சிந்தா- ஜீவநதியவள் -14
மேலப்பூங்கொடி கிராமத்தில் பெரிய வீட்டு மகாலிங்கம் ஐயாவின் வீடு ஆட்கள் வருவதும் போவதுமாக, போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. அக்கா, அத்தாச்சி, அம்மா, பெரியம்மா, சின்னம்மா, அத்தை, ஆச்சி, அப்பத்தா, ஆயி என ஏதோ ஒரு முறைச் சொல்லி, ராஜேஸ்வரி அம்மாளை மக்கள் விசாரித்த வண்ணம் இருந்தனர்.
" ஆத்தி, பெரிய வீட்டு ஆயியைப் பூச்சி தீண்டியிருச்சாம்ல, பிழைச்சது மறுபிறப்பாம்.நம்ம சிந்தா இருக்கப் போயி, ஆயி பொழைச்சு இருக்கா" என ஆண்டிச்சி கிழவி கதையளந்து கொண்டு இருக்க,
" அடியாத்தி, நல்ல மகராசி, அவுக வீட்டுத் திண்ணையில போய் உட்கார்ந்தால் கூட, வயித்தை நிறைச்சுத் தான் அனுப்புவாக, அவுகளுக்கே இப்படியா. " என மற்றொருத்தியும்.
" சிந்தா, பெரிய வீட்டுப் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டாளே , பெரியம்மாவுக்குப் பாம்பு கடிச்சிருச்சிண்டு ஓடினாளாக்கும். உனக்கு எப்படித் தெரியும் " என இருளி கிழவி விசாரிக்க.
" எனக்குத் தான் உறக்கம் எங்க வந்து தொலையுது,கோழி கூப்புட , வயித்தைக் கலக்குதேன்னு வயலூப் பக்கம் ஒதுங்கலாமுன்னு போயிட்டு இருந்தேன் , பெரிய வீட்டுத் தலைவாசல் வழியா சிந்தா மகளோட இறங்கிட்டு இருந்தா. அப்பத்தேன் விசயம் தெரிஞ்சுது" என ரேடியோ பொட்டி விசயத்தைச் சொல்லவும், இருளி, " என்னை என் பேரன் பாயில பேண்டை காதையைச் சொல்லுவேன்னு வக்கணை பேசுனவ, நீ மட்டும் நேராவா விசயத்துக்கு வார" என் ஆண்டிச்சி காலை சமயம் பார்த்து வரவும்.
"ஐயே கருமமே, காலங்காத்தால விடுயுமுன்ன உங்க பஞ்சாயமா, பெரியம்மாள எப்ப பாம்பு கடிச்சிதாம். என்ன பாம்பு " என டீக்கடை பெருமாஇ விசாரிக்கவும் .
" என்னாவா இருந்தா நீ ஒத்துக்குவ. என்னமோ இவ தான் வைத்தியம் பார்க்கிற மாதிரி" என இரு கிழவிகளுமாக அவரை வக்கணைப் பேசியவர்கள்.
" சிந்தாவுக்கு, பெரியமனுசு தான். பெரிய வூட்டு கங்காவால எம்புட்டுத் தும்பம். இருந்தும்,அதையெல்லாம் மறந்து ஓடியிருக்கா பாரேன்" என்றவருடம், "சும்மா சொல்லக் கூடாது, சிந்தாவும் அவ தம்பி தங்கச்சியும் தாயில்லாமா நிண்டப்ப, பெரியா ஆயி தானே அரவணைச்சு தங்குச்சு " என் ஆண்டிச்சியே ராஜியை பெருமையாகப் பேசினார்.
"அது தான் ஏற்கனவே அவுக அப்பா அய்யனார் இவுக நிலத்தைப் பார்க்க, சின்னைய்யா அவுக வீட்டுப் பக்கம் போக வரத் தான் இருக்காகலே . நேத்துக் கூட்டத்தில் கூட ஒன்னா தான திரிஞ்சாக" எனவும் ஊர் மக்கள் இவர்களைப் பற்றிப் பேச்சில் அளக்க
" எனக்கென்னமோ, இந்தத் தென்வயலை இவுக தொட்ட நேரம் சரியில்லையோன்னு தோனுது" என முனியாண்டி க்ரூப் ஆள் ஒருவன் கிளப்பி விட,
" ஏலேய், அவுக அந்த வேலையை ஆரம்பிச்சு இருபது நாளாச்சு." மற்றொருவர் சமாதானம் பேச, இதையெல்லாம் கேட்டு வந்து அல்லி, சமையல்கார சாமந்தியம்மாளிடம் " சனம், எதுக்கும், எதுக்கும் முடிச்சுப் போட்டு எப்படிப் பேசுறாகப் பாருங்க" என அங்கலாய்த்தாள்.
" அவுக பேசறதுக்கு என்ன, நீ அந்தச் சின்ன உருளியை சீக்கிரம் விளக்கிக் கொடு , அக்காளுக்கு அதுல தான் சோறு வைக்கனும். சிந்தா வந்துடுவா" என அல்லி விளக்கித் தரவும் வாங்கிச் சென்றவர், இன்று அக்காளைத் தொந்தரவு செய்யாமலே தான் னே வளமைப்படி சமையளும் செய்து இறக்கினார்.
அய்யனாரும், அல்லி கணவன் கருப்பனுமாக, அவர்கள் வீட்டுக் கொள்ளையிலிருந்த புல்லைச் செதுக்கி, சுத்தம் செய்தவர்கள், வேலி ஓரங்களில் சிறியாநங்கை , பச்சிலை செடியை நட்டு விட்டார்கள்.
அய்யனார், கருப்பனிடம்," அடிக்கு ஒருக்கா இதையெல்லாம் சுத்தம் பண்ணிடு. புல்லு மண்ட விடாத இந்தச் செடிகளைத் தண்ணீர் ஊத்தி வளர்த்து விடு " என யோசனைச் சொல்லவும், அவனும் தலையாட்டினான்.
ராஜேஸ்வரிக்குப் பாம்பு கடித்த செய்தியை, வேறு வழியின்றி இரண்டு நாட்களுக்குப் பின் ,0மகாலிங்கமே மகள்களுக்குச் சொல்லிவிட, அவர்களும் காரை எடுத்துக் கொண்டு அவறித் துடித்துத் தான் வந்தார்கள்.
சுந்தரி," ஏம்பா, உடனே சொல்லியிருக்கலாம்ல, இரண்டு நாள் கழிச்சு சொல்றீக" என ஆதங்கப்பட, கங்கா சண்டைக் கட்டினாள்.
" உங்க அம்மாவே படுத்துக் கிடக்கா, வீட்டுலையும் விருந்தாடி இருக்காக, நீங்களும் வந்தா ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது. " என மகாலிங்கம் உண்மையை உரைத்து விட , மகள்கள், " ஏன்பா, அப்ப நாங்க இங்க வந்தா வேலை செய்ய மாட்டோம்னு சொல்றீகளா" எனக் கங்கா சண்டைக்கு வரவும்.
" நான் சொல்றதை நீங்க வேற மாதிரி புரிஞ்சுக்கிறீக, மாப்பிள்ளைங்க வந்தா, இதைச் செய்யனும், அதைச் செய்யனும்னு ,உங்க அம்மா அலைஞ்சு திரியும், வேண்டாம்னு சொன்னாலும் கேக்காது. அதைத் தான் சொன்னேன்" எனச் சமாளித்தார்.
மீனாளின் அம்மாவும், மகாலிங்கம் தங்கையுமான வேதாவுக்கும் அவர் கணவருக்கும் தங்கள் மகளைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. தங்கள் வீட்டில் அறையிலேயே அடைந்து கிடப்பவள், இங்கு வீடு முழுவதும் வளைய வந்தாள்.
" அத்தை, மதிய சமையலை சாமந்தியம்மா முடிச்சிட்டாக, உங்களுக்கு மட்டும் தான் பாக்கியாம். சிந்தா வருமாம், வேற எதுவும் விசேஷமா செய்யவான்னு கேக்குறாக" எனக் கேட்டுச் சென்றவளை. பசிக்காக அழும் மகளைச் சமாளித்து ஏதோ கிண்டி ஊட்டுபவளை, "அல்லி, இந்தா தண்ணீர் சிந்தி கிடக்கு பாரு. துடைச்சு விடு. " என வேலையாளை அதிகாரம் செய்து, பிறந்த வீட்டினரிடமும் உபசாரமாகப் பேசியவளை அதிசயமாகத் தான் பார்த்தனர்.
சுந்தரி கணவனும், கங்கா கணவனும் மாமனார், மச்சினனிடம் உட்கார்ந்து மாமியாரைப் பற்றியும், ஊரில் அவர்கள் செய்ய இருக்கும் புதிய விவசாயப் பணிகளைப் பற்றியும் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
"அப்ப, ஏற்கனவே இருக்குற வெள்ளாமை தனி, அதுல நெல்லு , அவரது துவரை போடுவீங்க" எனப் பெரிய மாப்பிளை கேட்கவும். "ஆமாம் மாப்பிள்ளை, அதெல்லாம், கண்மாய்ப் பக்கத்தில வடவயல். தண்ணியும் நல்லா இருக்கும். அந்த வயலையோ, தென்ன தோப்பையோ கை வைக்க வேணாமுன்னு குமரன் சொல்லிட்டான். இது தனி, செலவும் அவுகது. சீமைக்கருவையை வெட்டிட்டு செய்யிறாக, நல்லது தானே. அது தான் சரின்னு சொல்லிட்டேன்" என அதன் விவரங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.
வேதா கணவனிடம், " நாம தான் தப்பு பண்ணிட்டோம். கல்யாணம் பண்ணவுமே அவுக வீட்டில் விட்டிருக்கனும்" எனத் தங்கள் செய்கைக்கு வருத்தப்பட்டார். அதோடு இவர்களுக்கு முற்பகல் வேளையில் குடிக்க டீ எடுத்து வந்த மனைவியிடமிருந்து, சிவநேசன் டேரேயை வாங்கிப் பரிமாறியதைக் காணவும் மயக்கம் போடாத குறை தான். ஏனெனில் அங்கே ஓர் மனக்குறையோடும், மாப்பிள்ளை முறுக்கோடும் தான் அமர்ந்திருப்பான்.
சுந்தரி, அம்மாவிடம் நடந்ததை விசாரித்தவள், " அந்தச் சிந்தா நல்லா இருக்கட்டும், உன்னைக் காப்பாற்றிக் கொடுத்திருக்காளே. வேற ஒருத்தியா இருந்தா, இவளும், சித்தியும் பேசின பேச்சுக்குத் திரும்பியே பார்த்திருக்க மாட்டாக" எனக் கங்காவைப் பார்த்துக் கொண்டே, அவள் உண்மையைப் பேசவும்.
" அக்கா, சும்மா அவளைத் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாத. அவள் என்ன சும்மாவா செய்யிறா. இந்த வைத்தியத்தையே பரமக்குடி வைத்தியர், அப்பா சிபாரிசு பண்ணவும் தான் சொல்லிக் கொடுத்தார். அதுவும் போக இப்பத் தான் அண்ணன் அம்புட்டு காசு குடுக்குதில்ல" என்ற கங்கா, " திரும்பவும், அண்ணனை வளைச்சுப் போடாமல் இருக்கனும். இந்த அத்தாச்சிக்கும் ஒரு விவரமும் பத்தாது" எனத் தனது கூர்மையான வார்த்தைகளைப் பேசவும், ராஜேஸ்வரி அம்மாள்,
" இவளைத் திருத்த முடியாதுடி. இவள் வாய்க்குப் பயந்து தான், அவள் நம்ம வீட்டுப் பக்கமே திரும்பாம இருந்தா" என அவர் வேதனைப்படவும், " கங்கா, வாயை வச்சுக்கிட்டுப் பேசாமல் இருடி. அம்மாவுக்கு ஒண்ணுனா, பக்கத்தில இருக்கவுக தான் பார்க்கனும். உனக்குப் பிடிக்குதோ, பிடிக்கலையோ, அம்மாவைச் சிந்தா பார்த்துக்கிட்டான்னா, நான் நிம்மதியா இருப்பேன்." என்ற பெரிய மகளை ராஜியம்மாள் ஆச்சரியப்பட்டு, " நீ எப்படி, இப்படி மாறின" எனக் கேட்கவும்.
" அம்மா, பொம்பளையா பிறந்தாளே, புகுந்த வீட்டுக்குத் தானே சேவகம் பண்ண வேண்டியிருக்கு. அம்மா வீடுன்னு வந்தா இரண்டு நாள் செல்லம் கொஞ்சிக்கிட்டு வேலை எதுவும் செய்யாமல், நீ ஆக்கிப் போட, நாங்க சாப்பிட்டுப் போவோம். இப்ப அதுவே உங்களுக்குச் சுமையா தெரியப் போயி தான் , அப்பா உனக்கு முடியலைங்கிறதை இரண்டு நாள் கழிச்சு சொல்லுறாக. உனக்கு எதாவது ஆயிருந்தா, என்ன செய்யறது" என அவள் கண்ணீர் வடிக்கவும்.
" அடியே சுமை எல்லாம் இல்லை, நீயா எதாவது கற்பனைப் பண்ணாத" எனச் சொல்லும் போதே, சிந்தா வந்து சேர்ந்தாள். அவளைப் பார்க்கவுமே கங்கா முறைக்க, சிந்தா அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. ராஜேஸ்வரி நாடியைப் பிடித்துப் பார்த்தவள், " இன்னைக்கு ஒரு நாள் சூரணம் சாப்பிடுங்க, வைத்தியர் ஐயா இப்ப வர்றேன்னு சொல்லியிருக்காகலாம்ல, ஐயா சொன்னாக. அதுக்கப்புறம் அவுக முறைப்படி நடந்துக்குவோம்" என்றவள், "பத்திய சாப்பாடு செஞ்சுட்டாகளான்னு பார்க்கிறேன். காலையில் என்ன சாப்பிட்டீக" என விசாரித்தாள்.
" நீ தான் சட்டினில போடுற புளி கூட ஆகாதுன்னு சொல்லிட்ட, இடியாப்பம் தான் தேங்காய்ப் பால் ஊத்தி சாப்பிட்டேன். " எனத் தாம் இருவரும் மட்டுமே இருப்பது போல் பேசிய ராஜியம்மாளிடம் அமிர்தாவை விசாரிக்கவும்.
" அதுங்க, நான் படுத்ததிலிருந்து மதிய சாப்பாடு வெளியே பார்த்துக்குதுங்க. குமரனும் அவுகளோடவே தான் அலையிறான். இன்னைக்கு இவுக வராகங்கவும் நேசன் வீடு தங்கினான்" என விருந்தினரும் வீட்டு ஆட்களை அனுசரிப்பதைச் சொன்னார்.
சுந்தரி மட்டும், சிந்தாவிடம் தன் நன்றியைத் தெரிவிக்க, " அம்மாவுக்குச் செய்யறது என் கடமை. நீங்கள் கவலைப் படாதீங்க" என்று விட்டு அடுப்படிக்குச் செல்லவும் கங்கா பொறுமிக் கொண்டு உட்கார்ந்து இருந்தவள், மீனாளிடம் சொல்லிக் கொடுக்கச் சென்றாள்.
சிந்தாவைப் பார்த்த மீனாள், " வா சிந்தா, உன்னைக் காணமேன்னு தான் பேசிட்டு இருந்தோம். " என மீனாளும், சாமந்தியம்மாளுமாகச் சிந்தாவிடம், ராஜியம்மாள் சாப்பிடும் போது செய்யும் அழும்பல்களைச் சொல்லிச் சிரித்தார்கள். " ஆனால், அத்தை அப்படிச் சொல்லும் போது, அத்தான் சிந்தாவுக்குப் போன் போடுறேன்னு சொன்னா , அவுகளை முறைச்சிட்டு, பேசாமல் சாப்பிடுறாக" என மீனாள் சிரிக்கவும்.
" என்னைப் பூச்சாண்டியா வச்சிருக்கீகன்னு சொல்லுங்க. " எனச் சிந்தா கோவிக்கவும், மீனாள் அவளைச் சமாதானம் செய்தாள். இதை எல்லாம் பார்த்த கங்காவுக்குப் பொசுபொசுவென வந்தது. சிந்தா ராஜியம்மாளுக்குச் செய்த பத்திய உணவை பார்த்தவள், "புளி இல்லாமல், தக்காளி பழத்தை சேர்க்குறது கூட நல்லா தான் இருக்கும், சாமந்தியம்மா காய் பக்குவமா, சும்மாவா " என அவரையும் பாராட்டினாள் சிந்தா. "அவுக்க இருக்கப் போயி வயிறு நிறையுது, நானா இருந்தா என்னத்தைச் செஞ்சேன்' எனத் தனது குறையைச் சொல்லி சாமந்தியம்மாளை மீனாள் பாராட்டவும், அவரும் உச்சி குளிர்ந்து போனார்.
சிவநேசன் வந்து," சிந்தா, வைத்தியர் வந்திட்டார். அப்பா உன்னைக் கூப்பிடுறாக" என வந்து அழைத்தான். சிந்தா இதோ எனப் பவ்யமாகக் கூடத்துக்கு வந்தாள். சிவநேசனும், சுந்தரியுமாக அம்மாவை ஏற்கனவே ராஜியம்மாளை ஹாலுக்கு அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்தி இருந்தனர்.
வைத்தியர், ராஜியம்மாள் நாடியைப் பரிசோதித்தவர், திருப்தியாகத் தலையை ஆட்டிக் கொண்டவர், "இனி பயப்பட எதுவும் இல்லை. நாடி சுத்தமா இருக்கு" என்றவர் சிந்தாவை வெகுவாகப் பாராட்டினார்.
பெரியவர் மகாலிங்கமும் , சமயோசிதமாகச் செயல்பட்ட சிந்தாவின் நடவடிக்கைகளை வைத்திய முறையை வைத்தியரிடம் பாராட்டிச் சொன்னார்.
சிந்தா, " எல்லாம் ஐயா கத்துக் கொடுத்த பாடம் தான். என்னால ஆனதை செய்யிறேன்" எனும் போதே, குமரன் தன் நண்பர்களோடு வந்துவிட்டான். பெரிய சாப்பாட்டு பார்சலும் வந்தது. முத்து தெற்கு வாசல் வழியே அடுப்படிக்குக் கொண்டு சேர்த்திருந்தாள்.
" நான் செய்யறதை விட நீ செய்யறது இன்னும் மகத்தான காரியம். நான் என்னைத் தேடி வர்றவுகளுக்குத் தானே வைத்தியம் பார்க்கிறேன். நீ நோயாளியைத் தேடி, எந்த நேரம்னாலும் ஓடுற பாரு. உன் புருஷன் வந்து சூரணம் டப்பா வாங்கும் போதே விவரத்தையும் சொல்லிடுவார். நீ காப்பாற்றின உயிர்களோட கணக்கு உனக்குத் தெரியுமோ என்னவோ. எனக்குத் தெரியும். நூற்றுக்கும் மேற்பட்டவுகளைக் காப்பாத்தியிருக்க. " என அவர் சொல்லவும் மற்றவர் அதிசயித்துத் தான் போனார்கள்.
" ஐயா, உயிரைக் காப்பாத்தும் செயல் அய்யன் செய்யறது. அதுக்கு நம்மளை, கருவியா உபயோகப்படுத்துறன்னு நீங்க தானே சொல்லுவீக. அதே மாதிரி தான நாங்களும் ஓடுறோம். இதில பெருமை பட்டுக்க என்னங்கய்யா இருக்கு. நீங்க பெரியவுக, இந்த வைத்தியக்கலையை , பன்னக்காரன் மகள் தானேன்னு உதாசீனமா நினைக்காமல் , இந்த வைத்தியத்தை எனக்குத் தந்தீகளே, அது தான் பெரிய விசயம்" எனச் சிந்தா நா தழுதழுக்கவும்.
" அம்மா, அப்படிச் சாதாரணமா சொல்லிடாத. ஈஸ்வரன் பக்கத்தில் அம்பிகையா உட்கார்ந்து இருக்கவ தான், பாமரனுக்காக மாரியாத்தாவா, காளியாத்தாவா இரங்கி வந்திருக்கா. இந்தப் பாமர மக்களுக்காக இந்த இடத்துக்கு வந்து புனித ஆத்மா நீ. " என்றவர் , " உன் புருஷன் புள்ளையோட நல்லா இரு. நிறையப் பேருக்குச் சேவை செய்யி. உனக்கு நான் இன்னும் சொல்லித் தர்றேன் " என அவர் வாழ்த்தவும், குமரனோடு வந்திருந்த வேலுவையும் கண்ணால் அழைத்தவள் , கணவனோடு சேர்ந்து பரமக்குடி வைத்தியரின் கால்களில் விழுந்தாள் .
“நல்லா இரு தாயி, தம்பதி சமேதரா , இதே மாதிரி இந்த மக்களுக்கு உங்களால் ஆனா சேவையைச் செய்ங்க, ணியினார் கோவில்ல இருக்க அந்த நாகநாத ஸ்வாமியும், சௌந்தர நாயகி அம்மையும் உங்களுக்கு அருள் புரியட்டும் “ என்று வாழ்த்தினார்.
அதே கையோடு அருகே அமர்ந்திருந்த, மகாலிங்கம் ஐயா ராஜேஸ்வரி அம்மா கால்களிலும் வணங்க, “நல்லா பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழனும்” என் அய்யாவும் , ராஜியம்மாள் கண்ணீர் மல்க, “ நல்லா இருப்பீக, உங்க நல்லா மனசுக்கு ஒரு குறையும் வராது” என வாழ்த்தியவர், சிவநேசனை அழைக்க, அவன் ஏற்கனவே தயாராக வைத்திருந்த, பட்டுச் சேலை,ரவிக்கை, வேலுவுக்கு வேட்டி சட்டை, பிள்ளைகளுக்குத் துணிமணி என வைத்து மஞ்சள் குங்குமமோடு சிந்தாவிடம் நீட்டியவர், அவள் இது என்ன கூலியா எனப் பார்க்கவும், அவள் பார்வை உணர்ந்து, “அஞ்சு வருசமா, உனக்கு எப்ப இதைக் கொடுப்போம்னு காத்திருந்தேன், வாங்கிக்க “ எனவும் அதனைப் பெற்றுக் கொண்டாள் .
மகாலிங்கம், தம்பி மகன் குமரனையும், வேர்கள் -நீரஜ்,அமிர்தா ஜோடியையும் , வைத்தியருக்கு அறிமுகம் செய்து வைத்து, இங்கு அவர்கள் ஆரம்பித்து உள்ள மூலிகை, விவசாயப் பணிகளைப் பற்றிச் சொல்லவும், பெரிதும் பாராட்டிய வைத்தியர், தங்களுக்கே நிறைய மூலிகைகள் தேவைப் படுகிறது என அதன் விவரங்களைச் சொல்லவும், “ஒரு நாள் உங்கள் இடத்துக்கு வர்றோம், உங்கள் தேவையைச் சொல்லுங்க, நாங்க இங்க மட்டும் இல்லாமல் இந்தியா முழுதும் இந்தப் பணிகளைச் செய்கிறோம், உங்களுக்குத் தேவையானதை, விளைவிச்சாவது தந்துருவோம் “ என நீரஜ் அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.
ராஜியம்மாள் உட்கார முடியாமல் தடுமாறவும் சிந்தாவும், சுந்தரியுமாக உள்ளே அழைத்து வந்தனர். அடுப்படியில் கங்கா குரல் கேட்கவும், சிந்தா அங்கே சென்றாள் .
கூடத்தில் பெரியவர்கள் , சிந்தாவுக்குப் பாராட்டு விழா நடந்திக் கொண்டிருக்கவும்,அதைப் பொறுக்க இயலாத கங்கா , உள்ளே சென்றாள் . அந்த நேரம், தெற்கு வாசல் வழியே முத்துமணி, அமிர்தா வாங்கியிருந்த சாப்பாடு பார்சல்களை மீனாளிடம் சொல்லி விட்டு , அடுப்படியில் வைக்கச் செல்லவும், சிந்தா மீதிருந்த கோபத்தைச் சமயம் பார்த்து வம்பிழுத்து முத்துவிடம் காட்டச் சென்றாள் .
அங்கு முத்துவும், மீனாலும் நல்ல படியாக, பேசி பழகியதைப் பார்க்கவும் அவளுக்குப் பத்திக் கொண்டு வந்தது. “அத்தாச்சி, என்னா பழக்கம் பழகி இருக்க, இந்த ஊருல, இவுக கிட்ட எல்லாம் எப்படிப் பழக்கணுமுன்னு, நீ சின்னதுல லீவுக்கு வருவியே, அப்பவே அப்பத்தா சொல்லி கேட்தில்ல “ என மீனாளிடம் பொரிந்து தள்ளவும் ,
“கங்கா, நீ இன்னும் உங்க அப்பத்தா காலத்தில் தான் இருக்கியா, இதெல்லாம் தப்பு. “ என மீனாச் சொல்லவும், மதுரையில் தன் பேச்சுக்கெல்லாம் ,செவிகொடுத்துக் கேட்டு , பேக்கு மாதிரி இருந்தவள், இங்கு வந்து தனக்கே பாடம் எடுப்பதைப் பொறுக்க மாட்டாதவளாக,
“உனக்கெல்லாம் பட்டுத் திருந்தினா தான் புத்தி வரும், பார்த்துகிட்டே இரு, இப்ப தானே இவ அக்கா, இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சிருக்கா, சும்மாவே உங்க அத்தை அவளைத் தூக்கி வச்சு ஆடுவாக, இப்ப உங்க மாமாவும் பாராட்டுப் பாத்திரம் வாசிச்சிட்டாரு, உன் புருஷன் ஏற்கனவே அவள் காலடியில் தான் “ எனப் பேசிக் கொண்டே போகவும்,
“போதும் நிறுத்துங்க, மதுரையிலே உங்க வீட்டுக்கு வந்தமேன்னு பேசாம வந்தேன், நீங்க பாட்டுக்கு பேசுறீங்க” என முத்து எதிர்க்கவும், கங்கா ஆவேசமானாள் . சாமந்தியம்மாள் இருவரையும் சமாதனப் படுத்தியவர், மீனாளை "நடுக்கதவை அடிச்சிட்டு வாத்தா, இது அடங்காது, கூட்டத்தில் இருக்க ஆம்பளைகளுக்குக் கேக்க போகுது, அக்கா சும்மாவே நொந்து கிடக்கு “ என அனுப்பி வைத்தார், அந்த நேரம் தான் சிந்தா உள்ளே வந்தாள் .
கங்கா , முழு வேகத்தில் முத்துவை தாக்கி அவளைக் குமரனை மயக்கப் பார்க்கிறாள், என அடுத்தக் கதையைக் கட்ட ஆரம்பிக்கவும், முத்து வாயடைத்து நிற்க, கங்கா குரல் வேகமெடுத்தது , சட்டெனச் சாமந்தியம்மாளை கண் கட்டி வெளியேறச் சொன்ன சிந்தா, முத்துவை மறைத்தது போல் கங்கா முன் வந்து நின்று, தங்கை கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவள், “இது சாக்கடை, இது கூடப் பேசுனா கூட நம்ம தான் அசிங்கப் படுவோம், புள்ளைங்க அப்பாகிட்ட இருக்குதுங்க, நீ வீட்டுக்கு போ, நான் பின்னாடியே வர்றேன்” எனக் கட்டளையாகச் சொல்லவும், அதுவரை அப்படி ஒரு அக்காவையே பார்க்காத முத்து அவளது வார்த்தைக்கு அடி பணிந்து , பெரிய வீட்டை விட்டு வெளியேறினாள் . அடுப்படி கதவை மூடினாள் சிந்தா.
“ஏய் என்னடி ரொம்பத் தான் வாய் நீளுது . பாம்புக் கடிக்கு வைத்தியம் பார்த்துட்டு இங்க வந்து ஒண்டிக்கலாமுன்னு பார்க்குறியா” எனக் கங்கா சிந்தாவிடம் நேராக மோதவும்.
கண்களில் கோபத்தோடு நின்ற சிந்தா, “ அட சீ வாயை மூடுடி, பெரியம்மா வயித்துல பிறந்த ஒரே காரணத்துக்காக உன்னை அசிங்கப் படுத்தாம விடுறேன், பொழைச்சு போ . அஞ்சு வருஷம் முன்னாடி என்னை வஞ்சியே, அது எல்லாமே உனக்கு நீயே திட்டிகிட்ட வார்த்தை. சும்மா சாதியைப் பத்தி பேசுற, அதுக்கும் லாயக்கு இல்லாதவ நீ, உன் சோமபான லீலை எல்லாம் எனக்கும் தெரியும். பெரியம்மா உனக்குப் புள்ளை வரம் வேணுமுன்னு கோயில் கோயிலா ஏறி இறங்குறாக,நீ பண்ண பாவத்தைக் கலைக்கப் போயி மொத்தமா போச்சு, இனி புள்ளை வரம் உனக்குக் கிடைக்காதுன்னு எப்படிச் சொல்றது. பெத்தவுகளையும் ஏமாத்தி, புருஷனையும் ஏமாற்றி எத்தனை நாளைக்கு உன் அதட்டல் உருட்டல் நாடகத்தை நடத்துவ. இத்தோட வாயை மூடிக்க . இல்லையினா யாருக்குமே உன் மூஞ்சியைக் காட்ட முடியாமல் பண்ணிடுவேன்” எனக் கண்ணில் அனல் தகிக்க எச்சரிக்கை விடுக்கவும் கங்கா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
சிந்தா அடிப்படை கதவைத் திறக்கவும், மீனாள் சிவநேசனோடு பதட்டமாக நின்றாள் . அவர்களுக்குச் சிந்தாவின் வார்த்தை காதில் விழ வில்லை, ஆனால் கங்கா அதிர்ந்து நின்றதில் , ஏதோ அதிர்ச்சி வைத்தியம் பார்த்து உள்ளாள் என மட்டும் சிவநேசன் புரிந்து கொண்டான். சிந்தனை யோசனையாகவே பார்க்கவும், முதலில் அவர்கள் மேலும் பாவமே எனப் பார்வையை ஓட்டியவள் ,
“ஒன்னும் இல்லையா, அஞ்சு வருஷம் முன்ன உன்னைத் தப்பா பேசிட்டோமுன்னு உங்க தங்கச்சி என்கிட்டே மன்னிப்பு கேட்டுச்சு. “ என ஓர் புன்னகையோடு சொன்னவள்,
“அதையெல்லாம், நான் மறந்து ரொம்பக் காலம் ஆச்சு, கண்ணுக்கு நிறைஞ்ச புருசனும், மணிமணியா இரண்டு புள்ளைகளும் இருக்கு, யார் வார்த்தையும் என்னை ஒன்னும் பண்ணதுன்னு சொல்லிட்டு வந்தேன்” என நகர்ந்தவளை, மற்ற மூவரும் சந்தேகமாகப் பார்க்க, ராஜியம்மாளிடம் வரவும், வைத்தியர் கிளம்பினார். இவளும் சொல்லிக் கொண்டு கிளம்பவும், எதோ சத்தம் கேட்டதில் , ராஜி சந்தேகமாக, “சிந்தா , நாளைக்கு வருவ தானே ‘ எனக் கவலையாகக் கேட்டார் .
“கவலையே படாதீங்க , தினமும் வருவேன். இந்தப் பாம்புக்கடி வைத்தியம் முடியவும், உங்க கால் வலிக்கு எண்ணெய் தேய்கிறது தான் என் அடுத்த வேலை” எனத் தனக்குத் தந்த தாம்பூலத்தையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு கணவனோடு கிளம்பினாள் சிந்தா.
தனக்கு என வந்த போது அவச்சொற்களைப் பொறுத்த சிந்தா, மகளைப் போல வளர்த்த தங்கையைப் பேசவும் தானேஅவ்விடத்தில் தாயாக மாறி, அவளைக் காத்துப், பேசியவளை வாயடைக்கச் செய்தும் வந்தாள். இது தான் ஒரு தாய் உள்ளத்தின் வலிமை. இனி முத்துவை தேற்றுவதும் அவளுக்கு நல் வாழ்வு அமைத்துக் கொடுப்பது அவள் கடமையே.
பெரிய வீட்டு மூத்த தம்பதியினரும், வைத்தியரும்,சிந்தா வேலு தம்பதியினரை வாழ்த்த, அதனை உரசிப் பார்த்து இவர்களைப் பரீட்சை செய்ய வென அடுத்த ஒரு வாரத்தில் வந்து சேர்ந்தது வேலுவின் சின்னம்மா ராக்காயி. அது என்ன செய்யக் காத்திருக்கிறது, வேலு மனம் மாறுமா, சிந்தா கணவனை எப்படி எதிர்கொள்வாள். குமரன் -முத்து நிலை தெரிய வரும் பொதுச் சிந்தா என்ன செய்வாள், பொறுத்திருந்து பார்ப்போம் .
No comments:
Post a Comment