Tuesday, 10 August 2021

சிந்தா- ஜீவா நதியவள் -10

 சிந்தா- ஜீவா நதியவள் -10

சிந்தா, தன் மகள் அழும் சத்தம் கேட்டவுடன், தன்னை விட்டு இறங்க மறுத்த, சிவநேசன் மகளையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். சிவநேசன் தன் மகள் சிந்தாவிடம் இவ்வளவு ஒட்டுதலோடு பழகி விட்டதா என யோசனையோடு பார்க்கும் போதே, குமரன் அண்ணனின் கவனத்தைத் திசை திருப்பித் தென் வயலுக்குள் கூட்டிச் சென்றான். இந்தப் பத்து நாள் இடை வெளியில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, பதினாலு ஏக்கர் நிலமும் வெட்ட வெளியாகக் காட்சி தந்தது. வெட்டப்பட்ட மரங்களையும் அந்தக் கடைக் கோடிக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தனர்.

அண்ணனும், தம்பியுமாக நடந்தபடியே வயலுக்குள் செல்ல, தூரத்தில் அய்யனார், வேலு, சுப்பிரமணி மற்றும் வேலைக்கு நியமித்த ஆட்களுமாகக் கரி மூட்டத்துக்கு விறகை அடுக்கிக் கொண்டிருந்தனர். கரி மூட்டம் என்பது, காய்ந்த மரங்களை,காற்று புகாதபடி எரித்துக் கரிக் கட்டைகளாக ஆக்குவது. சாதாரணமாக மரத்தை எரித்தால், அது காற்றோடு கலந்து, கரிக் கட்டையாக இல்லாமல் சாம்பலாக உதிர்ந்து விடும். அதற்காக இது போன்று வெட்டப்படும் கட்டைகளை வட்டவடிவமாக அடிமரம், வேர்ப் பகுதியை அடியில் வைத்து அதனைச் சுற்றிச் சுற்றி அடுக்குகளாக அடுக்குவார்கள்.

விறகு அடுக்கப்பட்ட பிறகு, அதன் மேல் வைக்கோல் போட்டு மூடி , ஓரிடத்தில் நெருப்பு பற்ற வைக்க மட்டும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விட்டு, மீதியுள்ள இடத்தில், விறகு, வைக்கோல் அடுக்கு, அதற்கு மேல் மண் கலவையைக் குலைத்துப் பூசுவார்கள். இந்த ஈர மண் கலவையானது, காற்றை உள்ளே அனுமதிக்காது. ஒரு இடம் இடைவெளியின்றிக் களிமண் கலந்து பூசப்படும் போது, மரம் உள்ளேயே புகைந்து, புழுங்கிக் கொண்டு இருக்கும். ஒரு இடத்தில் இடைவெளி விட்ட இடத்தில் துணியில் மண்ணெண்ணெய் நனைத்து, போட்டு நெருப்பைப் பற்ற வைத்து விட்டு, அந்த இடைவெளியையும் வைக்கோல், மண் வைத்து அடைத்து விடுவார்கள். மூன்று முதல் ஒரு வாரம் கழித்து, தண்ணீர் ஊற்றி, இந்தக் கரிமூட்டத்தைக் கலைப்பார்கள். அப்போது உள்ளிருக்கும் விறகு, பெரிதும் சிறிதுமாகக் கரிக்கட்டைகளாக மாறி இருக்கும். அதனைப் பெரியது, சிறியது எனத் தரம் பிரித்து, தேவைப்படும் இடங்களுக்கு மூட்டைக் கட்டி அனுப்புவார்கள்.

இப்போது, சிவநேசன் வயலில் சீமைகருவையை அழிப்பதற்காக வேரோடு வெட்டி உள்ளனர். இல்லா விட்டால், அடி தூரை விட்டு விடுவார்கள். அது குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் வேகமாக வளரும். தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற எந்தப் பராமரிப்பு வேலையுமின்றி வருடத்துக்குக் கணிசமான லாபம் தருவதால், இந்தப் பகுதி மக்கள், இதனை ஒரு வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர்.

