Friday, 18 February 2022

யார் இந்த நிலவு-21

 யார் இந்த நிலவு-21

பைரவி பாய், ஒரு நாளைக்குப் பத்து முறையேனும் மகளுக்குப் போன் செய்து, அவளது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வார். மகளறியாமலே அவருக்கான பாதுகாப்பு வளையத்தை ஏற்பாடு செய்து வைத்திருப்பவர், கைலாஷிடம் இருப்பதால் தான், கொஞ்சம் ஆசுவாசமடைந்து இருந்தார்.

ஆனால் இன்று காலையிலிருந்து, அடுத்தடுத்து மகளும், கணவருமாக அவரது நிம்மதியைப் பறித்தது தான் மிச்சம். மாலையில் மகள் அழுது புலம்பியதில், வழக்கம் போல் விஜயனுக்கு அடித்து விட, தானும் அங்குத் தான் இருப்பதாகச் சொன்னவர், ராஜன் அவ்வளவு எளிதாக வெளியே விடமாட்டான், என ஆறுதல் சொன்னார். அதோடு ஆதிராவின் ஆயியாக, அறிமுகப்படுத்திக் கொண்டு கைலாஷிடம் பேசச் சொன்னார்.

ராஜ், என் குரலை அடையாளம் கண்டு பிடிச்சுடுவார் என்ற பைரவியின் அச்சத்திற்கு, முதலில் சந்தேகம் தான் வரும். படிப்படியாகத் தெரியட்டும் பேசுங்க, தான் தங்கையாகப் பாவிக்கும் நண்பனின் மனைவிக்கு யோசனையும் சொன்னார்.

ஆதிராவை கட்டாயப்படுத்தி, தான் கொண்டு வந்திருந்த பலகாரங்களைச் சௌந்தரி பேச்சுக் கொடுத்துக் கொண்டும், நாயகம் இடையிடையே வம்பு பேசிக் கொண்டும் ஊட்டி விட்டார். கஸ்தூரிக்கு , இன்று தான் புதிதாகப் பார்த்த அந்தப் பெண்ணிடம் , மகனின் நோக்கம் அறிந்து ஒரு ஆவல் தோன்றியிருந்தது. அதோடு அவள் சற்று முன் பேசியதைக் கேட்ட பிறகு, அவள் மீது பரிவும்,பாசமும் கூட வந்தது. அதோடு மகனின் முகம் கூம்பிப் போய்க் கிடந்ததில், அவருக்குமே வருத்தம் தான்.

கைலாஷ், " ரஜ்ஜும்மாவுக்காக, என் கையாலையே போட்ட, ஸ்பெஷல் கட்டா சாய்" என ட்ரேயோடு, தேநீர் கோப்பையைத் தூக்கி வந்தார். தன் உடன் பிறவா அண்ணனைத் தேநீர் கோப்பையோடு பார்க்கவும், இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன உள்ளது என அதிசயித்துத் தான் போனார் கஸ்தூரி.

தானே மகளின் அருகே அமர்ந்து, வாஞ்சையாக மகளின் சிகையைத் தடவியபடி, அடம் பிடிக்கும் குழந்தையைச் சமாதானம் செய்வது போல், அவள் போக்கிலேயே சென்று, கைலாஷ் அவளைத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தார்.

சத்தாரவில் ஆதர்ஷ் கௌரியிடம், அவரையும் அழைத்துக் கொண்டு கோவை செல்ல இருப்பதைச் சொல்லவும், கௌரிக்கு தன வளர்ப்பு மகளைக் காணும் ஆவல் தலை தூக்கியது. ஆதிராவை கடத்துவோம் என்று சொன்னதில், அவருக்கு உடன் பாடு இல்லையென்றாலும், தான் தங்கள் முல்கியோடு இருந்தாலே , அவளுக்குத் தைரியம் வந்து விடும் என்றும் கணக்குப் போட்டார். பைரவியை நினைத்துத் தான் அவருக்குக் கவலை. இந்தச் சோட்டி ராணி, ரமாபாய், மகளுக்கும் மறைத்து எத்தனை வேலை செய்கிறார், என்பது இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது.

பைரவிக்கு , அவரது தாய் வெளிநாட்டில் இருப்பதாக மட்டுமே தெரியுமே ஒழிய, இங்குச் சத்தாராவில் ஒரு ராஜ்ஜியமே நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பதை அறியார். ரமாபாய் முதலீடுகளிலிருந்து பைரவிக்கும் ஒரு பங்கு சென்றுவிடும். தாய் எட்டடி பாய்ந்தால் ,குட்டி பதினாறடி பாயும் என்பதற்கிணங்க , பைரவியும் இந்த இருபது வருடங்களில், அன்னை அனுப்புவது, தனது சுய சம்பாத்தியம், எனப் பணத்தைப் பண் மடங்கு பெருக்கியிருந்தார். அங்கங்கே இவர்களது விசுவாசிகளும், நம்பிக்கை வாய்ந்தவர்களும் உண்டு.

சோலாப்பூர் மாளிகையிலேயே, பைரவியின் அக்கா பவானி, அங்கு நடப்பவைகளைச் செய்தி அனுப்பி விடுவார். இந்த ஒரு மாதமாக ஜெயந்த் மற்றுமின்றி, அவரது மருமகன்களும் அங்கேயே முற்றுகை இட்டு இருப்பதால், பைரவிக்கு அதிகம் பேசவில்லை.அதுவும் போக, மில்ஸ் விஷயங்களைப் பெண்களுக்குத் தெரியாமல் பூடகமாகத் தான் பேசிக்கொள்ளுவார்கள். அதிலரசல் புரசலாகத் தெரிந்தது தான் ஆதர்ஷ் விஷயம், செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு , தங்கையிடம் சொல்லலாம் எனப் பவானியும் நிதானித்து இருந்தார்.

கௌரி மாஸிக்கு ,தன் வளர்ப்பு மக்களிடம் பேசும் ஆசை துளிர்விடவும், ஆதர்ஸிடம் வந்து இன்று தைரியமாகவே , தனது போனை கேட்டு விட்டார். பெங்களூரிலிருந்து வரும் போது ,ரமாபாய் பெயரைச் சொல்லித் தான்,அதனைக் கைப்பற்றி இருந்தான்.

கௌரி ஆதிராவைப் பற்றி,பேசிப் பேசி, ராமாபாயிக்குமே பேத்தியின் பேச்சைக் கேட்க ஆவல் பிறந்திருந்தது. அவரும் ஆதர்ஸிடம் சிபாரிசு செய்து, கௌரியை பேசச்சொல்லி ஆவலாகக் காத்திருக்க, அப்போது தான், ஆதிரா கௌரியிடம்தான் மனக் குறையைக் கத்திக் கதறியது. அவளை முழுவதுமாகப் பேச விட்டவர், தான் வருவதாக ஆறுதலான வார்த்தையைச் சொன்னார்.

அவளது பிடிவாதமான மனப் போக்கைப் பார்க்கவும், ஆதர்ஷ் சட்டெனத் தான் ஆள் அனுப்பிக் கூட்டிக் கொள்வதாகச் சொல்லச் சொன்னான். அதன் படி பேசி அவளை ,கிளம்பும் போது போன் செய்யச் சொல்லி வைத்தார் கௌரி.

போனை வைக்கவும், “கௌரி ,அவளைப் புத்திசாலி, அது இதுன்னு சொன்ன, இது என்ன இவ்வளவு எமோஷனலா இருக்கா, உன்கிட்டயே வளர்ந்ததால் உன்னை மாதிரியே வளர்த்து வச்சிருக்க, அரை மணி நேரத்தில் ஆயிரம் மைல் தொலைவை கடக்க நம்மகிட்ட, பறக்கும் பாய் இருக்க என்ன. பெரிசா தன் பாபாவை காப்பாற்ற வந்துட்டா,அந்த மனசனுக்கும் தான் பெத்த கடமை இருக்கே பார்க்கட்டுமே” என வழக்கத்துக்கு மாறாக ராமா பாய் கோபப்பட, “நானிமா சில் , எதுக்கு இவ்வளவு டென்ஷன். கேஆர் சாப் , தன மகளை வெளியே விட மாட்டார். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. மாஸியை மட்டும் இப்போ அனுப்பி வைப்போம். “ எனத் தன் அனுமானத்தைச் சொன்னவன்,

“ கௌரி மாஸிக்கு ,அவுங்க பிராமிஸ் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறன். உங்க தீதிகிட்ட விசுவாசத்தைக் காட்டுங்க, அது தப்பில்லை ஆனால் தேவையானதை மட்டும் தான் சொல்லணும்”எனக் கண்டிப்போடு அவன் சொல்லவும்,

“என் ஆயுள் முழுசும், படி ஆயி சேவைக்குத் தான் கழிச்சிருக்கேன், நானா சாப்.”என்றார் கௌரி.

“சரி, போன் கீஜியே, முல்கிட்ட பேசுங்க.கேஆரெ பேசுவார்” என அவன் ஆரூடம் சொல்ல, கௌரி ஆதிராவுக்குப் போன் செய்தார்.

கேயார் வீடு, அபிராம் ,ஆதிரா எங்குச் சென்றாலும், உடன் செல்வது என ஆயத்தமாகவே இருந்தான். விஜயன் பைரவியிடம் பேசி விட்டு வந்தவர், ஆதிராவை , நண்பனுக்கும் உண்மை தெரியாமல் எப்படி நிறுத்தி வைப்பது என யோசித்துக் கொண்டிருந்தார்.

மெல்லப் பேச்சுக் கொடுக்க வரும் போதே , சற்றுப் பொறுக்கச் சொல்லி சைகை காட்டிய கைலாஷ் ராஜன், " ரஜ்ஜும்மா, மாஸிக்கு போன் போடுறா. பேசுவோம்" எனத் தன்மையாகவே சொல்ல, கௌரியே போன் அடித்தார்.

ஆதிரா, ஓரிரு வார்த்தை பேசவுமே, கைலாஷ் போனை கைப்பற்றினார். ஆதிரா, தூக்கக் கலக்கத்தில், அவர் மீதே சாயவும், அவளைத் தாங்கிக் கொண்டே பேச, கௌரி அந்தப் பக்கம், " நமஸ்கார் சாப், ஆதிரா பக்கத்தில் இருக்காளா" என வினவினார்.

அவள் தூக்கத்தில் மயங்கியிருப்பதைக் கௌரியிடமிருந்தும் மறைத்த கைலாஷ், "இல்லை, தள்ளி வந்துட்டேன். அவளுக்குக் கேட்காது சொல்லுங்க" என்றார்.

" எங்க ஆதிராமுலே பிடிவாதம் பிடிச்சா, பிடிச்சது தான், அதுக்காகத் தான் வர்றேன்னு சொன்னேன். என்னால காலையில் தான் அங்க வரமுடியும். அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துக்குங்க. அவளை நானோ, தீதியோ தான் எப்பவுமே கைக்குள்ள வச்சுக்குவோம். எங்களைத் தவிர, இப்போ உங்ககிட்ட தான் விட்டிருக்கோம். எங்க ஆது, விலை மதிப்பில்லாத வைரம், சமாதானப்படுத்திக் கொஞ்சம் பார்த்துக்குங்க சாப் , நான் காலையில வந்துடுறேன்" எனக் கௌரி உணர்ச்சி வயப்பட்டவராகச் சொல்லவும்,

" அம்மா, இதை நீங்கள் சொல்லனுமா. ஆதிரா என் பொண்ணுமா. அவளோட, அம்மாவைத் தவிர, வேற யார்க்கிட்டையும் , நான் அவளை ஒப்படைக்கிறதாவும் இல்லை. நீங்கள் மெல்ல கிளம்புங்க, ஒரு அவசரமுமில்லை. ஆந்திராவை நான் சமாளிச்சுக்குவேன் , வாங்க. பேசிக்குவோம். " எனப் போனை வைத்தார் கைலாஷ்.

மருமகனின் குரலைக் கேட்ட ரமாபாய், “ தாமாத்ஜி எப்பவுமே, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான், தைரியசாலி , கல்யாணம் ஆன அன்னைக்கே, படே தாமாத்தை எதிர்க்கலாம்னு சொன்னார். என் மகள் தான், வீரப்பரம்பரையில் பிறந்த டர்போக்.” என மருமகனைச் சிலாகித்தவர்,மக்களைக்குறை சொல்ல , கௌரி ஆட்சேபனையாகப் பார்த்தார்.




“நிஜமா தான். உன் தீதிக்கு மனசுக்குள்ள, இன்னும் புருஷனை நம்பாமல் பிரிஞ்சமேங்கிற பயம். அவர் வெறுத்திடுவாரோன்னே போகாமல் இருக்கா” எனப் பைரவியின் மனப் போக்கை அவர் தாயார் போட்டு உடைக்க,




“நானிமா, உங்க மகளை , வேற ஆப்ஷனே இல்லாமல் , உங்க தாமாத்ஜி முன்னாடி கொண்டு வந்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு. “ என்ற ஆதர்ஷ், “ ஆனால் அதுக்குக் கௌரி மாஸி தான் , எனக்கு ஹெல்ப்பண்ணனும் “ என அரத்தகமாகப் புன்னகைதான்.


கௌரி, “ தீதி , அவங்க புருசனோட சேரணும் , அதுக்கு எது வேணாலும் செய்ய நான் தயார் “ என ஆதர்சின் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் அவர் வாக்களிக்க,


“ யோசிச்சுக்குங்க, வாதா நஹி தோட்ணா “ வாக்கை மீறக்கூடாது என வாக்கும் வாங்கிக் கொண்டு, அவன் யோசனையைச் சொல்ல, “ ஹேய் ,மேரி ஆயி துல்ஜா பவானி,இந்த குடும்பத்துக்கு,என் இப்படி யோசனையைக் கொடுக்கிற” என நெஞ்சில் கை வைத்து பவானி அம்மனை கேட்டார்.




அவன் ஓர் சிரிப்போடு, “மாசி ,நீங்க பெருசா எதுவும் செய்யவேண்டாம், எப்பவும் போல ,உங்க முல்கியை பார்த்துகிட்டு ,அப்ப ,அப்ப உங்க தீதிகிட்ட, ஜீஜாஜி புகழை மட்டும் பாடுங்க போதும்” என அவரைக் கிளம்பச் சொன்னான்.




“நானாஜி, நீ ரொமப எதிர்பார்க்கிற, என் தாமாத்ஜி ராமருடைய மறு அவதாரம், பையுவை தவிர யாரையும் நினைக்க மாட்டார் “ என ரமா பாய் சவால் விடவும், “நானிமா , என் டார்ஜெட் உங்க தாமாத்ஜியே கிடையாது. அவரோட ஆயி ,பாபா. இந்த வயசிலையும் மகனுக்குத் துணையைக் கொண்டு வந்துரணும்ன்னு, பெண்ணைத் தேடிட்டு இருக்காங்க “ என ,தன நானியை அணைத்தபடி சொல்ல, “ எப்படியோ என் மகளைக் கதற விடப்போற, உண்மை தெரிஞ்சு,அவள் என்கிட்ட வந்து ஆடுற நாளை , நினைச்சா எனக்கு இப்பவே வயித்தை கலக்குது” என்றார் ரமாபாய்.




“தி கிரேட் கணபத்ரயோட சோட்டி ராணி, போஸ்லே வீட்டு மருமகள்,ராஜமாதா, மராட்டி ஸேர்னி , ரமாபாய் இப்படிப் பயப்படலாமா “என அவன் அடுக்கவும் , “சண்டைக்கு வர்றதும் ஸேர்னி தான் நானாஜி, அதுவும் இருபது வருசமா புருஷனைப் பிள்ளைகளைப் பிரிஞ்சு தன் வாழ்க்கையையே அர்பணிச்ச தியாகி, அவள் கோபத்துக்கு நான் பயந்து தான் ஆகணும்”எனக் கண்ணீர் விட்டார் ரமாபாய்.

“ சமாளிச்சுக்கலாம்,நானிமா. எல்லாமே குடும்பத்து நன்மைக்காகத்தேனே” என முகத்தில் , அவனையும்மீறி லேசான வருத்தத்தைக் காட்டி, அவர் கவனிக்கும்முன் அதையும் மாற்றி ரம பாயைத் தேற்றிய ஆதர்ஷ், கௌரி கிளம்புவதற்கான ஏற்பாட்டைச் செய்தான்.

விஜயனுக்கு ஒரு புறம் ஆசுவாசமாக இருந்தது. ஆதிராவை ராஜன் சமாளித்த விசயத்தையம், கௌரி என்பவர் வருகிறார் என்பதையும் பைரவிக்கு அனுப்பி விட்டார். பைரவி, ‘ இந்தக் கௌரி, இத்தனை நாள் எங்கிருந்தா, போனும் இல்லை’ என யோசித்தபடி அவருக்கே போன் செய்ய, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.

தூக்க மாத்திரையின் வீரியத்தில் , கைலாஷ் மீதே சாய்ந்து ஆதிரா கண்ணை மூட, சௌந்தரியும், கஸ்தூரியும் முதலில் பயந்தனர். ரஞ்சனி தான், கைலாஷின் கைகர்யம் தான் அது என் புரிய வைத்தாள் .

“ நாளைக்குக் காலையிலே, கிளம்ப இதே போலக் கிளம்ப மாட்டான்னு என்ன நிச்சயம் ராசா “ எனச் சௌந்தரி மகனிடம் கவலையாகக் கேட்க,

“அதுக்குள்ள, ரஜ்ஜுமாவோட சித்தி வந்துடுவாங்கமா, நம்மளுக்கும் , இந்தப் பொண்ணு மயிலு யாருன்னு விவரம் தெரியனுமில்லிங்க வரட்டும் “ என மகளைப் பார்த்தவாறே, உணர்ச்சி வயப்பட்ட நிலையில், ஆதிராவை வசதியாகக் கை வளைவில் சாய்த்து வைத்த படி சொன்னார் கைலாஷ்.

மகனின் அணுகுமுறையை,இந்தப்பெண்ணைச் சொந்தமக்களாகவே பாவிக்கும் அவரின் பாசத்தைப் பார்த்த நாயகம்," ராஜா, இதுக்கு என்ன அர்த்தம், நிஜமாவே இந்தப் பொண்ணைத் தத்தெடுத்துக்கப் போறியா" எனச் சீரியஸாகக் கேட்டார்.

" எனக்கும் தெரியலைங்கப்பா, இந்தப் பொண்ணு மயிலை தனியா விட மனசே வரலை. அவள் வீட்டை விட்டு போறேன்னு சொன்னதுக்கே, ஏதோ என்னை விட்டு போற மாதிரி இருக்குதுங்க. அவிக அம்மாவை வரச் சொல்லுவோங்க. ஒரு வேளை அவிக கிட்ட ஒப்படைச்சிட்டோம்னா, ஒண்ணும் தெரியாதா என்னமோ " என்ற மகனுக்கு, அதைச் சொல்லும் போதே,முகம் எவ்வளவு வேதனையைக் காட்டுகிறது எனப் பெரியவருக்குப் புரிந்தது.

" அசலூட்டுப் புள்ளை மேல, இம்புட்டுப் பாசம் வைக்காத ராஜா. பிறகு , அது பிரியறதை உன்னால தாங்க முடியாது" என நாயகம், மகனை நினைத்து அறிவுரைச் சொல்ல, " அட, எத்தனை பசங்க, புள்ளைங்க, அப்பா, அப்பாங்குது, அது மாதிரி தான் இதுவும் , விடுங்க" எனச் சமாதானம் சொன்னார் சௌந்தரி.

" எல்லாப் பொண்ணு, புள்ளைகளையும் உம்பட மகன், இப்படி வூட்டுக்கே கூட்டியாந்ததில்லை. இந்தக் காலத்தில பெத்த புள்ளைகளே நமக்கு, அந்நியமாப் போச்சு. இதில இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்க்கிறது. அவன் நல்லதுக்காகத் தான் சொல்றேன்" என மகனை எச்சரித்தார் பாலநாயகம்.

ஆனால் இந்தப் பேச்சே, ராஜனுக்குப் பிடிக்கவில்லை என அவர் முகம் காட்ட, அது தேவையில்லாததும் கூட என அறிந்த, விஜயன் நடுவே புகுந்தார்.

" மாமா, அதெல்லாம் அவன் தெளிவாத் தானுங்க இருப்பான். நம்மளையே விலக்கி வச்ச ஆளுக்கு, மத்ததை எல்லாம் ஹேண்டில் பண்ணத் தெரியுமுங்க, விடுங்க பார்த்துக்குவோம் " என மாமனுக்குச் சமாதானம் சொல்லி, நண்பனை ஒரு தாக்கும் தாக்கினார் விஜயன்.

"அது தான் மாப்பிளைங்க பிரச்சனையே, இவன் பேருக்கேத்தபடிக்கு இமயமலையில் போயி உட்கார்ந்துட்டானா, எத்தனையைச் சமாளிக்கிறது" என மகனை நக்கலும் விட்டார் நாயகம்.

"அது நெசந்தானுங்க மாமா,ஆளு செஞ்சாலும் செய்வானுங்க, அங்க தான் தன்னை மறந்து திரிய சாமியாரெல்லாம் வேற ஏதேதோ தருவாங்க,இவனும்நான் தான் கைலாச நாதர் , சிவபெருமான்னு , அங்கையும் நாட்டாமை பண்ணிட்டு உட்கார்ந்திருப்பானுங்க" என மாமனோடு சேர்ந்து லொள்ளு பேச, அவரை முறைத்த ராஜன், " தனியா சிக்கவேயில்லை வா, பாம்பை பிடிச்சு மேல உடுறேன் " என மிரட்ட, "அயோ மாம்ஸ், எங்கப்பா, என்னைப் படிக்கவச்சு,கலயாணம் கட்டி வச்சு, எம்படப் பேர்ல மில் எழுதி வைக்கட்டும் அப்புறம் விடுங்க" என ரஞ்சனி தன பங்குக்குக் கலாய்க்க,

" கழுதை, உம்பட வேலை முடிஞ்சா போதுமா, என்னைய யாரு பார்க்கிறது. அண்ணா,பாம்பை விட்டிங்கனாலும், எம்பட மஞ்சக்கயிருக்கு ஆபத்து இல்லாத, விசமில்லாததா விடுங்க," எனக் கஸ்தூரி கைலாஷிடம் கோரிக்கை வைத்தார். "சரி கண்ணு" எனச் சிரித்தார் ராஜன். "இது அல்லவோ, பதி பக்தி " என்றார் விஜயன். இவர்கள்பேச்சில், சற்றே இயல்பானது வீடு.

அபிராம் மட்டும்,ஆதிராவை கவலையோடு பார்த்து, இவர்கள் நகைசுவையையும் எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், கைலாஷ் ஆதிராவை தூக்கவும், " மாமா, நான் தூக்கிட்டு வரேனுங்க" என இவ்வளவு நேரம் கழித்து வாயைத் திறந்தான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவர், " கல்யாணம் ஆகாத கன்னி புள்ளையை, அது அப்பன் தான் தூக்கோணும், உதவி பண்ணனும்னும் நினைச்சியாக்கும் போய் ரூம் கதவைத் திறந்து வை" என அதட்டினார்.

" உங்களுக்கு வயசாச்சேன்னு தான் சொன்னேனுங்க" என அவன் முணு, முணுக்கவும்,

" எதே, ஆருக்கு வயச்சாயிடுச்சு, பிச்சுப் போடுவோன், வயசு பிள்ளையைத் தூக்கி, நீ ஹீரோவாகலாம்னு பார்க்கிறியாக்கும். கஸ்தூரி உன் மகனை பார்த்துக்கக் கண்ணு, பய ஒண்ணும் சரியில்லை" எனப் போட்டு விட, கஸ்தூரி மகனை அர்த்தமாகப் பார்த்தார்.

ரஞ்சி, " ஆமாம்ங்கண்ணா, உனக்கெல்லாம் ஹீராவாகிற வயசு இன்னும் வரலை. நம்ம மாம்ஸ் தான் எவர் கிரீன் ஹீரோ" என வம்பிழுக்கவும் அவளை ஒரு லுக் விட்டவர்,

" அப்புறம், உங்கப்பனாட்டம் கிழவன்னு நினைச்சியாக்கும், எக்ஸர்ஸைஸ் பாடி. இன்னும் எலிஜிபில் பேச்சுலர் தெரிஞ்சுக்கக் கண்ணு" என்றபடி, ஆதிராவை குழந்தை போல் அநாயசமாகத் தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறினார் கைலாஷ் ராஜன்.

கஸ்தூரி, கணவனைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரிக்கவும், " ரஞ்சிமா, உன் மாமனுக்கும் மருமகன் எடுக்கிற வயசாச்சு, அடுத்த வருஷமே ஒரு பேரன் வந்து தாத்தாங்களைன்னா, என்னான்னு கேளு" என விஜயன் பூடகமாகச் சொல்லவும்,

முன்னே சென்ற, அபிராம், " ஆமாங்கப்பா" என ஆதிராவைப் பார்த்துக் கொண்டே ஆமோதித்தான்.

" பிச்சுப் போடுவேன், ராஸ்கோல், இந்த லுக்கெல்லாம் இங்க வேண்டாம். தடத்தைப் பார்த்து நடந்து, கதவைத் திற" என ராஜன், மருமகனைத் திட்டிக் கொண்டே படியேறி, அபிராம் திறந்த கதவு வழியாக, ஆதிராவை தூக்கிச் சென்று அலுங்காமல் பெட்டில் கிடத்தினார்.

அபி அறையின் ஏசியை ஆன் செய்து, அவளுக்குப் படுக்க வசதியாகக் குசன்களை ஒழுங்கு செய்ய, கைலாஷ் போர்வையைப் போர்த்தி விட்டு, அவள் முகத்தையே பார்த்திருந்தவர், " உன் ஆயி வராமல், உன்னை அனுப்ப மாட்டேன், பார்த்துக்க" வாஞ்சையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அகல, அபிராம், அவரையே பொறாமையாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனையும் வெளியேறச் சொல்லி சைகை செய்தவர், விடி விளக்கைப் போட்டு, கதவைச் சாத்தி தானும் வெளியேற,

" மாமா, நான் வேணா, நைட் தங்கி பார்த்துக்கட்டுங்களா. ஒரு எமோசனலா இருக்காப்படிங்க, நடு ராத்திரியில் முழிப்பு வந்து, வீட்டை விட்டு கிளம்பிட்டாபிடின்னா, என்னங்க செய்யறது" எனக் கவலையாகக் கேட்டான்.

" மாப்பிள்ளைங்க, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், அவிக அப்பன் நானிருக்கேன், பார்த்துக்குவேன். நீங்க கிளம்புங்க" எனக் கேலியாகச் சொல்லி அவனை அனுப்பப் பார்க்கவும்,

" அவளுக்கு, உங்க மேல தானுங்க கோவமே." என்றான் தலையைக் குனிந்தபடி. " என்றா மாப்பிள்ளை " என அவர் ஆராய்ச்சி பார்வையோடு வினவ,

" ஆதிராகிட்ட நான் இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணிட்டேன்ங்க மாமா" என லட்டு திருடி அகப்பட்ட கண்ணன் போல் மெதுவாகச் சொன்னவன், அவர் முறைக்கவும், " மனசில இருக்கிறதை, எத்தனை நாளைக்குங்க மறைக்க முடியும். அது தான் சொல்லிட்டேன்" என அவன் ஸ்ருதி கூடிக் குறைந்தது.

அவர் பதிலேதும் சொல்லாமல், மாடி வராண்டாவிலிருந்த ஷோபாவில் அமர்ந்து நிதானமாகவே அப்பியைப் பார்க்கவும், " ஆராவும், சரின்னு சொல்லிடுச்சுங்க மாமா" என்றவனின் முகத்தில் ஓர் மென்னகை. கைலாஷ், அதே பார்வை பார்க்க, அவரருகில் வந்த ஷோபா நுனியில் அமர்ந்தவன்

"மாமா, சத்தியமாங்க. அதுக்கும் என்னைப் புடிச்சு இருக்குதுங்க, முதல்ல சரின்னு சொல்லிடுச்சு" என்றவன், அடுத்துப் பேசத் தயங்கவும், " சொல்லி முடி" என்றார் ஒரே வார்த்தையில். அபிராம், மடைத் திறந்த வெள்ளமாக, மாமனிடம் அவள் ஆபத்து, ஆபத்து என அரற்றியதைச் சொல்லி முடித்தான்.

" உனக்கு அறிவு இருக்குதா மாப்பிள்ளை,பொண்ணுங்கள்ட்ட, எதைச் சொல்லனும், எதைச் சொல்லக் கூடாதுன்னு தெரியாது. நான் தான் உன் லவ்வுக்குக் குறுக்க நிற்கிற மாதிரி பில்டப் கொடுத்து வச்சிருக்க. ஏன் உங்கப்பன் ஒண்ணும் சொல்ல மாட்டானாக்கும்" என எரிச்சலாகக் கேட்டார்.

" அவருக்கெல்லாம், சம்மதம் தான், பொண்ணோட அப்பா தான் ரொம்பப் பிகு பண்றாருங்க. ஏனுங்க மாமா, திடீர்னு மாமனிலிருந்து, டிபிக்கல் மாமனாராகிட்டிங்க" என அவரோடு சண்டை கட்டினான்.

" செய்யறதெல்லாம் செஞ்சுப் போட்டு, அப்பாவியாட்டமா முகத்தை வச்சுக்கிட்டு , என்கிட்ட லொல்ளு பண்ணாத. உன் அப்பன் சம்மதிக்கோணும், அவிக ஆயி சம்மதிக்கோணும், எங்க இருக்கான்னே தெரியாத அவிக அப்பன் சம்மதிக்கோணும். இத்தனை இருக்குது. கொஞ்சம் அடக்கி வாசி"என்றவர் , அவனையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.

விஜயன், ஆதிராவுக்கு வந்த போனுக்குப் பதில் சொல்வது போல் , ஆதிராவின் ஆயியிடம் பேசிக் கொண்டிருந்தவர், கைலாஷைப் பார்க்கவும் விவரம் சொன்னார்.

" கொடு, நான் பேசிக்கிறேன்" எனக் கைலாஷ், ஆதிராவின் போனைக் கேட்கவும், விஜயனுக்குக் கலவரமானது. ஆனால் பைரவி, " கொடுங்க பாய்சாப், நான் சமாளிச்சுக்குறேன்" எனத் தைரியம் தரவும், கைலாஷிடம் நீட்டினார் விஜயன்.

கைலாஷ் போனை வாங்கியவர், " ரஜ்ஜும்மா தூங்குறாளுங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக்குறேன். வீட்டில் கெஸ்ட் வந்திருக்காங்க, அனுப்பி விட்டு, இதே போன்ல பத்து மணிக்கு மேலபோன் போடுறேன். உங்கள்ட்ட பேசணும், உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைங்களே" என வினவினார்.

" நஹி தோ. என் உயிரே, உங்கள்ட்ட தான் இருக்கு. தேக் லீஜியே. நைட் கூப்பிடுறேன்" என நா தழுதழுக்க, கண்ணீரோடு அவர் சொல்ல, ' இந்த ரஜ்ஜும்மா மட்டுமல்ல, அவள் தாயின் கண்ணீரும், தன்னை அசைப்பதை உணர்ந்து.

" ப்ளீஸ், அழாதீங்க. ஸப் குச் டீக் ஹோகா" எனப் போனை அணைத்தவர், பிறர் அறியாமல் கண்ணீரைச் சுண்டி விட்டு, டைனிங்கில் மற்றவரோடு ஒன்று சேர்ந்தார்.

விஜயன் குடும்பம், பெரியவர்களோடு பேசிக் கொண்டிருக்க, அதே நேரம் குன்னூரிலிருந்தும், பெரியவர்கள் கலந்துரையாடினர். அபிராம், ஆதிராவை விட்டுக் கிளம்ப மனதே இல்லாமல் தடுமாறி நிற்க, கைலாஷ் மிரட்டியே அவனை அனுப்பி வைத்தார். 


இரவு உணவை முடித்துக் கொண்டு, ஆதிரா நடு இரவில் விழித்தால் சாப்பிட ஏதுவாக பழங்களை அவளது அறையில் வைக்கச் சொன்னவர், தானும் இரவில் அவளது அறையிலேயே ஒற்றை ஷோபாவை கொண்டு வந்து போட வைத்து, அதில் சாய்ந்து மோடாவில் காலை நீட்டி, ஒரு தந்தையாக ஆதிராவையே பார்த்தபடி இருந்தார். அவருடைய காதில் 

'எனக்குத் தெரியாது. என் ஆயி எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது. என் பாபா யாருன்னு எனக்குத் தெரியாது. இந்தக் காரில் ஏறு, இந்த ஊருக்குப் போ. இவங்க உன் கூட இருப்பாங்கிறது மட்டும் தான் எனக்குத் தெரியும். இப்பவும் யாராவது வந்திருப்பாங்க. நான் போறேன்

என்ற ஆதிராவின் வார்த்தைகளே எதிரொலித்தது. ' அப்படி, என்ன ரகிசியம் இந்தப் பொண்ணோட வாழ்க்கையில், இப்படி ஒரு இளவரசியை மறைச்சு வச்சு, எந்த ராஜியத்தை பிடிக்கப் போறாங்க' என மனதில் வருந்திய கைலாஷ் ராஜனுக்கு, அந்த நினைவே அவரது பாருவையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. 

இதே போல் தான், ரமாபாய், தங்களைச் சந்தன்கட் கடத்தினார். குண்டடிபட்டு கிடந்த போதும், அதன் பின்னரும் கூட பைரவி மிகவும் எச்சரிக்கையாகவே தான் இருப்பார், என நினைவுகள் பின்னோக்கிச் செல்ல அந்த அறையில் சயனித்திருந்தார் கைலாஷ் ராஜ்.

ஆதிராவைச் சமாளிக்க, ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் குடும்பமே கூடி அவளைக் காக்க முயற்சிகளைச் செய்ததின் விளைவாக, கௌரி கோவையை நோக்கிக் கிளம்பி விட்டார். பைரவியின் குரலைக் கேட்டதில், கைலாஷுக்குச் சந்தேகம் முளை விட ஆரம்பித்தது. இரவில் மகளுக்குக் காவல் இருந்தவர், அவள் ஆயியிடம் பேசி தனது கேள்விகளுக்கான விடை தேட முயன்றார்.

கைலாஷ், தன்  பாருவை கண்டு கொள்வாரா.?

நிலவு வளரும்.

No comments:

Post a Comment