Monday, 14 February 2022

யார் இந்த நிலவு.18

18.யார் இந்த நிலவு.

 கே ஆர் மில்ஸின் மாளிகை , இன்று தான் வீடு என அழைக்குமளவு, ஆளும் பேருமாகப் பேச்சுக் குரலோடு, சலசலத்துக் கொண்டிருந்தது. மதிய உணவை அப்பா, அம்மா, மகள், மருமகன் என அனைவரோடுமாகச் சாப்பிட்ட கைலாஷ் ராஜன், அந்த மன நிறைவிலேயே, வெளியே செல்லவும் மனமின்றி ஹாலில் அமர்ந்திருந்தார்.

மகன் வீட்டில் இருக்கவும், சௌந்தரியும், தனது உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் மகனின் அருகில் அமர்ந்து, அவர் கையைப் பற்றிக் கொண்டு அவரது உடல் நலத்தை விசாரித்துக் கொண்டிருக்க, பால நாயகம் புதிதாகக் கிடைத்த பேத்தியை அறியும் முயற்சியில் அவளோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அபிராம், தாத்தாவின் கேள்விகளையும், பேத்தியின் சாமர்த்தியமான பதிலையும் ரசித்துக் கொண்டிருந்தவன், நடுநடுவே, ஆதிராவை வம்பிழுத்து மாட்டி விடவும் செய்தான்.

" அப்ப, நீ யாருன்னு சொல்ல முடியாதுங்கிற, அப்படித் தான கண்ணு" எனப் பெரியவர் கேட்கவும்,

" அது தான் சொன்னேனே அஜ்ஜோ, டெக்ஸ்டைல்ஸ் படிக்கிறேன், பாபாசாப் கம்பெனிக்கு ட்ரெயினியா வந்திருக்கேன். " என அவள் மழுப்பலாகப் பதில் தந்தாள்.

" அது சரி, அது தான் ஏற்கனவே சொல்லிப் போட்டியே, முகம் இலட்சணமா, பெரிய வூட்டில பொறந்த புள்ளையாட்டமா இருக்கியே, ஆயி, அப்பன் பேரெல்லாம் சொல்லமாட்டியாக்கும்" என அவரும் விடாமல் கேட்கவும், முன்பு இதே கேள்வியைக் கேட்ட, அவரது மகனிடம் சொன்ன பதிலைக் கூடச் சொல்ல முடியாமல், தன் தாத்தாவிடமே அவர் பேத்தியென அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத தன் விதியை எண்ணி நொந்தவள், பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவள் செய்கையே, அவருக்குச் சந்தேகத்தைத் தர, மகன் " பாபா" என்ற அழைப்பிலேயே உருகி, ஏமாந்து போவானோ, என ஒரு கணம் எண்ணியவர், ஆதிராவின் முக வேதனையைக் கண்டு, அப்படி இருக்காது என்ற முடிவுக்கு வந்தார். ஆனாலும், மகனும், இந்தப் பொண்ணுமாகச் சேர்ந்து எதையும் மறைக்கிறார்களோ. ராஜன் அழைத்து வந்தானெனில், இது யாராக இருக்க முடியும் எனச் சிந்தித்தவர், கிளம்பும்முன் ராமுவும், பவானியும், அவர் மகனின் வாழ்க்கையிலுள்ள ரகசிய பக்கங்களை அறிந்து வராகிச் சொன்னதை நினைவு கூர்ந்தவர், இந்த ஆந்திராவுக்கு, தன மகனுக்கும் ஏதோ சம்மந்தம் உண்டு என உறுதியாக நம்பினார். அதனால் அடுத்து விவகாரமாக

" வயசுக்கு வந்த புள்ளையை, பொறுப்பில்லாமல் யார் விட்டிலையோ விட்டுட்டு, உன் அப்பனும், அம்மாளும் என்ன செய்யிறாங்க. உனக்குத் தாத்தா, பாட்டி குடும்பம் எல்லாம் இருக்குதா, இல்லையா" என்று கேட்டார்.

அபிராம், ஆதிராவைப் பார்த்துக் கொண்டே " பொண்ணு தேவதையாட்டமாத் தான் இருக்குது, அதுக்காக வானத்திலிருந்த இறங்கியா வரும். அதுக்கும் உங்களையாட்டமா லொள்ளு புடிச்ச தாத்தாவெல்லாம் இருப்பாங்கல்லிங்க. அதுனால தான் சொல்ல முடியலையோ என்னமோ" என அவளைத் தாங்கிப் பேசினான்.

" நீ எதுக்கு, அந்தப் பொண்ணுக்கு வக்காலத்து வாங்குற அபு கண்ணா . வந்தாச்சு, பெரியவிகளைப் பார்த்தாச்சு, சாப்பிட்டாச்சு, பொழப்பை பார்க்கக் கிளம்பு. நான் ஆதிராகிட்ட விசாரிச்சுக்குறேன்" எனப் பாலநாயகம் பேரனை விரட்டம்.

" ஐயோ அப்புச்சி, நான் அதுக்குத் தான் நிக்கிறேனுங்க. ஆதிரா, நேத்து ஒரு டிசைன் வரைஞ்சோம்ல, அதுக்கு ஏத்த மாதிரி மிசினை செட் பண்ணனும் தாத்தா, ஆதிராவும் அதைப்பழக்கணுமின்னு தான் வந்தேன், " என்றவன் ஆதிராவிடம், " ஆத்தாவை பார்த்திட்டேயில்ல , நீயும் என்னோட கிளம்பு " என அபிராம் அவளையும் கிளப்ப முயன்றான்.

" அபு கண்ணா, உன்னைக் கிளம்பச் சொன்னா, நீ ஆதிராவையும் சேர்த்து கிளப்புறியே என்ன விசயம். உன்ற மாமன் இதைத் தான் சொல்லிக் கொடுக்கிறானாக்கும்" என மகனையும் சேர்த்துக் கேள்வி எழுப்பினார் பாலநாயகம், ஆதிராவிடம் திரும்பவும் ,” சொல்லு கண்ணு, உன்னைப் பத்தி, பாதி விவரம், காத்து வாக்கில வந்துச்சு, நடு ராத்திரியில் யார்கிட்டையோ இருந்து தப்பிச்சு வந்து கார் டிக்கியில் ஏறுனியாமாம், உன்னை நடுத் தெருவில விட்டுட்டு அப்படி என்ன , உன் அப்பனும் ஆத்தாளும் பொழப்பு நடத்துறாங்க.வூட்டுல பெரியவிங்க,இருக்காங்களா இல்லையா “ என அவர் கடுமையாகவே கேள்விகேட்கவும்,

அதில் தாக்கப்பட்டவளாக, அதிர்ந்து அவரைப் பார்த்த ஆதிரா," உங்க வீட்டில வந்து இருக்கேன்கிறதுக்காக, என்னோட ஆயி, பாபாவைப் பற்றித் தப்பா பேசாதீங்க அஜ்ஜோ. உங்களை மாதிரி கடூஸா, எனக்கும் ஒரு தாத்தா இருக்கார். என்னோட லிபி, நல்ல ஆயி, பாபாவுக்கு மகளாய் பிறந்தும், வெளிப்படையா சொல்லிக்க முடியாத அன் லக்கி பொண்ணு நானு" என ரோசமாக அவரை முறைத்தவள் , சிவந்த முகத்தோடு, வேறு புறம் திரும்பிக் கொண்டு, தன் எதிர்ப்பை அவரிடம் காட்ட, அவளின் இந்தச் செய்கையே, கைலாஷ் போல் இருப்பதாக அவருக்கு மனதில் சந்தேகத்தை அதிகப் படுத்தியது.

ஆதிராவிடம் ஒரு பார்வை பதித்திருந்த கைலாஷ், "ரஜ்ஜும்மா, நான் தான் உன்னை அடாப்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்னுல்ல கண்ணு. எனக்கு மகள்னா, அவருக்குப் பேத்தின்னு தைரியமா சொல்லு, அதை விட்டுட்டு, அன்லக்கி, அது இதுன்னு சொல்லக் கூடாது" எனக் கைலாஷ் மகளைக் கண்டித்தார். அதையும் பெரியவர் மனதில் குறித்துக்கொண்டார்.

உணர்வு மிகுதியில் ஆதிராவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அதில் வெகுண்ட அபிராம், " அப்புச்சி, அது தான் மாமாவே சொல்லிப் போட்டார்லைங்க. ஆதிரா உங்க எல்லாருக்கும் பேத்தி தான். சும்மா க்ராஸ் கொஸ்டீன் பண்ணாதீங்க" எனத் தன் பங்குக்கு அவரிடம் சண்டையி

" அட சின்னப் புள்ளைக் கிட்டப் போயி, என்னத்தை விசாரணை பண்ணிகிட்டு இருக்கீங்க. அந்தப் புள்ளை யாருன்னு தெரிஞ்சு, என்ன செய்யப் போறீங்க, உங்கள் சொத்தையா எழுதி வைக்கப் போறீங்க. நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம், கம்முனு இருடா ஆது கண்ணு" எனச் சௌந்தரி கணவரைத் திட்டி, பேத்தியைச் சமாதானப் படுத்தினார்.

" அடடா, ஒரு கேள்வி கேட்க விடுறீங்களா. அந்தப் புள்ளை முகம் தெரிஞ்ச சாயலா இருக்கே, நம்மளுக்கு உறவுமுறையா வருமோன்னு தான் கேட்டேன். அது கூடக் கேட்க கூடாதுன்னா, நான் என் வீட்டுக்கு கிளம்புறேன்" என நாயகம் ஒரு பக்கம் முறைத்தார். சௌந்தரியும், கைலாஷும் ஆட்சேபனையாகப் பார்க்கவும், அபிராம் தாத்தாவோடே சண்டைக் கட்ட, அவரும் சண்டையை விடுவதாக இல்லை.

ஆதிரா, சட்டெனப் பாலநாயகம் முன் கை கூப்பி, " என்னால, நீங்க கோவிச்சுக்கிட்டு போக வேண்டாம். நான் யாருன்னு சொல்லிக்க முடியாத நிலமையில தான் என் குடும்பம் என்னை வச்சிருக்கு. என் மேல சந்தேகப்படுறீங்கன்னா, நான் இங்கிருந்து போயிடுறேன்" என அவள் அழவும், ஒரே எட்டில் அவளை அடைந்த, கைலாஷ் ராஜன், தன் கை வளைவில் அவளை இழுத்துக் கொண்டு, " ரஜ்ஜும்மா, உன் ஆயி வந்து உன்னைக் கூட்டிட்டுப் போற வரைக்கும், நீ என் பொறுப்பு. நீ எங்கேயும் போகக் கூடாது" எனத் தந்தையின் முகத்தைப் பார்க்காமலே சொன்னார்.

பாலநாயகம், " உன் மகன், நீ போறதுன்னா போயிக்க, எனக்கு நான் கொடுத்த வாக்கு தான் முக்கியம்னு,என்னை வெளியைப்போக்கச் சொல்லி சொல்லாத சொல்றான். நான் கிளம்புறேன். நீ இருந்துட்டு வா" என விறைக்கவும், சௌந்தரி, இது ஏதடா வந்ததும், வராததுமாக வம்பு எனப் பயந்தவர், "ஏனுங்க, அது சின்னப் பொண்ணு, அதை வச்சு ஒரு சண்டை கட்டனுமா" எனக் கணவர் பேச்சை ஆட்சேபித்தார்.

" அட எத்தனை, விசயம் பேப்பர்ல படிக்கிறோம், பார்க்கிறோம். இவன் சொத்து பத்தோட இருக்கவன், இந்தப்பொண்ணை யாரு, என்னான்னு எப்படி நம்புறது. நதி மூலம், ரிஷி மூலம்னா கேட்க வேண்டாம், வயசு புள்ளையைப் பத்தி விசாரிக்கனுமா, இல்லையா. நாளைக்கு இந்தப் புள்ளைக்கே ஒண்ணுன்னாலும், யார் பொறுப்பு" என அவர் ஞாயமான கேள்வியை வைக்கவும்.

" இருபது வருஷமா, மனுசங்க தரம் தெரியாமலா தொழில் நடத்துறேன். ஒருத்தர் முகத்தைப் பார்த்தாலே, ஆரு என்னான்னு எனக்கும் அலசத் தெரியும். ரஜ்ஜும்மா மேல எனக்கு முழு நம்பிக்கை உண்டு" எனக் கைலாஷ் ராஜன், ஓங்கிப் பேசும் போதே, ஆதிரா கைலாஷோடு ஒட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவரும் அவளை அணைத்துக் கொண்டு, " ஹிட்லருக்கு, நான் என்ன செஞ்சாலும் தப்பா தான் தெரியும். என் மேல இருக்கக் கோபத்தை உன் மேல காட்டுகிறார். நீ அழாதடா" என அவளுக்கு மட்டும் கேட்கும் படி மெல்லச் சொன்னவர் அப்பாவை முறைத்து நின்றார்.

" பிஸ்னஸ் வேணுமின்னா, நல்லா செய்வானே தவிர, குடும்ப வாழ்க்கையில் எல்லாம், அவனுக்கு அனுபவம் கிடையாது. எந்த நம்பிக்கையில், இந்தப் பொண்ணை, தன் வீட்டில் கொண்டு வந்து வச்சிருக்கான்னு கேளு" என மனைவியிடம் பாயவும்,

" அட, இப்பத் தான் வந்தவுடனே, இந்தப் பொண்ணு, உங்க மருமகளாட்டமா இருக்குதுன்னு பெருமையாச் சொன்னீங்க. யாருன்னே தெரியாத உங்க மருமகளை நம்புனவீங்க, இந்தப் பச்சை மண்ணை நம்ப மாட்டீங்களாக்கும். " எனச் சௌந்தரியும் அவரோடு சண்டையிட்டார்.

அபிராமுக்கும் ஆதிராவை சொன்னதில் கோபமிருந்த போதும், அப்புச்சியைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினான். " இதோ பாருங்க அப்புச்சி, சும்மா இப்படி எகிறாதீங்க. பின்னாடி ரொம்ப வருத்த படுவீங்க" என அர்த்தமாக அவரை நோக்கிச் சொல்லவும்,

" அட உனக்கும் சேர்த்துத் தான் அபு கண்ணா பேசுறேன். நீ கொஞ்சம் பேசாத இரு" என அவனை அடக்கியவர், " உன் மாமன் என்னைக்கு என் பேச்சைக் கேட்டு இருக்கான், இன்னைக்குக் கேக்குறதுக்கு. எனக்கு எப்பவுமே இந்த வீட்டில் மரியாதையே இல்லை. அதுக்குத் தான், போக மாட்டேன்னு சொன்னேன் , உன் தாத்தன் தான் கட்டாயப் படுத்தி அனுப்பி விட்டான். ட்ரைவரை, வண்டி எடுக்கச் சொல்லு, நான் என் ஊட்டுக்குப் போறேன். " எனக் கிளம்பவும், கைலாஷ், இது எப்போதும் நடப்பது தான் என்பது போல் நிற்க, சௌந்தரி,

" இதுக்குத் தான், நான் மட்டும் வாறேன்னு சொன்னேன். எங்க வந்தாலும், என்னை நிம்மதியா இருக்க விடாதீங்க" எனப் புலம்பினார்

" அம்மா, நீங்க அவரோட போறதுன்னா போயிட்டு வாங்க." எனக் கைலாஷ் ராஜனும், அம்மாவை, அப்பாவோடு சென்று வர யோசனைத் தர,

" எனக்கு இது தெரியாதாக்கும் , அப்பாவும், மகனும் ஆயுசுக்கும் சண்டை கட்டிக்கிட்டே இருங்க. ." எனச் சௌந்தரி இருவரையும் திட்டிவிட்டு,

" அடேய், யாருடா அங்க, சத்தியா, ரூம்புக்குள்ள வச்ச சாமானத்தையெல்லாம், மறுக்கா வண்டியில் ஏத்து" எனச் சௌந்தரி கட்டளை பிறப்பித்தார்

ராஜனிடமிருந்து, அவர் தந்தையிடம் வந்த, ஆதிரா, " அஜ்ஜோ, என்னால உங்க மகனுக்கு, ஏதோ ஆஃபத் (ஆபத்து) வரும்னு பயந்திங்க. இப்போ, அதே ஆஃபத்துக்கிட்ட உங்க மகனை விட்டுட்டு போறீங்க. இவ்வளவு தான், நீங்க உங்க மகன் மேல வச்சிருக்கப் பாசமா. இப்பவும், என் பாபா உங்கள் பேச்சை கேக்கலைனு தான் கோபப் படுறீங்க. இப்ப என்ன, நான் யாருன்னு உங்களுக்குத் தெரியனும் அவ்வளவு தானே.

நான் ஆதிரா பிகே. கே ஃபார் கைலாஷ் ராஜன், உங்கள் மகன் தான். உங்களுக்குத் தெரியாமல் உங்க மகன், உங்கள் பேத்தியை கூட்டிட்டு வந்து வச்சிருக்காரோன்னு உங்களுக்குச் சந்தேகம். ஆமாம் அது தான் உண்மை. நான் உங்களுக்குப் பேத்தி, அவருக்கு மகள். இந்தச் சொத்துக்காகத் தான் வந்திருக்கேன். நீங்கள் முடிஞ்சா, இங்க இருந்து தடுத்து பாருங்க. " எனச் சவால் விட்டவள்,

கைலாஷிடம் திரும்பி, " பாபா, நீங்க ப்ராமிஸ் பண்ணா, அதைக் கீப் அப் பண்ணுவீங்க தானே. என்னை உங்க மகளா அடாப்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்களே. புரோசீஜர் ஸ்டார்ட் பண்ணுங்க. நான் என் ஆயிக்கிட்ட பேசிக்கிறேன். அஜ்ஜோ, இவ்வளவு சொன்ன பிறகு, நானும் விடுறதா இல்லை" என ஆதிரா கொளுத்திப் போட, முதலில் பதட்டமாகப் பார்த்திருந்த அபிராமும், பின் அவளுக்கு ஒத்து ஊத ஆரம்பித்தான்.

" ஆமாம் மாமா, ஆதிரா உங்க மகளா இருந்தா, எனக்கும் வசதியா போகும். " என அவன் பூடகமாகச் சொல்ல, கைலாஷ் அவனை முறைத்து விட்டு,

" ஏற்பாடு செஞ்சிட்டா போச்சு. நீ உன் ஆயிக்கு, என்னைக்கு வசதின்னு கேளு, அன்னைக்கே ஜாம், ஜாம்னு அடாப்சனை பெரிய ஃபங்சனாவே வச்சிடுவோம். என் கூடவே இருக்கிறதுக்கும் ஒரு ஜீவன் இருக்குமுல்ல. " எனக் கைலாஷ் போட்டுத் தாக்கினார்.

பாலநாயகம், " உன்னை நானா, கல்யாணம் கட்டிக்க வேண்டாம்னு சொன்னேன். ராஜியை கட்டி வைக்கனும்னு ஆசைப் பட்டோம். மாட்டேன்னு சொன்ன, ஒரு உயிரே போச்சு. அதுக்கப்புறமும், உன் மனசுக்கு பிடிச்சவளை கட்டிக்கன்னு தானச் சொன்னோம்.நீ தனி மரமா நின்னுட்டு, எங்களைப் பேசாத" என்றவர். ஆதிராவிடம் திரும்பி,“ தத்து எடுக்கிற புள்ளைக்காக, என்ற மவன்,இம்புட்டு ரோஷமா பேசுறன்னா , நான் மட்டும் என்ன கொறைஞ்சவனா, அவன் பாட்டுக்கு ஒரு பக்கம் உன்னைத் தத்து எடுக்கட்டும், அதுக்குள்ள உன் நதிமூலம்,ரிஷிமூலம் என்னான்னு கண்டு பிடிக்கிறேன்”எனப் பேத்தியிடம் பதில் சவால் விட,

“அதுக்கு நீங்க இங்க தங்கணும் “ எனக் கோபம் மறந்து வம்பில் இறங்கினாள் ஆதிரா.

“ஆமாம் , இங்க தான் கண்ணு தங்கப்போறேன், இப்படி ஒரு சவால் வந்த பிறகு, விட்டுப்போட்டுப் போகமுடியுமா. தத்துக்கு வரப்போற புள்ளை , நீயே இம்புட்டு உரிமையா எம்பட மகன் வீட்டில தங்கும் போது , அவனையே பெத்தவன், எனக்கு இல்லாத உரிமையா” என நொடியில் ப்ளட்டைத் திருப்பி, பாலநாயகம் அந்த வீட்டின் உரிமை கொண்டாடவும், சௌந்தரியே அதிசயித்துப்போனார். கைலாசை பற்றிக் கேட்கவே வேண்டாம், ஒரு புன்னகையோடு தன் ரஜ்ஜுமாவின் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டவர், ‘இந்த ஹிட்லருக்கு ஈடு கொடுக்க இப்படி ஆள் தான் வேணும்’ என மனதில் நினைத்துக் கொண்டார். ஆனால் அதே மகள் , சற்று நேரத்தில்,நாரதர் கலக்கமாக,தந்தையையும் மாட்டி விட்டு தான் கோபித்துச் செல்வாள் எனக் கற்பனையும் செய்தார் இல்லை.

அங்கே தாத்தாவும், பேத்தியுமாக அபிராமை பஞ்சாயத்துத் தலைவனாக மாற்றி, மாற்றிச் சவால்களைத் தெறிக்க விட்டுக்கொண்டு, பூவா தலையா போட்டிக்கு,ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்சை வகுத்துக் கொண்டிருந்தனர்.அதன் படி,சவால் , சண்டை இருந்தாலும்,மற்ற நேரம் பகைமை பாராட்டக் கூடாது , என்ற கண்டிஷனும் அபி சார்பாக முன் மொழியப்பட, ஒகே டன் ,எனக் கை குலுக்கிக் கொண்டனர்.

, “போகுதுபோ, இந்த மனுஷனுக்கு வம்பு பேச ஒரு ஆள்கிடைச்சது, நான் தப்பிச்சேன். “ என்ற சௌந்தரி, மகனின் அருகே அமர்ந்து கொண்டு, " ஏன் கண்ணு, இப்படி மெலிஞ்சு போய் இருக்க. நல்லா சாப்பிடறதும் இல்லை. " என ஆரம்பித்து, வழக்கமான பல்லவிகளைப் பாடி, " அதுக்குத் தான் ஒரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்றேன்" என முடிக்க, கைலாஷ், கலகலவென நகைத்தார்.


No comments:

Post a Comment