சிந்தா-ஜீவநதியவள் -15
"வேர்கள்" நீரஜ்- அமிர்தா தம்பதியினர், வறண்ட பிரதேசமான கிழக்குச் சீமை மக்களின் மனதில் ஒரு பெரிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தனர், எனச் சொன்னாள் அது மிகையாகாது. அந்து பத்து நாளில் சுற்று வட்டார ஏரியாவில் சிந்தாவை முன்னிலைப் படுத்தி, பெரிய வீட்டு மகாலிங்கம் ஐயாவின் மகன் என்ற பின்புலத்தோடு சிவநேசனும், படித்த பணக்கார இளைஞரான குமரனையும், தொண்டு நிறுவனம் வைத்து நடத்தும் தம்பதிகளும், தங்கள் தரிசு நிலங்களை விவசாய நிலமாக்கி, சீமை கருவையை மேம்பட்ட ஆரோக்கியமான உணவு தானியங்களை , மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என எடுத்துச் சொல்வதும் மட்டுமின்றி அதற்கான செயல் வடிவில் இறங்கி, அவர்கள் நிலத்தையே அதற்குத் தயார் செய்து கொண்டு இருந்ததும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிவநேசன் நிலத்தின் அருகில் உள்ளவர்கள், தாங்களாகவே தங்கள் நிலங்களைச் சுத்தம் செய்து கரிமூட்டம் போட்டு, அதன் மூலமான கடைசி வருமானத்தையும் பெற்று , நிலத்தைத் தயார் படுத்தும் வேலையில் இறங்கினர்.
அன்று, கங்கா பேசிய பேச்சில் அதிர்ந்து வீடு வந்து சேர்ந்த முத்துவை, சிந்தா , கங்காவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தந்து விட்டு பின்னோடு வந்து தேற்றினாள். அன்று மதியப் பொழுதில், சத்தியாவைத் தவிர வீட்டில் ஆண்கள் யாருமில்லாத நிலையில் சிந்தாவிடம் வந்த, முத்து தன் மனம் திறந்தாள்.
" அக்கா, நீ கவனிச்சிருப்ப, இல்லை கவனிக்கலைனாலும் தெரிஞ்சுக்கோ. எனக்குப் பயம்மா இருக்குக்கா" எனத் தன் தோளில் சாய்ந்த அழுத தங்கையை, "எதுக்குப் பயம், அந்தக் கங்கா எல்லாம் ஒரு ஆளா. அவளுக்கு நல்லா குடுத்துட்டேன். இனிமே வாயைத் திறக்க மாட்டா பயப்படாத" எனத் தேற்றினாள்.
" அது இல்லை, இல்லை அது தான்" எனக் குழம்பிப் பேசி தங்கையைச் சிந்தா வினோதமாகப் பார்க்கவும், "நான் ஒண்ணு சொல்லுவேன். நீ கோவிக்கக் கூடாது. " எனப் பீடிகைப் போடவும், அவள் வாயிலிருந்து வரட்டும் எனச் சிந்தா அமைதியாக இருந்தாள்.
" எப்படிச் சொல்றது, அவரு, அவுங்க என்னைப் பார்க்கிறதே சரியில்லை," எனவும் சிந்தா முறைக்கவும் அவசரமாக மறுத்தவள், " நீ நினைக்கிற மாதிரி இல்லை, இது வேற, ரொம்பக் கண்ணியமா தான்" என அவள் இழுக்கவும், " நீ இன்னும் என்னனே சொல்லலை" என்றாள் அக்கா.
" அவர் தான், சின்னைய்யா தம்பி, பூடகமாவே பேசுறாரு. எனக்குப் பயமா இருக்கு" எனப் பட்டெனச் சொல்லி விட்டு, அக்காள் தோளில் முகம் புதைந்து கொள்ளவும்,
" அடியே, லூசு கழுதை, ஆம்பளை அப்படித் தான் இருப்பாக. அதுக்காகப் பொம்பளை மனசை அலைபாய விடக்கூடாது" எனக் குரலில் கடுமையைக் கூட்டிச் சிந்தாச் சொல்லவும், " பார்த்தியா கோவிக்கிற, நானா அவுகள்ட்டப் போய்ச் சொல்றேன். அவுக தான் அப்படிப் பண்றாக. நான் என்ன செய்ய நீயே சொல்லு" எனத் தங்கை கேட்கவும்,
" வேண்டாம், முடியாது, இது நடக்காதுன்னு சொல்லு" என்றாள் சிந்தா.
" அதெல்லாம் சொல்லிட்டேன்" என்றாள் முத்து. " சொல்லிட்டேல்ல, விட்டுரு. அப்புறமும் உன்னைத் தொல்லைப் பண்ணாறா, சொல்லு பெரிய ஐயாட்டச் சொல்லி, சிங்கப்பூருக்கே அனுப்பி விடுவோம்" என்றாள் சிந்தா.
" என்னாக்கா நீயி, அவுகளே நம்மளை மாதிரி அம்மா இல்லாதவுக, இப்ப இருக்கவுக அவுக சின்னமா தானாம், அவுகளும் இவுகக் கிட்டப் பாசமாத் தான் இருப்பாகலாம், ஆனால் இங்கனை பெரியம்மாட்ட இருக்கும் போது,தான் தனதா ,அவுக அம்மாளோடையே இருக்க மாதிரி இருக்குமாம். அந்தப் பாசத்தைத் தான் அனுபவிக்கிறாக. அவுகளைப் போயி, நாடு கடத்துற மாதிரி செய்யறேன்னு சொல்ற " என முத்து குமரனுக்கு வக்காலத்து வாங்கவும்.
" அடியே, இதெல்லாம் எப்படித் தெரிஞ்சுக்கிட்ட, என் முன்னாடி நல்ல பையனாட்டம் எல்லாம் வேசமாக்கும், அவர் பண்ற வேலைக்கு அது தான் தண்டனை. ஒரு சின்னப் புள்ளை மனசை கலைச்சு. இருக்கட்டும் இன்னைக்கு வரட்டும். நல்லா நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேக்குறேன்" எனச் சிந்தாச் சொல்லவும், கண்ணீர் விட்ட முத்து, " அப்படி எல்லாம் எதுவும் செய்யாத அக்கா. நம்ம குடும்பத்துக்கோ, அவுக குடும்பத்துக்கோ, தலை குனிவு வர்ற மாதிரி நானும் நடந்துக்க மாட்டேன். அவுகளும் நடந்துக்க மாட்டாக. நான் மேலப் படிக்கிறேன், வேலைப் பார்க்கிறேன். இப்போதைக்கு அவ்வளவு தான். என்னை வேற யாருக்கும் கட்டிக் கொடுக்கனும்னு மட்டும் நினைக்காத" என அவள் அழவும்.
" அடியே பைத்தியக்காரி, நம்மளே உசரம் குறைவான மனுசங்க, பறக்கிறதுக்கு ஏண்டி ஆசைப் படுற " எனச் சிந்தாச் சொல்லவும் , முத்து பட்டென, " அப்படி நினைச்சு தான் நீயும் ஆசைப்படலையா" எனச் சிவநேசனை நினைத்து அவள் கேட்கவும்.
" இது கேள்வியே தப்பு. அதென்னமோ, பெரிய வீட்டு ஆம்பளைனா, அவுகள பார்த்துப் பண்ணக்காரன் பொண்ணுக எல்லாம் ஏங்குற மாதிரி ஊருக்குள்ள ஒரு நினைப்பு, உன் மூளையிலையும் அதே தான் பதிஞ்சு இருக்கு. இதே நினைப்புல தான், கங்காவும், அவுக சொந்தக்காரவுகளும் அன்னைக்குப் பேசினாக. அதில தான் என் மனசு நொந்து போச்சு. அட அப்படி நான் சின்னையாவை உண்மையிலேயே காதலிச்சு பழி போட்டு இருந்தாலும் பரவாயில்லை. காப்பாத்தின மனுசனையும் சேர்த்தில்ல பேசுனாக. " என்ற சிந்தா,
" பிறந்ததிலிருந்து அவுகளை முதலாளியா தான் பார்த்திருக்கேன். அந்த ஐயாவைக் கேளு, அவருக்கும் நான் பன்னக்காரன் மகள் தான். என்ன பேசுவாறு பழகுவாறு. அவர் மகளுக்கு நான் தாய்ப்பால் தர்றதுக் கூட வாடகைத் தாய் மாதிரி ஒத்துக்குவாக. ஆனால் அதுக்கு மேல எதுவுமே கிடையாது. ஒருத்தரை மதிக்கிறதுக்கும் மனசில ஆசைப்படுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குடி . நம்ம யார் மேலை மருவாதை வச்சிருக்கமோ, அவுக நல்லா இருக்கனும், கஷ்டப்படக் கூடாதுன்னு நினைப்போம். அவுக துக்கத்தைப் போக்க ஏதாவது செய்யமாட்டமான்னு நினைப்போம். ஆனால் மனசில நினைச்சவுகளுக்குத் தான் உயிரையும் கொடுக்கனும்னு தோனும், அவுக அவமானப்படுத்தினாலும், இல்லை அவுகளுக்காக நாம அவமானப் பட்டு நிண்டாலுமே, இந்த மனசு சரின்னு அவுகளுக்காகவே திரும்ப வக்காலத்து வாங்கும். " எனத் தங்கைக்குச் சிவநேசனுக்கும் தனக்குமான பந்தத்தைச் சொன்னவள், கருணைக்கும், காதலுக்குமான வித்தியாசத்தையும் சொன்னாள்.
" ஆனால் எனக்குக் காதல்னு சொன்னா, அது நிச்சியம் உன் மாமன் மேல தாண்டி. ரவுடிப்பய, என்னா தகிரியமா டாவடிக்கும் தெரியுமா. நானும் இரண்டு வருஷமா பார்த்தேன்" என் கண்கள் மின்னச் சொன்ன அக்காளை முத்து அதிசயமாகப் பார்க்கவும், " நிசமாடி, யாரோ ஒருத்தனை நம்பி ஒரு ராத்திரில என் வாழ்க்கையைக் குடுத்துருவேனா. ஆனால் அது என்னைக் கட்டும் போது, எனக்கு அது மேல லவ் எல்லாம் கிடையாது. ஆனால் அதுக்கு என் மேல இஷ்டம் இருக்குன்னு நம்பி கல்யாணம் பண்ணேன். ஆனால் ஆரம்பத்தில என் மேல வீணா பழிப் போட்டவுக முன்ன வாழ்ந்து காட்டி, அது பொய்யினு நிறுபிக்கனுமுன்னு தான் தோனிச்சு, சக்தி பிறந்தான். ஆனால் சத்தியா, நான் உன் மாமன் மேல வச்ச நேசத்துக்குப் பிறந்தவ. எங்க கல்யாண வாழ்க்கைக்கும், காதலுக்கும் சாதியோ, வசதியோ தடையா இல்லை. " என்ற சிந்தா,
தங்கையைப் பார்த்து, "உன்கிட்ட , அவமானத்தைச் சகிக்கிற சக்தி இருக்கா. அமிர்தாவைக் கேளு சொல்லும். உங்களுக்கு முதல் எதிரியா, இதே பெரிய வீட்டு ஆளுக நிப்பாங்க. அப்பா ரோசப்படுவாறு. மாமா குமரன் சட்டையைப் பிடிக்கும், நம்பிக்கை துரோகின்னு சொல்லும், ஒரு கங்கா இல்லை, நூறு கங்கா உன்னை அசிங்கமா பேசுவாங்க. அத்தனையும் தாங்குவியா. அதுக்கும் மேல, அக்கா வளர்த்த புள்ளைத் தானே, அவளை மாதிரியே இவளும் ஆளை மயக்குறான்னு என் வளர்ப்பையும் தப்பா பேசுவாங்க. மனசு உடையாமல் இருப்பியா " எனச் சிந்தாக் கேட்கவும், முத்து அதிர்ச்சியாகவே அக்காவைப் பார்த்தாள்.
" அக்கா, நான் அசிங்கப்பட்டாக் கூடப் பரவாயில்லை. ஆனால் நீ திரும்ப யாருகிட்டையும் ,என்னால பேச்சு வாங்கக் கூடாது. இது வேண்டாம். ஆனால் நீ என்னை வேற யாரையும் கல்யாணம் கட்டிக்கன்னும் கட்டாயப்படுத்தக் கூடாது" என்ற வாக்கோடு, அக்காவிடம் சொல்லி விட்டதாலேயே, மனம் பாரம் நீங்கியவளாக இருந்தாள் முத்துமணி.
ஆனால் அவள் அறியாத ஒன்று, இவர்கள் மதுரை சென்று வந்த பிறகு, குமரன் மட்டும் தனியாகச் சிந்தாவிடம் சிக்கிய ஒரு நாளில் முத்துவை கேட்டதை விடவே அதிகப்படியான வார்த்தைகளை அவனைக் கேட்கவும், " என்னைப் பார்த்தா, உங்க ஆழ் மனசில அப்படித் தான் தோனுதா" எனக் கேட்டவன்,
" நான் ஊர் உலகம் பார்க்காதவன் இல்லை பொண்ணுங்களையும் தெரியாதவனும் இல்லை. யார்க்கிட்டையுமே வராத ஈர்ப்பும் , ஒரு உணர்வும் , உங்க தங்கச்சி மேல வந்தது. நான் தெளிவாத் தான் இருக்கேன். இந்த ஜென்மத்தில எனக்கு மனைவின்னா அவள் தான். நீங்க இந்தச் சினிமால வர்ற மாதிரி, உங்க தங்கச்சியை எவனுக்காவது புடிச்சு வம்பா கட்டி வைக்க முயற்சி பண்ண மாட்டிங்கன்னு நினைக்கிறேன், அப்படி எதாவது செஞ்சிங்கன்னா, அதே இடத்துக்கு வந்து தாலி கட்டி தூக்கிட்டுப் போயிடுவேன்" என அவன் சிரித்துக் கொண்டே சொல்லவும்,
" என் புருஷன் சும்மா இருக்கும்னு நினைச்சீகளா" எனச் சிந்தா பதிலுக்கு மிரட்டவும்.
" பார்த்துருவோம், ஒத்தைக்கு, ஒத்தை, அவரா நானான்னு, ஆசைப்பட்டவளுக்காகப் போராட மாட்டேனா என்ன " என்றான். " உங்க அண்ணனுக்காக இப்பத் தான் இந்த விவசாயப் புரட்சி எல்லாம் ஆரம்பிச்சு இருக்கீங்க , மறந்திறாதீங்க" என அடுத்த விதத்தில் சிந்தா மடக்கவும்.
" உங்களுக்கு ஊர் மேல அக்கறை இருந்தா பேசாமல் இருங்க. எனக்கு ப்ராஜட் செய்யவும் வேற இடம் கிடைக்கும். எங்க அண்ணனுக்கும் இதை விட்டா வேற பிழைப்பு இருக்கு. ஆனால் லைஃப் டைம், என் வைஃப் , உங்க தங்கச்சி மட்டும் தான். அவளை விட்டுக் கொடுத்துத் தியாகம் எல்லாம் பண்ண முடியாது" என உறுதியாகச் சொன்னவனை, "நீங்க அவளை விரும்புறீங்க சரி. அவள் உங்களை விரும்ப வேணாமா" எனக் கேட்கவும்.
" அதெல்லாம், அவள் மனசில நான் பிக்ஸ் ஆகிட்டேன். என்ன சாதி, அந்தஸ்து, அக்கா, பேமலி சென்டிமெண்ட் இதெல்லாம் பார்த்துக்கிட்டு சரின்னு ஒத்துக்க மாட்டா. ஆனால் வேற யாரையும் மனசில நினைக்கவும் மாட்டா" என உறுதியாகச் சொன்னவன், "என்னால , உங்க குடும்பத்துக்குத் தலை குனிவு வராது. இதை மாத்தனும்னு நினைக்காதீங்க. " என வாக்குறுதி தந்து சென்றான் குமரன்.
இன்று முத்துவும் அதே வாசகத்தைத் திருப்பிப் படிக்கவும், குழம்பி நின்ற சிந்தா கணவனிடம் பேச வேண்டும் என நினைத்தாள். ஆனால் அதற்கான தோது அமையவில்லை. அதுவே அவர்களிடையே பிரச்சனையை உருவாக்கும் எனவும் சிந்தா நினைத்தால் இல்லை.
அமிர்தா ,அதே ஊரில், குடிசை தொழிலாக உள்ள பனை ஓலை பொருட்கள் தயாரித்தல், மண்பாண்டத்தை அழகுபடுத்துவது , மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக அழகிய பேக்கிங்கோடு, வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவது. மண்புழு உரம் தயாரித்தல், தேனி வளர்ப்பு எனப் பல வேலைகளைப் பற்றிச் சொல்லி வழிகாட்டி, அதற்கெனப் படித்த பெண்களையும் வழிநடத்த நியமித்தாள்.
சிந்தா இப்போதெல்லாம் தினமும் ஒரு முறை ராஜேஸ்வரி அம்மாளைக் கண்டுவிட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் காலுக்கும் வைத்தியம் பார்த்துவிட்டு வர, இந்த அப்பத்தாளும், அவரது பேத்தி சிவகாமியுமே இவள் வரவை ஆசையாக எதிர் நோக்கினர். ராஜியம்மாள் சிந்தாவிடம், " சிவகாமிக்கு, உன்னைச் சிந்தாம்மான்னு சொல்லிக் குடுறி" என்றார், அவரை ஒரு பார்வை பார்த்த, சிந்தா, " எதுக்கு உங்க மகளோட சேர்த்து மருமகளும் என்னைக் கரிச்சு கொட்டுறதுக்கா. பேசாத இருங்க" என அதட்டினாள்.
" நீ சொல்லிக் குடுக்கலையின்னாலும், அதுவே சொல்லும் பாரு. அப்ப என்ன செய்வேன்னு பார்ப்போம்" என்றார் ராஜி.
தன் மகள் சத்தியாவையும் அந்த நேரம் தூக்கிச் செல்ல, மீனாள் அதனைத் தூக்கி , மகளுக்காகத் தயாரிக்கும் சத்தான சூப் வகைகளைச் சத்யாவுக்கு ஊட்டுவாள்.
" இது என்ன பண்டமாற்று முறையா" எனச் சிந்தா கேலி செய்ய, " உன்கிட்ட இருக்கிறதை நீ கொடுக்கிற, என்கிட்ட இருக்கிறதை நான் கொடுக்குறேன்" என மீனாள் சொல்லவும்.
" அடுத்தப் புள்ளைக்கு வழி பண்ணுங்க. உங்க மார்ல பால் ஊறுறதுக்கு நான் பொறுப்பு " எனச் சிந்தா சவால் விடவும், மீனாள் செங்கொழுந்தாகி, "ம்க்கூம், ஒரு புள்ளையவே எனக்கு ஒழுங்கா வளர்க்கத் தெரியலை" எனச் சுயப் பச்சாதாபம் கொள்ளவும்," இப்ப சிட்டுக் குட்டிக்கு எல்லாமே நீங்க தானே பார்க்கிறீக" எனவும் மீனா சற்றே தேறினாள்.
" அந்தக் காலத்தில, புருஷன் முச்சியைப் பார்க்காமலே, நாலு புள்ளை பெத்தவுகளும். புள்ளை வளர்க்கத் தெரியாமலே பத்து புள்ளை வளர்த்தவுகளும் உண்டு. எல்லாம் நாள்படப் பழக்கத்தில வந்துடும்" என ராஜியம்மாளும் , சாமந்தியம்மாளுமாக இந்த இளையவர் கூட்டத்தில் சொல்லிச் சிரிப்பர். அதிலும், சிந்தாவோடு சில நேரம் வரும் வள்ளியும், அமிர்தாவும், சேர்ந்து விட்டால் முத்துவை பிள்ளைகளைத் தூக்கி போக்கு காட்டச் சொல்லி விட்டு இவர்கள் அடிக்கும் கொட்டம் வீடே இரண்டு படும். அமிர்தாவையும் பக்குவமாகவே பார்த்துக் கொண்டனர். அதில் நீரஜ் தைரியமாக இருந்தார்.
அமிர்தாவுக்கு, சிந்தாவும், முத்துவும் உடன்பிறந்த சகோதரிகள் போலவே மாறிப் போனார்கள். அமிர்தா , சிந்தா குடும்பத்திடம் பேசிப் பேசியே, முத்துவை கோயம்புத்தூர் மகளிர் கல்லூரியில் சேர்க்க அனுமதி வாங்கி, அங்குத் தனக்குத் தெரிந்தவர்களை வைத்து சீட்டையும் உறுதிப்படுத்தியவள், தான் ஊருக்குச் செல்லும் போது, முத்துவை உடன் அழைத்துச் செல்வதாகவும், சிந்தா பின்னர் வந்து தன் வீட்டில் தங்கி விட்டு, தங்கையை அழைத்து வரலாம் எனத் திட்டத்தையே தீட்டி வைத்திருந்தாள்.
வள்ளியின் அலோபதி செக்கப்பும் ஒருபுறமும், பரமக்குடி வைத்தியர் மருந்து ஒருபுறமுமாக ஓடிக் கொண்டிருந்தது. வள்ளியும் கந்தனும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
கண்மாய்க்கு உள்ளும், கரையிலும் ஏற்கனவே குதிரை எடுப்பு செலவுக்காக எனக் கண்மாய்ச் சீமை கருவைகளைக் காண்ட்ரேக்ட் விட்டு வெட்டியிருக்க, இந்த முறை மௌனப் புரட்சியாக, வேலைக்குச் சென்ற மக்களே அதனை வேரோடு களைந்தனர். ஆனால் அதனை அறியாத தேவ்சந் சேட்டும் விறகு வருகிறது எனச் சந்தோஷமாகவே இருந்தான்.
ஒரு அமாவாசையின் மூன்றாம் நாள் வளர்பிறையில் ஊர் மக்கள் கூடி பிள்ளையார், பெருமாள் முதல் அழகி மீனா, அய்யனாரை வழிபட்டு மேளதாளத்தோடு வேளாளர்களான கந்தனின் குடும்பம், பங்காளிகளை அழைத்து , அவர்களும் தங்கள் குலதெய்வமான காளியம்மன், ஏழு கன்னிமாரை வணங்கி ஊர்வலமாகச் சென்று, கண்மாயில் பூமித்தாயை வணங்கி பூஜைப் போட்டுக் களிமண் எடுத்து வந்தனர்.
மேலப் பூங்கொடி கிராமமே ஏதோ ஒருவகைப் புத்துணர்ச்சி பாணம் குடித்தது போல் சுறுசுறுப்பாக இயங்கியது. அமிர்தா, குதிரை எப்படிச் செய்வார்கள் என ஆவலாகக் கேட்கவும், வள்ளி அதனை விளக்கினாள்.
" குதிரை உடல் பாகம், தலை, முகம், கால்களை இது மாதிரியே வைக்கோலைச் சேர்த்துச் சேர்த்து , வைக்கோல் பிரி, காஞ்ச கம்புகளை வச்சுக் கட்டி, அடிப்படை உருவத்தைக் கொண்டு வந்துருவோம். பிறகு சட்டிப் பாணை செய்யற மண்ணையே இன்னும் மெதுவாக்கி அதில அப்பி, பூசி வழுவழுன்னு மொழுகி, மொழுகி உருவத்தைக் கொண்டு வருவோம். காது, மூக்கு, வாய் எல்லாம் வரைஞ்சு கண்ணு மட்டும் திறக்க மாட்டோம். குதிரை நிலக்காய்ச்சலாவே காய வச்சு அப்புறம் வைக்கோலைப் போர்த்தி, மண்ணை மேற் பூச்சு பூசி , தீயப் பத்த வச்சுச் சுடுறது. குதிரைக்கு வெளியே இருக்க வைக்கோல், உள்ள இருக்க வைக்கோல் எல்லாம் தீயில எறிஞ்சு, சுட்ட மண் குதிரை ரெடி. அப்புறம் காவி பூசறதா , வெள்ளை பூசுறதா, வர்ணம் பூசறதான்னு எப்படி வேணுமோ பெயிண்ட் அடிக்கலாம். " என விவரம் சொல்லவும், அமிர்தாவோடு, முத்தும், சிந்தாவுமே வாயைப் பிளந்து குதிரை செய்யும் முறையைக் கேட்டனர்.
தென்வயலில் இரண்டு இடத்தில் ராட்சத போர்வெல் (ஆழ்துளைக் கிணறு) போடும் வேலை ஆரம்பமானது. தரிசு நிலம் தண்ணீர் எங்கு வரப் போகிறது எனச் சந்தேகமாக நீரோட்டம் பார்க்கும் ஆட்களை அழைத்து வந்து பார்க்க, ஆயிரமாயிரம் நீர் ஊற்றுக் கண்களைக் கொண்ட வைகைத் தாய், வெகு தூரத்திலிருந்தும் தனது அருட் கொடையை இந்த வறண்ட பூமியை நோக்கியும், புவிக்கடியில் ஓட்டியிருந்தாள். அதனால் இவர்கள் நினைத்ததை விட நன்றாகவே நீர் வந்தது.
மீனாட்சியை மணந்த சுந்தேரசப் பெருமான் வை- கை எனச் சொன்னால் மட்டும் தான் வையைப் பெருக்கெடுக்குமா என்ன, மீனாளை மணந்த இந்தச் சிவநேசன் தொட்டதும் பொன் தான். மாமதுரையைக்கூடச் சில பொழுது கோபத்தோடு புறக்கணித்த வைகையும் கூட இவர் நிலத்தில் பொங்கி வந்தது. அதைக் கண்ட அத்தனை நல்ல உள்ளங்களின் கண்ணிலும் ஆனந்த வைகை புரண்டது.
அய்யனார், " அய்யா, பகவானே, அய்யனாரே, கருப்பனே, முனியனே, அழகியம்மாவே, இதே மாதிரி இந்த நிலத்தில எந்த நாளும் தண்ணீர் பாலா பெருகனும் ஐயா" என நாலு திசையையும் பார்த்துக் கும்பிட, மகாலிங்கமும் ஐயா, பிள்ளையாருக்குத் தேங்காய் சிதறுகாயும், பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனையும் செய்வித்தார்.
சிவநேசன் இனிப்பு வாங்கி விநியோகித்தான். வயலில் போர்வெல் ஓடிக் கொண்டிருந்தது, புனல் பாய்ந்து, தரிசு நிலம் தண்ணீர் பருகிக் கொண்டிருந்தது. ஒரு ஊற்றுக்கண் தண்ணீர், சுற்றுபுற மேல் பரப்பை நனைத்துக் கொண்டிருந்தது.
நாளை, அமிர்தா, நீரஜ் கோவை கிளம்புகிறார்கள், அதற்கு முன் சிந்தாவிடம் சில வேலைகளை ஒப்படைத்தனர். அமிர்தா முத்துவை தன்னோடு அழைத்துச் செல்கிறாள். குமரன் இன்று இரவே மதுரைக்குக் கிளம்புகிறான். அடுத்துச் சொட்டு நீர்ப் பாசனத்துக்குப் பைப்புகள் வாங்க வேண்டியதும், மண் பரிசோதனை செய்ய, இந்தப் பதினாலு ஏக்கரில் என்ன என்ன பயிர் செய்வது எனத் தீர்மானித்து வைத்திருந்தனர், அதற்கான விதை, நாத்து என அடுத்த ஒரு மாதத்துக்கு அவனுக்கு அலைச்சல் தான்.
சிந்தாவின் வீட்டு வாசலில் ,திண்ணையிலும், கட்டிலில், நாற்காலிகளில் எனக் குழுவாக அமர்ந்து, ஒவ்வொருவருக்கும் ஒரு பணியைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
“இப்ப போயிட்டு, திரும்ப எப்ப வருவீக “ எனச் சிந்தா கேட்கவும், “அது தான் ஆடி பதினெட்டுக்கு , பயிர்க்குழி போடறது சொல்லியிருக்காங்கல்ல, அப்ப வருவோம், அதுக்கப்புறம் நான் அலைய முடியாது, குமரன் பார்த்துக்குவான் “ என்ற அமிர்தா, “மாம்ஸ , ஒரு தடவை எல்லாரையும் கூட்டிட்டு கோவை வரலாம்ல “ என வேலுவைப் பார்த்து அமிர்தா கேட்கவும் ,
வேலு அதிர்ந்தவனாக, “யாரை என்னைய தான் சொல்றீகளா “ என்றான் ,
“ஆமா, சிந்தா அக்கானா, நீங்க மாமா தானே, பிள்ளைகளையும் கூட்டிகிட்டு வந்துட்டு வாங்க. சுப்பு நீயும் அவசியம் வரனும். இங்க வேலை ஆரம்பிக்கும் முன்னாடி அங்க வந்து பார்த்துட்டு வந்தேனா, ஒரு ஐடியா கிடைக்கும்” என அவனையும் அழைக்கவும்,
“வர்றேன் அக்கா, இந்த முத்து அக்காவைக் கூப்பிட வாரேன் , இந்த இரண்டு நாளைக்கு நான் பிசி” என்றான். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஒரு வயசான கிழவி, ஆள் கருத்து, மெலிந்து ஒடுங்கிப் போய் , பரட்டை தலையோடு, காலை இழுத்து, இழுத்து வலி நெடுக சிந்தா வீட்டை விசாரித்துக் கொண்டே நடந்து வந்தது.
இவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்று கேட்கவும், சிந்தா சென்று விசாரித்தவள், “யாரா இருந்தாலும், உள்ள வாங்க, திண்ணையில் வந்து உட்காருங்க, தாகம் தனிச்சுக்கிட்டு பேசுவீக” என அந்தக் கிழவியை அமர்த்தி, காபியைத் தரவும், வேறு வேலையாக உள்ளே எதையோ தேடி கொண்டிருந்த வேலு வெளியே வந்து , அருகில் செல்லவும் தான் தன சின்னமா ராக்காயி என்றே அடையாளம் கண்டான்.
“அய்யா வேலு, ஆத்தாளை காப்பாத்துயா , அந்தச் சிறுக்கிங்க என்னை விரட்டி விட்டுட்டாளுங்க “ எனக் கண்ணீர் விடவும். வேலுவுக்கே ஒரு மாதிரி ஆனது, “சரி.சரி அழுவாத “ எனக் கிழவியைத் தேற்றியவனைப் பார்த்த சிந்தா யாரென விசாரிக்க, “ நான் சொல்லியிருக்கேன்ல , என் சின்னமா.” என்றவன், சிந்தாவையும் அவள் குடும்பத்தையும் அறிமுகம் செய்து வைத்தான்.
தாய்மை உள்ளம் கொண்ட சிந்தாவோ, “அத்தை ஒன்னும் கவலை படாதீக, இங்க வந்துடீக இல்லை, இனி உங்க மகன் பார்த்துகுவாக. “ என ஆதவராவாக அழைத்தவளை,
“ஆத்தா மகராசி, நல்லா இருப்ப, நான் தங்கியிருந்த முதியோர் இல்லத்துல , உன்னைப்பத்தி சொன்னாகத்தா , அதுதேன் , உன் கையாள காஞ்சி வாங்கிக் குடிச்சாலாவது, ஜென்மம் முடியுமான்னு பார்க்க வந்தேன்” எனவும், சிந்தா உருகிப் போனவளாக மாமியாரைத் தங்கினாள் . தன்னை விடுத்து, மருமகளை உச்சி குளிர வைக்கும் சின்னம்மாளை , வேலு சந்தேகமாகவே பார்த்தான்.
ராக்காயி ஆட்டம் ஆரம்பம்.
No comments:
Post a Comment