யார் இந்த நிலவு- 28
கே ஆர் மில்லில் ஆதர்ஷ் காலெடுத்து வைத்ததிலிருந்தே பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அவனது என்ட்ரியே, அதிரடியாக இருக்க, அப்போதே, தொழிலாளர்கள், என்ன ஏதென்று பேச ஆரம்பித்து விட்டார்கள். போதாத குறைக்கு ராஜனின் குரல் உசந்து கேட்கவும், ஏதோ பிரச்சனை என அரசல் புரசலாகப் பேச்சு வந்தது.
இரண்டு மணி நேரத்தில் மீண்டும் ஆதர்ஷின் கார்கள் மட்டுமின்றிக் கே ஆர், வீட்டில் உள்ளவர்களும் வாகனங்களும் வரிசையாகக் கிளம்பவும், என்ன என்ன வென விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதில் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாட்கள் மூலமாக , யாரோ முக்கியமான ஒருவருக்கு முடியவில்லை என்று மட்டும் செய்தி பரவியது.
மில் ஹாஸ்டலில் தங்கியிருந்த சங்கீதா , சத்தியனிடம் விசயத்தைக் கேட்டறிந்தவள், " நான் அப்பளையே நினைச்சேனுங்க, ஆதிரா, அப்பாவோட மகளா தான் இருப்பாங்கன்னு, அப்ப அவிக அம்மாவுக்குத் தான் முடியலையாக்கும்" என்றவள், இரவு உணவின் போது, அனைவரையும் பவானிக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யச் சொன்னாள்.
ஹாஸ்பிடலுக்கு, குன்னூரிலிருந்தே மருந்தின் வீரியத்தில் மயக்க நிலையில் வந்த, பவானியை, நாயகமும், சௌந்தரியும் கண்ணீர் விட்ட படி வந்து பார்க்க, ஆதிரா, " ஆயி, ஆயி" என எழுப்பப் போனாள். ஆதர்ஷ் அவளை அழைக்க விடாமல் தடுத்தவன், " ட்ரிட்மெண்ட் நடக்கட்டும், அவங்களை எமோஷனல் ஆக்காத" எனக் கட்டுப்படுத்தினான். அதே சொல்லே பெரியவர்களுக்கும் போதுமானதாக இருந்தது.
கௌரி, அவரது தீதியை அருகில் வந்து தொட்டுப் பார்த்தவர், " எல்லாம் கூடி வர்ற நேரம். எந்திருச்சு வாங்கத் தீதி. உங்கள் தனிமை தவத்துக்கான காலம் முடிஞ்சுது. நீங்க ஜீஜு வோட சேர்ந்து வாழறதை, நாங்கல்லாம் ஆசை தீர பார்க்கனும்" எனப் புலம்பவும், " மாஸி" என ஆதர்ஷின் குரலில், ஆதிராவை அழைத்துக் கொண்டு, காரிடாரில் அமர்ந்தார். கஸ்தூரி, ரஞ்சனியும், பவானியை கவலையோடு பார்த்தனர். பைரவி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
அபிராம், பெரியவர்களை அழைத்துக் கொண்டு, அடுத்து இரண்டு கார்களில் வந்திறங்க, சௌந்தரியும், நாயகமும் அவர்களிடம் நடந்ததை அறிந்தனர்.
" கூடவே இருந்து, சேவை செஞ்சது. என்ர மருமகள்னு தெரியாமல் போச்சேடா" என நாயகம் புலம்பவும்,"புருசனோட வாழ முடியலைனாலும், மாமனார்,மாமியாருக்குச் சேவை பண்ணனும்னு வந்திருக்கே, பவானிக்குப் பெரிய மனசு தாண்டா " என்றார் ராமு.
"ராஜ வம்சத்தில் பிறந்தும், கௌரதை பார்க்காத, நமக்குச் சேவை செஞ்சுதே, என்ர வீட்டுப் புள்ளைகள் கூடச் செய்ய மாட்டாங்க" எனப் பன்னீர் நெகிழ்ந்தார்.
"அது நல்லமனசுக்கு, நம்ம வாழ்த்து எல்லாம் இருக்கு, அதுக்கு ஒன்னும் ஆகாதுடா. கவலைப் படாத" என்றார் சுப்பு.
