Saturday, 30 April 2022

யார் இந்த நிலவு -51

யார் இந்த நிலவு -51  

"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

சிந்தை இனித்திட உறவுகள் மேவி

பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே

மண்ணில் இதைவிடச் சொர்க்கம் எங்கே"

தன் குடும்பம், மகன், மகள்கள் அவரது துணைகள், பேரன் பேத்திகள் என ஒன்று சேர்ந்து வாழும் கற்பனையைத் தான், பல வருடங்கள் முன், பாலநாயகம், சௌந்தரியும் கண்டார்கள்

வீட்டுக்கு வரும் மருமகள், தம் குடும்பத்தின் மீது பாசம், பற்றோடு இருந்தால், நாடோடியாகத் திரியும் மகனையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மனை சிறக்க வாழலாம், என்றே ராஜனை நேசித்த நண்பனின் மகளை, மணமுடிக்க ஏற்பாடுகளைச் செய்தனர். எல்லாம் பகல் கனவாகச் சென்று விட, மகள்கள் திருமண வாழ்வாவது நன்றாக உள்ளதே என மனம் தேறினர்.

இன்று, கே ஆர் மில்ஸ் எனும் சாம்ராஜ்யத்தில், அதன் ராஜானனான கைலாஷ், மனைவி, மக்களுடன், இரண்டு பக்க சொந்தங்களுக்கும் நடுவில் தன் குடும்பம் என, அதே அரங்கத்தில் , தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறைக்குள் தங்கினார். அவரது விரலசைவில் விரைந்து நடந்த வேலைகள்.

கைலாஷ்- பைரவி திருமணம், கௌரி பூஜை, மணமகளைப் பார்க்கக் கூடாது, என்ற சகலத்தையும் உடைத்து, தனிப் பாணியில் அவர்கள் மணவிழா அரங்கேறிக் கொண்டிருந்தது.

இரவில், ஒரே அறையிலிருந்த போதும், கௌரி விரதம் எனப் பைரவி கணவரை, நான்கடி தள்ளியே நிறுத்த, " இதெல்லாம் ஞாயமே இல்லை அம்மணி. இருபத்திரெண்டு வருஷம், தவமிருந்திட்டேன், இன்னும் என்ன வேணுங்கிற" என அவர் ஆட்சேபிக்க, நான்கு ஒற்றைக் கட்டில்களை, வரிசையாகச் சேர்த்துப் போட்டு, ஆதர்ஷ் அதற்கொரு முடிவு கண்டான்.ஆயி, பாபாவுக்கு நடுவில் படுப்பது,தனது அண்ணனோடு சேர்ந்து குடும்பமாக இருப்பது ஆதிராவுக்குத் தான் கொண்டாட்டம். அவரவர் தமது, இயல்பான உடையில், இன்று இயல்பான ஓர் குடும்பமாக உணர்ந்தார்கள்.

ஒரு ஓரம், ஆதர்ஷ், மறு ஓரம் கைலாஷ் , நடுவில் பைரவியும், ஆதிராவும், என முடிவாக, அதிலும் மகளைத் தங்கள் இருவருக்கு மிடையில் இருத்திக் கொண்டார் பைரவி. கைலாஷ் புன்னகைத்துக் கொண்டவர், ஆளுக்கொரு, போர்வையைத் தந்து விட்டு, மகளுக்கு ஸ்பெஷலாக ஒரு பாஸ்மினா ஷாலையும் கழுத்தில் போட்டு விட்டவர், " நைட் நெம்பக் குளிரும் கண்ணு" என, அதிரடியாய் ஏற்பாடு செய்திருந்த குளிரூட்டி களை காரணம் காட்டி , மகளுக்கு ஸ்பெசலாகத் தர, “உங்க மக்களுக்கு மட்டும் தான் குளுருமாக்கும்” எனப் பைரவி அதற்கும் ஓர் முறைப்படி தந்தார்.

“அம்மாவும், மகனும் இதை விடக் குளிர் பிரதேசத்தில் இருந்தவிக தானே, உங்களுக்கு, பழகியிருக்கும், என்ர மகள் அப்படியா ” என அதற்கு ஓர் காரணத்தைச் சொல்லி மகளைக் கொஞ்சி, தனது இடத்தில் வந்து அமர, “ஐ லவ் யூ பாபா “ என அவர் மீது சாய்ந்து கொண்டே அவர் கையைப் பற்றியவள் " கை, வீங்கியிருக்கு பாபா" எனப் பதறவும், " ஒண்ணுமில்லை கண்ணு" என அவர் சமாதானம் சொல்ல, இது வரை ஓவர் கொஞ்சலா இருக்கு என வேடிக்கை பார்த்த அம்மாவும் மகனுமே, அவர் அருகில் வந்து, கையைப் பிடித்துப் பார்த்தனர்.

" இது எப்படி ராஜ், எங்கிட்ட சொல்லவே இல்லை" எனப் பைரவி, அவர் கையைத் தடவி விட, " இப்போ மட்டும் கௌரி விரதம் இல்லையாங்க அம்மணி" என இவர் நகைக்க, அவர் முறைத்து விட்டு, “யாரையாவது வெந்நீர் கொண்டு வர சொல்லு பாபா” என மகனிடம் வேலை ஏவினார்.

பத்து நிமிடத்தில் அவன் கேட்ட அத்தனையும் வந்து சேர, அதற்குள்,கைலாஷ் காய் வீக்கத்துக்குக் காரணம் கேட்டு, பதில் வாங்கி அதற்கு ஆட்சேபனையும் தெரிவித்திருந்தார் பைரவி. மகனும்,மகளும் ,இத்தனை வருடம் பிரிந்திருந்த போதும், உரிமையாகத் திட்டும் ஆயியையும், அதைக் கேலி, கிண்டலோடு ஏற்றுக்கொள்ளும் பாபாவையும் பார்த்து வியந்தனர்.

ஆதர்ஷ், வெளியே சென்று திரும்பியவன் , வெந்நீர் பய், பாத்திரம் மற்றும் சகல இத்யாதிகளோடு வர, ஆதிரா அதை வாங்கித் தன் பாபாவின் கைகளை, அதில் வைக்கச் சொல்லி, கை வீக்கத்துக்கு மருத்துவம் பார்க்க, " ஷ்… ஆ. ரஜ்ஜும்மா, நெம்பச் சுடுது கண்ணு" எனக் கைலாஷ், ஒரு ஆட்டம் காட்ட,

பைரவி, " ரஜ்ஜும்மாவே , சூட்டை பொறுத்துக்கிறா. நீங்க ஓவரா பண்ணாதீங்க ராஜ்" எனக் கடிய, ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான்.

ஆதிரா, தன் பாபாவின் கைகளுக்கு, ஆயி சொல்லச் சொல்ல சிகிச்சை செய்தாள், ஆதர்ஷ் அவர் கால்களுக்கு, சுடுநீர் பேகால் ஒத்தடம் கொடுத்தான்.

" விடு கண்ணு, அட வேண்டாம் கண்ணு, எனக்கு ஒண்ணுமில்லை. ஆயியை பாருங்க, அவளுக்குத் தான் நெத்தியில் காயமிருக்குது" என மறுத்தார் கைலாஷ்.

" ஆயிக்கும் செய்வோம் பாபா, முதல்ல உங்களுக்குச் செய்ய விடுங்க. சின்ன வயசிலே உங்க கையைப் பிடிச்சு நடந்ததில்லை, உங்க கூட இருந்ததில்லை, அபியும், ரஞ்சியும் சொல்லும் போது, எவ்வளவு பொறாமையா இருந்தது இந்தச் சாக்கை வச்சாவது பிடிச்சுக்கிறோம்" என ஆளுக்கொரு சேவகம் செய்ய, கைலாஷ், மகளையும் இரண்டு புறமும் அணைத்துக் கொண்டவர்,

" ஓஞ்சு, உட்கார வயசில, ஒத்தையா போயிடுவேன்னு நினைக்கிற நேரம், வந்து சேர்ந்திட்டிங்களே கண்ணு , உங்களுக்குத் தேவையான நேரத்தில் தான், பாபா இல்லாத போயிட்டேன்" எனக் குறை படவும், "எல்லா வயசிலையும், பாபா தேவை தான் ராஜ். நீங்க, உங்க அப்பா கூடச் சண்டை போட்டு நின்னாலும் , அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும். நம்ம பசங்களும், தன வாழ்க்கையை நிர்ணயிக்கிற முக்கியமான காலக் கட்டத்துல இருக்காங்க, இப்போ தான் உங்க அரவணைப்பு அவங்களுக்கு வேணும். நீங்க என்னை விடச் சிறந்த பாபாவா இருப்பிங்க ராஜ்" என்ற பைரவி முக வாட்டத்தைக் காட்டவும்,

"உங்க ரெண்டு பேர் மேலையும், எங்களுக்குக் குற்றம், குறை எதுவும் இல்லை ஆயி" என ஆதர்சம், "நம்மளை சேர்த்து வச்சு பார்க்காத துல்ஜா பவனி மேல தன கோபம்" என ஆதிராவும் சொல்லவும்,

" இனிமே, போனதைப் பத்தி பேச வேண்டாம் கண்ணுங்களா. ஒவ்வொரு நிமிசமும், சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிப்போம். எனக்குச் சேவை தான செய்யோணும், இந்தச் செய்ங்க. உங்க ஆயி தான் விரதம், நம்பளுக்கு என்ன" என ராஜாவாகவே திண்டில் சாய்ந்து கொள்ள, அவர்களும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மசாஜ் செய்தனர். பைரவி கண்குளிர பார்த்துக் கொண்டார், ,அவள் வார்த்தையை , மனசில எடுத்துக்காம இருந்திருந்தேன்னா, என் குடும்பம் இத்தை வருட பிரிவை சந்தித்து இருக்காதே' என நினைத்துக் கொண்டார்.

சற்று நேரத்திலேயே, " போதும் கண்ணுங்களா, உங்க ஆயி பொறாமையா பார்க்கிறா, அவளுக்குச் செய்ங்க" என இருவர் கைகளையும் பற்றிக் கொஞ்சினார். அதற்கும் ஆதர்ஷ், " பாபாக்கு, கை பரபரங்குது. நீங்க தான் ஆயி விடமாட்டேங்ககறீங்க" எனக் கேலி பேசியபடி எழுந்த மகனை, பைரவி முறைக்க, கைலாஷ் எதுக்குக் கண்ணு" என ஒன்றும் புரியாதது போல் வினவியவர், இருவரும் அர்த்தமாகச் சிரிக்கவும்,

" என்ர பொண்டாட்டியை, கொஞ்சறதுக்கா, அட நீங்க இருந்தா என்ன" என்றவர் பைரவி யோசிக்கும் முன், எட்டி அவரது தோளை அணைத்து, நெற்றி காயத்திற்கு மேல், இதழ் பதித்து விட்டு, " இந்தக் காயம் சீக்கிரம் ஆறட்டும் அம்மணி " என வாழ்த்தவும், பைரவி செங்கொழுந்து ஆனார். அதற்கும் மகனும் மகளும், " மஸ்து பாபா, படியா மஸ்து" எனக் கேலி பேசினர்.

பைரவியும், சாய்ந்து அமர்ந்தவர் ,தன் அருகில் வந்து அமர்ந்து, அவர் காயத்தைப் பரிசோதித்த மகனை, “எனக்கு ஒன்னும் இல்லை பாபா “ என்றவர், மகன் தாய்மடி வேண்டும், என்றதை நினைத்து கால் நீட்டி, மகனை அழைத்து,அவன் உங்களுக்கு ஏன் சிரமம் என்றதையும் பொருட்படுத்தாமல், பிடிவாதமாக மகனின் தலையைத் தன் மடியில் வைத்து படுக்க வைத்துக் கொண்டார். மறு புறம், தனகை , கால்களை அமுக்கிய மகளின் கைகளை முத்தமிட்டு, “என்ர தங்கப் பிள்ளை , பொண்ணு மயிலு கை படவுமே , வலியெல்லாம் பறந்து போச்சுடா” என அவள் விரல்களுக்குச் சொடக்கு எடுத்தார் கைலாஷ்’.

மகனின் தலையை வருடியபடி, "அன்னைக்குத் தான், என்னை முதல் முதல்ல பார்த்தியா பாபா" எனக் குன்னூருக்கு வந்து ஹார்ட் அட்டாக் வந்த தன்னைத் தூக்கி வந்ததைப் பற்றிக் கேட்கவும், அப்பாவும், மகளும் கூட ஆவலோடு அதற்கான பதிலை எதிர்பார்த்தனர்.

" உங்களை, பாபாவை, ஆதுவை எல்லாரையுமே, தூரத்திலிருந்து பார்த்திருக்கேன் ஆயி. சத்தாரால மாளிகை கட்டவுமே, நானிமா, அப்பப்போ கூட்டிட்டு வந்தாங்க. ஆதுவை , ஒரு ஸ்கூல்ல வச்சு பார்த்தேன்.உங்க கல்யாண நாளைக்கு, இரண்டு பேருமே சந்தன்கட் வருவீங்கன்னு, நானிமா கூட்டிட்டு வந்தாங்க. தனித் தனியா பார்த்திருக்கேன். உங்கள் எல்லாரையும் காட்டி, ஆபத்துகளைச் சொல்லி, நம்ம குடும்பம் ஒன்னு சேரணும்னு , மோட்டிவேட் பண்ணியே , என்னைத் தயாராகினாங்கன்னு தான் சொல்லணும் “ என அவன் சொல்லவும், பைரவியின் கண்களில் கண்ணீர். ஒரு சேர மூவருமே கண்ணீரைக் கண்டித்தனர்.

“சந்தோசமா இருக்கணுமுன்னு சொன்னேன்ல அம்மணி, நல்லதை மட்டுமே நினைச்சுக்கோ” என அவர் சொல்லவும், ஆதிரா தான் அடுத்தப் பேச்சை ஆரம்பித்து விட்டாள்,

திண்டில் ஒருக்களித்துச் சாய்ந்து படுத்திருந்த தன் பாபாவை ஒட்டி அமர்ந்து கொண்டவள், "பாவு, நீங்க பாபாக்கிட்ட, அவங்க லவ் ஸ்டோரியைக் கேட்டதில்லையே, செம ஃபீல். நம்ம ஆயி தான், அந்தப் பொண்ணுன்னு தெரியாமல், எனக்கே அவங்க மேல அவ்வளவு பொறாமை வந்தது. பாபா, ஆயியை முதல்ல பார்த்தது, மில்லில் பார்த்தது எல்லாம் சொல்லுங்க பாபா." என அவள் கதை கேட்க, ராஜன் ஹாஹாவென மனைவியைப் பார்த்தவாறே குலுங்கிச் சிரிக்க, அதில் பைரவியின் கன்னங்கள் செம்மை பூத்தது.

" ரஜ்ஜும்மா, சுப்கர், ஷரம் நஹி ஆயி. ஆயி, பாபாட்ட என்ன பேச்சை பேசுற" என வருவிக்கப் பட்ட கோபத்தில் பைரவி கண்டிக்க, ஆதர்ஷ் தன் அன்னையைக் கண்டு கொண்டவன்,

" நிஜமாவா ஆயி, பாபா அவ்வளவு ரொமான்டிக்கா, நீங்க சொல்லுங்க" என எழுந்தமர்ந்து, அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டு கேட்க, எதிரே திண்டில் சாய்ந்த படி இருந்தவர், அந்த நாளின் நினைவில், முதலில் பார்த்ததை வர்ணிக்க, பைரவி தான் நினைத்ததையும் சொன்னார்.

“உங்க ஆயி, ராஜ பரம்பரை, செம கெத்து.நான் சாதாரண ஆளு தான கண்ணு ” என அவர் சொல்ல, “ ஆஹா, சாதாரண ஆளு நீங்க, ஆதர்ஷ் பாபா, உன் பாபா சொல்றதை நம்பாதே. இப்பவே நினைச்சதை சாதிக்கிறார், அப்போ எப்படி இருந்திருப்பார். “ எனப் பைரவியும் விடாமல் கேட்டார்.

“ஏன் கண்ணு, இப்போ காசு பணம் வரவும், கொஞ்சமே பவர் வந்திருக்கு , இவிகளாட்டமா , பரம்பரையா பவரோட பிறந்தோம்” என மனைவி கூற்றுக்கு மறுப்பு சொல்லவும், “ பாபா, ஆயி சொல்றது ரைட், அவங்ககிட்ட, பைசா பவர் இருந்திருக்கலாம், ஆனால் உங்க கெத்தில் தானே , சோட்டி குமாரியே விழுந்திருக்காங்க, இல்லை ஆயில்” என ஆதிரா, ஏற்கனவே கதைக் கேட்ட அனுபவத்தில் சொல்ல, கைலாஷ் நகைப்போடும், பைரவி வெட்கம் கலந்த மென்னைகையோடும் அதை ஒத்துக் கொண்டனர்.

அன்று கைலாஷின் காதலை உணர்ந்த, ஆதிரா தன் ஆயி மேல் பொறாமை கொண்டால் எனில், இன்று ஆதர்ஷ், “ஆயி, கண் முன்னாடி, அந்த நாள் கைலாஷ் ராஜ் வந்துட்டாரா, இவ்வளவு ப்யார் “ என அன்னையின் கன்னத்தில் முத்தமிட, “சோடோ பாபா” எனப் பைரவி கண்ணை மூடிக் கொள்ள, “இதெல்லாம் நியாயமே இல்லை கண்ணு” என ஏக்கமாகச் சொல்லவும், “பாபா, உங்க கோட்டா முடிஞ்சது, மீதியை கண்டின்யு பண்ணுங்க” என மக்களும், மகனும் பெற்றவர் காதல், கதையைக் கேட்டிருந்தனர்.

தங்கள் , திருமணம், இரண்டு மாத இல்லறத்தில் இனிமையான பொழுதுகளைப் பேச, இருவரிடமும் இருந்த அன்யோன்யம் அவர்கள் பிள்ளைகளுக்கும் புரிந்தது.

“ ஆயி, பாபா ,நீங்க உடலால் பிரிச்சிருந்தாலும்,மனசால ஒண்ணா தான் வாழ்ந்திருக்கிங்க. உங்க பிள்ளைகள்னு சொல்றது, எங்களுக்குப் பெருமை தான் “ என ஆதர்ஷும் , “அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா, உங்களுக்கே பிள்ளைகளா தான் பிறக்கணும்” என ஆதிராவும் சொல்லவும் பெற்றவர்கள் உருகித் தான் போனார்கள். இனி எந்தப் பிரச்சனை வந்தாலும் , இந்தக் குடும்ப அமைப்பு கலையக் கூடாது என அவரவர் மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள், காலை மிகவும் இனிமையாகவே விடிந்தது. விடியலில் சீக்கிரம் முழிப்பு வரவும், பைரவி பிள்ளைகளையும், கணவரையும் பார்த்தவர், ஆயி பவானியிடம், தன் குடும்பத்தை இதே போல் என்றும் சேர்த்து வைத்திருக்க விண்ணப்பித்துக் கொண்டார்.

ஆயி துல்ஜா பவானி, செவி மடுப்பாளா....

(இரண்டு நாளாக வேறொரு வானொலி நிகழ்ச்சி கவிதைகள் தொகுக்கும் பணியில் இருந்ததால், இந்தச் சிறு பதிவு. கைலாஷின் இனிமையான குடும்பம்.)


No comments:

Post a Comment