இதே கரி மூட்டம் போட, பக்கத்தில் ஒரு வடக்கத்திய காரன் இரும்பு கலன்கள் அமைத்து உள்ளான். நேற்றைய கூட்டத்தில், சிவநேசன், குமரன் பகிர்ந்த விசயங்களை அவன் காதுக்குத் தான் கொண்டு சேர்த்து உள்ளனர்.

இங்கு, தென்வயலில் மாமன், மருமகன், மச்சினன் என மூவருமாகக் கரி மூட்டம் போட தயார் செய்து கொண்டி இருந்தனர். அவர்கள் அடுக்கும் அழகையே பார்த்து வந்த குமரன், " எல்லா வேலையிலையுமே, ஒரு நேர்த்தியும், கலையழகும் இருக்கத் தான் செய்யுது, நமக்குத் தான் அதை ரசிக்க நேரமில்லை , என்ண்ணேன்" எனக் குமரன், நேசனிடம் சந்தேகம் கேட்கவும்.

அவனை வினோதமாகப் பார்த்த நேசன், " தம்பி, கரிமூட்டம் போடுறதையே இம்புட்டு ரசிக்கிறன்னா ஏதோ ஆகிடுச்சுன்னு அர்த்தம். என்னடா விசயம்" எனக் கேட்கவும், அசடுவழிந்த குமரன், " அதெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணேன். உனக்கே தெரியும் இயற்கை, விவசாயம் இது மேல உள்ள பிரியத்தில் தான் சிங்கப்பூர்லருந்து, கோயம்புத்தூர் வந்துஅக்ரி படிச்சவன் நான் . இதுவும் அதோடு சேர்ந்தது தான்" எனச் சமாளித்தான்.

" ஏதோ சொல்ற நம்புறேன். விவகாரமா எதுவும் பண்ணிடாத. ஒரு பொண்ணு நிலைமையைப் பாவம்னு பார்த்தைனா கூட, கதை கட்டி விட்டுடுவாங்க. என் கதையே தெரியுமுல்ல" என நேசன் பேசிக் கொண்டே வரவும்,

" அப்ப நிஜமாவே சிந்தா அக்கா மேல உனக்கு ஆசை இல்லையா?" எனக் குமரன் ஒரு கேள்வியைத் தூக்கிப் போடவும், அவனை அதிர்ச்சியாகப் பார்த்த நேசன். " எல்லாருக்கும் இதே சந்தேகம். நிச்சயமா இல்லைடா. உறுதியா சொல்லுவேன். நான் அதை இத்தூனூண்டு புள்ளையில இருந்து பார்க்கிறேன். அது மேல இருக்கிறது, அளவு கடந்த பாசமும் அக்கறையும் தான்" எனச் சிவநேசன் உறுதியாகச் சொல்லவும்.

" சரிதான் அண்ணன். நான் ஜஸ்ட் கேட்டேன். " எனவும், " நீ இதுக்கு முன்னாடி கேட்டிருந்தா கூட இவ்வளவு கறாரான பதிலைச் சொல்லிருப்பேனான்னு தெரியாது, ஆனால் இந்த வேலுவை, சிந்தா பார்க்கும் பார்வை. மீனு அப்படி என்னைப் பார்ப்பாளான்னு யோசிச்சிருக்கேன், ஆனால் உன் அத்தாச்சி, சின்னதிலிருந்து, என்னை மனசில நினைச்சிருக்கு. அதை வெளிப்படுத்த கூட அதுக்குத் தெரியலை. தேவையில்லாத விசயத்தை எல்லாம் மனசில் போட்டுக் குழப்பிக்கிட்டு, புள்ளையைக் கூடப் பார்த்துக்க முடியாத மனநிலைக்கு வந்தது தான் மிச்சம். எப்பவுமே நம்ம மனசில இருக்கிறதை, நாம நேசிக்கிறவங்ககிட்ட வெளிப் படுத்திடனும். இந்தப் பாமர மக்கள் கிட்ட இருக்க அந்த லகுத் தன்மை நம்மக் கிட்ட இல்லை, அது தான் நம்ம பிரச்சனை.

இந்த வேலுவையே பாரேன், சிந்தாகிட்ட தன் அன்பை, காதலைச் சொல்லவோ, உரிமையை நிலை நாட்டவோ, கோபப்படவோ, இல்லை மன்னிப்பே கேக்கனும்னாலும், எல்லாமே யோசிக்காமல் இயல்பா டக்குனு செஞ்சுடுவான். அது நம்மால முடியுமா,அது தான் நம்மப் பிரச்சனை. " எனச் சிவநேசன் அனுபவஸ்தனாகப் பேசவும், குமரனுக்கு அன்பை, காதலைப் பூட்டி வைக்கக் கூடாது, எனத் தெளிவாகப் புரிந்தது. அவனும் மனதில் உறுதிக் கொண்டான். ஆனால் சிவநேசனுக்கு, தம்பியின் மனநிலை பற்றிய சிறு சந்தேகம் இருந்திருந்தாலும், இந்த உபதேசத்தை இப்போது செய்திருக்கவே மாட்டான்.

பேசிக் கொண்டே அண்ணனும், தம்பியும், விறகு அடுக்குமிடம் வந்து சேர்ந்தனர், அய்யனார் குடும்பம் இவர்களை வரவேற்க, அவர்களுக்குத் தலையை ஆட்டி புன்னகையை உதிர்த்தனர்.

" இந்த நெருப்பைப் பத்த வச்சா கரியாக எத்தனை நாள் ஆகும்" எனக் குமரன் பொதுவாகக் கேட்கவும்,

" மூட்டம் எம்புட்டு பெரிசோ, அதுக்குத் தக்கன பிடிக்குமுங்க ஐயா. இப்ப நம்ம அடுக்கி இருக்கிறதுக்கு நாலு நாள் ஆகும்" என்றார் அய்யனார்.

" என்ன மருமகனையும், இந்த வேலையில இறக்கி விட்டுட்டீங்க" எனச் சிவநேசன் கேட்கவும்.

" வண்டிக்குப் போற வேலையில்லை. சும்மா தான உட்கார்ந்திருக்கு, எங்கப்பனுக்கு உதவி பண்ணு போயான்னு , என் பொண்டாட்டி பத்தி விட்டுட்டா" என வேலு சிரித்துக் கொண்டே சொன்னான்.

" பார்த்தா, இந்த வேலையையும் விரும்பி பார்க்கிற மாதிரி இல்லை தெரியுது" எனக் குமரன் கேட்கவும்,

சுப்பிரமணி , " அதெல்லாம் என் மாமன் விவரமான ஆளுங்கய்யா , எல்லா வேலையும் தெரிஞ்சவரு. இதுல நாலு காசு வந்தா, எங்க அக்காளுக்குச் சர்ப்ரைஸா மூக்குத்தி செஞ்சு போடலாம்ல அதுக்குத் தான்" என அவன் கேலி பேசவும், " டேய் பிச்சுபுடுவேன். என்னையவே கேலி பேசுறியோ" என வேலு எகிறினான், ஆனால் அந்தப் பொய் கோபமே, அது உண்மை என்று சொன்னது.

" மாமா, உண்மையைத் தானே சொன்னேன்" எனச் சுப்பு தன் மாமன், அதே போல் ஒரு அதிகப்படியான வேலைப் பார்த்து, தன் அக்காளுக்கு, கல் தோடு வாங்கிப் போட்டதைச் சொல்லவும், நேசன் , " அதென்ன எல்லாமே உங்க காசு தானே இதில் என்ன கணக்கு" எனக் கேட்கவும்.

"எல்லாரும் சம்பாதிக்கிற காசை வீட்டுச் செலவுக்குப் போக, மீதியைச் சீட்டுக் கட்டி, காசை வாங்கி, அக்கா முத்துவுக்கு நகையைச் சேர்த்திடும். அதனால மாமா சஸ்பென்ஸா வாங்கியாந்து கொடுப்பாரு" எனவும்

" உங்க அக்கா சின்னதில அம்மா கொடுக்கிற பலகாரத்தையே, அது சாப்பிடாமல், உங்க இரண்டு பேருக்கும் எடுத்து வைக்கும். இப்ப கேட்கவா வேணும். வேலு செய்யறது சரி தான்" எனச் சிவநேசன் பாராட்டவும்.

" அட முத்துவுக்கு வாங்கினாலும் பரவாயில்லை. இவ கஷ்டப்படுறா, அவளுக்கு நோவுன்னு, எதாவது காரணம் சொல்லி, ஊர்காரவுகளுக்குத் தானம் பண்றதில தான் நிற்கும். நானோ, மாமனோ கேட்டமுண்டா, ஆளுக்குத் தக்கன வேஷங்கட்டி ஏச்சுப் புடும்" எனக் குறை சொல்வது போல் மனைவியின் தாராள குணத்தைச் சொன்னான் வேலு. ஆனால் வேலுவின் ஒத்துழைப்பு இன்றி, சிந்தாவின் இந்தச் செயல்கள் சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்தான்.

வேலு, உடலை வருத்திக் கொண்டு , அவன் உழைப்பில் வரும் வருமானத்தில் மனைவிக்கு நகை எடுக்க நினைக்கும், எண்ணத்தைப் பார்த்து, சிவநேசன், தான் மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தோமா, என யோசித்தான்.

குமரனுக்கும் மனதில் ஆசைத் தோன்றியது. 'ஆனால் எங்கே, முகத்தையே குனிஞ்சுக்கிறா. இந்த முத்தழகியை நிறைய மாத்த வேண்டியிருக்கு. நாளைக்கு ஆளை இறக்குறேன். அவள் பேசுற பேச்சில நீயே மாமன்கிட்ட வருவடி' என மனதில் பேசிய குமரன், தன் தோழியின் வருகையை உறுதி செய்யப் போன் அடித்தான்.

சிந்தாவின் வீட்டில், வள்ளி, முத்து இருவரும், சிவநேசன் கிளம்பவும் தான் ஒரு சேர மூச்சு விட்டனர்.

" அடியே, குத்தி வைக்க, இந்தச் சிட்டுக் குட்டியைப் பார்த்தியா, நேரங் காலம் இல்லாமல் வகையா எங்கணையாவது சிந்தாவை மாட்டி விடப் போகுது" என்றாள் வள்ளி.

" ஆமாம்கா, நல்லா ருசி கண்டு வச்சிருக்கு. இது என்னைக்குப் பிரச்சனை ஆகப் போகுதோ தெரியலை. கங்காவுக்குத் தெரிஞ்சா ஆடிப்புடும். நேத்து நான் பரிட்சை எழுத, மகேஷ் கூடப் போனதுக்கே. அம்புட்டு பேசுச்சுக்கா" என முத்து விவரம் சொல்லவும்.

" முத்து, இவள் கர்வத்தை அடக்கனுமடி, " என்ற வள்ளி சத்தத்தைக் குறைத்து, சிந்தாவுக்குக் கேட்காமல், " எனக்கு அப்பப்ப தோணும். வீம்புக்குண்டே, இந்தச் சிந்தா இவுக வீட்டுக்கு மறுமவளா போயிருந்தா எண்ணப் பண்ணியிருப்பானு , ஒன்னு செய், இந்தக் குமரன் சாரை டாவடிச்சு, கல்யாணம் பண்ணி, அவள் வீட்டில நடுக் கூடத்தில் உட்காருடி. அவளை அம்மா வீட்டுக்கு வரவிடாமல் பண்ணும்" எனக் கோபத்தில் வள்ளி வார்த்தையைக் கொட்டவும்.

" அக்கா, வாய் புளிச்சதோ, மாங்காய் புளிச்சதோண்டு என்னத்தையாவது பேசாத. அக்கா கேட்டால் வையும், அதுவும் போக அவரைக் காட்டுனா , இங்கையா குடும்பம் நாடு கடத்திடுவாரு, நமக்கு அவுக சங்காத்தமே வேணாம்பா " என முத்துச் சொல்லவும்.

"ஆமாம், நாளைக்கே வந்து அவரு என்னைக் கட்டிக்கன்னு நிக்கப் போறாரு, அதெல்லாம் சொந்தத்துலையே பொண்ணு இருக்கும்" என வள்ளி சொல்லவும், முத்துவுக்கு மனம் கனத்தேதென்னவோ உண்மைதான் 

"இந்தப் பேச்சே, பேசினோமுன்னு தெரிஞ்சாலும் அக்கா, வெளுத்துப்புடும் " எனவும்,

" அடிப்போடி, உங்க அக்காளுக்கு வேலையில்லை. மதர் தெரசாவுக்கு, அடுத்தப் பிறவியாட்டம் எல்லாருக்கும், கெட்டதே நினைக்கக் கூடாதும்பா. அப்புறம் எப்புடி கங்கா மாதிரி ஆளுக்கெல்லாம் பாடம் சொல்லித் தர்றது. சிந்தாவை சின்னதிலிருந்தே, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டுவா. உங்க அக்கா இருக்காளே, எல்லாத்தையும் பொறுத்துக்குவா. கேட்டா, பெரியம்மா, சின்னைய்யான்னு காரணம் அடுக்குவா. " எனப் பேசிக் கொண்டிருந்தவர்கள், சிந்தா இரண்டு பிள்ளைகளையும், தூக்கி வரவும் அந்தப் பேச்சை விடுத்து அமைதியானார்கள். ஆனால் வள்ளியின் பேச்சு, முத்துவின் மனதில் ஓர் சலனத்தை ஏற்படுத்தியது.

இரண்டு பிள்ளைகளையும், இரண்டு கைகளில் தாங்கி வர, சிந்துஜாவை முத்துவும், சத்தியாவை வள்ளியும் வாங்கிக் கொண்டனர் .இரண்டும், ஒன்று எடுக்கும் பொருளையே மற்றதும் கேட்டு போட்டிப் போட்டது.

" சிந்தா, போதுமடி இந்தப் பழக்கத்தை நிறுத்திக்கோ. இது அம்மாளும் ஊருலருந்து வந்திடுச்சு, இது தெரிஞ்சா, பெரிய பிரச்சனை ஆகும்" என வள்ளிச் சொல்லவும்.

" அடியே, நீயும் உங்க அண்ணனுமாத் தானே, அன்னைக்குக் கட்டாயப்படுத்துனீக. இப்ப வந்து இப்படிச் சொல்ற" எனத் தோழியிடம் சிந்தா கோவிக்கவும்.

" ஏதோ ஒரு நாள் தானேன்னு சொன்னோம். நீங்க இதைத் தொடர்கதையாக்குவீகன்னு நாங்க கனவா கண்டோம்" என வள்ளி கேட்கவும், "போடி, இனிமே தான் என்னை அசிங்கமா பேசப் போறாகலாக்கும். என் மச்சானுக்கு உண்மை தெரியும், அது போதும் எனக்கு" எனப் பேசிக் கொண்டு இருந்துவிட்டுப் பணத்தைக் காட்டி வள்ளி, " இதைப் புரவியெடுப்பு முடியவும் திருப்பித் தாரேன்டி" எனச் சொல்லவும், சிந்தா முறைத்தாள்.

" நீ ரு மருமகனையோ, மருமகளையோ பெத்துக் கொடு, அது போதும்" எனச் சொல்லி வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.

ஆண்கள், இருள் கவ்வத் தொடங்கவும் வந்துவிட்டனர். சிந்தா சூடாகச் சோறு குழம்பு எனத் தயாராக வைத்திருந்தாள். கருவாட்டுக் குழம்பு வாடை ஊரையே தூக்க, வள்ளி வந்தவுடன் அதில் ஒரு கவளம் சாப்பிட்டுக் கிளம்பியிருந்தாள்.

சிவநேசன், குமரன் வந்தவர்களில் குமரன் ஆகா என வாசம் பிடிக்க, நேசன் சிரித்துக் கொண்டான். " போகலாம் டா, மீனு வாசல்லையே நிற்கும்" எனச் சிவநேசன் அவசரப்படவும், எல்லாருமாக அவனைக் கேலி செய்து சிரித்தனர். சிந்தாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.

"ம், போகலாம். நல்லா குழம்பு வாசத்தைக் காட்டி, ஆசையைக் கிளப்பி விட்டுட்டீங்க. பெரியம்மாகிட்ட போய் வச்சுத் தரச் சொல்றேன்" எனக் குமரன் சோகமாகச் சொல்லவும்,

" சார், இம்புட்டு ஆசைப்படுறீக, ஒரு வாய் சாப்பிட்டு போங்க, இல்லையினா, எங்களுக்கு வவுத்தை வலிக்கும்" என்ற வேலு, " இந்தா, சின்னக்குட்டி, ஒரு தட்டில் சோறைப் போட்டு, குழம்பை ஊத்திக் கொண்டா" என்றான் .

" நோ, நோ வேலு அவன் சும்மா கேக்குறான். நாங்க கிளம்புறோம்" எனச் சிவநேசன் அவசரமாகக் கிளம்பவும்.

" சாதி இல்லையிண்டு சொல்றது எல்லாம் பேச்சுக்குத் தான்" என வேலு ஓர் நகையோடு சொல்லிவிடவும், " மச்சான்" எனச் சிந்தா அதட்டினாள்.

" வேலு, இவுக அம்மா தேடுவாளேன்னு தான் அவசரமா போறேன். அன்னைக்குச் சிந்தா கொடுத்த மோரை குடிக்கலையா. " என்ற நேசன்,"குமரா, உன் இஷ்டம். " என்று விட, முத்துவின் கையால் சாப்பிடக் குமரனுக்குக் கசக்குமா என்ன.

" அண்ணேன், நம்மளைப் பார்த்து வேலு ப்ரோ, என்ன வார்த்தைச் சொல்லிப் புட்டாரு, இதுக்கே நான் இங்க தான் சாப்புடுறேன். நீ பாப்பாவைக் கூட்டிட்டுப் போ. நான் நடந்து வந்துக்கிறேன்" எனக் குமரன் சொல்லவும், " ஏதோ செய்" என நேசன் மகளோடு கிளம்பி விட்டான்.

சிந்தா குடும்பத்து ஆண்கள், குளிக்கச் செல்ல, சிந்தா அவர்களைக் கவனிக்கப் போக வர இருந்தவள், குமரனை அறியும் விதமாக, என்ன செய்வான் என ஆராயும் நோக்கில், முத்துவை சாப்பாடு கொண்டு வரச் சொல்லி விட்டு அங்கேயே அமர்ந்தாள்.

முத்துப் புதுச் சில்வர் தட்டில் அளவாகச் சாதம் வைத்து, குழம்பு ஊற்றி. வேக வைத்த முட்டையையும் தொட்டுக்க வைத்து, புதுச் சொம்பில் நீர் நிறைத்து, புது மாப்பிள்ளைக்குக் கொடுப்பது போல், அவனுக்கா திண்ணையில் கொண்டுவந்து வைக்க, அவளையே பார்த்திருந்தவன், சிந்தா அறியாமல் கண் அடிக்கவும் செய்தான். முத்து தான் பதறினாள்.

ஒரு வாய் எடுத்து வைத்தவன், " சிந்தாக்கா சூப்பர்" என ருசித்துச் சாப்பிட்டான். வேலு குரல் கொடுக்கவும், சிந்தா மகளை, முத்துவிடம் கொடுத்துச் செல்ல, " இதெல்லாம் எதுக்குச் செய்யறீங்க" என முத்துக், குமரனை முறைத்தாள்.

" நல்ல மணக்க, மணக்க சிந்தாக்கா சமைச்சு வச்சிருக்கு, பசிக்கு, ருசியோட சாப்பிடுறேன். அதுவும் மனசுக்குபிடிச்சவ கையாள வாங்கிச் சாப்புடுறேன். இதில ஒரே ஒரு குறை தான்" என்றான் குமரன், முத்து என்னவெனப் பார்க்கும் போது, " நீயே ஊட்டி விட்டிருந்தா, இன்னும் சிறப்பா இருந்திருக்கும். " என அவன் நகையோடு சொல்லவும்,

" நினைப்பு தான் பொழைப்பைக் கெடுக்கும். என் பொழப்பையும் கெடுத்து, நீங்களும் அப்படி நிக்காதீங்க. இது நடக்கிற காரியம் இல்லை" என மெல்லமாகவே அவனுக்குப் புரியும் படி எடுத்துச் சொன்னாள். ஆனால் அவன் காதில் வாங்கினால் தானே, " நாளைக்கு என் ப்ரண்ட்ஸ் வர்றாங்க. உன் உதவி தேவை, அது இதுன்னு சாக்குச் சொல்லாமல் நான் கூப்பிடும் போது வா" எனச் சம்பந்தம் இல்லாமல் தன் பேச்சில் கவனமாக இருந்தவன், அவள் பதில் பேசும் முன், தட்டை காலி செய்தவன், ஓரமாகச் சென்று கைகழுவி வந்து, "சிந்தா அக்கா" என உரக்க அழைத்தவன், அவள் வெளியே வரவும்.

" சாப்பாடு சூப்பர்" என்றான். " அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்க. ஏய் முத்து, அவுக சாப்பிடுறதை வச்சே தெரியாது, இன்னும் கொஞ்சம் போட்டுக் கொடுத்திருக்கலாம்ல" எனத் தங்கையைக் கடிந்து கொள்ளவும்,

" இட் ஸ் ஓகே. உங்க தங்கச்சிக்கு, என் மேல சந்தேகம், நான் சாப்பிடுவேனா, சும்மா சொல்றேனானு, அதுனால காக்காய்க்குச் சோறு வைக்கிற மாதிரி, இத்தூனூண்டு தான் கொண்டு வந்தது. இன்னொரு தடவை வந்து நல்லா சாப்புடுக்குறேன்" என அவன் குறை சொல்லவும்,

" அக்கா, பொய் சொல்றாங்க. நிறையத் தான் போட்டுக் கொண்டு வந்தேன்." என அவள் சொல்லவும்,

" சிந்தாக்கா, என்னத்தைச் சொல்லுங்க, உங்க மனசு மத்தவுகளுக்கு வராது.உங்க தங்கச்சி சாப்பாட்டில் கணக்கு பார்க்குது பாரு. சரியான கஞ்சாம் பட்டி. இதைக் கல்யாணம் கட்டுறவன் பொழைச்சுக்குவான், மிச்சப்படுத்தியே அவனைப் பணக்காரன் ஆக்கிவிடும். ஆனால் வயித்துப் பாடு ரொம்பக் கஷ்டம் தான், அரைப் பட்டினி தான், ஆனால் அதுலயும் ஒரு நல்லது இருக்கு, உடம்பு வெயிட் ஏறாமல் இருக்கும் " எனக் குமரன் அடுக்கிக் கொண்டே போகவும் சிந்தா சிரித்தாள். முத்து முறைத்துக் கொண்டு நின்றாள். வேலுவும் வந்து சேரவும்,

" நீங்க சொல்றது கரெக்ட் சார், என் பொண்டாட்டியைத் தவிர இந்த வீட்டில் யாரும், எச்சக் கையில காக்கா ஓட்ட மாட்டாய்ங்கே. அதுவும் இந்தச் சின்னக் குட்டி, ரொம்பக் கெட்டி. ஒரு மணி நேரம்னாலும் நிண்டு, பஸ் காசை மிச்சம் பண்ண, என் வண்டில தான் ஏறும்" எனச் சொல்லவும்.

" மாமா, இனிமே உன்னைக் கூப்பிட்டேன்னா பாரு. நான் மானாமருதையிலிருந்து, நடந்தே கூட வந்துக்குறேன், உன் வண்டில ஏறமாட்டேன் " என முத்து ரோசமாக முறைத்தாள்.

"அப்பையும் பஸ்ஸில வராது, நடந்து தான் வருமாம்" என வேலு விடாமல் வம்பிழுக்கவும், " இந்தா சும்மா போ" எனச் சிந்தா கணவனை அடக்கினாள்.

" சரி அதெல்லாம் போகட்டும் விடுங்க, நாளைக்கு என் ப்ரெண்ட்ஸ் , என்ஜிஓ காரங்க வர்றாங்க. பத்து நாள் புராக்ராம். அமிர்தா ன்னு என் கூடப் படிச்சது தான், ஹஸ்பன்ட் அண்ட் வைஃப் இந்த வேலையைச் செய்யறாங்க. உங்க எல்லார் உதவியும் வேணும். முக்கியமா, உங்க தங்கச்சியை அனுப்புங்க. அமிர்தாவுக்கு ஹெல் பண்ணனும். " என அவர்களது விவரம் சொல்லவும், சிந்தாவும், வேலுவுமே முத்துவை போகச் சொன்னார்கள்.

வேர்கள் அமைப்பு வறண்ட பிரதேசத்தின் தலையெழுத்தை மாற்றுமா, அதனைச் செயல்படுத்த முனையும் இந்த இரு குடும்பத்தவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன ? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment