சிந்தா-ஜீவநதியவள் -17
"ஐஞ்சு ரூவா மஞ்சை சீலை புள்ளை
அவளைப் பார்த்தால் சின்னப் புள்ளை!
ஊதா...கருப்புச் சீலை- புள்ளை உட்காருவேன் பக்கத்தில !
தந்தி மரம் பக்கத்தில உனக்கு தந்தேனடி ஐஞ்சு ருவா !
ஐஞ்சு ரூபாய் மஞ்சள் சீலை புள்ளை
அவளைப் பார்த்தால் சின்னப் புள்ளை !"
என இருளிக் கிழவி, ராகம் போட்டு, கிராமியப் பாடலை, தலையை ஆட்டி பாடிக் கொண்டிருக்க, குமரன் அங்கிருந்த ப்ளாஸ்டிக் குடத்தைக் கவிழ்த்து , மஞ்ச சீலையிலிருந்த தன் முத்தழகியைப் பார்த்து ரசித்தவாறே, கிழவி பாட்டுக்கு ஏற்றது போல் தாளம் தட்ட, அமிர்தா அதனைத் தனது அலைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாள்.
இந்த கிராமியக் கச்சேரி நடந்தது, எந்த கிராமத்து மேடையிலும் இல்லை, சிந்தாவின் வீட்டுத் திண்ணையில் தான். நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு. மேலப்பூங்கொடி கிராமத்தில் தங்கள் முதல் செயல் திட்டத்துக்காக வேர்கள் அமைப்பினர், தங்கள் பரிவாரங்களோடு இங்கு டேரா போட்டனர். அமிர்தா, நீரஜ், குமரனைத் தவிர ஆணும் பெண்ணுமாக அவர்கள் கூட்டாளிகள் ஐந்தாறு பேரும் வரவுமே, அந்த இடம் திருவிழா பூண்ட பூமியானது.
இருளி இந்தப் பாட்டைப் பாடி முடியவும், " இவ தான் பாடுவாளா, நானும் பாடுறேன் பாரு" என ஆண்டிச்சி கிழவி, அடுத்த பாட்டை அவிழ்த்து விட்டது.
"வெள்ளி புலியருவா விடலைப்பய அடிச்சருவா !
சொல்லி அடிச்சருவா
சொழட்டுதடா நெல்கருதை !
மழைக்கும் கீழே கருதறுத்து
மாராளவு கட்டுக் கட்டி !
மந்தையில வச்சுபுட்டு,
மச்சான் வருவாகண்டு
பார்த்து நிண்டேன்!
உன் மச்சான் சரக்கடிச்சு
சந்தையில மயங்கி கிடக்கான்.
மாமன் வரவா தூக்கிவிட ?
தூக்கி வந்து தந்தேனுண்டா
புள்ளை எனக்கு என்ன தந்திடுவ!
தூரம் தொலைவு போறவுகட்ட
தூக்கி சொமக்க விட்டுடுவேன்!
தூக்கிச் செத்த விட்டேனுண்டா
துணைக்குச் செத்த வந்துடுவேன்!
துணைக்குச் செத்த போனியிண்டு
உன் புருசன் கண்டானுண்டா
உன்னை வச்சு வாழமாட்டான்.
ஆத்தா ஊட்டுக்கு விரட்டிடுவான்! "
என ஆண்டிச்சி வில்லங்கமாகப் பாடவும், அமிர்தா வயிறு குலுங்கச் சிரிக்க, அவளது ஏழு மாத கருவும் குலுங்கியது, " ஏய் அமிர் கேர்புல்" என நீரஜ் பதறவும்.
" ஏய் அம்மிக்கல்லு, பார்த்து மெதுவா சுளுக்கிக்கப் போவுது. என் மருமகனுக்கு எதாவது ஆச்சுனா பாரு" எனக் குமரன் மிரட்டவும்.
" ஏய், கிழவா, நீ தான் அந்தக் கிழவிக்கு ஏத்த மாதிரி தாளமே போட்ட, அதுல தான் எனக்குச் சிரிப்பு வந்தது, ஓவரா சீன் போடாத" என்ற அமிர்தா , " அம்மாச்சி சீரியஸ்லி, இப்படியே பாடுவீங்களா" எனச் சந்தேகம் கேட்கவும். அதில் மகிழ்ந்த இரு கிழவிகளும்,
" ஆமாத்தா, கருவை வெட்டப் போவோம், நாத்து நட, களையெடுக்க,கருது அறுக்க, இப்படி மொத்தமா போவோம். அப்ப அழுப்புத் தெரியாம இருக்க அப்படியே இட்டுக்கட்டி பாடுறது தான்" என்றார் ஆண்டிச்சி. இவர்கள் பாடியதில் அந்த வட்டார மொழியும் பொருளும் புரியாத கோவையிலிருந்து வந்த பெண்கள் , முத்துவிடம் விவரம் கேட்கவும், குமரன் அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் முகம் சிவந்தவளாக ,மேலோட்டமாக அதன் பொருளைச் சொல்லவும், அவர்களும் வாயை பிழந்தனர்.
சிந்தா " இந்தா இரண்டு பேரும் சேர்ந்து, இந்த ஊர் மானத்தை வாங்குங்க. வந்திருக்கவுக என்ன நினைப்பாக" எனக் கிழவிகளைச் சத்தம் போட்டாள்.
" அடிப்போடி இவளே, பாட்டுக் கட்டுற அழகைப் பார்ப்பாகளா, அர்த்தத்தைப் பிடிச்சிட்டு தொங்குறவ" என அசட்டையாக ஆண்டிச்சி கிழவிச் சொல்லவும்,
" சரியா சொன்னீங்க பாட்டி , சிந்தாக்கா கிராமத்துப் பாட்டை அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" எனக் குமரன் கிழவிகளுக்கு வக்காலத்து வாங்கவும், "அப்படிச் சொல்லுங்க என் ராசா, பெரியவூட்டு புள்ளையே சொல்லிடுச்சு, நீ பேசாத கிட" எனக் குமரனுக்குக்கு இருந்த இடத்திலிருந்தே நெட்டி முறித்துக் கொஞ்சியது ஆண்டிச்சி .
" ஆமாம்மாம், இந்த ஊர்காரவுகளை ஆராய்ஞ்சமுன்னா, உலகம் தாங்குமா. இட்டுக்கட்டி பாடுறதிலையே இம்புட்டு வருது. நிஜத்துக்கு இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ" என வேலுவின் அம்மா ராக்காயி மொத்தமாக ஊர் பெண்களைக் கேவலப்படுத்த, மற்ற இரண்டு கிழவிகளும் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டனர் .
" எச்க ஊரில கேலி முறை பேச்சோட நிறுத்திக்குவோம். உங்க ஊர்ல, அதைச் செஞ்சே காட்டுவீகளாமுல்ல" என இருளியும்.
" அட நீ ஒருத்தி, செய்ததுக்குச் சாட்சியே இவுக தான். வேலு அம்மாளே, இவுகளால தானே போய்ச் சேர்ந்துச்சு. கொஞ்சம் ஆட்டமா ஆடியிருக்கு ,ராஜகெம்பீரமே சிரிப்பா சிரிச்சு போச்சில்ல" என ஆண்டிச்சி வம்பிழுக்கவும்.
" அடியே என் மகன் வீட்டில வந்து உட்கார்ந்து கிட்டு என்னையவே பேசுறீகளா" என ராக்காயியும்.
" எதுடி உன் மகன் வீடு. இது எங்க மருமகன் அய்யனார் வீடு. அவர் மகள் சிந்தா கட்டிக் காக்கிற வீடு" எனவும் அவர்களிடையே பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது. சிந்தா மாமியாரை அடக்க முடியாமல், மற்ற இரண்டு கிழவிகளையும் அடக்கி, " அம்மாச்சி, நான் நல்லா வாழனுமுன்னு நினைச்சேனா. இத்தோட இந்தப் பேச்சை நிறுத்திக்க." எனவும் .
" ஏண்டி நேத்து வந்தவ, இந்த ஒண்ட வந்த பிடாரி உன்னைப் பேசுனது இல்லாம, ஊர்கார பொம்பளைகளையெல்லாம் அந்தப் பேச்சு பேசுது. கேட்க ஆள் இல்லைங்கிற தகிரியம். இரு இன்னைக்கு, இவ வாயைக் கிழிச்சு விடுறேன்" என ஆண்டிச்சி வெகுண்டு எழ, சிந்தா மன்றாடிக் கொண்டிருக்க, ராக்காயி தனியாக அலறியது. அமிர்தா, அவர்களைச் சமாதனப் படுத்த முயன்றாள் , ஆனால் இந்த வாய்ப்பை எதிர் பார்த்தே இருந்தது போல் ஆண்டிச்சி சத்தம் பெரிதாகவே இருந்தது.
"இங்க பாரு, என் பேத்தி புருஷன் வேலுவுக்காகப் பார்க்குறோம், இல்லையினா உண்டு இல்லைனு பண்ணிடுவோம் " என ஆண்டிச்சி எச்சரிக்கை செய்ய, குமரனும் பேசட்டும் என வீட்டுக் கொண்டிருந்தான். முத்துக் குமரனைக் கண்களால் பார்த்து உதவிக்கு அழைக்கவும்,
" ஹலோ பாட்டிஸ், இங்க பாருங்க. இங்க ஒரு நல்ல விசயம் நடக்கப் போகுது பிரச்சனை வேண்டாம். நாளைக்குக் காலையில் ஏழு மணிக்கு வயலுக்கு வந்துருங்க. உங்க செவ்வாய் பாட்டோட சாமியைக் கும்பிட்டுத் தான் செடி நடனும்" என்றவன், இருவரிடமும் ஆளுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டைத் தரவும், ராக்காயி, சண்டை எல்லாரையும் மறந்து, " கட்டாயம் வந்துடுறோம் ஐயா, நீங்க நல்லா இருப்பீக. நீங்க தொட்டதெல்லாம் பாலாப் பெருகும்" என ஆசிகளை அள்ளி வழங்கிச் சென்றன.
அந்த இடத்திலும் சிறிது அமைதி வந்தது. ஆனாலும் ராக்காயி அர்ச்சனை மட்டும் ஓயவில்லை. புழக்கடை பக்கம் சென்று, சிந்தாவை ஜாடையாகத் திட்டிக் கொண்டு தான் இருந்தது. சிந்தா எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தவள், வேறு விசயங்களிலும் முன்னைப் போல் கலந்து கொள்ளவில்லை.
ஒரு பெரிய லாரியில் மூலிகை நாற்றுகள், தானிய வகைகளுக்கான விதைகள், பூ செடிகள், பணப்பயிர்கள் என இவர்கள் திட்டமிட்டதுக்கு ஏற்ப, கோவையிலிருந்து உற்பத்தி செய்து, நேற்றே தென் வயலில் சேர்த்து விட்டனர்.
அய்யனார், பெரிய வீட்டுப் பண்ணையம் பார்க்கும் கருப்பன் மற்றும் அவன் சகோதரன் என இரண்டு மூன்று பேரைத் துணைக்கு வைத்துக் கொண்டு நாற்றுகளைப் பராமரித்தும், அந்த அந்த வயல்களுக்கு அருகேயும் கொண்டு சேர்த்திருந்தார்.
அவற்றைப் பார்வையிட்டு ,அய்யனாரை பாராட்டி விட்டு தான் நீரஜ் , குமரனோடு வந்திருக்க வேர்கள் அமைப்பினர் சிந்தா வீட்டில் வந்து அமர்ந்திருந்தனர். முத்து, சுப்பு கோவை வந்திருந்ததாலும், அமிர்தா, குமரன் மூலம் சிந்தாவின் பணிகளை அறிந்தாலும், அவளைப் பார்த்து பேசவே இவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர். அப்போது தான் , குமரன் கேட்டுருந்ததால் இரண்டு கிழவிகளும் வந்து தங்கள் பாட்டுத் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
அமிர்தா தான் சிந்தாவை இழுத்து வைத்துப் பேசினாள். " அக்கா போனதடவை நான் வந்தப்ப எத்தனை இடத்துக்குப் போனோம், எவ்வளவு பேர்க்கிட்ட பேசினீங்க. இப்ப ஏன்கா இப்படி இருக்கீங்க. உங்க முகமே சரியில்லையே" என விசாரித்தாள்.
" அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நல்லா தான் இருக்கேன். வீட்டு வேலையே சரியா இருக்கு , அது தான் எதுலையும் கலந்துக்க முடியலை. ஆம்பளைங்க மூணு பேருமே வேலை , வேலைன்னு ஓடுறாகளா, அது தான் பார்த்து, பார்த்துச் செய்ய வேண்டியது இருக்கு" என உதட்டை மட்டும் இழுத்துச் சிரிக்க, அவளின் கண்ணை எட்டாத புன்னகையைப் பார்க்கவே சகிக்கவில்லை.
மாலை நேரம் வழக்கம் போல் சத்யாவுக்கு ஏதோ கிண்டி ஊட்டியவள், சிவநேசன் சிந்துஜாவைத் தூக்கி வந்த போது கூட ஆர்வமாக முன்னேற வில்லை. அது தான் சிந்தாவைப் பார்த்துத் தாவி கொண்டு வர, முத்து தூக்கி வந்து அக்காவின் அருகில் வைத்துக் கொண்டாள். அருகில் வந்து, அவளிடம் தாவிய பிள்ளையை மற்றொரு கையில் வாங்கிக் கொண்டவள், " முத்து, இன்னொரு கின்னத்தில வச்சிருக்கேன். எடுத்துட்டு வந்து ஊட்டு" எனவும் முத்து சிந்துஜாவுக்கு ஊட்ட, சிந்தா தன் மகளை மட்டும் வைத்துக் கொண்டாள்.
ஆனால் சிவநேசனும், இது தான் வழக்கம் என்பது போல், குமரன், நீரஜ், மற்றவர்களை அழைத்துக் கொண்டு வயலுக்குள் சென்றுவிட்டான். அமிர்தாவுக்குத் தான் எதுவும் புரியவில்லை.
வேலு தனது வண்டியில் வந்து இறங்கியவன், ஒரு கட்டப்பையில் சில சாமான்களைக் கொண்டு வந்து, திண்ணையில் வைத்து விட்டு, அமிர்தாவை வரவேற்றான். " வாங்க மேடம் நல்லா இருக்கீகளா" எனவும், " ஒரு மாசம் பார்க்கலைனா, மச்சினியெல்லாம் மேடமாயிடுவோமா மாமா" எனச் சிந்தாவை அக்காவெனச் சொல்வதால், அவனை மாமா என ஏற்கனவே அழைத்த முறைக்கு, அமிர்தா வம்பு பேசவும்,
" ஆமாம், பெரிய இடத்தில இருக்கவுக மேடம் தான். அக்காளைக் கட்டினாளும் வண்டிக்காரன், வண்டிக்காரன் தானே. " என அவனும் பதில் பேசவும் " அப்ப நாளைக்கு முத்து வசதியா இருந்தாலும், அவளும் மேடம் தானா" எனக் கேட்கவும்.
" அவுகல தான் ஏற்கனவே மேடம் ஆக்கிவிட்டுட்டீகளே. ஆச்சு அவுகளும் உங்களோட கிளம்பிடுவாகல்ல" எனக் கேலி போலவே வேலி பதில் சொல்லவும்.
" மாமா, சும்மா இந்தக் குத்திக் காட்டுற வேலை எல்லாம் வேண்டாம். நான் படிக்கப் போறது தான் , உங்க பிரச்சனைனா சொல்லுங்க. நான் போகலை. நின்னுக்குறேன். அப்பவாவது எங்க அக்கா சந்தோஷமா இருக்கும்னா சரி தான்" என முத்துக் காட்டமாகப் பதில் தரவும், சிந்தா தங்கையை, " என்னடி வாய் நீளுது. பேசாம இரு" என்றாள். வார்த்தைகள் சத்தமாகவும் பிள்ளைகள் முழித்தன.
அதற்குள் வேலு சத்தம் கேட்ட ராக்காயி, மகனிடம் சற்று முன் நடந்ததுக்குப் பஞ்சாயத்தோடு சேர்த்து ஒப்பாரியம் வைக்கவும், சிந்துஜா அழ ஆரம்பித்தது. சிந்தாவுக்குச் சங்கடமாக இருந்தது. வேலு சின்னம்மாவை, " பேசாத இரு, இரவைக்குப் பேசிக்கலாம்" என்றான்.
" இப்பவே ஒரு முடிவைச் சொல்லு, நான் கிளம்பிக்கிறேன். எனக்கு ஒரு பஸ்ஸோ, ரயிலோ கிடைக்காதையா போயிடும்" எனவும், சிந்தா ஜாடைக் காட்ட முத்து அமிர்தாவிடம்,
" அக்கா, காலாற நடப்போமா. இல்லைனா சாரை வரச் சொல்லவா. இந்தக் கிழவி இப்போதைக்கு நிறுத்தாது. ஆளுகளைக் கண்டா ரொம்பக் கத்தும்" எனவும்.
" சரி வா, எனக்கு நடக்கனும் போல இருக்கு. பெரிய வீடு வரைக்கும் நடப்போம் வா" என்றவள் சிந்தாவை திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, முத்து தான் அறிந்தவரை விசயத்தைச் சொன்னாள்.
" நான் கோவையிலிருந்து வந்தப்ப கூட மாமா நல்லா தான் இருந்துச்சு. இந்தப் பத்து நாளா தான் ஏதோ சரியில்லை. அக்கா என்கிட்ட எதுவுமே சொல்லாது. அப்பா, இது புருஷன், பொண்டாட்டி சண்டை கண்டுக்காதண்டு சொல்லிட்டாரு. அப்பா, வயல்ல சாமன் எல்லாம் இருக்குன்னு செட் போட்டிருக்க இடத்துக்குப் படுக்கப் போகுதா, இந்த மாமன் ரூம்புலையும் படுக்காமல், வெளில படுக்குது. இந்தக் கிழவி எதையோ மூட்டி விடுது. மாமாவும் கேட்டுக்கிட்டு ஆடுது. இது எங்கப் போய் முடியும்னு தெரியலை" என நீளமாகப் பேசிக் கொண்டே வரவும் அமிர்தாவுக்கு ஏதோ சந்தேகம் வந்தது.
அமிர்தாவும், முத்துவும் கிளம்பவுமே, ராக்காயி இன்று கிழவிகளோடு வந்த மோதலைச் சொல்லி, " இந்த வீடு உன் வீடு இல்லையாம், இவுக அப்பன் ஊடாம், இவ வீடாம். இம்புட்டு சம்பாரிச்சு போட்டு எல்லாம் செஞ்சும், உனக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா" என ராக்காயி மகனைத் தூண்டி விடவும்.
" அவுக சொல்றது நிசந்தானே இது என்ன நம்ம வூடா, நம்ம ஒண்ட வந்தவுக தானே இன்னும் பத்து நாள் பொறுத்துக்கக் குதிரையெடுப்பு முடிஞ்சு, ஆவணி பொறக்கவும் இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம். அப்புறம் ஆளும் பேரும் வந்திருக்கையில் இப்படிக் கத்தாத, அசிங்கமா இருக்குது ." எனச் சின்னம்மாளை சமாதானம் செய்தவன், சிந்தாவிடம் ஒரு வார்த்தையும் கேட்டான் இல்லை.
அவள் மௌனமாகப் பொட்டு பொட்டாகக் கண்ணீர் வடிக்கவும், " இது ஒண்ணைக் கண்டு வச்சிருக்கா" என ராக்காயி வக்கனை பேச ஆரம்பிக்கவும், வேலு "சின்னவ போன் போட்டா, அவ மகளுக்கு முடியலையாம், நான் பஸ் ஏத்தி விடுறேன், போயி பார்த்துட்டு, நாளைக்கு ரவைக்குத் திரும்பிடு " என இரண்டாயிரம் ரூபாயை நீட்டவும்,
" அவளுங்க தான், என்னை மதிக்கம துரத்தி விட்டாளுகளே, எனக்குப் போகணுமுன்னு எல்லாம் இல்லை, நீ சொல்றியேன்னு வேணா போயிட்டு வாறன் " என வேண்டா வெறுப்பாகக் கிளம்புவது போல் கிளம்ப, நாளை ஆடி பதினெட்டு , பயிர்க்குழி போடும் நாள் , சுபமாக இருக்கட்டும் என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஒரு நாளாவது நிம்மதியாக இருக்கட்டும் எனச் சின்னமாளை வேலு ரோட்டில் கொண்டு போய் , ஆட்டோ ஏற்றிவிட்டான்.
முத்துமணி கோவை சென்ற மூன்றாம் நாள் சுப்புவையும் சிந்தா அனுப்பி வைக்க, அவனுக்குத் தான் அங்குக் கற்பதற்கு நிறைய இருந்தது. முத்துவின் மாற்றத்தைக் கண்டவன், வியந்து அவளிடம் பேசியவன், ஊன்றி எதையும் கவனித்தான் இல்லை. அதே பில்டிங்கில் மற்றொரு தனியறை, வசதி , மற்றும் இந்தச் சொட்டு நீர் விவசாயத்தின் குழாய் பதித்தல் முதலான தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் அதனைக் கற்றுப் பூங்கொடியில் அமைக்க வேண்டிய பணியையும் அவனுக்கே தருவதாகவும் சொல்லவும், மிகவும் ஆர்வமாகவே அதைக் கற்றுக் கொண்டான்
இங்கு ஏற்றத் தாழ்வு இன்றிக் குமரனிடம் கூடப் பழக முடிந்ததை எண்ணியவன், தங்கள் ஊரைத் தவிர மற்ற ஊர்களில் இப்படித் தான் போலும் என்ற முடிவுக்கு வந்தான். ஊரில் முத்துவை காக்கும் பணியை வேலு மேற்கொண்டதால், குமரனின் பார்வை, தன் அக்காவைத் தழுவிச் செல்வதையும் கூட வித்தியாசமாக உணர்ந்தான் இல்லை.
சுப்பு வேலுவிடம், தனக்குக் கிடைத்த வாய்ப்பை பற்றிச் சொல்லவும், "சரிடா, அங்க இருந்து கத்துக்கிட்டு, முத்துவையும் கூட்டிட்டு வா. உங்க அக்கா கிட்ட நான் சொல்றேன்" எனச் சிந்தாவையும் வேலு தான் சம்மதிக்க வைத்தான். இவள் முத்துவைப் பற்றிப் பேச வர , அந்த வாய்ப்பும் நழுவி போனது.
பத்து நாள் கழித்து , குமரனோடே காரில் சுப்புவோடு வந்த முத்துவின், நடை உடை பாவனையில் நிறைய மாற்றம் இருந்தது. அவளது பேச்சில், குமரனை விட அமிர்தாவின் பாதிப்பு அதிகமிருந்தது. " இப்பவே உன் தங்கச்சி பட்டனத்துக்காரியா மாறிட்டா" என வேலு கேலியோடு முடித்துக் கொள்ள, அய்யனார் மகளைப் பார்த்துப் பூரித்துப் போனார்.
சிந்தாவும், வேலையை முடித்துவிட்டு, மகளையும் தூக்கிக் கொண்டே வேர்கள் அமைப்பின் காரியங்களைக் கவனித்தாள். ராக்காயி அந்தச் சமயம் அடக்கியே வாசித்தது. பெரியவீட்டுக்கு போக வர, சிவநேசன் இங்கு வருவது என எல்லாம் இயல்பாக நடக்க, ராக்காயிக்கு புறணி பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
முத்து ஊரிலிருந்து வந்த பிறகு, ஒரு நாள் எதேச்சையாக அவளது போனில் குமரனோடு அவள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான கிழவி, சத்தமில்லாமல் அதைக் களவாடி, மகனிடம் காட்டியது. முதலில் நம்பாமல் பார்த்தவன், சின்னம்மாளிடம், " இதை வெளியே சொல்லாத, அவன் உள்ள வந்தா, எனக்கு மதிப்பு இல்லாமல் போயிடும். இதை நான் பார்த்துக்குறேன்" என ராக்காயி குணமறிந்து விசயத்தைக் கையாண்டவன், கோபத்தை , சின்னாத்தாள் அறிய மனைவியிடம் காட்டினான்.
" மச்சான், நான் உன்கிட்ட இரண்டு மூணு தரம் சொல்லத் தான் வந்தேன்" என அவள் விளக்கம் தர முற்படவும்.
" ஏன் மத்த நேரமெல்லாம் முகூர்த்தம் சரியில்லாமல் போயிடுச்சோ. " எனச் சினம் கொண்டவன், " உங்களுக்கெல்லாம், பட்டாலும் புத்தி வராது. என்னமோ செய்ங்க, தொலைங்க. இதில நான் தலையிட மாட்டேன். உன் தங்கச்சிக்கு ஒரு ரயிலு கிடைக்காமப் போயிடுமா, இல்லை வேலு மாதிரி ஒரு இளிச்சவா பய தான் கிடைக்காமல் போயிடுவானா" என வார்த்தைகளைக் கக்கியவன், அதன் பின் பராமுகமாகவே இருந்தான்.
ராக்காயி சமய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இவர்கள் மன வேறுபாட்டைப் பெரிதாக்கியது. தென் வயலுக்கான பைப்புகள் வந்து இறங்கவும், அய்யனார் தன் ஜாகையை அங்கு மாற்றிக் கொள்ள, வேலு வாசலில் படுக்க வந்தான். அதற்கு முன் தினம், சிந்தாவோடு நடந்த வாக்குவாதமே அவனை வாசலுக்குக் கொண்டு வந்திருந்தது.
ராக்காயி, ஊருக்குள் ஆராய்ந்து அறிந்ததில், சிவநேசனுடன் சிந்தாவை சேர்த்துக் கட்டிய கதையெல்லாம் தெரிய வர, சிந்துஜாவுக்கு இவள் பால் கொடுப்பதையும் முடிச்சிட்டு வேலு இல்லாத நேரத்தில் சிந்தாவை நேரடியாகவே தாக்கி, தன் மகனை அவள் ஏமாற்றுவதாகக் குற்றம் சுமத்தியது.
" அனாவசியமா பேசாதீங்க. என் மச்சானுக்கு என்னைப் பத்தி தெரியும்" எனச் சிந்தா காட்டமாகவே பதில் தந்தவள், பெரிய வீட்டில் ராஜேஸ்வரியின் மடியில் விழுந்து அழுதாள். அவளைத் தேற்றியவர், " உன் புருஷன் உன்னை நம்புறான்ல, அது போதும், மத்த கழுதைங்க என்ன சொன்னாலும் காதில வாங்காத " என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
ஆனால் ராக்காயி மீண்டும் அசிங்கமாகப் பேசவும், " என் புருஷன், அன்னைக்கே சொல்லுச்சு. நீ ஊருக்குக் கிளம்பு. உனக்குப் பாவமே பார்க்கக் கூடாது" எனச் சின்ன மாமியார் துணிகளை, கட்டை பையில் வைத்துக் கிளப்பி விட முனைய, " ஏன் உன் காதல் நாடகம், நடத்த விடாம நான் தடங்கலா இருக்கேனாக்கும், இந்தப் புள்ளைகளை என் மவனுக்குப் பெத்தியா, இல்லை பெரியவீட்டுக்காரனுக்குப் பெத்தியா " எனவும், இதுவரை, இந்த ஊரும், கங்காவும் கூடச் சொல்லாத பழி , வேலுவுக்கு வாழ்க்கை பட்ட பிறகே யாராக இருந்தாலும் அவளைப் பேச பயப்படுவார்கள் , அப்படியிருக்க, இவ்வளவு கேவலமாகப் பேசிய பொம்பளையை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது சிந்தாவுக்கு .
சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்பார்கள் . பொறுமைக்குப் பெயர் போன பூமித்தாய் எப்படிப் பொறுமை மீறி நில அதிர்வாகப் பொங்குவாளோ, அது போல் கோபம் வந்து மாமியாரை அடிக்கக் கையை ஓங்கிவிட்டாள் சிந்தா , அந்த நேரம் வேலு மற்றொரு பதட்டத்தோடு வரவும், ராக்காயி அவனிடம், " உன் பொண்டாட்டி, என்னை வீட்டை விட்டே அடிச்சு துரத்துறா. நான் எங்க போவேன். உன் நல்லதுக்காக அவளுக்குப் புத்தி சொன்னது குத்தமா" என ஒப்பாரி வைக்கவும், சிந்தாவிடம் சென்று " என் ஆத்தாட்ட மன்னிப்பு கேளு" என்றான். சிந்தா தன்னிலை விளக்கம் தர முயன்றாள். வேலு எதையுமே கேட்கத் தயாராக இல்லை, " நான் வேணுமுண்டா என் ஆத்தாகிட்ட மன்னிப்பு கேளு" என்றான்.
" என்னை நடத்தையைத் தப்பா பேசுது. புள்ளைகளை உனக்குத் தான் பெத்தேனான்னு அந்தப் பொம்பளைக்குக் கேக்குது, நீ அதுக்குச் சப்போர்ட் பண்ற" என்றவள், " நான் செத்தாலும் இந்த விசயத்துக்காக மன்னிப்புக் கேக்கமாட்டேன்" என்றாள். வேலு இருந்த உணர்வு நிலையில் சிந்தாவின் வார்த்தைகள் அவனை உசுப்பேற்ற, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
" என்ன பேசறமுன்னு புரிஞ்சு பேசு" என உருமிவிட்டு அவன் வெளியேற, அழுத மகளையும் அணைக்கத் தோன்றாமல் அறையில் அடைந்துக் கிடந்தாள். இது அத்தனையும் முத்துமணி தனது இளநிலை பட்டப்படிப்பின் சான்றிதழ் வாங்க, அய்யனாரோடு சிவகங்கை கல்லாரிக்கு சென்றிருந்ததால் தெரியாது. சிந்தா படுத்தே கிடக்கவும், தங்கையிடம் உடம்புக்கு முடியவில்லை மூன்று நாள் உபாதை எனப் பொய்ச் சொல்ல, அக்காவுக்கு ஓய்வு கொடுத்து தானே சமையல் முதல் வீட்டு வேலைகளைச் செய்தாள்.
வேலு, பொதுவாக மனைவியை இலேசாகக் கடிந்துக் கொண்டாளும் அன்று இரவே, தானே வலியச் சென்று சமாதானம் செய்பவன் ,இந்த முறை கண்டு கொள்ளாமல் விடவும், சிந்தா மனதளவில் ஓய்ந்துப் போனாள். அது முதல் வீட்டை விட்டு வெளியேறினாள் இல்லை. அவர்களுக்குள் பேச்சு வார்த்தையும் இல்லாமல் போனது.
எப்போதும் தோழியைப் பார்க்க வரும் வள்ளியும், குதிரையெடுப்பு வேலை பளுவும் , அவளது உடல் உபாதையும் சேர்ந்து படுத்த, சிந்தா வீடு வரை கூட நடக்க முடியாமல் வருவது இல்லை. முத்துவிடம் சொல்லிவிட்டும் கூட ,அவளைச் சென்று பார்க்கும் மனநிலையிலும் சிந்தா இல்லை.
கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறியும் கூவலாம் என்பார்கள். வேலு தந்த நம்பிக்கையில் ஊரையே எதிர் கொண்டவள், அவன் புறக்கணிப்பில் தனக்குள்ளே உழன்றாள். பெரிய வீட்டுக்கும், இவர்கள் ஊடல் அரசல்புரசலாகத் தெரிய வர , ராஜேஸ்வரி மகனிடம், " இந்த வேலுகிட்ட நீ பேசுவேண்டா " என்றார். மீனாளும், " ஆமாம் அத்தான், சிந்தா இந்தப் பக்கமே வரலை. நீங்க அவள் புருஷன்ட்ட பேசுங்க" என்றாள்.
" இதில நான் தலையிட்டா தான் விசயம் விபரீதமா போகும். அதெல்லாம் இரண்டு பேரும் விவரமானவுக தான், கட்டி உருண்டு கரை ஏறி வரட்டும் விடுங்க " எனத் தாயையும், தாரத்தையும் சமாதானப்படுத்தித் தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.
முத்துக் குமரனிடம் விசயத்தைச் சொல்லவும், அவனும் அண்ணனைப் போலவே , இது கணவன், மனைவி விவகாரம் எனச் சொல்லி விலகிக் கொண்டான். அன்று முதல் சிந்தா வீட்டில் கண்ணாமூச்சி ஆட்டம், அவர்கள் மகன் சத்தியமூர்த்தி, மகள் சத்தியாவை வைத்தே நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆடி பதினெட்டாவது சிந்தாவின் வாழ்க்கையில் மன வருத்தத்தைப் போக்குமா.
நாளை ஆடி பதினெட்டு , ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஊர் மக்களும் ஆடி பதினெட்டை தேங்காய் சுட்டு, பலகாரம் செய்து விமர்சையாய் கொண்டாடுவார்கள். அதோடு நாளை மேலப்பூங்குடி அய்யனாருக்கு , புறவியெடுப்புக்கு மாலை வேளையில் காப்புக் கட்டுகிறார்கள். அதோடு நாளை , வானம் பார்த்த பூமியாம் கிழக்கு சீமையின் தலையெழுத்தை மாற்றும் இந்தப் புது முயற்சியை ,வேர்கள் அமைப்பினர் தொடங்குகின்றனர். இவர்கள் முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.