சிந்தா- ஜீவநதியவள்-16
முத்துத் தன்னிடமிருந்த நல்ல சுடிதாரில் ஒன்றை அணிந்து கொண்டு, இரண்டு செட் உடைகள், தனது சர்டிவிகேட் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டாள். அதிகப் பட்சம் மதுரை வரை சென்றிருப்பவளுக்கு, கோவை வரை செல்வது என்பதே புது அனுபவம் தான். அதுவும், அமிர்தா இவர்களோடு நன்றாகப் பழகியதாலும், நீரஜ்குமார் பண்பான மனிதன் என்பதாலும் இந்தக் குடும்பம் அவளை அனுப்புகிறது. புதிய காலேஜ், மனிதர்கள் என்ற பயம் இருந்த போதும், வீட்டில் இவர்கள் கண் முன்னால் இருந்தால் திருமணம் பற்றிய பேச்சுகள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, வெளியூர் சென்று படிப்பதென்று துணிந்து விட்டாள்.
" முத்து, சாமியைக் கும்பிட்டுக்கிட்டு ஆத்தாளை மனசில நினைச்சுக்கிட்டுக் கிளம்பு. " என அய்யனார் மகளுக்கு அறிவுரை கூறியவர், வழிச் செலவுக்கென ஆயிரம் ரூபாயை நீட்டவும் , அதை வாங்கிக் கொண்டாள் . " காலேஜ் பீஸ் இப்பவே கட்டனுமா, எம்புட்டு வரும்" என மகளிடமே கேட்டார்.
" அந்த ஊருல எவ்வளவு வரும்னு எனக்கும் தெரியாதுப்பா . அக்கா தான் விசாரிச்சது. அதுக்குத் தான் தெரியும்" என்றவளுக்கு, நேற்று இந்தக் கிழவி வரவும் சூழலே மாறி, குமரன் அவளிடம் சொல்லாமலே மதுரைக்குக் கிளம்பியிருந்ததில் வருத்தமாக இருந்தாள். எனவே அய்யனாரின் கேள்விக்குக் கூட விட்டேற்றியாகவே பதில் வந்தது.
மதியம் சாப்பிட்ட பிறகு தான் அவர்கள் கிளம்புகின்றனர். சிந்தா தன்னிடமிருந்த பணத்தை வள்ளியிடம் கொடுத்துவிட, இந்தக் காலேஜ் செல்லும் முடிவு எதிர்பாராதது. அதனால் அவளிடம் கையிருப்பு இல்லை. அமிர்தாவும் எவ்வளவு ஆகும் எனச் சரியாகச் சொல்லாமல், " அதெல்லாம் பார்த்துக்கலாம். நான் போட்டு கட்டிடுறேன். நீங்கள் மெதுவா குடுங்க" எனச் சொல்லியும் எப்படி வெறுங்கையோடு அனுப்புவது எனத் தயங்கியவள், வேலுவிடம் கேட்டாள் ." உன்னைப் பத்தி தெரிஞ்சு தான், தனியா காசு எடுத்து வச்சிருந்தேன்" என இருபதாயிரம் ரூபாயைத் தரவும், சிந்தாவுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.
" மச்சான்னா, மச்சான் தான்" எனக் கொஞ்சிவிட்டு வாங்கித் தங்கையிடம் கொடுத்துப் பத்திரமாக உள்ளே வைக்கச் சொன்னவள், சிறுவாடு காசாகச் சேர்த்ததில் மூவாயிரம் ரூபாயைக் கொடுத்து, "அமிர்தா கூடப் போயி, இரண்டு செட்டு துணி வாங்கிக்க " என இரகசியமாகக் கொடுத்தாள்.
இவை அனைத்தையுமே ராக்காயி, கண்டும் காணாதது போல் இருந்தது. 'இந்தப் பயலை என்னமோன்டு நினைச்சோம். நல்லா சம்பாதிப்பான் போலையே ' என மனதில் கணக்கு செய்தது.
நேற்று வந்ததிலிருந்தே ராக்காயியை, சிந்தா நன்றாகக் கவனித்துக் கொண்டாள். சாப்பாட்டுக்குக் காய்ந்தது போல் எவ்வளவு சாப்பாடு போட்டாலும் சாப்பிட்டது. தட்டி வைத்து மறைத்து இருக்கும் இரண்டு பக்க உள் திண்ணையில் ஒரு பக்கத்தில் அய்யனார் தனது உடைமைகளை வைத்திருப்பார், எனவே மற்றொரு திண்ணையை, ராக்காயிக்கு, பாய், தலையணை , போர்வை என ஒரு டேபிள் ஃபேனும் கொடுத்துச் சவுகரியமாகப் படுக்க வைத்தாள். அதிலேயே பூத்துப் போய், மருமகளுக்கு வாழ்த்துக்களை அள்ளி வழங்கி, வாயார புகழ்ந்து கொண்டிருந்தது.
இரவு தூங்கும் முன் கணவனிடம், " அந்த அத்தை பாவாம் மச்சான், ரொம்ப நாளா சாப்பிடலைப் போல" என வரிசையாகச் சின்ன மாமியாளைப் பற்றியே சிந்தா கவலைப் படவும், " ஏ புள்ளை, சிந்தாமணி, நான் திரும்பவும் சொல்றேன். இந்தப் பொம்பளைக்குப் பாவம் பார்க்காத, உனக்குத் தான், பாவம் வந்து சேரும். அது மோசமான பொம்பளை. என்னைக்குமே, யாருக்குமே நல்லதே நினைக்காது" என எச்சரித்தான் வேலு.
" என்னா இருந்தாலும், அது உன் அம்மா இடத்துல இருக்கு., அவுக இருந்தா நாம வச்சுப் பார்க்கமாட்டமா எதுவும் பேசாத மச்சான். அவுக் பாட்டுக்கு இருந்திட்டுப் போறாக" எனச் சிந்தா கணவனைக் கடிந்து கொள்ளவும், "பட்டா தான் புத்தி வரும்னா என்னா செய்ய. என்னைச் சுத்துன பாவம் உன்னையும் பிடிக்க வந்திருக்கு. ஏலேய் , என்னைப் பெத்தவனே ,சுருட்டுக் கருப்பா, உன் சம்சாரம் என்னை, எங்க கொண்டு வந்து நிறுத்த போகுதுன்னு தெரியலையே. செத்துப் போயும் என்னை மாட்டி விடுறியாய்யா .உன் சம்சாரம் வில்லங்கம்னா, என் சம்சாரம் ரொம்ப நல்லவ. இது இரண்டும் ஒரு வீட்டுல இருந்து, வீடு உறுப்புட்டா மாதிரி தான் " எனக் காலம் சென்ற தன் அப்பனை மேலே பார்த்துப் பேசிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்துச் சிந்தா சிரிக்கவும்.
" என் பிரச்சனை எனக்குத் தான் தெரியும். கதவைப் பூட்டிட்டு வந்து படு. நாளை பின்ன ரூம்புல படுக்கிறனோ, கூடத்தில படுக்கிறனோ, தெருவில படுக்கப் போறனோ தெரியலை" என அநியாயத்துக்குப் புலம்பியவனை , அவன் உண்மையைத் தான் சொல்கிறான் என்பதை அறியாமல் அவன் வேடிக்கை செய்கிறான் , என ஆசையாகவே பார்த்திருந்தாள் சிந்தா.
முத்து கிளம்பும் நேரம் வரவும், அய்யனாரையும், ராக்காயியையும் தவிர மற்ற அனைவருமே பெரிய வீடு வரை வந்து, தங்கையையும், அமிர்தா , நீரஜையும் வழியனுப்பினர். சிந்தா ஆயிரம் பத்திரம் சொல்லி தங்கையை அனுப்பவும், ராஜியம்மாள், சிந்தாவைப் பார்த்து, " என்னடி, தங்கச்சியைக் கட்டிக் கொடுத்து புருஷன் வீட்டுக்கா அனுப்புற?" எனக் கேலி செய்யவும், " ம் சொல்லுவீக, பொம்பளை புள்ளையை இம்புட்டுத் தூரம் அனுப்புறதுன்னா சும்மாவா? " என்றாள்.
" அட ஒண்ணும் பயப்படாத. அமிர்தா, நீரஜ் இன்னும் இரண்டு மூன்றுபேர் இவுக ஆளுங்க, நம்ம குமரனோட சேர்ந்து தான் இதையெல்லாம் நடத்துறாக. அது பெரிய கூட்டுப்பண்ணை, காலேஜும் அதுக்குப் பக்கத்திலேயே தான் , கவலைப்படாத" என அவர் சிந்தாவின் கவலையைப் போக்கச் சொல்லிய, விசயம் தான் சிந்தாவின் தூக்கத்தைக் கெடுத்தது. இருந்தும் யாரிடமும் எதையும் பகிராமல் தன் வேலையைப் பார்த்தாள்.
சிந்தாவின் கவலை, சரியானதே என்பது போல், அமிர்தா கார் மதுரைச் செல்லவுமே, குமரனும் அதில் வந்து ஏறினான். முத்துவுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்த போதும், மறுபுறம் சற்றே திகிலாகவும் இருந்தது.
அமிர்தாவை முன் சீட்டை பின்னால் நகர்த்தி வசதியாக உட்கார வைத்து நீரஜ் காரை ஓட்ட , முத்துப் பின்சீட்டில் அமர்ந்து வந்தாள். மதுரையில் குமரனும் வரவும், " டேய் கிழவா, நீ முன்னாடி உட்காரு, நான் பின்னாடி போறேன்" என்ற அமிர்தாவை, " நோ நோ, ப்ரக்னெட்ட் லேடி நீ , கம்பர்டபிலா உட்கார். நான் பின்னாடி அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்குறேன்" என அவன் பெருந்தன்மையாகச் சொல்லி பின் சீட்டுக்கு, முத்துப் பக்கத்தில் அமரப் போகவும், அமிர்தா முறைத்தாள்.
" ஏய் அம்மிக்கல்லு, உனக்கெல்லாம், எவ்வளவு ஹெல் பண்ணியிருக்கேன். ஆசானே சொல்லுங்க" என்று விட்டு, சுவாதீனமாகப் பின் சீட்டில் ஏறி, ட்ரைவர் இருக்கைக்குப் பின் முத்துவை தள்ளி உட்காரச் சொல்லி, தான் நடுசீட்டில் அமர்ந்து கொண்டான். முத்துக் கதவு திறந்து வெளியே விழுந்து விடுவோமோ என்பது போல் அமர்ந்திருக்க, குமரன் தாராளமாகவே அமர்ந்திருந்தான். அமிர்தா தான் மிரட்டிக் கொண்டே வந்தாள்.
" ஏய் நீங்களும், தான கூடவே இருக்கீங்க, அவளை அப்படி என்ன செஞ்சுடுவேன்" எனக் கேட்டவன், அவள் பக்க லாக் சரியாக இருக்கிறதா எனப் பரிசோதிக்க, கையை அவள் குறுக்கே நீட்டினான். முத்துவுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. , " டேய், நீருஸார், ஏற்கனவே சென்டர் லாக் போட்டுத் தான் இருக்கார். நீ அடங்கி உட்கார் " என மிரட்டிய அமிர்தா, "முத்து இவன் எதாவது செஞ்சான்னா சத்தமா கத்து நான் பார்த்துக்குறேன்" என அமிர்தா அவளிடமும் சொல்லவும், முத்துவுக்குத் தான் வெக்கம் பிடுங்கித் தின்றது. ஆனால் குமரன் எதற்கும் அலட்டிக் கொள்வதாக இல்லை. தன்னை முத்துப் பழகவேண்டும், இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது.
அவளும் எவ்வளவு நேரம் தான் அமைதியாக வருவாள், தன்னை மறந்து தூங்கியவளை , இருள் கவ்வியிருந்த நேரத்தில் தன் தோள் வளைவில் தாங்கிக் கொண்டான். கண் விழித்த போது, நெளிந்தவள், முன்னே நிமிர்ந்து உட்காரவும், அவன் ஆட்சேபனையோடு ," உச்" கொட்டவும், அவள் கண்களாலே ப்ளீஸ் எனவும் , கையை விலக்கிக் கொண்டான். வழியில் ஓரிடத்தில் டிபன் சாப்பிட்டவர்கள், கோவையைத் தாண்டி மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரிய கூட்டுப் பண்ணை "வேர்கள் " போர்டு தாங்கிய இடத்துக்குள் பிரவேசித்தனர்.
பெரிய பண்ணைக்குள் , தார் ரோடு போட்ட தடத்தில் கார் வளைந்து, நெளிந்து ஓடிச்சென்று, ஒரு கட்டிடத்தின் முகப்பில் நிற்க, இவர்கள் இறங்கிக் கொண்டனர், பெரிய வராண்டா, ஹால், டையனிங் எனக் கல்யாண மண்டபம் அளவில் பார்க்கவும், முத்து " இது உங்க வீடா, என்ன இது " என மிரண்டு போனாள்.
" இதைக் கம்யூனிடி லிவ்விங்க்னு சொல்லுவோம். ஐஞ்சு பேமலி இருக்கோம், ஆளாளுக்குத் தனியா, லிவ்விங் ரூம், பெட்ரூம், கெஸ்ட் ரூம்னு இருந்தாலும், கிட்சன் ஒண்ணு தான், சமையல் ஒன்னு, எல்லாரும் நைட் மட்டும் சாப்பிட கீழ இறங்கிடுவோம். மத்த நேரம் அவரவர் வசதி படி பார்த்துக்குவோம். " என விளக்கிய அமிர்தா, " எல்லாம் இந்தக் கிழவனோட ஐடியா தான். நீரு சாரும், இவனும் மெயின் இன்வெஸ்டர்ஸ், மத்த மூன்று பேரும் பார்ட்னர்ஸ்" என்றவள்,
" முத்துவை சிந்தா அக்கா என்னை நம்பி அனுப்பியிருக்காங்க, என் கெஸ்ட் ரூம் கூட்டிட்டுப் போறேன்" என முத்துவின் கையைப் பிடித்து அழைக்கவும், " மரியாதையா ஓடிரு. ஊர்ல தான் அவ பக்கத்திலையே போக முடியலை. இங்கே என் கூடத் தான் இருப்பா" என முத்துவின் கையை, குமரன் பற்றித் தன பக்கம் இழுத்துக் கொண்டான். நீரஜ், அமிர்தாவிடம்,
" அவனுக்கு, அவன் லிமிட் தெரியும். ரொம்பக் கன்டிசன் பண்ணாத அமீர் " என அமிர்தாவிடம் சொன்னவர், முத்துவிடம், " இவன் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா, நீ அவன் கூடப் போகலாம் .அவன் கோவிச்சுக்க மாட்டான். தைரியமாச் சொல்லுமா. உன் கருத்து தான் முக்கியம்" என அவர் , குமாரனைப் பற்றி முத்து என்ன நினைக்கிறாள் என இதன் மூலம் ஒரு பரிட்சை வைத்தார்.
" எனக்கும் அவுகளோட பேச வேண்டியது இருக்கு. அவுகளோட கெஸ்ட் ரூம்ல தங்கிக்கிறேன்" என முத்து தீர்க்கமாகவே பதில் சொல்லவும். " குட், உங்க அக்காவுக்குப் போன் பண்ணி , பாதுகாப்பா வந்துட்டோம்னு சொல்லிடு" என அமிர்தாவோடு அவர் தங்கள் பகுதிக்குச் செல்ல, குமரன் கையைக் கட்டிக் கொண்டு முத்துவையே பார்த்திருந்தவன், " என்னை நம்பினதுக்குத் தாங்க்ஸ்" என்றான்.
" உங்க மேல இருக்க நம்பிக்கையை விட , என் மேல, எங்க அக்கா வளர்ப்பு மேல எனக்கு நம்பிக்கை நிறையவே உண்டு. " என்றவள், "எந்தப் பக்கம் போகனும்" எனச் சுற்றிப் பார்க்கவும், "பரவாயில்லை, நம்ம இடத்துக்கு வரவும் பேச்செல்லாம் வருது. " என அவளைப் பாராட்டியபடியே தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றான். முதல் தளத்தில், நீரஜ், குமரன் மட்டுமே இடத்தைப் பகிர்ந்து இருந்தனர். அவர்கள் பகுதியே, அவள் வீட்டின் மூன்று மடங்கு இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் ஆச்சரியமாகப் பார்த்தபடியே வந்தவள், சிந்தாவிடமிருந்து போன் வரவும் உற்சாகமாகப் பேசினாள். சிந்தா, குமரன் இருக்கிறானா எனச் சந்தேகமாகவே கேட்கவும், " இந்தா இருக்காகப் பேசு" என முத்து அவனிடம் போனை நீட்டவும், " சிந்தா அக்கா, போர்ல தண்ணீர் நல்லா வருதா, ஊர் மக்கள் என்ன பேசிக்கிறாங்க. நம்ம ப்ராஜெக்ட் வெற்றியடைச்சிடும் தானே " என அவன் ஊரைப் பற்றியும், வயலைப் பற்றியுமே கேட்கவும்.
" உங்க திட்டம் , வெற்றியடையாம போயிடுமா, அது தான் சரியா திட்டம் போட்டு காயை நகத்துறீகளே, கோவைல எல்லாரும் ஒரே வீட்டுல இருக்கோமுன்னும் சொன்னது கிடையாது . இப்ப முத்துவை அனுப்பினேனே , நீங்களும் கோவை போறேன்னு எங்கிட்ட சொன்னீகளா " என அவள் வினவவும், " , என் வீட்டுக்காரம்மாகிட்டையே சொல்லலை, உங்ககிட்ட எதுக்குச் சொல்லணும். " என நகைத்தவன், அவளின் ஆட்சேபனை குரலில் "சொல்லியிருந்தா விட்டுருப்பீங்களா, அப்புறம் எங்க வச்சு அவளைக் கரெக்ட் பண்றது. அது தான் நாசூக்கா கடத்திட்டேன் .நீங்களும், குடும்பத்தோட ஒரு தடவை இங்க வந்து பார்த்துட்டுப் போங்க , உங்க எண்ணமும் மாறும். " எனக் குமரன் சிந்தாவையும் மூளைச் சலவை செய்ய முயன்றான்.
"உங்களுக்குத் தான் வெளிநாடுளையே இருந்ததால, எதார்த்த வாழ்க்கை புரியலை. நீங்க செய்யற விஷயம் கொஞ்சம் தெரிஞ்சாலும், சனம் அதை ஊதி பெருசாக்கிடும், எப்படிப் பேசுவாகத் தெரியுமா, நீங்க வந்து அவளைக் காப்பாத்துறதுக்கு எல்லாம் நேரமே இருக்காது. சொன்னாலும் புரிஞ்சுக்காதவரை என்ன செய்யறது. அவளை இக்கட்டான இடத்துல நிறுத்திடாதீக, மனசு நொந்து கிடந்தப்ப நானே தப்பான முடிவைத் தேடிப் போனேன், அவள் என்னை விட ரொம்பப் பூஞ்சை மனசுக்காரி " எனவும்
"நீங்க என்னை நம்பலாம், நான் எப்பவுமே உங்க தங்கைக்காக உறுதியா நிற்பேன், அதுவும் போக நேசன் அண்ணனை மாதிரி என்னை வாயடைக்க வைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. கவலை படாம தூங்குங்க. இனி எல்லாருக்குமே நல்ல காலம் தான் " எனச் சிந்தாவுக்கு நம்பிக்கை தந்து போனை வைத்தான் குமரன்.
"அக்கா என்ன சொல்லுச்சு" என அவள் கேட்கவும், " நீ எவ்வளவு வீரமானவன்னு சொன்னாங்க" என்றவன், அந்த ஹாலில் இருந்த இரண்டு அறைகளில் ஒன்றைத் திறந்து, அவளது பேகை கொண்டு வந்து உள்ளே வைத்தவன், " உனக்குத் தூக்கம் வருதுன்னா தூங்கு. இல்லைனா ரெப்ரெஸ் ஆகிட்டு வா. முன்னாடி ஒரு லான் இருக்கு, அதில உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்" என அழைப்பு விடுத்தான்.
" எனக்கு உங்களோட பேசனும், வர்றேன்" என்றாள். " நான் வெயிட் பண்றேன்" என்றவன், வெளியே செல்லும் முன், " ரொம்ப நேரமா என் கண்ணை உறுத்துது" என்றவன், அவள் கன்னத்தில் விழுந்த முடியை, காதோரத்தில் ஒதுக்கியவன், ஓர் சிரிப்போடு அறையிலிருந்து வெளியேற, அவன் தீண்டலும், நகைப்புமே அவளை மிகவும் பாதித்தது. " அய்யோ, சாமி நான் என்ன கதி ஆகப் போறனோ தெரியலை" எனப் புலம்பியவள், குளியலறைக்குள் புகுந்தாள்.
ரூப் கார்டனிங் என்று சொல்லப்படும் தோட்டத்தை அந்தப் பால்கனியில் அமைத்திருந்தான், அதன் செழுமை, வளம் அவனது வாழ்க்கை முறை எல்லாவற்றையும் பார்க்கவும் அவளுக்குப் பிரமிப்பும், கூடவே பயமும் வந்தது. ஆனால் குமரன், யுகங்களாக அவளோடான பந்தம் என்பது போல் மிகவும் இயல்பாகப் பழகினான். அவளும் தங்கள் வாழ்க்கை முறையை அவனுக்கு விளக்கியவள் ,சிந்தா பட்ட அவமானங்களையும் சொல்லி, "இனி ஒரு முறை எங்க குடும்பம் எந்த அவமானத்தையும் சந்திக்கக் கூடாது. அதுக்கு நானும் காரணமான இருக்கக் கூடாது. ப்ளீஸ் இதை மட்டும் எங்க நிலைமையிலிருந்து புரிஞ்சுக்குங்க " என அவள் கேட்கவும்.
"அப்ப, உன்னை விட்டுடச் சொல்றியா, உனக்கு என் மேல இஷ்டம் இல்லை, நான் தான் உன்னைத் தொந்தரவுப் பண்றேன்" எனக் கோவித்தவை, அவள் அழ மாட்டாமல் பார்க்கவும், "ஓகே, விடு, நம்ம வீட்டுக்கு வந்த அன்னைக்கே அழ கூடாது. நாளைக்குப் பேசிக்கலாம் " என அந்தப் பேச்சை நிறுத்தியவன் , சுவாரஸ்யமான வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி ,அவளை அவள் அறியாமலே ஈர்த்துக் கொண்டு இருந்தான்.
சிந்தா போனில் குமரனோடு பேசியதை, ராக்காயி தலை கால் புரியாமல் கேட்டுக் கொண்டு இருந்தது. இன்றே நிறைய ஆட்களைப் பார்த்ததிலேயே அதுக்குக் குழப்பம். காதில் விழுந்ததை மூலையில் ஏற்றிக் கொண்டு , கவனித்துக் கொண்டு இருந்தது.
வேலு அதன் பின்னர்த் தான் இரவு உணவுக்கு வந்தவனிடம் , "முத்து ஊருக்கு போயிட்டு போன் போட்டுட்டா மச்சான், சிங்கப்பூர்காரவுகளும் அங்கதான் போயிருக்காகலாம் , நம்மக் கிட்ட சொல்லவே இல்லை" எனச் சிந்தா குறை படவும், "அவர் அந்த ஊர்ல தானே குடியிருக்காரு, உன் கிட்ட சொன்னது இல்லையா, வயல்ல நிக்கையிலே இதெல்லாம் பேசுனோம், இரெண்டு நாள்ல சுப்புவும் அங்க போறான், அந்தச் சொட்டு நீர் பாசனம் குழாய் எப்படிப் பதிக்கிறதுன்னு கத்துக்கிட்டான்னா , அவனுக்கும் நல்ல தொழில் அமைச்சிடும்" எனத் தொலைநோக்குப் பார்வையோடு பேசிய கணவனிடம்,
முத்து- குமரனைப் பற்றிப் பேச வரும் நேரம் , ராக்காயி, "ஆத்தா , என் பேத்திக்குத் தூக்கம் வருது போல, கண்ணைத் தேய்க்கிது " எனக் குரல் கொடுக்கவும் சத்தியாவை கவனிக்கப் போனாள் சிந்தா.
அடுத்த நாள் காலையில், வேர்கள் பண்ணையைச் சுற்றிப் பார்க்க முத்துவை ஒரு பேட்டரிகாரில் அழைத்துச் சென்றான் குமரன். இந்தப் பூலோகத்தில் தான் இருக்கிறோமா என அவளுக்குச் சந்தேகம் வந்தது. அத்தனை வகை மலர்கள் விதவிதமான பராமரிப்பிலிருந்தது.
அங்கே வேலை செய்பவர்களும் அவனிடம் காட்டிய பவ்யத்தில், தனது தந்தையின் ஞாபகமும், தங்கள் நிலையும் நினைவில் வர,அதையுமே அவனிடம் வெளிப்படுத்தினாள்.
" நான் என்ன ஸ்பெஷல்னு என் மேல ஆசை படுறீக. நான் சாதாரணப் பண்ணைக்காரரோட மகள். எங்க அக்கா மாதிரி சிறப்பான குணமோ, தைரியமோ கூடக் கிடையாது. உங்களோட ஜோடியா நிற்க கூட எனக்குத் தகுதி இல்லை. இங்கனை மத்தவுக பார்வையும் அதைத் தான் சொல்லுது" என அவனிடம் சொல்லவும், அவளை முறைத்தவன், எதுவும் பேசாமலே திரும்ப அழைத்து வந்தான். அவள் தவிப்பாகவே அவன் முகத்தைப் பார்த்து வர, அவன் மௌனம் சாதித்தான்.
அமிர்தாவிடம் அழைத்து வந்தவன், "நீ காலேஜ்ல அட்மிஷன் போட இவளைக் கூட்டிட்டுப் போறியா" எனக் கேட்கவும்,
" ஆமாம் வேலையை முடிச்சிடுவோம். அப்புறம் ஃப்ரியா இருப்பால்ல" என்றவள் நண்பனின் முகத்தைப் பார்க்கவும் ஏதோ சரியில்லை என ஊகித்தாள். அவனை அனுப்பி விட்டு, முத்துவுடன் பேச்சுக் கொடுக்க, மனதிலிருப்பதை யாரிடம் கொட்டுவோம் என இருந்த முத்து, அமிர்தாவிடம் அத்தனையையும் கொட்டி விட,
" குமரனை ஏழு வருஷமா எனக்குத் தெரியும். இதுவரைக்கும் எந்தப் பொண்ணு பின்னாடியும் அவன் போனதில்லை. ஆனால் உன்னைப் பார்க்கவும், அவனுக்கு ஏதோ தோனியிருக்கனும். அதனால தான் விடாமல் நிற்கிறான். உங்க ஊருக்குள்ள மட்டும் தான் நீ அய்யனார் மகள். இங்க குமரன்கிட்ட வந்துட்டேன்னா உன் அடையாளமே மாறிடும் முத்து. நீ இந்த ஜாதி, பணம் இது இரண்டையும் ஒதுக்கி வச்சிட்டு அவனைப் பாரு. அவன் இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கான். அதோட வைப்ரேஷன் கூடவா உன்கிட்ட இல்லை" என அவள் கேட்கவும் முத்து யோசிக்க ஆரம்பித்தாள்.
" உங்க அக்கா, உன்னைச் சின்னப் புள்ளையாவே வளர்த்து விட்டுருக்காங்க. உன் வயசில அவுங்களுக்குக் கல்யாணமாயிடுச்சு. க்ரோன் அப். இன்னைக்கு ஒரு சேரியைக் கட்டு. நான் உன்னை ரெடி பண்றேன்" என்றவள், முத்துவை குளித்துத் தனது அறைக்கு வரச் சொன்னவள், முத்துவை ஹேர் ஸ்டைலிலிருந்து முற்றிலுமாக மாற்றி, அமிர்தாவுக்குத் தங்கை போல் மாற்றிவிட, எப்போதும் கூடாரமான சுடிதாரில் இருக்கும் அவளை, இன்று வளைவு, சுழிவுகளோடு பார்க்கவும், குமரன் சொன்னதும் நினைவில் வந்தது.
" இந்தக் கிழவன் உன்னை முதல் முதல்ல பார்க்கும் போது என்ன ட்ரெஸ் போட்டிருந்த" எனவும்.
" அன்னைக்கு சித்திரைத் திருவிழால்ல, பட்டுப் பாவாடை தாவணில இருந்தேன்" என்றவள், " அவுகளை ஏன் கிழவன்னு சொல்றீக. பார்க்க அப்படியா இருக்காக" என ஆட்சேபனையாகக் கேட்கவும்.
" ஹேங், அப்படித் தான் சொல்லுவேன். ஏழு வருசமா கூப்புடுறேன் உனக்காக மாத்திக்க முடியுமா. அவனைச் சொன்னா உனக்கு என்ன வந்திச்சு." எனக் கேலி செய்த அமிர்தா, அன்றைய பகல் முழுதும் முத்துவை, குமரன் கண்களிலிருந்து மறைத்தே வைத்திருந்து காலேஜ் அட்மிஷனையும் முடித்து வந்தாள்.
யூஜி ரிசல்ட் வந்த பிறகு மற்ற சான்றிதழ்களைத் தரச் சொன்னார்கள். அமிர்தா கட்டிய ஃபீலை பார்க்கவும், முத்துவுக்கு நெஞ்சடைத்தது. " அக்கா, இவ்வளவு ஃபீஸா. அக்கா இருபதாயிரம் குடுத்து விட்டுச்சு. நான் அதுவே அதிகம்னு நினைச்சேன்" என முகம் வாடியவளை, " உனக்கு எதுக்கு அந்தக் கவலை, உன் கிழவன், இந்தக் கார்டு குடுத்திருக்கான் பாரு. இன்னைக்குச் செலவு பூரா இதில தான்."என்றவள்,
ஒரு மாலில் காரை நிறுத்தி கல்லூரிக்கு உடுத்துவது போல் உயர் தரமான ஆடைகளை முத்துவின் அளவுக்கே எடுத்தாள். அங்கிருந்த துணிகளில் ஒரு துணி வாங்க கூடத் தன்னிடமிருக்கும் பணம் பத்தாது என எண்ணிக் கொண்டவளுக்கு அமிர்தா வாங்குவது அவளுக்குத் தான் என்பதே தெரியாது.
வீட்டுக்கு வந்த பின் அவளது அறைக்கே அத்தனையும் அனுப்பி வைக்க அதிர்ந்து தான் போனாள். " அக்கா, எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா எடுத்திருக்கீக. காலேஜ் போறதுக்கேவா, துணியில இவ்வளவு காசு போடனும்" என அவள் கேட்கவும்.
" உன் கிழவன் ஆர்டர். ரொம்ப யோசிக்காத எல்லாத்தையும் அவன் பார்த்துக்குவான். ஐயா ரெடியாத்தான் இருக்கான். நீ தைரியமா அவனை லவ் பண்ணு போதும்" எனச் சிரிக்கவும்.
" அக்கா" எனச் சலுகையாகக் கொஞ்சியவள், " அவுக தான் சொல்றாகன்னா, நீங்களும் அப்படியே பேசுறீக. அதென்ன கத்திரிக்கா வியாபாரமா. மனசிலிருந்து வர வேணாம்" எனவும்.
" ம்க்கூம், அவனைப் பார்த்தோடன வாய் மூடிக்கிற, உடம்பு தந்தியடிக்குது, கன்னத்தில சிவப்பு ரோசா பூத்துக்குது. இது பத்தாதா அவனுக்கு. அது தான் ஆடுறான். நீ வாயை திறந்து சொல்லாமலே , எல்லாத்துலயும் பாடி லேங்குவேஜூலையே எல்லாத்தையும் சொல்ற" என அவளையே அவளுக்குப் புரியவைக்க முயற்சித்தாள் அமிர்தா. 'அப்படியெல்லாமா ஆகுறோம் ' என யோசித்த முத்து, தன்னைக் கண்ணாடியில் பார்க்க, " துணி உடுத்துறதலையும் அலங்காரத்திலையும் இவ்வளவு இருக்கா, இப்ப அக்கா எண்ணெய் பார்த்துச்சுன்னா , அதுக்கே அடையாளம் தெரியாது' என எல்லா விஷயங்களையும் முத்து சிந்தாவை வைத்தே யோசித்தவள், 'காலையில , முறைச்சிட்டு விட்டுட்டுப் போனாகளே, அதுக்கப்புறம் பார்க்கவே இல்லை. சும்மாவே அப்படிப் பார்ப்பாக, இப்ப கேக்கவே வேணாம் ' என அக்கவுக்குப் பின் குமாரனை நினைக்க ஆரம்பித்தாள் . நினைக்கும் போதே தன் வதனம் மாறுவதை முன்னிருந்த ஆழி காட்ட, தூக்கிப் போட்டிருந்த கொண்டையை இறக்கி விட்டு, முடியை சிக்கெடுத்து சீவியவள், பெயருக்கு ஒரு க்ளிப் மட்டுமே போட்டுக் கொண்டு, தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
' முத்து ஓவரா பண்ணாத, திரும்ப ஊருக்குத் தான் போகனும்' என நினைவுபடுத்திக் கொண்டவள், போனை எடுத்து அக்காவிடம் காலேஜில் சேர்ந்ததை மட்டுமே சொன்னாள். பீஸை பற்றிச் சொல்லவில்லை. குமரன் வேலை விசயமாக நீரஜுடன் வெளியே சென்றிருந்தவன், காலையிலிருந்த கோபம் தீராமல் தான் அவளைப் பார்க்க வந்தான்.
கட்டிலில் பரப்பியிருந்த துணிகளில் ப்ரைஸ் டேகை பார்த்து, பார்த்து மொபைலில் டைப் செய்து கொண்டு, விரல் விட்டு எண்ணிக் கொண்டும், ஆத்தி என வாயை பிளந்து , நெஞ்சில் கை வைத்துப் பல வித உணர்ச்சிகளை முகத்தில் காட்டிக் கொண்டு , வஜ்ராசனத்தில் அமர்வது போல் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு, கோபம் மறந்து சிரிப்பு தான் வந்தது.
சத்தமில்லாமல் வந்தவன், " இந்த நாளை என் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கிறேன். இதை வீடியோ ரெக்கார்ட் பண்ணிக்கிறேன். பிற்காலத்தில தேவைப்படும்" எனத் தனது மொபைலில் அவளைச் சிறைபிடித்துக் கொண்டே வந்தான்.
கட்டிலின் விளிம்பில் அமர்ந்திருந்தவள், அப்படியே தொண்ணூறு டிகிரி கோணத்தில் அவள் திரும்பிப் பார்க்கக் கீழே விழப் போனாள். " ஹேய், கேர்ஃபுல் " என என அவள் இடையில் கைக் கொடுத்து அவன் தாங்க, அவன் தோளில் பாதியும், கட்டிலில் மீதியுமாக அவளிருக்க, புதிய அலங்காரத்தில் பார்த்தவன் , " ஹேய் இது யாரு புதுப் பொண்ணு. நான் கடத்திட்டு வந்த என் முத்துமணி எங்க" எனவும், கீழே விழ இருந்தவளுக்குப் பயம் விலகி வெட்கம் வந்தது. அவள் கண்ணை முழுதாக மூடிக் கொள்ள, அவள் பாவனையில் மயங்கியவன், இரு கைகளாலும் அவளை அள்ளிக் கொண்டான்.
" முத்தழகி, காலைல உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு கேட்டியே, இது தான், அன்னைக்கு ஜெயின்ட் வில்ல பதட்டமா, குறுகுறுப்பா , ஒரு பயத்தோட என்னைப் பார்த்தியே, கையைப் பிடிச்சு இறங்க கூட அவ்வளவு தயக்கம். ஐ லவ் தட் ஃபீல் மைடியர். அது தான் இன்னைக்கு என் கைக்குள்ள உன்னைக் கொண்டு வந்திருக்கு" என வசீகரமாய் அவன் சிரிக்கவும், கண் திறந்து அவனைப் பார்த்தவளுக்கு, அவளது பெண்மையைப் போற்றும் ஆண்மகனாய் மட்டுமே தெரிந்தான் அவன்.
அமிர்தா சொன்னது போல், ஜாதியையும், அந்தஸ்தையும் அகற்றி விட்டு அவனை மட்டுமே பார்த்தவளுக்கு வைரமுத்துவின் வரிகள் போல் வயிற்றிலிருந்து ஒரு பந்து தொண்டையை நோக்கி உருளத் தான் செய்தது.
" இறக்கி விடுங்க. ப்ளீஸ் " என்றவளின் ஹஸ்கி குரலிலும், ஏறி இறங்கும் மூச்சிலும், சட்டெனச் சூடேறிய அவளது உடலிலுமாக , தனக்கான அவளது உணர்வுகளை உணர்ந்தவன், வாய்ப்பை தவறவிடாமல் இரு கைகளிலும் அவளை ஏந்திக் கொண்டு ஷோபாவில் அமர்ந்தவன், அவளுக்குக் காதல் பாடம் சொல்லித் தந்து ஆட்கொள்ள, அவளும் அவனின் அடியாளாகி இயைந்து கொடுத்தாள்.
ஒரு போன் கால் அவர்கள் மோனத்தைக் கலைக்க , அவளை விலக மனமின்றி அடித்து ஓயட்டும் என விட்டான். அவள் தான் சுதாரித்து, " போன் அடிக்குது." என்றாள. ரிங் டோனை வைத்தே, "அப்பா தான், திருப்பிக் கூப்புட்டுக்குவோம். " என்றவன்.
" உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன், பேசிறியா. நீ பேசிட்டா நம்ம கல்யாணமே முடிஞ்ச மாதிரி தான்" என அவன் குண்டைத் தூக்கிப் போடவும். துள்ளி எழுந்தவள், இரண்டு ஆதி தள்ளி நின்றுக் கொண்டாள் .
" ஆத்தி, அவுகள்ட்டப் போய், என்ன பேசுறது. நான் மாட்டேன் பா. சும்மா இருங்க. " எனத் தள்ளி நின்றவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவன்.
" அது தானே, அவர் மகன்ட்டையே இன்னும் ஒண்ணும் பேசல. இப்பச் சொல்லு, என்னைப் பத்தி என்ன பீல் பண்ற " எனக் கேட்கவும் .
" ம் என்னத்தைச் சொல்றது. நீங்களே இன்னும் ஒண்ணும் சொல்லலையாம்" என அவள் இழுக்கவும், ஆச்சரியமடைந்தவன், "உன்கிட்டச் சொல்லலையா. நான் உன்கூடக் குடும்பம் நடத்தி புள்ளை எல்லாம் பெத்துட்டேன்" என அவன் சொல்லவும், நறுக்கென அவன் கையில் கிள்ளியவள், " என்னை அப்படியா பார்த்திக " எனக் கோபப்படவும்.
"அடியே, பொண்டாட்டியா நினைக்கும் போது , உன்கூடச் சேர்ந்து விவசாயமா பண்ணுவேன். " என அவன் சிரிக்கவும். கன்னங்கள், குவிந்து, சிவந்து சூடேற, கண்கள் குழிந்து நாணம் அவளைத் தத்தெடுக்க, அவன் சிரிப்பே அத்தனைக்கும் காரணம் என அவளைப் பற்றியிருந்த அவன் கரங்களில் ," சிரிக்காதீக" குத்தினாள். அதன் பிறகு இன்னும் குலுங்கிச் சிரித்தவன், அவள் முகம் போன போக்கைப் பார்த்து விட்டே, "ஐ லவ் யு, மை டியர் அழகி. முத்தழகி" என அவளைக் கை வளைவில் வைத்துக் கொண்டு, சிரிப்பை நிறுத்தி,
" அவுக மகன் சொல்லிட்டாக. இப்ப நீ சொல்லு" என வம்பிழுத்தான். அவள் புரியாமல் முழிக்கவும்.
" அது தான் போன்ல எங்கப்பாட்ட பேசலாம்னு சொன்னேன்ல, அவுகள்ட்ட என்ன சொல்றதுன்னு கேட்டியே. அவுக மகன் சொல்லிட்டேன். இப்ப நீ சொல்லு" என அவன் கிடுக்கிப்பிடி போடவும். மாட்டேன் எனத் தலையை ஆட்டினாள்.
" ஏன் அதுக்கும் உங்க அக்காட்ட பர்மிஷன் வாங்கனுமா" எனக் கேட்கவும்,
" அதெல்லாம் உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் கட்டிக்கன்னு, என்னைக் கட்டாயப் படுத்த கூடாதுன்னு அக்காகிட்ட கண்டிசனா சொல்லிட்டேன். அதுனால தான் இம்புட்டு தொலைவுக்குப் படிக்க அனுப்புது " என அவள் சொல்லவும், அதிசயமாகக் கேட்டவன், " இது எப்ப. என்கிட்டச் சொல்லவே இல்லை. " எனவும் கங்கா வந்த அன்று எனச் சொல்லவும்.
" சூப்பர்டி. இதை விட என்ன வேணும்" என்றவன் அவள் கன்னத்தில் எதிர்பாராமல் முத்தமிடவும், அவள் ஆட்சேபிக்க, " இது பாராட்டு " என்றவன், " நீ இந்த வார்த்தையைத் தான் சொல்லுவேன்னு, நான் உங்க அக்காகிட்ட சவால் விட்டிருந்தேன். அதையே சொல்லிருக்கியே. " என மீண்டும் வியந்தவன் அவளை மீண்டும் பாராட்டி விட்டு.
" முத்தழகி, நம்ம லவ் , செம லவ் தான். பூங்கொடில நம்மளைச் சுத்தி எப்பவுமே யாராவது இருப்பாங்க. நானாவது மறைமுகமா ஆசையைச் சொல்லியிருக்கேன். நீ அதுவும் இல்லை. ஆனால் வார்த்தை முதற்கொண்டு அதே மாதிரி வருது பாரு. இது போதும். வா, உன் மாமனார்ட்ட வீடியோ காலில் பேசுவோம்" என அவன் அழைக்கவும்.
" வேண்டாங்க , வேண்டாம். ப்ளீஸ், ப்ளீஸ் எனக்குப் பயமா இருக்கு. உங்களையே இப்பத் தான் பழகியிருக்கேன். அதுக்குள்ள அவுககிட்ட பேசச் சொல்றீக. " என அவனில் மறைந்து கொண்டே அவள் கெஞ்சவும், " சரி நானாவது பேசிட்டு வரேன் விடு" என்றவன், வீடியோ காலில் அப்பாவை அழைத்தவன், சித்தி தங்கை எனப் பேசியவன்,
" அவ பயப்புறாடி. இரு காட்டுறேன்" எனத் தங்கையிடம் சொன்னவன், " முத்து, இது என் தங்கச்சி, நம்ம ஊரைப் பத்தி ஏதோ கேட்கனுமாம்" எனவும், ஊரைப் பத்தி தானே என்றவள், தன்னை விடச் சற்றே பெரியவளான அந்தப் பெண்ணிடம் சகஜமாகப் பேசினாள்.
”நம்ம ஊர்ல குதிரையெடுப்பு திருவிழா வருது, ஊருக்கு வாங்க “ என அவளுக்கு அழைப்பு விடுக்க, குமரனின் தந்தை சோமசேகர் வீடியோவில் வந்தார், அவரைப் பார்க்கவும் மகாலிங்கத்தின் சாயலில் இருக்கவும், பதட்டமாக எழுந்து நின்று, “வணக்கம் அய்யா “ எனத் தலைவணங்க, “அய்யனார் மகளா நீ “ என வினவியவர், அவள் தந்தை சிறு வயது முதலே, தங்களுக்காக என்ன என்ன செய்தார் என்பதை விவரித்தவர், “புரவியெடுப்பு ன்னு சொல்லவும் , ஊருக்கு வரணுமுன்னு ஒரே ஆசையா இருக்கு “ எனப் பேசிவிட்டு மகனிடம் போனை கொடுக்கச் சொன்னார். அவன் விஷயத்தை ஆரம்பித்து விடுவானோ என இவள் கெஞ்சவும், ஓர் தலையசைப்புடன், அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டான்.
மேலப்பூங்குடியில் , தென் வயலில் போர் போட்டுத் தண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது , அதற்கான பைப்புகள் இறக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஊரே ஆள் மாற்றி ஆள் வந்து,அதனை வேடிக்கை பார்த்துச் சென்றனர், அதோடு ராக்காயியையும் " யாரு இவுக புதுசா, வேலு சின்னம்மாவா" என்ற விசாரிப்போடு சென்றனர்.
ஆண்டிச்சி கிழவி பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்தது என்றும், சிந்தாவுக்கு மாமியார் எனவும், எப்படி என்ன என ஆராய வந்துவிட்டது. ராக்காயியும் பாவமான வேஷம் கட்டி தன் நடிப்பைக் காட்ட, அனுபவசாலியான ஆண்டிச்சி கிழவி, சிந்தாவிடம் தனியாக வந்து, " அது ஒண்ணும் லேசு பட்ட கிழவி இல்லடி. பார்த்து சூதானமா இருந்துக்கோ" எனப் புத்திமதி சொல்லிச் சென்றது.
' இதுக்குப் போட்டியா, இங்கியே ஒண்ணு குத்தவச்சிருக்குன்னு பொறாமை “ என நினைத்தவள், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் போக , சத்யாவைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவது, குளிக்க வைக்க ஒத்தாசை செய்வது, உட்கார்ந்து கொண்டே செய்யும் வேலைகளில் ஒத்தாசையாக இருப்பது, என இருந்ததால் ,சிந்தா தன் அம்மாவின் நினைவில், அவர் இருந்தால் இது போல் ஒத்தாசையாக இருந்திருக்குமே , என் மாமியார் செயல்களில் மிகவும் மகிழ்ந்து போனாள் .
முத்து கோவை சென்று இரண்டு நாட்கள் ஆனது, அவ்வப்போது போன் செய்து, அந்த இடத்தைப் பற்றியும், அமிர்தா அவர்களது நண்பர்கள் பற்றியும் சொல்லவும், சிந்தாவுக்கு ஒரு பக்கம், முத்துவுக்கு அமிர்தா நல்ல வழிகாட்டியாக இருப்பாள் எனத் தோன்றிய போதும், குமாரனையும் பெரிய வீட்டையும் நினைத்து பயமாகவே இருந்தது.
வேலுவிடம் இதைப் பற்றிப் பேசலாம் எனில், ராக்காயி இருந்தார், அது மட்டுமின்றி அய்யனாருக்குத் தெரியாமல் பேச வேண்டும். பெரிய வீட்டு அம்மா, சிவநேசன் இவர்களிடம் சொல்லப் பயமாக இருந்தது. வள்ளியுடன் கூடச் சொல்லி மனசை ஆத்திக் கொள்ள முடியாமல் தவித்தவள், சுப்பிரமணியை மூன்றாம் நாள் கோவை சென்று முத்துவை அழைத்து வரப் பணித்தாள்.
ஏனெனில் அமிர்தா இப்போது வரமாட்டாள். குமாரனோடு முத்துத் தனியாக வருவதையும், சிந்தா விரும்ப வில்லை. முடிந்த வரை விஷயத்தைத் தள்ளியாவது, முடியுமானால், தென்வயல் வேலை, முத்துவின் படிப்பு, என இரண்டு வருடத்துக்காவது தள்ள வேண்டும், குமரனிடமும் பேச வேண்டும் என முடிவெடுத்தவள். சுப்புவை கோவை அனுப்பி வைத்தாள் .
No comments:
Post a Comment