Saturday, 14 August 2021

சிந்தா-ஜீவா நதியவள் -13

சிந்தா-ஜீவா நதியவள் -13 

" வேர்கள்" அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முதல் கூட்டம், திருப்தியாக இருந்தது. அதனைப் பற்றி வீட்டுக்கு வந்தும் பெரியவரோடு சேர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர்.

" ஏன் தம்பி, அப்ப இந்தக் கூட்டம் போட்டது, இந்தச் சனங்களை நம்ம பக்கம் இழுக்கிறதுக்கு இல்லையா" எனச் சந்தேகம் கேட்டார் பெரியவர்.

" அவுங்களும், நம்மோடு சேர்ந்து கூட்டுப்பண்ணை விவசாய ம் செஞ்சாங்கன்னா, அவுங்களுக்கும் பெரிய நன்மைகள் இருக்கு. மெல்ல வரட்டும். இதே போல இந்தப் பத்து நாள் ஒவ்வொரு ஊரிலும் ஒரூ விழிப்புணர்வு கூட்டம் போட்டம்னா , எல்லாருடைய கவனமும் நம்ம மேல திரும்பும். நம்ம வயலை முதவும் பார்த்திருப்பாங்க, அப்புறமும் பார்ப்பாங்க. தன்னால ஆசை வரும். வருவாங்க. " என்றார் நீரஜ்.

" அப்பாவும், ஏற்கனவே, நீ செஞ்சு காமிச்சிட்டு கூப்பிடு, அப்பத்தான் வருவாங்கன்னு சொன்னாங்க" எனச் சிவநேசன் , தன் தந்தையைக் குறிப்பிட்டுச் சொன்னான்.

" இந்த ஊர் மக்களுக்கு நிலையான வருமானம் வேணும், அதுக்குப் பெண்களுக்குக் குடிசை தொழில்கள் மூலமா வர்ற வருமானத்தைக் காட்டிட்டமுன்னா நம்மளை நம்புவாங்க. விவசாயத்துக்கு, சொட்டு நீர் பாசனக் கருவிகளும், நீர் ஆதாரத்துக்குப் போர் போடுறது,இது இரண்டும் நம்ம சப்ளை பண்ணித்தான் ஆகனும், வேற வழியில்லை. அதைச் செஞ்சா விவசாயம், அவுங்க செய்வாங்க" என்றவர்.

"நேசன், நம்ம நிலத்துக்குப் பக்கத்தில் யாரோடதெல்லாம் தரிசா கிடக்குன்னு பாருங்கள். அவங்களைத் தான் முதல்ல அப்ரோச் பண்ணனும் , அந்த நிலங்களுக்கு நம்ம போரிலிருந்தே தண்ணி வசதி, மத்த வசதி எல்லாமே ஏசியா செஞ்சிடலாம் " என இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே , மீனா வந்து சாப்பிட அழைத்தாள்.

சிவநேசனிடம் ராஜியம்மாள், " நல்ல நேரத்தில மருமகளைக் கூட்டிட்டு வந்த, எனக்கு எம்புட்டு ஒத்தாசையா இருக்குது. நல்ல புள்ளையை உங்க அத்தை ,தான் வேணுமுன்னே என்கிட்ட அண்டவிடாமல் வச்சிருந்திருக்கு" என மருமகளை உயர்த்திப் பேசவும், " ஆமாம் அத்தை, கன்டிசனா இருப்பீங்க. திட்டுவீங்கன்னு தான் என்கிட்டையும் சொல்லி வச்சிருந்தாங்க" என மீனாள் வெள்ளந்தியாகத் தன் தாயையும், கங்காவையும் சொல்லிக் கொடுத்து விட, "வரட்டும் என்னான்னு கேப்போம்" என ராஜி சொல்லவும், "அத்தை கேட்டுப்புடாதீக. என்னைய வைவாக" என மீனா பயப்படவும். சிவநேசன் சிரித்தான் ." என் மரூமகளை யாராவது, எதாவது சொல்ல விட்டுருவேன். நீ பயப்படாம இரு " என ராஜி மருமகளைத் தாங்கிப் பேசவும், அவளும் மகிழ்ந்து போனாள்.

வரிசையாக அமிர்தா, நீரஜ், குமரன், மகாலிங்கம் என அனைவரும் வரவும், மாமியாரும் , மருமகளுமாகப் பரிமாறினர். சிந்துஜா, பால்குடித்து விட்டு உறங்கிக் கொண்டிருந்தது. ராஜி, மீனாவுமாகச் சாப்பிட்டனர். அடுப்படியில் அமர்ந்தே சாமந்தியம்மாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இவர்கள் நாய் பைரவா பின் பக்கம் வந்து நின்று குறைத்துக் கொண்டே இருக்கவும், " அய்யோ, இவனுக்குச் சோறு வைக்கலையா' எனச் சாமந்தியம்மாள் எழவும், நீ சாப்பிடு, நான் போடுறேன் என வழக்கமாகப் போடும் மண்சட்டியில் ராஜேஸ்வரி குனிந்து போட, சட்டி அசைந்ததில் அதைச் சுற்றியிருந்த சிறிய பாம்பு அவரது கெண்டைக்காலில் கொத்தியது.

ராஜி, "ஆத்தி" என நகர்ந்தவருக்கு விறுவிறுவேன ஊர்ந்து சென்ற சாரை பாம்பையும் , அதைத் துரத்தி ஓடிய பைரவாவையும் பார்த்தவர், " சாமந்தி" என அலறியபடி உள்ளே வந்தார். " என்னாக்கா" எனக் குரல் கொடுத்தவர், ராஜி முகமெல்லாம் வேர்த்து இருக்கவும், பதறியபடி வந்தார். ராஜியம்மாள் "சாரைப் பாம்பு கடிச்சிருச்சுடி" என முகத்தைத் துடைத்தபடி சேரில் அமர,

சாமந்தியம்மா, ஐயா, சின்னதம்பி, பெரிய தம்பி ஓடியாங்க. அக்காளைப் பாம்பு கடிசிடிச்சு" என்றவர், ஒரு துணிக் கயிற்றை எடுத்துப் பாம்பு கடித்த இடத்துக்கு மேலே கட்டினார். சாமந்தியம்மா கத்தியதில் அடித்துப் பிடித்து வந்தவர்கள், விசயமறியவும், அம்மாவை ஆளுக்கொரு பக்கமாகத் தூக்கி வந்து கட்டிலில் போட்டவர்கள், பதட்டமானார்கள். "அண்ணன் , நன் வண்டியெடுக்குறேன்" எனக் குமரன் கார் சாவியை எடுக்கவும்,

மகாலிங்கம் முதலில் கலங்கியவர், நொடியில் சமாளித்து," சிந்தாவுக்குப் போனைப் போட்டு மருந்தோட வரச் சொல்லு, முதலுதவி செஞ்சிட்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவோம் " எனக் கத்தியவர். மனைவியின் அருகில் அமர்ந்து, "ராஜி, இங்க பாரு, உனக்கு ஒன்னும் ஆகாது, பதட்டம் ஆகாமல் இரு. இந்தச் சிந்தாவுக்குத் தம்பி போன் போடுறான், இதோ வந்துடும், பரமக்குடி வைத்தியர்கிட்ட பாடம் படிச்ச பொண்ணு உன்னைக் காப்பாத்திடும். அமைதியா இரு" என ராஜிக்குத் தைரியம் சொன்னார்.

"அவள் வருவாளான்னு தெரியலையே" என வருத்த பட்டவரை, "அதெல்லாம் வரும், யார் யாருக்கோ வைத்தியம் பார்க்குது, அவுக்கப் பெரியம்மாளுக்குப் பார்க்காமல் விட்டுருமா" எனச் சமாதானம் பேசவும், அவள் வரவும் சரியாக இருந்தது.

சிவநேசன் பதட்டத்தோடு, வேலுவுக்குப் போன் அடித்துச் சொல்லவும். இந்தா வர்றோம். என அவன் வீட்டில் விசயத்தைச் சொல்லவும், அதிர்ச்சியில் கண்ணீர் பெருக்கிய சிந்தா, டார்ச் லைட் எடுத்துக் கொண்டு, சாமிக்குக் காசு முடிந்து போட்டுவிட்டு, மூலிகைகளைப் பறித்தவள், அய்யனாரை வாழை மட்டையை வெட்டச் சொன்னாள்.

ஆமணக்கு, தும்பை, அருகம்புல், மிளகு, விறலி மஞ்சள், காஷ் துணி என ஐந்து நிமிடத்தில் அத்தனையும் சேகரித்தவள், பரமக்குடி வைத்தியரிடமிருந்து வாங்கிய விஷ முறிவு சூரணத்தையும் எடுத்துக் கொண்டாள்.

முத்து, சுப்புவை வீட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னவள், வற்றாத பொய்கையாய், மாலை மாலையாய் வடியும் கண்ணீரைத் துடைக்கவும் மறந்தவளாகக் கணவனுடன் பெரிய வீட்டுக்குப் பறக்க. அவள் நிலையைக் கண்ட வேலு, " சிந்தாமணி, முதல்ல நீ தைரியமா போ. அப்பத் தான் அவுக உணர்ச்சி வசப்படாம இருப்பாக" எனவும், முந்தியில் முகத்தைத் துடைத்தவள், ஏழு படிகளையும் இரண்டே தாவில் தாவி, வீட்டுக்குள் சென்றாள்.

மொத்தக் குடும்பமும் அவரைச் சுற்றியே நிற்கவும், சாமந்தியம்மாளிடம் அறுகம்புல்லை மையாக அரைக்கச் சொன்னவள், மீனாவிடம் விறலி மஞ்சளைக் கொடுத்து விளக்கில் சுடச் சொன்னாள்.

குமரனிடம் சோப்புத் தண்ணீர் டப்பு மக்குக் கொண்டு வரச் சொல்லி என வரிசையாகக் கூறிவிட்டு, அமிர்தாவிடம் ஆமணக்கு இலையில் மிளகு, இன்னும் இரண்டு சாமான்களைக் கொடுத்துச் சாமந்தியிடம், அரைத்ததை வாங்கி விட்டு, இதை அரைத்துக் கொண்டு வரச் சொன்னாள். இத்தனை கட்டளைகளையும் இரண்டு நிமிடத்தில் பிறப்பித்தவள், ராஜேஸ்வரி அருகில் சொல்லவும், உணர்ச்சி வசப்பட்டவராக, "வழியனுப்ப வந்தியாடி" என அவர் தன் ஆற்றாமையைச் சொன்னவரை .

" நான் வந்துட்டேன்ல ஒண்ணும் ஆகாது" எனக் காலை ஆராய்ந்தவள், " மேலாப்ல தோலில தான் லேசா கடிச்சிருக்கு , பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை" என முதல் வார்த்தையாக நோயாளிக்கு நம்பிக்கையைத் தந்தாள் . இதுவும் வைத்திய மொழிகளில் ஒன்று, வைத்தியர் மருந்து பாதி எனில் அவர் சொல்லும், நோயாளி நம்பிக்கையும் ஒருவரை குணப் படுத்தும். இங்குச் சிந்தாவின் வார்த்தையே மாமருந்தாக இருந்தது. மயக்கம் அடைந்து இருந்தால் , தும்பையைச் சாறெடுத்து மூக்கில் விட்டு நினைவை வரவழைப்பர், ஆனால் ராஜி பேசிக்கொண்டு இருக்கவும், சிந்தாவுக்கும் ஓர் ஆசுவாசம் வந்தது. அவள் சொல்லவுமே, ராஜி முகம் தெளிந்தது.

ராஜேஸ்வரியை இடதுபுறம் ஒருக்களித்துப் படுக்க வைத்தவள், பாம்பு கடித்த காலை மட்டும் அசைக்காமல் கட்டிலுக்கு வெளியே நீட்டி, சோப்பு போட்டு மூன்று முறை , தண்ணீரை ஓடும் நீர் போல் மேலே ஊற்றச் சொல்லிக் கழுவினாள். ராஜியோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே, வெள்ளை துணியால் துடைத்தவள், மீனா சுட்டுக் கொண்டு வந்த விறலி மஞ்சளைப் பாம்பு கடித்த இடத்தில் வைக்கவும், " அடியே சுட்டு பொசுக்குது, எத்தனை நாள் ஆசைடி எனக்குச் சூடு வைக்கிற " என ராஜியம்மாள் திட்டினார்.

"ராஜி, வைத்தியம் பார்குறப் புள்ளையை வையாதே" என்றார் மகாலிங்கம்.

" இருக்கட்டும் ஐயா, அவுகத் திட்டட்டும், சுடுதுன்னு தெரிஞ்சா சரிதான்" என்றவள்,மனதில்,'அப்போது சதை வரை விஷம் ஏறவில்லை ' என உறுதி செய்துக்கக் கொண்டால். அதனை எடுத்து விட்டு, அமிர்தா சாமந்தியம்மாளிடம் வாங்கி வந்த அறுகம்புல் கலவையை அதன் மீது வைத்து, காஷ்துணிக் கொண்டு கட்டினாள். அதோடு அய்யனார் கொண்டு வந்த வாழை மட்டையில் பாம்பு கொத்திய வாழ்த்துக்கள் வைத்து அசையாமல் காஸ் துணிகக் கொண்டு காட்டினாள் .

சிந்தா வரும் போது வேர்க்க விருவிருக்க இருந்த ராஜி இப்போது சற்றே தெளிவாக இருந்தார். சாமந்தியம்மா கொண்டு வந்த கலவையை, வாங்கித் தானே ராஜிக்கு கொடுத்தவள், " ஐயா, காரை எடுங்க. மானாமருதை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி போகனும்" எனச் சொல்லவும்,

" ப்ரைவேட் ஹாஸ்பிடலில் பார்க்கலாம். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை" எனச் சிவநேசன் சொல்லவும்.

" இதுக்கு மருந்து அரசாங்க ஆஸ்பத்திரில தான் இருக்கும்" என அவள் சொல்லும் போதே, " சிந்தாமணி, மருந்து இருக்காம். கம்போண்டர் வரச் சொல்றார்" என வேலு போன் போட்டு விசாரித்துச் சொன்னான். மற்றவருக்கு யோசனையாகவே இருக்க, மகாலிங்கம், " அவுக வழக்கமா, இதே வேலையைச் செய்யறவுக. அங்கயே போகலாம், அரசாங்க ஆஸ்பத்திரில தான் இந்த மருந்து எல்லாம் இருக்கும் " என்றார்.

குமரன் ஒரு காரை எடுக்கவும், நீரஜ் மற்றொரு காரை எடுத்தார். அமிர்தா கிளம்பியவளை மீனாளுக்குத் துணைக்கு வைத்துவிட்டு மற்றவர் கிளம்ப, " ஐயா, அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. நீங்க இங்கியே இருங்க. நான் இரண்டு மணி நேரத்தில கூட்டிட்டு வந்துடுறேன்" என மகாலிங்கத்திடம் சிந்தாச் சொல்லவும், " அதெல்லாம் முடியாது" என ஆளுக்கு முன்னாள் கிளம்பினார் மகாலிங்கம்.

ராஜேஸ்வரியை அலுங்காமல் தூக்கி காரில் ஏற்றும் முன் அவருக்கு வாந்தி வந்தது. மற்றவர் பயப்படவும், " இந்த மருந்துக்கு அப்படித் தான் வரும். வாந்தி வந்தா தான், விசம் முறியுதுன்னு அர்த்தம்" எனவும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. சிந்தா பின் சீட்டில் தன் மடியில் ராஜேஸ்வரியை ஒருகளித்துப் படுக்க வைத்துக் கொண்டாள்.

வேலு தன் வண்டியை எடுக்கப் போனவனை நீரஜ் அழைக்கவும், " சாவியைக் குடுங்க, நான் ஓட்டுறேன்" என அவர் கரை வேலு செலுத்தி வந்தவன், குமரனை முந்திக் கொண்டு செல்வும் மகாலிங்கம், நீரஜ் மனதில் காட்டுப்பயலா இருக்கானே எனத் தோன்றியது. ஆனால் காரை நீரஜிடம் கொடுத்தவன், உள்ளே சென்று ஏற்பாடுகளைக் கவனித்து, அவர்கள் வரும் முன் ஸ்டெரெச்சரோடு வெளியே வந்தான்.

சரியாகக் குமரனின் காரும் வர அண்ணன், தம்பி இருவரும் ராஜியம்மாவைத் தூக்க எசவு இல்லாமல் சிரமப் படுவதைப் பார்த்த வேலு, " ஸார் கார் கதவைப் பிடிச்சுக்குங்க" எனச் சிவநேசனை பணித்தவன், தான் ஒருவனே கனத்த சரீரம் கொண்டு ராஜியம்மாளை குழந்தைப் போலத் தூக்கினான்.

" தம்பி கீழே போட்டுறாத" என ராஜியும், " பார்த்து" என மகாலிங்கமும் கத்தவும், சிரித்துக் கொண்ட வேலு, " பயப்படாதீக. இவ கூடப் போனாலே இந்த வேலை எல்லாம் செய்யறது தான். " என ஸ்டெரெச்சரில் அவரை வைக்கவும், கம்போண்டர் உள்ளே தள்ளிச் சென்றான், சிந்தா கூடவே சென்றவள், " ஏன்னேன் மருந்து ஸ்டாக் இருகுல்ல, நல்லதா போடு. எனக்கு இவுக அம்மா. " எனச் சிந்தாச் சொல்லவும்.

" நீ கூட்டிட்டு வர்ற ஆளுகளுக்கு உன் மருந்தே ஜாஸ்தி. இது திருப்திக்குப் போடறது தான்" எனப் பேசிக் கொண்டே சென்று டூட்டி டாக்டரிடம் நிறுத்த, அவர் கையொப்பம் இட்டுக் கொடுக்கவும், ப்ரீஸரிலிருந்து மருந்தை எடுத்து வந்து ராஜிக்குப் போட்டு விட்டனர்.

அண்ணனும், தம்பியுமாக டாக்டரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு, விசாரிக்கவும். " ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஒரு இரண்டு மணி நேரம் வெயிட் பண்ணுங்க. வேற ரியாக்சன் இல்லைனா கூட்டிட்டுப் போகலாம்." எவ்வளவு நேரம் ஆனது, என்ன ஏது என விசாரித்தவர், " இவ்வளவு தெளிவா இருக்காங்கன்னா, லேசா தான் தீண்டியிருக்கும். அந்த லேடியே பார்த்திருமே. இந்த வேக்சின்காக மட்டும் தான் நம்ம கிட்ட வருவாங்க. " என்றவர் ராஜியம்மாவுக்கு ஊசி போடவும், வந்து பல்ஸ், ப்ரஸ்ஸர் எல்லாம் பரிசோதித்தார்.

காலில் கட்டியிருந்ததைப் பார்க்கவும், " இதை யார் நீங்க தான் கட்டுனீங்களா" என முறைக்கவும், " இல்லை சார், ஏற்கனவே சமையக்காரம்மா கட்டிடுச்சு. கட்டு லேசா தான் இருந்தது சரின்னு விட்டுட்டேன். சோப்பு போட்டுக் கழுவிட்டேன். அசையாம இருக்கணுமுன்னு சொல்லுவிகளேன்னு வாழை மட்டையில வச்சுக்கக் கட்டினேன் " என டாக்டருக்கு , ஆசிரியர் முன் ட்ரைனிங் எடுக்கும் மாணவி போல் விளக்கம் தந்தாள் சிந்தா. " பரவாயில்லை, நாங்க சொல்றதையும் கடைபிடிக்கிறீங்க" எனச் சிந்தனைப் பாராட்டிய மருத்துவர்,

"கட்டை , மெல்ல, மெல்ல லூஸ் பண்ணுங்க" என ஸ்டெதஸ்கோப்போடு நின்று பல்ஸ் பிபியை பரிசோதித்தவர், பத்து நிமிடம் கழித்து அதையும் அவிழ்க்கச் சொன்னார். சிவநேசனும், மகாலிங்கமும் ராஜியம்மாள் அருகிலேயே நின்றனர். ராஜி நன்றாகப் பேசிக் கொண்டு தான் இருந்தார்.

நீரஜும், குமரனும் டாக்டர் கேட்டவை, இவள் பதில்களைப் பற்றிச் சிந்தாவிடம் விளக்கம் கேட்கவும், " கட்டை இறுக்கக் கட்டியிருந்தா, பட்டுனு அவுக்கவும், இரத்தம் வேகமா மேல, இதயத்துக்கு ஏறும்ல , அப்படி ஏறக்கூடாது. கொஞ்ச நஞ்சம் விஷமிருந்தாலும் ஏறிடும். அதுக்காகத் தான் மெல்ல மெல்ல அவிழ்க்கச் சொல்லுவாக , ஆனால் சாமந்தியம்மா அந்தம்மா சத்துக்கு இறுக்கக் கட்டினது, நம்மளுக்கு சரியாப் போச்சு. நல்லவேளை, நீங்க யாரும் கட்டளை, இல்லைனா டாக்டர், என்னை வைவாறு " என்றவள், 

" பாம்பு பல்லு படுறதை வச்சு விசயம் இருக்கு, ஒரு பல்லுனா விஷம் தோலோடு நின்னுடும், இரண்டு பல்லுனா சதை வரை போகும், மூணு நாலுன்னா எலும்பு வரைக்கும் போயிருக்கும்னு அர்த்தம், அது தான் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும், தலைக்கு ஏறிடும். இவுகளுக்கு ஒரு பல்லு தான் நல்லா பதிஞ்சு இருந்தது, அப்ப தோலுல தான் இருந்தது, சதைப் பகுதிக்குக் கொஞ்சம் போயிருக்கும். அருகம்புல்லு பத்து போடுறோம்ல அதுவே சரியா போயிடும் , இன்னைக்கு இராப் பொழுது, தூங்காமல் பார்த்துக்கனும், ஒரு வாரத்துக்குப் பத்திய சாப்பாடு. " என விளக்கினாள்.

" ஆனால் நீங்க வரும் முன்ன வேர்த்துக் கொட்டுச்சே" எனவும், சிந்தா சிரித்துக் கொண்டே, " மனப்பிராந்தி தான், இங்கிலீஸ்ல என்ன சொல்லுவீக" எனவும் " சைக்கலாஜிக் பியர்" என்றார் நீரஜ்.

" அதே தான், என்னைய பார்க்கவுமே ஒரு தைரியம் வந்திருக்கும்." எனச் சிந்தாச் சொல்லவும், வேலு " ஆமளு, இப்பச் சிரி, இவளே அழுதுகிட்டே தான் வந்தா. நான் சத்தம் போடவும் தான் அழுகை நின்னுச்சு" என்றவன்,

 " ஏன் புள்ளை அம்மா இரவைக்கு முழிக்கனுமே, டீ வாங்கியாறவா" என வேலு கேட்கவும், " அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.டாக்டரு உள்ளப் போகட்டும், பரமக்குடி வைத்தியர் சூரணம் இருக்கு. அதைக் குழைச்சு குடுத்துக்குறேன். தூக்கமும் வராது, உடம்புல வலுவும் கூடும். மத்தவுகளுக்கு வாங்கிக் குடு" என்றாள் சிந்தா.

குமரன், " அவரையே ஏன் அலைய விடுறீங்க, நான் வாங்கிட்டு வர்றேன்" என்றான். " அட நீங்க இருங்க, இதெல்லாம் நாலு தடவை நடந்திட்டு வந்தா தான், அதுக்குத் திருப்தியா இருக்கும்" என்றவளை, சிவநேசன், " அம்மா கூப்பிடுறாக" என வந்து அழைத்தான்.

சிந்தா, போகும் போது, பெரியய்யா, அம்மா மட்டுமே இருக்க, பெரியவர் மிகவும் கலங்கிப் போயிருந்தார்.


" உனக்கு, எங்க குடும்பம் செஞ்ச துரோகத்தை மனசில் வச்சுக்காமல், உன் அம்மாளைக் காத்து கொடுத்துட்டத்தா" என அவர் கையெடுத்துக் கும்பிடவும்,


" ஐயா" எனத் தடுத்தவள், " முதல் விசயம், சின்னைய்யா தான், என் பெண்மையைக் காப்பாத்துனாக, இது தான் சத்தியம். ரெண்டாவது இந்த வைத்தியமே நீங்க தந்தது தானங்க ஐயா, யாருக்குனாலும் அந்த வைத்தியர் கத்துக் கொடுத்திடுவாகலா என்ன. உங்க ஒரு வார்த்தை, அதுல கிடைச்சது தான் இந்த வைத்தியம். உங்க கொடை, அம்மாளை காப்பாத்தியிருக்கு" என அவள் சொல்லவும்,

" இதெல்லாம் வளமையா பேசு, பாம்பு தீண்டவும் தான் என்னை வந்து பார்த்த. கூட்டம் முடிஞ்சு போகும் போது கூட, அந்தத் தம்பி வண்டியை நிறுத்துச்சு. நீ தான் போ, போன்னு பத்திவிட்ட. நான் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்" என ராஜியம்மாள் குறைச் சொல்லவும்.

" சரி தப்பு என் மேல தான், நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன். நீங்க டென்சனாகாதீங்க. டாக்டர் என்னை வைவாரு. அப்புறம் வீட்டுக்கும் விட மாட்டார். அய்யாவிலிருந்து எல்லாரும் உங்களுக்காகச் சிவராத்திரி கொண்டாட வேண்டியது தான்" எனச் சிந்தாச் சொல்லவும் தான் ராஜி அமைதியானார்.

மேலும் இரண்டு மணிநேரம் கழித்து, நள்ளிரவில் இரண்டு மணிக்கே வீடு வந்து சேர்ந்தனர். ஆனாலும், ராஜியம்மாள் இரவு தூங்கக் கூடாது என , எல்லாரும் முழித்திருக்க, சிந்தா, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சூரணம் கலக்கித் தர வேண்டும் , அதனால் தான் ராஜேஸ்வரி அம்மாளோடு இருப்பதாகவும், மற்றவரைப் படுக்கச் சொன்னாள். ஆனால், மற்றவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டு, குமரன் அவர்களோடு முழித்திருக்க. வீட்டுக்குக் கிளம்பிய வேலுவிடம், சத்யா அழுதால், எந்த நேரமானாலும் தூக்கி வரச் சொன்னாள்.

" அதிகாலையில் தான் எந்திரிக்கும். நான் பார்த்துக்குறேன். போன் வச்சிருக்கேயில்லை" என விசாரித்துக் கொண்டு சென்றான். சாமந்தியம்மாளும் நலம் விசாரித்து விட்டு, படுக்கச் சென்று விட்டார். ஐந்து வருடமாகப் பேசாத பேச்சை எல்லாம், ராஜியம்மாளும், சிந்தாவுமாகப் பேசினார்கள்.

ஹாஸ்பிடலில் இருக்கும் போதே, சிவநேசனிடம் மீனாள் தகவல் அறிய போன் போட்டால், அமிர்தா நீரஜுக்கு, போன் போடுவாள். அதே போல், முத்து குமரனுக்குப் போன் போட்டு ராஜியம்மாள் நலன் விசாரிக்கவும், குமரனுக்கு மனதில் ஓர் இதம் பரவியது. " தாங்க்ஸ்" என்றான். " நீங்க அவுகளோட இருந்ததை விட, நாங்க அவுகளோட பிறந்ததிலிருந்து வாழ்ந்திருக்கோம். உங்களுக்காக ஒண்ணும் கேட்கலை" என்றாள்.

" சரிம்மா, நானும் ஒண்ணும் , எனக்காகப் பேசுறன்னு சொல்லலை " எனக் குமரன் சொல்லவும், " அப்புறம் எதுக்குத் தாங்க்ஸ் சொன்னீங்களாம்" என விடாமல் சண்டையிட, " தெரியாமல் சொல்லிட்டேன் மன்னிச்சுக்க" என்றான்.

" அதுக்கு, நீங்க போயி எப்படி என்கிட்ட மன்னிப்பு கேட்கப் போச்சு" என அடுத்தச் சண்டையிட அவள் வாயை அடைக்கத் தெரியாமல் தவித்த குமரன், " உன் மாமன் வர்றாரு, அவருகிட்டையே பஞ்சாயாத்து வச்சுக்குவோமா. " எனக் கேட்கவும், " ஆத்தி உங்கள்ட்ட இனிமே பேசவே இல்லை போங்க" எனப் போனை வைத்தாள். "அடிப்பாவி" என அவன் நிற்கவும், அங்கு வந்த வேலு, " யாரு உங்க கங்கா அக்காவா, சொல்லிட்டிகளா" என விவரம் கேட்டான்.

" இது அந்தப் பாவி இல்லை, என்னோட ஆவியை வாங்குற பாசமான பாவி, " என்றவன், " அக்காவுக்கெல்லாம், மெதுவா சொல்லிக்கலாம்னு பெரியப்பா சொல்லிட்டாங்க. எல்லாரும் இங்க வந்து டேராப் போட்டா, சமாளிக்கிறது கஷ்டம்" எனப் பேசிக் கொண்டிருந்தான். அதை நினைத்துப் பார்த்தவன், ' முத்தழகி பேசமாட்டேன்னு வேற சொல்லியிருக்காளே. நிஜமாவே பேச மாட்டாளோ, எனச் சுயபிரச்சனையில் மனதைச் செலுத்தினான்.

ஆனால் ட்ரையம்மாளும், சிந்தாவும் பேச்சில் ஓய்ந்த பாடு  இல்லை. சிந்தா, ராஜேஸ்வரியிடம், ஒரு பத்துநாள் செல்லட்டும், நயினார் கோயில் போயிட்டு , சாமிக்கு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுவோம். " என்றாள்.

" நானே, அரவம் எதுவும் கண்ணுல படக் கூடாதுன்னு, நயினார் கோயிலுக்குக் காணிக்கை முடிஞ்சு போடுவேன். புற்றுக்குச் சேவல் அடிச்சு நேந்து தாண்டி விடுவேன். அதையும் மீறி எப்படி வந்துச்சோ. நான் நினைக்கிறேன், நீ வரமப் போயிட்டேன்னு நான் மனசில ரொம்ப நொந்துபோனேன். உன்னை வரவழைக்கத் தான் நாகராசா தரிசனம் குடுத்திருக்காரு" என அந்தம்மாள் சொல்லவும், "அதுக்காக உசிரோட விளையாடுறதா உங்க நாக ராசா . நான் எம்புட்டுப் பதறிப் போயிட்டேன் தெரியுமா. செத்துப் போன எங்க ஆத்தா நினைப்பெல்லாம் வந்திருச்சு" என அவள் கண்ணீர் விடவும்,

" அடக் கிறுக்கி, அப்படியா போயிடுவேன். அப்படியே போனாலும் தான் என்ன" என்றவர் அவள் முறைக்கவும்,

" இல்லை, இல்லை இப்ப எல்லாம் போகக் கூடாது, உங்க ஐயா தவிச்சு போயிருவாக. இன்னைக்கே நீ வரும் முன்னே கண்ணீர் விட்டுட்டாக. இந்த மீனாளும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கு. நான் கூட இருந்தா தான் அதுக்குச் சரிப்பட்டு வரும் " என்றவர்.

" இந்தக் கங்காவும் காலகாலத்தில புள்ளையைப் பெத்திருந்தா, நான் நிம்மதியா இருப்பேன்" எனச் சொல்லி சிந்தாவின் முகத்தைப் பார்த்தார். அவள் முகம், உணர்வுகளைத் துடைத்துக் கல்லாய்ச் சமைந்திருந்தது. ஆனால் மனதில், 'இவள் எத்தனை பேரைத் தான் ஏமாற்றுவாளோ, அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சா, தாங்கமாட்டாக, அவுகளுக்கு, மகளோட உண்மை எப்பவுமே தெரியாமப் போகட்டும் அழகியாத்தா. ஒரு தாயோட மனசைப் புண்படுத்திடாத' என வேண்டிக் கொண்டாள்.

மணி நான்கைக் கடக்கும் போது, மீனாள் கீழே இறங்கி வந்தாள். சாதாரணமாக மாத்திரையைப் போட்டுக் கட்டாயமாக அவளைத் தூங்க வைத்து விடுவார்கள், ஆனால் இன்று மாத்திரை போட்டும் அவளுக்கு உறக்கமில்லை. ராஜேஸ்வரிக்குப் பாம்பு கடித்தது எனவும் பதறி அழுது துடித்துவிட்டாள். அவள் ராஜேஸ்வரி அறைக்கு வரவும், " என்னாத்தா, தூங்கலையா. நீ தூங்கி எந்திருச்சா தான , காலையில எல்லாரையும் பார்க்க முடியும்" என மருமகளைக் கேட்டார் ராஜி.

தூக்கமே வரலை அத்தே, அது தான் உங்க கூடவாவது துணைக்கு இருக்கலாம்னு வந்தேன்" என்றவள், குமரனை அவனறைக்குச் செல்லச் சொன்னாள். அவனும், " சிந்தாக்கா, இன்னும் எவ்வளவு நேரத்துக்குப் பெரியம்மா தூங்காமல் இருக்கனும்" எனக் கேட்டான்.

" முதலுதவி செஞ்சுட்டோம், ஊசி போட்டாச்சு. சூரணம் குடித்துட்டே இருக்கேன். சூரியன் உதிக்கிற வரை. ஆனால் இந்தச் சூரணத்துக்கே தூக்கம் வராது. காலையில பத்திய பொங்கல் கிண்டித் தர்றேன், சாப்பிட்டுத் தூங்கட்டும். அம்மா ஒரு வாரத்துக்கு எண்ணெய், புளிப்பு இல்லாத பத்தியந்தான். நான் சாமந்தியம்மா கிட்டச் சொல்லிடுறேன்" எனவும்.

" இத்தனை வருஷம் கழிச்சு வந்தவ, என்னைப் பத்தியம் போட்டுக் கொல்லத் தான் வந்திருக்கா" என ராஜியம்மாள் குறை சொல்லவும்,

" என்னத்தை, அவுக உங்களைக் காப்பாற்ற, என்ன பாடு பட்டாங்க" என மீனாள் சிந்தாவின் சப்போர்ட்டுக்கு வரவும், சிந்தா, "அவுகளுக்கு, இத்தனை நாள் நான் வரலையின்னு சொல்லிக் காட்டனும்" எனச் சிந்தாச் சிரித்தாள்.

" ஆமா, சிரிச்சுக்க" என ராஜி திரும்பிப் படுக்கவும். " அந்தப் பக்கம் திரும்பக் கூடாது, அப்புறம், நீங்க முழிச்சிருக்கீங்களா, தூங்குறீங்களான்னு எப்படித் தெரியும்" எனச் சிந்தா மிரட்டவும்.

" நான் படுக்கவே இல்லைடி" என எழுந்து உட்கார்ந்தார். சிவநேசன் சற்று நேரத்தில் சிந்துஜா எழவும் தூக்கி வந்தான். " ஆத்தாடி, அப்பத்தாவுக்குத் துணைக்கு இவுகளும் எந்திரிச்சிட்டாகளா" எனச் சிந்தாக் கேட்கவும் அவளைப் பார்த்துச் சிரித்தது.

அம்மாவை விசாரித்து விட்டு " மீனூ, பால் ஆத்திட்டு வா" என நேசன் சொல்லவும், அடுப்படிக்குச் சென்றவள், வெறுங்கையோடு திரும்பி வந்தாள். "நைட் நடந்த களேபரத்தில் பாலை, ப்ரிட்ஜில வைக்கலை, திரிஞ்சு கிடக்கு" எனவும், " சரி பவுடர் பால் இருக்குமில்ல" என அவன் கேட்கவும்,

 " அது பாப்பாவுக்குச் சேரலைனு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. வாங்கலை. நீங்க பால்காரர்கிட்ட சீக்கிரம் கறந்து தரச் சொல்லுங்க. பாப்பா விளையாடிக்கிட்டு தான் இருக்கு" எனவும், " சரி இரு பார்க்கிறேன்" எனச் சிவநேசன் பால்காரரைத் தேடிச் செல்ல, சிந்துவும், சிந்தாவுமாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

சற்று நேரத்தில் சிந்தாவையும் மணியைப் பார்க்க ஆரம்பித்தாள். ராஜியம்மாள் என்னவெனக் கேட்கவும், " என் மகளும் எந்திரிச்சிருக்கும். அவுக அப்பா அழுதா தூக்கியாறோம்னு சொல்லுச்சு. ஆளைக் காணோம்" என்றாள். அவள் சேலையும் நனைய ஆரம்பிக்க, சிந்துஜாவும் சிணுங்க ஆரம்பித்தது. 

மீனாள் கணவன் வரும் வழியையே பார்த்திருக்க, " வேற பக்கம் கறக்க போயிட்டார் போல. ஏன்மா, பார்த்து எடுத்து வைக்கமாட்டீங்களா, அம்மா இல்லைனா எதுவுமே பார்க்கிறது இல்லை. நீ எப்பத் தான் மீனூ இதெல்லாம் பழகுவ" என ஹாலில் வைத்து, மனைவியைச் சிவநேசன் இயலாமையில் கடிந்து கொள்ள அவள் முகம் கூம்பிப் போனது.

ராஜேஸ்வரி அம்மாள் ரூமுக்கு, மீனாள் வரவும், அவர் என்ன வெனக் கேட்க, இங்குச் சிந்து, சிந்தாவை பிய்க்க ஆரம்பித்து இருந்தது. சிந்தா செய்வதறியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள். இவர்கள் முன் எப்படிப் பால் புகட்டுவாள். 

ஆனால் சிந்துஜா அழுகை அதிகரிக்கவும், "மீனா, உன் மகளுக்குச் சிந்தாவை தாய்ப்பால் கொடுக்கச் சொல்லவா" என ராஜியம்மாள் கேட்கவும், மகளுக்காகத் தவித்திருந்த மீனா, ஒரு வழிக்கிடைத்தது போல் முகம் மலர, "அவுங்க பாப்பாவுக்குக் கொடுக்கிறதை, நம்மப் பாப்பாவுக்குத் தருவாகளா. நீங்க என் மகளுக்குத் தருவீங்களா" எனவும் கண்ணீர் விட்ட சிந்தா, 

"புள்ளையில, என் புள்ளை, உங்க புள்ளைனு என்னமா இருக்கு, அதுக பணியமர்த்தக் கடவுள் எனக்கு வரம் தந்திருக்கான்னா, சந்தோஷமா கொடுக்க வேண்டியது தானே, நீங்க பண்ணக்காரி குடுக்கிறதான்னு சாதிப் பார்பீகன்னு தான் பேசாமல் இருந்தேன்" எனவும்,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை, புள்ளை பசியா அழுகும் போது என்ன சாதி, எனக்கு இல்லாத வரம், உங்களுக்கு கிடைச்சிருக்கே , பாப்பா அழுகுது நீங்க குடுங்க. அத்தை அவுகளைக் குடுக்கச் சொல்லுங்க" என்ற மீனாள், கதவைச் சாத்திவிட்டு, கணவனிடம் சேதிச் சொல்லச் சென்றாள்.

சிந்தா, கண்ணைத் துடைத்துக் கொண்டு சிந்துவைத் தூக்கி மகிழ்ச்சியாகவே தாய்ப்பால் புகட்டினாள். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த ராஜியம்மாள், "ஏண்டி, நீ என் பேத்திக்குப் பாலே கொடுத்தது இல்லையாக்கும், ரொம்பத் தான் நடிக்கிறவ. புள்ளை அழுகுது கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்க" என ராஜியம்மாள் திட்டவும், சிந்தா அதிர்ச்சியாக முழித்தவள், " உங்களுக்கு முதவே தெரியுமா" எனக் கேட்டாள்.

" ஏண்டி மூணு புள்ளையைப் பெத்தவ, எனக்குத் தெரியாதா. சிவகாமியைத் தூக்கவுமே தெரிஞ்சுக்கிட்டேன். நேசன் இவளைத் தூக்கிட்டு வந்த அன்னைக்கே எனக்கு நினைப்பு தான். ஒரு நேரத்துக்காவது, இது உன் பாலைக் குடிச்சா தேறுமேன்னு நினைச்சேன். நீதான் சண்டைக் காரி, இந்தப் பக்கமே வரமாட்ட, அதுனால தான் கேட்கலை. ஆனால் அன்னைக்குச் சிவகாமியைத் தூக்கவுமே, சந்தேகமா குமரனைக் கேட்கவும், அன்னைக்கே சொல்லிட்டான். உன் புருஷன் தான் கொடுக்கச் சொல்லுச்சாமுல்ல, உண்மை ல உன்னை விட உன் புருஷனுக்குத் தாண்டி இரங்கின மனசு. நீ ரப்புக்காரி" என்றவரை,

" எத்தனை நாளைக்குத் தான்,என்னை வையிறீகன்னு நானும் பார்க்கிறேன்" என்றவள், சிந்துஜா பால் குடித்து முடிக்கவும், அதன் வாயைத் துடைத்து விட்டாள்.

அதனைக் கொஞ்சியபடியே, " இனிமே திருட்டுத் தனமா குடிக்க வேணாம். உங்க ஆளிகளுக்கு எல்லாம் தெரிஞ்சுப் போச்சு. சத்தியாவோட சண்டைக் கட்டிக்கிட்டு குடிங்க" எனக் கொஞ்சினாள்.

" சிட்டு, உன் மகளை நான் பார்த்ததே இல்லையே, உன் மகன் சண்டியர், ஊர்க்காரப் பயல்களோடு வருவான். எதாவது சாப்பிடக் குடுத்தா, எங்கம்மாகிட்ட சொல்ல மாட்டீகளேன்னு கேப்பான், இல்லைனு சொல்லவும் தான் வாங்கிக்குவான். புள்ளையை நல்லா மிரட்டி வச்சிருக்கடி . உன் புருஷனையும் அப்படித் தான் மிரட்டி வச்சிருக்கியா" எனக் கேலியோடு ராஜியம்மாள் கேட்கவும்.

" ஆமாம், மிரட்டுறாக, அதெல்லாம் மிரட்டலுக்கு அடங்குற ஆளா. ஆனால் நான் முகம் வாடுனா தாங்காது. " எனக் கணவனைச் சொல்லும் போதே, அவள் கருத்த முகம் பளபளக்க, ராஜேஸ்வரி அம்மாள் மனம் நிறைந்தார்.

மீனாள் வந்து கதவைத் திறந்து, "இந்தா, உங்க அம்மா இருக்காங்க" எனச் சத்தியாவைத் தந்து விட்டு, சிந்துஜாவை வாங்கிக் கொண்டாள்.

சத்தியா அம்மாவைப் பார்க்கவும், கொஞ்சியது, " சிந்தா, கண்ணை உருட்டிக்கிட்டு, உன்னை மாதிரியே இருக்குதுடி. ராத்திரி பூரா உன்னைக் கொஞ்சறதைப் பாரு" என்றார். தன் மகளுக்கும் உடனே மறுமார்பில் சிந்தாப் பாலைப் புகட்டவும், ராஜி சிந்தாவின் உடல்நலத்தையும் விசாரித்தவர்.

" இந்நேரம் உங்க ஆத்தா இருந்திருந்தா, உனக்குப் பிரசவம் அப்படிப் பார்த்து இருப்பா. எனக்கே வயசு காலத்தில் எம்புட்டு உதவி செய்வாத் தெரியுமா. அநியாயமா அரவத்துக்குப் பலி கொடுத்துட்டோம்" என அவர் கண்ணீர் வடிக்கவும்.

" என் ஆத்தாளை மாதிரி யாரும் போகக் கூடாதுன்னு தான் அம்மா இந்த வைத்தியத்தையே கத்துக்கிட்டேன். உண்மையில் உங்களுக்கு வைத்தியம் பார்க்கவும், நீங்க பொழைச்சது தான் , எங்க ஆத்தாளே பிழைச்சு வந்த மாதிரி ஒரு நிம்மதி" எனக் கண்ணீர் வடித்தாள் சிந்தா. இந்தத் தாய் மகள் உறவென்பது, தொப்புள் கொடி பந்தம் மட்டுமல்ல, பாசத்தாலும், உணர்வாலும், பிணைக்கப்படுவது. சிந்தாவுக்கு அரவணைக்கும் தாயாக ராஜியம்மாள் இருந்தால், அவர் பேத்திக்கு தாய்ப்பால் புகட்டும் உறவாய் ஆனாள் சிந்தா. ஜீவ நதியும், போல் புகட்டும் தாயும் ஒன்று தானே.


எல்லாவற்றையும் தாண்டி பால் பேதமின்றிக் கண்ணதாசன் வரியில்...

எந்த மனதில் பாசம் உண்டோ, அந்த மனமே அம்மா! அம்மா!.

No comments:

Post a Comment