" இப்படி ஒரு மருமகளை வச்சு, சீராட எனக்குக் கொடுத்து வைக்கலையே" எனச் சௌந்தரியும் அபரஞ்சி, சாரதாவிடம் கண்ணீர் விடவும், "அழுவாதக்கா, இனிமேட்டுக்கு நம்ம, நம்ம மறுமவளை பார்த்துக்குவோம்" என்றார் சாரதா. "உண்மையிலே, எனக்கு மகாளில்லாத குறையைத் தீர்த்ததே பவானி தான் அண்ணி. இரண்டு நாள்ல, மாத்திரை போட்டிங்கிளா, இனிப்பு சாப்பிடாதீங்கன்னு வரும் பாருங்க. பவானியாட்டமே இருக்குனீங்களே, உங்க பேத்தி, அது எங்க" என அபரஞ்சி கேட்கவும்,சௌந்தரி , ஆதிராவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
"அழுவதா கண்ணு, அம்மாளுக்கு ஒன்னும் ஆகாது. இனிமேட்டுக்கு உங்க குடும்பத்துக்கே நல்ல காலம் தான்" எனச் சமாதானம் சொல்லவும்,ஆதிரா பொட்டு பொட்டாகக் கண்ணீர் வடித்தாள் .
அதே தளத்தில் நான்கு அறைகளைக் கைலாஷ் புக் செய்து வைத்திருந்தார், அபிராம் பெரியவர்களை, அங்குத் தங்க வைக்க . கஸ்தூரியும், ரஞ்சியுமாகப் பெரியவர்கள் தேவையைக் கவனித்தனர்.
ஆதர்ஷ் யாரெனக் கேட்டார்கள். "ஆதிரா , அம்மத்தா அவிக சொத்துக்கு வாரிசாமாம். நல்ல பையனாத் தான் இருக்கான்" என சௌந்தரி விவரம் சொன்னார்.
அபிராமும் ரஞ்சியுமாக ஐசியூ வாசலுக்கு வர, ஆதிரா, ஒரு பக்கம் கௌரி மாஷி அமர்ந்திருக்க, அவர் மேலில்லாமல்,மற்றொரு புறம் அமர்ந்திருந்த ஆதர்ஷ் தோள்களில் தலையைச் சாய்த்து மெல்ல ஆயியைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தாள். அவன் தட்டிக் கொடுத்தவன், தன நானிக்கு போன் போட்டு ஆதிராவிடமும் பேசச் சொல்லிக் கொடுத்தான். இவர்கள் அந்யோனியத்தைப் பார்க்கவும், ரஞ்சனி, அண்ணனிடம் காட்ட, அவன் அவளை முறைத்தான்.
விஜயன், ஆம்புலென்சிலிருந்து பவானியை இறக்கும் போதிலிருந்து, ஐசியூ வரை உடன் வந்தவர், கைலாஷை தேட, அதே தளத்தில் இவர்களுக்காக ஒதுக்கிய அறையில், கைலாஷ், ஜன்னல் வழியே, வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.
அவரது நினைவுகள், இவர் சந்தன் கட்டை விட்டுக் கிளம்பிய நாளுக்குச் சென்றது. இரண்டு மாத கால இனிமையான இல்லறத்தில், மழை சற்றே தணியும் நாட்களில், அணைக்கட்டை ஒட்டிய பகுதிகளில் இருவரும் கைகோர்த்தபடி ஒட்டியே சுற்றித் திரிவார்கள். உண்மையில் தலைமறைவு வாழ்க்கை, தேனிலவு காலமாகத் தான் இருந்தது. ராஜன் அவரைச் சீண்டிக் கொண்டே இருக்க, அவர் ராஜ் என்ற சிணுங்கலோடு, அவருக்கு ஈடு கொடுப்பார்.
இரண்டு மாத காலத்தில், கைலாஷ் தனது மில்ஸ் ஆரம்பிக்கும் கனவுத் திட்டத்தை அதில் என்னவெல்லாம் செயல்படுத்த வேண்டும் எனப் பட்டியலிடும் போது, பைரவியும் தங்கள் மில்லில் சந்திக்கும் பிரச்சனைகளை வைத்து நிறையச் சொல்லுவார். அவர் சொன்னதில் ஒன்று தான், பெண் தொழிலாளர்களுக்கான ஹாஸ்டலும், அங்கே அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளப் படிக்கும் வசதி ஏற்படுத்தித் தருவதும். அதை எல்லாம் நினைவில் வைத்துத் தான், தன் பாரு சொன்னது என ஒவ்வொரு வார்த்தையையும் நினைவாக்கினார்.
சந்தன்கட் பகுதியில், லேண்ட் லைன் தொலைப் பேசி வெகு நாட்களுக்குப் பின் சீரானது. விஜயனுக்கு அழைத்தார் ராஜன்.
அவர், தானே சந்தன்கட் வர இருந்ததாகவும், சௌந்தரி உடல் நிலை சரியில்லையாம், உடனடியாக உன்னை வரச் சொல்கிறார்கள் எனச் செய்தி சொன்னவுடன், பைரவி நொடி தாமதிக்காமல் , " நீங்க கிளம்புங்க ராஜ்" என்றார்.
" இருங்க அம்மணி, வீட்டுக்கும் போன் போட்டு பேசிடுறேன்" என ராஜன் வீட்டுக்கு அழைக்க, ராஜி தான் எடுத்தார். பேசுவது ராஜன் என அறியவுமே, " நல்லா இருக்கீங்களா, எங்கிங்க ஆளையே காணோம், எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாக்கும்" என அவரை நீண்ட நாள் பார்க்காத ஏக்கத்தில் உரிமையாகப் பேசிவிட,
" அம்மணி, உங்களுக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமாக்கும். என்னைப் பார்க்கும் முன்னை ஓடி ஒளிஞ்சிடுவ. அப்ப அதெல்லாம் பொய்யாக்கும்" எனச் சிறுவயது முதலே பழகியவர் என்பதால், இவர் கேலி செய்து பேச, அருகிலிருந்த பைரவி முறைத்தார். அதில் உற்சாகமானவர் மேலும் ராஜியோடு, நாலு வார்த்தைகள் பேச, விளையாட்டு வினையானது.
" தாய் மாதா, இருந்தா கூப்பிடுங்க அம்மணி" எனவும், ராஜி அந்தப் பக்கம், ராஜன் இல்லாத கவலையிலேயே சௌந்தரிக்கு என்னவெல்லாம் ஆனது எனப் பட்டியலிட்டவர், " அத்தை டாக்டர்கிட்ட போயிருக்காங்கங்க. டைபாயிடு ஜொரம் வந்து ரொம்பப் பாடு பட்டாங்கங்க, ஆளே, பாதியா மெலிஞ்சு போயிட்டாங்க. நீங்க ஒருக்கா, வந்து பார்த்துட்டு போகலாமில்லிங்க. உங்களைய தான் கணண்ணு தேடுதுன்னு கிடக்குறாங்க" என ராஜி அழைப்பு விடுக்கவும்.
" வர்றேன் ராஜி, அம்மா வந்தா போன் போட்டேன்னு சொல்லு. கிளம்பும் முன்ன மறுக்கா போன் போடுறேன்" என வைத்தார்.
" நிஜமாலுமே, அம்மாவுக்கு முடியலையாட்டுத்துக்கு" என அவர் கவலை தேய்ந்த முகத்தோடு சொல்லவும், பைரவி, " பாய்சாப், பொய் சொல்றார்னு நினைச்சிங்ஙளா" என விஜயனுக்காகப் பேசவும்.
" அதுக்கு இல்லைங்க அம்மணி, அவன் பொய் சொல்றான்னு யாரு சொன்னா, முடியலைனா, ரொம்ப முடியலையா, பரவாயில்லையான்னு தெரிஞ்சுக்க அடிச்சேன். உன்னையும் கூட்டிட்டு போகனுமில்ல" எனக் கைலாஷ் சொல்லவும்
' ராஜ், நீங்க, உங்க அம்மாவைப் பார்க்கிறது ரொம்ப அவசியம், அங்க இருக்கிற நிலைமையைப் பார்த்துட்டு, என்னை வந்து கூட்டிட்டு போங்க. இன்னைக்கும் கலப்பு மணம், காதல் மணத்தை அவ்வளவு சீக்கிரமா யாரும் ஒத்துக்கிறது இல்லை. உங்களுக்கு இரண்டு தங்கைகள் இருக்காங்க. தேவை பட்டா, அவங்க ஷாதி முடிச்சிட்டு கூட நம்ம ஷாதி பற்றி உங்கள் பெற்றவர்களிடம் சொல்லிக்கலாம்' என அவர் அனுப்ப, கைலாஷ்க்கு தான் மனமே இல்லை. அவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளவும், அவரை இயல்புக்குக் கொண்டு வரும் நோக்கோடு,
" ஆமாம், அது யார் போன்ல, அம்மணி, அம்மணின்னு கொஞ்சி, கொஞ்சி பேசுறீங்க" எனப் பைரவி சண்டைக்கு வரவும்.
" ஆகா, என்ர பொண்டாட்டிக்குப் பொறாமையைப் பாருடா. அது ஒரு மாமா மகள், பேமலி ப்ரெண்ட். இந்தப் பொண்ணைத் தான் நான் கட்டினாளே, கட்டனுமின்னு எங்கப்பா ஒத்துக் கால்ல நிக்கிறார். அந்த ஹிட்லர் சொன்னா, நான் கேட்டுருவேனாக்கும். " என அவர் சிரித்துக் கொண்டே பதில் தரவும் .
" ஓஹோ, உங்க அப்பா பேச்சை மீறனும்னு தான், என்னை ஷாதி பண்ணிக்கிட்டிங்களா" எனப் பைரவி முறைக்கவும், அவரை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவர், " இந்த ராஜா, மடங்கின ஒரே இடம் இந்த ராணிக்கிட்ட மட்டும் தான்" எனக் காதல் வசனம் பேச , " போதுமே" எனப் பொய்யாய் கோபித்து எழுந்தவரை, விடாமல் ஆட்கொண்டார் கைலாஷ் ராஜன். அடுத்த நாள் அவர் கிளம்பும் வரை, பாருவுமே, ஏதாவது காரணம் சொல்லி, கணவனை உரசிக் கொண்டே தான் இருந்தார்.
மனைவியின் மனதை அறிந்தவர், " அதுக்குத் தான் நீயும் கூட வான்னு சொல்றேன். அங்க போனாலும், நீ என்ன செய்றியோன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்" எனத் தன் கைவளைவில் வைத்து அழைத்தவரின் மார்பில் சாய்ந்தவர், தங்கள் பிரிவை, கண்ணீராய் வெளியேற்றி,
" இல்லை ராஜ், நீங்க உங்க அப்பா, அம்மாக்கிட்ட சம்மதம் வாங்கிட்டு, என்னைக் கூட்டிட்டு போங்க. அவங்களோட மனபூர்வமான ஆசீர்வாதம் வேணும். என்னை அவங்க முழு மனசோட மருமகளா ஏத்துக்கனும்" என அவரை அடுத்துப் பேச விடாமல், அது தான் முடிவு எனும் படி தடுத்தவர், இரண்டு நாட்கள் இரயில் பயணத்துக்குத் தேவையான உணவைச் சமைத்து, தனித் தனிப் பேக்கிங்களாக வைத்தவர், அவரது உடுப்புகளோடு, அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கச் சாட்சியாக இருந்த ரஜாயையும் மடித்துப் பேக்கிங் செய்தார்.
"இவ்வளவு பெரிசு எதுக்குமா" என ஆட்சேபித்தவரை, " ரயிலில் குளிரும். அதோட இதைப் போர்த்திக்கிட்டிங்கன்னா, நான் உங்க கூடவே இருக்க மாதிரி" என்றவர், வழிச் செலவுக்குப் பணத்தையும், தன் கையில் போட்டிருந்து விலையுயர்ந்த குடும்ப வளையல்களையும் தந்தவர், " அவசரமா பணம் தேவை பட்டா, இதை வச்சுப் பணம் புரட்டிக்குங்க. " என அவர் மறுத்தும் கேட்காமல் அனுப்பி விட்டார். அன்று உள்ளம் துடிக்க, கட்டாயத்தில் பிரிந்தவர் தாம். பற்பல துன்பங்களை அனுபவித்து, அப்பா, அம்மாவின் கடமை முடித்த பிறகு, விண்ணுலகில் இருக்கும் தன் பாருவோடு சேரும் காலத்தை அவர் எதிர் நோக்கியிருந்தார்.
ஒரு மாதத்தில் பாருவை நினைவூட்டும் ஒவ்வொரு நிகழ்வுகளாய் நிகழ்ந்து, இன்று பாருவே அவர் முன். ஆனால் உயிருக்குப் போராடும் நிலையில். அதைத் தாழ மாட்டாதவராக 'நான் , என்னம்மா தப்பு செஞ்சேன். உன் மேலே வச்ச காதலும் நிஜமில்லையா. உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா. தூக்குத் தண்டனை கைதி கூட, ஒரு தடவையில் செத்துருவான். நான் இருபது வருஷமா, தினம், தினம் பட்ட வேதனை பத்தாதுன்னு, பெரிய தண்டனையைக் கொடுக்க வந்திருக்கிற, என்ர அப்பா,அம்மாவுக்குத் தான் நல்ல மருமகளா இருக்கனும்னு நினைச்சவ, என்ன நினைக்கலை பார்த்தியா " எனத் தன்னுள் புழுங்கிக் கொண்டிருக்க,
" ராஜா, தங்கச்சிமா வந்திட்டாங்கடா, நீ வந்து பாரு வா. உன் பாருவை வந்து பாரு வா" என அழைத்தும் பதிலேதும் சொல்லாமல் வெறித்தபடியே நின்றார்.
" ராஜா, என்னை நாலு அடி கூட அடிச்சிடுடா. இப்படி வெறிச்சிட்டு நிற்காத. உன் குரல் கேட்டா, தங்கச்சிமா, எந்திரிச்சு வந்துரும்" என விஜயன் நண்பனைக் கரைக்கும் வழியைத் தேட, பதிலேதும் சொல்லாமல் நின்றார்.
விஜயன் மேலும் வற்புறுத்தவும், " டாக்டர் கிட்ட பேசி வச்சிருக்கேன். பெரிய டாக்டர் தான், ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கச் சொல்லு. பிழைச்சு வந்தாள்னா பார்த்துக்கிறேன், இல்லைனா பழைய பாருவே என் மனசில இருக்கட்டும் " என பிடிவாதமாக நின்றார் ராஜன். இந்த வார்த்தையை அவர் சொல்லும் முன் என்ன பாடு பட்டிருப்பார் என உணர்ந்த விஜயன், அடுத்து பேசும் முன், ஆதர்ஷ் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான்.
ஒரு நிமிடம் முன் தத்துவமாக பேசிய ,ராஜன் பயத்தோடு பார்க்க "அவங்களுக்கு ஆன்ஜியோ பண்ணனுமாம். பேமலி மெம்பர் சம்மதம் வேணும், நீங்க போடுறீங்களா, இல்லை போஸ்லே குடும்ப வாரிசா, நான் போடவா" என அவரைப் போலவே இறுகிய முகத்தோடு அவனும் கேட்டான்.
விஜயன், இருவருமாக முடிவுக்கு வரட்டும் எனத் தான் வெளியேறி, ஆதிராவை அனுப்பி வைத்தார் விஜயன்.
அவள் வரும் வரை இருவரும் அந்தப் பேப்பரையே வெறித்துக் கொண்டிருக்க, ஆதிரா உள்ளே வந்தவள், " டாக்டர்ஸ், ஆப்பரேஷன் தியேட்டர்ல தயாரா இருக்காங்க. பேப்பர் வேணும்." எனப் பொதுப்படையாகச் சொல்ல,
" இருபது வருஷம் கழிச்சு, மறுபடியும் அதே பழியைச் சுமக்கோனோம்னு தலையில எழுதியிருக்கு " எனக் கைலாஷ் வேதனையோடு திரும்பிக் கொள்ள,
" எனக்கு முதல் சான்ஸே , இதுக்குத் தான்னு எழுதியிருக்கு போல " என மனம் நொந்தான் ஆதர்ஷ். கைலாஷ், இவன் என்ன அர்த்தத்தில் சொல்கிறான் என அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்க்க, ஆதிரா அவனை அறிந்தவள் போல்,
" இரண்டு பேருமே, போட வேண்டாம். என் ஆயி, எனக்காகத் தானே, என் உயிரைக் காப்பாற்ற தான போராடுனாங்க. நானே அவங்க உயிரை காப்பாற்றக் கையெழுத்து போடுறேன்" என அந்தப் படிவத்தை நோக்கி வர, மற்ற இருவருமே, " நானே போடுறேன்" " இந்தக் கொடுமை உனக்கு வேண்டாம்" என அவளை நோக்கி வந்து அணைத்துக் கொண்டனர்.
ஆதர்ஷ், ஆதிராவை கைலாஷ் கைகளில் தந்து விட்டு, நகரப் பார்க்க, அவனை ஒரு கையில் பற்ற, அந்த ஸ்பரிசம் பேச்சு வார்த்தைகள் தேவையற்ற ஓர் ஆறுதலைத் தந்தது. இவ்வளவு நேரமும் பெரிய மனித பாவனையில் வேலை செய்த ஆதர்ஷ் ,கைலாஷின் வார்த்தைகளுக்குப் பொருத்தமான பால் புட்டியை பிடுங்கப்பட்ட பாலகனாக அவர் தோள்களில் சாய்ந்து அழுதான்.
"நான்,உங்களை டார்கெட் பண்ணி தான் ஏற்பட்டோட வந்தேன், அவங்க இப்படிப் பலியாவாங்கன்னு நினைக்கவே இல்லை. எனக்கு பயமா இருக்கு. நானிமாக்கு என்ன பதில் சொல்வேன்" எனவும்
" நாம எதிர்பார்க்காக்கத்தை,எதிர் பார்க்காத நேரத்தில தர்றது தான் கண்ணு வாழ்க்கை, அதை ஒன்னும் பண்ண முடியாது" என்ற கைலாஷ்.
"பெரிசா,ராணியம்மாவை காப்பாத்துற ,சிப்பாய் மாதிரி வந்துட்டான் .சின்னப் பசங்களை,பசங்களாவே இருக்க விடாம என்ன தான் ராஜக் குடும்பமோ" என ஆதர்ஷை செல்லமாகக் கன்னத்தில் தட்டியவர், தன்னோடு அனைத்துக் கொள்ள , அவனும் தந்தையெனும் ஆளுமையின் அரவணைப்பு எத்தகையது என ஆதிராவோடு சேர்ந்து அனுபவித்தான்.
கைலாஷின் ஒரு கை வளைவில் ஆதிராவும், மறு கை வளைவில் ஆதர்ஷும் இருக்க இருவரையும் ஒரு சேர அணைத்துக் கொண்டவர்,
"உங்க ஆயி, ஒரு நிமிசத்தில என்னை ராஜனா ஆக்குறா, மறு நிமிசம் கைலாஷ் ஆக்கிடுறா. இப்ப என்ன செய்யக் காத்திருக்காளோ செய்யட்டும்" என ஒரு முடிவுக்கு வந்தவர், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தானே கையெழுத்துப் போட்டவர், டாக்டர் அறை நோக்கி நடந்தார்.
சௌந்தரி, ஆபரேஷன் அறை காரிடாருக்கு வந்த மகனின் கையைப் பிடித்து, தன் கையிலிருந்த பாருவின் கருகமணியில் பொட்டு போல் கட்டப்பட்ட தாலியையும், மெல்லிய நீண்ட செயினில் கே ஆர் ஆங்கில எழுத்தோடு போடப்பட்டிருந்த தங்கச் சங்கிலியையும் திணித்தார்,
" ஒவ்வொரு பொம்பளையும், இதைப் பிடிச்சிக்கிட்டு தான், தான் புருஷனுக்காக வேண்டுவா. இந்த மகராசி தினம், புருஷன் நீண்ட ஆயுளோட இருக்கனும்னு நெற்றியில் குங்குமம் வாங்கிக்கும். அப்போவெல்லாம், என் மகனோட ஆயுசுக்குத் தான் வாழ்த்தியிருக்கேன்னு தெரியலை. " எனக் கண்ணீர் விட்டவர்,
" நீயும், இதைக் கையில வச்சுக்கிட்டு, அவ ஆயுசுக்காக, மருத மலை ஆண்டவனை வேண்டிக்க. என் வீட்டுக்கு மகாலெட்சுமி வந்து சேரட்டும்" என்று விட்டு போய் அமர, கைலாஷ் தன் கைகளிலிருந்த, பாருவின் தாலியையே பார்த்திருந்தார்.
அடுத்த ஒரு மணி நேரம், பாரு, ஆயி, பைரவி, பவானி என எந்தெந்த பெயர்களில் அவரைப் பெரிதும் விரும்பினார்களோ, அந்தந்த உயிர்கள் அந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனையோடு துடித்தது. அதோடு கே ஆர் மில் வளாகத்தில் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை யாக , தங்கள் சேர்மன் அப்பாவிற்குத் துணையை, தங்களுக்கு ஒரு தாயை காப்பாற்றித் தர, பிரார்த்தனை செய்யப்பட்டது.
" ஆஞ்சியோ சக்ஸஸ், ப்ளாக்ஸை ப்ளாஸ்ட் பண்ணியாச்சு. இருபத்தி நான்குமணி நேரம் அப்சர் வேசன்ல ஐசியுல இருப்பாங்க. யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்" என்ற மருத்துவர்கள், வார்த்தையில் எல்லோரும் ஆசுவாசமடைந்தனர்.
ஆதிரா, " ஆயி நம்மகிட்ட வந்துட்டாங்க பாபா. " என அவரைக் கட்டிக் கொண்டாள். ஆதர்ஷ் முகத்திலும் ஒரு நிம்மதி வந்தது.
மருத்துவர்கள், கே ஆரையும், ஆதர்ஷ், ஆதிராவையும் மட்டும் ஐசியூவுக்குள் அழைத்து, " உங்க மூணு பேரையும் பார்க்கனும்னு, ஒரே புலம்பல், கொஞ்சம் ஹோப் ஃபுல்லா பேசிட்டு வாங்க. அப்பத் தான் நிம்மதியா தூங்கு வாங்க. இல்லைனா, அதுவே பெரிய ஸ்ட்ரெஸ்ஸாகி, காம்பிகேஷன்ல கொண்டு வந்து விட்டுரும்" என அறிவுருத்தினர்.
"என்னால அவளை அப்படிப் பார்க்க முடியாது" எனக் கைலாஷ் மறுத்தவர்.
" அவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, நம்மளை சேர்த்து பார்த்தாள்னா, கடமை முடிஞ்சுதுன்னு கிளம்பிடுவா. நான் வரலை" என அவர் சிறுவனாக அடம் பிடிக்க,
" ஆயிக்கிட்டையே, வந்து அதைச் சொல்லிடுங்க. அப்பத் தான், எனக்கா வருவாங்க. நானும் பாபாவோட டூன்னு சொல்லிடுறேன்' என ஆதிரா ஐடியா சொன்னாள்.
" நல்ல குடும்பம்" என்ற ஆதர்ஷ், " அவுங்களுக்கு, என்கிட்ட தான், கேள்வி நிறைய இருக்கு, நானே போறேன்" என்றான் .
" டேய், அவளை ஸ்டைன் பண்ண விடக் கூடாது. நீ எதாவது எகத்தாளமா பேசி, என் பாருவுக்கு எதாவது ஆச்சு பிச்சுப் போடுவேன். " எனக் கைலாஷ் மிரட்ட, " அப்ப நீங்களே போங்க" என்றான். " இரண்டு பேரும் வேண்டாம், நான் போறேன்" என ஆதிரா, சொல்லவும்,
" நீ போயி, அவுங்களை, எமோசனலா அழுக வச்ச, பிச்சுப் போடுவேன்" என ஆதர்ஷ், கைலாஷ் போலவே சொல்ல, " என்ன நடக்குது இங்கே" என ஐசியுவுக்குள் இருந்து வந்தான் அபிராம்.
" டேய் மாப்பிள்ளை, நீ எப்படா உள்ள போன, அத்தை நல்லா இருக்காளா' என ராஜன் தவிப்பாக வினவவும்.
" நல்லா இருக்காங்க. உங்க எல்லாரையும் விட, எனக்கு அவிக ப்ரெண்ட், அது தான் பார்க்கப் போனேனுங்க," என்றவன், " ஆனால் மாமா, நீங்க உங்க பாரு, பாருன்னு ஓவர் பில்டப் குடுத்துட்டீங்க. என் ஆரா பேபி மாதிரி கொஞ்சம் அழகா இருக்காங்க, ஆனால் நீங்க, பில்டப் விட்ட அளவு இல்லை" எனவும், "பிச்சு போடுவோம் பிச்சு" என மூவரும் கோரஸ் பாடி, பைரவியைப் பார்க்கச் சென்றனர்.
ஆதிரா, " ஆயி" என ஓடி கையைப் பிடிக்கமெல்ல கண் திறந்தவர், " ரஜ்ஜும்மா" என வாயசைக்க, " பயமுறுத்திட்டிங்க ஆயி, கெட் வெல் சூன்" என, அவர் கன்னத்தில் முத்தமிட, கண்களில் சந்தோஷம், அடுத்து ஆதர்ஷ், " பைரவி பாய், சீக்கிரம் வாங்க. ஜங், அபி பீ பாக்கி ஹை" என்றான். அவன் முகத்தைத் தடவ, அவர் கையை உயர்த்த அதைப் பற்றி, தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவனை ஆசை தீர பார்த்தவர், ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட முயல, " நோ, நோ" என பற்றினான்.
ராஜன் மக்களை உள்ளே விட்டு, தவிப்போடு பார்த்து நின்றார், பாருவின் கலையான முகம் சோர்வடைந்து இருந்தது. முகம் தான் பார்தாத சின்னப் பெண் பாருவாக இல்லாமல், வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி தெரிந்தது. பிள்ளைகளை ஆர்வமாக பார்த்திருந்த மனைவியைப் பார்த்தவர், தான் உணர்ச்சி வயப்பட்டால், அவளும் உணர்ச்சி வயப்படுவாள், என, இதுவரை எதுவுமே நடக்காதது போல், மிகவும் சாதாரணமான முக பாவனையோடு, தன்னை கட்டுப்படுத்தி இருந்தவர் ஆக்சிஜன் மாஸ்கை கழட்ட போனதில் பதட்டமாகி, அவர் அருகில் வந்தார்.
பாருவின் பார்வை, இப்போது கணவரை மொய்த்தது. கணவரையே கண் எடுக்காமல் பார்த்தவர், அவர் தன் முகத்தை பார்க்காமலே, பார்வையை சுற்றி அலையவிட்டு, தன்னை கட்டுப்படுத்துவதை உணர்ந்து, ஈசிஜிக்காக போடப்பட்டிருந்த க்ளிப்போடு, அவர் கைகளைத் தொடவும், அவர் தொடுகையில் மீண்டவர், தன் மனைவியை நேராகப் பார்த்தார். எத்தனை முயன்றும் அந்த பார்வை, ' இத்தனை வருஷம் மறைச்சிட்டியே' என்பது போல் பாருவை கூறு போடத் தான் செய்தது.
பாரு கண்களால் இறைஞ்சவும், " இந்தப் பார்வை பார்த்துத் தான் நீ என்னை ஏமாத்துற" எனக் கோபித்தவர். " இந்த மாஸ்கை எதுக்கு எடுக்கிற" எனக் கடிந்தவர், அவரைத் தொட்ட கையை பற்றிக் கொண்டது. அந்த தொடுகையில், பைரவியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு விழ, அவருக்கும் பொங்கியது.
பெரும் மூச்செடுத்து, கண்களையும் பாருவிடமிருந்து அவர் பிரித்தெடுக்க முயற்சிக்க, " ராஜ், நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்" என்ற பைரவியின் கண்களில், கண்ணீர் அருவியாக கொட்ட, அதற்கு போட்டி போட கைலாஷின் கண்களும் கலங்க ஆரம்பித்தது.
பெற்ளவர்கள், சந்திப்பை பார்த்த ஆதிரா ஏற்கனவே உணர்ச்சி வேகத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டு, சத்தம் வெளியே வராமல் அழுதபடி இருந்தாள்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ. கட்டுபாடுடைய சிப்பாயாக வளர்க்கப் பட்டவனே, பால் புட்டியாக கலங்கியிருக்க, வேறு யாரை என்ன சொல்வது.
ஆனாலும், பைரவியின் ஒரு ஏக்கப் பெருமூச்சில் மற்ற மூவருமே சுதாரித்தனர். " ஆயி நோ" என பிள்ளைகளும்,
" இந்த அழுவாச்சி வேலை எல்லாம், வச்சிக்கிட்டையினா, பிச்சு போடுவேன் பார்த்துக்க. தண்டனை கேட்டியில்ல, கட்டாயம் தருவேன். அதைய அனுபவிக்கிறதுக்காகவாவது, உடம்பை தேத்திக்கிட்டு வா .அது தான் நீ எனக்கு செய்யற பிராயசித்தம். " என்றவர்
"ஆமாம், எனக்கு எத்தனை புள்ளைங்க பிறந்திச்சு. அதைய கூட எண்ணிக்கை கணக்கு வைக்கலையா நீ. ஆளாளுக்கு எம்பட வாரிசுன்னு வருதுங்க. " என அவர் கேள்வி எழுப்பவும், நிஜமாகவே பைரவி முழித்தார்.
" ரஜ்ஜும்மா, உங்க ஆயி முழிக்கிறதை பார்த்தா, இன்னும் இரண்டு மூணு இருக்குமாட்டதுக்கு" என அவர் ஜோக்கடிக்கவும், ஆதிரா சிரித்தாள். ஆயி மேல் எவ்வளவு கோபமிருந்த போதும், நேரில் பார்த்தவுடன், அதை காட்டாத பாபா மீது, ரஜ்ஜும்மாவுக்கு பாசம் பொங்கியது.
"பாஸ், நிஜமாவே அவுங்களுக்குத் தெரியாது. அதுனால தான் முழிக்கிறாங்க. நானிமாவை தான் கேட்கனும்" என்ற ஆதர்ஷ். "அப்படியே இல்லைனாலும் இன்னும் இரண்டு பேரை, தத்தெடுத்துக்குவோம். இரண்டு பக்கமும் சொத்து நிறையா இருக்கே. " என்றான்.
" தத்து எல்லாம் வேண்டாம். நான் இன்னும் எலிஜிபில் தான் " என ராஜன் கமெண்ட் அடிக்கவும், முகம் சிவந்த, பைரவி சிரித்த வண்ணம் மெல்லக் கண்களைச் சொருகினார்.
மூவரும் பதறவும், அங்கிருந்த செவிலியர், " நோ, ப்ராப்ளம் சார். ஊசி போட்டிருக்கு, நிம்மதியா தூஙாகுவாங்க. இப்போ தான் ஸ்டேபிளா இருக்காங்க. இனி ஆபத்து இல்லை " என மானிடரிலிருந்த எண்களைக் காட்டி, விளக்கி, அவர்களை வெளியே காத்திருக்கச் சொன்னார். .
மனைவிக்காக, தன் கோபத்தை மறந்து , அவரோடு பேசி விட்டு வந்த பின்னும், கைலாஷ்க்கு மனம் தெளியவே இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னை வந்து பார்க்காததற்கு என்ன காரணம் என அவர் உள்மனம் குடைந்துக் கொண்டே இருந்தது. பாரு உடல் நலம் தேறி வரட்டும் என்றும், தனது மாமியார் வரவுக்காகவும் காத்திருந்தார்.
ஆனால் , கைலாஷை சந்திக்க, அடுத்த நாள் அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்த மஹந்த் ராய் போஸ்லே, பைரவி பாய் உடல்நிலையை அறிந்து, புவாஜி(அத்தையம்மா) யை பார்க்க, அத்தை கணவரை விசாரிக்க மருத்துவமனைக்கு நேரடியாகவே வந்து சேர்ந்தான்.
கைலாஷ் ராஜனின் மொத்த குடும்பமே அங்கிருக்க, அத்தை மகளை அடையாளம் கண்டு, ஒரு திட்டத்தோடு சென்றான்