Friday, 25 February 2022

யார் இந்த நிலவு-27

யார் இந்த நிலவு-27 

குன்னூர் வசந்த மாளிகையில், மாலை நேரத்தில்,வழக்கம் போல் சாமி அறையில் ,விளக்கேற்றி,துதி பாடி ஆராத்தி காட்டிய போதும், பவானியின் மனதில் ஒரு சலனம், எதோ நடக்கப்போவது போல் உள்மனம் அடித்துக்கொண்டே இருந்தது, சௌந்தரி ,பாலநாயகம் இருவரும் அவர்கள் மகன் வீட்டுக்கு சென்ற பிறகு, மற்ற பெரியவர்களும் கொஞ்சம் தனிமையாகவே உணர்ந்தனர்,

“இந்தப் பாலா, ஒட்டுக்க மகனூட்டுலையே செட்டிலாயிட்டானாட்டத்துக்கு, நம்ம கிட்ட ஒப்புக்கு வரேன்னு சொல்றான்” என ராமு நண்பர்களிடம் குறை பேசிக்கொண்டிருக்க,

“நீ, தங்கச்சியை ,விட்டுப்போட்டு இருந்திடுவ,பாலாவை விட்டுப்போட்டு இருக்கத் தான் மனசு கேக்கலையாக்கும்” எனச் சுப்பிரமணி கோர்த்து விட,

:இது சொன்னிங்களே,இது நூத்துக்கு நூறு சரிங்க அண்ணா, இவருக்குப் பாலாண்ணா இருந்தார்னா போதுங்க,நான் கூடத் தேவையிலிங்க” என அபரஞ்சி கணவனை முறைத்தார்.

“போதுமா,இப்ப உனக்குச் சந்தோசமா, அவகிட்ட கோர்த்து விட்டச்சுல்ல,இனி ஊருக்கு போகந்தட்டியும்,இதையே சொல்லி உசிரே வாங்கிடும்” என ராமு மனைவியைக் குறை சொல்ல, பன்னீர், “ அது உசிர காப்பாத்திர புண்ணியவதிடா. பொண்டாட்டி இருக்க வரைக்கும் தான் புருசனுக்கு மதிப்பு தெரிஞ்சுக்க” என்ற படி வந்து உட்கார்ந்தார்.

“அப்படிக்கா ,திரும்பி உங்க மச்சினனுக்கும் சொல்லுங்க.சும்மா நேத்த புடிச்சு, என்னைப் பேசிக்கிட்டே இருக்காருங்க ” எனச் சாரதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்து சுப்பிரமணி மேல் குற்றம் வாசித்தார்.

“நீ எதுக்குடா,தங்கச்சியைப் பேசின” எனப் பன்னீர், சுப்புவை வினவ, அவர் மனைவியை முறைத்தார்.ஏனெனில் கஸ்தூரி,விஜயன் திருமணநாளுக்குக் கோவைச்செல்வது பற்றித் தான் பிரச்சனையே, சாரதா,தாங்களும் போகலாமென்று சொல்ல, ஏற்கனவே ராமு போறான்,நாமளும் போனா,பன்னீர் தனியாக இருப்பான் எனக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சாரதா சபை ஏற்றுவதாக வழக்கம் போல் பவானி தான் சமாளித்தார்.

“மாமா,ஏற்கனவே, விஜயன் பாய்ஸாப்பும், கஸ்தூரி பாபியும் ,அவங்க வெட்டிங் ஆனிவேர்சரிக்கு இன்வைட் பண்ணிட்டாங்க. நாம எல்லாருமே போறோம், இந்த முறை நானும் வர்றேன், பன்னீர் அப்பாவும் வரேன்னு சொல்லிட்டாங்க, நீங்க அத்தையை , எதுவும் சொல்லாதீங்க” என்றபடி, ஆராத்தி தட்டை ஒவ்வொருவருக்கும் நீட்டினார், வழக்கம் போல்,அபரஞ்சியும், சாரதாவும் பவானியின் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவரக்ள், “சீக்கிரமே புருசனோட சேர்ந்து தீர்க்க சுமங்கலியா வாழோணும்” என வாழ்த்தினர். விஜயன் திருமண நாளை பற்றியே பேச்சு ஓடிக் கொண்டிருக்க, பவானியின் போன்இசைத்து, அழைத்தது.

புன்னகையோடு அதை எடுத்தவர், “விஜயன் பாயிஸாப் தான் கூப்பிடுறாங்க, பேசிட்டு வரேன்” என ஆராத்தி தட்டையும் எடுத்துக் கொண்டு , பூஜை அறைக்குச் சென்றார்.

வெகு நேரம் ஆகியும், பவானி வரவில்லையே, என யோசித்த சாரதா , பூஜையறையில் சென்று பார்க்க, அவரது போன் தரையில் காணொளிக் காட்சியைக் காட்டிக் கொண்டிருக்க, பவானி தரையில் அம்பாள் விக்ரகம் முன் விழுந்து ,

, " ஹே, ஆயி பவானி, என் குடும்பத்தை, இந்த இழப்பும் இல்லாமல் ஒண்ணு சேர்த்து வை. என் உயிரைக் கூடப் பலிதான் கொடுக்குறேன்" எனக் கைகளைக் கூப்பி அவர் மன்றாடிக் கொண்டிருந்தார்.

“பவானி” எனப் பதறியபடி வந்த சாரதா, “என்னமா, ஏன் கண்ணு அழுவுற ” என்றவர், பக்கத்திலிருந்த அலைபேசியில் ராஜன் வீட்டைக் காணவும் ,

“ஏனுங்க, இங்க வாங்க, அண்ணா, அண்ணி,மாமா “எனக் குரல் கொடுக்க, ஹாலில் இருந்தவர்களில் ராமு தான் முதலில் ஓடி வந்தார்.

பவானி இடது கையை அழுத்திக் கொண்டவர், “ ஒண்ணுமில்லை பா, ராஜ்,ராஜ்” என்றவர், அதற்கு மேல் எதுவும் சொல்லமாட்டாமல் அலைப்பேசியைக் காட்ட, அதில் அப்பாவும் மகளுமாக அழுது கொண்டிருந்தார்கள்.

“ஆமாம், ராஜா தான், ராஜாவுக்கு என்னமா “ என்றார் ராமு, அதற்குள் பவானிக்கு முகமெல்லாம் வேர்த்தது, வலிக்குதுப்பா, என்றபடி பூஜை அறையிலேயே மயங்கிச் சரிய, “பவானி, பவானி” எனப் பெரியவர்கள் அரற்றினர்.

“ராமு, தூக்குடா” எனப் பன்னீரும் ராமுவுமாக, ஹாலில் கிடந்த சோபாவுக்கு அவரைத் தூக்கி வர, சுப்பு, சுதாரித்தவர், ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வரும் போது, செய்ய வேண்டியவை என அறிந்து வைத்திருந்த அவசர சிகிச்சையைச் செய்தனர். அபரஞ்சி, டாக்டருக்கு போன் அடித்தார். வீட்டு வேலையாட்கள், பறந்து திரிந்தனர்,

சற்றே உணர்வு திரும்பிய பவானி, தான் எங்கே கணவரிடம் பேசாமலே சென்று விடுவோமோ எனப் பயந்து, போனை தேட, சமையல்காரம்மா கொண்டு வந்து கொடுத்தார், அவசரமாகப் போனை வாங்கியவர், அபரஞ்சி, சாரதா பேசாத இறுமா, எனத் தடுத்த போதும், கேட்காமல் ராஜுக்கு அழைத்தார்,

ராமசாமி வாசலில் சென்று நின்று விஜயனுக்கு அழைத்து விட்டு, அவர் எடுக்கவில்லை எனவும், பேரனுக்கு அழைத்தார், " தாத்தா, மாமா வீட்ல இருக்கோமுங்க" என அவன் விவரம் சொல்ல ஆரம்பிக்க, " அப்பா பக்கத்தில இருந்தான்னா குடு கண்ணு " எனப் பதட்டமாகப் பேசியவர், விஜயனிடம் , "

பவானிக்கு ஹார்ட் அட்டாக், வேர்த்து, வேர்த்து ஊத்துது . எனக்குக் கையும் ஓடலை. காலும் ஓடலை " எனப் பதறியபடிச் சொல்ல

" என்னப்பா சொல்றீங்க. " என்றவர் லைன்லையே இருங்கப்பா, என்றபடி தனது போனை கட் பண்ணி விட்டு, குன்னாரிலிருக்கும் பேமலி டாக்டருக்கு போன் செய்து, " சார் எமர்ஜென்சி, வசந்த விலாஷ் போங்க." எனவும், "ஒன தி வே" என்றார்." நான் மத்ததுக்கு ஏற்பாடு பண்றேன்" என விஜயன் பதட்டமாக, ராஜன் பைரவியிடம் பேச ஆரம்பித்து இருந்தார்.

அதற்குள் , ராஜுக்கு ஆதிராவின் ஆயியிடமிருந்து போன் வந்தது, ராஜன், மிகுந்த கோபத்துடன், “ஹலோ “ என ஆரம்பிக்க, மறுமுனையில், தீனமான குரலில், “ என்னை மன்னிச்சிடுங்க ராஜ், நான் உங்க வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது, ரஜ்ஜுமா உங்க பொறுப்பு, ஆதர்ஷ்” என்றவருக்கு அதற்குமேல் பேச இயலாமல் மூச்சு வாங்க, “ நம்ம, பிள்ளைகளைப் பார்த்துக்குங்க” என மயக்கமடைய, “பவானி “ எனச் சாரதாவும், அபரஞ்சியும் கத்த, டாக்டர் . உள்ளே நுழைந்தார்.

கைலாஷ், போனில் ‘பாரு, பாரு “ என அழைக்க, பன்னீர் அதை எடுத்துப் பேசியவர், “என் மகள் மயங்கிடுச்சுப்பா, கடவுளுக்குக் கண் இருந்தா இந்த மகளையாவது , காப்பாற்றிக் கொடுக்கட்டும்” எனப் பன்னீர் குரலில், ராஜன் குழம்பியபடி, “பன்னீர் மாமாவா பேசுறீங்க, பாரு, பாரு அங்க எப்படி” எனக் குழம்ப, நாயகம் போனை வாங்கிப் பேசினார

சௌந்தரி யாருக்கு என்னவெனப் பதற, " தங்கச்சிமா, மயங்கிக் கிடக்குதாம். நான் ஒரு கிறுக்கன்" எனத் தலையில் அடித்துக் கொண்டு, விஜயன் அழவும், ராஜன் நண்பனைச் சந்தேகமாகப் பார்க்க, சௌந்தரிக்குச் சாரதா அழைத்து விட்டார். " அக்கா, பவானி போன்ல பேசிட்டே இருந்தது. மயங்கிக் கிடக்குதுக்கா" என அழுதார்.

ராஜன், விஜயனைக் கொத்தாகப் பிடித்து, " டேய் விஜயா,இப்ப பேசினது பாரு, பன்னீர் மாமா எப்படி அதே போன்ல பேசுறார், அவர் மகள்னு சொல்றது யாரைச் சொல்றாரு. என் மேல சத்தியமா சொல்றா" எனக் கண்ணீரோடு கேட்க,

ஆதிரா ஒரு பக்கம், கௌரியைக் கட்டிக் கொண்டு " ஆயி" என அழுதாள். அவளைத் தாங்கியவர், டயனிங்கிற்கு அழைத்துச் சென்று

" ஆயிக்கு, ஒண்ணும் ஆகாதுடா. ஆயி, ஸ்ட்ராங் லேடில்ல" என ஆறுதல் சொல்ல, “நான் அன் லக்கி கேர்ள், பாபா கிடைச்சிட்டாங்கன்னு பார்த்தா, ஆயியை தொலைச்சுடுவேன் போல “ என அழுதவளிடம் வந்த ஆதர்ஷ்,

அவள் கண்ணைப் பார்த்து, “பைரவி பாய் போஸ்லே,பிறவியிலேயே போராட்ட குணத்தைக் கொண்டவங்க நம்ம ஆயி, மரணம் அவ்வளவு, சுலபமா அவங்களை நெருங்காது, ஆயி கும்பிடுற மாதிரி, ஆயி பவானிகிட்ட , இதைக் கடந்து வர்றதுக்கு அவங்களுக்கு சக்தியைக்கொடுக்கச் சொல்லி பிரார்த்தனை பண்ணு , நமக்கு நம்ம ஆயியை, மற்ற எல்லாரையும் விடப் பத்து மாசம் அதிகமா, அவங்க வயித்துக்குள்ளையே இருந்து உணர்ந்தவங்க, அவுகளுக்கு ஒன்னும் ஆகாது” என அவளைத் தனியே அழைத்துச் சென்று மற்றவருக்குப் புரியாமல் மராத்தியில் சொல்ல, அவனை அதிசயமாகப் பார்க்க, ஆம் எனத் தலையாட்டியவனின் தோளில் “பாவு” எனச் சாய்ந்து கொண்டாள் . இனி தான் தனி இல்லை என ஒரு தைரியம் தோன்றியது.

அவளையும் அழைத்துக் கொண்டு, ராஜனிடம் வந்தான் ஆதர்ஷ், அபிராம், ஆதிராவின் உள்ளங்கையில் அழுத்தி, தைரியம் தந்தான்.

நாயகமும்,சௌந்தரியும் கண்ணீர் விட்டபடி, “ டாக்டர் வந்துட்டாராம், பவானியை பார்த்துட்டு இருக்காங்க” என விஷயம் சொல்ல,

விஜயன் மீதே ராஜனின் பார்வையும் இருந்தது. " கைலாஷோட பாரு, ஆதிராவோட ஆயி, ஆதர்ஷ் சொன்ன பைரவி, நான் தங்கச்சிமான்னு சொல்றது, மாமா மருமகளேன்னு கூப்பிடுறது, எல்லாமே ஒரே ஆள் தான். குன்னூர் வசந்த விலாஷ் கேர் டேக்கர், பவானி . பைரவி பாய், கைலாஷ் ராஜ் போஸ்லே" என்றார் கண்ணீரோடு.

“ நாங்க மருமகளேன்னு கூப்பிட்டது,நிஜமாவே எங்க மருமகளைத் தானா “ என நாயகமும், “இந்தப் பொண்ணு ஒரு வார்த்தை என்கிட்டே உண்மையைச் சொல்லையே “ என மகனை ஒரு புறம் கட்டிக் கொண்டும் மறு புறம் பேத்தியையும் கட்டிக் கொண்டு அழுதார் சௌந்தரி.

ஆதர்ஷ் கொடுத்த தைரியத்தில்,”ஆயிக்கு ஒன்னும் ஆகாது ஆத்தா “ என்பதையே உரு போட்டாள் ஆதிரா.

ராஜனுக்கு , இன்றைய நாளின் அதிர்ச்சி தாங்காமல் , “ ஆசை காட்டி மோசம் பண்றதே ,இந்தக் கடவுளுக்கு வேலை “ தடுமாறவும் அவரைத் தாங்கிய ஆதர்ஷ், " பாஸ் சியர் அப். பயப்படாதீங்க. அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது." என அவரைத் தேற்றினான். “நீ யாருடா , ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும், துக்கத்தையும் சேர்த்து கொடுத்துருகியே” என அவர் கண்ணீர் விடவும்,

" பாஸ், முதல்ல உங்க பாருவை பாருங்க. மற்றெதெல்லாம் அப்புறம் தான்" என்றவன், அபிராம்,விஜயனோடு சேர்ந்து, ஏற்பாடுகளைக் கவனிக்க, ஆதர்ஷின் விரலசைவில் வேலைகள் நடந்தது.

குன்னூரில், பவானியைப் பரிசோதித்த மருத்துவர், " மைல்ட் அட்டாக் தான். செடேஷன் குடுக்குறேன். கோவைக்குக் கூட்டிட்டுப் போகலாம்" என்று சொல்ல, சற்றே ஆசுவாசம் அடைந்தனர். கௌரியும், ஆதிராவும் பூஜை அறையில் சென்று மனமுருகி வேண்டி நிற்க,”அந்த மருத மலைமுருகனை வேண்டிக்குவோம் கண்ணு, கண் கண்ட தெய்வம், உங்க அம்மா நல்லபடியா வந்துருவாக”எனத் தேற்றினார் கஸ்தூரி.

ஆதர்ஷ் ஸ்பெஷல் பர்மிஷன் பேரில், தனது ஹெலிகாப்டரில் குன்னூர் பறந்தான். கைலாஷ் தானும் வருவதாகச் சொல்ல, " இரண்டு பேருமே, இவ்வளவு எமோஷனலா பார்த்துக்கிறது நல்லது இல்லை. இங்கே ஹாஸ்பிடல்ல ரெடியா இருங்க. இரண்டு மணி நேரத்தில் உங்க பாரு, உங்க முன்னாடி இருப்பாங்க" என்றவன், அபிராமை அழைத்துக் கொண்டு மலைகள் ஊடான பாதையில், தனது தேர்ந்த பைலட்டின் திறமையை நம்பி,உயிர் தந்தவளின் உயிர் காக்கப் பறந்தான்.

பவானி தூக்க மருந்து கொடுத்திருந்ததால் மயக்கத்திலிருந்தார். ஆதர்ஷ் என்ன தான் கலகலப்பாகப் பேசி, எல்லாருக்கும் நம்பிக்கை தந்த போதும், பைரவியைப் பார்த்தவுடன் சத்தமில்லாமல் அழுதான். " உங்களை முதல் தடவையே இப்படித் தான் பார்க்கனுமா ஆயி , என்னைப் பார்த்ததில் தான் அதிர்ச்சியானீங்களா, நான் தான் உங்களுக்கு எமனாகிட்டனா "என மனதில் அழுது புலம்பியவன், அவர் கைகளைத் தொட,அதனை இறுக பற்றிக் கொண்டார் பைரவி.

அபிராம் , ஆதர்ஷ் இருவருமாகக் குன்னூரிலிருந்த பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு, கோவை வந்து சேர்ந்தனர்.

கைலாஷ், கோவையில் மனைவியின் சிகிச்சைக்காக, அந்த உயர் தரமருத்துவ மனையில் ,மருத்துவர்களிடம் பேசி தயாராகவே இருந்தார். கோவையின் முக்கியத் தொழிலதிபரான அவர் சொல்லி யார் மறுப்பார்கள். அதற்குள் குன்னூர் மருத்துவர் பைரவியின் நிலை குறித்துப் பேசியிருந்தார்.

ராஜன் முதலில் அதிர்ச்சியிலிருந்தவர் பின் அழுது அரற்றியவர், நேரம் செல்லச் செல்ல தனக்குள் இறுகி இருந்தார். யாருக்கும் அவர் அருகில் செல்ல கூடத் தைரியம் வர வில்லை, 

விமான நிலையத்துக்கு வந்து,அங்கிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்து பைரவியை ஐசியூவில் சேர்க்கும் முன் ஆதிரா, கௌரி,சௌந்தரி,நாயகம், விஜயன் குடும்பம் என எல்லாருமே பார்க்க, விஜயன் அழைத்த போதும்,ராஜன் பிடிவாதமாகப் பைரவியைப் பார்க்க மறுத்து விட்டார். 

ஒரு பொறுப்புள்ள கணவனாக , பைரவிக்காக, மருத்துவர்களிடம் பேசுவது, லீகல் பேப்பர்களில் கையெழுத்து போடுவது, அவர்களது பாதுகாப்பு, வசதி என அத்தனையும் பார்த்தவர், ,"நல்லபடியா வந்தாள்னா பார்த்துக்கறேன்,இல்லைனா, பழைய பாருவே என் மனசில இருக்கட்டும்." என மனைவியை நேரில் பார்க்க மட்டும் மறுத்தார் கைலாஷ் ராஜன்.

பாரு பிழைப்பாரா, கைலாஷ் நிலை என்ன.பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவு வளரும்.

No comments:

Post a Comment