யார் இந்த நிலவு-43
உலகத்தில் காதலித்துக் கைபிடித்த ஜோடிகள் எல்லாம், சுகமாக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்க, ஆயி துல்ஜா பவானியின் ஆசீர்வாதத்தோடு, தொடங்கிய தங்கள் வாழ்வுக்கு மட்டும் ஏன் இத்தனை இடையூறு, சோதனை, ஒரு வேளை இறைவியின் சமிக்ஞை யை நான் தவறாகப் புரிந்து கொண்டேனோ, தவறான புரிதல் எனில் என்னோடு சேர்ந்து ராஜும் ஏன் துன்பப்பட வேண்டும். இரண்டு மாதங்கள் தானே வாழ்ந்தோம், எனை மறந்து ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
அந்த ராஜியையாவது கல்யாணம் செய்திருக்கலாம், இதைச் சொன்னதுக்குத் தான், ராஜ்க்கு அன்று அவ்வளவு கோபம். ஆனாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லையே. அவரது தங்கை எவ்வளவு ஆவலாக ராஜியை, இவரோடு சேர்க்கத் துடித்தாள். தான் யாரெனச் சொல்லியும், அவ்வளவு சாமர்த்தியமாக, தன்னை நம்ப வைத்து, அவள் மனதில் நினைத்தவனைக் கைப்பிடிக்க நினைத்தாளே, ஆனால் அதுவும் தான் ஈடேற வில்லைப் போலும். நான் பிச்சியானது மட்டும் தான் மிச்சம்.
அன்றும், இன்றும் என் ராஜ் மட்டும் மாறவே இல்லையே, ஒரு நொடி யோசிக்காமல் ஜெயந்த் அரக்கனை அன்று எதிர்த்தது முதல், இன்று ஆயி கேட்கவும் சொத்தை எழுதி வைக்கிறேன் என ஒத்துக் கொண்டது வரை, எல்லாமே, என் ராஜ், எனக்காகச் செய்யறது.
இத்தனைக்கும் இரண்டு மாசம் வாழ்ந்தவள், இரட்டை குழந்தைகள் பிறந்ததை மறைத்தவள், ஒன்னு, எனக்கே தெரியாது, அதையே எனக்குத் தாங்க முடியலை. ரஜ்ஜும்மாவாவது, யாரெனத் தெரியாமலே பாபாவென உறவு கொண்டாடி, அவர் மகளென நிரூபித்தாள்.
ஆனால் இவன், பாபாவென அறிந்தும், பாஸ்னு கூப்பிடுறானே, அவர் மனம் எவ்வளவு நோகும். ஆயி பவானி, நாங்க என்ன பாவம் செய்தோமென, எங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தையும் கொடுக்கிற. சாதாரணத் தம்பதிகளாய் இதையெல்லாம் கடந்து, நாங்கள் வாழமாட்டோமா.
என் ராஜ்க்கு சந்தோஷமான வாழ்க்கையைக் கொடு, அவரைச் சோதிச்சது எல்லாம் போதும் ஆயி, எனத் தன்னைப் போல், மனதில் நினைத்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வெகு நேரமாக, ட்ரஸ்ஸிங் அறையில் கண்ணாடி முன் அமர்ந்து எதையோ செய்து கொண்டிருந்தார் பைரவி.
திடீரென, அவரின் வலது கையைக் கவ்விப் பிடித்து, இத்தனை நேரமும் சிரமம் தந்த ரவிக்கை சுலபமாகக் கழட்டப்பட்டதில், தன்னையறியாமல் ஆசுவாசமடைந்தவர், ஏசி ஓடியும் வியர்த்திருந்த, தன் முகத்தை, துடைக்கும் போது தான், கண்ணாடியில், பிம்பமாய் , மென்னகை தவழ, ஆடியையே பார்த்திருந்த தன் கணவனைப் பார்த்தார்.
அவரின் ரசனையான புன்னகையில் பாருவும் தன் மனதைத் தொலைத்தவர், தன்னை மறந்த மோன நிலையிலேயே ஐ லவ் யூ ராஜ், என ஆடியில் தெரிந்த பிம்பத்தின் கன்னத்தை வழித்துக் கொஞ்ச,
" நிழலுக்கு, எதுக்குங்க அம்மணி முத்தம், நிசத்துக்குக் கொடுங்க அம்மணி" என அவர் குரல் காதருகில் கேட்கவும், சுதாரித்தவர் " ஓ, ஆயி பவானி" என நெஞ்சில் கை வைத்தவர், அப்போது தான் தன்னை உணர்ந்து , நழுவி இருந்த சேலையையும் இழுத்துச் சரியாகப் போட முனைந்தவர் , " ஆப் கப் ஆகை" எனப் பதட்டமனார் .
வசதியாகப் பின்னால் ஒரு மோடாவை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்த அவர் கணவர், பின்னிருந்தே அவரை அணைத்து வலது பக்க வெற்றுத் தோளில் தன் முகம் புதைத்து, " ராஜ்க்கு, சந்தோஷத்தைக் கொடுக்கச் சொல்லி, ஆயி பவானிகிட்ட வேண்டுனியில்ல அம்மணி, அப்பலையே வந்திட்டேன்" என்றவர், " ராஜைச் சந்தோஷமா வச்சுக்கிறதுக்கு, அவன் பாருவே போதும், இதுக்கெதுக்குங்க அம்மணி, அந்த ஆயியை டிஸ்டப் பண்றீங்க" என ஆசையாய் முத்தமிட்டுச் சிரிக்க,
" ச்சோ, ராஜ், சலியே, முஜே ஷரம் ஆதி ஹை" என இரண்டு கைகளாலும் முகத்தை மூட,
" அம்மணி, உன்ர புருஷன், சைட் அடிச்சிட்டு இருக்கேனுல்ல, முகத்தை மூடாத, பிச்சுப் போடுவேன்" என்றவர், அவர் முந்தியை எடுத்து, தனக்கும் சேர்த்துப் போர்த்திக் கொண்டு, " இப்ப கண்ணைத் திறந்து பாருங்க அம்மணி, புருஷனோட ரொமான்டிக் லுக்கிலத் தான் இருக்கீங்க" என முகத்திலிருந்து கையை எடுத்து விட,
தன் முந்தியின் முக்காட்டுக்குள் இருந்த தன் கணவரைப் பார்த்தவர், சிரித்து விட்டு, " என் சேலையைக் கட்டனும்னு, எத்தனை நாள் ஆசை" என வம்பிழுத்தார்.
" ஏனுங்க அம்மணி, உனக்குச் சந்தோஷம்னா, அதையும் செய்ய வேண்டியது தான்" என்றவர், எழுந்து அலமாரியைத் திறந்து, ஓர் இரவு உடையை எடுத்துக் கொடுத்தவர், " இன்னைக்காவது, இதைய போட்டுக்க, ப்ளவுசெல்லாம் டைட்டாகுதாக்கும் " என வினவவும்.
" ம்ம், ஒருத்தரும் , ஒரு வேலையையும் செய்ய விடுறதில்லை. பூசனிக்காய் மாதிரி ஆகப் போறேன்" என வருந்தியவரை, " கொஞ்சமே சதை போட்டு, மல்கோவா மாம்பழமாட்டமா, இருக்க. இப்படியே இரு" என்றவர், அவர் முகத்தைக் கையிலேந்தி, " டேஸ்ட், எப்படி இருக்குன்னு பார்த்துக்கட்டா அம்மணி" எனவும், " சோடியே ஜி" என்றவரை, அதற்கு எதிர்ப்பதமாய் விடாமல் பிடித்து, நினைத்த காரியத்தைச் சாதித்தே, மனைவியைப் பள்ளியறைக்கு அழைத்துச் சென்றார் ராஜ்.
கணவரோடு சேர்ந்து மெத்தையில் அமர்ந்த பாரு, " ஆயி செட்டில் ஆகிட்டாங்களா." என வினவ, "என்ர சாஸுமா , கே ஆர் மில்லுக்குள்ளையே, மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவீட்டாங்கலாக்கும் " என அவர் சிரிக்க, " சாரி ராஜ், ஆயிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க சொத்தை எல்லாம், இப்ப உடனே பசங்க பேரில் எழுதி வைக்க வேண்டாம். உங்க இஷ்டத்துக்குச் செய்ங்க." என்றவரிடம்,
" ஏனுங்க அம்மணி, என்ர பிள்ளைங்க பேரில் தான சொத்தை எழுதி வைக்கச் சொன்னாங்க, அதில என்ன தப்பு. என்னைக்கு இருந்தாலும் அவிகளுக்குச் சேர வேண்டியது தான. என்ன ஒண்ணு, இப்படிப் பிள்ளைகள் இருக்கிறது தெரிஞ்சிருந்தாக்கும் , இன்னும் இரண்டு பங்கு சொத்தை,சேர்த்தி வச்சிருந்திருப்பேன். பிரச்சனை அது இல்லை அம்மணி, சாஸுமா, இதை எதுக்கு, குறிப்பா கேக்குறாங்க. அது தான் எனக்குப் புரியலை. இதில நாளைக்கு, உன்னையும், ரஜ்ஜும்மாவையும் கெஸ்ட்ஹவுஸ் கூட்டிட்டுப் போயிடுவாங்கலாம். கட் அண்ட் ரைட்டா சொல்லிப் போட்டாங்க" எனக் குறைபட்டார்.
" சரின்னு சொல்லிட்டு வந்துட்டீங்களா, அதுவும் உங்க மில்லுக்குள்ள தான இருக்கு" என மனைவி , முன் பாதி விஷயத்தைக் காதில் வாங்காமல், பின் பாதி விஷயத்துக்காகச் சிரிக்க, "வேற வழி , இருந்தாலும், என்ர பொண்டாட்டி, என்ர ரூம்ல இருக்க மாதிரி வருமாக்கும், உனக்குச் சிரமமில்லையினா, உன்ர மடியில தலையை வச்சுக்கிட்டுமாஅம்மணி " எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும்,
" ஆகா, என் ராஜ், குழந்தையாயிட்டாரே" எனக் கேலி செய்து விட்டு, "வாங்க" எனக் காலை நீட்டி அமர, கைலாஷ் மனைவியின் முகம் பார்த்த படி மல்லாக்க படுத்து, அவர் கைகளைப் பற்றி " கனவு மாதிரி இருக்குது அம்மணி " என்றார்.
பைரவியும் அவர் சிகையைக் கோதிக் கொண்டே, " எனக்கும் தான், சந்தன்கட்ல , இப்படித் தானே இருந்தோம், எப்பவுமே அதே கனவு தான்” என்றார்.
“உன்ர ஆயி, என்ன நினைக்கிறாங்கன்னே, தெரியலையே அம்மணி, என்ர தாய் மாதாவுக்கு, உன்ர ராஜ மாதாவுக்கும் , முட்டிகிட்டே நிக்கிது, எப்ப வெடிக்கப் போகுதோ” என அவர் கவலைப்பட,
“நிச்சயம் வெடிக்கும், அது மட்டும் உறுதி, எது நடந்தாலும் எனக்காகப் பொறுத்துக்குங்க ராஜ், இவளை ஏண்டா சந்திச்சோம்னு , என்னை வெறுத்திடாதீங்க" எனக் கண்கலங்கவும் , எழுந்து அமர்ந்தவர்,
"என்ன பேச்சு பேசுற அம்மணி , என்னை நானே வெறுக்க முடியுமா, நீ என்ர உயிர்ல கலந்தவ, நீயும் மறுக்கா, என்னை விட்டுப் போட்டு போயிடாதே, என்ர உசிரே போயிடும்" என அவர் கையைப் பற்றித் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டார். " சுபமா பேசுங்க" எனக் கணவரின் வாயைப் பொத்த, அதே கையில் முத்தமிட்டு , தன்னோடு அணைத்துக் கொண்டார்.
இவர்கள் இப்படி,கவலை கொள்ளக் காரணம், பின் மாலைப் பொழுதில் நடந்த விவாதம் தான். .
சௌந்தரி தன மகள்கள் வருகிறார் என்று சொன்னதிலேயே , ரமாபாய் விஜயனையும்,பைரவியையும் ஓர் பார்வை பார்த்ததில், எதோ வம்பு இருக்கிறது என மற்றவர்களை அபியுடன் அனுப்பி விட்டு, தான் மட்டும் ராணியம்மாவை விருந்தினர் மாளிகையில் சேர்ப்பித்து விட்டுச் செல்லலாம் என விஜயன் காத்திருந்தார்.
தன ஜாகைக்குக் கிளம்பும் நேரம், ராணியம்மா சம்பந்திகளிடமும், மருமகனிடம் சென்றவர், “ கல்யாணம் உங்க முறைப் படியே செய்யிங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனால் என் பேரன்,பேத்தி,மகள் நான் இருக்கிற இடத்தில் தான் இருக்கனும்,நான் பைரவியையும், ஆதிராவையும் கூட்டிட்டு போறேன் ” என முடிவாகச் சொன்னார்.
“சாஸுமா, பாருவும், ராஜூம்மாவும் இங்க இருக்கட்டுமே” என்றார் கைலாஷ்.
“சாஸ்திரம் சம்பிரதாயம் வேண்டாம்னா ,அப்ப ,இந்த ஷாதி எதுக்கு, நேரா அறிமுக விழாவை மட்டும் வைங்க, நான் கூட்டிட்டு போயி, பிரச்சனைகளைத் தீர்த்துட்டு, மூணு மாசம் கழிச்சு அனுப்பி வைக்கிறேன்” என ரமாபாய் கட் அண்ட் ரைட்டாகப் பேசினார்.
“என்ர மேல உங்களுக்கு, நம்பிக்கை இல்லைங்களா ” என்றார் ராஜன்.
“மன்னிச்சிடுங்க தாமாத்ஜி, எனக்கு யார் மேலையும் நம்பிக்கை இல்லை, நாங்க சாப்பிடுற சாப்பாட்டைக் கூட,சோதனை பண்ண பிறகு தான் சாப்பிடுவோம், இதுக்கு மேல உங்க இஷ்டம், என் மகளுக்கு ஏதாவதுன்னா, நீங்க பொறுப்பெடுத்துக்குறீங்களா “ என ஆணித்தரமாகப் பேசவும்,
“ஏனுங்க அம்மா,உங்க மகளே, இத்தனை நாள் எங்களோட தானுங்களே இருந்தது, எங்க மருமகள் கொடுக்கிறதை தான் நாங்க சாப்பிடுவோங்க, இப்பவும் ரெண்டு மாசமா இங்க தானுங்களே இருந்தது,இப்ப புதுசா என்ன ஆபத்து வந்துடும்னு பயப்படுறீங்க “ என்றார் பாலா.
“அப்ப, அவள் பவானி, உங்க வீட்டுடைய கேர் டேக்கர். இப்போ பைரவி பாய் போஸ்லே, கணபதி ராய்போஸ்லே மகள் , கே ஆர் மில்ஸ் கைலாஷ் ராஜனோட மனைவி.இரண்டு பக்கமும் சொத்து அதிகம். “ என அவர் நிறுத்த,
“அப்படியின்னா, உங்க ஆளுங்களாட்டம் நாங்களும் சொத்துக்கு ஆசை படுவோம்னு சொல்றிங்களா” எனச் சௌந்தரி கோபப்பட,
“உங்களுக்கும், எனக்கும் இந்தச் சொத்து பெரிய விஷயமில்லை சமந்தியம்மா , இவங்க தான் நமக்குப் பெரிய சொத்து. இருபத்திரண்டு வருஷம் கழிச்சு, என் மகளுக்கு அந்தப் பாக்கியம் கிடைச்சிருக்கு, அதைக் காப்பாத்தி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு” என்று நிறுத்தியவர்,
“பாயிஸாப், நேத்து ஆதிராவுக்கு நடந்தது, உங்களுக்குத் தெரியும் , நாங்க எதையும் மிகைப்படுத்திச் சொல்லலை.” என்ற ரமாபாய் வார்த்தைகள் , அவர்களின் பாதுகாப்பை குறை சொல்வதாக இருக்கக் கைலாஷ், சௌந்தரி இருவருக்குமே கோபம் தான் .
பாலா தான் சமாளித்தார், “நீங்க சொல்றது வாஸ்தவம் தானுங்க, நாங்க இந்த வயசில், அக்கடான்னு, குன்னூர்ல உட்கார்ந்து, ரிலாக்ஸ் பன்றோம், நீங்க ஒத்த மனுசியா, இவ்வளவு போராடுறீங்களே, அவிக எனக்கும் பேரன், பேத்தி தான். அவிக பாது காப்புக்கு முன்னாடி வேற எதுவும் முக்கியமில்லை “ என்றவர், “நீங்க சொல்றபடி தான் எல்லாமே நடக்கும் “என முடித்து விட்டார்.
“புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி பாயிஸாப்” என்றவர், கைலாஷிடம், ”எங்களுக்கான ஜாகைக்குப் போறோம்,உத்தரவு கொடுங்க தாமாத்ஜி” என்றார்.
“என்னை நம்பி வந்தேன்னே சொன்னவிக, இப்ப என்ர பொண்டாட்டியையும்,மகளையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்கன்னா என்ன அர்த்தம். ஏற்கனவே என்ர மகனை பிரிச்சிட்டீங்க. இந்த எல்லா நாடகமும் எதுக்குன்னு சொல்லுங்க. நீங்க என்கிட்டே என்ன தான் எதிர் பார்க்கறீங்க” எனக் கைலாஷ் மாமியாரிடம் நேருக்கு நேர் மோதவும்,
“ராஜா”என நாயகம்,விஜயனும், “ராஜ்” எனப் பைரவியும் அழைக்க, மகனை பிரித்து என்ற வார்த்தை, ராதா பாலாஜியை குத்தியது. ஆதர்ஷ் க்கு ஒரு பக்கம், தன தந்தை தனக்காக ஏங்குவது ஓர் மகிழ்வை தந்தது, இவர்கள் சண்டையைப் பார்க்க இல்லாமல் ஆதிரா, புதிதாய் கிடைத்த தங்கையுடன், தன அறையில் இருந்தாள் ,
ரமாபாயும் ஒரு முடிவுக்கு வந்தவராக, “எதிர்பார்ப்பு எதுவா இருந்தாலும் செய்வீங்களா “எனப் பீடிகை போட்டவர், ராஜன் ஆம் என்பது போல் பிடிவாதமாக, பார்த்திருக்கவும்,
“நீங்க சம்பாதிச்ச, சொத்து முழுசும்,உங்க மகன்,மகள் பேரில் எழுதுங்க, நெருப்புன்னா வாய் வெந்திடாது,ஆயி பவானி என் குடும்பத்தைக் காப்பாற்றட்டும்” எனக் கண்ணை மூடி வேண்டியவர், “ உங்க மகன்,மகளுக்கு எதுவும் ஆனால், அந்தச் சொத்து தர்மத்துக்குப் போகும், வேற யாரும் அனுபவிக்க முடியாதுன்னு எழுதுங்க, நான் , உங்க குடும்பத்தை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்”எனச் சவால் விடவும், கைலாஷ், மாமியார் பேச்சில் குழம்பிப் போனார்.
சௌந்தரி, “ பெரிய ராஜ குடும்பம், உங்க சொத்தே பல தலைமுறை காணும்னு சொன்னீங்க, இப்ப எதுக்கு இப்படிக் கேக்குறது, எங்க வீட்டு வாரிசுக்கு என்ன கொடுக்கணும், எப்ப கொடுக்கோணும்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்.” என ரமபாயோடு நேரடியாக மோதினார்.
“நாங்க பொய் சொல்றோம், எங்களுக்குச் சொத்தே இல்லைனு வச்சுக்குங்க, உங்க பேரன் பேத்திக்கு, சொத்தை குடுப்பிங்களா,மாட்டிங்களா, தாமத்ஜி , சொத்தை எழுதி வைக்கச் சொல்லவும் அமைதியாயிட்டீங்க, இரண்டு பிள்ளைகளும் உங்களுது தான், வேணும்னா டி என் ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு எழுதி கொடுங்க “ எனவும், கைலாஷுக்கு முகம் சிவந்து, கோபத்தில் எதுவும்,சொல்லி விடுவோமோ,என அவர் தன்னைக் கட்டுப் படுத்துவது தெரிந்தது.
“ராணிமா, நீங்க இப்ப பேசறது சரியில்லைங்க “ என்றார் விஜயன். நாளை இதே கேள்வியை ராஜனிடம் வேறொரு ஆள் கேட்கும் பொது, அவரின் உண்மையான ஸ்வரூபத்தையும்,பைரவி மேல்கொண்ட நம்பிக்கை, காதலையும் சுற்றம் அறியும்.
“ஆயி, எதுக்கு இதெல்லாம் பேசுறீங்க, அந்தச் சொத்தினாலா தானே , நான் இப்படி நிற்கிறேன்” எனப் பைரவி அழவும் ,
“ஆயி,இரண்டு பக்க சொத்தும் நமக்கு வேண்டாம் ஆயி, நம்ம எங்க இருந்தாலும் , இந்தச் சொத்து இல்லாமலே நம்மால பொழைச்சுக்க முடியும் ,நமக்குத் அந்தத் தெம்பும் இருக்கு. ஆனால் , நானிமா சொல்றாங்கன்னா, சும்மா சொல்ல மாட்டாங்கன்னு உங்களுக்கும் தெரியும், உலகத்தில எங்க போனாலும் இது பகை நம்மைச் சுற்றும் , அதை முடிக்காமல் போக முடியாது. இவ்வளவு காலம் போராடுனவுங்க, இப்ப மனசை விடலாமா “ என ஆதர்ஷ் , பைரவிக்குப் புரிய வைக்க முயன்றான்.
“என்னால முடியலைப் பாபா, ஆயிக்கிட்டே இருக்கத் தெம்பு கூட எனக்கு இல்லை “ என ஓய்ந்து போய் அமர்ந்தார்.
கைலாஷ், பாருவிடம் வந்தவர், “பாரு, போஸ்லே குடும்பச் சொத்து மதிப்பு என்னனு எனக்குத் தெரியும், உன் ஆயி இருபது வருஷத்திலே,பாலாஜி ராவ் பெயரில் எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணியிருக்காங்க, அது இப்போ ஆதர்ஷ் பேரில் எத்தனை மடங்கா இருக்கு எல்லாமே, எனக்குத் தெரியும், இந்தச் சொத்து வந்து உங்களுக்கு ஆகப் போறது ஒண்ணுமில்லை. அப்புறமும் ஏன் இப்படிப் பேசணும், எனக்குத் தெரியாமல் , வேற எதுவும் இருக்கா” எனக் கேட்டார். ரமா பாய்க்கு ,மருமகனின் யோசனை ஓட்டத்தை எண்ணி கர்வம் தான், இப்போதாவது, மகள் உண்மையைக் கூறட்டும், ராஜின் தங்கைகள் முகம் வெளியே வரட்டும் என அமைதி காத்தார்.
ஆனால், பைரவிக்கு,தன கணவரோ, மாமன்,மாமியோ,என் பன்னீரும் துன்பப் படுவதைப் பார்க்க விருப்பமில்லை, இத்தனை வருடம் கழித்து வரும்,தன நாத்தனார்களால், பெரிதாக ஒன்றும் ஆபத்து இருக்காது என்றே யோசித்தார். எனவே ரமாபாயியையே குற்றம் சுமத்தி,
“ஆயிக்கு, அவங்க நினைச்சதை சாதிக்கிற பிடிவாதம், நீங்க விடுங்க, அவங்க கூப்பிடவும் நான் பின்னாடியே போயிடுவேனா என்ன” எனக் கேள்விக்குக் கேள்வியை எழுப்பியவர்,
“ஆயி, உங்களுக்கு வேண்டியது, அனோன்ஸ்மென்ட் தானே, அதை ராஜ் செஞ்சுடுவாங்க, பீபீ மில்ஸ் சொத்து, அதை அடைய ஆதர்ஷ் இருக்கான், உங்களுக்குத் தான் வச்சுக்குங்க, என்னையும்,என் மகளையும் விட்டுருங்க, அவர் நிழல்ல, நாங்க இருந்துக்குவோம். அன்னைக்கே போக வேண்டிய உயிர் , இனி இருக்கிறது எல்லாம் எனக்குக் கிரேஸ் பீரியட். நான் என் புருசனோட நிம்மதியா இருந்துக்குறேன், நீங்க ,இதைப் பேசத் தான் வந்தீங்கனா , தயவு செய்து கிளம்புங்க” எனப் பைரவி பேசப் பேசவே, ஆதர்ஷுக்கு , தன்னை வீட்டுக் கொடுப்பதாகக் கூறிவிட்டார் ஆயி, என முகம் கலங்கிப் போனது, ஆனாலும் நொடியில் சமாளித்தான்,
கைலாஷ் , பாரு, என அழைத்து, அவர் பேச்சுக்கு வேகத் தடை போடா முயற்சி செய்தவர், கடைசி வார்த்தைக்கு, “பாரு” எனப் பெரிய சத்தமாக அதட்டினார்.
“பவானி, வீட்டுக்கு வந்தவிக கிட்ட இப்படியா பேசுவாங்க” எனச் சௌந்தரியே கண்டித்தார். மற்றவர்களும் வேறு,வேறு வார்த்தைகளில் சொல்ல, ரமாபாய் இதற்கெல்லாம் அசரவில்லை, தன புகுந்த வீட்டைக் காப்பாற்றும் மக்களின் சாமர்த்தியத்தை மனதில் மெச்சி கொண்டார்.
“தீதீ , படி ஆயி,உங்களுக்காகத் தன வாழ்க்கையவே அர்பணிச்சு இருக்காங்க, இப்படிப் பேசாதீங்க” என ராதா சொல்லவும்,
“பேசட்டும் விடு ராதி. போஸ்லே குடும்பம் பேசாத பேச்சையா, இவள் பேசிட போறா, அவளுக்கு , தன் மகனை அவகிட்டே இருந்து மறைச்சிட்டேன்கிற கோபம், இவள் பெற்றுப் போட்ட லட்சணத்துக்கு, நீ தூக்கிட்டு போனதால தான்,ஆதர்ஷ் பொழைச்சான்னு , இவளுக்கு என்ன தெரியும், கோழையாட்டமா மனசை விட்டுட்டு , பிச்சியா அலைய மட்டும் தான் தெரியும். “ என மகளை நொந்தவர்,
“நானாசாப், நாம போகலாம் ஹோட்டல் எது பாதுகாப்பானதுன்னு பார், அங்க ரூம் போடு” எனச் சொல்லவும்,
“சாஸுமா, நீங்க எங்கையும் போக வேண்டாம், இங்கியே தங்குங்க, அவள் பேசினத்துக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேனுங்க, நீங்க நினைச்சபடி, என் சொத்தை எழுதி வச்சிட்டு, கூப்பிடுக்குறேன், நீங்க கூட்டிட்டு போங்க “ என்றவர், கையேடு போன் போட்டு தனது வக்கீலையும் நாளைக்குக் காலையில் வரச் சொன்னவர், “இன்னைக்கு மட்டும், பாரு, என்ர கூட இருந்துகட்டுங்க, நாளைக்குக் கூப்பிட்டுக்கோங்க, இன்னைக்கு வந்தாள்னாலும், அவ கோபத்த உங்க மேல தான் காட்டுவாளுங்க, அது அவள் உடல்நிலைக்கு நல்லதில்லை” என மனைவியையே பார்த்துக் கொண்டு சொன்னார்.
“தாமாத்ஜி, என் மகள் பேசுறது என்னைப் பாதிக்காது, ஆனா அவளுக்கு ஏதாவது ஒன்னு ஆனா, அது என்னைப் பாதிக்கும், அதுக்காக , பல நேரங்கள் இப்படிக் கடுமையா தான் நடந்துக்குவேன், என்னைப் புரிஞ்சிகிட்டத்துக்கு நன்றி” என்றவர், சம்பந்திகளிடமும் சொல்லி விட்டு வெளியேறினார்.
கைலாஷ் ராஜன் தானே , நண்பன் விஜயனுடன் வந்து விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்குவதற்குச் சகல வசதிகளும் இருக்கிறதா எனச் சரி பார்க்க , அதற்கு முன்பே அது போஸ்லே மாளிகை ஆகியிருந்தது.
பன்னீரும், பாலாவும் ரமாபாய் பிடிவாதத்தையும், பைரவியின் பதட்டத்தையும் பார்த்து, எதோ உள்ளது என ,ராஜனும்,சௌந்தரியும் இல்லாத போது விசாரிக்க, “பழசை எல்லாம்,கிளறாம விட்டுருவோம் மாமா, அது தான் எல்லாருக்கும் ன் நல்லது” என்றவர், சௌந்தரியிடம் தனியாகச் சென்று, தன ஆயின் வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்க,
“ என்ர மகன் வாழ்க்கை, உன்ர கையில தான் கண்ணு, உன்ர கூட இருக்கவும் தான், அவன் முகத்தில் சந்தோசமே வந்திருக்கு, அதே நேரம் நாளைக்கு, அவன் பொறந்தவளுங்க , அது தான் என்ர மகளுங்க வருதுங்க, திடீர்னு உன்னை ஒத்துக்குறது, அவிகளுக்குச் சிரமம், அதுக்காக அவிகளைத் தப்ப நினைச்சிறாதே, எனக்கு அப்புறம்,நீ தான் அவிகளுக்கு அம்மா ஸ்தானம் “ என மருமகள் கையைப் பிடித்துக் கொண்டு உருக்கமாகப் பேசினார், ஏனெனில் ரமா பாய் வார்த்தைகள் எல்லார் மனதிலும் ஓர் சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருந்தது.
“அத்தை , எனக்கு ராஜ் மட்டும் போதும்னு நினைச்சிருந்தா, இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னாடியே , என்கிட்டே நிறுத்தியிருந்திருப்பேன், எனக்கு நீங்க எல்லாரும் தான் வேணும் “ எனக் கண்ணீர் விட, “அழுவதா ,கண்ணு,வீட்டுக்கு வந்த மருமகள் ,கண் கலங்கக் கூடாது. நீ தொங்க, தொங்கத் தாலி கட்டி , என்ர மகனோட நூறு வருஷம் வாழணும் .நீ தான் என் ராசாவுக்கு ஏத்த ராணி ” என மருமகளைக் கொஞ்சி, திருஷ்டி கழித்து மாடிக்கு அனுப்பி விட்டார். இது போதாதா பைரவிக்கு, ஆயிக்கு எதிராகக் கொடி பிடிக்கவும் தயாராகினார்
தங்கள் வாழ்வின் இருண்ட பக்கங்களை,”வாய்மை எனப்படுவது, யாருக்கும் தீமையில்லாத சொலல் “என வள்ளுவரின் வாக்குக்கு இணங்க , கணவரிடமிருந்தும் மறைத்தவர், பேச்சைத் திசை மாற்ற, அபி, ஆதிரா பற்றிப் பேசினார்.
" அபி தம்பியும், ரஜ்ஜும்மாவும் இன்னும் பேசிக்கவே இல்லை. நீங்க தான் உங்க தண்டனையை வாபஸ் வாங்கினா என்னவாம்" என இளையவர்களுக்காகப் பரிந்து பேச,
" நீ ரொம்ப உருகாத அம்மணி. அதெல்லாம் அவன், தன் மாமனை மாதிரி விஷமக்காரன், வேற எதுனா செஞ்சு, என்ர மகளோட பேசாமல் பேசிக்கிட்டு இருப்பான்" என அவர் சிரிக்க, " அது எப்படி" எனப் பைரவி அதிசயிக்க, ஸ்டேட்டஸ் போடுறான் பார் என அலை பேசியில் காட்டியவர், இவன் இந்தப் பாட்டைப் போட்டிருக்கான, உன்ர மகள் பதிலுக்கு இதைப் போடுவா. அவன் மறுக்கா இதைப் போடுவான், ரஜ்ஜும்மா இதைப் போட்டுருக்கா. எனப் பாடல் வரிகளைக் காட்டி விளக்கம் தர, " இது எப்படி உங்களுக்குத் தெரியும்" எனப் பைரவி வியக்க
நான் பார்பேன்னு தெரிஞ்சே தான ராஸ்கோல் வைக்கிறான். என்ர மகள் வெள்ளந்தி, அதுக்கு ஒண்ணும் தெரியாது. இவன் அப்பனைக் கொண்டு பிறந்திருந்தா நல்லவனா இருந்திருப்பான். சேனை தொட்டு வச்சது நானில்ல, என்னை மாதிரி யே வந்திருக்கான்" எனப் பெருமை பட்டார், நாளை இதே வேலையை அவரும் பார்ப்போம் என நினைக்க வில்லை. பைரவி, "ரொம்பப் பெருமை தான்" எனச் சிரித்தவர்,
" ஆதர்ஷ் பாபாவும், உங்ககிட்ட வளர்ந்திருந்தா இப்படி வளர்ந்திருப்பான். வயசுக்கு மேல முதிர்ச்சியா இருக்கான். ராதா இருக்கான்னு, என் கூடச் சரியாவே பேசலை" என மகனை எண்ணிக் குறைபட,
" நீயும் தான், உன் ஆயிகிட்ட, அவனைக் கூட்டிட்டு போங்கன்னு, சட்டென விட்டு கொடுத்து போட்ட , பையன் முகம் பொக்குனு போச்சு" என மனைவி சொன்னதைச் சுட்டிக் காட்ட, " நானா" என்றவர், " நல்ல மகளா, மனைவியா, அம்மாவா, உங்க யாருக்குமே, நான் நல்ல மனைவியா, மகளா, அம்மாவா நான் இருக்கலை ராஜ். " எனச் சுயபச்சாதாபத்தில் கண் கலங்க ஆரம்பித்தார்.
" எல்லாரையும் பார்க்கவும், ஆஊன்னா , உடனே அழுவுறதுக்குக் கத்து வச்சிருக்க அம்மணி, இந்த அழுகாச்சி பொம்பளை வேண்டாம்,பழைய பாருவா மாறு, நல்ல மனைவியா, உன்னை ட்ரைன் பண்ண வேண்டியது, என்ர பொறுப்பு, வா" என அவரைத் தன்னை நோக்கி, இழுக்க," ராஜ்" எனச் சிணுங்கலோடு அவருக்கு இயைந்தார்.
அடுத்த நாள் பொழுது புலர, மஹந்த்தை தொடர்பு கொள்ள இயலாத போஸ்லேக்கள், கோவைக்கு ஆட்களை அனுப்பினர், ரமாபாய், திட்டத்தை அறிந்தவர்கள், அடுத்து என்ன செய்ய என ஜெயந்திடம் யோசனை கேட்டு நின்றனர்.
கைலாஷின் தங்கைகள் இருவரும், கணவர், மகள்கள் சகிதம் வந்து சேர்ந்தனர். கே ஆர் மாளிகை களை கட்டியது. ரமாபாய் சந்தேகப் படுவது போல், இவர்கள் ஆபத்தானவர்களா, அண்ணன் மீது பாசமழை பொழியும் பாசமலர்களா , இவர்கள் அத்தனை பேரையும் மீறி, கைலாஷ்- பாரு, திருமணக் கொண்டாட்டம் , ஆதர்ஷ்- ஆதிராவை முறைப்படி அறிவித்தல் எப்படி நடக்கும்
பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment