Monday, 14 February 2022

யார் இந்த நிலவு-19 .

 யார் இந்த நிலவு-19 .

ஒரே போல் உருவ ஒற்றுமை கொண்ட மனிதர்களே ஆனாலும், பேச்சு வளமை, வார்த்தையாடல்கள், அவரவர்க்கான குரல் வளம் ஆகியவை கொண்டு அவர்களை அடையாளப் படுத்தி விடலாம். அலைப் பேசியில் பேசும் போதே கூடச் சிலர், இன்னாரென அறிவிக்காமல், கண்டு பிடி என விளையாடுவதும் உண்டு. நமக்கு மிகவும் பரிட்சயமான குரல் எனில், அதனை அடையாளம் காண நொடிப் பொழுது போதும்.

இங்கும் குன்னூரிலிருந்து, பவானி பேசியது, எதேச்சையாக ஸ்பீக்கரில் போடப்பட்டிருந்ததால், அங்கிருந்த அனைவருமே கேட்டனர். அந்தக் குரலைக் கேட்டு ஆதிராவுக்கு அதிர்ச்சி. இந்தப் பவானி, கேர் டேக்கரின் குரல், தனது ஆயியின் குரலுக்குப் பொருந்திப் போவது எப்படி என்பதில் அதிர்ச்சி.

கைலாஷுக்கு பவானியை நேரடியாக அறிமுகம் இல்லை. அம்மாவின் வார்த்தைகளால் தான் தெரியும். ஒரு கேர் டேக்கர், வயதானவர்களுக்கு அவர்களைக் கவனிக்கும் ஆட்கள் மேல் இயல்பாகத் தோன்றும் பாசம் என்றே நினைத்திருந்தார். அதனால் ஒரு குழப்பமான மனநிலை தான் இருந்தது.

பவானி, மகன் வீட்டுக்குப் போன சந்தோஷத்தில், டயட்டை விட்டுறாதீங்க, என அறிவுறுத்தியதில், பரவாயில்லை, கேர் டேக்கர், பெரியவர்களைத் தன் கைப்பிடியில் தான் வைத்திருக்கிறார் என்ற கோணமே தோன்றியது.

" பார்த்தியா, இதுக்குத் தான், என் மருமகள் வேணும்கிறது. பக்குவமா, பலகாரம் சுட்டுப் போட்டு வந்து, அதை எடுக்கவும் இல்லை மறந்து போயிட்டேன் . இந்தா அபு கண்ணு, இருக்காரு. அதை விட முக்கியம், உன்னை மாதிரியே சாயல்ல ஒரு பேத்தி பக்கத்தில இருக்கா, எல்லாருக்கும் கொடுக்குறேன்" எனச் சௌந்தரி பேசிக் கொண்டே சென்றவர், " பவானி, நான் வந்ததுக்குள்ள உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு. அழுதியா என்ன" என விசாரித்தார்.

" இல்லைத்தை, ஸ்டோர் ரூமை க்ளீன் பண்ணேன், தூசி கண்ணில விழுந்து, அப்படியே ஆரம்பிச்சிடுச்சு. சரி நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க. நான் வைக்கிறேன்" எனும் முன்.

" இனி ரெஸ்ட் எல்லாம் தேவை இல்லை, என் மகன் கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கச் சரின்னு சொல்லிட்டான். ஒரு பேத்தியும் உதவிக்கு இருக்கா. ஒரு பொண்ணைப் பார்த்து, கல்யாணத்தை முடிச்சுட்டு தான் குன்னூர் வருவேன்" எனச் சௌந்தரி நமட்டுச்சிரிப்போடு சொல்லவும்,

" அம்மா" எனக் கைலாஷ் ஆட்சேபனை குரல் கொடுக்க, அந்தப் பக்கம் அதிர்ந்த பவானி, “ஸ்பீக்கரிலையா போட்டு பேசுறீங்க" என வினவினார்.

" ஆமாம்மா, ஆதிராகிட்ட பேசுறியா" எனக் கேட்டு , அவர் சரி என்று சொல்லும் முன்னே ஆதிராவிடமும் நீட்டி விட்டார்.

ஆதிரா அதிர்ச்சி மீளாமலே, " ஹலோ ஆயி “ என ஆரம்பிக்கவும், கைலாஷ் சட்டெனத் திரும்பிப் பார்க்க, பாலநாயகம் துப்புத் துலக்கும் நோக்கில் கவனமாகப் பார்த்தார். சாதாரணமாகச் சௌந்தரி தான் விசாரணை, துப்பு துலக்கும் வேலை எல்லாம் செய்வார், ஆனால் மகனை பார்த்ததிலிருந்து, அவர் பக்கமே தன கவனத்தைப் பதித்திருக்க, பால நாயகம் மனைவியின் வேலையைச் செய்ய ஆரம்பித்திருந்தார். அபிராம், சௌந்தரி இருவருமே இயல்பாக, அவளது தடுமாற்றம் என்பது போல் பார்த்திருக்க, ஆதிராவும் அதையே போனில் சொன்னாள்.

“ சாரி , என் ஆயிக்கிட்ட பேசணும்னுநினைச்சு கிட்டே இருந்தானா,அது தான் ஆயின்னு வந்துடுச்சு " என அவள் எஸ்க்யூஸ் கேட்கவும்,

" அதுக்கென்ன, அம்மான்னு யாரும், யாரையும் சொல்லலாம். எனக்கும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு இருக்கா,நீ என்னை ஆயி ன்னே கூப்பிடலாம். பெரியவங்களைப் பார்த்துக்க முலே" எனப் பவானி பசாமாகச் சொல்லவும்,

அவரது "முலே"விலேயே உணர்ச்சி வயப்பட்டவளுக்கு, அதை மீறி ஓர் இயலாமையும், கோபமும் வர, " ஹலோ ஆண்டி, நான் ஆயின்னு கூப்பிடுறதை விட, ஆண்டின்னு கூப்பிடுறேன். நீங்க ஒண்ணும் கவலைப் பாடாதீங்க. ஆத்தாவுக்கு, என்ன ஹெல்ப் வேணுமோ, ஸப் குச் மே கரூங்கி. அது பாபாசாப்க்கு பொண்ணு பார்க்கிறதா இருந்தாலும், ஐ வில் ஹெல்ப் ஹர்" என்றாள் ஆதிரா.

" ரஜ்ஜும்மா நீயுமாடா. " எனச் சிரித்தார் கைலாஷ்.

" க்யூ நஹி பாபா, உயிரோட இல்லாத பாருவுக்காக நீங்க ஏன், உங்க வாழ்க்கையை வீணாக்கணும். நான் உங்களுக்கு மகளா வரனும்னா, நீங்கள் எனக்கு ஒரு அம்மாவையும் சேர்த்துக் கொடுங்க. என்ன ஆண்டி நான் சொல்றது சரி தானே" என ஆதிரா வேண்டுமென்றே பவானியையும் சப்போர்ட்டுக்கு அழைக்கவும்.

" ஓ, படியா ஐடியா, பேஷா, உங்கள் பாபா சாப்க்கு பொண்ணு பாருங்க. எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க, அத்தைக்காகவும், மாமாக்காகவும், அதையும் நானே செய்யறேன்" எனப் பவானி தேனொழுகும் குரலில் சொல்லவும்.

" என் மருமகளைப் பார்த்தியா, எல்லாத்துக்கும் துணை நிற்கும். அது மாதிரி ஒரு பொண்ணைப் பார்ப்போம்" என்றார் பாலா.

" தாத்தா, பார்க்கிறது தான் பார்க்கிறீங்க. மாமாவோட சேர்ந்து பார்ட்டி எல்லாம் அட்டன்ட் பண்ற மாதிரி, கொஞ்சம் யங்கான பொண்ணா பாருங்க. " என அபிராம் யோசனைச் சொன்னான்.

" எப்படி அபு கண்ணா, உங்களுக்கு ஷார்ட் ஸ்கர்ட் போட்ட பொண்ணு பார்த்திங்களே. அதே மாதிரியா, இல்லை அதையே கூடக் கட்டி வைங்க" என்றார் பவானி. இப்போது குரலில் அப்பட்டமாகவே எரிச்சல் தெரிந்தது.

“ இந்தக் கேர் டேக்கருக்கு , ஏண்டாமா வயிறு எரியுது, ஓ எனக்கு மனைவி வந்துட்டா, இந்தம்மாக்கு மருமகள் பதவி பறி போயிடும்னு பயமோ” எனக் கைலாஷ், ஆதிராவிடம் ரகசியமாய் விசாரிக்க, அவளும் ஆம் எனது தலை ஆட்டியவள்,

" ஆண்டி, யூ டோண்ட் ஒரி. என் பாபாசாப் இன்னும், அதே ப்ரின்ஸஸ் சார்மிங்கா தான் இருக்காங்க. ஹீ கேன் மேனேஜ்" என ஆதிரா பவானிக்குப் பதிலடி கொடுத்தாள். அதைத் தொடர்ந்து கைலாஷின் ஆண்மைப் பொங்கும் நகைப்பும் கேட்க, சௌந்தரிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ஆனால் நாயகம் மட்டும் டிடெக்டிவ் வேலையைச் சீரியஸாகச் செய்து கொண்டிருந்தார்.

அபிராம், " ஓ, ஆண்டி, சரியான நேரத்தில் ஞாபகப் படுத்தினீங்க. அந்தப் பொண்ணை விடுங்க.அதே பார்ட்டில, அதை விட மாடர்ன், பிஸ்னஸ் வுமன் ஒருத்தங்க, தர்ட்டிபைவ் பிளஸ் ல இருந்தாங்க, மாமா பின்னாடியே திரிஞ்சாங்க . அவுங்களைப் பார்ப்போம். மில்ஸையும் பார்த்துகிட்டு,மாமாவையும் பார்த்துக்குவாங்க" என இழுத்து ராகம் போட்டு யோசனைச் சொல்லவும்.

“ அடி வாங்கப்போறடா ராஸ்கோலு, அந்த அம்மணி சும்மாவே என் பின்னாடி திரியிது,வேணாம்டா . கோர்த்து விட்டுடாத“ எனப் பதறினார் கைலாஷ். ஆனால் பவானியைக் கடுப்பேற்ற முடிவு செய்த ஆதிரா, " சூப்பர் ராம் சார், பாபா பயப்படுறதிலிருந்தே, அவங்க மேல இவருக்கும் ஒரு சாப்ட் கர்ணர் இருக்குன்னு தெரியுது. ஆப்சன்ல வச்சுக்குவோம், அவுங்க அப்பாயிண்மெண்ட் வாங்குங்க. பாபாவுக்காக நாம போய் மீட் பண்ணுவோம்" எனத் தன் பங்குக்குக் கதைத்தாள்.

" அட ஒரு பேச்சுக்கு தலையாட்டினா, அடுத்த முகூர்த்ததில தாலி கட்டச் சொல்லுவீங்க போலருக்கு. இது என்ன கண்ணுங்களா, பக்கத்து இலைக்குப் பாயசமா" எனக் கைலாஷும் கேலியாகக் கேட்டார்.

" ராம் சாருக்கு வேணும்னா பாயாசம் கொடுங்க. எனக்கு ஷாதியே வேண்டாம். நான் பாபாசாப், புது ஆயியோட தான் என் லைஃபை ஸ்பெண்ட் பண்ணப் போறேன் " என்றாள் ஆதிரா. " தி இஸ் நாட் ஃபேர்" என அபிராம் முறைக்கவும். " அட இருங்கடா, முதல்ல, அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்புறம் சித்தப்பான்னு கூப்பிடலாம்" என்ற சௌந்தரி, " பவானி, எல்லாரையுமே கூட்டிக்கிட்டு, ஒருக்கா கோவைக்கு வந்துட்டு போ கண்ணு" என அழைக்கவும்.

" வர்றேன் அத்தை, உங்கள் மகனுக்கு ஷாதி வைப்பிங்கல்ல அப்போ வர்றேன்" என்றார் பவானி.

" கட்டாயம் வாங்க ஆண்டி" என்றாள் ஆதிரா.

சௌந்தரி வேறு, " பவானி, இவ்வளவு பேச்சுக்கும், ராஜா சிரிச்சிட்டே உட்கார்ந்து இருக்கான். நான் அப்படியே அமுக்கிப் போடுறேன். உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என ரகசியம் பேசி போனை வைக்கவும், ராஜன் அடக்கமாட்டாமல் சிரித்தார்.

" ஏண்டாமா, திடீரென எல்லாருமா ஒண்ணு கூடி, என் கல்யாணத்தைப் பத்தி பேசுறீங்களே என்ன. அதுக்கு இந்தா மாப்பிள்ளை இருக்கான், அவனுக்கு எங்க பொண்ணு பார்க்கலாம்னாவது பேசலாம்" என்றார் கைலாஷ். இளையவர்கள், மௌனமாக, பாலநாயகம் யோசனையோடு மகனிடம், " பாரு யாரு" என்றார்.

கைலாஷ் அதிர்ந்தவர், அதைக் காட்டிக் கொள்ளாமல், "நேரமாச்சு, ஒரு மீட்டிங் இருக்கு. அம்மா, நான் போயிட்டு வந்துடுறேன்" என எழவும்.

" ராஜா, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டு போ. ஆதிரா சொன்ன பாரு யார்" என அழுத்தம், திருத்தமாக மகனை நேரடியாகவே விளித்துப் பாலநாயகம் கேட்டார்.

வெகு நாட்களுக்குப் பிறகு, தந்தையின் நேரடி விழிப்பில் அவரை நேராகப் பார்த்தவர், " அது கேலிக்காகச் சொன்னதுங்க. தேவதாஸ், பார்வதி, பாரு, அப்படித்தானடா ரஜ்ஜும்மா" எனக் கைலாஷ் கேட்டதிலேயே, ஆம் எனச் சொல்ல வேண்டும் என்ற குறிப்பு இருக்க, அது புரிந்தும் புரியாதவள் போல்,

" இல்லை பாபா, நேத்து நீங்கள் சொன்னீங்களே, உங்க மனைவி அந்தப் பாரு. அவங்களே இந்த உலகத்தில் இல்லாதப்போ, எதுக்குப் பாபா அவங்களுக்காக உங்கள் வாழ்க்கையை ஸேக்ரிஃபைஸ் பண்றீங்க" என நேரடியாகவே கேட்டு விட்டாள் ஆதிரா. மூத்தவர்கள் இருவருக்குமே அப்பட்டமான அதிர்ச்சி. அதுவும் அந்தப் பாருவை, தங்கள் மகனின் மனைவி என்றதிலும் , அதிலும் அவள் இந்த உலகிலில்லை என்று சொன்னதில்,தங்கள் மகனின் இன்றைய நிலைக்கான காரணம், ஓரளவு புரிந்தது. "என்ன கண்ணு சொல்ற" எனப் பெரியவர்கள் ஒரு சேர ஆதிராவிடம் கேட்க, "அஜஜோ, ஆத்தா , நான் சொல்றது ..."என ஆரம்பித்தவளை , நோக்கி கண்டிப்பாக ,

" ஆதிரா, இது உனக்குத் தேவையில்லாத விசயம் கண்ணு. நேத்தே அதுக்கான காரணத்தையும் சொல்லிட்டேன். என்னோட பர்சனல்குள்ள நுழைய, என் அப்பா, அம்மாவுக்கே நான் உரிமை தரலை. நீயும் அதிலிருந்து விலகியே இரு" எனக் கைலாஷ், தன் அப்பாவிடம் சொல்ல முடியாததை மகளிடம் அதட்டலாகச் சொல்ல, அபிராம் பேசாதே என ஆதிராவை அடக்கப் பார்த்தான்.

" ஓகே ஃபைன், பாபாசாப். என்னை அடாப்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னேங்களேன்னு, அந்த உரிமையில்சொல்லிட்டேன். அது வெறும் பேச்சுக்குத் தான்னு இப்போ புரிஞ்சிடுச்சு. உங்க பாபாக்கே உங்ககிட்ட உரிமை இல்லாதப்பா. நான் யாரு. ஆஃப்டர் ஆல் எ ட்ரைனி. நான் என்னோட லிமிட்ல இருந்துக்குறேன். சாரி. ஆனால் உங்களை மாதிரி, என் ஆயி மாதிரி பிடிவாதம் பிடிக்கிறவங்களால நிறையப் பேர் கஷ்டப் படுறோம். அதை மட்டும் ஞாபகத்தில் வச்சுக்குங்க. " எனப் பொரிந்து தள்ளியவள், கண்களைத் துடைத்துத் தன்னைச் சீராகிக் கொண்டு,

" ராம் சார், ஆபீஸ் போகலாமா" எனக் கேட்டு அவனோடு வெளியேற, " ரஜ்ஜும்மா" என அழைத்தபடி கைலாஷ், கையாலாகாமல் மூட் அவுட் ஆனபடி அப்படியே நின்றார்.

" ஏனுங்க இந்தப் பொண்ணுக்கு என்னத்துக்கு இம்புட்டுக் கோவம், உங்களை விட நாலு பங்கு கோபத்தை ராஜா மேலக் காட்டிட்டு போகுது. அவனும் பேசாமல் நிற்கிறான்" எனச் சௌந்தரி, கணவரின் காதை கடிக்க,

" அவனைத் தானக் கேளு, நல்லா பெத்து வச்சிருக்க, கல்யாணம் ஆனதைக்கூடச் சொல்லாதவன், நான் கேட்டா எதுவும் சொல்ல மாட்டான்,நீயே விவரத்தைக் கேட்டு ஆறுதல் சொல்லிட்டு வா " என்றவர், மனைவியையும் மகனையும் விரக்தியாகப் பார்த்தபடியே , தனது அறைக்குச் சென்றார்.

" ராஜா. என்ன கண்ணு இது " எனத் தாய் விவரம் கேட்கவும், " அந்தப் பொண்ணு பாவம்மா, பிறந்ததிலிருந்து அப்பாவையே பார்த்தது இல்லையாம். அதுக்கிட்ட இவ்வளவு கடுமையா பேசவே மாட்டேன். இன்னைக்கு ஹிட்லர் மேல இருக்கக் கோபத்தை, அது மேல காட்டிட்டேன்" எனக் கைலாஷ் வருந்தவும்,

" விடு கண்ணு, பார்த்தா நல்ல புள்ளையாட்டமாத் தான் தெரியுது. சாய்ந்திரம், இனிப்பெல்லாம் கொடுத்து, நான் சரி கட்டிடுறேன். நீ கவலைப்படாத " என மகனுக்கு ஆறுதல் சொன்னவர் , " ராஜா கண்ணு, ஒரு சந்தோஷமான விசயம் சொல்றேன்னு, இருபது வருஷம் முன்னச் சொன்னியே, அது இந்தப் பாரு தானா. எங்க கண்ணு இருக்குது. போட்டோ இருந்தா காட்டு. அது கையை, காலப் பிடிச்சாவது, நான் கூட்டிட்டு வர்றேன்" என அதே கேள்வியை, சௌந்தரி நயந்து கேட்கவும் ,

அம்மாவை ஒரு பார்வை பார்த்தவர், " அவள் உயிரோட இருந்திருந்தா, நீங்க ஏனுங்கமா அவளைக் கெஞ்சி கூப்புடனும் . நான் உரிமையாவே தூக்கிட்டு வந்திருக்க மாட்டனா. ஏன்மா நீங்க வேற. நான் இங்க ஊருக்கு வந்த சமயத்தில் அவள் உலகத்தை விட்டே போயிட்டாமா. " என அவர் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார். சௌந்தரிக்கு, தான் கண்ணில் காணாத, தன் மருமகள் எப்படி இருந்திருப்பாள், என யோசனை ஓடியது. தன் மகனின் மனதைக் கவர்ந்தவளை, காணாமல் போனோமே என்ற ஏக்கமும் வந்தது.

" மருமகள், ரொம்ப அழகாப்பா" என ஆசையாக வினவவும். ராஜனின் கண்களிலும் அவர் பாருவை நினைத்துக் காட்சி விரிந்து, நேற்று மகளிடம் பகிர்ந்ததைப் போலவே, இன்று அம்மாவிடம் ,

" அழகு மட்டும் இல்லைமா. ராணி மாதிரி இருப்பா. ஏன் ராணியே தான். சோட்டி ராஜ்குமாரின்னுல சொல்லுவாங்க. " எனப் பாருவை வர்ணித்தவர், " இப்ப உரிமையா கோவிச்சுக்கிட்டு போச்சே, ஆதிரா, அது மாதிரியே இருப்பா. இருங்க காட்டுறேன்" எனப் பைரவியின் படத்தை அம்மாவிடம் காட்ட பர்சை எடுக்க, சௌந்தரிக்கு ஆவல் கூடியது. ஆனால் ராஜன் பரபரப்பாக, பர்சில் பாருவைத் தேடியவர், " இதில தான் மா வச்சிருந்தேன். ஒரு வேளை ரூம்ல இருக்கும். அப்புறம் காட்டுறேன். நீங்க கொஞ்ச நேரம் படுத்து எந்திரிங்க" எனவும்,

" என்ன ராஜா" என ஏக்கமாகக் கேட்டார். மென்னகை புரிந்த கைலாஷ் " காட்டுறேன்மா. நேத்து மப்புல போட்டோவை எங்க வச்சேன்னு தெரியலையே" எனத் தன்னை மறந்து புலம்ப, அம்மா, மகனை முறைத்தார்.

" இனிமே, குடிக்கலை போதுங்களா . நீங்க கொஞ்ச நேரம் படுங்க. நான் தேடி எடுத்துட்டு வர்றேன்" என அம்மாவை அனுப்பி விட்டு, தனது அறைக்கு விரைந்தார் கைலாஜ் ராஜ்.

தனது அறைக்குச் சென்றவர், பெட்டை தட்டிப் போட்டு, அறையையே கந்தரக் கோலமாக்கியும் அவரது பாருவின் புகைப்படம் கிடைக்கவில்லை. " பாரு, எங்கடா போன" என அரற்றியவரின் நினைவுகள், பின் நோக்கி சந்தன் கட்டுக்கு ஓடியது.

விஜயன் இவர்களை விட்டுப் பிரிந்த பிறகு, அவர்களுக்காகப் பணிக்கப்பட்ட வேலையாள், அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தந்து விட்டுச் செல்ல, மழை பிடித்துக் கொண்டது. பைரவி, இந்த மழை நேரம், சிரமப்பட்டு வராதீங்க. நானே சமாளிச்சுக்குவேன் என அனுப்பி வைக்க, அவர் குளிர் தாங்க வேண்டும் என இரண்டு ரஜாய் குவில்ட் பெட்டுகளைத் தந்து விட்டுச் சென்றார்.

ஒரு ராஜகுமாரியாக, தன் உயரதிகாரியாக அமரிக்கையாய் திரிந்த பைரவி பாய், தனது சுயத்தை விடுத்து, கைலாஷின் பாருவாய், அவருக்குத் தாயாய், தோழியாய், தாதியாய் சேவகம் செய்தார்.

கைலாஷின் வலது தோளில் குண்டடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்து, கட்டை மாற்றியவர், வெந்நீரில் துண்டை நனைத்து, அவர் மேனியெங்கும் ஒற்றி எடுக்க, வலி சற்று குறைந்து இருக்கவும், ஜுர வேகமும் தணிந்திருந்தது. கைலாஷ் மனைவியின் செய்கைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் முன்னே மண்டியிட்டு, " ஓ காட், இன்னைக்காவது எந்திரிச்சு உட்கார்ந்திங்களே, நான் பயந்தே போயிட்டேன் ராஜ்" எனக் கைகள் தொடர்ந்து வேலையைச் செய்தாலும், பாருவின் முகம் பல வித பாவங்களைக் காட்டி, ஒரு மனைவியாகத் தன் மனதைக் கணவனிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.

ராஜ், அமைதியாக அமர்ந்திருந்ததிலேயே, வித்தியாசம் உணர்ந்து, அவரை நோக்கி, என்னவெனத் தலையசைத்துக் கேட்க, பாருவை இடது கையால் தூக்கி, தன் மடியில் அமர்த்திக் கொள்ள, " ராஜ், என்ன செய்யறீங்க. ஆப்கே தபியத் டீக் நஹி ஹை. காயம் இன்னும் ஆறலை " எனப் பாரு பதட்டமடைய,

" சப் குச் டீக் ஹைகையி சோட்டி குமாரி" என்றவர், " நஹி, நஹி கைலாஷ் ராணி" எனச் சிரித்து, இடது பக்கமே தன் கைவளைவில் அவரை அணைத்து, அவர் முகத்தைப் பார்த்திருக்க. " க்யா ஜீ. இன்னும் உங்க உடம்பு சரியாகலை. சோடியே" என எழ முயன்றார். ஆனால் அவரின் ராஜ் விட்டால் தானே, " முதலாளியம்மா, எப்போதிலிருந்து, எனக்குச் சேவகியானாங்க" என அவர் முகத்தை வருட.

" இதோ, இதைப் போட்டதிலிருந்து" என அவர் அணிவித்த சங்கிலியையும், கருகமணி தாலியையும் காட்டிய பாரு, " இதோ இந்தக் குண்டடிபட்டதிலிருந்து. எனக்காக இரத்தம் சிந்தினதிலிருந்து. மயக்கத்திலையும், என் ராஜ் என் பேரையே சொல்லிட்டு இருக்கிறதிலிருந்து" என , அவர் மடியிலிருந்தவாறே வலது கையால் அவரைத் தழுவி கொண்டு, இடது கையால் , அவர் முக வடிவை அளந்தவாறு, பைரவியும் உணர்ச்சி வயப்பட்டவராக உருகி இருக்க,

" பாரும்மா, இதெல்லாம் பெரிய விசயமா. இந்த வேல் விழியால், வாள் வீச்சில், விழுந்தவன் தான், உனக்காக எதுவேணாலும் செய்வேன்" என்றவர், அவர் ஈடாகக் கையைப்பற்றி, தன் நெஞ்சில்பதித்துக் கொண்டு வாகாக அவர் முன்னிருந்த, பாருவின் வலது கன்னத்தில், இதழொற்றி, அவர் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ளவும், " ராஜ்" எனக் கணவனோடு இழைந்தார் பாரு.

இவர்கள் மோன நிலை, எவ்வளவு நேரம் நீடித்ததோ, அவர் மூச்சுக் காற்றில், ஜுர வேகத்தை உணர்ந்து, அவரை மென்மையாக விடுவித்து எழுந்த பாரு , " இது காதல் வேகம் இல்லை, ஜுர வேகம். காடா தர்றேன். குடிச்சிட்டு படுங்க. நான் உங்க பொண்டாட்டி தான் எங்கயும் ஓடிட மாட்டேன்" எனக் கடிந்தவாறு, கஞ்சி, கசாயம் எனக் கட்டாயமாய்ப் புகட்டி, படுக்க வைக்க, கசந்த வாயில், வார்த்தையும் கசந்து,

" நீ கைலாஷ் ராணி இல்லை கைலாஷ் இராட்சசி, தாலிக் கட்டினா, எங்க ஊரில் எல்லாம் பாலும், பழமும் கொடுப்பாங்க. இனிக்க, இனிக்க விருந்து வைப்பாங்க. நீ கசப்பா போட்டு, மனுசனை கொல்றடி" எனக் கடிந்தார் ராஜ்.

அவரையே முறைத்தவர், " உடம்பு சரியாகட்டும், பர்பி, லட்டு, சோமாஸ் , கீர் எல்லாமே செஞ்சு தர்றேன். இப்போ, குழந்தையாட்டம் அடம் பிடிக்காமல் படுங்க. " எனக் கட்டாயப்படுத்தி அவரைப் படுக்க வைத்து ரஜாயை போத்தி விட்டு எழ முயன்றவரை, கைப்பிடியாகப் பிடித்து அமர வைத்து, அவர் மடியிலேயே தலை வைத்துக் கொண்டார்.

" ஹே, ஆயி பவானி, இவரைத் தான் எனக்குன்னு அனுப்பி வச்சியா. வளர்ந்த குழந்தையா தான் இருக்கார்" எனச் சலித்துக் கொண்டவருக்கு , தன கணவரின் இந்த அணைப்பும், பிடிவாதமும், ஆளுமையும் பிடித்துத் தான் இருந்தது. ஆசையாக அவர் சிகையில் முத்தமிட்டவர், மெல்லிய குரலில் ,மெல்லிசையாய் , காதல் கீதங்களைப் பாடியவாறே, கைலாஷின் சிகை கோதி, உடல் வருடித் தூங்க வைத்தார்.

அன்று, பாரு போர்த்தி விட்ட, அதே ரஜாயை உதறித் தட்டி அவரது புகைப்படத்தைத் தேடியவர், " பாரும்மா, உன் போட்டோ, அது ஒண்ணு தான் இருந்தது. அதையும் காணோம். நான் என்னடா பண்றது" என ராஜாயில் கன்னத்தைப் பதித்தவர், யார் எடுத்துட்டு போயிருப்பா என யோசித்தவருக்கு, அப்போது தான், ஆதிரா முகம் திருப்பிப் போனது ஞாபகம் வந்தது.

" பாரு உன்னை நினைச்சா, எல்லாரையும் மறந்திடுறேன் பாரு" என நொந்துக் கொண்டவர், ஆதிராவை சமாதானம் செய்யவும், அறையைச் சுத்தம் செய்தவர்களை விசாரிக்கும் நோக்கோடும் கீழே இறங்கி வந்தார். 

சரியாக அதே நேரம், விஜயன்,மனைவி மகளோடு வந்து சேர, பெரியவர்கள் அவர்களை ஆர்வமாக வரவேற்றனர்.

கஸ்தூரி,"அம்மா" எனச் சௌந்தரி கையைப் பிடிக்க, " வாங்க மாமா, வணக்கம்ங்க" என விஜயன், நாயகத்திடம் நலம் விசாரிக்க, அவர்களது மகள் ரஞ்சிதா, மாடியிலிருந்து இறங்கி வந்த கைலாஷிடம் வந்து, 

" மாம்ஸ் டார்லிங், வாட் எச் சர்ப்ரைஸ், நீங்களும் வீட்டில் இருக்கீங்க" என வந்து, அவரைக் கட்டிக் கொள்ள,

" வாங்க ரஞ்சி டார்லிங். எம்பட வூட்டில நான் இருக்கிறதில என்னங்க அம்மணி சர்ப்ரைஸ். நீங்க வந்தது தான் சர்ப்ரைஸ். உங்களைப் பார்க்கத் தான், இன்னைக்கு அப்பாயிண்மெண்ட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்னு வச்சுக்கங்களேன் " என அவளை உச்சி முகர்ந்து அவளை அணைத்துக் கொண்டார்.

" வாம்மா கஸ்தூரி" எனத் தங்கையை வாய் நிறைய அழைத்தவர், நண்பனுக்கு, முறைப்போடான தலையசைப்பை மட்டும் தர, ' இப்ப என்னவாம்' என்பது போல் பார்த்தார் விஜயன்.

" ரஞ்சி, உன் ஆத்தாவும், அம்மத்தாவும் போட்டிப் போட்டுகிட்டு உனக்குப் பலகாரம் செஞ்சு கொடுத்து விட்டு இருக்காங்க கண்ணு" என நாயகம் சொல்லவும்.

" ஏனுங்க அப்புச்சி, அவிக பேரைச் சொல்றீங்க. இதெல்லாம் உங்க சௌந்திடியர் பிரிபரேஷன்னு எனக்குத் தெரியாதா. எப்படியும் மாம்ஸ் டார்ல்ங்குக்காக ஸ்வீட் கடையே அள்ளிட்டு வந்திருப்பாங்கன்னு தெரியும். அதுக்காகத் தான மெயினா வந்தேனுங்க" என ரஞ்சி தான் வந்த காரணத்தைப் போட்டு உடைக்க.

" நான்கூட, என்னைப் பார்க்கத் தான் வந்தியோன்னு, ஒரு நிமிசம் ஏமாந்து போயிட்டேன் டார்லிங்" என்றார் ராஜன்.

சௌந்தரி, அதற்குள் செல்லியை வேலை ஏவி, தான் கொண்டு வந்த பலகாரங்களை எல்லாம் வரிசையாகத் தட்டில் ஏற்றி, டீப்பாயை நிறைக்க, " அடேங்கப்பா, மாம்ஸ் மில்ஸ் தான வச்சிருக்கார், ஸ்வீட் கடை திறக்கப் போறாருங்களா" என வியந்தபடி, ஒவ்வொன்றாக ருசி பார்த்தாள் ரஞ்சி.

" அம்மத்தா, இது என்னதுங்க புதுசா இருக்கு, இனிப்பா, காரமா" என ரஞ்சி இனிப்பு சோமாஸை எடுத்து, திருப்பித் திருப்பிப் பார்க்க, "இதுவா" என ஆரம்பித்த சௌந்தரி, பவானி அவர்கள் ஊர் பலகாரம் என ஒரு பிரசங்கமே நடத்தி, " அதுக்கு என்னமோ பேர் சொன்னதுங்களே" எனப் பாலாவை விசாரிக்க, அவர் ," ஏதோ ஜீ ன்னு மருமகள் சொல்லுச்சு , பேரு மறந்து போச்சே" தலையைச் சொரிந்தார்.

விஜயன், கைலாஷையே பார்த்துக் கொண்டிருக்க, கைலாஷ் பலகாரங்களைப் பார்த்து, சந்தன்கட் மற்றும் பாருவை நினைத்தவர், "அதுக்குப் பேர் கரன்ஜி " என்றார்.

"அதே தான், அதே தான்" எனச் சௌந்தரி மகனைச் சிலாகிக்க, " அவன் அந்த ஊரில் இருந்ததுனால பேரை சரியா சொல்லிப் போட்டான்" எனச் சால்ஜாப்பு சொன்னார் பாலா.

பதார்த்தங்களைச் சுவைத்துக் கொண்டே பேச்சு ஓட, கஸ்தூரி, " அம்மா, அண்ணேன், ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தாங்களே, அது எங்கிங்கம்மா" எனச் சௌந்தரியிடம் வினவினார்.

" நம்ம அபு கண்ணாவோட தான் போச்சு, ராஜா போன் போடு, அதுகளும் வந்து சாப்பிடட்டும் " எனச் சௌந்தரி ஆதிராவை அழைக்கச் சொல்ல, " ஆமாம்மா, மறந்தே போயிட்டேன்" என அழைப்பு விடுத்தார் கைலாஷ். 

ஆனால் அழைப்பொலி வீட்டின் வாயிலில் கேட்கவும், " இதோ வந்துட்டான். வாடா ரஜ்ஜும்மா" என இயல்பாக அவர் அழைக்க, மிகவும் கஷ்டப்பட்டுத் தன்னைச் சமன் படுத்திக் கொண்டு வந்த ஆதிரா விஜயன் குடும்பத்தைப் பார்த்துச் சம்பிரதாயமாகச் சிரித்து வைத்தாள். பின்னோடு வந்த அபிராம் முகமும் இறுக்கத்தைத் தத்து எடுத்திருக்க, மற்றவர்கள் பேச்சில் வலுக்கட்டாயமாகவே கலந்துக் கொண்ட போதும், பார்வை ஆதிராவிடமே இருந்தது.

இடையில் விஜயனுக்குப் போன் வந்தது, அவர் தனியாகச் சென்று பேசி வந்தவர், " சரிம்மா, நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைப் படாமல் இருங்க" எனச் சொல்லி போனை வைத்து விட்டு, ஹாலுக்கு வந்த நேரம், ஒரு ஹேண்ட் பேகில் இரண்டு செட் துணிகளை மட்டும் எடுத்து வந்து நின்று, தான் வீட்டை விட்டுப் போவதாக அறிவித்தாள் ஆதிரா.

நடந்தது என்ன நிலவு வளரும்.


No comments:

Post a Comment