Tuesday, 10 August 2021

சிந்தா-ஜீவா நதியவள் -9

சிந்தா-ஜீவா நதியவள் -9 

கிராம சபைக் கூட்டம். ஒவ்வொரு கிராமத்திலும் மாதம் ஒரு முறை தங்கள் வசதிப்படி மாதத்தின் முதல் வாரத்தில் அவ்வூரின் தலைவர், தலையாரி, ஊரின் முக்கிய ஆட்களைக் கொண்டு முக்கியமான விசயங்கள், ஊரின் பொதுக் காரியங்களைப் பற்றிப் பேசுவார்கள். இன்றும், ஊர் பெரிய வீட்டுக்கார அய்யா, மகாலிங்கம் தலைமையில், இவர்களைப் போன்றே தலைக்கட்டுள்ள குடும்பத்தவர்கள், தலையாரி, கிராம தலைவர், வேளார் வீட்டினர் ஆகியோர் முக்கிய அங்கத்தினர்களாகவும், வீட்டுக்கு ஒருவர் அங்கத்தினராகவும் பங்கேற்றனர். இவர்களோடு, சிவநேசனும், குமரனும் ஊரிலிருக்கும் இளவட்டங்களை அழைத்துக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிந்தாவின், அப்பா, கணவன் ,தம்பி, கந்தன் அவன் சுற்றத்தார் என ஒரு பெரிய கூட்டம், கலத்தில் கூடியது. ஊருக்கு நடுவில் ஒரு திறந்த வெளி அரங்கமும் , மைதானமுமாக இருக்கும். அங்குத் தான் கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது.

கிராம தலைவர் பேச ஆரம்பித்தார், " எல்லாருக்கும் வணக்கம், நம்ம ஊர்ல, அய்யன் கோயில் புரவியெடுப்பு நடந்து வெகு காலம் ஆச்சு. மூணு வருஷம் முன்ன கோயிலை மராமத்து பார்த்துக் கும்பாபிஷேகம் செஞ்சோம். பெரிய குருதைச் சிலையெல்லாம் வச்சாச்சு. இருந்தாலும், புரவியெடுப்பு விழாவும் நடத்தனும்னு பெரிசுக ஆசை படுறாக. இரண்டு வருஷத்தில கிராம பொதுக் காசு கொஞ்சம் இருக்கு, அதோட வீடு வீட்டுக்கு வரி போட்டமுன்னாக்க, செலவு கட்டி வந்துரும். என்னாச் சொல்றீக. அவரவர் அவுகவுக யோசனையைச் சொல்லுங்க" எனக் கூட்டத்தில் பேச்சை ஆரம்பித்தார்.

" அய்யனுக்கு வாகனம் செஞ்சு வச்சு, திருப்தி படுத்தன முண்டாக்க, மழை பொழியும் காடு கழனி செழிக்கும் பாக. கட்டாயம் செய்யத்தான் வேணும்" என ஒருவரும்.

" ஐஞ்சு வருஷத்துக்கு ஒருக்கா நடத்துனமின்னாக்கத் தேன், இளந்தாரிகளும் பழகிக்குவாக, போன தடவை எப்ப குதிரை யெடுத்தோமுன்னு எனக்கே மறந்து போச்சு " என்றார் மற்றொருவர். "அது ஒரு வருஷம், வயல் வரப்பெலாம் காஞ்சு போயி, கண்மாய், தண்ணி இல்லாத பாலம், பாலமா போச்சு, பத்து வருஷம் இருக்கும், ஆனால் குத்துறையைக் கொண்டி வைக்கவும், அன்னைக்கு ரவைக்கே ,அம்புட்டு மழை , அய்யன் துடியான தெய்வம்" என ஒருவர் கையெடுத்து அந்தத் திசையைப் பார்த்து கும்பிட்டார்.

" ஆமாப்பு, புரவியெடுப்புன்னா என்னா செய்வீக. நான் பார்த்ததே இல்லை" என இளந்தாரி பையன் கேட்கவும்

" தலையாரி, நீ தான் விளக்கமா சொல்லுவ, அந்தப் பயக் கேட்டதுக்குச் சொல்லப்பா " என ஒரு பெரியவர் தூண்டி விடவும்

" வேளார் வீட்டில் சொல்லி, குதிரை செய்யச் சொல்லுவோம். அவுக செஞ்சு கண் திறக்காம வச்சிருப்பாக. திருவிழாவுக்குன்னு ஒரு நாள் பார்த்து, காப்புக் கட்டி செவ்வாய் சாத்தின நாள்ல இருந்து எட்டு நாளைக்குப் பொம்பளைக பொட்டல்ல கூடி நீண்டு எல்லாச் சாமி பேர்லையும் கும்மி கொட்டி, குலவைப் போட்டு மணிக்கணக்கா செவ்வாய் பாட்டு பாடுவாக.

எட்டாம் நாளு, மேள தாளத்தோட போயி, குதிரை கண் திறந்து அழைச்சிட்டு வந்து, இந்தக் கொட்டகையில வைப்போம். ஒரு நாள், இரண்டு நாள், மூணு நாள் நம்ம வசதிக்கு தக்கன குதிரை நாடகம் பார்க்கக் கூத்து ஆடறவுகளை வச்சு கூத்துக் காட்டுவாக. அது முடிஞ்சு மக்கான் நாளு சாய்திரம் பொம்பளைக அடுக்குப் பானையில் பலகாரம் கோழிக்கறி கொண்டாந்து, அய்யன் கோயிலுக்கு வர, இந்தக் குதிரையும் கொண்டு போய் அய்யன்கிட்ட சேர்த்திடுவோம். அம்புட்டு தான்" எனத் தலையாரி விவரம் சொல்லவும்.

மற்றொருவர், " ஏம்பா, இந்தச் செவ்வா பாட்டு இப்பத்தைப் பொம்பளைகளுக்குப் பாடத் தெரியுமா" எனக் கேலி பேசவும்

" அதெல்லாம் ரேடியோ பொட்டிக் கணக்கா ஏழெட்டு பொம்பளைக இருக்கு, அதுக பாடிடும்" என இன்னொருவர் பதில் தந்தார்.

"ஏன் பொம்பிளைகளுக்குத் தெரியாலையின்னா , நீ பாடப் போறியா" என வக்கனை பேசியது ஆண்டிச்சி கிழவி . "ஆத்தி, இவுக பாடிட்டாலு, அய்யன் வந்து இறங்கிருவாரு" என மூக்கம்மா கிழவியும் கேலி பேசவும்.

"இந்த வக்கனை பேச்சு இருக்கட்டும், இந்தப் பாட்டெல்லாம் அடுத்தத் தலை முறைக்கும் சொல்லி குடுங்க" என்றார், மற்றொரு ஊர் பெரியவர். "அதென்ன கம்பச் சூத்திரமா, கூடவே சேர்ந்த பாடினாகண்டா வந்துட்டு போகுது" என்றார் இருளியம்மா .

மகாலிங்கம் ஐயா, "குதிரையெடுப்புக்கு, எங்க குடும்பம் சார்பில் ஐம்பதாயிரத்து ஒண்ணு நான் தாறேன். அதைக் கணக்கு பண்ணி வரியை போடுங்க" எனச் சொல்லவும்.

" பெரிய மனுச, பெரிய மனுச தானப்பா" எனக் கூட்டம் சிலாகித்தது. அதன் பிறகு மற்ற ஏற்மாட்டுகளைப் பற்றிக் கூட்டத்தில் முடிவெடுத்து, கந்தனின் தகப்பனிடம் குதிரைச் செய்யும் பொறுப்பை ஒப்படைத்தனர்.

" ஐயா, இந்தத் தவணை நம்ம குதிரை ஒண்ணு கணக்கில் சேர்த்துக்குங்க" என வேலு சொல்லவும். வயதில் மூத்தவர் ஒருவர்,

" அப்பு, வழி வழியா வம்சத்துக்கு ஒண்ணுன்டு அரசகுதிரை, அம்பலக்குதிரை, காவக்கா காரக் குதிரை, தேவகுதிரை , ஒத்த வீட்டு யாதவக் குதிரை, பூசாரி குதிரை, வேளாளர் குதிரை, மத்த வகையறாவுக்குச் சேர்த்து பதினோரு குதிரை தான். நீரு இந்த ஊரு மாப்பிள்ளை, உன் மாமனாரு வகையறாவோட சேர்ந்து வேணா, உங்க குதிரைக்குச் செலவு பண்ணி, எம்புட்டு அழகா சிங்காரிக்கனுமோ, அம்புட்டு ஒசத்தியா சிங்காரிச்சுக்குங்க" என்றார் .

வேலு," ஏன் மாமா, அப்படியா. நேத்து நான் கேட்கும் போது நீ விவரம் சொல்லலை. " என அய்யனாரிடம் கேட்கவும்.

" ரொம்ப வருஷம் ஆச்சில்ல மறந்து போச்சு" என்றார் அய்யனார்.

" சரிப்பு, தலைக்கட்டுக்கு ஐந்நூறு ரூபாய் வரி போட்டுக்குவோம். அதுக்கும் அதிகமா அய்யனுக்குச் செய்யனுமின்னு ஆசைப்பட்டிகன்னா. அது அவுகவுக பிரியம்" எனத் தலைவர் பேச்சை முடிக்க.

மகாலிங்கம் ஐயா, " சந்திரா, நம்ம பசங்க ஏதோ, கூட்டத்தில் பேசனுமுன்னு சொல்றாக. இது என் மகன் சிவநேசன், அது தம்பி மகன் குமரன். விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்பு தான் படிச்சாரு. நம்ம தென்வயலை, சீமைக் கருவயலை அழித்துச் சுத்தம் பண்றதை பஆர்த்திருப்பீக. இவுக ஏற்பாடு தான். சிவநேசன் விசயம் என்னன்னு சொல்லுங்கப்பா" என மகன்களைச் சாட்டி விட்டார் மகாலிங்கம்.

சிவநேசன் பேச ஆரம்பித்தான், "எல்லாருக்கும் வணக்கம். ஊர் நல்லா இருக்கனும்கிறதுக்காகப் புரவியெடுப்பு எடுக்கிறது நல்ல விசயம். இது போலத் திருவிழாக்கள் தான், நம் மண்ணுடைய பெருமை, அடையாளம் இதை விடாமல் போற்றனும். " என்றவன். " இந்தத் திருவிழா எப்பிடி நம்மோட அடையாளமோ அது மாதிரி தான் நம்முடைய விவசாயம் அதைச் சார்ந்த தொழில்கள் எல்லாமே.

நம்மூர் மண்பானை உலகளவில் பேசப்படுது. அதுக்குக் காரணம் , நம்ம ஊர் கண்மாய்ல கிடைக்கும் மண் வளம். அதே மாதிரி, வைகையாறு வற்றாமல் ஓடுனப்ப, நமக்குன்னு மூணு போகம் விவசாயம், தானிய வகைப் பயிர்கள் சாகுபடினு நல்லாவே இருந்தோம். இன்னொரு சிறப்புப் பனை மரங்கள். இது நிலத்தடி நீரைத் தேக்கி வச்சு, விவசாயிக்கு உதவும். என்னடா சம்பந்தம் இல்லாமல் பேசுறேனேன்னு நினைக்காதீங்க. இப்ப நம்ம ஊர் விவசாயம்கிற விசயமே மாறிப் போச்சு. எங்கப் பார்த்தாலும் சீமை கருவை மண்டிப் போய், கண்மாய் முதற்கொண்டு இந்த மரங்கள் தான் நிறைஞ்சு இருக்கு. இதுக்கு ஒரு முடிவெடுக்கனும் " என நிறுத்தினான்.

" என்ன செய்யச் சொல்றீக. நம்ம ஊரு, வைகையாத்து பாசனத்தில , காவாய் வழியா நேரடியா கண்மாய் நிறைஞ்சு , ஒருகாலத்தில் நெல்லு என்ன, கரும்பு என்னென்னு விளைஞ்ச பூமி தான். இப்ப வருசத்தில் ஒரு போகம் சாப்பாட்டுக்குக் காணி நிலத்தில நெல்லைப் போட்டுக்கிட்டு என்னத்தையோ செஞ்சு காலத்தை ஓட்டுறோம்" என்றார் அந்தப் பெரியவர்.

" இதுக்கான காரணத்தை யோசிச்சீகளா ஐயா" எனக் குமரன் கேள்வி எழுப்பும்.

" என்ன மழை பொய்த்துப் போச்சு, பருவம் தப்பிப் பெய்யுது. வைகையில் வழி நெடுக மண்ணை அள்ளி, நீரோட்டமே இல்லாமல் பண்ணிட்டாக" என்றார்.

" நீங்க சொன்னது எல்லாம் சரி. அதோட இன்னோன்னையும் சேர்த்துக்குங்க, அவளவுக்கு மிஞ்சி வளர்ந்து நிற்கிற சீமை கருவை. இது நம்ம ஊரு மரமே இல்லை. சீமையில விளைஞ்சது சீமைக் கருவை" என ஆரம்பித்துக் குமரன் சீமைக்கருவை யை மற்ற நாடுகள் தடை செய்ததைச் சொல்லி, உயிர்வேலி அமைக்கவும், விறகுக்காகவும், நமது நாட்டில் இந்த விதைகள் தூவப்பட்ட வரலாற்றைச் சொன்னான்.

" நீங்க சொல்றது சரி தான் தம்பி, நான் சின்னப் பையனா இருக்கையில, வானம் பார்த்த பூமியா நிண்ட தரிசு நிலத்தில நானே ,சீமைக்குக் கருவை விதையை விதைச்சிருக்கேன், ஒரு வருசத்துல பலன் தருமுன்னு சொன்னாக, அதே மாதிரி வருசத்துக்குப் பத்தாயிரம் காட்டுதப்ப " என்றார் அந்தப் பெரியவர்.

" அது தாங்க ஐயா விசயம், நமக்கு விறகு, எரி பொருளா உதவும், விறகுக்காகக் காடுகளில் வெட்டப்படும் மரங்கள் எண்ணிக்கை குறைஞ்சு காடுகள் பாதுகாக்கப்படும்னு கொண்டு வந்தது, ஆனால் அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுன்னு, சீமை கருவை நம்மை அடக்குது. இதுக்கு என்ன மாற்று, வேற என்னன்ன செய்யலாம்னு, உதவுறதுக்கு, ஒரு தொண்டு நிறுவனம் வாராக. அதுக்குத் தலையாரி ஒரு கூட்டத்தை ஏற்பாடு பண்ணித் தரனும். நன்மை தீமையைப் பற்றி அவுக சொல்லட்டும், நீங்களும் உங்க சந்தேகங்களை விவரமா கேளுங்க. அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிப்போம். இந்தப் புரவியெடுப்பு நம்ம ஊருக்கு நல்லதை நடத்தித் தரட்டும்" எனப் பேசவும். பல கலவையான உணர்வுகளோடு மக்கள் இவர்களைப் பார்த்தனர்.

" சரிங்க தம்பி , உங்க வசதியும், எங்க வசதியும் பத்தியும் பேஞிக்கிட்டு ஒரு நாள் ஒதுக்கித் தர்றோம்" என்ற தலைவர்.

கந்தனின் அப்பாவிடம், " அம்மாவாசை அண்ணிக்கி, பூசை வச்சு, கண்மாயிலிருந்து, குதிரை செய்ய மண் அள்ளுவோமா" என கேட்டார்.

" ஆகட்டும் பா, அன்னைக்கே வச்சுக்கலாம்" எனத் தனது ஒப்புதலைத் தந்தார் கந்தனின் தகப்பன். கூட்டம் முடிந்தது. அதிலிருந்து சில நபர்கள், தங்களுக்குத் தேவையானவர்களுக்குத் தகவலை அலை பேசியில் பகிர்ந்தனர்.

பெரிய வீட்டில், மகாலிங்கம் மகன்களிடம், " ஏப்பா யாரோ வாராகன்னு சொன்னீகளே யாரு" என்றார்.

"வேர்கள்" னு ஒரு தொண்டு நிறுவனம். இவர்களுடைய நிறுவனம் உலகம் பூரா ஸ்பான்சர் கொண்டது. இவங்க தான் மூலிகை உற்பத்தி செய்து, அதை வைச்சு, பழைய வைத்திய முறைகளைக் கொண்டு வர முயற்சி செய்றாங்க. அதே தொண்டு நிறுவனம், விவசாய நிலத்தில் ஆக்கிரமிச்சிருக்கச் சீமை கருவையை அழிச்சு, அந்த நிலத்தை விவசாயத்துக்கு உகந்ததா மாற்றி, நவீன முறை விவசாயம் செய்யவும் உதவி செய்றாங்க. நம்ம இந்தத் திட்டத்தில் கீழ தான், நம்ம தென்வயலை கொண்டு வந்துருக்கோம். இது வெற்றியடைஞ்சா, இந்த ஊர், வட்டம், மாவட்டம்னு கிழக்கு சீமையையே செழுமையா மாத்தலாம் " எனக் குமரன் ஓர் கனவோடு விளக்கம் தந்தான்.

“நீ சொல்றது எல்லாம் நல்லாத்தான் இருக்கு, நடைமுறைக்கு ஒத்து வரனும்’ என்ற பெரியவர், மருமகள் மீனாள் வந்து சாப்பிட அழைக்கவும், “இன்னைக்கு மருமக சமையலா “ எனக் கேட்டபடி உள்ளே வந்தார்.

சுற்று கட்டுத் திண்ணையில் பேத்தியை வைத்துக் கொண்டு நின்ற ராஜேஸ்வரி, “ இப்பத்தேன் சாப்பாடு பரிமாறப் பழகுது, அதுக்குள்ள சமையலுக்குப் போயிட்டீங்க. உங்க தங்கச்சி, என் மருமகளுக்கு என்னத்தைக் கத்து குடுத்துச்சு, உனக்கு முடியாது, முடியாதுன்னே மகளை, வேலை பார்க்க விடாம நோகம வச்சிருந்துருக்குது “ என ராஜி குறை சொல்லவும்,

“ஆத்தா ஆரம்பிச்சுட்டியா, அது எப்படி அத்தனை பொம்பளைகளுக்கும் , நாத்தனாரைக் குறை சொல்ல இதனை விஷயம் கிடைக்குது” எனப் பெரியவர் வியக்கவும், சிவநேசன், குமரனும் அவர்கள் பேச்சி கேட்க ஆண்டே சிரித்தபடி வந்தனர்.

சமையல்காரம்மா , சமைத்த உணவுகளைப் பரிமாறும் பாத்திரங்களில் எடுத்துத் தரவும், அதனை மேஜைக்கு அருகிலிருந்த சின்ன டீபாய் மீது, அத்தை சொல்லியபடி மீனா அடுக்கினாள் ,

‘நான் ஒன்னும், மிகைப்படுத்திச் சொல்லலை, மீனா எம்புட்டு கெட்டிக்கார பொண்ணு, ஒருக்கா, சொன்னவுடனே விஷயத்தைச் சட்டுனு புருஞ்சுக்குது, அவுக அம்மாளுக்குத் தான், மகள் பாசம் கண்ணை மறைச்சுடுச்சு, மருமக கெட்டிக்காரத்தனம் அதுக்குத் தெரியலையே” என மருமகளை ராஜேஸ்வரி வாய்க்கு வாய் புகழ்ந்து, கூடவே நின்று மத்திய உணவைப் பரிமாறும் முறையையும் சொல்லித் தந்தார்.

“ஏதெது, அத்தாச்சி ஒரே நாள்ல , மாமியார் மெச்சின மருமகளாயிட்டீங்க” எனக் குமரனும் வம்பு பேசவும், மீனா அதற்கும் சிரித்துக் கொண்டாள்.

“உனக்கு ஏன் பொறாமை, நீயும் காலக் காலத்தில் கல்யாணம் பண்ணிக்க, உன் பொண்டாட்டியையும் கொண்டாந்து நிறுத்து, அம்மா எப்படினு பார்த்துச் சர்டிபிகேட் தரட்டும்” என நேசன் மனைவிக்கு ஆதரவாகத் தம்பியின் வம்புக்குப் பதில் தந்தான்.

“அதுக்கெல்லாம் ரொம்பக் காலம் இருக்குன்னேன். அது வரைக்கும் அத்தாச்சி , வீட்டோட சிங்கிள் இளைய ராணியா இருக்கட்டும் ” எனப் பெருமூச்சு விட்ட குமரனின் மனக் கண் முன், வாடிய முகத்தோடு இருந்த முத்துமணியே வந்து போனாள் . மாலையில் ஒரு நடை, சிந்துஜாவைத் தூக்கிக் கொண்டு சென்றுவர வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

பிற்பகலில் வெயில் தாழ , வள்ளி சிந்தாவின் வீட்டுக்கு வந்தாள் , அவள் முகத்தில் .குதிரையெடுப்பு, மண் பாண்டம் செய்தல் என ஊரின் வேலை கிடைத்த போதும், அந்த மகிழ்வும் ஒரு புறம் இருந்த போதும், மறு ஓரத்தில் ஓர் சோகம் அப்பியிருந்தது.

சிந்தா, அமைதியாக அமர்ந்திருந்த தோழியைப் பார்க்கவும், “எந்த ஊர்ல கப்பல் கவுந்துச்சுன்னு , இம்புட்டு கவலையா உட்கார்ந்து இருக்கவே” எனக் கேள்வி எழுப்பினாள் .

“அதெல்லாம் ஒன்னு இல்லடி,சந்தோசமா தான் இருக்கேன், குதிரை செய்யற ஆர்டரை, ஊர் நம்மள நம்பி குடுத்துருக்கே. அப்புறம் என்ன கவலை ” என்றவளை

“வாய் தான் , கவலை இல்லைனு சொல்லுது, முகம் வேற சொல்லுதே, என்னானு சொல்லு “ எனச் சிந்தா வற்புறுத்தவும்,

“இல்லடி, இன்னும் பத்து நாள்ல , புரவி செய்யச் சாமி கும்பிட்டுக் காப்பு கட்டிடுவோம். போனமாசம் லேடி டாக்டரை பார்த்தமுள்ள, அவுக வரிசையா தீண்டலாகி பன்னெண்டு நாள் இருந்து, தொடர்ச்சியா ஸ்கேன் பண்ண சொன்னாக. அதுக்குத்தான், டாக்டர்ட்ட போகலாமுன்னு சொன்னா, உங்க அண்ணேன் , இப்ப செலவு நிறையா வரும், புரவியெடுப்பு முடிஞ்சு பார்த்துக்கலாங்குது “ என வருந்தவும்.

“வள்ளி காசு தான் பிரச்னையின்னா, கவலையை விடு, இந்த மாசம் ஒரு சேட்டு விழுந்ததை, வச்சுருக்கேன். நீ உன் வைத்தியத்தைப் பாரு. “ எனச் சிந்தா சொல்லவும்.

“நீ மட்டும் என்ன பெரிய பணக்காரியா, முத்துவுக்குக் காலேஜ் சேர்க்காத தானே வச்சிருப்ப “ என வள்ளி கேட்கவும், “அதுக்கென்ன, உன்கண்ணேன் பணத்தை அஞ்சல்ல ஏற்பாடு பண்ணிடும். நீ இரு வாரேன்” என உள்ளே சென்றவள் மஞ்சப்பையில் சுத்திய பணத்தைக் கொண்டு வந்து வள்ளியின் கையில் தந்தாள்.

“வேணாம்டி, உங்க அண்ணன் வையும்” என்ற வள்ளியிடம், “நான் சொல்லிக்கிறேன், அய்யனாருக்குக் குதிரை செய்யறிக, மனசு நிறைஞ்சு செய்யணும் . நீ வேணா பாரு, புறவியெடுப்புக்கு, நீ நல்ல சேதி சொல்லுவ’ எனச் சிந்தா நம்பிக்கை வார்த்தைச் சொல்லவும், அவளைக் கட்டியணைத்துக் கண்ணீர் உகுத்த வள்ளி, “உன் வாக்கு பொன்னாகட்டும், உனக்குப் புடிச்ச, கருப்பட்டி அல்வா கிண்டித் தாரேன்” என வள்ளி சொல்லவும்.

“முதல்ல, எங்க அண்ணன் கிட்டச் சொல்லி, உனக்கு அல்வா வாங்கித் தர சொல்றேன், அதுக்கு நல்ல ரிசல்ட்டு வரட்டும் . அப்புறம் நீ எனக்குக் குடு, அதையே உங்க அண்ணனுக்குக் குடுத்துக்குறேன்” எனச் சிந்தா விஷமமாகச் சிரிக்கவும். “போடி” என முகம் சிவந்தாள் வள்ளி.

“ஹலோ , அக்காளுங்களே, என்ன அல்வான்னு பேச்சு ஓடுது, உங்க புருஷன்களை வாங்கிட்டு வரச் சொல்லி ரகசியமா திங்குறீங்களா “ என முத்து அரைகுறையாய் இவர்கள் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டு கேள்வி கேட்கவும்,

“அடியே, உனக்கு இன்னும் அந்த வயசு வரலை .பேசாத கிட” என வள்ளி திட்டினாள். அவள் கையில் கிள்ளிய சிந்தா, “அவள் கிட்ட என்ன பேச்சு பேசுற, பேசாத இருடி “ எனவும், முத்து “ஏய் , அக்காளுங்களா ,ஏதோ பேட் வேட்ஸ் பேசுறீங்களா.” எனச் சந்தேகமாகக் கேட்டாள் .

“ஆமாடியாத்தா, உனக்குக் கல்யாணம் ஆகி, உன் புருஷன் வரவும் கேட்டுக்கோ” என்றாள் வள்ளி. அதே நேரம், குமரன் பக்கில் முன்னால் சத்திய மூர்த்தியும், பின்னால் நேசனும், கையில் சிந்துஜாவுமாக வந்து சேர்ந்தனர். குமரனை பார்க்கவும், முத்து முகம் வாடியது. சத்திய மூர்த்தி, கையில் ஓர் பொட்டலத்துடன் தன சித்தியை நோக்கி வந்தவன், “ஏய் ,சித்தி, இந்த இனிப்பைச் சாப்பிட்டு பாரேன், ஏதோ கோந்துன்னு சொன்னார் அந்தச் சார் “ என்றான் .

அண்ணனும், தம்பியுமாக , சக்தி பேசியதைக் கேட்டுச் சிரித்தபடி வந்தவர்கள், “அது கோந்து இல்லை, மஸ்கொத்து அல்வா, தேங்கா எண்ணெய்யில் செய்வாங்க “ எனக் குமரன் சொல்லவும், வள்ளியும், சிந்தாவும் ஒருவரை ஒருவர், அர்த்தமாகப் பார்த்துக் கொண்டவர்கள், சிரிப்பை அடக்கி, நேசனிடமிருந்து சிந்துஜாவைக் கொஞ்சினர்.

“ சின்னம்மா , வந்துட்டாக்கலாம்ல, முத்து சொன்னா. ரொம்பச் சந்தோசம் சின்னய்யா “ எனச் சிந்தா நேசனிடம் தன மகிழ்ச்சியைச் சொல்லவும். அவனிடமிருந்து சிந்தாவிடம் பாய்ந்த சிந்துஜா, சிந்தாவை கொஞ்சி அழைத்தது.

“ஆமாம், மீனா வந்துடுச்சு , உன்னைப் பார்க்கணுமுன்னு கேட்டுச்சு, நீ பெரிய ஆளு, எங்க வீட்டுக்கெல்லாம் வர மாட்டியே. இன்னொரு நாள் இங்கே கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி இருக்கேன் “ என நேசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , சிந்துஜா , சிந்தாவின் சேலையைப் பற்றி இழுத்து பால் குடிக்க அழைத்தது. சிவநேசன் யோசனையாகப் பார்க்கவும், முத்துவையே பார்த்திருந்த குமரன், அவசரமாக, அண்ணேன் ,”நீங்க வயலை பார்க்கலையே , அய்யனார் ஜெட் ஸ்பீட் தான், மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளிட்டார் “ என வயல் பக்கம் அழைத்தான்.

வள்ளி, முத்து, சிந்தா மூவருமே, நேசன் உண்மையைக் கண்டு கொள்வானோ எனப் பதட்டத்திலிருந்தனர். உள்ளிருந்து சத்தியாவும் தூக்கம் களைத்து எழுந்து அழைத்தது. சிந்தா ,சிந்துஜாவையும் தூக்கிக் கொண்டே உள்ளே சென்றாள் .

சிந்துஜாவின் தாயாகி மாறி சிந்தா , சிவநேசன் மகளுக்கு தாய்ப்பால் தருவதை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இப்போது தான் மனைவியை சமாதனப் படுத்தி வைத்திருக்க , அவளுக்குத் தெரிந்தால் என்ன ஆகும் . 

ஜீவநதி -பொங்கும் .

No comments:

Post a Comment