Monday, 21 February 2022

யார் இந்த நிலவு-23

 

 யார் இந்த நிலவு-23

குன்னூர் வசந்த விலாசத்திலிருந்த பெரியவர்கள், கோவையிலிருக்கும் பாலநாயகத்திடம் அலை பேசியில் கான்பரன்ஸ் கால் போட்டு, ஆளுக்கொரு ஹெட்போனை மாட்டிக் கொண்டு, கலாட்டாவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

" மகனூட்டுக்கு, போகமாட்டேன், போகமாட்டம்னு பிகு பண்ண, இப்ப நீ போய்ப் பத்து நாளாச்சு, அங்கிருந்து இங்க வர்றதுக்கு மனசில்லையாக்கும்" என ராமசாமி ஆரம்பிக்கவும்

" ஏன்ரா , நான் எத்தனை நாள் என்ற மகனூட்டுல இருக்கேன்னு, நிமிஷத்துக்கு, நிமிசம் எண்ணிக்கிட்டே இருக்கியாக்கும். நீயும் வேணும்னா வா. வூட்டை பெரிசா கடலாட்டம் தான் கட்டிப் போட்டுருக்கான். அங்க இருக்கிற மாதிரியே , இங்கேயும் சேர்ந்து இருந்துக்குவோம்" எனப் பாலநாயகம் நண்பர்களைக் கோவைக்கு அழைத்தார்.

"எதே, போற போக்கைப் பார்த்தா பங்காளி, குன்னூருன்னு ஒரு ஊர் இருக்குதான்னு கேட்பியாட்டத்துக்கு. நீ அங்க போயி உட்கோர்ந்து இருக்கிறது பத்தாதுன்னு, எங்களையும் வரச்சொல்ற, எதுக்கு , இந்த  கெழடுங்களுக்கு வேற வேலை இல்லைனு, ராஜா ஒட்டுக்க,எல்லாரையும் நாடு கடத்துறதுக்கா. " எனச் சுப்பு கேலி பேசவும், "ரொம்பக் கடத்துவானில்லை, பிச்சு போடா மாட்டேன்" என்ற  நாயகம்,

" அட நானா வரமாட்டேங்கிறேன், உன்ர அண்ணிம்மா தான் , மகனுக்குப் பொண்ணு பார்க்கிறேன்னு, வூட்டையே ரெண்டாகிட்டு உட்கார்ந்திருக்கா. என்னையும் வாயைத் திறக்க விடுறதில்லை. இவிகளுக்கு இரண்டு அஸிடன்ட், மூணூ எடுபிடி, நாலு அல்லக்கை வேற இருக்கு, இது எல்லாம் பத்தாதுன்னு, எக்ஸ்பேர்ட் ஒப்பீனியன் சொல்றதுக்குன்னு குன்னூர்லருந்து வீடியோ கால் வேற" எனப் பாலா விவரித்ததில்,

" எங்குட்டு போனாலும், என்ற தங்கச்சி தனி ராஜ்ஜியம், தனித் தான் " என ராமு சிலாகிக்க, " ராஜா, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாப்லையே , அதுவே சந்தோஷம் தான்" என்றார் பன்னீர்.

" ம்க்கேன், நீ தான் மெச்சிக்கோணும், அவிக அம்மா சந்தோஷமா பொழுதை போக்கட்டும்னு, அவன் சும்மா  மண்டையை ஆட்டிட்டுப் போறான். பய வேற என்னமோ, ப்ளானப் போடுறான். என்னான்னு தான் எனக்குப் பிடிபடலை" என்றார் பாலா.

" அட, நான் சொன்ன டெக்னிக்கை யூஸ் பண்ணு, கூட  உட்கார்ந்து சரக்கடிச்சியான்னா, தன்னால தெரிஞ்சிட்டு போகுது" எனச் சிரித்தார் ராமு.

" வயசுக்கு தகுந்த மாதிரியாடா பேசுற, அதெல்லாம், என்ர மவன் ,நான் வந்ததிலிருந்து ஒழுக்கமா மாறிட்டானப்பா" எனப் பெருமை பேச, "ஹிட்லர் மூஞ்சியை வேற, யாரு சகிக்கிறதுன்னு திருந்தி இருப்பாப்ல " என ராமு உடைசலை வவிட்டார்.

" நான் உன்ர கூடவே தான் இருந்தேன், நீ என்னைக்காவது திருந்தினியாக்கும், எதோ என்ர  மவன் இந்த மட்டுக்கும் மரியாதை குடுக்கிறான்னு கண்டும்,காணாமலிருந்துக்க வேண்டியது தான் " எனப் பாலநாயகம் சொல்லவும், "மாமு, அப்படியே வீடியோ கால்போடு,,அந்தப் பக்கம் பேசறது நம்ம பாலா தானா,  இல்லை ,ராஜாவே குரலை மாத்தி பேசுறாப்லையான்னு பாப்போம்" என்றார் ராமு.

பாலா நாயகம் சிரித்துக் கொண்டவர், " அட நிஜமாத்தான், ஆபீஸ், வூடுன்னு இருக்காப்ள, பார்ட்டிக்கு கூட ரொம்பப் போறதில்லை. " என்றவர் சத்தத்தைக் குறைத்து, " ஆனாக்க ,பத்து மணியாயிடுச்சுனா , போன புடிச்சிட்டு போயிடுறானப்பா. " எனவும். " யாரு கூடப் பேசறாப்லையின்னு, நீ இதுவரைக்கும் துப்பறியாதையா இருக்க" எனச் சுப்பு கேட்டார்.

" அது தான் கொஞ்சம் வில்லங்கமாத் தெரியுது. ஒரு பேத்தி இருக்குதுன்னு சொன்னேன்ல, அதோட அம்மாகிட்ட பேசுறான்." என மகனைப் பற்றிக் காசிப் பேசினார் பாலா.

"ஏதோ, நல்ல மாற்றம் வந்தா சரி" என்றனர் நண்பர்கள்.

" அட நமக்கு நல்லது நடக்கனும்னு, அடுத்தவைங்க குடும்பத்தில குழப்பம் செய்யக் கூடாதில்ல. அசிங்கமா போயிட்டா" என அவர் ஞாயமாகக் கவலைப் படவும்,

" இப்பத்தான் உன்னை,நல்லவேன்னு சொன்னோம், அதுக்குள்ள  பாரு, உன்ர புத்தியை காட்டுற, உனக்கு, எதையுமே நேரா பார்க்கத் தெரியாதாக்கும், எல்லாத்தையும் குதர்க்கமாகவே தான் பார்க்கிறது . மாப்பிள்ளைக்கு என்ன இப்பத்தான் டீன் ஏஜா, " என ராமு நண்பனைத் திட்ட, மற்றவர்களும் மாற்றி, மாற்றி அறிவுரை வழங்கினர்.

" அட விடுங்கடா, விட்டா எனக்கு க்ளாஸ் எடுப்பானுங்க. வரம்பு மீறி ஒருத்தன் போயிடுவானோன்னு ஒரு அப்பனா நான் பயப்படுறது தான் தப்பு. வரம்பு மீறுறது தப்பில்லை" எனப் பாலா நொடித்தவர்,

" சரி, அதை உடு, பன்னீர், என்ன அடிக்கடி உடம்பு முடியலையிங்கிறியாம். மருமக சொல்லுச்சு. இங்க வந்து ஃபுல் செக்கப் பண்ணிட்டு போகலாம்ல. நம்ம பேமலி டாக்டர்கிட்டையே அப்பாயிண்மென்ட் வாங்குறேன்" என அழைத்தார் நாயகம்.

" இப்ப பரவாயில்லை மச்சி, மறுபடியும் சிரமமா இருந்தா வர்றேன்" எனப் பன்னீரும் பேசி முடிக்கப் போனை வைத்தனர்.

மற்றொரு புறம், அபரஞ்சியும் , சாரதாவும், காணொளியில் சௌந்தரியுடன் பேசிக் கொண்டிருந்தனர். ஆதிரா உதவியில், ஆத்தா தற்போது, பெண்களின் போட்டோவை , அலைபேசியில் ஷேர் செய்து, அதை பார்த்துக் கொண்டே தோழிகள் கருத்தைக் கேட்கவெல்லாம் பழகியிருந்தார்.

அண்ணி, இது மூக்கு சரியில்லை. இது குட்டப் பொம்பளையா இருக்கு. அக்கா , அது கிழவியாட்டமா இருக்கு. தெத்துப் பல்லு. ரொம்ப மாடர்னா இருக்கு.ராஜாவுக்கு சரியா வராது. என ஆளுக்கொரு நொட்டைச் சொல்லி, ராஜனுக்கான பெண் பார்க்கும் படலத்தை நடத்திக் கொண்டிருக்க, கோவையில் கௌரியும், குன்னூரில் பவானியும் ஒரு எரிச்சலோடே இவர்கள் லூட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆம், கௌரி மாஸி தான். கைலாஷிடம் சொன்னது போல், அடுத்த நாளே வந்து விட்டார். அதுவும் சத்தியனால் அழைத்து வரப்பட்டவர், ஹாலில் ஒரு பதட்டத்தோடே அமர்ந்திருக்க, காலை ஏழு மணிக்குக் கலைந்த சிகையும், சிவந்த கண்களுமாக, ராஜனைப் பார்த்தவர், இரவு முழுதும் மகளைக் காவல் காத்ததைப் புரிந்து கொண்ட போது, உருகித் தான் போனார். இவ்வளவு அற்புதமான மனிதரோடு, அவருடைய தீதியும், அன்பு ஆதிரா முலேவும் சேர்ந்து வாழக் கொடுப்பினை இல்லாததை நினைத்து மனம் நொந்தார்.

கீழே வந்தவர் தனது அம்மாவையும் எழுப்பி ,சேர்ந்தே கௌரியைப் பேட்டிக் கண்டனர். பாலநாயகமும் வந்துவிட, குடும்பமே சேர்ந்து, கௌரியைக் கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

அவரும் சளைக்காமல், "நான் விசுவாசமான வேலைக்காரி. நீங்கள் கேட்கிற எல்லாக் கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாத நிலையில, நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவ. ஆனால் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம், ஆதிரா நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. எங்களைப் பூரணமாக நம்பலாம்" என அவர் உறுதி தரவும்.

" அந்தப் பொண்ணைப் பார்க்கவுமே, என்ன எப்படின்னு, நாங்க முடிவு பண்ணிட்டோம். நீங்க சர்டிவிகேட் தரணுமின்னு இல்லைங்க அம்மணி. " எனச் சௌந்தரி பேத்திக்காகப் பேச, நாயகம், " உங்க பொண்ணு தான், நின்ன கால்ல கிளம்போணோம்னு பிடிவாதம். உங்க ஐடியா என்ன" என வினவினார் .

கௌரி தயக்கமாக, " நான் மகளைப் பார்க்கிறேனுங்க.நீங்கள் இங்க தங்க அனுமதிச்சிங்கன்னா, நான் ஆதி முலேவை சமாதானப் படுத்திடுவேன்" என மெல்லச் சொல்லவும்.

கைலாஷ், " குட் அதையே செய்ங்க. நேத்து ராத்திரியே, ஆதிராகீ ஆயிக்கிட்ட பேசிட்டேன். கௌரி மாஸி வந்தா, மகளைச் சமாளிச்சிருவீங்கன்னு சொன்னாங்க. நீங்க ரஜ்ஜும்மாவை சமாளிங்க. வேற ஆப்சனும் கிடையாதுங்க. ஏன்னா நான் இங்கிருந்து என் மகளை வெளியே விடுறதாவும் இல்லைங்க " எனப் படபடவெனத் தன் முடிவைச் சொல்லவும், ' இவர் தீதிட்ட பேசினாரா' எனக் கௌரி அதிர்ந்தார் .

சத்தியனை அழைத்து, " இவிகளை ஆதிரா ரூம்புக்கு கூட்டிட்டு போ. தங்கற வசதியும் செஞ்சு கொடுத்திடு. அம்மா, மற்றதை நீங்க பார்த்துக்குங்கம்மா" எனத் தனது அறைக்குச் சென்று விட்டார்.

சௌந்தரி, கௌரியை மேலும் சில கேள்விகள் கேட்டு, ஆதிராவின் அறைக்கு அனுப்பி வைக்க, நாயகம் சிறு யோசனையோடே கௌரியை பார்த்திருந்தார்.

கௌரி ஆதிராவின் அறைக்கு வந்தவர், " உரிமையான இடத்துக்கு வந்தும், உங்க ஆயி மாதிரியே ஏன் முலே விட்டுட்டு ஓடனும்னு நினைக்கிற" என அவள் முகத்தை வாஞ்சையாகத் தடவ, ஆதிரா கண் முழித்தாள். எதிரே கௌரியைப் பார்க்கவும், பழைய நினைவில் " மாஸி, இன்னும் கொஞ்சம் நேரம்" எனக் கவிழ்ந்து படுத்துச் செல்லம் கொஞ்சினாள்.

" முலே, நீ எங்க இருக்க, நான் எப்படி வந்தேன். நேத்து என்ன ஆட்டம் ஆடின எதாவது ஞாபகம் இருக்கா" எனக் கேட்கவும், வாரி சுறுட்டி எழுந்தவள், " மாஸி" எனக் கௌரியைக் கட்டிக் கொண்டு, கலங்கினாள்.

" மாஸி, இங்கிருந்து நாம போயிடுவோம். இல்லைனா பாபாக்கும் ஆஃபத் " என நேற்றைய பல்லவியைத் தொடர, அவளை அமைதிப்படுத்தி, சூழலை புரிய வைத்தார்.

" மாஸி, பாபாக்கிட்டையே இருந்துக்கிட்டு, அவர் முல்கி தான் நான்னு சொல்லிக்க முடியாமல், எவ்வளவு கஷ்டம் தெரியுமா" எனத் தன் தகப்பனை அறிந்த அந்த வரலாற்றையும் அவள் சொல்லவும், கௌரி அவளை அணைத்து ஆறுதல் சொன்னார் . பின் திடீரென

"முலே, உன் பாபா, நேத்து ஆயிக்கிட்ட பேசிட்டேன்னு சொன்னார். ஆயி குரலை அடையாளம் கண்டுக்கலையா" எனப் பதட்டமாகக் கேட்கவும், ஆதிராவுக்கும் குழப்பம் தான்.

" மதியமும் , அவங்க குரலை அடையாளம் கண்டு பிடிக்கலை. " என எதையோ யோசித்தபடிச் சொன்னவள், பைரவிக்குப் போன் போட்டாள்.

பைரவி, முதல் ரிங்கிலேயே எடுத்தவர், " ரஜ்ஜும்மா நல்லா இருக்கியா. க்யா கர்தி ஹை" என ஒரு பிடி பிடிக்க, " உங்களுக்கென்ன, சொல்லுவிங்க" என அவளும் தன் மனக்குறையைக் கொட்டினாள். கௌரி எச்சரிக்கையாக, கதவை அடைத்து விட்டு வந்தார்.

" மாஸி, ஆயி பேசனுமாம்" என நீட்டவும், " தீதி" எனப் பேச ஆரம்பித்தவர், பைரவியின் க்ராஸ் கேள்விகளுக்கெல்லாம், ஏற்கனவே ஆதர்ஷ் சொல்லிக் கொடுத்தபடி, பொய்யும் சொல்லாமல், முழுதாக மெய்யையும் சொல்லாமல் மறைத்தார்.

கௌரி ," தீதி, ஜீஜுசாப் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. நம்ம ஆது முலே யாருன்னு தெரியாமலே இவ்வளவு பாசம் வச்சிருக்காங்க. நீங்கள் உங்க தயக்கத்தை விட்டுட்டு, அவங்க முன்னாடி வாங்க" என வேண்டுகோள் விடுக்கவும்.

" எனக்கு, பழைய பயம் போய், புதுப் பயம், என்னைப் பார்க்கிற அதிர்ச்சி ல எதுவும் ஆகிடுமோன்னு பயம் வருது கௌரி" எனத் தனது மனதை பகிர்ந்தவர், நேற்று சமாளித்ததையும் சொன்னார். மீண்டும் ஆதிராவுக்கு அறிவுரையும், மண்டகப்படியும் கொடுத்துப் போனை வைத்தார்.

இவர்கள் பேசி முடிக்கவும், கதவு தட்டவும் சரியாக இருந்தது. ஆதிரா யாரையும் பார்க்கப் பயந்து, குளியலறைக்குள் ஓட, கௌரி தான் கதவைத் திறந்தார். வாசலில் நின்ற அபிராம், " ஆதிரா இல்லைங்களா. நீங்க யாரு. மாமா தானுங்களே இங்க இருந்தாரு. " எனக் கேள்வியை அடுக்கி விட்டு, அவர் பதிலுக்கும் காத்திராமல், " ஆரா" என அழைத்துக் கொண்டே, அறைக்குள் வந்தான்.

இவ்வளவு உரிமையாக வந்தவன், யாரென யோசிக்கும் முன், முகத்தைத் துடைத்தபடி ஆதிரா வந்தாள்.

" ஆரா பேபி" என அவள் அருகில் சென்றவன், " ஆர் யூ ஓகே" எனக் குனிந்து அவள் முகம் நோக்கிக் கேட்க, அவள் " நேத்து என்ன செஞ்சிங்க" எனக் கோபித்தாள்.

" நான் என்ன செஞ்சேன், செஞ்சதெல்லாம் உன் பாபாதான். நைட் இங்க தங்குறேன்னு சொன்னவனையும், தொறத்தி அடிச்சு, வூட்டுக்கு அனுப்பிவுட்டாரு" என அவர்கள் சம்பாஷனையிலேயே, ஓரளவு அவனைப் பற்றி யூகித்த கௌரி, தன் இருப்பைக் காட்ட செருமவும்,

 " கௌரி மாஸி" என அவனுக்கும், " ராம் சார், விஜயன் அங்கிள் மகன், இவர்கிட்ட தான், நான் ட்ரைனியா இருக்கேன்" அவனைக் கௌரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

" அவ்வளவு தான" என அவளை முறைத்தவன், " மாஸி நான் சொல்றேன் கேளுங்க" என ஆதியோடு அந்தமாக, தான் ஆதிராவை எவ்வளவு விரும்புகிறேன் என்பதைப் பிரசங்கமே செய்து முடித்தான்.

" மாப்பிள்ளை, போதும் உன்ர புராணத்தை நிறுத்து" என குளித்து முடித்து வேலைக்குச் செல்ல தயாராகி வந்திருந்தார் ராஜன்., " மாஸிம்மா" எனக் கௌரியை அழைக்கவும், அவர் நானா எனப் பதறினார்.

" ஆமாம், நீங்க தான். இந்த வூட்டு இளவரசிக்கு, அப்பனூட்டுல இருக்கிறது பிடிக்கலையாட்டத்துக்கு. அவிகளுக்கு, பிடிக்கலைனாலும், அவிக ஆயி வர்ற வரைக்கும், இங்க தான் இருக்கோணும்னு சொல்லிப் போடுங்க. அவிக ஆயிக்கிட்டையும் பேசிட்டேன். வேற ஆப்சனே கிடையாது. " என்றவர்.

" பெத்த அப்பனா இருந்தா, பொண்ணைக் கூடக் குறைய ஒரு வார்த்தை பேச மாட்டானா. அதுக்காக வீட்டை விட்டு போயிடுவாங்களாக்கும். " என அவர் ஆதிராவைப் பார்க்காமல் முறைத்து நிற்க, " பாபா" எனக் கண்ணீர் வழியே, அழுது கொண்டே ஆதிரா, அவர் மார்பில் சாய்ந்து கட்டிக் கொண்டாள். கைலாஷ்கும் உணர்வுப் பெருக்கில் கண்கள் கலங்கியது.

" பாபா, ஐயம் சாரி. அஜ்ஜோ, ஆத்தால்லாம் இருக்காங்க. என்னால அவங்களுக்கும் கஷ்டம் வந்துருமோன்னு பயந்திட்டேன்" என அவள் அழவும்.

" உன் பாபாவை மீறி, யாரும் உன்னை நெருங்க முடியாது. இந்த ராஸ்கோல் கூட நெருங்க முடியாது" என அபிராமைப் பார்த்துச் சொன்னவர், " இவன் தான, என்னை உன்கிட்ட போட்டுக் கொடுத்தான்." என அபிராமை முறைத்தவர், தான் சொன்னதற்கான விளக்கத்தையும் சொல்ல வந்தார்.

" நஹி சுனூங்கி. நீங்க என்னை எதுவேணாலும் சொல்லலாம்" எனச் சமாதானம் ஆனாள்.

" அது" என்றவர், " மாஸிமா, என் மகள் நைட்டும் சரியா சாப்பிடலை. அதை வயிற்றை நிறைச்சு விடுங்க" எனச் சொல்லவும், " இதோ சாப்" என அவளைக் கவனிக்க ஆரம்பித்தார்.

கீழே வந்து, தாத்தா, ஆத்தாவிடமும் சமாதானம் ஆனவள், தாத்தாவின் வம்போடு ஆத்தாவின் மேற்பார்வையில், மாஸின் கவனிப்பில் சாப்பிட்டாள்.

அன்று முதல், இந்தப் பத்து நாட்களாக, கௌரி அந்த வீட்டின் ஓர் அங்கமானார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தன் இயல்பில், ஆதிராவை எப்போதும் போல் கவனிக்க, அதைப் பார்த்த வீட்டினருக்கு, கைலாஷ் முதல் அனைவருமே, கௌரி ஆதிராவை ஓர் இளவரசியைப் போல் தாங்குவதை உணர்ந்தார்கள்.

ஆதிரா வழக்கம் போல் அலுவலகத்துக்குச் செல்ல, அதன் பிறகான நேரத்தை, சௌந்தரிக்குச் சேவை செய்வதில் கழித்தார்.

பாலநாயகம், அவரோடு பேச்சுக் கொடுத்ததில், பவானிக்கும், கௌரிக்குமான ஒற்றுமைகளை ஒப்பிட்டார். அதிலும் சிலவகை மராட்டிய பலகாரங்களை, செல்லியின் உதவியோடு, கௌரி செய்து தர, " என் மருமகள் இல்லாத குறையை நீ தீர்த்தட்டம்மா" எனச் சொல்ல, சௌந்தரிக்கு, பவானியைத் தான் குறிப்பிடுகிறார் என்பது புரிந்த போதும், தன் மகனுக்கு இந்தக் கௌரியை ஏன் மணமகளாகக் கேட்கக் கூடாது என்ற யோசனையும் ஓடியது.

ஏனெனில் மதியம் சாப்பிடும் நேரம், எவ்வளவு சொன்னாலும், கௌரி இவர்கள் அனைவருக்கும் பரிமாறி விட்டே சாப்பிடுவார். அதிலும் கைலாஷின் ருசி அறிந்து, அவரறியாமலே அவர் தட்டை நிரப்ப, ஆதிராவுடனான பேச்சுச் சுவாரஸ்யத்தில் அதைக் கவனிக்காமலே கூட ஒரு கைப்பிடி உணவு உண்டு எழுவார். 

ஒரு முறை, பவானி மற்றும்,அபரஞ்சி, சாரதா மூவரிடமும் ராஜனுக்குப் பெண் பார்ப்பதைப் பற்றிப் பேசியவர், கௌரியையும் ஒரு ஆப்சனாகச் சொல்ல, அன்று பவானிக்கு பொசுபொசுவென வந்தது.

" அத்தை, உங்கள் மகனுக்கு மனைவியைத் தேடுறீங்களோ இல்லையோ, எனக்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் தேடுறீங்க" எனவும், " ஆமால்ல, இது கூட நல்ல ஐடியா. பவானி கிளம்பவும், கௌரியைக் கொண்டு போய்,குன்னூரில வச்சுக்கலாம்" என ஒரு பக்கம் யோசித்தார் சௌந்தரி.

" சௌந்தி, உனக்கு மருமகள் வர்றது முக்கியமா, உன்ர மகனுக்கு மனைவி கிடைக்கிறது முக்கியமா யோசிச்சுக்க " என்றார் நாயகம்.

கைலாஷ் இப்பொழுதெல்லாம், ஏதாவது ஒரு காரணம் தேடி, ஆதிராவின் ஆயியிடம் போனில் பேச ஆரம்பித்து இருந்தார்.

ஒரு நாள் பைரவி வேகமாக, " க்யூங் ஜீ, அதுதான் உங்க அம்மா , உங்களுக்கு விவாகத்துக்குப் பொண்ணு தேடுறாங்களே, கௌரியை கூடப் பார்க்கிறாங்களாம், அவகிட்ட பேச வேண்டியது தானே. ஆதிரா கீ ஆயிக்கிட்ட ஏன் பேசனும்" எனக் கோபித்தார்.

ஹாஹாவெனச் சிரித்த ராஜன், " இது வேறையா. ஆனால் அதுக்கு எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது, ஆதிரா கீ ஆயி . ரஜ்ஜும்மா வை நான் தத்தெடுத்தா, என் மகளைக் கவனிக்க ஒரு ஆள் வேணும். உண்மையில் உங்கள் தங்கச்சி, ரஜ்ஜும்மாவை நல்லா பார்த்துக்கிறாங்க. அவங்களும், சிங்கிள் தான், யோசிக்கலாமுங்க , தப்பில்லை " என எரியும் ஹோம குண்டத்தில்,ராஜன் நெய்யாய் ஊற்ற,

" ஓகே, ஃபைன், வெரிகுட். நல்லா உட்கார்ந்து யோசிங்க. நான் போனை வைக்கிறேன்" என அலைபேசியை அந்தப் பக்கம் பைரவி தூக்கிப் போட, " அம்மாடியோவ். இந்தம்மா புருஷன் பாவம் தான்" எனச் சிரித்துக் கொண்டார் ராஜன்.

நேற்று விஜயன் வேகமாக , கைலாஷின் அலுவலகத்துக்குள் வந்தார். முக்கியமான ப்ரசன்டேஷன், நடந்தது. கைலாஷ், பையர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். ஆதிரா, அபிராம் இருவருமே குறிப்பு எடுத்துக் கொண்டு, அவருக்கும் உதவி கொண்டிருக்க, நண்பனின் முகத்திலிருந்தே, ஏதோ முக்கியமான விசயம் என யூகித்தவர், அபிராமை தொடரச் சொல்லி விட்டு, மற்றொரு அலுவல் அறைக்கு அழைத்து வந்தார்.

" ராஜா, நீ அன்னைக்கு, ஆதர்ஷ்னு ஒருத்தனைப் பத்திக் கேட்டியே. அவனைச் சோட்டி ராணி வாரிசுன்னு சொல்றாங்கன்னு கேட்டியே . நேற்று சோலாப்பூர் பீபீ மில்ஸ் போட் மீட்டிங்ல, வீடியோ கான்ப்ரன்ஸ் ல பேசின ரமாபாய், , ஆதர்ஷை, தன் தத்துப் பிள்ளைனு அறிவிச்சு இருக்காங்க" என விவரம் சொல்லவும். கைலாஷ்க்கு அப்பட்டமான அதிர்ச்சி. அப்படியே சேரில் அமர்ந்தவர்,

" என்னது ரமாபாயா, சாஸும்மா , உயிரோட இருக்காங்களா. அப்பப் பைரவி, என் பாரு" என அடுத்துக் கேட்கவும் இல்லாமல் பேச்சை நிறுத்தியவர் மலங்க மலங்க முழிக்க," ராஜா, ராஜா ப்ளீஸ், சமாளிச்சுக்க. " என நண்பனின் தோளைத் தட்டி, தண்ணீர் கொடுத்து, ஆறுதலாகப் பேசியே அவரை நடப்புக்குக் கொண்டு வந்தார் விஜயன்.

" நிஜமாவா. அவன் வாரிசுன்னா , எப்படிடா. இந்தம்மா அடாப்ட் பண்ணிக்கிட்டாங்களா" எனச் சந்தேகமாகக் கேட்கவும்.

" இருக்கும் போலடா. ராஜ குடும்பத்தில் இதெல்லாம் சகஜம். ரமாபாய், தஞ்சாவூர்ல பிறந்தவங்க. அவங்க தாய்வழி மரபா கூட இருக்கலாம். " என நிஜமான தன் அனுமானத்தைச் சொன்னார் விஜயன். ஏனெனில் ஆதிரா, கைலாஷ், பைரவியின் மகள் என்பது தான் அவருக்குத் தெரியுமே.

" விஜயா, ஆனால், நீ ஆதர்ஷை பார்த்தது இல்லையே, அவனைப் பார்க்கவும், எனக்கு என்னமோ செஞ்சுதுடா. ஒரு வேளை அவன் பாருவோட மகனா. அன்னைக்கு அந்த டிடெக்டிவ் சந்தேகமா சொன்னார். இன்னைக்குச் சாஸூம்மாவே சொல்லியிருக்காங்களே. ஒரு வேளை, ஆதர்ஷ் என் மகனா" என அவர் விஜயனைக் கேட்டு நிற்கவும்,

" எனக்குத் தெரிஞ்சு, அவன் உன் மகனா இருக்க வாய்ப்பில்லைடா. பாலாஜி ராவ், ராதா பாய்னு அவன் பேரன்ட்ஸ் பெயர் சொல்றாங்க" என விஜயன் விளக்கம் சொன்னார்.

கைலாஷ், வேகமாக, அந்த டிடெக்டிவ், ரஞ்சனுக்குப் போன் போட போனார். " அவர் தான், சார்க்கிட்ட பக்குவமா சொல்லுங்கன்னு என்னை அனுப்பி விட்டார்" என விஜய ரங்கன் உண்மையை உடைத்தார். இவர்கள் இருந்த அறைக் கதவு தட்டப்பட்டது. கைலாஷின் உதவியாளர், சம்பத் உள்ளே வந்தவர்.

" சார், ஆதர்ஷ் ராஜே போஸ்லே, உங்களைச் சந்திக்க, அப்பாயிண்மென்ட் கேட்கிறார், அவர் செகரட்டரி பேசினார் " என்றார். நண்பர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். " அப்பாயிண்மெட்ட் கொடுங்க" என்றார் கைலாஷ்.

" சார், அதே போல, மஹந்த் ராய் போஸ்லேங்கிறவரும் உங்க அபாயிண்மென்ட் கேட்டிருக்கார். யாருக்கு முதல்ல அப்பாயிண்மென்ட் கொடுக்க" எனச் சம்பத் கேட்க,

" இவன் யாரு" எனக் கைலாஷ் விஜயனைக் கேட்டார், " ஆனந்த் ராய் போஸ்லேயோட மகன். உனக்கு ஒண்ணு விட்ட மச்சான் மகன். ஆப்போஸிட் பார்ட்டி " என விளக்கிய விஜயன்,

" சம்பத், இரண்டு பேருக்குமே, இப்போதைக்கு அப்பாயிண்மெண்ட் கொடுக்காதீங்க. சார் செட்யூல் டைட்டுனு சொல்லிடுங்க. " என்ற விஜயன், சம்பத் தயங்கியபடியே நிற்கவும் ராஜனைப் பார்க்க, ஏதோ யோசனையில் உழன்ற ராஜன், " சார் சொல்ற மாதிரியே செஞ்சிடுங்க" என்றார்.

"ராஜா, ரஞ்சன் விஷயம் என்னனு இன்னும் தீர விசாரிக்கட்டும், அது ஏன்,இரண்டு பார்ட்டியுமே உன்னைத் தேடி வர்றங்கன்னு விசாரிச்சுக்குவோம்" என்றார் விஜயன்.

"அவர் என்ன கண்டுபிடிக்கிறது, நானே சொல்றேன், நீ மறந்துட்டியா, சட்டப்படி, பைரவியோட பங்கு எனக்குத் தான் வரும், ஏன்னா எங்க கல்யாணம் சட்டப்படி ரிஜிஸ்டர் ஆகியிருக்கு." என்றார் ராஜன்.

நிலவு வளரும்.



No comments:

Post a Comment