யார் இந்த நிலவு-47
சோலாப்பூரில் இருக்கும் போஸ்லே மாளிகை, கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையிலிருந்த, ஜெயந்த் கெய்க்வாட்டுக்கு, கைலாஷின் யோசனைப் படி, மாங்காயில் மிளகாய்ப் பொடி தூவும் வேலையாக, முதுகில் வலி எனத் துடித்தவருக்கு, அதிக அளவிலான பெயின் க்ரீமை தடவவும் மேனி தீக்காயம் பட்டது போல் ஆனது. அடுத்தடுத்து, எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல், நிகழ்வுகள் நிகழ, மருத்துவமனை தனக்குப் பாதுகாப்பானது இல்லை, எனப் போஸ்லே மாளிகைக்குள்ளேயே, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி அங்கே குடி பெயர்ந்தார்.
ஆனாலும், முதுகில் தீப்புண் பட்டது போல் காந்தியத்தில் குப்புறக் கிடக்கும் நிலையும், வலது காலும், கையில் அடிபட்டுக் கட்டுப் போட்டிருந்தபடியால் நிம்மதியான உறக்கமோ, வலியற்ற நிலையோ ஏற்பட வில்லை. ஜெயந்துக்கு வலியில் உயிர் துடித்தது. தனது கோபத்தை மனைவியிடம் காட்ட, முதலில் பாவம் எனப் பார்த்தவர்,
இவரின் அதிகாரத்தில் எரிச்சலாகி, " உன் ரக்கையில்(வைப்பாட்டி) கிட்டப் போக வேண்டியது தானே" எனக் கேட்டு விட, " ஏய் " எனக் கத்தியவர், வைப்பாட்டி மகனான பீமனை அழைத்தார். பவானி முறைப்பையும் பொருட்படுத்தாமல், அவனை மாளிகைக்குள் வரச் சொன்ன, ஜெயந்த், தன் நிலைமைக்கு யார் காரணம் என விசாரிக்கச் சொன்னார்.
முதல் கோபம் ஆதர்ஷ் மீது தான் இருந்தது. ஆனால் ஒரே நாளில் கைலாஷ் சொல்லி திலக் செய்தது என அறிந்து வந்து சொன்னவன், அடுத்தக் கட்டளைக்காகக் காத்திருக்க, " அரே சாலா, உன்னையெல்லாம் அன்னைக்கே முடிச்சிருக்கனும். அம்சமான பொம்பளை என் பைரவி, அவளையும் தூக்கிட்டு, இத்தனை வருஷம் கழிச்சு நேரா மோதுறியா. அப்போ உங்களைப் பிரிச்சது நான் தான்னு தெரிஞ்சு போச்சு இனி உன்னை விட்டு வைக்கக் கூடாது" என வலியில் அலறலாக வந்த குரல் பீமனுக்குக் கைலாஷை முடித்து வர கட்டளை பிறப்பித்து, கத்தை, கத்தையாகப் பணமும் தர, அவனும் கிளம்பி விட்டான்.
ஆனந்த், முகுந்த் போஸ்லேக்கள் , சம்பந்தியும் மைத்துனனுமான ஜெயந்தை பார்க்க வந்தனர்.
அவர்கள் மகன்களில் ஒருவன் இங்கிருக்கும் பீபீ மில்ஸை பார்த்துக் கொள்வான், எனவே அவனிடம் வந்து கலந்தாலோசித்தனர். பவானியை, ரமாபாயோடு தூது பேச அழைத்தனர். ஆதிரா வழியாகவும் கூட வேற்று ஆள், மில்ஸ் நிர்வாகத்துக்குள் வருவதை அனுமதிக்கக் கூடாது, ஏற்கனவே ஆதர்ஷ் தொல்லை வேறு உள்ளது என இவர்கள் சமாதான தூது, சம்பந்தம் எனச் சுமுகமான முறையில் பிரச்சனையை அணுகப் பேசிக் கொண்டிருந்தனர்.
மஹந்தும் மூன்று நாட்களாகத் தொடர்பு கொள்ளவில்லை எனப் பேசிக் கொண்டிருக்க, " அரே சாலா, உன் மகனை அந்தக் கைலாஷ் தூக்கி இருப்பான். இன்னும் இங்க உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற. " என ஜெயந்த் வலி வேதனையோடே, மச்சினன்களைப் பார்த்துக் கத்த, அப்படியும் இருக்குமோ என யோசித்தவர்கள், "போஸ்லே குடும்பத்தின் இரண்டு தாமாத்களும் சரியான ஆட்கள் தான், இந்த மஹந்த் வேற என்ன செஞ்சு வச்சானோ" எனக் கவலைப் பட்டார் மூத்தவர் ஆனந்த் போஸ்லே.
" இத்தனை நாள் ஒதுங்கி இருந்தவர், பைரவி வரவும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் போல. ஒரு முல்கி இருக்கிறது தெரியிது, அப்ப சோட்டி ராணி வளர்ப்பு ஆதர்ஷ் யாரு" என ஆயிரமாவது முறையாக ஒரே கேள்வியை எழுப்பினார் முகுந்த்.
" பாபு, அவன் யாரா வேணும்னாலும் இருக்கட்டும், மஹந்த்க்குப் பைரவி புவா ரிஷ்தாவை உறுதி செய்துட்டு வாங்க. பீபீ மில்ஸ்குள்ள, அவங்க தாமாத்னு இன்னொருத்தன் உள்ள வரக் கூடாது. " என ஆனந்த்தின் மூத்த மகனும், ஜெயந்தின் மருமகனுமான மற்றொரு போஸ்லே யோசனை சொல்ல, அதுவே சரி என ரமாபாயை சமாளிக்க, பவானியை உடன் வரச் சொல்லி வற்புறுத்தினர்.
மகள், மருமகன் பொறுப்பில் கணவரை ஒப்படைத்து விட்டு , தங்கை குடும்பத்தைப் பார்க்கும் ஆவலோடு பவானி கோவைக்குக் கிளம்ப ஒத்துக் கொண்டார்.
போல்ஸேக்கள்,பைரவியோடு சுமுகமான உறவையே விரும்பினர். மஹந்த் மட்டுமே ஆதிரா மேல் உள்ள ஆசையில், அதுவும் அவள் அபிராமை விரும்புவதை அறிந்து, அவளை அடைந்தே ஆக வேண்டும் எனக் கட்டாயத் திருமணத்துக்கு முயன்றான். அவனைத் தங்கள் கஸ்டடியில் கொண்டு வந்த கைலாஷ், அவனை விடுவித்து விட்டது போல், ரமாபாய் க்ரூபிடமும் அறிவித்து விட்டு , கடத்தி, கடத்தாமல் என ஒரு நாடகத்தை ஆடிக் கொண்டிருந்தார்.
கௌரி பூஜையை ஆரம்பித்து வைத்து விட்டு, தன் அலுவலைப் பார்க்கத் தான், நண்பனோடு கிளம்பினார். ஆரம்பத்திலிருந்து, ஜெயந்தோடு இந்த ஆட்டத்தை ஆடத் தான் அவர் விரும்பினார், ஆனால் ரமாபாய் நடுவில் புகுந்து கட்டளைகள் பிறப்பித்தும், மனைவியின் அன்புக்குப் பணிந்துமே விட்டுக் கொடுக்க, அது அவருக்கே வினையானது. இந்த முறை, தானே எதிரியின் இரையாக மாறி, கூண்டோடு ஜெயந்தை ஒழிப்பது என முடிவுக்கு வந்து களமிறங்கி விட்டார்.
மாமன், மனம் மகிழ்ந்த தறுவாயில், மகளுக்கும் தன் வளர்ப்பான மருமகனுக்கும், விதித்திருந்த தண்டனையை ரத்து எனப் போற போக்கில் அறிவித்து விட்டுப் போக, தன் மனம் கவர்ந்த ஆரா பேபியிடம் , அவள் அருகிருந்தும் , அழகு பதுமையாய் அம்சமாக நடமாடிய போதும் ஒரு வார்த்தை பேச முடியவில்லையே என ஏங்கித் தவித்திருந்த அபிராம், வாய்ப்பூட்டு உடைபட்டது போல், போனஸ் கிடைத்த தொழிலாளி போல் ,ஆதிராவை நோக்கி ஓடினான்.
அவசரமாக, வாயகன்ற அண்டாக்குள் கை விட்டால் கூடப் போகாது என்பார்கள். அது போன்ற பதட்டத்தில் தன்னவளைத் தேடியவன் , இன்று அவள் உடுத்தியிருந்தது ஊதா பாவாடை , பிங்க் நிற தாவணி என அவன் மனக்கண் படம்பிடித்து வைத்திருந்ததை நினைவூட்ட, ஊதாவையும், பிங்கையும் தேடியே ஓடினான். காலையில் அவள் வெள்ளிச் சலங்கை கொலுசும், அவள் சிரிப்பும் ஒன்று போல் கிண்கிணித்த ஓசையில் தான் அவளைப் பார்த்தான்.
மனதை அள்ளும் கொள்ளை அழகு, இருக்கிப்பிடித்த ஊதா வண்ண பாவாடையும் ரவிக்கையும் அவள் சந்தன வண்ண இடையை எடுத்துக் காட்ட, அதை மறைக்கத் தன் ஆயிக்கு மேட்சாக , மாம் அண்ட் மீ கலெக்சனாகப் பிங்க் வண்ண தாவணியில் அவள் ஒயிலாக நடந்துவர, மாமனைப் போலவே காதல் மனம் கொண்டவனாக, தன இணையோடு பேசத் துடித்தான். அவரவர் பாதியான மங்கையரைப் பார்க்க மாமனுக்குக் கண் கட்டு என்றால் மருமகனுக்கு வாய்ப் பூட்டு, தவியாய் அவன் தவித்ததைப் பார்த்தும் உணர்ந்துமிருந்த கைலாஷ் ராஜன், தான் மனையாள் மதிமுகத்தைப் பார்த்து மகிழ்ந்த பின்னே, தான் பெற்ற இன்பம் பெறுக, என் மருமகன் என மகளோடு பேச அனுமதி அளித்துச் சென்றார்.
தேடி அலைந்த அபியின் கண்களுக்கு விருந்தாக அவன் ஆரா பேபியே, தாவணி கட்டி பழக்கமில்லாததால், மறைவிடத்தில் நின்று சரி செய்து கொண்டிருந்தாள். ஆகா, சரியான வாய்ப்பு என மகிழ்ந்தவன் கள்ளத்தனமாக அவள் பின்னே சென்று, ஒரு கை இடைய வளைத்தும் மறு கை அவள் வாயைப் பொத்தியும், " ஹேய் ஆராபேபி, மாமா தண்டனையை ரத்து பண்ணிட்டார் டியர்" எனத் தூக்கிச் சுற்ற, அவள் கையைக் காலை அசைத்து, கத்த முயன்றாள். " ஹேய் பேசாமல் இருடி, பிச்சுப் போடுவேன்" என அவள் திமிர திமிர ஓர் சுற்று சுற்றித் திரும்பி நிற்க, " ஆரா, தாவணி கட்டிவிட ரஞ்சி வரேன்னு சொன்னா" என்றபடி எதிரே வந்து நின்றாள் ஆதிரா.
தான் அவளைத் தூக்கியிருக்க, ஆரா பேபி எதிரேவா என அதிர்ந்த அபிராம், தான் கைப்பற்றி இருந்தவளைப் பட்டெனக் கீழே விட, ராதாபாய் மகள் ஆராதனா பொத்தெனக் கீழே விழுந்தாள்.
ஆதிரா முதலில் அதிர்ந்து, பின் தன் ராமை முறைத்து நிற்க, " அப்போ இது யாரு பேபி" என ஆராதனாவை விடுத்து, ஆதிராவிடம் அவன் பாய, கீழே விழுந்த ஆராதனா, " தீதி" என மராத்தியில் அபிராம் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தாள். ஆதிரா அவளை நோக்கி வர, அபிராம் பாய, ஆராதனா எழுந்து நிற்க முயல, குழப்பத்தில் அபிராம் கீழே விழ, இரண்டு ஆராக்களும் அவன் மீதே கிடந்தனர்.
" அடியே, என்னைக் கொன்னு போட்டுறாதீங்கடி" என இவன் அலற, " ஔச்" என ஆதிரா அவன் மோதிய வலியில் கதற, இரண்டு பேர் மீதும் உருண்டு பிரண்டு, மிதித்து ஆராதனா எழுந்து விடுதலை ஆனாள். ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்த ரஞ்சி, வாயைப் பொத்தியபடி வேடிக்கைப் பார்த்து நிற்க, ஆராதனாவின் தாவணி அபிராம், ஆதிரா மேல் கிடந்தது.
முதலில் கத்தி கதறிய ஆராதனா, தற்போது மற்ற இருவரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
" டேய், அண்ணா, யாராவது பார்க்கப் போறாங்க. மானத்தை வாங்காத, இவள் தாவணியைக் கொடு" என ரஞ்சனி ஒரு தாவணியைப் பிடித்து உருவ. " ரஞ்சி, அது என்னது" என ஆதிரா அலறினாள்.
" அடச் சை, இருங்கடி" என்ற அபிராம் மெல்லத் தன்னைச் சுற்றியிருந்த ஆராதனாவின் தாவணியை அகற்றி ரஞ்சனியிடம் கொடுக்க, அதற்குள் ஆதிரா, ராமை முறைத்து விட்டு ," இப்படியா, ஆராகிட்ட போய். ச்சை" என முகம் கோணியபடி வெளியே நடக்க , " என்னடி இவ" என அதிர்ந்த அபிராம், ஆதிரா பின்னாடியே ஓடினான்.
ஆதிரா விருந்தினர் மாளிகைகளை நோக்கி ஓட, " ஆரா பேபி, நில்லுடி" எனப் பின்னாடியே ஓடி வந்தவன், அன்றொரு நாள் அவளை ப்ரபோஸ் செய்த அதே அறைக்குள் சிறை எடுத்தான். பாதுகாப்புக்கு நின்ற ஆட்களுக்கு இவர்கள் யாரெனத் தெரிந்திருந்ததால், இவர்களைக் கண்டு கொள்ளாமல் தங்கள் பணியைத் தொடர்ந்தனர்.
அபிராம், சுவற்றோடு சேர்த்து அவளைச் சிறை பிடித்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி, " என்னைப் பத்தி இவ்வளவு சீப்பா தான் நினைச்சிருக்கியா அம்மணி" என அவளை நேர் பார்வை பார்த்து ஒரே மாதிரியான உடை என விளக்கங்கள் தர, " அதுக்குனு, என் தங்கச்சியவா ஹக் பண்ணுவீங்க. அவள் என்ன நினைப்பா" என முறைக்க,
" பேபி இது மிஸ் அண்டர் ஸ்டாண்டிங், நீன்னு நினைச்சு , பின்னாடிலிருந்து தூக்கினேன், அவ்வளவு தான் வேற எதுவும் செய்யலை, ப்ராமிஸ் " என அவன் விளக்க, அவன் மார்பில் அடித்தவள், " ஒண்ணும் செய்யலையா, அப்புறம் எப்படி, அவள் தாவணி உங்க கையில வந்துச்சு. அதுவும் போக, பாபா பேசக்கூடாதுன்னு கண்டிசன் போட்டாங்கல்ல, இன்னும் ஒன் டே இருக்கு" என அவள் ரூல்ஸ் பேச,
" ஓ பேபி, உன்ர பாபா, தண்டனையை ரத்து பண்ணிட்டார். அதைய சொல்லத் தான் வந்தேன்" என விளக்கம் தந்தவன், " பேபி, பேருக்கேத்த ராம் டி நானு, என்னைப் போய்ச் சந்தேகப்படுறியே அம்மணி. இதுவரைக்கும், நீ ஒரு ரசகுல்லாவாவது தந்துருப்பியா ,இருந்தாலும் எவ்வளவு பொறுமையா ஒழுக்கமா இருக்கேன். கடத்தலுக்கு அப்புறம், இப்ப தான் நேரா பார்க்கிறேன் அம்மணி , உன்னை இறுக்கக் கட்டிக்கனும்னு , என்ர ஹார்ட் எவ்வளவு துடிக்குது. தெரியுமா, உன்ர மச்சி கண்ட்ரோலா இருக்கேன். நான் எதாவது செஞ்சனா பாரு ,இல்லையில்லை . என்ர ஆரா பேபி பர்மிஷன் இல்லாமல் , அவளையே டச் பண்ண மாட்டேனாக்கும், இதுல அடுத்தவளையா , அதுவும் உன்ர தங்கச்சி, அந்தக் குண்டு பூசணிக்காவையா தொடுவேன். " என்றவன் அவளோடு இழைய , அவன் பேச்சில் கரைந்தவள்,கோப பார்வை விடுத்தாள். ஆனாலும் அன்று அவன் கோபமாகப் பேசிவிட்டுச் சென்றது நினைவில் வர ,
,”அன்னைக்கு ஏன் அவ்வளவு குஷ்ஷா (கோபம்), பாபா வார்த்தையை , நான் எப்படி மீறுவேன், அதுக்காக வேற யாரையாவது ஷாதி பண்ணுவியான்னு கேட்கிறீங்க. நான் ஏமாத்துவேன்னு நினைச்சு தான் பழகுறீங்களா “ என அவள் குறை பட,
“சாரி பேபி, அது மாமா அப்படிச் சொல்லிப் போட்டறேன்னு , உன்ர கிட்டக் கோபத்தைக் காட்டி போட்டேன் , எனக்குத் தெரியாதா , என்ர ஆரா பேபி , என்னைத் தவிர வேற யாரையும் மனசில நினைக்க மாட்டாள்ன்னு” என மன்னிப்பு கேட்கும் பாவனையில் மேலும் அவளை நெருங்கியவன்,
“நமக்கிடையில், காத்தும் கூட வர அனுமதிக்கக் கூடாது பேபி, அப்படி ஏதாவது சிட்டுவேஷன் வந்துச்சுன்னு வச்சுக்கோ , உன்னைக் கண் காணாத இடத்துக்குத் தூக்கிட்டுப் போயிடுவேன், என்ர மாமனுக்கு ஒரு சந்தன் கட் கிடைச்சா, நம்மளுக்கு ஒரு சாம்பிராணி மலை கிடைக்காதயா போயிடும் “ என்றவனின் பேச்சில் அவள் தன்னை மறந்து சிரிக்க,
அவளின் நகைத்த கண்களே அவனுக்குக் காதல் ரசத்தைக் கூட்ட, கள்வெறி கொண்டவனாக அவள் அதரங்களைச் சிறை பிடித்தான். அவள் அகன்ற விழிகள் மேலும் அகன்று அதிர்ச்சியைக் காட்ட, அவன் கண்கள் நகையைக் கூட்டின .
அசந்தர்ப்பமாய் அவன் அலைபேசி ,”டே எருமைமாடு, அண்ணா போனை எடுறா” என்ற தங்கையின் பாசமான ரிங் டோன் விளிப்பில் , ஆந்திராவை விடுத்து , “இவளை “ எனக் கோபத்தோடு போனை எடுக்க, கிடைத்த சந்தர்ப்பத்தில் ஆதிரா அவனிடமிருந்து சத்தமில்லாமல் கட்டையை நீட்டினாள்.
“எதுக்குடி கூப்பிட்ட” என்ற அபிராம் வார்த்தையை முடிக்கும் முன்னே, “டயனிங் ஹால்ல, உன்ர கொழுந்தியா, உனக்கு ஏழரையைக் கூட்டிகிட்டு இருக்கா, உடன் பிறப்பே, உடனே ஓடியா” என ரஞ்சி அழைக்க, கதவு திறந்து ஆதிரா சென்றது தெரிந்து, தானும் உணவு கூடத்தை நோக்கிச் சென்றான்.
பெரியவர்கள் எல்லாரையும் பைரவி சாப்பிடப் போகச் சொல்லி கட்டாயப் படுத்தி அனுப்பி வைத்திருக்க, “பழத்தை மட்டுமாவது சாப்பிடு கண்ணு “ என்ற வாஞ்சையான கட்டளையை இட்டு விட்டு அனைவருமே அங்கு வைத்துச் சேர்ந்திருந்தார். ரமாபாய், ராதாபாய் குடும்பமும் கூட அங்கேயே சாப்பிட வர, கைலாஷின் தங்கைகள் , “ இந்தச் சாப்பாடு பாதுகாப்பானதுங்களா” என வினயமாகக் கேட்க,
“ ஒரு ஆளுக்கு, இரண்டு ஆள் சாப்பிட்டு பரிசோதிச்சது. அவங்களுக்கு ஒன்னும் ஆகலை.நீங்கச் சாப்பிடலாம்” என ரமாபாயும், சளைக்காமல் பதில் சொன்னவர் , தானும் ஓர் இலையில், பன்னீர் அருகில் அமர, ஒரு வாய் எடுத்து வைக்கும் முன் அவருக்குப் புரை போனது. “பார்த்து சாப்புடுங்க அம்மணி” எனப் பன்னீர், தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதற்குள் அங்கே வந்திருந்த ஆதிரா, நானிமாவின் முதுகைத் தேய்த்து, நெஞ்சிற் நீவி விட,. “என், செல்ல மகளே , இதுக்குத்தான் முல்கி வேணும்கிறது” எனப் பேத்தியைக் கன்னம் வழித்துக் கொஞ்சினார்.
“ ராணியம்மாவை, இப்போ யார் திட்டுறது “ என ராமசாமி கேலி செய்ய, “யாரையின்னு சொல்றது ஜீஜாஜி ,எனக்கு எதிரிங்க என்ன குறைச்சலாவா இருக்காங்க” என ரமாபாய் , பெருமை பட்டுக் கொள்ள,
“அது தானே, சம்மந்தியம்மா அதிகாரத்துக்கு நம்ம கட்டுப் படலாம், அவிக சமஸ்தானம் கட்டுப் படலாம் , உலகமேவா கட்டுப் படும், நாலு பேர் பேசத்தான் செய்வாங்க “ எனச் சௌந்தரி காலை வார , “கட்டுப் படுற மாதிரி நடிக்கிறவங்களும், மனசுக்குள்ள திட்டத்தான் செய்வாங்க, நீங்க மனசுக்குள்ள என்ன திட்ட மாட்டீங்களா என்ன” என அவரும் பதிலுக்குச் சொருகினார். சுவாரஸ்யமாகப் பேச்சு வளர்ந்தது, ராமசாமி, பாலாவிடம், "பேசாத ராணியம்மாவை குன்னூர் கூட்டிட்டு போயிடுவோம், நம்மளுக்குப் பொழுது போகும், நீ என்ன மச்சி சொல்ற" என அபிப்ராயம் கேட்க, அவர் முறைத்தார்.
அபிராம் எதிர்பார்த்து வந்தது போல், ஆராதனா கலவரம் ஏதும் செய்யாமல் சமத்தாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் , அவன் ரஞ்சியை முறைக்க, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, என டயலாக் அடித்தபடி அவள் ஆதரஸை தேடிக் கொண்டிருந்தாள்.
கௌரி பூஜையை ஆரம்பித்த பின், மற்றவர்கள் கைலாஷ் குடும்பம் முதற்கொண்டு காலை உணவுக்கு என அரங்கிலிருந்து சற்றுத் தூரம் தள்ளி உள்ள உணவுக் கூடத்துக்குச் சென்றனர். பைரவியின் பாதுகாப்புக்கு என வந்த அவர்களுடைய ஆட்கள் மட்டுமே வெளியே பணியில் இருக்க, ஆதிரா முதலான எல்லாரையுமே காலை உணவுக்கு அனுப்பி விட்டு, பைரவி மட்டும் அம்மனுக்கு முன் அமர்ந்திருந்தார். கௌரி, அவருக்கான உணவாக, பழங்களையும் பழச்சாரையும் கொண்டு வந்தார்.
" ஒரு பொழுதாவது முழு விரதம் இருந்துக்கிறேன் கௌரி, மதியம் சாப்பிடுறேன்" என அதனை மறுக்க, கைலாஷ் பெயரைச் சொல்லியே, சாப்பிட வைக்க முயன்றார். ஆனாலும் பைரவி பிடிவாதத்துக்கு முன் செல்லுபடியாக வில்லை. "கொஞ்சம் நேரம் நான் தனியா இருக்கனும் " என்ற தீதியின் கட்டளைக்குப் பணிந்து, பழச்சாற்றை மட்டும் அங்கே வைத்து விட்டு, சென்றார் கௌரி.
ஆதர்ஷ், கைலாஷை வழியனுப்பி விட்டு வந்தவனைக் கௌரி அழைத்து, விவரம் சொல்ல, பழங்களைத் தான் கையில் வாங்கிக் கொண்டவன், தன் ஆயியை நோக்கியே வந்தான். பைரவி கண் மூடி தியானத்திலிருந்தார். மனதில் ஏகப்பட்ட வேண்டுதல்கள். ஆயி பவானியை நோக்கி கேள்விகள். தன் வாழ்க்கைத் தடம் எங்கெங்கோ பயணித்ததை எண்ணி, ஆயி பவானியிடம் மனதால் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேள்விகளில் ஒன்றான கேள்வியின் நாயகன், அவரது மகன் ஆதர்ஷே, அவர் அமர்ந்திருந்த மேடையை நோக்கி வந்தான்.
" ஆயி பவானி, உன்னுடைய ஆணையை ஏற்றுத் தான் நான், ராஜை கை பிடிச்சேன். ஆபத்தான சூழலில் ஆபத்பாந்தவனா, எனை மணந்தார். இரண்டு மாத தாம்பத்திய வாழ்வெனும் சொர்க்கத்தைக் காட்டிய நீ, மீளாத துயரத்தில் தள்ளின. அதையும் ஏற்றுக்கிட்டேன். என் மணிவயிறு நிறைஞ்சது. அதில் நீ இரட்டை பொக்கிசத்தை நிறைச்சது கூட எனக்குத் தெரியாதே. பிரசவ வலியையும் என்னை உணர வைக்காமல் பிச்சியாக்கி வச்சிருந்த, அதையும் ஏத்துக்கிட்டேன். என் ராஜ், எனக்கானவர் மட்டும் தான்னு அவருடைய அன்பைக் காட்டிக் கொடுத்தவள், ஆபத்தையும் சேர்த்தே கொடுத்த. அதனால அவரை விட்டு விலகியே இருந்தேன். மகளைப் பிரிந்து இருந்தேன். உன் கருணையால் அவள் தன் பாபாகிட்ட போய்ச் சேர்ந்தாள். அடுத்த அதிர்ச்சியா, ஒரு மகனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தின, நெஞ்சம் துடிக்க விழுந்தேன். அணைத்துக் காப்பாற்றினாய். கணவரோடு சேர்ந்தேன்.
என் குடும்பம் ஒன்று சேர, இன்னும் என்ன சோதனைகளை வச்சிருக்க. பெத்த மகனே , அவன் பாபாவை முறைச் சொல்லிக் கூப்பிட முடியாமல், அப்படி என்ன கட்டு. அதையும் உடைச்சு விடு ஆயி. என் முல்கா காசு, பணத்துக்காக உறவுகளை ஏற்றுக்கிட்டான்கிற அவப்பெயர் அவனுக்கு வர வேண்டாம்" என மனமுருகி வேண்டிக் கண்டிருக்க, நொடிக்கு நொடி பாவங்கள் மாறும், தன் ஆயியின் முகத்தையே, வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த, ஆதர்ஷின் கண்களும் கலங்கின.
' இவ்வளவு உன்னதமான பெண்மணியின் கருவரை குடிபுக, வரம் தந்த ஆயி பவானி, நீ ஏன் என் ஆயி மடியை விட்டு என்னைப் பிரித்தாய். தாயின் அரவணைப்பையும், பாசத்தையும் என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டியே. என் ஆயிக்குச் சேவகனா, அவர்களோடு கஷ்டத்தை, நஷ்டத்தை அனுபவிச்சு இருந்திருப்பேனே, ஏன் மற்றொரு தாயிடம் எனை சேர்த்து, அவருக்கும் நன்றிக்கடன் பட வைத்தாய். அவளுக்கும் அதீதமான தாய்மையை உணர்வைத் தந்து, அதுவே எனக்குப் பிரச்சனையைக் கொண்டு வந்து விடுதே. என் ஆயி, பாபாவை நெருங்கினால் கூட அந்த அன்னை மனம அவதிப்படுகிறதே. நான் யாருக்கெனப் பார்ப்பேன்' என அவனும் ஆயி பவானி முன், தன் பக்க ஞாயங்களைக் கேட்டு நின்றவன், கே ஆர் மில்லின் சங்கு சத்தத்தில் தன்னிலை அடைந்து, பைரவியைத் தொட்டு அழைத்தான்.
" ஆயி, இந்தப் பழத்தை மட்டுமாவது சாப்பிடுங்க." என அழைக்க, சிரமப்பட்டுக் கண் விழித்தவர், " ராஜ் கிளம்பியாச்சா, சாப்பிட்டு தான போறாங்க" என வினவினார்.
" அதெல்லாம் ஆத்தா, அவங்க மகனுக்கு ஊட்டாத குறையா, சாப்பிட வச்சு தான் அனுப்புனாங்க. நீங்க சாப்பிடுங்க" எனப் பழத் துண்டுகளை ஸ்பூனால் எடுத்துக் கொடுக்க, " இல்லை பாபா, வேண்டாம். ஆயி பவானிகிட்ட கோரிக்கை வச்சிருக்கேன். பதில் கிடைக்கட்டும்" எனக் கண்ணை மூடிக் கொண்டவரை,
" இன்னும் ஐஞ்சு நாள் பொழுது இருக்கு ஆயி. அடம்பிடிக்காதீங்க. மாத்திரை போட வேண்டாமா. "பா என ஆரம்பித்தவன், " பாஸ் கேட்டா, என்ன பதில் சொல்றது" எனச் சமாளித்தவனை, கண் திறந்து கூர்ந்து பார்த்தவர், " என் புருஷனுக்குப் பதில் சொல்லிக்க எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம். நீ என்கூடப் பேசிட்டு இருக்கிறதை, உன் ராதி ஆயி எங்கிருந்தாவது பார்த்திடப் போறா, நீ போய்ச் சாப்பிடு" என அவர் திரும்பிக் கொள்ள, நேற்று தன் ஆயியைப் பற்றி, பாபா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
" ராதி மாம் பார்த்தா பொறாமை தான் படுவாங்க. கோவிக்கத் தான் செய்வாங்க. ஆனாலும் நிஜத்துக்குப் பக்கத்தில் வந்துட்டோம் ஆயி. அவங்க இதை ஒத்துக்கிட்டு தான் ஆகனும். அதைப் பாலாஜி டேட் பார்த்துக்குவார். நீங்க இந்தப் பழத்தை சாப்பிடுங்க" எனத் தன் ஆயியைச் சாப்பிட வைப்பதே குறியாக அவன் நீட்ட, அதை மறுத்தவர், " இது என் புருஷனுக்காக இருக்க விரதம், அவருக்கு அவர் மகன் கிடைக்கனும், அது சொத்துக்காகன்னு இருக்கக் கூடாது. ஏன்னா என் ராஜோட வாரிசுக்கு , வாரி வழங்கி தான் பழக்கம் இருக்கனுமே ஒழிய, சொத்துக்காகப் பாசத்தை விற்கிறவனா இருக்கக் கூடாது" என மகன் முகத்தையே பார்த்துக் கொண்டு சொல்ல,
" என்னைப் பார்த்தா, அப்படித் தான் தோணுதா ஆயி" என அவன் எதிர் கேள்வி கேட்க, " என் வயிற்றில் பிறந்தவனுக்கு அந்தப் புத்தி இருக்காது பாபா. ஆனால் உன்னை வளர்த்த விதம், எனக்குச் சரியா படலை." என்றவர் " என் நம்பிக்கையை மாற்ற முயற்சி பண்ணாத பாபா. நீ போய்ச் சாப்பிடு" என அனுப்ப முயல,
" உங்களை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு தெரியும். பாபாவுக்குப் போன் போடுறேன்" என்றபடி அவன் அலைபேசியில் அழைப்பு விடுக்க, "ராதியே சொன்னாலும் சரி , அவ புருஷன் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். நீ போய்ச் சாப்பிடு. என் புருஷனுக்காக நான் இருக்க விரதம், இதில யாரும் தலையிடக் கூடாது. நான் சாப்பிட மாட்டேன்னா, மாட்டேன்" எனப் பைரவி பேசிக் கொண்டே போக, ஆதர்ஷ், நீட்டிய அலைபேசி வழியே, ஸ்பீக்கரில்
" அம்மணி, என்ர தலை மறையவும், உன்ர வேலைத்தனத்தைக் காட்டுறயில்ல, இப்ப உன்ர மகன் கொடுக்கிற பழத்தை பூரா சாப்பிட்டு இருக்கோணும், இல்லைனா, இப்பவே திரும்பி வந்து உன்ர முகத்தைப் பார்த்து, உன்ர விரதத்தை முடிச்சு போடுவேன். " எனக் கைலாஷ் போனிலேயே மிரட்ட, பைரவி பேச்சு வராமல் வாயடைத்துப் போனார்.
மகன் பாபா வெனத் தன்னிடம் சொன்னது, தன கணவரை தான் என உணர்ந்து அவனையே உணர்ச்சி வயப்பட்டுப் பார்த்திருக்க, ஆதர்ஷ், புன்னகை மாறாமல், " ஆயி பவானி,உங்க பிரார்த்தனையை நிறைவேற்றுவா ஆயி, சாப்பிடுங்க" பழத்துண்டுகளை எடுத்து நீட்ட
" ஏன் கண்ணு, உன்ர ஆயி சாப்பிடுறாளான்னு கேளு, இல்லையினா, நான் வாரேன். சத்தியா வண்டியைத் திருப்பு" எனக் கைலாஷ் இரண்டு பக்கமும் கட்டளையிட, " ராஜ், நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் சாப்பிடுறேன்" என அவசரமாகப் பைரவி மறு மொழி கொடுக்க, ஆதர்ஷ் புன்னகைதான்.
" ஆதர்ஷ் கண்ணு உன்ர ஆயி, சாப்பிடலையினா, திரும்பப் பாபாக்கு போன் போடு, அடுத்த நிமிசம் அங்க இருப்பேன். " என மகனுக்கும் கட்டளையிட, பைரவி வேகமாக, ஆதர்ஷ் கைகளிலிருந்து பழத்தை வாங்கிச் சாப்பிட, " பாஸ், ஆயி சாப்பிடுறாங்க. சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் லைன்லையே இருங்க. உங்க குரல் கேட்டா தான், சாப்பிடுறாங்க" என அவன் ஸ்பீக்கரில் போட, அபிராம் முதற் கொண்டு இளைஞர் பட்டாளம், ஆதர்ஷ்கும் உணவை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தது.
கைலாஷ், பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்க, " மாம்ஸ், இப்ப தான போனீங்க, அதுக்குள்ள அத்தைக்கிட்ட பேசனுங்களா" என உடைசல் விட, " மாப்பிள்ளைங்க என்ர மகள் பக்கத்தில தானுங்களே இருக்கு, ரஜ்ஜும்மா" என அவர் மகளை அழைக்க,
" பாபா" எனப் பதில் தந்தாள் ஆதிரா. "இந்த ராஸ்கோலு, " என அவர் ஆரம்பிக்கவுமே, மாமனை அறிந்தவனாக அவசரமாக ," நீங்க கிளம்பும் போது, தண்டனையை ரத்து பண்ணிங்கல்ல மாமா, அதைச் சொல்லங்காட்டி தான், ஆரா பேபி என்ர கூடப் பேசினாளுங்க. " என முந்திக் கொண்டு பதில் தர, பேச்சும் சிரிப்புமாகப் பொழுது கழிய, பைரவி பழங்களைச் சாப்பிட்டு முடித்தார்.
ரஞ்சி அவரது கையில் ஆதர்ஷ்கான உணவைத் தட்டில் வைத்து நீட்ட, பைரவி அதை வாங்கி மகனுக்கு ஊட்டி விட்டார். “இது தான் முதல் தடவை, நான் என் மகனுக்கு ஊட்டுறது, உனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு கூட எனக்குத் தெரியாது” எனப் பைரவி கண் கலங்க, “உங்க கையாள எதை ஊட்டினாலும், அது எனக்குப் பிடித்தம் தான் ஆயி. “ என உணர்ச்சிவயப் பட்டவனாக வாங்கிக் கொண்டவன், ரஞ்சியிடம் கண்களால் நன்றி சொன்னான்.
ஆனால் அவர்கள் பயந்தது போலவே, ராதா பாய், பைரவியோடு வளர்ப்பு மகனைப் பார்த்தவர், விருந்தினர் மாளிகையை நோக்கி விரைந்து விட்டார். மனைவி வேகமாக வருவதைப் பார்த்த பாலாஜி ராவ் அவரின் மன நிலையை உணர்ந்து, இன்று உறுதியாகப் பேசி விட வேண்டும் எனச் சென்றார்.
கே ஆர் மாளிகையில் கைலாஷின் தங்கைகள் இருவரும் தங்கள் கணவர்களோடு, வெளியே கிளம்பினர். நாயகம், " வீட்டில விசேசத்தை வைச்சுகிட்டு, எங்க கண்ணு கிளம்புறீங்க" என வினவவும்,
" ஏனுங்கப்பா, கிளம்பையிலையே எங்க போறீங்கன்னு கேட்கிறீங்க." என்ன சின்ன மகள் குறைபட, " நான் அந்த அர்த்ததில கேட்கலை கண்ணு" எனச் சமாதானம் செய்ய ,சங்கீதா, " அண்ணன் கல்யாணம், அண்ணி பெரிய புள்ளைகள் இருக்கிறதெல்லாம், நாங்க புரிஞ்சுக்குவோமுங்க அப்பா, அவிக அப்பா, அம்மாட்ட சொல்லனுமில்லிங்க. நீங்களும் போன் போட்டு தான சொன்னீங்க. நாங்க நேர்ல போயிட்டு வர்றமுங்க. புள்ளைங்களை இங்கதானுங்க விட்டுட்டு போறோம்" எனத் தகவல் சொல்லவும், " ஏன் கண்ணு, அவிக ஆத்தா, தாத்தாவும் பேர பிள்ளைகளைப் பார்க்கனுமின்னு ஆசைபடுவாங்கல்ல, கூட்டிட்டுப் போய்க் காட்டிட்டு வாங்க" எனச் சௌந்தரி யோசனை சொல்ல, மகள் பதில் தரும் முன் மருமகனே பதில் தந்தார்.
" அவிகளுக்கு, கிராம் சரிபட்டு வராதுங்க. அப்பா, அம்மா இங்க வரும் போது பார்த்துக்கட்டுமுங்க" எனச் சந்திரமோகனே அவசரமாக மறுத்து விட்டு, ஓட்டுநரும் வேண்டாம் எனக் கே ஆர் மில்ஸ் கார்களில் ஒன்றை தாங்களே ஓட்டிச் சென்றனர்.
" ஏனுங்க சம்பந்தி, எதுவும் கோவிச்சுக்குவாங்களா" எனச் சௌந்தரி கணவரைக் கவலையாகக் கேட்கவும் , " அதெல்லாம் உன்ர மகளுங்க சமாளிச்சுக்குங்க. இனிமே இவிகளைப் பத்தியெல்லாம் கவலைப் படாத. நமக்கு ராஜா வாழ்க்கை தான் முக்கியம்" என நாயகமே சொல்லவும் " அதுவும் சரிதானுங்க, நம்ப மகன் வாழ்க்கையைத் தான் பார்க்கோணும். சம்பந்தியம்மா, பேரப்புள்ளைங்க பேர்ல, சொத்து எழுதி வைக்கச் சொன்னது ஞாயம் தானுங்க. ராஜா இத்தனை வருசமா, தங்கச்சிகளுக்குத் தான அள்ளி, அள்ளி கொடுத்தானுங்க. இனியாவது தன் குடும்பத்துக்குச் செலவு செய்யட்டும். நாமளும் ராஜ குடும்பத்துக்குக் குறைஞ்சவிக இல்லைனு காட்டோணும்" என்றார் சௌந்தரி .
அவர் பேச்சைக் கேட்டபடி வந்த பன்னீரிடம், " மச்சி, உன்ர தங்கச்சி எங்க போட்டி போடுறாளுன்னு பார்த்தியா,ராசக் குடும்பத்தோட போட்டி, அன்னைக்கு ராணியம்மா கேட்டதுக்கு எவ்வளவு கோபப் பட்டா, இன்னைக்குப் பேச்சை பாரு " எனக் கேலி பேசினார்.
" க்கும், அவிகளுக்கு நாம எந்த விதத்துல கொறைஞ்சு போயிட்டமாம், அதுவும் போக, நாம தான் பையனை பெத்தவிகா, மாப்பிளை ஊடு , ராணியம்மாவா இருந்தாலும் , பொண்ணைக் கட்டி கொடுக்கிறதுன்னா பணிஞ்சு தான் போகோணும்" எனச் சௌந்தரி சொல்லவும், மற்றவர்கள் சிரிக்க, "தங்கச்சிமா, நல்லா சொன்ன போ, இந்தச் சாராதலுக்கும், உன்ர என்னிக்குமே சம்பந்தி சண்டை தீர்ந்த பாடு இல்லை, இதில ராணியம்மா , உன்ரகிட்ட பணிஞ்சு போயிடுமாக்கும். " என ராமசாமி நடுவில் எடுத்து விட,
"நாங்க எப்பங்க அண்ணா சண்டை கட்டினோம்" எனச் சாரதாவும், "நீங்க தான் வந்து பஞ்சாயத்து பண்ணிங்களாக்கும்" என அபரஞ்சியும் அவரை ஒரு பிடி பிடிக்க, ராணியம்மாவுக்குச் சப்போர்ட் செய்யும் கணவன்மார்களை ஒரு வழி ஆக்கினர். "நல்ல வேலை என்ர பொண்டாட்டி போய்ச் சேர்ந்துட்டா " எனப் பன்னீர் கமன்ட் அடிக்க, அவரையும் சேர்த்து பேசினர் மூத்த பெண்கள் .அங்கே கேலியும் கிண்டலுமாகப் பொழுது கழிந்தது.
மாலையில், கௌரி பூஜையைச் சிறப்பிக்கும் விதமாக, மில்லில் வேலை செய்யும் ஆயிரக் கணக்கான பெண்களுக்கு, சேலை ரவிக்கை, தாம்பூலம் கொடுக்க இரு வீட்டார் சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஏனெனில் முதலில் ரமாபாய் தான், மருமகனிடம் , செலவைத் தான் ஏற்பதாகச் சேலை துணிமணிகளுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஆனால் ராஜன், ஆண் பெண் பாகுபாடு இன்றி, எல்லாருக்கும் துணிமணி எடுத்துக் கொடுக்கக் கட்டளையிட, பெண்களுக்கு இன்று முதல் கௌரி பூஜையில் தருகின்றனர்.
சங்கீதா தலைமையிலான ஆதிராவுடன் மருத மலை சென்ற குழுவினர், சேர்ந்து நூற்றியெட்டு பேர் விளக்குப் பூஜையைச் செய்ய, கே ஆர் மில்ஸே தெய்வீகமாகத் திகழ்ந்தது.
மற்றொரு புறம், ஞாயிறு அன்று நடக்க இருக்கும் விழாவுக்கான அலங்கார வளைவுகள், மேடைகள் தயாராகிக் கொண்டிருந்தது.
பெண்கள் விளக்குப் பூஜை செய்ய, பைரவி நடுநாயகமாக அம்மனுக்கு எதிராக அமர்ந்து அதே பூஜையைச் செய்தார். அதற்கு நடுவில் ஆதர்ஷுக்கு அவனது பாதுகாப்புப் படையிடமிருந்து போன் வரவும், கலவரமானவன், அதை வெளிக் காட்டாமல் , பாலாஜி ராவைத் தனியே அழைத்து , கண்ணீர் மல்கப் புலம்ப, "அவருக்கு ஒன்னும் ஆகாது கண்ணா, உன் ஆயியுடைய குங்குமம் அவரைக் காக்கும், தைரியமா போ" எனத் தேற்ற, அபிராமும் அதே போல் அவனைத் தேடி வந்தான். இருவரும் சத்தம் காட்டாமல் கே ஆர் மில்லை விட்டு வெளியேறினர்.
பாலாஜி ராவ் இங்கிருக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டைத் தீவிரமாகக் கண்காணிக்க, பூஜை முடித்து, அனைவரையும் வழியனுப்பிக் கணவருக்காகக் காத்திருந்த பைரவிக்கு ஆபத்து, எதிர் பாரத விதமாக, கைலாஷின் தங்கைகள் வடிவில் சொல்லம்பாக வந்தது.
"உங்க பூஜையும் பொய் , நீங்களும் ராசியில்லாதவங்க, நீங்க மறுபடியும் எங்க அண்ணன் வாழ்க்கையில் வந்ததே, அவருக்கு வினையா முடிஞ்சிருச்சு, அண்ணன் போன கார், மேட்டுப் பாளையம் ரோட்டுல , அப்பளமா நொறுங்கி கிடக்கு. அதில இருந்தவிக பொழைக்கலைன்னு பேசிக்கிறாங்க" எனச் சங்கீதாவும், கவிதாவும் மாற்றி, மாற்றிக் கண்ணீரோடு ஆங்காரமாகப் பைரவியை நோக்கிப் பேச, அவர்கள் பேச்சை உள் வாங்கவும் மாட்டாதவராகப் பேதலித்து நின்றார்.
நிலவு வளரும்….
No comments:
Post a Comment