Sunday, 24 April 2022

யார் இந்த நிலவு - 49

 யார் இந்த நிலவு - 49 

"ஓம் சக்தி, சக்தி, சக்தி என்று சொல்லு !

கெட்ட சஞ்சலங்கள் யாவையுமே வெல்லு!...

சக்தி சில சோதனைகள் செய்தால்

அவள் தன்னருள் என்றே மனம் தேறு.!"

இந்தப் பாடலின் வரிகள் தான் , ஆயி பவானியைத் துதிக்கும் பைரவியின் தாரக மந்திரம். அவர் கைலாஷை பார்த்தது முதல் பவானியின் ஆணை என்றே முதலில் நோக்கியிருக்க, தங்கள் மில்லிலேயே அவரைத் திரும்பவும் பார்த்தார். பார்வை ஒன்றே போதுமே என மௌன மொழிகளிலேயே அவரை மனதளவில் நெருங்கியிருந்தார். தனக்கு மட்டும் தான் இந்தப் பிரமையோ என ஐயுற்றிருக்க, கைலாஷும் அவரை அதே பிரேமையோடு தான் நோக்கியிருந்தார்.

தனிமையில் சந்திக்கவோ, காதல் வசனங்கள் பேசாமலோ காதல் வளர்த்தவர், அவர் அக்காள் கணவரிடமே நேரடியாக, இவள் என் மனைவி என அவர் பிரகடனப் படுத்திய நொடியிலிருந்து, பைரவி கைலாஷுக்கு, தன்னால் ஏதாவது ஆபத்து வருமோ எனப் பயந்து கொண்டு தான் இருக்கிறார்.

அன்று ஆரம்பித்த அந்தப் பயம் , பைரவி ராஜின் மேல் கொண்ட காதலுக்குச் சாட்சி. அவர்கள் காதல் அவர்களைப் பல ஆபத்துகளுக்கு இடையே தம்பதிகளாக்கி, தாம்பத்திய இன்பத்தையும், குழந்தை செல்வத்தையும் தந்தது. இருபத்திரண்டு வருடம் கழித்து , தன்னிலை மறந்த நிலையில் தான் மீண்டும் கணவரோடு இணைந்தார்.

இனி தங்கள் வாழ்வில் துயரம் ஏதுமில்லை என மீதி காலத்தைக் கணவரோடு கழிக்க விரும்பியவரை, விதி மீண்டும் அதே போன்றதொரு சூழலில் நிறுத்தியது.

அதுவும் அவரை உற்றவர்கள், கைலாஷின் தங்கைகள், தங்கள் அண்ணனுக்கு , ஆபத்தைக் கொண்டு வருபவர் எனக் குறையச் சொல்லவும், தான் கௌரி விரதம் இருப்பதையும், ஆயி பவானியின் கருணை பார்வையில், எந்த நம்பிக்கையில் அவரைக் கைபிடித்தாரோ, அதே அம்மனின் திருவருள் இன்றும் உள்ளது என்பதை ஒரு நொடியில் உணர மறந்தார். எதன் மீது அதீத பற்று கொண்டுள்ளோமோ, அதைத் தொலைக்க விரும்ப மாட்டோம்.

அப்படிக் கணவரைக் காக்க, தான் அவரை விட்டு அகல்வது சரியென, புத்தி பேதலித்து ஓட, பெரியவர், சிறியவர் என எல்லாருமே அவரவர் வேகத்துக்கு ஏற்ப பின்னாடி, நிற்கச் சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டே தான் வந்தனர்.

ரமாபாய், போனில் பேசி விட்டு, தன் வயதை ஒத்த பெரியவர்களை , " பேரன் வந்துட்டான், இருங்க அவன் கூட்டிட்டு வந்துடுவான் " என அறிவித்து, போனில் தான் அறிந்த விசயத்தையும் சௌந்தரிக்கு சொல்ல, " ஆனாலும் பவானி இப்படி ஓடுறாளே" எனக் கவலை கொண்டார்.

மூத்த பெண்களுக்கு, மனதின் வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் சௌந்தரி மகள்களை, " உன்ர அண்ணியைப் போய்ப் பிடிங்க" எனக் கட்டளையிட, சின்னவள் கவிதா தான் விரைந்தாள், பெரியவள் சங்கீதா அப்படியே நின்றாள்.

பைரவி, அவ்விடத்தை விட்டு, ராஜை விட்டு வெளியேற நினைத்தாரே ஒழிய, கணவருக்கு என்ன ஆனது என்பதையும் கூட யோசிக்க முயலவில்லை. ஏனெனில், கைலாஷ்க்கு எதுவும் ஆகும் என்பதைக் கூட யோசிக்க மறுத்தார். பித்துப் பிடித்து ஓடியவர், எதிரே வந்த வாகனத்தின் முன் சென்று விழுந்தார்.

சத்தியன் சரியான சமயத்தில் ப்ரேக் அடித்து விட, மிதமான வேகத்தில் வந்த மற்ற வாகனங்களும் அதே போல் நின்றது. பைரவி மீது கார் இடித்து விட்டதோ எனப் பதறினர்.

" ஆயி" என அலறியபடி ஆதர்ஷ் முன் சீட்டிலிருந்து இறங்கி ஓடி வந்தவன், மண்டியிட்டு அமர்ந்து கீழே விழுந்திருந்தவரைத் தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டான். அவர் நெற்றியில் இரத்தக்கறையைப் பார்த்து விட்டு, கார் இடித்து விட்டதோ எனப் பயந்து, " பாபா, ஆயியை வந்து பாருங்க" என ஆதர்ஷ் குரல் கொடுக்க, அதற்குள் பின் சீட்டிலிருந்து " பாரு" எனப் பதறியபடி வந்தவர், லேசாக நொண்டினார். ஆனாலும் மனைவி விழுந்து கிடந்ததில், தன் காயங்களைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் கைலாஷை பார்த்ததில் பைரவி பின்னால் ஓடி வந்த அத்தனை பேருக்கும் நிம்மதி.

ஆதிரா, " பாபா" என ஓடி வந்தவள் , ஆயியின் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தவரையும், ஆயியை மடி தாங்கியிருந்து பாவுவையும் பார்த்தவள், ஒரே சேர அணைத்துக் கொண்டு கதறினாள்.

மகளைத் தட்டிக் கொடுத்து, " ஆயிக்கு ஒண்ணுமில்லடா ரஜ்ஜும்மா, திடீரென என்னாச்சு கண்ணு" என எதுவும் புரியாமல் தான் கேட்டார், ஏனெனில் கார் ஆக்சிடெணட் பற்றி வேறு யாருக்கும் தெரியாமல், ஊடகத்தைக் கூட அனுமதிக்காமல் தான் இருந்தனர்.

"உங்கள் கார் ஆக்சிடெணட் னு அத்தைங்க சொன்னாங்க" எனவும் நொடியில் உணர்ந்தவர், " பாபாவுக்கு ஒண்ணும் இல்லை கண்ணு. நல்லா இருக்கேன்." என மகளைத் தோளோடு அணைத்தவர், "அதுக்குத் தான் , உன்ர ஆயி இப்படி ஓடி வந்து விழுந்து வச்சிருக்காலாக்கும்" என வினவியவர்,

" பாரு, இங்க பார், பாரு, நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒண்ணும் ஆகலை அம்மணி " எனக் கைலாஷ் மகனிடமிருந்து மனைவியைத் தான் கைகளில் ஏந்த முயற்சிக்க, அரைக் குறை நினைவிலிருந்த பைரவி, கணவரின் கையைத் தட்டி விட்டு, அவர் முகத்தையும் காண மறுத்து, " நான் கூட இருந்தா , உன் பாபாக்கு ஆபத்து , என்னை எங்கையாவது கூட்டிட்டு போ பாபா. நாம போயிடுவோம். இங்கிருந்து போயிடுவோம்" எனப் பிதற்ற, ஆதர்ஷ், ஆதிரா தந்த டிஸ்யுவால் அவர் நெற்றியைச் சுத்தம் செய்தபடி , சமாதானம் சொல்ல, கைலாஷ் கடுப்பானவர்.

". இனி ஒரு வார்த்தை பேசினியினா, பிச்சுப் போடுவேன் .மறுபடியும் விட்டுப் போட்டு போறத பத்தி பேசுறா பார்" என மனைவியிடம் கடுமை காட்டியவர், தான் எழுந்து, மகனின் மடியிலிருந்த மனைவியை வலுக்கட்டாயமாகத் தூக்கினார். ஆனால் அவர் கைகளில் அடங்க மறுத்த, பைரவி கண்ணீரோடு, அவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல், தலை கவிழ்ந்தபடி,

" என்னை விட்டுடுங்க ராஜ், நான்,எங்கையாவது கண் காணாமல் போறேன். என்னைப் பார்த்த நேரத்திலிருந்து உங்களுக்கு ஆபத்து தான். அப்போ என்னை விவாகம் செய்தோடனே குண்டடி பட்டுச்சு. இப்போ கணபதி பூஜையப்பவே கார் ஆக்சிடெணட் ஆகுது. வேண்டாம், நீங்க உங்களைப் பெத்தவங்களுக்கு மகனா, கூடப் பிறந்தவங்களுக்கு அண்ணனா, இந்த மில் தொழிலாளிகளுக்கு அப்பாவா இருங்க. நானும், என் பிள்ளைகளும் உங்களுக்கு என்னைக்குமே, ஆபத்து தான்" எனக் கண்ணீர் வடித்தபடிச் சொல்லவும், கைலாஷ் உடல் விரைத்தபடி, கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றார்.

கௌரி, ராதாபாய் எனப் பைரவி பின்னோடு வந்தவர்கள், கைலாஷையும் , ஆதரசையும் பார்க்கவுமே , தங்கள் தீதியை அவர்கள் சமாளிப்பார்கள் என நின்று விட்டனர்.

" ஆயி, என்ன பேசுறீங்க. இதே போலப் பாபாவால உங்களுக்கு ஆபத்துனா, அவங்களை விட்டுட்டு போயிடுவீங்களா. இருபது வருஷம் கழிச்சு, இந்தக் கூட்டில் ஒண்ணா கூடுறோம், கலைச்சிடாதீங்க ஆயி. ஏற்கனவே நீங்க பாபாவுக்குக் கொடுத்த தண்டனையே போதும்" என ஆதர்ஷ், வார்த்தைக்கு வார்த்தை பாபா என அழைத்ததும் கூடப் பைரவிக்கு உரைக்கவில்லை. ஆனால் ராதாபாய் நொடியில் கண்டு , முகம் மாறியது, கௌரி, சற்றே பீதியுடன் அவரை நோக்க, “ என்ன இருந்தாலும், நம்ம ,வளர்த்தவங்க, வளர்த்தவங்க தான் “ எனத் தன்னோடு கௌரியின் நிலையையும் சேர்த்துப் பேச,

“இதுங்க இரண்டு போரையும், நாம பெத்துக்கலைனாலும், அவங்க வளர்ந்ததை , பிள்ளை சுகத்தை நாம தான சோட்டி தீதி அனுபவிச்சோம். இனிமேலாவது சேர்ந்து இருக்கலாம்ல, இந்தத் தீதியை பாருங்க, அருமையான மனுஷர் , புருஷனா கிடைச்சும், அனுபவிக்காமல் விலகி ஓடுறாங்க” என எடுத்துச் சொல்லவும்,

“அளவுக்கு மிஞ்சினா, எல்லாமே விஷம் தான் கௌரி, அது சொத்தோ, காதலோ, தாய்ப் பாசமோ, அளவோட இருந்துக்கணும்”என ராதாபாய் வசனம் பேச, கௌரி ஆச்சரியமாகப் பார்த்தார். அதை உணர்ந்தவர், “ தர்ஷு டேட் தான், காலையில் ரொம்ப நேரம் பேசி புரிய வச்சார்” என்ற ராதா, “அதுனால, ஆதரஸை இனிமே கட்டி வைக்கிறதா இல்லை” என வாய் பேசினாலும், கண்கள் கலங்க, கௌரி அதை உணர்ந்து கொண்டார்.

ஆதிரா , தனது ஆயியின் பேச்சைக் கேட்டு , ஆயி, பாபா இருவர் கையையும் பற்றிக் கொண்டு நின்று அழுதவள்,  " ஆயி, பாபாவோட சேர்ந்து இருக்கிற லிபியே எங்களுக்கு இல்லையா. இத்தனை காலமும், உங்க இரண்டு போரையும் விட்டுட்டு மாஸியோட தானே இருந்தேன். உங்க இரண்டு பேரோடையும் சேர்ந்து வாழற பாக்கியத்தை கொடுங்க, பாபாவை பாருங்க,  பாபா டீக் ஹை. யாரோ எதோ சொல்லிட்டு போறாங்க, பாபா உங்களை எதாவது சொன்னாங்களா. வாங்க ஆயி" என அவர் கையை பிடித்து இழுக்கவும், தான் கைலாஷுக்கு எதோ புரிவது போல் இருந்தது. பைரவியைத் தாக்கும் சிறந்த ஆயுதம், இந்த வார்த்தைகள் தான், அதை உணர்ந்து பிரயோகித்தது யார் என யோசித்தவர், அதை விட முக்கியம், மனைவியைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே என முடிவெடுத்தவர் , 


" யாரு கண்ணு, ஆரு என்ன சொன்னாங்க, ஆத்தா எதுவும் சொல்லிப் போட்டாங்களா, அப்படியேன்னாலும்,இவளுக்கு என்ன, மாமியாளை எதுத்து நிற்க வேண்டியது தான, உலகத்து நடப்பில் இல்லாததா என்ன,” என உலக நடப்பாகச் சொன்னவரின் வார்த்தைகளில், யாரவது, ஏதாவது சொன்னால் திருப்பிக் கேள் என்ற பொருள் இருந்தது. 


பைரவி அவசரமாக, “ அத்தை எதுவும் சொல்லலை, அத்தையும், மாமாவும் என் மேல பாசமா இருக்கிறது பொறுக்காம, ஏதாவது பேச வேணாமமு சொல்லு ரஜ்ஜும்மா “ என மகள் மூலமே பைரவி பதில் அளிக்க, அவர் சந்தேகம் உறுதியானது, இருந்தாலும் தங்கைகளைக் குற்றம் சுமத்த முடியாதே, அதனால் மனைவி மேலேயே பழியைப் போட்டார். 


“காரணம் என்னன்னு கண்டு பிடிச்சுட்டேன்  கண்ணு. உன்ர ஆயிக்கு என்னை பிடிக்கலை, அதுக்கு தான் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தப்பிச்சு ஓடப் பார்க்கிறா." என அவர் காட்டமாகச் சொல்லவும், பைரவி 

கோவித்துக் கொண்டு திரும்பியவர், “ உன் பாபா புதுசா கண்டு பிடிச்சிட்டார் ஆதி பாபா, இவருக்குத் தான் என்னைப் பிடிக்காமல் போய் , என் தாலியைக் கழட்டிக் கொடுக்கச்  சொன்னார், உண்டா , இல்லையானு கேளுஎனச் சென்ற நாட்கள் நினைவு வந்தவராகக் கேட்கவும், கைலாஷ் ‘ சதிகாரி, இதையும் ஞாபகம் வச்சிருக்க பார் “ என மனதில் புலம்ப, விஜயன் மறுபுறம் நின்று நண்பனை மாட்டி கிட்டியா என்பது போல் சிரிக்க, " ஆயி" என ஆதர்ஷ் அதற்கு மேல் அவரை நகரவிடாமல் பிடித்துக் கொண்டான். 


" அத்தை, நீங்க சொல்றது சரி தானுங்க, அவரு ஒண்ணும் அவ்வளவு நல்லவரில்லையிங்க, சமயத்தில எல்லாரையும் கதற விடுறது தானுங்க, அவருக்கு வேலையே, உங்களுக்கு வேற மாப்பிள்ளை பார்ப்போமுங்க. " என்ற படி வந்த அபிராமை, அப்பா, மகள் இருவரும் முறைக்க, பைரவி , “ இப்ப என்ன பேட்டாஜி செஞ்சாருஎனக் கணவரை அறிந்தவராகக் கவலை படிந்த முகத்தோடு கேட்டவர்,  நிற்க மாட்டாமல், ஆதர்ஷ் தோளில் சாய, சட்டென மனைவியை கைகளில் ஏந்திய கைலாஷ், கோபம் மறந்து, 


"அந்த ராஸ் கொலு ஏதாவது புளுகுவான், நீ நம்பாத பாரு. “ என்றவர், “மதியம் சாப்பிட்டியா இல்லையா, என்ன செய்யுது அம்மணி" என தன் முகத்தைக் காட்ட மறுத்தவரை, வலுக்கட்டாயமாகத் தன்னை, கண்ணோடு கண்  பார்க்க வைத்துக் கேட்க, " அபிராம் என் அப்படி சொல்லணும், என்ன செஞ்சிட்டு வர்றீங்க , எனக்குப் பயமா இருக்கு ராஜ், உங்களுக்கு எதாவது ஆயிடுச்சுனா" என அதே கண்களில் தன கலக்கத்தைக் காட்ட, அதே கண்களுக்குத் தைரியத்தைத் தருபவர் போல், தீர்க்கமாக நோக்கி, தன கைக்குட்டையால் அவர் நெற்றி காயத்தையும் துடைத்து விட்டு, 


" என்னை நம்பு அம்மணி, எனக்கு ,ஒண்ணும் ஆகாது. இங்க வந்தவனை எல்லாம் முடிச்சாச்சு. இனி நாம தான் சோலாப்பூர் போய், மீதி கதையை முடிக்கோணும். எங்கிட்டாவது ஓடுறதா இருந்தாலும், இவிககிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு , நாம இரண்டு பேருமா ஓடலாம்.  உனக்கு பிடிக்கலைனாலும், நான் தான் மாப்பிள்ளை, வேற வழியில்லை வா. இனி என்ர பார்வையை விட்டுக் கூட உன்னை நகர விடமாட்டேன்" என மனைவியைக் கைப்பிடியாகப் பிடித்து அழைக்க, பைரவி அவரது கைகளிலேயே மயங்கினார். 


" பாபா, நான் தூக்கிட்டு வர்றேன். ஏற்கனவே உங்களுக்கு அடிபட்டிருக்கு" என்ற ஆதர்ஷை.  " இப்ப வுட்டேன்னா, உன்ர ஆயி பறந்திடுவா. அவள் பேசினதைக் கேட்டியில்ல,  ரிஸ்கே வேண்டாம் கண்ணு. இனி இருபத்தி நாலு மணி நேரமும் என்ர கண்ணு முன்னாடியே வச்சுக்குறேன்" என்றவர் டாக்டரை அழைக்கச் சொல்லி விட்டு, தான் மனைவியை கைகளில் ஏந்தியபடி அரங்கை நோக்கி நடந்தார். 


முதல் காரிலிருந்து, ஆதர்ஷ், கைலாஷ் இறங்கி இருந்தார்கள் எனில் அபிராம், விஜயன், இரண்டாவது காரிலிருந்து இறங்க , பாதுகாப்புப் படையினர் என வரிசையாக இறங்கி அவர்களை அரணாகச் சுற்றி வளைத்தனர்.  


பாலாஜியே, கைலாஷ் குடும்பத்தை டிஸ்டப் செய்யாமல் விஜயனிடம் தான் விவரம் கேட்டார். அவரும் சட்டையெல்லாம் கசங்கி சற்று நலுங்கித் தெரிய, கஸ்தூரியும் ரஞ்சனியும் அவரிடம் விரைந்தனர். 

அபிராம் மாமனை வம்பிழுத்துவிட்டு, தந்தையோடு சேர்ந்து வர, ஆதிரா விஜயனையும் அவசரமாகப் பார்வையிட்டு நலம் விசாரித்தாள். " ஒண்ணுமில்லை கண்ணு நீ உன்ர ஆயி, பாபாவோட போ" என்றவர் பாலாஜியிடம் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார். 


பாலநாயகம், நண்பர்களோடு, எதிரே வந்தவர், மயங்கிய மருமகளைச் சுமந்து ,நொண்டியபடி வரும் மகனையும், தந்தைக்கு உதவியாகத் தோள் கொடுத்து வரும் பேரனையும், அழுதபடி வரும் பேத்தியையும் பார்த்தவர், கவலை படிந்த முகமாக மகனை ஏறிடவும், 

"ஒண்ணுமில்லைங்க. நான் நல்லா தான் இருக்கேனுங்க, உங்க மருமகள் தான் அன்னைக்காட்டம் மயங்கிட்டாளுங்க " எனத் தந்தைக்கு ஆறுதல்  சொன்னபடி நடந்தார் கைலாஷ். 


எதிரே வந்த  கவிதா, " அண்ணா, உங்க கார் ஆக்ஸிடெண்ட் ஆகி கிடந்ததுங்களே. நாங்க பயந்தே போயிட்டோமுங்க" எனக் கண்ணீர் விட, " உன்ர அண்ணனை எவனாவது டச் பண்ண முடியுமா கண்ணு . எனக்கு ஒண்ணுமில்லை . நீங்க தான் கார் ஆக்சிடெணட் ஆனதை சொன்னீங்களாக்கும்"  என வினவியவரை, " உங்க காரை அப்படிப் பார்க்கவும், பயந்திட்டோமுங்கண்ணா" எனப் பேசியபடியே நடக்க, தங்கை கணவர்களும், தாங்கள் பார்த்ததையும், கேட்டதையும் சொல்லி, தங்கள் தரப்பை நியாயப்படுத்தினர். சங்கீதாவுக்கு , அண்ணன் இப்படி ,அவர் மனைவியை தூக்கி வருவதில் எரிச்சல் தான், ஆனாலும் அண்ணன் நலமாக வந்ததில் திருப்பதி.


 ரதாபாய், கௌரியிடம், " செய்கிறதையும் செஞ்சிட்டு, நடிக்கிறதைப் பார்" என மராத்தியில் புறணி பேசினார்.  ராமசாமி, சுப்பு பின்னால் வந்த விஜயன், அபிராமிடம் விவரம் கேட்டபடி வந்தார். 


சௌந்தரி, ரமாபாய் இருவருமே, அரங்கத்துக்கு, அம்மன் அருகில் வந்து சேர்ந்த தங்கள் வாரிசுகளைத் தலை முதல் பாதம் வரை பார்வையாள் ஆராய்ந்தனர்.  அதே மேடையில் கொண்டு வந்து மனைவியைக் கிடத்திய கைலாஷ், தானும் அருகில் அமர்ந்தார். 


சௌந்தரி மகன் அருகில் வந்தவர், வெள்ளை சட்டையில் பாக்கெட் அருகே இருந்த இரத்தத்தைப் பார்த்து, அவர் சட்டை பட்டனைக் கழட்டி ஆராய்ந்தர். அப்போது தான் குனிந்து பார்த்தவர், " என்ர இரத்தம் இல்லைங்கமா, உங்க மருமகளுது" என்றவர் முகத்தில் தாங்க முடியாத வேதனை. 


ரமாபாய், மகளருகே சேரில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்தவரை , " நானிமா, ஆயிக்கு ஒண்ணுமில்லை, பயப்படாதீங்க" என ஆதர்ஷ் தேற்றினான். 


" உன் ஆயி எப்ப தான் இந்த பயத்தை விடுவான்னு தெரியலை, நானாசாப், நானும் இருபத்திரெண்டு வருஷமா இவளோட போராடியே களைச்சுட்டேன்" எனக் கண்ணீரைச் சுண்டி விட்டார். 


" சாஸுமா, இனிமே என்ர பாருவை பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம். நான் பார்த்துக்கிறேனுங்க" என கைலாஷ் மனைவியைத் தாங்கி, மாமியாருக்கு ஆறுதல் சொல்ல, 


" உங்க குடும்பத்தை, உங்ககிட்ட ஒப்படைக்கத் தான்  தாமாத்ஜி, இவ்வளவு பாடும். நீங்கப் பொறுப்பை எடுத்துக்குங்க. நான் தேசாந்திரம் 

கிளம்பிடுறேன்" என்றார் ரமாபாய்


" அது என்னாத்துக்கு, இவிகளுக்கு ஒரு நல்லதைப் பண்ணி வச்சிட்டு, நீங்களும் வாங்க, நாம குன்னூர் போவோம்" என்றார் சௌந்தரி 


கௌரியும், ஆதிராவுமாக அன்று போல் இன்றும் பைரவிக்கு சிருக்ஷை செய்தனர். டாக்டர் வந்து, பைரவிக்கு ஊசி போட்டு, நெற்றி காயத்துக்கும் கட்டுப் போட்டவர், கைலாஷ், விஜயனையும் பரிசோதித்து ப்ளாஸ்டர்களை போட்டுச் சென்றார். 


நாயகம், " வீட்டில விஷேசத்தை வச்சுகிட்டு, அப்படி என்ன வெளியே தெருவில வேலை வேண்டிக் கிடக்குது. இத்தனை நாள் உன்ர இஷ்டத்துக்கு திரிஞ்ச, இப்போ பொண்டாட்டி புள்ளைங்க வந்திருச்சில்ல, கொஞ்சம் அடங்கியிருந்தா என்ன.  உனக்கு ஒன்னுன்னு, என்ர மருமகள் எப்படி துடிக்குது பாரு. செய்யற வேலையை அடுத்த வாரத்தில செஞ்சுக்க கூடாதாக்கும். இனி மில்லைத் தாண்டி போனையினா, நல்லா இருக்காது பார்த்துக்கஎனக் கிட்டத் தட்ட அனைவர் முன்னிலையிலும் மகனை மிரட்டத் தான் செய்தார். 

சௌந்தரிக்குத் தான் சங்கடம், மகன் ஏதாவது பேசிவிடக் கூடாதே என, " ஏனுங்க, ஏதோ முக்கியமான விசயமா இருக்கப் போய்த் தானுங்களே ராஜா போயிருக்கானுஙக. கார் ஆக்சிடெண்ட்டுன்னு சொன்னாங்களே, பையன் கை கால் சொகத்தோட வந்திருக்கானேன்னு, சந்தோஷப் படுவீங்களா, அதைய விட்டுப் போட்டு, குறுக்கு விசாரணை பண்றீங்க. " எனக் குறை சொல்ல, " தாய் மாதா, அப்பா தானுங்களே, மருமகள் மேல இருக்க அக்கறையில சொல்றாரு விடுங்க. " என முதல் முறையாகக் கைலாஷ் , நாயகத்துக்கு ஆதரவாகப் பேச, " ஏன், உன்ர மேல எனக்கு அக்கறை இல்லையாக்கும். உன்ர தங்கச்சிங்க வந்து, கார் ஆக்சிடெணட் ஆகி, அப்பளமாட்டமா கிடக்கு, அதிலிருந்தவிக பொழைக்க வழியில்லைனு சொல்லவும், ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டோம். மருமக்களுக்காகச் சொல்றேனாமாம், ஏன் நீ என்ர மகன் இல்லையாகும், உன்னகாகத் துடிக்காது, தனி மரமா நிக்கிறியே, எங்களுக்குப் பொறவு உனக்குன்னு யாரு உன்ர அம்மா வாய் விட்டு புலம்புவா , நான் மனசுக்குள்ளையே புழுங்குவேன் , அது தான் வித்தியாசம்,

இதெல்லாம் உனக்கெங்க புரிய போகுது,


பவானி தான் உன்ர பொன்னசாதி, இளவட்டமா , பேரன் பேத்தி இருக்குதுன்னு தெரிஞ்ச அன்னைக்கு அத்தனை சந்தோசம், என் வம்சத்துக்கு, நீ சேர்த்து வச்சிருக்கச் சொத்துக்கும் வாரிசு கிடைச்சிடிச்சுன்னு சந்தோசப் படலை, என்ர மகன், தனி மரமில்லை தோப்பா தான் இருக்காங்கிற சந்தோசம். உன்ர மகன் உன்னை அப்பான்னு கூப்பிடலையின்னு, உன்ர அம்மலை விட, நான் நெம்ப வேதனை பட்டிருக்கேன், அதுவும் ஒரு அப்பனுக்குத் தான் புரியும், உனக்கு மகனாவும் எதுவும் புரியாது, அப்பனாவும் எதுவும் புரியாது " எனப் பேசும் போதே கலங்கியவரை, "அஜிஜு,எங்களுக்கும் தாத்தாவோட பாசம் என்னனு உங்களைப் பார்க்கவும் தான் தெரிஞ்சிக்கிட்டோம். " என ஆதர்ஷும், ஆதிராவும் வந்து அணைத்துக் கொண்டனர், கைலாஷ் உணர்ச்சி வயப்பட்டவராகத் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பேரன் பேத்தியை உச்சி முகர்ந்தவர், " உன்ர விஷப் பரிட்சை எல்லாம் நிறுத்திப் போடு. உன்னை நம்பி, ஒரு கூட்டமே இருக்குது. எங்களுக்கும் வயசாகுது. இதையெல்லாம் தாங்கிற சக்தி இல்லை. விஜயனும் உன்ர கூட வந்திருக்கையில, நாங்க யாரைன்னு நினைக்கிறது. மனசு பதறுதில்ல, அப்படி என்ன வேலை இன்னைக்கே முடிக்க வேண்டியது " எனப் பதட்டமும், பாசமும் போட்டிப் போட, அதையுமே கோபமான பேச்சில் தான் காட்டினார் நாயகம். பன்னீர் , "ராஜனுக்குத் தெரியாததா, எதோ முக்கியமான விஷயம் இருக்கப் போயி தான போயிருக்காப்ல. " என்றும், " பெரிய பாசக்காரனாட்டமா சீன் போடுவான்" என ராமசாமியும் மருமகனுக்கு வக்காலத்து வாங்கி நிலைமையைச் சீராக்கப் பார்க்க , " மன்னிச்சுக்குங்கப்பா, விசயம் உங்க வரைக்கும் வரும்னு எதிர்ப்பார்க்கலையிங்க. அது வேற ஒரு விசயம், பொறவு சொல்றேனுங்க" எனக் கைலாஷ் சட்டென மன்னிப்பு கேட்டுப் பேச்சைக் கத்தரிக்க, சௌந்தரிக்கு ஆச்சரியம் எனில், அங்கிருந்து ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வொரு வகையான ஆர்வம், திகில், பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ராஜன் இவ்வளவு தூரம் பேசிய பிறகு மற்றவர் அமைதி காக்க, " ஆக்சிடெணட் ஆன கார்ல, நீ போகலையில கண்ணு,.வேற யார் இருந்தாங்க" எனச் சாரதா, தன் மண்டையைக் குடைந்த கேள்வியைக் கேட்டே விட்டார். " அது தான், பொறகு சொல்றோம்னு சொல்றாப்லைல, விடுவேன்." எனச் சுப்பு மனைவியை முறைக்க, " அட ராஜா , அந்தக் கார்லை வரலையின்னா, எவனோ திருடியிருக்கோணும், அப்படி நம்ம காரை திருடுற அளவுக்கு எவனுக்குத் தகிரியம் இருக்குது. அதுக்குத் தான் கேட்டேனுங்க" எனத் தான் யோசித்ததைச் சாராதா கூறவும், மென்னகை சிந்திய, கைலாஷ், " நீங்க கேட்கிறது சரி தானுங்க சித்தி, ஒரு திருட்டுபய நம்பக் காரை எடுத்திட்டு ஓடப் பார்த்தானுங்க, அது தான் கடவுளா பார்த்துத் தண்டனை கொடுத்திட்டாருங்க" என வினையமாகச் சிரிக்கவும், " ஆமங்க அம்மத்தா கைலாச நாதர், கொடுத்த தண்டனைங்க" என அபிராம் மாமனை முறைத்தபடி பதில் தரவும், " திருட்டு பய காரை எடுக்கிற வரைக்கும் , சத்தியன் என்ன செஞ்சான்" எனச் சௌந்தரியும், "நம்மூர் அத்தனை கெட்டுப் போச்சா கண்ணு" என அபரஞ்சியும் மூத்த பெண்களே இவ்வளவு தூண்டி துருவ, ராஜமாதா மூளை படு வேகமாகக் கணக்குப் போட்டது.

" அம்மத்தா, எனக்குப் பசிக்குதுங்க. டிபனை வச்சிக்கிட்டே, கேட்டிங்கன்னாக்க, நான் பதில் சொல்லுவேணுங்க. " என அபிராம் பசி எனக் கேட்கவும், எல்லாரும் உணவு கூடத்தை நோக்கிச் செல்ல, ராஜ குடும்பமும், விஜயனும் மட்டுமே அரங்கிலிருந்தனர். ரமாபாய், ஆதர்ஷிடம், " நானாசாப், என்ன நடந்தது" என வினவவும், அவன் தான் பார்த்ததை விவரிக்க ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment