச் செய்து கொடுத்தார். தமையன் செய்து கொடுத்த சிவலிங்க மேனியை வைத்து பார்வதி தேவி தன் பூஜையைச் செய்ய, அவர் வழி வந்தவர்கள், அந்த ஆதிசக்தியான அன்னையையே ஸ்தாபித்துத் தங்கள் பூஜையைச் செய்தனர். காவிய நாயகி சீதையும் ,ராமனைக் காணும் முன் இந்தக் கௌரி பூஜையைத் தான் செய்தார்.
பைரவி, ஆயி துல்ஜா பவானியை வேண்டி, இந்தப் பூஜையை, தன் மாங்கல்ய பலத்துக்காகவும், குடும்பம் ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்து வாழ வேண்டுமென வேண்டி கௌரி பூஜையைச் செய்தார். இதில் நாள் முழுவதும், ஆகாரம் சாப்பிட மாட்டார்கள், ஆனால் பைரவியின் வயதையும்,உடல் நலத்தையும் உத்தேசித்து, கைலாஷின் வற்புறுத்தலால் பழங்களையும் , பழச்சாறுகளையும் எடுத்துக் கொண்டார். இதன் மற்றொரு பலன், ரமாபாய் பரிசோதித்து, கௌரியால் கொடுக்கப் படும் உணவை மட்டுமே பைரவி சாப்பிடுவார். அதனால் மற்றவர் கொடுக்கும் உணவு பண்டங்களைத் தவிர்க்க முடியும் என யோசித்தே ரமாபாய் ,மகளை இந்த விரதத்தை அனுஷ்டிக்க வலியுறுத்தினார்.
பைரவி பாய், கௌரிக்குப் பூஜைக்கு எனக் காஞ்சிப் பட்டில் ,ஒன்பது கெஜம் கொண்ட நவ்வாரி சேலையை, மராத்திய சேலை கட்டில் , க்ளோஸ் நெக் ப்ளௌஸ் , கொண்டையிட்டு மலர் சூடி, ஆபரணங்கள் பூட்டி ,கண்ணனுக்கு மையெழுத்தி, சந்திரப் பிறையாய் பொட்டு வைத்து,நெற்றி வகிட்டில் குங்குமம் நிறைத்து, மூக்குத்தி மிளிர ,தனது குடும்பப் பாரம்பரிய வளையல்களோடு , கணவரிடம் விரும்பி கேட்டு, அவர் வாங்கித் தந்த கண்ணாடி வளையல்கள் பூட்டி அம்சமாகத் தயாராகியிருந்தார்.
கைலாஷ் முகூர்த்தக் கால் ஊன்றிய போது, பாலநாயகமும், சௌந்தரியும் , இளமைக்காலத்தில் மகன் தொலைத்த சந்தோஷம், இப்போதாவது இரட்டிப்பாகக் கிடைக்க வேண்டும். மீதமிருக்கும் காலத்தையாவது, மகன், மனைவி மக்களோடு குடும்பம் நடத்த வேண்டும் என மருத மலை ஆண்டவனை வேண்டி சடங்குகளைச் செய்தனர்.
கண்கலங்க நின்ற நாயகத்தை, நண்பர்கள் தேற்ற, எவ்வளவு முயன்ற போதும் பன்னீருக்கு, மகளின் நினைவு வந்து போனது, ஓர் பெருமூச்சோடு ஓரமாகச் சென்று அமர்ந்து விட்டார். சங்கீதா, அவர் அருகிலிருந்த சேரில் வந்தமர்ந்து, கண் கலங்கி மூக்கை உறிஞ்சி, " இந்தச் சாங்கியத்தைப் பார்க்கையில, இத்தனை வருஷமாகியும் ராஜி அண்ணியை மறக்கமுடியலைங்க மாமா. அவிக இருக்க வேண்டிய இடம், எவ்வளவு சந்தோசமா இருந்தோம் " என அவரைப் பைரவிக்கு எதிராகத் தூண்டும் விதமாகப் பேசவும், அவளை ஒரு பார்வை பார்த்த பன்னீர், " அது நாம செஞ்ச தப்பு கண்ணு, ராஜனும் வரும் முன்னை, நாம அவசரப் பட்டிருக்கக் கூடாது. இரண்டு பேர் வாழ்க்கையுமில்ல வீணா பேச்சு" என உண்மையாக வருந்தினார்.
" இரண்டு பேர் வாழ்க்கை எங்கிங்க, இந்தா அண்ணனுக்கு வாரிசெல்லாம் தான் இருக்குது. ராஜி அண்ணி தான் அநியாயமா உசுரை கொடுத்துச்சு" என அவள் வேகமாகச் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பு, " அதையெல்லாம் இப்ப பேசத கண்ணு, போனது போகட்டும், உன்ர பொறந்தவன் இனிமேலாவது சந்தோஷமா வாழட்டும்னு, மனசாரச் சாமியை வேண்டிக்கோங்க" என அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர், பன்னீரிடம், " பவானி, நம்மளை கூப்பிடுது. தகப்பன் முறைக்கு நீ ஏதோ செய்யோனுமாம்" என அழைத்துச் சென்றார்.
சங்கீதாவின் கணவன், மோகன், " உன்ர பர்பாமென்ஸ் எல்லாம் வேஸ்டா போச்சாக்கும், இவிக கிட்ட எல்லாம் உன்ர பருப்பு வேகாது. அவிக மனசில உன்ர அண்ணி ஸ்ட்ராங்கா உட்கார்ந்து இருக்காங்க. உன்ர மகுடிக்கு ஆடுற ஆள், அவிக மட்டும் தான். போய் ஊது" எனச் சௌந்தரியை கை காட்டி அவன் அனுப்பி வைத்தான். சங்கீதா கணவனை முறைத்து விட்டு அம்மாவிடம் சென்று, அபரஞ்சி, சாரதாவிடம் தன் சொல் எடுபடுமா என நோட்டம் விட, அவர்கள் பவானி அடிமையாக மகள், மருமகள் எனப் பைரவியை உயர்த்திப் பேசினர்.
அமைதியாகச் சங்கீதாவை நோட்டமிட்ட கஸ்தூரி, கணவர் விஜயன் காதில் இவளின் நோக்கத்தைச் சொல்ல, " இந்தத் தடவை அவிக எந்தக் குட்டையும்குழப்ப முடியாது, ராஜா பத்து பங்கு சாக்கிரதையா இருக்கான், அவனே சமாளிச்சிடுவான், இரெண்டு பக்கம் மூடிவிட்டு, முடியலைன்னா பேசாத இருந்துடுவா, நீ கண்டுக்காத அம்மணி" என விஜயன் சங்கீதாவை அறிந்தவராகப் பேச, " எப்படியாப்பட்ட அண்ணனுக்கு , இப்படித் தங்கச்சிங்க" எனக் குறை பட்ட கஸ்தூரி, சங்கீத இருக்கும் திசைக்கு எதிர் புறம் சென்றார்.
" ஏன் ப்ரோ, எப்படினாலும் , இத்தனை வருஷம் கழிச்சு கிடைச்சுக் குடும்பத்தை மச்சான் விடமாட்டார். எதுக்கு இந்த வேலை" என்றான் கவிதா கணவன் சரவணன், சகலையான சங்கீதாவின் கணவன் மோகனிடம் கேட்க, " முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார். சனிக்கிழமை தான பத்திரப் பதிவு, அதுக்குள்ள நம்மாள முடிந்ததைச் செய்வோம்,வந்த வரைக்கு லாபம் " எனச் சகலையிடம் ரகசியம் பேசினான் முன்னவன்.
இளைய தங்கை கவிதா, அண்ணன் முன்னிலையில் ஆதிராவை, கன்னம் வழித்துக் கொஞ்சவும், கைலாஷ் தங்கையிடம் மகள் புராணம் பாடினார். " கவி, உன்னாட்டம் தான், உன்ர மருமகளும், அமைதியா, அப்பாவியா ஒரு பார்வை பார்த்தே, என்னை எமோஷனல் ப்ளாக்மெயில் செஞ்சு தன் காரியத்தைச் சாதிக்கிறது" எனவும், " பாபா, அப்படி நான் என்ன செஞ்சேன்" எனச் சலுகையாகக் கொஞ்ச, மகளென அறியும் முன்னே அவள் கொண்ட பாசத்தைத் தங்கையிடம் சிலாகித்துப் பேச, "உங்க மனசு தான் பாபா, என்னை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திடுச்சு" என அவரைக் கட்டிக் கொள்ள, வாஞ்சையாய் அவர் மகளைக் கொஞ்சினார்.
கவிதாவே சிறு பொறாமையோடு பார்த்திருக்க, அவள் மகளும், சங்கீதா மகளும் வெளிப்படையாகவே, " மாம்ஸ், உங்க டாட்டர் வரவும் எங்களை மறந்திடாதீங்க" என ஆங்கிலத்தில் மல்லுக்கட்ட, ஆதர்ஷ், " இவ்வளவு நாள் உங்களைத் தான கொஞ்சிட்டு இருந்தார். இப்பவாவது சொந்த மகளுக்கு இடம் கொடுங்க" என அதே பாணியில் ஆங்கிலத்தில் பதிலளிக்க, " ஹே , யூ" என மாமன் மகனோடு சண்டையிட ஆரம்பித்தனர் ஸ்ரீநிதி,ஸ்ரீமதி சகோதரிகள்.
" அட, அடிச்சுகாதீங்க கண்ணுங்களா. என்ரகிட்ட எல்லாருக்கும் கொடுக்கிற அளவுக்குப் பாசம் இருக்குது,யாரையும் மறக்க மாட்டேன் " எனக் கைலாஷ் சமாதானம் பேசினார்.
" ரஞ்சி, இவர் கூடவே இருக்க நம்மளுக்கு மட்டும் தண்டனை கொடுப்பாராம், என்னைக்கோ பார்க்கிறவிகளுக்கு அன்பைத் தருவாராம். என்ன இருந்தாலும், இவிக எல்லாம் அவருக்கு இரத்த உறவு, நாம வேற தான"என அபிராம் தங்கையிடம் சொல்வது போல் மாமன் மேல் குற்றப்பத்திரிக்கையை இடைச் செருக,
" ஆமாங்கண்ணா, நீங்க சொல்றதும் சரிதானுங்க. மாமா மட்டும் இல்லை அவிக குடும்பமே நம்மளை கண்டுக்கிறதே இல்லை. நாம தான் வழியக்க வந்து இவிககிட்ட ஒட்டிக்கிறோம்" என ரஞ்சனியும் , ஆதர்ஷ் தன்னைத் திரும்பியும் பார்க்காததால் சோக கீதம் வாசிக்க, " ரஞ்சி" என மகளை அடக்கினார் விஜயன்.
" பேசட்டும் விடுற விஜயா. பேசக் கத்துகுடுத்தவன்கிட்ட இது கூடப் பேசலைனா, எப்படி" என நண்பனின் மக்களை முறைத்த ராஜன், " கஸ்தூரி உன்ர புள்ளைங்க பேசறதை பார்த்தியா கண்ணு " எனத் தங்கையிடம் முறையிட்டார்.
" அண்ணா, எல்லார் மேலையும், பாரபட்சம் இல்லாத , இவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க, அது குறைஞ்சிடும்னு பயம் தானுங்க அண்ணா. உங்க பாசம் வற்றாத ஜீவநதின்னு அவிகளுக்கு எங்கிங்க தெரியும்" எனத் தன் மக்களைச் சொல்வது போல், அவர் உறவுகள் அத்தனை பேரையும் ஒரு குத்து குத்தினார் கஸ்தூரி.
சௌந்தரி, " அப்படிச் சொல்லு கண்ணு, ராஜன் பாசத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சவ நீதான்" என மகனுக்குப் பதில் தானே கஸ்தூரியைப் பாராட்டியவர், பேரன் பேத்திகளிடம், " மில்லுல வேலை பார்க்கிற புள்ளைங்க, அப்பான்னு சொன்னாலே, என்ர மகன் உருகிடுவான். உங்களையெல்லாம் விட்டுப் போடுவானா. நல்லா முறைச் சொல்லி ,அப்பா ,மாமான்னு கூப்பிடுங்க, தன்கிட்ட இருக்கிறதையெல்லாம் வாரி வழங்குவான் " எனத் தன் மகன் மேல் நிபந்தனையற்ற செலுத்த சொல்லித் தந்தவர், ஆதர்ஷையும் பார்வை பார்க்கத் தவற வில்லை. கைலாஷ் தன் தாய் மாதாவின் சாமர்த்தியத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டவர். "தாய் மாதா, சின்னப்ப புள்ளைங்க,பேசிட்டு போகட்டும் விடுங்க" எனப் பெருந்தன்மையாகப் பேசினார்.
கணபதி ஸ்தாபனாவின் போது ,பைரவி, ராமபாயிடமும், பன்னீரிடமும் தனித்த தனியாக ஆசி வாங்கியவர், தாய் தந்தையுடன் செய்ய வேண்டிய முறையைராமசாமி, அபரஞ்சியை வைத்தும், விஜயனை தமையன் முறை செய்யவும் அழைத்துச் செய்தார். "தொங்க,தொங்க தாலி கட்டி, கைலாஷ்க்கு ஏத்த பைரவியா, ராஜனுக்கு ஏத்த ராணியா,இந்த இடத்தையே ஆட்சி செய்யோணும் கண்ணு" என மூவரும் வாழ்த்தினர்.
கணபதி பூஜை முடியவுமே, துல்ஜா பவானி அம்மனை ஸ்தாபிதம் செய்ய, ரமாபாய் , சௌந்தரி, அபரஞ்சி, சாரதாவைத் தான் அழைத்தார். " உங்க குடும்ப முறை தானுங்களே, நீங்களே செய்ய வேண்டியது தானுங்களே, நாங்க எதுக்கு" எனச் சலித்த, சௌந்தரியிடம்,
” எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே சம்மந்தியம்மா, அந்த ஆயி, இருபத்தி அஞ்சு வருஷம் முன்னாடியே என் குங்குமத்தை பறிச்சுக்கிட்டா. நீங்க பழுத்த சுமங்கலி வந்து செய்ங்க” என உருக்கமாகச் சொல்லவும், சௌந்தரிக்கே ஒரு மாதிரி ஆனது.
“ ராணியம்மா, அந்த அம்மனும், நம்மளை மாதிரி ஒரு பொண்ணு தானுங்களே, உங்க மகள் நல்லா வாழனோமுன்னு உங்களையே விட யாரு வாழ்த்திட போறாங்க, நீங்களும் ஒரு கை பிடிங்க” என அம்மனை ஆவாகனம் செய்ய அவரையும் அழைக்க, ராமபாய் உருகித் தான் போனார்.
“இருக்கட்டும் சம்பந்தியம்மா, பரவாயில்லை ,என் மகள் வாழ்க்கையில், எந்தப் பரீட்சார்த்த முயற்சியும் செய்ய விரும்பலை. ஒரு வருஷமா, உங்க மூணு பேர்கிட்டையும் தான என் மகள் குங்குமம் வாங்கினா. நீங்க செய்யறது தான் சிறப்பு" என்றவர், ஐந்தாவது ஆளாக, பைரவியோடு ,கஸ்தூரியை ஒரு கை பிடிக்கச் சொன்னார். அதன் படியே அம்மனை ஆவாகனம் செய்தனர்.
பூஜை செய்வதற்கெனவே பண்டிதர்களை நியமித்து இருந்தனர். ஆனாலும் பைரவியும், தன் வளமைப் படி , துல்ஜா பவானி துதிகளைச் சொன்னார்.
அந்த இடமே, எங்கெங்கு காணினும் சக்தியடா, எனச் சக்தியின் அருள் நிறைந்தது போல், பெண்கள் மங்களகரமாக உடை உடுத்தி, வலம் வந்தனர்.
பைரவி, தன் மாமியார் சௌந்தரி, சாரதா, அபரஞ்சி ஆகியோருக்கு வழக்கமாகச் செய்யும் நமஸ்காரம் மட்டுமின்றி, பட்டுச் சேலை ரவிக்கையோடு தாம்பூலம் வைத்துக் கொடுத்து கௌரி பூஜையைத் தொடங்கினார். மனம் நிறைந்து தங்கள் மருமகளை வாழ்த்தினர் .
அதன் பிறகு, ராதா பாய், கஸ்தூரி, சங்கீதா, கவிதாவை அதே போல் முறை செய்ய அழைக்க, " அண்ணி, நாங்க உங்களை விடச் சின்னவிக" எனத் தயங்கினர். " உங்கள் அண்ணி, சக்தி அம்சமா உங்களுக்கு நலங்கு வைப்பா, அவள் காலில் விழுந்து நமஸ்காரம் செஞ்சு நீங்க வாங்கிக்குங்க. அது தான் முறை" என ரமாபாய் அதிகாரமாகச் சொல்ல, பிடிக்கவில்லை எனினும் அடி பணிந்து தாம்பூலம் வாங்கிக் கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து, ஆதிரா, ரஞ்சனி, ஆராதனா, தன் நாத்தனார் மகள்கள் என ஐவருக்கும் நலங்கு வைக்க, திரை மறைவில் இதனைப் பார்த்திருந்த கைலாஷ், தன் மாமியாரிடம், " சாஸுமா, பாருவே தான் எல்லாருக்கும் செய்யனுமாக்கும், சாங்கியத்துக்கு இரண்டு பேருக்குச் செய்யச் சொல்லிப் போட்டு, மத்தவிகளைச் செய்யச் சொல்லுங்க" என மனைவிக்குப் பரிந்து கொண்டு வர,
" தாமாத்ஜீ, பைரவி தான் கௌரி விரதம் இருக்கிறா, நாலு பேருக்காவது செய்தா தான் புண்ணியம். உங்களுக்கு இங்க என்ன வேலை, லேடிஷ் ஃபங்சன் , நீங்க கிளம்புங்க" எனக் கட் அண்ட் ரைட்டாகச் சொல்ல, விஜயன் " இது உனக்குத் தேவையா, பேசாத வா" என அழைத்த போதும்,
" அவிக ராணியம்மாவா இருந்தா இருக்கட்டும். இது என்ர கோட்டை, நான் தான் ராஜா, என்ர ராணியைப் பார்க்காத வரமாட்டேனாக்கும்" எனப் பிடிவாதம் பிடித்தார்.
" அட, முகூர்த்தம் வரைக்கும், தங்கச்சி முகத்தைப் பார்க்கக் கூடாது, ஏதோ சாங்கியம்னு சொல்றாங்கல்ல, அதைய தான் கேட்கிறது" என விஜயன் அறிவுரைச் சொல்ல, " நானு என்ன முதல் தடவையா, தாலி கட்டப் போறேன். இருபத்திரண்டு வருசி மா, உன்ர தங்கச்சி, என்ர பேர் சொல்லித்
தான், குங்குமம் வைக்கிறா. அதுனால இந்த ரூல்ஸ் எல்லாம் செல்லாது. நீ கம்முனு கிட" என வீம்பாக அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
ஆனால் விஜயன் நமட்டுச் சிரிப்போடு, " இந்தக் கல்யாணம் நடக்கிறதுக்கான காரணம் நினைப்பில் இருக்குதா. நீ கேட்டது என்ர தங்கச்சிக்கு ஞாபகம் இல்லாததால பொழைச்சு கிடக்கிற" என நினைவு படுத்த, அந்த நாளின் நினைவில் இன்றும் கலவரமான ராஜன் நண்பனை முறைத்து, "பிச்சுப் போடுவேன், பேசாத போ. உன்ர தங்கச்சி வேற, தர்மம், சட்டம்னு பினாத்த ஆரம்பிச்சிடுவா" என நண்பர்கள் ஒரு பக்கம் பேசிக் கொண்டே இருந்தாலும், மறு பக்கம் பைரவி, பெண்களுக்குத் தாம்பூலம் கொடுத்தபடி தான் இருந்தார்.
ஆதிராவும், ரஞ்சனியும் பைரவியிடம் ஆசி பெற்று எழுந்தவர்களிடம், பைரவி ராஜனுக்குச் செய்தி சொல்லி விட்டார். அவரும் அதற்காகவே காத்திருந்தது போல், தமிழ் மகளாகப் பட்டுப் பாவாடை தாவணியிலிருந்த மகளை மீண்டும் ஒரு முறை, கன்னம் வழித்துக் கொஞ்சியவர், " என்ன கண்ணு" எனக் கண்ணில் நகையோடு கேட்க,
" ஆயி உங்ககிட்ட ஆசிர் வாதம் வாங்கனுமாம் பாபா, அப்பத் தான் கௌரி பூஜை நல்லபடியா ஆரம்பிக்குமாம். வாங்க" என அழைத்துச் செல்ல, " ஆயியே சொல்லிப் போட்டாள்னா, சரி தான் கண்ணு" என மனைவியின் முகம் பார்க்கும் ஆர்வத்துடன் விரைய, அங்கே முழு முக்காடோடு, அவர் ஆசைக்கு உலை வைத்தார் அவர் மனையாள்.
மராத்திய சேலைக்கட்டில் நவ்வாரி சேலையைப் பாங்குற கட்டி, இடுப்பில் ஒட்டியாணம் சுற்றியிருக்க, மார்பை நிறைத்து போஸ்லே குடும்ப நகைகளை ரமாபாய் மகளுக்குப் பூட்டியிருந்தார். தான் வாங்கித் தந்த கண்ணாடி வளையல்களைக் குடும்ப நகைகளோடு முழங்கை வரை அடுக்கிப் போட்டிருந்தவர், முகத்தை மறைத்து, அவர் உடுத்தியிருந்த குங்கும வண்ண அடர் பிங்க் நிற பட்டுக்கு காண்ட்ராஸ்டாக, பார்டர் வண்ணமான ப்ளூவில் முந்தியை வலது தோளில் சரிய விட்டிருந்தவர், அதே வண்ணத்தில் மற்றொரு பட்டு ஷாலை முக்காடாகப் போட்டு, முகத்தின் முக்கால் பாகத்தை மறைத்திருந்தார். அதைப் பார்க்கவுமே கைலாஷ் ஏமாற்றமடைந்து,
" இதெல்லாம் போங்கு ஆட்டம் அம்மணி. " என அவர் சிறுவனாய் அடம் பிடிக்க, எல்லாருடைய பார்வையும் இவர்களிடம் தான். மூக்கை கவ்விய சலங்கை மூக்குத்தியும், பில்லாக்கு பைரவியின் உதடு தொட்டு ஆட, அதன் கீழ் அவரது அதரம் மட்டுமே கைலாஷ்க்குத் தெரிந்தது.
" இதுக்கு என்னைக் கூப்பிடாமையே இருந்திருக்கலாம். உன்ர ஆயிகிட்டையே ஆசீர்வாதம் வாங்கிக்க, நான் போறேன்" என அவர் அடம்பிடிக்க, "ராஜ் " எனப் பைரவி ஒற்றை வார்த்தையில் ஆட்சேபிக்க, மற்றவர்களாகமுக்கமாகச் சிரித்தால் ,அபிராம், "சேம் பிஞ்சுங்க மாமா" சத்தமாகவே சிரித்து விட்டான்.
" ராஸ்கோலு, பேசாத இரு. நான் செம காண்டுல இருக்கேன். பிச்சுப் போடுவேன்" என மிரட்டியவர், கோபித்துக் கொண்டு கிளம்பப் போக, " தாமாத்ஜி, நேரா பார்க்கக் கூடாதுங்கிறது சடங்கு. இப்படிக் கோவிச்சா எப்படி" என ரமாபாய் சமாதானம் பேச வர,
" அண்ணன் பாட்டுக்குக் கிளம்பப் போனவரை உங்க மகள், எதுக்குக் கூப்பிட்டு விட்டாங்க" எனக் கவிதா அண்ணனுக்குச் சப்போர்டாகப் பேச, "அப்படிக் கேளு கண்ணு " எனக் கைலாஷ் முறைத்து நிற்க, " அவிக என்ன புதுப் பொண்ணுங்களா, எதுக்கு இத்தனை சாங்கியம் பார்க்கிறீங்க. கல்யாணம் ஆகாதையா, உங்க மகள், என்ர அண்ணன் கூட வாழ்ந்து புள்ளையைப் பெத்துக்கிட்டாங்க, இவ்வளவு சாங்கியம் பார்க்கிறிங்க " எனச் சங்கீதா சமயத்தில் பைரவியைத் தரமிறக்கப் பார்க்க, சௌந்தரி மகளை அடக்கினார்.
" சங்கீதா, பேசும் முன்ன யோசிச்சு பேசு கண்ணு, பைரவி உன்ர அண்ணி, எங்க மருமகள்" என நாயகமே மகளைக் கடிந்தார்.
" அப்பா, நான் ஒண்ணும் தப்பான அர்த்ததில சொல்லலைங்க, அண்ணன் ஆசைபடுறாங்களேன்னு தான், ஒரு வேகத்தில் சொல்லிப் போட்டேன், அண்ணா சாரிங்க அண்ணா " எனக் கைலாஷிடம் மன்னிப்பு கேட்க, மனைவியைச் சொன்னதில் விரைத்து நின்றவர்,
" என்ர கிட்ட இல்லை கண்ணு, உன்ர அண்ணிகிட்ட மன்னிப்பு கேளு, இந்த வார்த்தையெல்லாம், அவளை ரொம்பப் பாதிக்கும்" என்றவர், மனைவியைப் பாராமலும், அவ்விடம் விட்டு அகலாமலும் அங்கேயே நிற்க, ரமாபாய் மனதில் மருமகனை மெச்சி கொண்டார், அவர் எதிர்பார்ப்பதும் இதைத் தானே. அதிர்ந்து நின்ற பைரவியிடம் வேறு வழியின்றி, சங்கீதா மன்னிப்பு கேட்டாள்.
" பரவாயில்லை மா, எல்லாருக்கும் உள்ள சந்தேகம் தான். நீ வாய் விட்டு கேட்டுட்ட " எனப் பைரவி சொல்லவும், கைலாஷ்க்கு மேலும் கோபம் வந்தது.
நேராக, தன் தாய், தந்தையிடம் வந்தவர், " உங்களுக்கும், உங்க மகன் மேல, ஒரு பொண்ணு கூடத் தாலி கட்டத்தைக் குடும்பம் நடத்துறவன்கிற அபிப்ராயம், இருக்குதுங்களா. உங்க மருமகளைப் பத்தியும், அப்படித் தான் நினைக்கிறீங்களா. " என அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்டு நிற்க,
" நீ அதிகம். படிச்சவன், வீம்பு புடிச்சவன், வேணும்னே எதுனாலும் செஞ்சு போடுவ. ஆனால் எங்க மருமகள் அப்படி இல்லை. நீதி, நேர்மை, நியாயத்துக்குக் கட்டுப்பட்டது, பவானி அம்மனுக்கு மறு அம்சம். " என்றவர், "மருமகள் உனக்காகத் தான விரதமிருக்குது, அதை மதிச்சு, உன்ர பிடிவாதத்தை ஓரங்கட்டி வச்சு , ஒழுக்கமா ஆசீர்வாதம் செஞ்சு வச்சிட்டு கிளம்ப வேண்டியது தான, அதை விட்டுப் போட்டு, எதுக்கு லொள்ளு பண்ணிகிட்டு இருக்கிற, பேசாத கிளம்பு" என நாயகம் மகனைத் திட்டி மருமகளுக்கு நற்சான்றிதழ் வழங்க, ரமாபாயே வியந்து தான் பார்த்தார்.
" பாய்சாப், உங்க மருமகளுக்கு, எங்க தாமாத் ஒண்ணும் குறைஞ்சவர் இல்லை. " என ஆரம்பித்து , ரமாபாய் கைலாஷை புகழ்ந்து தள்ள, அதில் சற்றே மலை இறங்கியவர், " ஆனாலும் சாஸுமா, இப்படி மருமகனை புகழ்றவிங்க, என்ர பொண்டாட்டி முகத்தைப் பார்க்க விடலாமில்லிங்க. " எனத் தன் காரியமே கண்ணாகப் பேச, ஆதர்ஷ் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தான்.
இருவருக்கும் நடுவில், அங்கே அலங்காரத்துக்காக வைக்கப் பட்டிருந்த, மலர்கள் நிறைந்த பெரிய பாத்திரத்தை வைத்து, மலர்களை ஒதுக்கி அதன் முன் ஆயி, பாபாவை நிறுத்த , ஆதிரா கையில் பூஜை தட்டை கொண்டு வந்து, தன் தாயின் கையில் தந்தாள்.
அப்போதும் கைலாஷ் மகனை அதிருப்தியாகவே பார்க்க, " சிரிங்க பாஸ், ஆயி பார்க்கிறாங்கல்ல" எனக் கேலி செய்ய, அபிராம் , விஜயன், ராமசாமி என மூன்று தலைமுறையும் இவர்களைக் கேலி பேசியது. ஆனால் அது எதுவுமே மனைவின் முகத்தை, பளிங்கு போன்ற நீரில் பிம்பமாகப் பார்த்தவரின் கருத்தில் பதியவில்லை.
தன்னையறியாமல் புன்சிரிப்போடு மனையாளைப் பார்க்க, மிளிர்ந்த கண்களும், சந்திர வட்ட பொட்டும், நெற்றியில் நிறைந்த குங்குமமாகக் கணவரின் பிம்பத்தையே அவரும் பார்த்திருக்க, " ஆயி" என இரு முறை அழைத்து ஆதிரா ஆராத்தி தட்டை தந்த பிறகே தலை குனிந்தபடி கணவருக்கு ஆராத்தி காட்டி, அட்சதையைத் தூவினார்.
அவர் குனிந்து தன் நெற்றியைக் காட்ட, குழைத்த குங்குமத்தை மோதிர விரலால் எடுத்த பைரவிக்கு, கணவரின் நெற்றியில் சரியாக வைத்து விடுவோமா, என்ற யோசனை தயங்கி நின்றார். அவர் தயக்கம் புரிந்து, தானே மனைவியின் கையை எடுத்து தன் நெற்றியில் திலகமிட்டுக் கொண்ட கைலாஷ்,
"படிஅச்சி லக்தி ஹை பாரு" எனக் கண்சிமிட்டிப் பாராட்ட, கையிலிருந்த குங்கும நிறத்திற்குப் பாருவின் முகமும் ஜொலித்தது. அதை மனதில் நிறைத்துக் கொண்டவர், " நைட் வர லேட்டாகும் அம்மணி, எனக்காகக் காத்திருக்காமல் சாப்பிட்டு இருக்கோனும்" எனக் கட்டளையிட்டவர், அவர் ஆட்சேபனையாகச் சிணுங்கவும், தான் பிடித்த கரத்தை அழுத்திக் கொடுத்து விட்டு, தானும் அதே போல் மனைவிக்குத் திலகமிட்டுக் கிளம்பினார்.
சௌந்தரி, "ராஜா, பந்தற்கால் ஊண்டியாச்சில்ல, மில் வேலையை இங்கிருந்தே பார்த்தா என்ன கண்ணு" என்றார். அம்மாவையும் ஒரு கையால் தோளோடு அணைத்து, " தாய் மாதா, இது ஒரு வேலை தானுங்க, நான் போயே ஆகோனும். போயிட்டு வந்திடுறேனுங்க" எனப் பழமாய்ப் பழுத்திருந்த அம்மாவின் கன்னத்தில் மகன் முத்தமிட்டுச் செல்ல, " அது என்ர பொண்டாட்டி" என முறைத்தார் நாயகம்.
கைலாஷ், முகத்தில் புன்னகையோடு, " நான் இல்லைனு சொன்னேனுங்களா, அன்பை பகிரோனோம், உங்களையாட்டம் உம்முனு இருக்கக் கூடாது, என்ன கண்ணுங்களா" எனத் தங்கை மகள்களைப் பார்த்துக் கேட்ட கைலாஷ் ராஜன், ஆதிரா, ஆரா, ரஞ்சி, ஶ்ரீமதி, ஶ்ரீநிதி என ஐவரையும் அதே போல் கொஞ்சிவிட்டுச் செல்ல, " நீ , உன்ர மகனுக்குக் கைலாஷ்னு பேர் வச்சாலும், ராஜனா தான் இருக்காப்ல" என நாயகத்தை நண்பர்கள் ஓட்டினர்.
கைலாஷ், இருந்த மனநிலையில் வரம் அருளும் கைலையம்பதியாகவே காரை நோக்கிச் சென்றவர், எதிரே வந்த அபிராமிடம், " மாப்பிள்ளை, உன்ர தண்டனை ரத்து." என வரம் அருள அதிர்ந்து நின்றவன், அக்கணமே தன் ஆரா பேபியை தேடிச் சென்றான்.
கைலாஷ் தானே காரை எடுக்கச் செல்ல, " அப்பா, நானே ஓட்டுறேனுங்க. உங்க வேகத்தை , இந்த வண்டி தாங்காதுங்க" என முதலாளியை அறிந்த காரோட்டியாக, சத்தியன் சொல்ல, " சரி வண்டியை எடுறா" என்றவர் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள, உதவியாளர் சம்பத் முன்னே ஏறிக் கொண்டார்.
பின்னோடு விஜயனும், ஆதரசுமாக வந்தனர், "பாஸ்,நீங்க கட்டாயம் போயி ஆகணுமா,நானிமாட்ட நான் பேசுகிறேன்,அப்புறம் பார்த்துக்கலாம் " எனக் குனிந்து கார் கண்ணாடி வழியே சொல்ல,
"வாக்கு கொடுத்திருக்கோமில்ல கண்ணு, நிறைவேத்தனும், நீ ஆயியை பார்த்துக்க, இன்னைக்கு ஏற்பாடு செஞ்சு போட்டேன்னா, சனிக்கிழமை பத்திரம் பதிஞ்சிக்கலாம். விஜயா இரு போகலாம்" எனக் கைலாஷ், நண்பருக்கு இடம் விட்டு தள்ளி அமர,
அவரும் கைலாஷின் தங்கை கணவர்களைப் பார்த்தபடி யோசனையோடு வந்து ஏறினார். அதைக் கவனித்த ராஜன், "மாப்பிள்ளைங்களா, தூங்கி ரெஸ்ட் எடுங்க, நான் வந்துடுறேன், நைட் பார்ட்டி வச்சுக்கலாம்" எனக் கண் சிமிட்ட,
"இரு தங்கச்சிமாகிட்ட போட்டு கொடுக்குறேன்" என விஜயன் மிரட்டினார். கைலாஷ் பலமான சிரிப்போடு, மகனிடம் தலையசைத்து கிளம்ப, அவரின் பாதுகாப்பு வாகனமும்,ஆதர்சின் பிளாக் கேட்ஸும் கைலாஷ் வாகனைத்தை பின் தொடர்ந்தனர்.
அகமும், முகமும் மகிழ்ந்து செல்லும் கைலாஷை, பெற்றவரும், உற்றவரும் திருப்தியாகப் பார்த்திருக்க, வேறு சிலர் பொறாமையாகவும், வன்மத்தோடும் பார்த்திருந்தனர்.
பைரவியின், கௌரி விரதம் கைலாஷை காக்குமா, பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment