Tuesday, 31 August 2021

சிந்தா- ஜீவநதியவள் -19

 சிந்தா- ஜீவநதியவள் -19 

மூங்கி மரத்தடியில மொருமொருண்டு சொல்லி 

ஆத்தி மரத்தில ஆயி அவுக போனாக!

இந்திரன் தங்கச்சி ராசக்குமரி ரப்பழுக்கப் போட்டாக!


இல்லத்தான் பொன்னே, என் சொல்லத்தான் கேளு !

காத்தும் மழையும் கவரிமான் சோலையிலே 

கமறி அடிக்கையிலே தங்கிட்டேன் பொண்ணே!


காசுக்கு நூறு கரும்பை வாங்கி!

பூங்குடி கம்மா , கரையெல்லாம் நட்டு, பயிராக்கி !

கரும்போட வாய்க்கா, நம்ம முனியாண்டி  களக்காக்கும்னு சொல்லி!

காலாங்கரை மடைத் திறந்து பாலாப் பெருக வேணும்!


ஆணை முனியோ, குதிரை முனியோ !

அடிப்பட்டு வருது பார்த்து வாறியா!


ஆணை முனி தானுமில்லை! 

குதிரை முனி தானுமில்லை !

நம்ம அய்யனாரு வேட்டையாடி வாராரு வீரமணிச் சந்தையிலே! 


அரசங்குச்சி தொட்டிக் கட்டி !அடியளந்த குடம் கட்டி!

தஞ்சாக்கூரில் தானியத்தைப் போட்டு!

முள்ளுக் குடியில மொதக் கருவை நாட்டி !

இடையப் பட்டியில கடையை நிறுத்தி !

பார்த்திபனூரில பல்லாக்கு சாத்தி !

மருதை தலை வாசலிலே சிறு வானத்தை விட்டு எறிஞ்சு!

அய்யன் குதிரைக் கொண்டு வாராரு!

மதனூரு பொண்டுகளா மறிச்சு உள்ள விடுங்க!!


எனச் செவ்வாய் பாட்டை மூன்று கிழவிகளும் மாற்றி, மாற்றிப் பாட, அய்யனார் கோவிலின்  எதிரே இரண்டு பெரிய குதிரை சிலைகளில் ஒன்றில் சிவந்த மேனியாய் அய்யனாரும், மற்றொன்றில் கரிய திருமேனியாய் கருப்பனும் வீற்றிருக்க, அதன் நடுவே, குழி தோண்டி, மூங்கில் கம்பில், காவி, வெள்ளை பட்டைகளை மாற்றி, மாற்றி அடித்து அதற்கும் ஓர் தெய்வீக கலையைக் கொடுத்து, அதன் உச்சியில் மாவிலை, வேப்பிலைக் கட்டி, மஞ்சள் தூணியில் காணிக்கை காசும் விறலி மஞ்சளும் கட்டி , குழியில் நவதானியங்கள், போட்டு, கம்பை நட்டு, பால் ஊற்றி, மஞ்சள் , சந்தன குங்குமம் தொட்டு வைத்து, தீபாராதனை காட்டி, பூரணா தேவி, புஷ்கலாதேவி உடனுறை ஐயனுக்கும் காப்புக் கட்டினர்.


காவல் தெய்வமான கருப்பனுக்கும், 21 பரிவார தெய்வங்களான முனியன், மாடன், இருளி, காளியம்மா முதலான தெய்வங்களுக்கும் காப்புக் கட்டி, குதிரையெடுப்பு திருவிழாவை வேளாளர் மரபினர் முறைப்படி ஆரம்பித்து வைத்தனர். அய்யனுக்கு நேந்து கொண்டு, குழந்தை இல்லாதோர் குழந்தை பொம்மை, ஆடு வளர்ப்பவர்கள் ஆடு, அய்யனார் வேட்டைக்கு உதவும் பாதுகாவலான நாய் பொம்மைகள், கால் வலி, கை வலி என நோவு உள்ளவர்கள் அந்தந்த பொருட்களை மண்ணால் செய்து வைத்து அந்தக் குறை தீர நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். அவர்களும், புரவியெடுப்பவர்களுமாக விரலிமஞ்சள் வைத்து, மஞ்சள் துணியில் மணிக்கட்டில் காப்புக் கட்டிக் கொள்வார்கள். இதனைப் பத்தாம் நாள், காணிக்கை செலுத்திய பின்னரே அவிழ்ப்பார்கள்.
ஊர் தலையாரி, " இன்னைக்குக் காப்பு கட்டிட்டோம், பத்து நாளைக்குச் சுத்தபத்தமா, அசைவம் பொழங்காம, தண்ணீ சாப்பிடாம இருந்துக்குங்க. அதே போலச் சாய்ந்திரம் ஐஞ்சு மணிக்கு, நம்ம ஊரு பெரிய கிழவிகள் எல்லாம் செவ்வாய் பாட்டு பாடுவாக. ஊர் பொண்டுக எல்லாம் அதுலையும் கலந்துக்கிட்டு, அய்யன் சாமி மனசைக் குளிர வைக்கனுமின்னு ஊர் சார்பா கேட்டுக்குறோம். " என அறிவித்து, அய்யனாருக்குச் சூடம், தீபாராதனை காட்டினர். ஊர் கூடி நின்று, அய்யன் கோவில் காப்புக் கட்டும் விழா நடக்க, அப்போது தான் கங்காவும், அவள் கணவனும் வந்து சேர்ந்தனர். தன் அம்மா, அப்பா நின்ற இடத்துக்கு வந்த மாப்பிள்ளையைச் சிவநேசன், குமரனும் வரவேற்றனர். பட்டுச் சேலைக் கட்டி, பெரிய வீட்டு மருமகளாகத் தன் தங்கை மீனாள் நின்றதில் அவள் அண்ணன் கேசவனும் பெருமையாகவே பார்த்தான். "ஏண்டி உன்னை மதியமே வரச் சொன்னேன்ல்ல " என ராஜியம்மாள் மகளைக் கடிந்து கொள்ளவும், அது தான் காப்பு கட்டுறதுக்கு வந்துட்டேன்ல. இனி பத்து நாளும் இந்தக் கிராமத்தில தான் மோட்டு வளையத்தைப் பார்த்திட்டே உட்கார்ந்து இருக்கனும்" எனச் சலித்துக் கொள்ளவும். " வேண்டுதலுக்காக வரச் சொன்னோம். இப்படிச் சலிச்சுக்காம, மனசார அய்யனார் சாமியை வேண்டிக்க" எனவும், கங்கா கையை மட்டும் குவித்தாள். மற்றொரு புறம், சிந்தாவும் அவள் தங்கை முத்துவுமாக,பாட்டர் வைத்த சேலை உடுத்தி, பூச்சூடி, மலர்ந்த புன்னகையோடு நின்றதில் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அதிலும் இன்று புதிதாகச் சேலையில் பார்த்த சின்னவளை, அவள் தோற்றமே சற்று அமரிக்கையாய் மாறி இருப்பதைக் காணவும், காதில் புகை வராத குறை தான். " அக்கா, உனக்குத் தீஞ்ச வாசம் வருதா" என வேடிக்கையாகக் கேட்ட தங்கையை, " என்னடி சொல்ற" என வினவிய சிந்தாவிடம் கங்காவை ஜாடைக் காட்டவும். " உனக்கு ரொம்பத் தாண்டி குளிர் விட்டுருச்சு. இது யாரு குடுக்குற தகிரியமின்னு தெரியுது. அவள் கண்ணு முன்னாடியே போகாத, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்" எனத் தங்கையை எச்சரித்தாள். காலையில் வேர்கள் அமைப்பினர் தென்வயலில் மூலிகை நாற்றுகளை நட்ட பிறகு, பெரிய வீட்டில் வைத்து அமிர்தாவுக்கு வளைகாப்பு நடந்தது.
பெரிய ஹாலில் சேரில் அமிர்தாவை அமர்த்தி, முன்னே ஜமக்காளம் விரித்து, அதில் சீர் தட்டுகள் பரப்பப்பட்டன. தாம்பூலம், கண்ணாடி வளையல்கள், பழங்கள், இனிப்புகள் எனக் குமரனும், சிவநேசனுமாக வாங்கிக் குவித்து ஹாலை நிறைத்தனர். அதே போல் அவர்கள் நண்பர்களைத் தவிர, ராஜியம்மாள் அவர் மருமகள், அங்கு இருக்கும் அவர்களது சொந்தக்கார பெண்கள், சிந்தா, முத்து வள்ளி பாட்டுப் பாடிய கிழவிகள் என ஒரு கூட்டமே கூடிவிட்டது. ராஜியம்மாளும், ஐயாவுமாக ஆசீர்வாதம் செய்து, முதலில் வளையலைப் பூட்ட வரிசையாக எல்லாரும் வளையல் பூட்டினர். சிந்தா தான் தேடி எடுத்த நினைவுப் பரிசைக் கொடுத்து வாழ்த்தி வளையல் போடவும் உணர்ச்சி வயப்பட்டுக் கண் கலங்கிய அமிர்தா. " சிந்தாக்கா, முத்து மாதிரி நானும் உங்களுக்கு ஒரு தங்கச்சி தான், என் டெலிவரி டயத்துக்குக் கரெக்டா வந்திடனும்" எனவும் ,"குடும்பத்தோட வந்து இறங்கி உனக்குப் பிரசவம் பார்த்துட்டு வந்துடுறோம். உங்க அம்மா வந்து பார்கலையின்னு குறை இருக்கக்கூடாது. " என இருவருமே கண் கலங்கினர். அமிர்தாவிடமிருந்து, வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வளையல் என மடி மாற்றி, வள்ளிக்கும் சீக்கிரம் பிள்ளை வரம் அருளட்டும் என அனைவரும் வாழ்த்தினர். கங்காவுக்கு இந்தச் சடங்கைச் செய்ய ஆசைப்பட்டே, ராஜியம்மாள் மதியம் வரச் சொல்லியிருந்தார். ஆனால் அமிர்தாவையுமே கங்காவுக்குப் பிடிக்காமல் போக, தனக்குப் பிள்ளை வரம் கனவு தான் என்பதை அறிந்தவள், அந்த நிகழ்வைத் தவிர்த்தாள். மதியம் ஏழுவகைக் கட்டுச் சாதம் அதற்குத் தோதான வெஞ்சனம் வைத்து மதிய வளைகாப்புச் சாப்பாட்டைப் போட்டவர்கள், நல்ல நேரம் பார்த்து அமிர்தாவை வழி அனுப்பினர். கிளம்பும் போது, ராஜியம்மாள் கையைப் பிடித்துக் கொண்ட அமிர்தா. " எங்க இரண்டு பேர் வீட்டுலையும், எங்களைக் கலப்பு மணம் பண்ணிக்கிட்டோம்னு ஒத்துக்கலைமா. எங்களை மாதிரி உள்ள ஜோடிகளுக்கு, நண்பர்கள் உறவா கிடைச்சிடுவாங்க. ஆனால் அம்மா, அப்பா கிடைக்கமாட்டாங்க. நாங்க கொடுத்து வச்சவங்க, எங்களுக்கு அம்மா, அப்பாவும் கிடைச்சிருக்கீங்க" என உணர்ச்சி வயப்பட்டுச் சொன்ன அமிர்தாவை அணைத்துக் கொண்டவர். " எங்க அன்பும், ஆசீர்வாதமும் என்னைக்கும் உங்களுக்கு உண்டு. ஊருக்கெல்லாம் நல்லது செய்றீகளே, உங்களைப் புரிஞ்சுக்கிட்டு, உங்க பெத்தவுகளும் உங்களை ஏத்துக்குவாக. நல்லபடி பேரனை பெத்து தூக்கிட்டு வா. உன் புள்ளை வளர்ற மாதிரி, இந்த மூலிகை பண்ணையும் வளர்ந்து உங்களும் ஜெயம் உண்டாகும்" என ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். . அய்யன் கோவில், காப்புக் கட்டும் நிகழ்ச்சி முடிந்து, அரை மூடித் தேங்காய், நாலு வாழைப்பழம் விபூதி பிரசாத அர்ச்சனைத் தட்டோடு முத்து வரவும், ராஜியம்மாள் அவளைக் கூப்பிட்டார். " அடியே வளைகாப்பு சோறும், வெஞ்சனமும் நிறையக் கிடக்கு. வீட்டுக்கு வா, எடுத்துட்டு போய் இராத்திரி சாப்பிடுவீக" எனவும் " சரிமா" என்றாள். " ஆமாம்மாம் , மிச்ச மீதியை பண்ணைக்காரவுகளுக்குக் குடுத்து விடு, இராத்திரிக்கு எங்களுக்குச் சூடா டிபன் தான் வேணும்" எனக் கங்கா பேச்சோடு முத்துவை தரமிறக்கவும், கண்டனத்தை இரண்டு முறையும் அழுதபடி ஓடியவள் இன்று "வளைகாப்பு சோறு , சாமந்தியம்மா கைப் பக்குவத்தில சாப்பிடவும் குடுத்து வச்சிருக்கனுமே. நான் வந்து எடுத்துக்குறேன்மா" என அசராமல் ,ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் அளிக்கவும், கங்காவுக்கு எரிச்சல் ஆனது. குமரன், " மோதி பெல் , இது தான் சாக்குன்னு அத்தனையும் தூக்கிட்டுப் போயிடாத. எனக்கு அம்மிக் கல்லு வளைகாப்பு சாப்பாடு வேணும். " என்றான். 'செல்ல பெரு வச்சு கூப்புடுற அளவுக்கு வந்துட்டான்னா ' எனக் கங்கா மனதில் வியந்தாள் . " அதெல்லாம் இல்லை, அம்மா சொல்லிட்டாக, நான் மொத்தத்தையும் எடுத்துட்டு போயிடுவேன், நீங்களும் உங்க அக்காவும் , பெரியவீட்டுக்காரவுக சூடான டிபன் சாப்புடுங்க " என அவள் குமரனை வம்பிழுக்கவும். " எனக்கு என் பிரெண்டோட வளைகாப்பு சாப்பாடு தான் வேணும், நீ எல்லாத்தையும் எடுத்துட்டு போறதுனா ,எடுத்துட்டு போ, நான் சாப்பிட உங்க வீட்டுக்கு வந்துடுறேன். ப்ராப்ளம் சால்வ்டு" எனக் குமரன் தோளைக் குலுக்கவும். " குமரா" என அதட்டி கங்கா ஏதோ, சொல்ல வருவதற்குள். " இந்த வாழைப்பழம் கூட, உங்க வீட்டுது சீக்கிரம் பழுத்திருக்கு, எங்களுது அப்படியே இருக்கே. உங்க வீட்டில மேஜிக் வச்சிருக்கீங்களா" என அவள் தட்டிலிருந்து, ஒன்றைத் தோலுரித்துச் சாப்பிடவும், " விவசாயப் படிச்ச உங்களுக்கு நாங்க வாழைப்பழம் எப்படிப் பழுக்கும்னு சொல்லனுமாக்கும், வேணும்னா எடுத்துக்குங்க, அதுக்காகச் சும்மா கதை விடக் கூடாது" என முத்து, குமரனை உரிமையாகப் பேசியதை கங்கா மனதில் ,இவர்களை ஒருவழி ஆக்குவது கங்கணம் கட்டிக் கொண்டாள். இளங்கன்று பயமறியாது என்பது போல் சிந்தாவின் எச்சரிக்கை முத்துவுக்குப் புத்தியில் எட்டாமல் போனது, குமரன் இருக்கும் தைரியத்தில் கங்காவையே புறக்கணித்து வம்பு பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். " நீ இப்படிச் சொன்னதுக்கு அப்புறம் விடுறதா இல்லை" என மற்றொரு பழத்தையும் அவள் தட்டிலிருந்தே எடுத்துச் சாப்பிடவும், " அடேய், சின்னப் பிள்ளைகளுக்குச் சாப்பிட குடுக்குங்க. அதைத் தூக்கிட்ட" என மகனைக் கடிந்தபடி, தங்களது பூஜை தட்டிலிருந்து, இரண்டு பழத்தை முத்துவிடம் நீட்டவும் , அவரை முறைத்த முத்து, " அப்படின்னா, உங்க சாப்பாடும் வேணாம் போங்க" எனக் கோவிக்கவும், " அடியே, சரி தரலை. நான் முன்னாடி போறேன். நீ மறந்திடாம வந்துட்டு போ " எனக் கங்காவோடு காரில் ஏறிச் சென்றார்.
குமரன்," பாப்பாவைத் தூக்கிட்டு, நான் நடந்து வர்றேன். வேடிக்கை பார்த்துட்டே வரட்டும், நீ , அத்தாச்சியோட கிளம்பு அண்ணேன்" எனச் சிவநேசன், மீனாளை வண்டியில் அனுப்பினான். சிந்தா, "சுப்பு, உன் வண்டியைக் காணமே" " வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சனுமின்னு, அப்பா காப்புக் கட்டின மறுநிமிசம் கிளம்பிடுச்சு. நீ கிளம்புக்கா. நாங்க நடந்து வந்துடுறோம்" என்ற தம்பியிடம் , முத்துவைக் காட்டி, " அவளைத் தனியா விட்டுட்டு வந்திடாத, இல்லை மாமனை அனுப்புவா" எனக் கருத்துக் கேட்கவும் , " ஏய், நீ வா புள்ளை. அதுங்க என்ன பச்சை புள்ளையா, தொலைஞ்சு போறதுக்கு." என வேலு கடிந்து கொள்ளலும். " என்ன மச்சான், வயசுக்கு வந்த புள்ளையை அப்படி விட்டுட்டு போக முடியுமா. ஊரு கண்ணு பூரா அவ மேல தான்" எனச் சிந்தா தங்கையைப் பார்த்து கவலைப் படவும், குமரனோடு வந்தவளைப் பார்த்த வேலு, " அதெல்லாம் அந்தப் புள்ளையைப் பார்த்துக்க ஆள் இருக்கு, என் சின்னாத்தா, வீட்டை பேத்துக் கொண்டு போறதுக்குள்ள போகனும் வா" எனவும் தம்பியிடம் நான்குமுறை சொல்லிவிட்டு மகன் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் சிந்தா. சுப்புவும், முத்துவுமாகக் குமரனோடு நடக்க, சுப்பு, அக்காள் குடும்பம் காலையில் செய்த சாகசத்தைச் சொல்லிச் சிரிக்க, " அப்ப ராசியாயிட்டாகளா, அது தான் அக்கா முகத்தில டாலடிக்குதாக்கும்" என்றபடி வர, பக்கத்தில் இவர்கள் வீட்டில் குடியிருக்கும் பஞ்சவர்ணம், இவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு, " சிந்தா முகம், புருஷன் ராசியானதுக்கு டாலடிக்குது சரி உன் முகம் எதுக்கு டாலடிக்குது. என்னா விசயம்" எனக் கேட்கவும், முத்துவின் கன்னங்கள் சூடானது. குமரனின் நகைப்பும் சேரவும் மேலும் சிவக்க, ' எங்கே தானே காட்டிக் கொடுத்து விடுவோமோ என்ற பயமும் வந்தது. அதற்குள் சுப்பு, " பஞ்சுக்கா, முத்துப் படிக்கப் போற காலேஜைப் பார்த்தேனா, நீ இந்தக் கேள்வி கேக்கமாட்ட " எனக் கொங்கு தேசத்து மக்களைப் பற்றி வியந்து பேசி வந்தவன், " அவுகளுக்கு ஈடா இருக்கனுமுன்னு, அமிர்தாக்கா தான், முத்துவை இப்படி மாத்திவிட்டாக" எனப் பேச்சை முடிக்கவும், பெரிய வீடு வரவும் சரியாக இருந்தது. " அதென்னமோ, ஊர் வாயில விழுகாம, நல்லா படிச்சு கரை ஏறுனா சரி தான். " என்றாள் பஞ்சவர்ணம். ஆட்கள் முன்னும் பின்னும் நடந்ததால் இவர்கள் சேர்ந்து வந்ததும் யாருக்கும் விகற்பமாகப் படவில்லை. ஆனால் கங்காவுக்கும் அவளைப் போன்ற சிலருக்கும் கண்ணை உருத்தியது. முத்துச் சுவாதீனமாக இயல்பு போலே, முன் வாசல் வழியே, குமரனோடு வந்தவள், சிந்துஜா அவனது சட்டையை ஈரம், " போங்க, மணக்க மணக்க ஆசீர்வாதம் தான்" என அனுப்பியவள், சிந்துஜா ஈர உடையைக் கழட்டிவிட்டு, " மீனாக்கா, இந்தக் கூடையிலிருக்கத் துணியை மாத்தி விடவா" எனக் கேட்கவும், " போட்டுவிடு முத்து. நீ போட்டு விட்ட, எந்த ட்ரெஸ்ஸா இருந்தாலும் அழுகாமல் போடுது" என மீனாள் பவுடர் வகையறாக்களைத் தரவும். " ஆத்தி, அடுத்த அலங்காரத்துக்கு ரெடியாயிட்டீகளா" எனக் கொஞ்சியவள், " அது ஒண்ணும் பெரிய வித்தையில்லைக்கா, இவுகளைக் கொஞ்சிக்கிட்டே ட்ரெஸ்ஸை போட்டீகன்னா போட விட்டுருவாக" எனவும். " இரண்டு புள்ளைப் பெத்தமாதிரி இதெல்லாம் எப்படிச் செய்யிற" என மீனாள் அதிசயமாகக் கேட்கவும். " நாங்க அக்கா தங்கச்சி இரண்டு பேர் தானே,எங்களுக்குப் பார்க்க எங்க ஆத்தாளா உயிரோட இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குவோம். எங்க அக்கா இரண்டு புள்ளைகளைப் பெத்துச்சே. ஊர்ல இருக்கக் கிழவிங்க எல்லாம் வந்து பக்குவம் சொல்லிட்டு போகுங்க. அதை வச்சு, அக்காவுக்கு இரண்டு பிரசவத்துக்கும், பத்திய சமையலே செஞ்சு போட்டுருக்கேன்" என முத்துச் சொல்லவும்.
" இதுலையும் சிந்தா கெட்டிக்காரி. தன்னை மாதிரியே தங்கச்சியையும் பழக்கி விட்டுருக்கா பாரு" என ராஜியம்மாள் தனது வளர்ப்பைச் சிலாகிக்கவும்.


" பெரியம்மா ஒரு வேலை மிஸ்ஸிங்க். சிந்தாக்கா, வேலு ப்ரோக்கு சூப்பரா ஆயில் மசாஜ் பண்ணி விடுவாங்க. அது இவளுக்குத் தெரியாது. இவ தன் வுட்பீயையும் ஏமாத்துறா" எனக் குமரன் குறை சொல்லவும்.


"கண்ணு பார்த்தா, கை செய்யப் போகுது, புருஷனுக்குச் செய்யறதுக்கெல்லாமா ட்ரைனிங் எடுப்பாக. நீ ஒரு விவரங் கெட்டவனா இருக்க. இவளுக்குக் கல்யாணம் ஆனா அதெல்லாம் அக்காளை மாதிரியே, தன்னால புருஷனை நல்லா பார்த்துக்குவா, என்ன ஒண்ணு சிந்தா மாதிரி கைப்பக்குவம் வராது" என ராஜியம்மாள் சொல்லவும்,


' மீனாக்கா, பெரியம்மாளை பார்த்திகளா, நான் வேலை செஞ்சாலும் அதுக்குப் பாராட்டும் எங்க அக்காவுக்குத் தானாம், நல்லா செய்யலைனா மட்டும் பக்குவம் பத்தாதாம் " என முத்துக் குறை சொல்லவும். " அது தானே " என மீனாவும் மாமியாரை வம்பிழுக்க , "அதெல்லாம் எங்க அம்மாட்ட சிந்தாவை முந்திகிட்டு யாரும் பேர் வாங்க முடியாது, இந்தப் பஞ்சாயத்தில தான் அங்க ஒரு ஆளு இண்ணும், அம்மாவை, திட்டிக்கிட்டுத் திரியுது " எனச் சிவநேசன் காங்காவை காட்டி, சொல்லவும்.


கங்காவுக்கு வாய் வரை முத்துவையம், சிந்தாவையும் தரமிறக்க வந்த வார்த்தைகள் யாவும், உள்ளுக்குள்ளேயே முடங்கின. போன முறை சிந்தா கொடுத்த சூடு இன்னும் வேலை செய்தது. தனது மணவாழ்க்கை ஏற்கனவே சற்று கசந்து இருக்க, மொத்தமாக முறித்துக் கொள்ளக் கூடாது என நினைத்தாள்.

ஆனால் குமரன், முத்துவின் பார்வை பரிமாற்றங்கள் கங்காவுக்குப் புரிந்து போகவும் , ஏற்கனவே சீமைக்கருவை விவகாரத்தில் பக்கத்தில் கம்பெனி வைத்திருக்கும் வடநாட்டுக்காரனின் பகையைப் பற்றிச் சோமன் மூலம் அறிந்திருந்ததில், தன் பெயர் இதில் சந்தேகமாகக் கூட வராத அளவு ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினாள்.

சிந்தாவைப் புகழும் அம்மாவுக்கும், அவள் மீது அபிமானம் வைத்திருக்கும் சிவநேசனையும், புதிய முயற்சிகளுக்குத் துணை நிற்கும் அய்யனார் குடும்பத்தையும் அடக்கி நிறுத்த, ' எரிவதை பிடுங்கினால், கொதிப்பது நிற்கும்" என்ற சொலவடைக்கு ஏற்ப சிந்தாவை குறி வைத்தாள்.

முத்து விசயத்தில், சிந்தாவுக்குச் செய்தது போல், பொய்யாய் இல்லாமல், இவர்கள் உண்மையையே ஊருக்குச் சொன்னாலுமே, அதன் விளைவு, தங்கள் குடும்பத்துக்குத் தான் பாதகமாக அமையும். சிவநேசனைப் போல் இல்லாமல் குமரன், முத்துவை பெரிய வீட்டு மருமகளாகவே ஆக்கிவிடுவான் எனக் கணக்கு செய்தவள், குமரனுக்கும் பாடம் புகட்டுவது போல், சிந்தாவை குறி வைத்தாள். அவளுக்கு ஏதாவது நேர்ந்தால், ஊர் வளமைப் படி, அக்காள் பிள்ளைகளுக்காக, முத்து அவள் மாமனையே இரண்டாம் தாரமாகக் கூட மணந்து கொள்வாள். பெரிய வீட்டு வழக்கத்தை மாற்ற நினைக்கும் குமரனுக்கும் சரியான அடியாக இருக்கும் என நினைத்தாள்.

சோமனும் அவன் கூட்டமும் , சிவநேசன் , குமரன் கூட்டத்தைக் குறி வைத்தாலும், ஆண்கள் எச்சரிக்கையாகவே செயல்படுவதைப் பார்த்தவன், புரவியெடுப்புச் சமயத்தில் ஏதாவது கலகத்தை ஏற்படுத்திப் புது முயற்சியை முறியடிக்க நினைத்தான். இவர்கள் நடவடிக்கையை ஆராய அவர்களுக்குள்ளேயே ஓர் கையால் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தே, அவனும் கங்காவை திருவிழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தான். அலைபேசியில் அவனோடான தொடர்பில் இருப்பவள், ஒரு திட்டத்தோடே மேலப்பூங்குடிக்கு வந்தாள்.

கங்கா இயல்பிலேயே பொறாமை குணம் உடையவளாக இருந்ததும், பதின்ம வயதில் வயசு கோளாறு காரணமாகச் செய்த பிழையால் அவள் கருப்பை அதன் திறனை இழக்க, குழந்தை பெற இயலாது என்ற போதும், அதை மறைத்து அத்தை மகனை மணந்து கொண்டாள். தன் குறை வெளியே தெரியாமலிருக்க, மீனாளை பலிகடாவாக்கியவள், அவள் அண்ணன் சுதாரித்து அவளை அழைத்து வரவும், இப்போது மாமியாரின் கவனமும் இவள் புறம் திரும்ப, குழந்தைக்காக மருத்துவரை பார்க்கச் சொன்னார்கள். இதுவே நாளடைவில் தனது இல்வாழ்க்கைக்கும் பிரச்சனை ஆகுமோ என எண்ணிப் பயந்திருந்தவளுக்கு, ஊரில் நடப்பவற்றைச் சோமன் ஒன்றுக்கு இரண்டாக வத்தி வைக்க, பிறந்த வீட்டுச் சந்தோஷத்தையும் பறிக்கக் கிளம்பி விட்டாள்.

தான் சிரமப்பட்டாலும் உற்றவர் வாழட்டும் என வாழும் சிந்தாக்கள் இருக்கும் ஊரில் தான், பண்பான குடும்பத்தில் பிறந்தும், தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது எனக் குயுக்தி கொண்ட கங்காக்களும் உள்ளனர். இங்குச் சோமன் அவளது குணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அடுத்து என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment