ஆதர்ஷ், அபிராம் இருவருக்கும் வந்த செய்தி ஒன்றே தான், ராஜனும், விஜயனும் சென்ற கார், மேட்டுப் பாளையம் ரோட்டில் பெரிய ஆக்சிடெணட்டை சந்தித்தது என்பதும், அநேகமாகக் கார் கிடந்த நிலை, அதிலிருந்தவர் பிழைக்கமாட்டார் என்பதும் தான். ஆதர்ஷ் விசயம் கேள்விப்படவுமே ஆடிப் போய்விட்டான்.
'தன்னை, பாபா என அழைக்கச் சொல்லி கட்டாயப் படுத்தா விட்டாலும், தன் வாயிலிருந்து அந்த ஒரு வார்த்தை வந்திடாதா, என எவ்வளவு எதிர் பார்த்தார். ' என மறுகியவனுக்குக் கே ஆர் மில்ஸே அதிரும்படி பாபாவெனக் கத்த வேண்டும் போலிருந்தது.
அடுத்து, ஆயி துல்ஜா பவானி முன்பு, அந்த ஆயியே மனித அவதாரம் எடுத்து வந்தது போல், இப்போது சிவப்புப் பட்டில், தமிழ்நாட்டு மருமகளாய் சேலை உடுத்திச் சிங்காரித்து, விளக்குப் பூஜை செய்யத் தயாராக இருந்த அன்னையைப் பார்த்தான். விசயத்தை உறுதி செய்து கொள்ளாமல், ஆயியிடம் சொல்லக் கூடாது, அவர் இதயம் துடிப்பதை நிறுத்தி விடும்.
மானாகத் துள்ளித் திரியும் ஆதிரா, இத்தனை வருடம் கழித்து, தகப்பனின் அன்பைப் பெற்றவள், அந்தப் பக்கம் தகப்பனைப் பெற்றவர்கள், இங்கிருக்கும் யாருக்கும் விசயம் தெரியக் கூடாது என நிதானித்தவன், தன் நானிமாவிடமும் சொல்லாமல் பாலாஜி ராவ், அவன் டேடை தேடிச் சென்றான். அவன் குரு அவர் தான்.
அவரைத் தனியே அழைத்துச் சென்று, அவரைக் கட்டிக் கொண்டவன், " டேட், பாபா போன கார் ஆக்சிடெணட் ஆனதா நியூஸ் வந்திருக்கு" என நடுங்கும் குரலோடு பயந்தபடிச் சொல்ல, முதலில் அதிர்ச்சியாய் பார்த்தவர், அவன் நிலை உணர்ந்து, முதுகில் தட்டி ஆறுதல் சொன்னவர், " தர்ஷு, நியுஸ் கன்பார்மா, யார் சொன்னா. அதெல்லாம் இருக்காது. கே ஆர், அவ்வளவு கேர்லெஸ்ஸான ஆள் கிடையாது" என அவனைத் தேற்ற,
" நம்ம ப்ளாக் கேட்ஸ் தான் டாட் தகவல் தந்தாங்க. எனக்குப் பயமா இருக்கு, ஆயிக்கிட்ட எப்படிச் சொல்லுவேன். " என இத்தனை நாள் பயின்ற கட்டுப்பாடு எல்லாம், காற்றில் பறக்க,முகத்தில் பால் வடியும் சிறுவனுக்கு இன்று கண்ணீர் பெருக்கெடுத்தது.
" ஒருதடவை கூட அவரைப் பாபான்னு சொன்னதில்லை டாட். என் வாயிலிருந்து, அந்த வார்த்தை வராதான்னு ஆசையா பார்ப்பார்" என அவன் பிதற்ற.
" கண்ணா, இங்க யாருகிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம் , இது நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய நேரம். கே ஆருக்கு ஒன்னும் ஆகியிருக்காதுன்னு நம்புவோம், அப்ப தான் சிட்டுவேஷன் ஹண்ட்ல் பண்ண முடியும். " என அவனுக்கு நம்பிக்கை தந்தவர், "அந்த மஹந்தை வெளியே விட்டுருக்கக் கூடாது, இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கான் பார்" என எதிரிகளைப் பற்றியம் பேச, அபிராமும் ஆதர்ஷை தேடி வந்தான்.
" மச்சி" என ஆதர்ஷ் அபிராமை கட்டிக் கொண்டு அழவும், " இடியட்டா நீ. கண்ணைத் துடை. யாராவது பார்த்திடப் போறாங்க. என்ர மாமாவை, அப்படி எல்லாம் எவனும் தூக்கிட முடியாது. அப்பாவும் கூடப் போயிருக்கார், இதில வேற ஏதோ நடந்திருக்கு. எனக்கும் பாதுகாப்புக்கு போனவிக தான் கூப்பிட்டு சொன்னாங்க. நாலு பேர் போனும் எடுக்க மாட்டேங்குதே " என அவன் வேறு கோணத்தில் யோசிக்க,
பாலாஜி ராவ், " நான் இங்க பார்த்துக்குறேன். நீ ஒரு டீமோட இடத்துக்குப் போங்க" என அனுப்பி வைக்க, இருவரும் மற்றவர் கவனத்தைக் கவராமல் கிளம்பினர்.
கே ஆர் மில்ஸ் என்ற அந்தக் கோட்டைக்குள், தொழிலாளர்கள் சொந்த பந்தங்கள் எனப் போக்குவரத்து அதிகமாக இருந்த போதும், அடையாளம் இல்லாத எவரையுமே செக்யூரிட்டிகள் உள்ளே அனுமதிக்க வில்லை. சாதாரணமாக வே பாதுகாப்புப் பலமாகத் தான் இருக்கும். இப்போது ராஜகுடும்பமும் உள்ளே இருக்க, உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திலிருந்தது.
கைலாஷ் ராஜன், தனது கோட்டையைப் பலப்படுத்தி விட்டு, வேட்டையைத் தேடிச் செல்லும் மன்னனைப் போல் நண்பனோடு தானே வெளியே கிளம்பி விட்டார்.
நேற்றிலிருந்து ஏதோ புதிய ஆட்கள் வேவு பார்ப்பதாகச் செய்தி வந்திருந்தது. ஏற்கனவே மஹந்த் ஆட்களைச் சிறை வைத்திருந்தவர், இந்தப் புதியவர்கள் யாரென அறிய,அதில் மாராத்தியர்கள் சிலரை மட்டும், தப்பித்துப் போக வழி செய்யச் சொன்னார். அதே போல் பாதுகாவலர்கள் அசட்டை காட்ட, மூன்று பேர் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பித்தனர். ஆனால் அதுவே இவரது மாஸ்டர் ப்ளான் என்பதை அறியாதவர்கள், மஹந்தை விடுவிக்க முயன்றனர். முன்தினம், பாலாஜியிடம் சொன்னது போல் , கைலாஷ் மஹந்த்தை விடுதலை செய்யவும் இல்லை, சிறை வைக்கவும் இல்லை.
போஸ்லேகளுடன் இன்றும் நல்ல உறவையே விரும்பியவர் , மனைவி சொல்லுக்காகா, அவனுக்குத் தனி ஏற்பாட்டைச் செய்து வைத்திருந்தார்.அதனால் தான் அவன் அடியாட்டகளுக்கும் அவன் இருக்குமிடம் தெரிய வில்லை. மஹந்தை மீட்காமல் போனால் போஸ்லேக்கள் கையில் உயிர் போவது உறுதி என நினைத்தவர்கள், தங்கள் தலைவனுக்குச் சோலாப்பூருக்கு போன் அடிக்க, தான் இங்குத் தான் இருப்பதாகவும், பீமராஜாவோட வந்திருப்பதாகச் சொன்னவன், ஏற்கனவே கே ஆர் மில்லை நோட்டம் பார்த்து வைத்திருந்த இவர்களைச் சேர்த்துக் கொண்டான்.
இந்த மூவரையும் தொடர்ந்த கைலாஷின் ஆட்கள், அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தனர். தான் வெளியே வந்து அவர்களைத் தாக்காவிட்டால், அவர்கள் மில்லுக்குள் புகுந்து விடுவார்கள் என யூகித்த கைலாஷ், தன் நண்பனோடு சேர்ந்து அடுத்து நடக்க வேண்டியதைத் திட்டமிட்டார். ஏனெனில், அடுத்தடுத்து வீட்டில் விசேஷத்தை வைத்துக் கொண்டு , நிம்மதியாய் குடும்பத்தினருடன் தந்து பொழுதை செலவழிக்க விரும்பியவர், பகையை முடித்தே ஆசுவாசமடய வேண்டும் என முடிவெடுத்தார்.
நேற்று தங்கள் வீட்டில் தங்கைகள் பைரவி குடும்பத்தைப் பற்றியும், அதிலும் ஆதர்ஷை, பாசமில்லாதவனாக, பணத்துக்காகவே வளர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தக் காசு பணம் இல்லையினா அண்ணனை தேடுவாங்களா' எனப் பேசியதையும் கேட்டவர்,
தனக்குப் பின் கே ஆர் மில்லை ஆதர்ஷ் பார்க்க வேண்டிய சூழல் வந்தால், அவரின் சொந்தங்களிடமும், தொழிலாளர்களிடமும், அவனைப் பற்றிய நல்ல விதமான அபிப்ராயம் இருக்க வேண்டும் , அப்போது தான், அவனுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என நினைத்தவர், மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை மற்றவர் முன் காட்ட வேண்டும். அவனுக்கு இருக்கும் உணர்வு பூர்வமான கட்டை உடைக்க வேண்டும் எனவும் நினைத்தார். அதற்காகவும் கைலாஷின் மூலையில் விபரீதமான எண்ணம் ஓடியது.
ராமாபாய்ச் சொன்னது போல், சொத்துக்களைச் சரியாகப் பிரிக்கவும், ஆடிட்டர், வக்கீல்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டியது இருந்தது. அதனால் இந்த வேலைகளை மில்லில் அமர்ந்து பார்க்க முடியாது என, கே ஆர் மில்லின் மற்றொரு யூனிட் இருக்குமிடத்துக்குச் சென்றார்.
கே ஆர் கார்களின் அணிவகுப்பு வெளியேறவுமே, சொல்லி வைத்தார் போல் மற்றொரு கார் அவர்களைத் தொடர்ந்தது. கைலாஷ் ரிவர்வ்யூ கண்ணாடியில் பார்த்து விட்டு, " என்ர மாமனார் வீட்டு ஆளுஙங்களுங்கும், என்ர மேல இருக்கப் பிரியத்தைப் பார்த்தியா , பாதுகாப்புக்கு வர்றானுவ" என ஓர் சிரிப்பை உதிர்க்க.
" சின்னவருக்கு உங்க மேல, நெம்பப் பிரியமுங்கப்பா, பின்னாடியே பூனைப் படையை அனுப்பி விட்டுருக்காருங்க" எனச் சத்தியன் ஆதர்ஷை பெருமையாகச் சொல்ல,
" க்கூம், நீ தான உன்ர சின்னவரை மெச்சிக்கோணும், அப்பான்னு கூப்பிட மாட்டானாமாம், பூனை படை, யானைபடைனு அனுப்பி வைக்கிறானாக்கும். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதாக்கும் " எனக் கைலாஷ் நொடித்துக் கொள்ள,
" அட மாப்பிள்ளை, உன்ர மேல அக்கறையோட இருக்காப்லையினா, சரின்னு தான் ஒத்துக் கோவேன். நீ ஒரு எக்தாளம் புடிச்சவன்" என விஜயன் நண்பனைத் திட்ட, சம்பத் சொல்லவும் சிரிக்கவும் மாட்டாமல் உட்கார்ந்து இருந்தார்.
" எனக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது இருக்கட்டும், நம்ம காருங்களுக்குப் பின்னாடி, இன்னொரு வண்டி வருது பார், அதைய என்ன செய்யறது. என்ர மச்சினன்களுக்கு அத்தனை தில் கிடையாது, பங்காளி அனுப்பியிருப்பானோ. வால் வருதான்னு பார்க்கனுமே" எனப் பூடகமாகவே பேசியவர், சோலாப்பூர் நண்பன் திலக்கு போன் போட்டுப் பேசிவிட்டு,
"போட்டோ அனுப்பி விடு, பங்காளி மவன் எப்படி இருப்பான்னு பார்க்கனுமில்லை, அடையாளம் தெரியாத, வேற அப்பாவியைப் போட்டு தள்ளிடக் கூடாதில்ல, எதைய செஞ்சாலும் ஒரு நியாயம் இருக்கோணும்" என அவர் சிரிக்க, விஜயன் அலைபேசி உரையாடலைக் கேட்டு நண்பனை முறைத்தார். அதைப் பொருட்படுத்தாத கைலாஷ், " அதுசரி, என்ர கல்யாணத்துக்கு வர்றது. சோட்டி ராணியையும் பார்த்த மாதிரி இருக்குமுல்ல" என்றவர் ,அந்தப் பக்கம் சொன்ன பதிலில் சிரித்து விட்டு, " அச்சா, அச்சா" எனப் போனை வைத்தார்.
விஜயன் தலையும், புரியாமல் காலும் புரியாமல் அவரை முறைக்க, மொபைலில் லோடான படத்தைக் காட்டி, " இவனை அடையாளம் பார்த்துக்க. இவனோட தான் சாய்ந்திரமா சண்டை போடோணும். ஜங்க், லடாயீ, பங்காளி மவன், பீமராஜா" என ஜெயந்தின் மகன் என்ற விவரங்களைச் சொன்னவர், தனது திட்டத்தையும் முன் சீட்டில் அமர்ந்திருப்பவருக்கும் கூடக் கேட்காமல், நண்பனிடம் கோர்ட் வார்த்தையிலேயே சொல்ல, " இது கொஞ்சம் ரிஸ்கா தெரியுதுடா" என்றார் விஜயன்.
" வேற வழியில்லை, நம்ப இடத்துக்கு வரும் முன்ன, நாம அவனைத் தூக்கியே ஆகோணும்" என்ற ராஜன் ,மகனிடமிருந்து வந்த ஃபோன் காலை அட்டன்ட் செய்து, உருட்டி, மிரட்டி மனைவியைச் சாப்பிட வைத்தது, மகன், மகள், மருமகன், மருமகள் என இளையவர்களோடு சரிக்கு சரி வார்த்தையாட, விஜயனுக்குச் சற்று முன் மாஸ்டர் பிளான் சொன்ன கே ஆர் இவர் தான் என வியந்தே பார்த்தார். ஐம்பது வருடங்களுக்கு மேலான நட்பு, ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் நண்பன் மற்றொரு புது ஆளாகத் தான் அவருக்குத் தெரிவார். விஜயன் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால், ராஜி, பைரவி யாருக்குமே, கேஆர் வாழ்வில் இடமில்லாமல் போயிருக்கும்.
முன் மாலைப் பொழுது வரை, தன் சொத்துக்களை, ஒழுங்கு படுத்தி, ஆராய்வதிலேயே மும்மரம் காட்டினார். மதிய உணவுக்குப் பிறகு, வேலைத் தொடர்ந்தது. முன் மாலைப் பொழுதில் ஆடிட்டர், வக்கீல்கள் சரிபார்த்த ஃபைலை விஜயனையும் பார்க்கச் சொல்லி விட்டு, தான் கையெழுத்திட்டார். சம்பத்தை அவர்களோடு மற்ற ஏற்பாடுகளைக் கவனித்து, வக்கீலோடு அனுப்பி வைத்தார்.
" ராஜா, உன்ர பரந்த மனசு யாருக்கும் வராதுடா. ஆனால் இதை, உன்ர உடன் பிறந்தவிக, கூட இருக்கவிக புரிஞ்சுக்குவாங்களா" என நண்பனைப் பாராட்டி விட்டு, விஜயன் ஒரு க் வைத்து கேள்வியும் கேட்க, ஓர் புன்னகை உதிர்த்த ராஜன், உடன் பிறந்தவிக என்ற தங்கைகளைப் பற்றிய பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மனைவி மக்களைப் பற்றியே பேசினார்.
" போகையில என்னத்தடா கொண்டு போகப் போறோம், பாரு என் வாழாக்கையில இல்லையினு நினைச்சு, ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருந்தது தான். நிர்வாகம் மட்டும் மாறும். எனக்குத் தெரிஞ்சு, என்ர பொண்டாட்டி பிள்ளைகளுக்கு இத்தனை நாள் , நானே தேவை இல்லாதவனா தானடா இருந்திருக்கேன். என்ர சொத்தும் அவிகளுக்குத் தேவையில்லை தான். இருந்தாலும் ராணியம்மா கண்டிசனுக்காக இந்த ஏற்பாடு. " என நொந்தவரிடம்.
" அப்படிச் சொல்லாதடா ராஜா, தங்கச்சிமாவும் புள்ளைங்களும் உன்ர மேல எவ்வளவு பிரியமா இருக்கிறாங்க. அவிக சொல்ற மாதிரி இது விதி தான் " என நண்பனைத் தேற்ற,
" அடப் போடா, இன்னைய வரைக்கும், உன்ர தங்கச்சி என்னை விட்டு ஏன் பிரிஞ்சான்னு, காரணத்தை ,அவள் வாய்மொழியா சொல்லவே இல்லை.அவ அக்கா புருஷன், அந்தத் தடியன் சொன்னாக்க போதுமா, அவனை எப்பவுமே ஆகாது, எப்போத்திலிருந்து அவனை நம்ப ஆரம்பிச்சா.இவிக, ஆயி மகனெல்லாம் ஒரே கூட்டம், என்ர மகள் மட்டும் தான் என்னாட்டம் வெள்ளந்தி." எனவும்.
" தங்கச்சிம்மா, காரணத்தைச் சொல்லாத இருக்கிறதுக்குப் பின்னாடியும், ஏதாவது காரணம் இருக்கும்டா. உன்னைய, அப்பவே உன்ர குடும்பத்துக்காகத் தான கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சாங்க. " என விஜயன் பூடகமாகச் சொல்ல, அடுத்துக் கேள்வி கேட்க வந்த ராஜன் ஒரு போன்கால் வரவும், " அங்கயே இருங்க, இதோ வந்திடுறேன்" எனப் போனில் கட்டளையைத் தந்தவர். விஜயனிடம், " பங்காளி வீட்டு இரை சிக்கிடுச்சு. வர்றியா. இல்லையினா, சத்தியனோட கிளம்பு. "என்றவரை,
" பிறந்ததிலிருந்து, உன்ர கூடத் தான் சுத்துறேன். உன்ர ஹீரோயிஸத்தில எல்லாம், எனக்கும் பங்கிருக்குது தெரிஞ்சுக்க, நானில்லாத போயிடுவியாக்கும். பிச்சு போடுவேன், வா " என்றவர், நண்பனோடே கிளம்ப, சத்தியன் பிடிவாதம் பிடித்து அவரோடே கிளம்பினான்.
கே ஆரின் கார், பாதுகாப்புக்கு வந்த ப்ளே கேட்ஸ், பின் தொடர, மேட்டுப்பாளையம் ரோட்டில் பயணித்தது.
ஆதர்ஷும், அபிராமும் ப்ளே கேட்ஸ் சொன்ன இடத்துக்கு, வண்டியை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தனர். கார், கட்டுப்பாட்டை இழந்தது போல் நிறைய அடி வாங்கி, நசுங்கிக் கிடந்தது.
அபிராம் காரை செலுத்தி வந்தான், இருள் படர ஆரம்பித்திருந்தது. ஓரிடத்தில் கார்களின் முகப்பு ஒளி பாய்ச்சியபடி இருந்த இடத்தில் கார் நிற்கவும் ஆதர்ஷ் முதலில் இறங்கி ஓடி வந்தான். கார் கண்ணாடிகள் சிதறி கவிழ்ந்து கிடக்க, இரத்தம் சொட்டிக் கிடந்தது. போலீஸ் வரும் முன் இவர்கள் அங்குச் சென்றிருக்க, ஆதர்ஷ் பதட்டத்தோடு, " பாபா" எனக் கதறியபடியே ஓடி வந்தான். இவன் ப்ளாக் கேட்ஸ் வண்டியும், ஒரு ட்ரெக் , வேன் ,நின்றது. அபிராமும் இறங்கி ஓடி வர, அவர்களோடு வந்த ஆட்கள், இடத்தைச் சுற்றி வளைத்தனர்.
அபிராம், ஆதர்ஷ், இருவரும் நாலாப்பக்கமும் கண்களைச் சுழற்ற, " பாபா எங்க" என ஆதர்ஷ் கேட்க, அங்கே நின்ற வேனை காட்டினர். நெஞ்சம் பதைபதைக்க இருவரும், அதை நோக்கிச் சென்றனர்.
கே ஆர் மில்ஸ், பைரவி கௌரி விரதம் மேற்கொண்டிருந்தவர், அதன் நியம நிஷ்டிகளைக் கடைப்பிடித்து, மாலையில் மீண்டும் குளித்துத் தயாராகி, தமிழ்நாட்டு மருமகளாய் சிவப்பு பட்டுச்சீலை, நகைகள் தரித்து, நெற்றியில் வட்டப் பொட்டும், வகிட்டில் குங்குமம், நீண்ட முடியை பின்னலிட்டு, மல்லிகை சரங்களைச் சூட்டி, வைரக் கம்மல் , மூக்குத்தி என ஒளி பொருந்திய முகத்தை மேலும் தேஜஸாக்கிக் கொண்டிருந்தது.
ரமாபாயே இன்று மகளுக்கு, திருஷ்டி கழித்து, காலா நீக்கா வைத்துத் தான் மகளை மேடையேற்றினார். கௌரியும், கஸ்தூரியுமாகத் தான் பைரவியைத் தயார் செய்தனர், "அண்ணியை இப்படிச் சிங்காரிச்சு இன்னைக்கு அண்ணா பார்த்தாருன்னா, அவ்வளவு தானுங்க " எனக் கேலி பேச, " அவர் வரும் போது, முக்காடு போட்டு விட்டுருவாங்க. படி ஆயி பார்க்க விடமாட்டாங்க" என்றார் கௌரி.
" அதெல்லாம் எங்க அண்ணாக்கிட்ட செல்லுபடியாகுதுங்க. காலையில பார்க்கலைங்களா, இப்பவும் அதே மாதிரி எதாவது செஞ்சிருவாங்க" எனப் பெருமை பேச, முன்பொரு நாள், ஜடைப் போட சொன்ன கணவர் நினைவில் வர, பைரவி அமைதியாகச் சிரித்துக் கொண்டார்.
ஆதிரா, ஆரா, ரஞ்சி, ஶ்ரீ சகோதரிகள் என ஐவருக்கும், இந்த நேரத்துக்குப் பொருத்தமாய் மற்றொரு பாவாடை தாவணியில் வலம் வந்தனர். கே ஆர் மில் வளாகத்திலேயே பார்லர் உண்டு. அங்குள்ள பெண்களில் சிலரும் இந்தக் கலையைக் கற்றவர்கள் இருந்தனர், அதனால் இந்தப் பெண்களின் அலங்காரங்களை அவர்களே பொறுப்பேற்றனர்.
மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா, விளக்குப் பூஜை ஏற்பாடுகளைச் செய்து விட்டு, பைரவியை அழைக்க, ஆதிரா முதலான இளம் பெண்கள் வந்து, பைரவியைப் புடை சூழ அழைத்துச் சென்றனர். தினமும், மாலை நேரத்தில் குங்குமம் ழைத்து ஆசீர்வதிக்கும் வசந்த விலாச மூத்த பெண்மணிகள் மூவரும், இன்று பவானி அம்சமாகவே வந்த மருமகளை வழக்கம் போல் வாழ்த்தி, அம்மனுக்குக் கீழே போடப்பட்டிருந்த மேடையில் அமர வைக்க, திருவிளக்கு பூஜைக்கு வந்த பெண்கள், துல்ஜா பவானியிடமும், தங்கள் சேர்மன் அப்பாவின் மனைவியான அம்மாவிடமும் ஆசி வாங்கி, பூஜையில் அமர்ந்தனர்.
விநாயகர் துதியில் ஆரம்பித்து, மில்லில் வேலை செய்யும் பெண்களில், நன்றாகப் பாடக்கூடியவர்களைத் தேற்றி, மைக் செட்டெல்லாம் வைத்து, தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர். கே ஆர் மில்ஸ் வளாகம் ஆங்காங்கே கட்டிடங்கள் சீரியல் லைட்களாலும், மற்ற இடங்களில் மாநாட்டு ஏற்பாடு போல் வழி நெடுக வளைவுகளும், குழல் விளக்குகளுமாகக் கே ஆர் மில்லே மிளிர்ந்தது.
பாலநாயகம் ஏற்பாடுகளைப் பார்வையிட்டவருக்குப் பரம திருப்தி. தன் மகனுக்கு இளமைக் காலத்தில் செய்து பார்க்காத திருமணத்தை, தற்போது நடத்திப் பார்ப்பதில் பெருமை, ஓர் நிறைவு. தங்கள் முறைப்படி தான் திருமணம் நடக்க வேண்டும் எனச் சௌந்தரி பிடித்துவிட்டதால், கொங்கு முறைப்படி செய்ய, அருமை காரர்களை ஏற்கனவே சென்று அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களுக்கு, இந்தத் திருமணத்தைப் பற்றி விளக்கும் முன் தான் ஒரு வழி ஆனார். ஆனால் நால்வரணி சென்றதால், நாயகத்தின் பதற்றத்தைக் குறைக்கும் வேலையையும், சாங்கியம் செய்து வைப்பவர்களுக்கு விளக்கும் வேலையையும் அவர்கள் பார்த்துக் கொண்டனர்.
பெரியவர்களும், விளக்குகளின் அணிவகுப்புக்கு மறு புறம் சேர்களில் அமர்ந்து கொண்டு திருப்தியாகப் பார்வையிட்டனர்.சௌந்தரி தான், தன் மகள்கள் இருவரும் இன்னும் வந்து சேரவில்லையே எனப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
பெரியவர்கள், ஆதிராவை அழைத்து அபிராம், ஆதர்ஷை பற்றிக் கேட்க, " நாங்க மேக்கப் பண்ணிட்டு இருந்தங்களா, தெரியலை. " எனப் பதில் தர, பாலாஜி ராவ் தான், தான், ஒரு முக்கியமான வேலையாக அனுப்பியிருப்பதாகச் சமாளித்தார். அரங்கையே சுற்றிக் கொண்டு, வெளியாட்கள் உள்ளார்களா, எனப் பார்த்துக் கொண்டிருந்தார்
பாலாஜி ராவ், பதட்டமாக இருப்பதாக உணர்ந்த ரமாபாய், மருமகனை வினவ, அவர் ஒன்றுமில்லை எனச் சமாளித்துச் சென்றார். ஆனால், பூஜைக்கு வரும் மற்ற பெண்களுக்கு, தாம்பூலம் வைத்துக் கொடுக்கும் வேலையில் ராதாபாய், கஸ்தூரி, ஆதிரா முதலான பெண்களை வைத்து நிறைவாக நடத்திக் கொண்டிருந்தார்.
பெண்கள் 108 போற்றிச் சொல்லி, விளக்குப் பூஜை செய்ய, பைரவி ஆயி துல்ஜா பவானிக்கு அர்ச்சனை செய்தார். நூற்றுக் கணக்கான பெண்கள் சேர்ந்து கௌரி பூஜை, கன்னி பூஜை செய்ய, ஆயி பவானியின் பாதத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, அவளுக்கு மிகவும் பிடித்தமான கண்ணாடி வளையல்கள், பூக்கள் என மங்களமான பொருட்களால் நிறைந்திருந்தது. ஆயி பவானி புன்சிரிப்போடு தன் லீலையை அரங்கேற்றத் தயாரானாள்.
விளக்குப் பூஜை முடிந்து, பண்டிதர் தேவி பவானிக்கு நைவேத்தியம் படைத்து, மந்திரம் சொல்லி, அராத்திக் காட்டினார். பயபக்தியோடு, அதில் கலந்து கொண்ட அத்தனை பேரும், வணங்க, மில் தொழிலாளிகள், தங்கள் சேர்மன் சார், அப்பாவின் வாழ்வில் வசந்தமாக வந்த அந்தப் பெண்மணியை ஆச்சரியமாகவே பார்த்தனர். ஏனெனில் அவர்களது காதல்கதை, அப்பா இத்தனை காலமும் மணம் முடிக்காமல் காத்திருந்த கதை, அவர்களிடத்தில் பிரசித்தியாகி இருந்தது. பைரவி கையால் குங்குமம் வாங்கவே பெண்கள் போட்டிப் போட்டு வந்தனர்.
கே ஆர் மாளிகையில் வேலை செய்யும் செல்லி முதலான பெண்கள், கூட்டம் பைரவியைச் சுற்றாமல் பார்த்துக் கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து, பாலாஜி ராவ் கூட்டத்தை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்களுக்கு ஏற்பாடு செய்த உணவையும், அவர்கள் ஹாஸ்டலுக்கே கொடுத்து விட்டார்.
ஆதர்ஷ் , தன் பாபாவைத் தேடிச் சென்றவனும், இன்னும் விவரம் சொல்லாததில் பதட்டமாக இருந்தார். பெரியவர்களைச் சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் போதே, கம்பெனி கார் ஒன்று வேகமாக வந்து நிற்க, அதிலிருந்து கைலாஷின் தங்கைகள் ஓட்டமும் நடையுமாக வந்தனர். அவர்களின், அதிர்ந்து அழுது வடிந்த முகம், எதற்கும் அஞ்சாத பாலாஜி ராவ் க்கே பீதியைத் தந்தது.
மகள்களைக் காணவும், சௌந்தரி, " கொஞ்சம் முன்னாடியே, வர்றதுக்கு என்ன கண்ணு, எப்படிப் பூஜை தெரியுமா. அண்ணிகிட்ட போய், தாம்பூலம் வாங்கிக்கிங்க. அதுவே தேவி ஸ்வரூபமா உர்கார்ந்திருக்கு" எனச் சொல்லவும், சங்கீதாவுக்கு ஆத்திரம் வந்தது. பைரவியின் முன் சென்று நின்றவள், பீடத்தில் வீற்றிருக்கும் அன்னையையும், அவளின் தாசியாய் மேடையில் வீற்றிருக்கும் அண்ணியையும் ஒருங்கே பார்த்து,
"உங்க பூஜை பொய் ,நீங்களும் ராசியில்லாதவங்க, நீங்க மறுபடியும் எங்க அண்ணன் வாழ்க்கையில் வந்ததே, அவருக்கு வினையா முடிஞ்சிருச்சு, அண்ணன் போன கார், மேட்டுப் பாளையம் ரோட்டுல , அப்பளமா நொறுங்கி கிடக்கு. அதில இருந்தவிக பொழைக்கலைன்னு பேசிக்கிறாங்க, எல்லாம் உங்களால தான், உங்க ராசி தான். இப்படி உட்கார்ந்து போஸ் கொடுத்து பூஜை பண்ணிட்ட, எல்லாம் சரியா போயிடுமா " எனச் சங்கீதாவும், கவிதாவும் மாற்றி, மாற்றிக் கண்ணீரோடு ஆங்காரமாகப் பைரவியை நோக்கி ஆங்காரமாகப் பேச, " என்னடி சொல்றீங்க. என்ர மகனுக்கு என்னாச்சு" எனச் சௌந்தரி மகள்கள் மேல் பாய்ந்தார். அவர்கள் சொன்னதில், "ஆத்தா தாயி, என்ர மருமகள், ஒரு விரதம் விடாத , வாயில பச்சை தண்ணிக்கு கூடப் படாத விரதம் இருக்குமே, அதுக்கு நீ கொடுக்குற பரிசா" என அப்போதும் மருமகளை வீட்டுக் கொடுக்காமல் பெருமையாகவே சொல்லி பெருங்குரலெடுத்து அழுதார்.
பைரவி மலங்க, மலங்க முழித்தவர், " என்னமா சொல்ற, திருப்பிச் சொல்லு யாருக்கு என்ன ஆச்சு" எனத் தன் நெஞ்சை நீவியபடியே, பைரவி கேட்க, ரமாபாய், ஆதிரா, ராதாபாய், அவர்களைச் சூழ்ந்திருந்தனர்.
சங்கீதா, கவிதாவின் கணவர்களிடம் பாலாஜி ராவ் குறுக்கு விசாரணை செய்தார். அவர்கள், தாங்கள் வரும் வழியில் கைலாஷின் காரைப் பார்த்ததாகவும், அது விபத்துக்குள்ளாகிக் கிடக்க, போலீஸ் வாகனம் நின்றதாகவும், அங்கு விவரம் கேட்டதில் தான், கைலாஷின் கார் எனத் தெரிந்தது என விவரம் சொல்ல, " அப்ப நீங்க கே ஆரை பார்க்கலை" எனத் தெளிவு படுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால் நாயகம், மனைவி மகள்கள் அழுவதைப் பார்த்து ஓடி வர, அதற்குள் பைரவியிடம் சங்கீதா சொல் கங்குகளைக் கொட்டியிருந்தாள்.
" நீங்க, எங்க அண்ணன் வாழ்க்கையில் வரும் போதெல்லாம் பிரச்சனை தான். அவிக உசிரோட இருக்கிறதே உங்களுக்குப் பிடிக்காதா. உங்களுக்கும் அவிகளுக்கும் பொறுத்தமில்லைனு தெரியிதில்லை, ஒதுங்கி போறதை விட்டு எதுக்கு வந்திங்க" எனச் சங்கீதாவும்.
" அண்ணனைப் பொறுத்தவரை, நீங்க செத்தவுக, செத்தவிகலாவே இருக்க வேண்டியது தானுங்களே. ராஜ குடும்பத்தோட, பகைமையும் கொண்டு வந்து எங்க அண்ணனை சாச்சுப் புட்டிங்களே" எனச் சின்னவளும் ஒப்பாரி வைக்க, அவர்களையே பார்த்திருந்த பைரவிக்குப் புத்தி பேதலிக்க ஆரம்பித்தது. "முழு விவரம் தெரியாம, ஏதாவது பேசாதீங்க" என ரமாபாய் , மக்களின் நாத்திகளைக் கண்டித்தார்.
ஒரு மாதிரி முழித்து, " ஆயி, இவங்க என்ன சொல்றாங்க. ராஜுக்கு என்ன. நான் ராசி இல்லாதவள் தான். ஆனால் என்ன ஆச்சு" என மெல்லப் புலம்ப ஆரம்பிக்க, " பையு, மறுபடியும் மனசை விட்டுறாதடி. உன் புருஷனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. ஆயி பவானி, உன் மாங்கல்யத்தைக் காப்பாத்துவா" என ரமாபாய் மகளை முகத்தில் தட்டி இயல்புக்குக் கொண்டு வர முயன்றார்.
சௌந்தரி, " இத்தனை வருசம் கழிச்சு, என் மகனுக்கு ஒரு நல்லது செய்யனும்னு நினைச்சேனே. சுமங்கலி பூஜை எல்லாம் வச்சும் இந்தக் கதியா. ஐயா, என்ர கண்ணு" என அவர் அழவும், ஆதிரா பெருகிய கண்ணீரோடு, " ஆத்தா, பாபாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது" என அழுதபடி தேற்ற, அபரஞ்சி, சாரதா, கஸ்தூரி என ராஜன் குடும்பப் பெண்களை அழுத கண்ணோடு ஆறுதல் படுத்தினர்.
பாலநாயகம், அடியோடு தழன்று உட்கார, பன்னீரும், சுப்புவும் அவருக்குத் தைரியம் சொல்ல, ராமசாமி சற்றே தெளிந்தவராக, மகனுக்குப் போன் அடித்தார். காலையில, விஜயனும் தான கூடப் போனான், அவனுக்கு என்ன ஆச்சு " என அபரஞ்சி சந்தேகத்தைக் கிளப்ப, கஸ்தூரி ஆடிப் போனார். ரஞ்சி ,"சும்மா இருங்க ஆத்தா, எல்லாரும் நல்ல தான் இருப்பாங்க " எனத் தன தந்தைக்குப் போன் அடித்தாள்.
பைரவி, ஒருபுறம் மகளும், மறு புறம், தன் ஆயியும் பற்றி இருந்த போதும், அவர்கள் கையை உதறி விட்டுத் துல்ஜா பவானி சிலை முன் செல்ல, அவரைச் சார்ந்தவர்கள் பதறினர்.
பெரும் குரலெடுத்து," ஹேய் ஆயி, துல்ஜா பவானி, உன் சந்நதியில நீ கொடுத்த ஆணையின் பேரில் தான் நான், ராஜை என் கணவரா வரிச்சேன். ஆனாலும் அவரைத் தேடி நான் போகலை. உன் சன்னதியில் காட்டினவரையே, எங்க மில்லுலையும் நீ தான் அனுப்பி வைச்ச." என ஆரம்பித்தவர் , தன் வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அவளே காரணம் எனத் தன்னை மறந்த நிலையில் சொல்ல, சில உண்மைகள் வெளி வந்ததில் கைலாஷின் தங்கைகள் பீதியடைந்தனர். ஆனால் தொடர்ந்து தன் கதையை அவள் முன் ஒப்பித்த பைரவி,
" இத்தனையும் மீறி, என் புருஷனோட சேர்றது, உனக்குப் பிடிக்கலைனா, அவரைத் திருப்பிக் கொடு, என்னை எடுத்துக்கோ" எனக் கர்ஜித்தவர், அவள் பாதத்தின் முன் முட்டி போட்டு அமர்ந்து, தன் நெற்றியை முட்ட, அங்கிருந்த, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள் உடைந்து அவர் நெற்றியைப் பதம் பார்க்க, எல்லாரும் அதிர்ந்திருந்த இரண்டே நிமிடத்தில், குங்குமத்தால், நிறைக்கும் நெற்றியை, தன் குருதியாலும் நிறைத்திருந்தார்.
பைரவி, என ரமாபாய் மகளை வலுக்கட்டாயமாக அவரை இழுக்கவும், " நான் போயிட்டா, ராஜ் திரும்ப வந்திடுவார். நான் தான் ராசியில்லாதவ" என ஏதேதோ புலம்பிய பைரவி, திரும்பி சௌந்தரி, நாயகத்திடம் வந்தவர், அவர்கள் கையைப் பற்றி, " என்னை மன்னிச்சிடுங்க. உங்க மகன் வாழ்க்கையைப் பாழாக்கின பாவி நான். நான் போறேன். அவர் உங்களுக்கு மகனாவாவது இருக்கட்டும்" எனப் பிதற்ற. " அம்மா, பவானி, ராஜாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது" எனப் பெரியவர்கள் பவானியைத் தேற்ற, கொஞ்சம் நிதானித்தவர்கள் போனை கையில் பிடித்து, மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
கௌரி, தன் தீதியை அடைகாப்பது போல் பின்னாடியே வர, ராதாபாய், தன் தீதியின் நிலை கண்டு கதறினார். ஆதிரா மறுபுறம், " ஆயி, பாபா வந்திடுவாங்க. பாவுவும், ராமும் போயிருக்காங்க. அவங்க கூட்டிட்டு வந்துடுவாங்க" என ,அவர் முகத்தைப் பற்றி ஆறுதல் சொல்லி கண்களை, நெற்றியை தன தாவணியால் துடைத்து விட,
" இல்லைடா ரஜ்ஜும்மா, உங்க அத்தை சொல்றது சரி தான். பாபா வந்தாலும், நான் இருக்கக் கூடாது. நான் போறேன்" என இருவரிடமிருந்தும் கையை உருவியவர், அன்றொரு நாள் கேஆர் மாளிகையிலிருந்து, ஓட முயன்றது போல், இலக்கில்லாமல் பாதையில் வேகமாக ஓடினார். அம்மா, ஆயி, பையு, பவானி" எனக் குரல்கள் ஒலிக்க, அவர் காதில் எதுவும் விழாமல் வாசலை நோக்கி ஓடினார்.
ரமாபாய், ராமசாமி இருவரும், போனில் பேசிவிட்டு, பைரவியிடம் செய்தி சொல்லவர அவர் காத தூரம் ஓடியிருந்தார். ஆதிரா, ரஞ்சி, கௌரி எனப் பெண்களும், பாலாஜி ராவும் பைரவியைப் பிடிக்க விரைய, எதிரே வரிசையாக வந்த வாகனங்களில் முதல் வாகனத்தின் முன் வேகமாக ஓட, இவர் வருவதைப் பார்த்து, சத்தியன் சடன் ப்ரேக் போட, அதற்குள் வண்டியின் சமீபம் சென்றிருந்த பைரவி அப்படியே மயங்கிச் சரிய, " ஆயி" என ஆதர்ஷ் ஓடி வந்தான்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment