Tuesday, 15 February 2022

யார் இந்த நிலவு -20

 யார்  இந்த நிலவு -20 

கைலாஷ் ராஜன், ஆதிரா பருவைப் பற்றிப் பிரஸ்தாபித்தது பிடிக்காமல், தனது தந்தையும் கேள்வி கேட்கிறாரே என்ற எரிச்சலில், அவரை எதுவும் சொல்ல இயலாமல், இவளிடம் தன் கோபத்தைக் காட்டி, அவளுக்கு உரிமையில்லை என, அவர் விசயத்திலிருந்து விலகி இருக்கச் சொல்ல, அதில் மனதளவில் கடுமையாகத் தாக்கப்பட்டாள்.

ஏற்கனவே, பாலநாயகத்தின் சந்தேகப் பார்வையும், இவளால் தன் மகனுக்கு எதுவும் ஆபத்து வருமோ, சொத்தை அபகரிக்கத் திட்டமோ என்று பேசியிருந்ததும் அவள் மனதைப் பாதித்திருந்தது. ஆனாலும் அவர்களுக்கு உண்மை தெரியாததால் இப்படிப் பேசிவிட்டார்கள், இதில் அவர்கள் குற்றமும் இல்லை, தன் விதி என நொந்துக் கொண்டவள், தனது அஜ்ஜோவை சவால் விட்டுப் பேசியே சமாளித்து விட்டாள். ஆனாலும் ராஜன் உரிமையில்லை எனச் சொன்னது, அவளை வெகுவாகப் பாதித்தது.

தனக்கு மட்டும் ஏன் இப்படி, என்ற சுயபச்சாதாபம் தலை தூக்க, இதற்குக் காரணமான தனது ஆயி மீதும் அளவற்ற கோபம் வந்தது. வயதுக்கே உரிய வேகத்தில் கைலாஷிடம் பொரிந்து தள்ளிவிட்டு அபிராமுடன் வெளியேறியவள் மனச் சங்கடத்தோடே தான் வந்தாள்.

அபிராமுக்கு உண்மை தெரியுமாதலால், " ஆரா பேபி, மாமா சொன்னதையோ, அப்புச்சி பேசினதையோ மனசில வச்சுக்காத. அவிகளுக்கு நீ அவிக வீட்டு பொண்ணுங்கிறதே தெரியாது. ஒரு பிஸ்னஸ் மேனா பேசுறாங்க" என எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தான்.

" ஒரு நேரம், ரஜ்ஜும்மான்னு கொஞ்சறது. அடாப்ட் பண்ணிக்கிறேன்னு சொல்றது. அடுத்த நிமிசமே என் விசயத்தில தலையிடாதேன்னு சொல்றது. க்யா கரூங்." என அவள் பாபா மீதான தனது மனக்குறையை அவனிடம் கொட்டினாள்.

" கோபத்தையும், உரிமை இருக்கிறவங்கக் கிட்டத் தான் காட்டமுடியும். அஃப்கோர்ஸ், எங்க அப்பாவோட, மாமா எப்படிச் சண்டை கட்டுவார் தெரியுமா. நான் கூடச் சின்ன வயசில் இதைப் பத்தி அப்பாக்கிட்ட கேட்டுருக்கேன். என் ராஜா மாதிரி இன்னொருத்தன் வரமாட்டான்னு , மாமாவைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லுவார். அது இப்போ தான் புரியுது. அப்பா மேல கோபம் இருந்தாலும், ஏன் பேசாம இருந்தாலும், பிஸ்னஸ்ல போட்டிப் போட்டாலும், அதை அம்மாகிட்டையோ, என்கிட்டையோ, ரஞ்சிக்கிட்டையோ காட்ட மாட்டார். அவ்வளவு பாசமா வச்சுக்குவார். அவர் தங்கச்சி பசங்களை விட, எங்க மேல அவ்வளவு பாசமா இருப்பார்" என மாமனின் புகழ் பாடியே, மருமகன் ,மாமன் மகளின் கோபத்தைக் குறைத்தான்.

சிறு வயது முதல் கைலாஷ் ராஜன், தனக்கு எப்படிப் பாசமான மாமாவாக, வழிகாட்டியாக, குருவாக, மென்டாராக இருந்தார் என்பதைச் சொல்லச் சொல்ல, ஆதிராவுக்குள் தன் பாபாவுக்கான ஏக்கம் அதிகமானது. உணர்ச்சி வயப்பட்டவளாகவே எல்லாவற்றுக்கும் ஊம் கொட்டினாள். பேசிக் கொண்டே தங்கள் தொழிற்கூடம் வரை வந்தார்கள்.

அவர்களை எதிர் கொண்ட சங்கீதா, " அப்பா, நல்லா இருக்காருங்களா" எனக் கவலை படிந்த முகத்தோடு விசாரித்து விட்டு, " கடவுள் அவிகளுக்கு நல்ல சுகத்தைக் கொடுக்கட்டும்" என வேண்டிக் கொண்டவள், " அபி சார், சத்தியா, இந்தச் சாவியை உங்கள்ட்ட கொடுக்கச் சொன்னாருங்க" என ஒரு நகைப்போடு சொல்லிக் கொடுத்து விட்டுப் போக, " ஓகே தாங்க்யூ" என அசடு வழிய வேகமாக வாங்கிக் கொண்டான் அபிராம்.

" அது என்னது, மிஷின்ல டிசைன் அசம்பல் பண்ணனும்னு சொன்னீங்களே, ஆரம்பிச்சாச்சா" என ஆதிரா வேலை விசயமாக வினவவும்.

அவன் தயங்கித் தயங்கி, " இல்லை, இது அது இல்லை. வேற விசயம்." என அவன் மழுப்பினான். அவன் முகமே ஏதோ வித்தியாசத்தை உணர்த்த, காலையில் அவள் கைலாஷ் மகள் எனத் தெரிந்ததும் பரிமாறிய முத்தம் நினைவு வந்து, " க்யா பாத் ஹை" என வினவினாள்.

" இல்லை பேபி, உனக்கு இப்ப மூடே சரியில்லை. நான் அப்புறமா சொல்றேன்" என விசயத்தைத் தள்ளிப் போடவும், அவளுக்கு அதைப் பற்றி அறிய ஆவல் வந்தது." பரவாயில்லை சொல்லுங்க" என அவள் தூண்டினாள்.

" இப்படி அழுகாச்சி மூஞ்சியோடல்லாம் வேண்டாம். இன்னொரு நாள், இதே மாதிரி ரெடி பண்ணிட்டு கூப்புடுறேன்" என அவள் உளற, அவள் "எதே மாதிரி" எனப் பேச்சில் கிடுக்கிப்பிடி போட்டாள்.

அவள் தன் முகத்தையே பார்த்திருப்பதை உணர்ந்தவன், " ஆரா பேபி, உனக்கு ஒரு சர்ப்ரைஸ், ஆனால் எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை" எனத் தயங்கினான். " இன்னைக்கு, என் வாழ்க்கையில் பகூத் படியா தின். உங்க சர்ப்ரைஸ் ம் சொல்லுங்க. நான் கேட்டுக்குறேன்" என அவள் சலிப்பாகப் பேசவும்.

" நோ வே, இப்படிச் சலிச்சுகிட்டு எல்லாம் வேணாம். என்னைப் பொறுத்தவரை, இட் ஸ் வெரி ஸ்பெஷல்." எனப் பிகு செய்தான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரிந்தவளுக்கு, கைலாஷின் பாருவெல்லாம் நினைவில் வர, நேற்று கேட்ட காதல் காவியமாய் அதை உணர்ந்தவள், கைலாஷ் இடத்தில் ராமையும், பாரு இடத்தில் தன்னையும் தான் கற்பனை செய்ததை நினைத்துப் பார்த்தாள்.

கன்னங்கள், அவளறியாமலே செம்மையுற, நேற்றைய நினைவு, இன்று நிஜமாகிறதோ, என நெஞ்சம் சிலிர்த்தது.

அந்தி சாயும் நேரம், இத்தனை நேரம் பாசப் போராட்டத்தில் சிக்கித் தவித்தவள், அதை ஓரம்கட்டி, அவனின் காதல் மழையில் நனைய தயாரானது புரிந்தது. அபிராம் சத்தமின்றி, அவளின் அருகே வந்து கை கோர்த்தவன், " ஆரா பேபி, என் கூட வர்றியா" என ரகசியமாகக் கேட்க, அவளும் தலையசைத்து அவனோடே நடந்தாள்.

எதிர் பட்ட தொழிலாளர்கள், தங்களுக்குள்ளாகவே ஜாடை, மாடையாகச் சிரித்துச் சென்றனர். ஆனால் தன் நிலவுப் பெண்ணின் அருகில் நடந்தவனுக்கு, அதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவள் யாரெனத் தெரியும் முன்னே அவளுக்காகத் தேடி அலைந்தவனாயிற்றே. இப்போது அவள் மாமன் மகளென அறிந்ததில், தங்கள் காதலுக்கு, பெரிய தடை இருக்காது என்றே தோன்றிவிட, சந்தோஷமாக ஆதிராவுடன் டூயட் பாட வந்து விட்டான், அவளின் ராம்.

அதிலும் தன் பாபாவிடமே கோபித்துக் கொண்டு, உணர்ச்சி பிழம்பாக இருந்தவள், நொடியில் மாறி, நேசப்பூவாக மலர்ந்ததில், தன் மேலும், தன் காதல் மேலும் அவனுக்குக் கர்வமே தோன்றியிருந்தது. ஸ்வீட் நத்திங்க்ஸாகப் பேசி அவளைச் சிரிக்க வைத்தே வந்தவன், கெஸ்ட் அவுஸை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.

தன் குடும்பத்தின் பாசத்தை வெளிப்படையாகக் கொண்டாட, சீராட முடியாத இந்த நிலவுப் பெண்ணுக்கும், அபிராமின் நேசத்திலாவது, முழுமையாக மூழ்க வேண்டும் என்று தோன்றியது.

கே ஆர் மில்ஸ் கெஸ்ட் ஹவுஸின், பக்கவாட்டு அறையை நோக்கி, இவ்வளவு நேரமிருந்த இடைவெளிக் குறைத்து, அவள் கரம் பற்றி அவள் தோளோடு அணைத்தபடி அவன் நடக்க அவள் ஆட்சேபனையாகப் பார்த்தாள்.

அதைப் பொருட்படுத்தாதவன், "இப்படி எல்லாம் முறைக்காத கண்ணு, ஜஸ்ட் ஒரு சர்ப்ரைஸ், அதுக்காகத் தான்" என அவளை நயந்தபடி கதவு வரை உரிமையாக அழைத்துச் சென்றவன், ஒரு கர்ஃசீப் எடுத்து அவள் கண்களில் கட்டினான். "ராம் சார், க்யா கர்தே ஹை" என அவள் சிணுங்க.

" ஸ்ஸ்ஸ்… ஒரு நிமிசம்" எனக் கதவைத் திறந்து விட்டு, விளக்குகளை ஒளிரவிட்டு, அவளை உள்ளே நடத்திச் சென்றவன், அவள் கண்களைத் திறந்து விட்டு, அவள் முன் மண்டியிட்டு ரோஜாப்பூக்களோடு நின்று,

" மேரி சப்னோங்கி ராணி,

பிஜ்லி ஸி முல்கி.

சாந்த் ஜைஸி ப்யாரி

மன் ஹரன் கர்னே வாலி லட்கி.

மாமா கீ லாட்லி!

க்யா தும் முஜ் ஸே ப்யார் கரோகி

க்யா தும் முஜே ஷாதி கரோகி.

க்யா தும் மேரி காவாலி ஹோகி

என அடுக்கடுக்காய் ஹிந்தியில் ஷாயரி சொல்லி, அவளிடம் தன் மனதின் ஆசைகளை முன் மொழிந்து , கையில் ரோஜாவோடு, ஒரு கால் மடக்கி மண்டியிட்டு அவளிடம் நீட்ட , ஆதிரா இரு கைகளாலும் வாயைப் பொத்தி அதிர்ச்சியில் சிலையாய் சமைந்து நின்றாள்.

" பார்த்த நொடியில் என்னைக்

காதல் பித்தனாக்கிய

என் கனவு ராணியே!

மின்னல் பெண்ணே!

நிலவு போல் குளுமையானவளே!

என் மனதைக் கொள்ளைக் கொண்டவளே!

என் மாமன் மகளே!

நீ என்னை நேசிப்பாயா?

என் மனையாளாகி ,

எனை முழுமையடையச் செய்வாயா?

ஆரா பேபி… ஐ லவ் யூ!.

வில் யூ மேரி மீ!

என , தேர்ந்த ஒரு காதல் படத்தின் காட்சியமைப்பு போல், அந்த அறையை வண்ண விளக்குகள், அலங்கார பூக்கள், இதய வடிவ பலூன்களால் அலங்கரித்து, மயனை வைத்து அலங்கரித்த, மன்மதன் மாளிகை போல் மாற்றி, கையில் ரோஜாக்களைத் தாங்கி, கண்களில் காதலைத் தாங்கி, அவள் இதயத்தை யாசிப்பவன் போல் அபிராம், அவளைக் காதலோடு பார்த்திருக்க.

இத்தனை அன்புக்கும், காதலுக்கும் தான் தகுதியானவளா என ஒரு கணம் யோசித்த போதும், அபிராமின் காதலுக்கு மறு மொழியாக, எதிர் வினையாற்றி, கண்ணீரோடு, அவனைக் கட்டிக் கொண்டாள் ஆதிரா.

" ஐ லவ் யூ ராம். மை ஆப்கேலியே சஹி ஹூம் யா நஹி, முஜே நஹி பதா. நான் உங்களுக்கானவளான்னும் தெரியாது. பட் ஐ லவ் யூ. " என அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்.

" எனக்கு, பிறந்ததிலிருந்து உறவுகள் நிலைச்சதே இல்லை. ஆயி பாபாவை விட்டே பிரிஞ்சு தான் இருந்திருக்கேன். என் லிபியில் என்ன எழுதியிருக்குன்னு தெரியாது. பட் ஐ லவ்யூ"

" எனக்கான ப்யாரை உங்கள் கண்ணில் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இதுவே போதும். ஐ யம் ஆல் ஸோ, ஸ்பெஷல் டு சம் ஒன். ஐ லவ் யூ" என அவள் கண்ணீர் வடிய தன் அன்பைச் சொல்ல, அபிராம் வானத்தில் பறந்தான்.

" ஆரா பேபி, நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தாண்டா. உன்னை நான் கற்பனையிலேயே ரொம்ப முன்னாடியே பார்த்துட்டேன். உன்னைக் கண்டுபிடிக்கத் தான் லேட்டாகிடுச்சு" என அவனும் தன் மனதைத் திறந்து காட்டினான்.

அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த ஹோபாவில் அமர்த்தி, அவனுக்குப் பிடித்த ரசகுல்லாவை அவளுக்கும் ஊட்டி, அவளிடமிருந்தே தானும் பெற்றுக் கொண்டவன், தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் உணர்ச்சி வயப்பட்டவனாகப் பிதற்ற ஆரம்பித்தான்.

அவளைப் பார்த்த தினத்திலிருந்து, பெங்களூர் வீதிகளை வலம் வந்தது, அவள் அடையாள அட்டையைக் கண்டெடுத்தது, என ஒவ்வொன்றாய் சொல்லி வர, அவன் தவிப்பே அவளுக்கு அத்தனை சந்தோஷத்தைத் தந்தது. படியா, மஸ்து, படியா மஸ்துஹை என அவள் அவன் பேச்சுக்கு மறு மொழி தர, அபிராம் அவள் அத்தனை செய்கைக்கும் அகம் மகிழ்ந்தான்.

அவர்களின், முதல் அணைப்பு, முதல் மோதல் என அத்தனையும் அவன் பகிர, " இவ்வளவு ஆசையையும் வச்சுக்கிட்டு, எப்படி ஜென்டில் மேன் வேஷம் போட்டிங்க" என அவள் விளையாட்டாகக் கேட்க,

" எல்லாக் காதலுக்கும் வில்லன் அப்பாக்கள் தான். ஆனால் சர்ப்ரைசிங்லி என் அப்பா, என் லவ்வுக்கு எதிர்ப்பே சொல்லலை. யாரு எனக்கு வாழ்க்கை துணைனா, எப்படி இருக்கனும், அது, இதுன்னு நான் லவ் பண்ணவே காரணமா இருந்தாரோ, அதே மாமா தான், நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னதையும் எதிர்த்தார்" என விசயத்தை அவனறியாமலே போட்டு உடைத்தான் அபிராம்.

அதிலேயே அவளுக்கு முகம் மாறியது, இருந்தாலும் விசயம் அறியும் விதமாக, " ஏன் பாபாசாப், என் மேல அவ்வளவு பாசமா இருக்காங்களே. நமக்குத் தான், இன்னைக்கு அவங்க தான், என் பாபான்னு தெரியும். ஆனால் பார்த்த நிமிசத்திலிருந்து, நான் அவுங்களுக்கு, அதே ரஜ்ஜும்மா தானே. அப்புறம் ஏன் வேண்டாம்னு சொன்னாங்க " என அவள் வினவவும்,

தோளைக் குலுக்கியவன், " மே பி, உன்னைப் பார்க்கவும், ரியலா ஒரு அப்பாவா ஃபீல் ஆகியிருப்பார். அதுனாலயா இருக்கும்" என மழுப்பினான்.

" இல்லை, நீங்க தான் எதையோ மறைக்கிறீங்க. நீங்க இன்னைக்குத் தான் இவ்வளவு ப்ரியா பேசுறீங்க. நான் யார் மகள்னு தெரியவும் தான், வேகமா ரியாக்ட் செஞ்சீங்க. இப்போ எப்படி மாமா நோ சொல்லுவார்னு சொன்னீங்க. " என அவள் அடுக்கவும்,

" ஆமாம் பேபி, தடை தகர்ந்த சந்தோஷம் தான். இனிமேலும் வெயிட் பண்ண முடியாதுன்னு உன்கிட்ட சொல்லிட்டேன்" எனக் கண்ணால் சிரித்தவன், அவளின் முகத்தை மறைத்த முடிக் கற்றைகளை ஒதுக்கி சீராக்கவும், அவன் தொடுகையில் சிலிர்த்தவள்,தன்னை சமாளித்துக் கொண்டு,

" பேச்சை மாத்தாதீங்க. பெங்களூர்ல பார்த்ததைக் கூட இன்னைக்குத் தான் சொல்றீங்க. என்னை ஞாபகமே இல்லையோன்னு, பாபாசாப் கிட்ட கூடக் கேட்டேன்" என அவள் விளக்கம் கேட்கவும்.

" மாமா என்ன பதில் சொன்னார்" என வினவினான். " நீங்களே மறந்ததை , ஞாபகப் படுத்த வேண்டாம்னு சொன்னார்" என அவன் கண்ணை நோக்கி நேராகச் சொல்லவும், அவனும், ஒரு பெரு மூச்சோடு, "அதே தான். பெங்களூரிலிருந்து அவ்வளவு ஆசையா வந்தேன். தடா போட்டுட்டார். என்னை மீறி தான், ஆதிராக்கிட்ட போகனும்னு சொல்லிட்டார்" என வருந்தினான்.

அந்த வார்த்தைகளில் அவளுக்கும் வருத்தமாக இருந்தது, " நீங்க ஏன்னு கேட்கலையா" எனக் குறுக்கு விசாரணை செய்தாள். அவன் அமைதியாக இருக்கவும், " சொல்லுங்க ராம். பாபாசாப் என்ன சொன்னார்" என விடாமல் கேட்டாள்,

" இப்ப அதுவா பிரச்சினை, நான் உன்னைக் காதலிக்கிறேன். அது மட்டும் தான் நிஜம். வேறெதையும் கேட்காத. முன்னை சொன்ன காரணமெல்லாம், இப்போ அடிபட்டு போயிடுச்சு" என அவன் பேச்சை முடித்தவன், " அப்பா, அம்மா, ரஞ்சி வந்திருப்பாங்க. வீட்டுக்கு போவமா. உன்னைப் பார்க்க ஆசையா இருக்காங்க" என வினவினான்.

" நீங்க இன்னும் என் கேள்விக்குப் பதிலே சொல்லலை. இட்ஸ் ஓகே. நான் நேரா பாபாசாப் கிட்டையே கேட்டுக்குறேன். பிகாஸ் நீங்க என்னை விட அவருக்கு ரொம்ப க்ளோஸ். அப்ப உங்களுக்காகத் தான் வேண்டாம்னு சொல்லியிருப்பார். அது ஏன்னு எனக்குத் தெரியனும்" என அவள் உறுதியாக இருக்கவும்.

" அம்மா தாயே, இப்போ போய், அவர்கிட்ட இதைக் கேட்காத. வேற வினையே வேண்டாம். நான் அப்பா மூலமா, நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்குறேன்" என அவசரமாகச் சொன்னான்.

" அது தான் ஏன் " என அவள் விடாப்பிடியாக நிற்கவும், இவள் நிச்சியம் இரண்டு பிடிவாதக்காரர்களுக்குப் பிறந்தவள் தான் என உறுதிக் கொண்டவன், " உனக்குப் பின்னாடி, பெரிய ஆபத்து இருக்கு. நீ எனக்கு வேண்டாம்னு சொன்னார். போதுமா. அன்னைக்கே நான் உனக்காக, எப்பவுமே எதிர்த்துப் பேசாத என் மாமாவை எதிர்த்து, உனக்காகப் பேசிட்டு வந்தேன்" என அவன் போட்டு உடைக்கவும், அந்த விசயம்போலே அவள் மனதும் உடைந்தது.

'இதை எப்படி நான் மறந்தேன்' எனத் தனக்குள்ளாக அதிர்ந்தவள் , கண்ணீர் வழிய, " யெஸ், ஹீ இஸ் ரைட். பத்து நாளா, யாரும் என்னை ஃபாலோ பண்ணுவாங்களோங்கிற பயம் இல்லாமல் இருக்கவும், நான் நிஜத்தை மறந்துட்டேன். பாபா சரியா தான் சொல்லியிருக்கார். ஏன் அஜ்ஜோ வே சரியா தான் சொல்லியிருக்கார். நான் ஒரு ஆஃபத்-ஆபத்து, டேஞ்சரானவள் தான். நான் உங்களுக்கு வேண்டாம்" என முகத்தைப் பொத்திக் கொண்டு அவள் அழவும்,

" ஆரா, இல்லைடா, இங்க பாரு. நான் உனக்காக இருக்கேன்" எனச் சமாதானம் சொல்ல வந்தவனை, கையை நீட்டித் தடுத்தாள்.

" நோ, இன்னொரு கைலாஷோ, பாருவோ உருவாக வேண்டாம். இதோட நிறுத்துங்க. நீங்க ப்ரபோஸ் பண்ணதையே மறந்துடுங்க" என்றவள், வெறி பிடித்தவளாக, அந்த அறையின் அலங்காரத்தைப் பிய்த்து வீசி, சேதப்படுத்த, " ஆரா" என அதட்டலோடு, அபி அவளைப் பிடித்து உலுக்கினான்.

" என்னோட பாபாவுக்கு, அஜ்ஜோவுக்கே, நான் டேஞ்சரஸா தெரியிறேன். இதுக்கு மேல என்ன வேணும். ஆயியும் இதனால தான் பாபாவை விட்டு ஒதுங்கி இருந்திருப்பாங்க. நோ வேண்டாம்" எனக் கண்ணீரைத் துடைத்தவள், ஒரு முடிவோடு தனது ஆயிக்கு போன் போட முனைய அதே நேரம், கௌரி மாஸியிடமிருந்து அவளுக்குப் போன் வந்தது.

இந்த நேரத்தில், தன் மனக்குமுறலை இறக்கி வைக்க, ஆயியை விட, தன் மாஸியே சிறந்தவர் என நினைத்த ஆதிரா, " மாஸி" என வெடித்துச் சிதறி, தன் மனக் குமுறல்களை அவரிடம் கொட்ட, " முலே, முலே" என அவளைத் தேற்றினார் கௌரி.

" மாஸி, நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க. நான் அங்க வர்றேன். முஜே, ஆப் கி கோத் மே ஸோனா ஹை" என அழவும். " நாளைக்குக் காலையில, கோவை வந்துருவேண்டா, அது வரைக்கும் பத்திரமா இரு. யார் கண்ணுளையும் பட்டுறாத. " என அவர் அவசரமாகச் சொல்ல,

" இல்லை மாஸி, இன்னும் ஒரு நாள் இருந்தா, பாபாக்கிட்ட எல்லாத்தையும் உளறிடுவேன். அவருக்கு ஆயி உயிரோட இருக்கிற விசயமே தாங்க முடியாது. " என அவள் பிதற்றவும்,

சற்று நேர அமைதி. பின் " சரி முலே, நீ கிளம்பிட்டு ஒரு போன் போடு. நான் தீதிட்ட சொல்லிட்டு, உன்னைப் பிக்கப் பண்ண ஏற்பாடு பண்றேன். ஆனால் தனியா வரக் கூடாது" என அவர் ஆயிரம் பத்திரம் சொல்லவும், சரி, சரி எனத் தலையை ஆட்டினாள் ஆதிரா.

அவள் பேசிய அத்தனையையும், ஒரு கையாலாகாத தனத்தோடு, இறுகிப் போய்ப் பார்த்திருந்தான் அபிராம். ஆதிரா, அவனைத் திரும்பியும் பார்க்காமல், தன் முகத்தைக் கழுவி தன்னைச் சீர் படுத்திக் கொண்டவள், ஆவேசம் வந்தவளைப் போல், கே ஆர் மாளிகையை நோக்கி நடந்தாள். அவனும் எதுவும் பேசாமல் கூடவே நடந்தான்.

வரும் வழியிலேயே, பைரவியின் போன் வந்தது. கௌரி சொல்லித் தான், பைரவி போன் செய்கிறார் என நினைத்தவள், தன் குரலை செருமிக் கொண்டு, " ஆயி" என்றாள்.

" க்யா முலே, ஆயி மேல இருந்த கோபம் போயிடுச்சா" என இயல்பாகக் கேட்கவும்,

" போயிடுச்சு ஆயி. ஒளிஞ்சு மறைஞ்சு வாழறவங்களுக்கு, குஸ்ஸா கர்னா, ப்யார் கர்னா , யே ஸப் டீக் நஹி. நம்மளோட சேர்ந்து, நமக்குப் பிரியமானவங்களுக்கும், ஆபத்தை வரவழைச்சுடுவோம். நீங்கள் சரி தான். பாபாவை விட்டு வந்ததும் சரி தான். இப்படி ஒரு முல்கி இருக்கிறதே அவருக்குத் தெரிய வேண்டாம். நானும் வந்திடுறேன். மாஸி கூப்பிட வறேன்னு சொல்லியிருக்காங்க. அவங்களோடு, அடுத்தத் தலை மறைவு வாழ்க்கைக்குப் போறேன்" என அவள் முழுவதும் மராத்தியிலேயே, அபிராமுக்கு புரியக் கூடாது எனப் பேச, " ரஜ்ஜும்மா, கௌரி ரொம்ப நாளா தொடர்புலையே இல்லை. நான் பேசிட்டு சொல்றேன்" எனப் பைரவி பதட்டமாகப் பேசி விட்டுப் போனை வைத்தார்.

பைரவி பேச்சின் கடைசிப் பாதி அவள் காதில் விழவே இல்லை. போகட்டும் என மாளிகையை நோக்கி நடக்க, வாசல் படி ஏறும் போது கைலாஷின் போன் வந்தது. அதை எடுக்காமலே உள்ளே சென்றவளை, இருவர் குடும்பமும் வரவேற்றது.

" ரஜ்ஜும்மா, இங்க வாடா. உனக்குத் தான் போன் போட்டேன், நீயே வந்துட்ட பாரு. இதோ பார், ரஞ்சி டார்லிங், இவளை உன் ப்ரெண்ட் ஆக்கிக்கோ" எனக் கைலாஷ், ஆதிராவை அழைத்து, ரஞ்சிதா, கஸ்தூரியை அறிமுகப் படுத்தி வைக்க, " ஹாய், ஆதிரா உங்களை எப்படிக் கூப்பிடுறது. அக்கான்னு கூப்பிடவா" எனத் தன் தமையனைப் பார்த்தபடி, ரஞ்சி வம்பிழுக்க, ஆதிரா சம்பிரதாயமாகச் சிரித்தாள்.

அதற்குள், சௌந்தரி, கஸ்தூரியிடம், ஆதிராவைப் பற்றிய தன் கணிப்புகளைத் தெரிவித்திருக்க, " ஆமாங்கம்மா, அப்படித்தானுங்க தோனுது. ஏன் கண்ணு, முகமெல்லாம் வாடியிருக்கு. யாராச்சும், எதாச்சும் சொன்னாங்களா" எனக் கரிசனையாக அவர் வினவவும், அவளுக்குக் கண்ணைக் கரித்தது. " இல்லை ஆண்டி. கொஞ்சம் டயர்டா இருக்கு. நான் ரெப்ரெஸ் ஆகிட்டு வர்றேன்" என அவள் விடை பெற.

" ஆது கண்ணு, இந்தா உங்க ஊரு பலகாரம் எல்லாம் இருக்கு, சாப்பிட்டு போ" எனச் சௌந்தரி அழைப்பு விடுத்தார். " இட்ஸ் ஓகே" என்றவள்,இரண்டு ஜோடி அப்பா மகன்கள் பார்வையையும் தவிர்த்து, மாடி ஏறினாள்.

" என்னங்கம்மா, இந்த அண்ணி சரியாவே பேச மாட்டேங்கிறாங்க" என ரஞ்சி சிணுங்கவும்,

" மதியத்திலையே, உன் அப்புச்சியும், மாமனும் அந்தப் பொண்ணைப் போட்டு வறுத்து எடுத்துட்டாங்க. அப்புறம் எப்படிப் பேசும். பாவம் யார் பெத்த புள்ளையோ" என்றார் சௌந்தரி.

" அம்மா, ரஜ்ஜும்மா சும்மா இருந்தாலும், நீங்க ஏத்தி விடுங்க. கீழ வரட்டும், நான் எப்படிச் சமாதானப் படுத்துறேன் பாருங்க" என்ற கைலாஷ், மருமகன் முகம் விழுந்து கிடப்பதைப் பார்த்து, " என்னங்க மாப்பிள்ளை, என்ன விசயம்" என்றார்.

அவன் ஆதிரா வருகிறாளா, என அவள் வழியையே பார்த்திருந்தான். இன்று அவள் எங்குச் சென்றாலும், அவளோடே சேர்ந்து செல்வது என்ற உறுதியோடு இருந்தான். அதனால் தான் அவளைத் தடுக்காமல் பின் தொடர்ந்தே வந்தான்.

விஜயனுக்குப் பைரவியிடமிருந்து போன் வந்தது, தனியே சென்று பேசியவர், " நீங்க கவலைப் படாதீங்கமா. அப்படி எல்லாம் ராஜா விட மாட்டான். அப்படியே உங்க மகள், பிடிவாதம் பிடிச்சாலும், என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறேன். நீங்க வாங்க பேசிக்குவோம்" என மீண்டும் ஹாலுக்கு வந்தவர், ஆதிராவின் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.

அரை மணி நேரம் கழித்து ஆதிரா, தன் உடையை மாற்றி, சிறிய பேகில், இரண்டு செட் உடைகள் அடங்கிய பேகோடு, ஒரு கைப்பையும், செல் போனையும் பற்றியபடி கீழே வந்தாள். உணர்ச்சிகள் துடைத்த முகமாக, பல முறை ஒத்திகைப் பார்த்தது போல், மனப்பாடம் செய்த வசனத்தை ஒப்பித்தாள்.

" என் குடும்பம், என்னைக் கூப்பிட வர்றாங்க. கௌரி மாஸி என்னைக் கூப்பிட வர்றாங்க. இவ்வளவு நாள், எனக்கு அடைக்கலம் கொடுத்ததுக்கு நன்றி. இனிமே என்னால உங்க குடும்பத்துக்கு, எந்த ஆபத்தும் கிடையாது" எனக் கை கூப்பிப் பொதுவாகச் சொல்லவும், அனைவரும் அவளையே பார்த்திருந்தனர்.

" ஆது கண்ணு, எங்க கண்ணுப் போற, உன் பாபாவுக்குப் பொண்ணு பார்த்து தர்றேன்னு சொன்னியில்ல . அதுங்காட்டியும், என்ன வந்தது கண்ணு" எனச் சௌந்தரி பதறினார்.

" அப்போ, நான் சொன்னது சரிதான், சொத்தை அடிக்க வந்திருக்க, இப்ப அதைக் கண்டுக்கிட்டோங்கவும், சொல்லிக்காமல் போறியாக்கும்" எனப் பாலநாயகம் கேலி செய்தார்.

" ஆமாம், அது தான் பெரிய டிடெக்டிவ் இருக்கீங்களே. எதையாவது திருடி, மாட்டிக்கிட்டேனா. அதுக்காகத் தான் போறேன்" எனத் தாத்தாவுக்குப் பதில் தந்தவள்,

" நான் கிளம்புறேன், பாபாசாப். பத்து நாள், என்னைப் பாதுகாப்பா வச்சுக்கிட்டதுக்கு, ரொம்பத் தாங்க்ஸ்" என்றாள். அதைச் சொல்லும் முன்னே அவளுக்குத் தொண்டைக் கட்டியது.

கைலாஷ், அவள் பார்வைக்கு நேரே வந்து நின்றவர், " மத்தியானம், உனக்கு உரிமையில்லைன்னு சொன்னேனே, அசைக்காகக் கோவிச்சிட்டுப் போறியா" என அவள் முகத்துக்கு நேரே குனிந்து பார்த்துக் கேள்வி கேட்கவும்,

மறுப்பாகத் தலையாட்டியவள், " ஆயி, இங்க உங்க மில்ஸ க்கு வரமுடியாது. செக்யூரிட்டி ரீசன். அவங்க இடத்துக்குத் தான் நான் போறேன். வண்டி அனுப்புவாங்க. உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னாங்க" என அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டே சொல்லவும்,

" ஜூட், பொய். நீ சொல்றது எல்லாமே பொய். இப்பச் சொன்னது எல்லாத்தையும், அப்படியே, என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. நான் விட்டுடுறேன்" எனக் கைலாஷ் உறுதியாகச் சொல்லவும், ஆதிரா தலையைக் குனிந்தபடியே நின்றாள்.

" ஏங்கண்ணு, இருட்டினப் பொறகு போகாட்டி என்ன. உங்க அம்மாவை நாளைக்கு வரச் சொல்லு, ஆர அமர பேசிட்டு, அழைச்சுட்டு போகட்டும்" எனச் சௌந்தரி சொல்லவும், " ஆமாம் கண்ணு" எனக் கஸ்தூரியும் ஒத்து ஊதினார்.

ஆதிரா, அமைதியாகவே நிற்கவும், அவள் தாடையை உயர்த்தி, தன் முகத்தைப் பார்க்க வைத்தவர், " உனக்குப் பாபா மேல, எதாவது கோபமிருந்தாலும், நேராச் சொல்லு. நான் மதியம் திட்டினது கூட, என் மகள்ங்கிற உரிமையில தான். உன் ஆயி இங்க வந்து கூப்பிடட்டும். இல்லை நான் வந்து அவங்கக்கிட்ட உன்னை ஒப்படைக்கிறேன். தனியாவெல்லாம், என் ரஜ்ஜும்மாவை அனுப்ப முடியாது போடா" என நா தழுதழுக்கவும்,

கண்ணீர் முத்துக்களாக உகுத்தவள், " நான் இங்க இருக்கிறது, உங்க எல்லாருக்குமே ஆபத்து தான். அஜ்ஜோ, சரியாத் தான் சொன்னாங்க. எதுவா இருந்தாலும், எங்களோட போராட்டம், எங்களோடையே முடியட்டும்" என அவள் கைலாஷ் முகத்தைப் பார்க்காமலே சொல்லி முடித்தாள்.

" இது தான் உன் முடிவுன்னா, வா நானே கொண்டு வந்து, உன்னை உரியவங்கள்ட்ட ஒப்படைக்கிறேன். உன் ஆயி எங்க இருக்காங்கச் சொல்லு" எனப் பிடிவாதம் பிடித்தார் கைலாஷ்.

" எனக்குத் தெரியாது. என் ஆயி எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது. என் பாபா யாருன்னு எனக்குத் தெரியாது. இந்தக் காரில் ஏறு, இந்த ஊருக்குப் போ. இவுங்க உன் கூட இருப்பாங்கிறது மட்டும் தான் எனக்குத் தெரியும். இப்பவும் யாராவது வந்திருப்பாங்க. நான் போறேன்" என ஆதிரா சொல்லச் சொல்ல, அங்கிருந்த அத்தனை பேருக்கும் உருகித் தான் போனது.

" இப்படி ஒரு பொழப்பா" என்றார் தாத்தா. " அது தான் என் லிபி. " என்றவள், கிளம்ப எத்தனிக்க, கைலாஷ் அர்த்தமாக, தன அம்மாவைப் பார்த்தார். அவரின் குறிப்பை புரிந்து கொண்ட சௌந்தரி, " நாளும், கிழமையுமா, ஒரு கன்னிப் பொண்ணு, இப்படி அழுது தவிச்சு போகாத. வயிறு நிறைஞ்சு, மனசு குளிர்ந்து தான் போகனும்" என அவளை அழைத்து உட்கார வைத்தவர், செல்லியிடம் சொல்லி, சாப்பாடு கொண்டுவரச் சொல்ல , அவள் வேண்டாமெனப் பிடிவாதமாக மறுத்தாள்.

" சரி, பால் கலந்து எடுத்து வரச் சொல்ல," எனக்குப் பால் வேண்டாம், என அதையும் மறுத்தாள்.

"அம்மா,ராஜும்மாவுக்கு இந்த நேரம் என்ன வேணும்னு எனக்குத் தெரியுங்க, நானே போயி, கட்டாச் சாய்க் கொண்டு வரேன் , நீங்க பேசிட்டு இருங்க " என ராஜன், அடுப்படிக்குள் செல்ல, கஸ்தூரி , " என்னங்கண்ணா செய்யோணும் " என உடன் சென்றார்.

"நீ இருமா,நான் ரஞ்சியைத் துணைக்கு வச்சுக்குறேன்" என விஜயன் மகளைத் துணைக்கு அழைத்துச் சென்றவர், ரகசிய கட்டளையாக எதையோ எடுத்து வரச் சொல்ல, விஜயன், ஆதிராவிடம் சமாதானம் பேசினார். ஆனால் எதையும் காதில் வாங்கும் நிலையில் ஆதிரா இல்லை.

மாமனும்,மருமகளுமாக , ஆதிராவுக்காகக் கட்டா சாய் எனும் பால் இல்லாத தேநீரை கொண்டு வந்து, அவளருகில் அமர்ந்தனர். கைலாஷ் ஷோபாவில் அத் தானும் பக்கத்தில் அமர்ந்து , அவள் தலையைக் கோதியபடி தேநீரை அவளுக்குப் புகட்டினார். ஆதிராவுக்குத் தன்னைச் சமாளிப்பதே பெரும் கஷ்டமாக இருந்தது. "என்னடா , பாபாவை இப்படித் திடீர்னு விட்டுட்டு போறேங்கிற" எனவும் அவள் கண் கலங்க, " சரி, சரி ஒன்னும் சொல்லலை, உங்க மாஸி எங்க வருவாங்க " என விவரம் கேட்டார்.

"கிளம்பிட்டு,போன் போட்டா, பிக்கப் பண்ணிக்குங்க" எனத் தேம்பியபடியே சொல்லவும், "சரி, போன் போடு " என்றார், அதே நேரம் , கௌரியிடமிருந்து ஆதிராவுக்குப் போன் வந்தது. " இதோ கிளம்பிட்டேன் மாஸி" என அவள் பேசும் போதே, போனை வாங்கிய கைலாஷ், கௌரியிடம் விவரம் கேட்டார்.

" சரிங்கமா, வாங்க. நான் கூட்டிட்டு வர்றேன்" எனப் பதிலலித்தார். விஜயனும், அபிராமும் பதட்டமாகப் பார்த்திருக்க, ராஜன் அமைதி காக்கச் சொல்லி சைகை காட்டினார்.

ஆதிராவை , கௌரி மாஸியிடம் ஒப்படைத்தனரா. அவர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார். யார் கையில் இந்த நிலவு அகப்படும். பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவு வளரும்.


No comments:

Post a Comment