Wednesday, 11 August 2021

சிந்தா- ஜீவா நதியவள் -11

 சிந்தா- ஜீவா நதியவள் -11

"வேர்கள்- Roots" இந்த அமைப்பின் ஸ்தாபகர், நீரஜ்குமார் என்பவர் தான்.தர்மபுரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர், மெத்தப் படித்து ஒரு எம் என்சி கம்பெனியில் வேலைப் பார்த்தவர், பல இந்தியப் பொருட்கள், சத்தமில்லாமல் வெளி நாட்டுக் காப்புரிமை பெறுவதைப் பொறுக்க மாட்டாமல், இந்த அமைப்பை ஏற்படுத்தினார். படிப்படியாக ஒவ்வொரு விவசாயக் கல்லூரி, பல தன்னார்வலர்களோடு இணைந்து, விளை பொருட்கள் காப்புரிமை பெற்றுத் தருவது, நவீன முறை விவசாயத்தைப் பயன்படுத்திப் பாழ் பட்ட நிலங்களை வளமாக்குவது, எனச் செய்து வந்தவர்கள், அடுத்தக் கட்ட முயற்சியாக மூலிகை மருந்துகள், அதைச் சார்ந்த மருத்துவத்தையும் ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்குத் தேவையான மூலிகைகளை உற்பத்தி செய்யும் பணியிலும் இறங்கினர்.

இவர் கோவை விவசாயக்கல்லூரிக்கு வந்த போது, அம்ரிதாவை பார்த்து ஈர்க்கப்பட்டவர், வெகு நாட்களாகத் திருமணம் செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தவர், இவளிடம் மடங்கினார். இவர்கள் திருமணமும் பலத்த எதிர்ப்புக்கு இடையில் நடந்தது. அமிர்தா பட்டியலினத்தைச் சேர்ந்தவள். ஆனாலும் இவர்கள் தடைகளைத் தகர்த்து புதிய வரலாறு படைத்தவர்கள். 

இவர்கள் அமைப்புக்குச் சிங்கப்பூரிலிருந்து ஸ்பான்சர்களைக் குமரன் அறிமுகப்படுத்த, வறண்ட நிலத்தில் விளையும் மூலிகை பயிர்களைப் பயிர் செய்து அதனை விவசாயி, மருத்துவ உலகம், பொதுமக்கள் பயனடையும் விதமாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இவர்கள் இடத்தில் இது சாத்தியமானால், பக்கத்திலிருக்கும் நிலங்களையும் விளைநிலமாக மாற்றி, அதிலும் பயிரிட்டு, இதனைப் பெரிய அளவில் செய்யத் திட்டமிட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதி தான், சீமைகருவையை விளைநிலங்களிலிருந்து அறவே அழிப்பது.

காலை உணவுக்கே , அமிர்தா, நீரஜ் தம்பதியினர் வந்து சேர்ந்துவிட்டனர். தான் தங்கியிருந்த மாடியறையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, கீழேயிருக்கும் ஓர் அறைக்கு மாறிக் கொண்டான் குமரன். நான்கு மாத கர்ப்பத்தோடு , லேசாக மேடிட்ட வயிற்றோடு காரில் பயணித்து வந்த அமிர்தாவைப் பார்த்து ராஜேஸ்வரி ஆத்தாத்துப் போனார்.

" ஏத்தா, இப்படித் தான் மாசமா இருக்கப் புள்ளை இம்புட்டுத் தூரம் பிரயாணம் பண்ணுவியா" என அக்கறையாக விசாரிக்கவும்.

" அம்மா, இப்படி ஆக்டிவா இல்லைனா தான் , எனக்கு உடம்புக்கு முடியாமல் போயிடும். குமரனைக் கேளுங்க" எனப் பதில் தந்தவளை வாஞ்சையாக அவர் அணைத்துக் கொள்ள, மீனாள் கைகளிலிருந்து சிந்துஜாவைக் கொஞ்சினாள் அமிர்தா. நீரஜ்குமாரை, மகாலிங்கம், சிவநேசனுக்கு அறிமுகம் செய்து வைத்த குமரன், அவர் பெரிய கம்பெனியில் கை நிறையச் சம்பாதித்தது, தற்போதைய வேலை, சேவை என எல்லாவற்றையும் சொல்லவும், அவர் மேல் பெரிய மதிப்பு வந்தது. மீனாள், தயங்கித் தயங்கி நிற்க, அமிர்தா சகஜமாகப் பழகினாள். ஏற்கனவே குமரன் மூலம் அவளைப் பற்றித் தெரிந்து இருந்தது.

சிவநேசனிடம், "அண்ணா, நீங்க நாலு தடவை வயலைப் பார்க்கப் போறீங்க, கடைக்குப் போறீங்கன்னா எல்லாப் பக்கமும் அண்ணியையும் ஒரு தடவை கூட்டிட்டுப் போங்க. அப்பத் தான் நீங்க என்ன செய்றீங்க. உங்க கஷ்டம் என்னங்கிறது அவங்களுக்கும் புரியும்" என்றவள்,

" நானெல்லாம் நீருசாரைஒரு நிமிஷம் தனியா விட்டுட்டு இருக்கமாட்டேன்" என அவள் பெருமையாகச் சொல்லவும்.

" யெஸ், யெஸ். நான் சின்னப்பையன் தொலைஞ்சு போயிடுவேன். அதனால எங்க மம்மி கூடவே வருவாங்க" என அவரும் கேலி செய்தார். "அடித்து மட்டுமா பயம், மனுஷன் டிப்டாப்பா இருக்காருன்னு யாராவது அடிச்சிட்டுப் போயிட்டா" என அமிர்தா சொல்லவும், மீனாள் , நேசனைப் பார்த்தாள் , நான் மட்டும் இல்லை எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்ற செய்தி இருந்தது அதில் .

"அடிப்பாவி, அப்பா என் மேல நம்பிக்கையே இல்லையா, உருகி, உருகி காதலிச்சேன்னு சொன்ன " என அவர் அதிர்ச்சியாகவும், சிவநேசன் , நீரஜ் அதிர்வைக் காட்டி பார்வையையாலே , மனைவிக்குப் பதில் தரவும், " ஆசானே, இவ்வளவு ஹண்ட்ஸம்மா இருந்தீங்கன்னா, அம்மிக்கல்லு பயப்படாத தானே செய்யும், விடுங்க இதுவும் உங்களுக்குக் காம்பிளிமெண்ட் தான் " எனக் குமரன் சொல்லவும், "நீ சொன்னா சரி தான், உன் பிரெண்டு மனசு உனக்குத் தான் நல்லா தெரியும்" என அவரும் மனைவியின் காலை வாரினார்.

"டேய் கிழவா,(குமரனுக்கு எதிர்பதம் ) ஓவரா உன் ஆசான் பக்கம் சாயாத, இதுக்கு அனுபவிப்ப " என அமிர்தா மிரட்டவும், " அமிர்தா மேடம் கோவிச்சுக்காதீங்க, அவரு உங்க ஹஸ்பண்ட்கிறதால தான் சப்போர்ட் பண்ணேன் " எனச் சட்டெனக் கட்சி மாறினான். நீரஜ் , "போதும் நிறுத்துங்க ,உங்க ரெண்டு பேரையும் எனக்குத் தெரியும்" என்றவர், அவர்கள் நட்பை பற்றியும் இவர்கள் குடும்பத்துக்கு எடுத்துச் சொன்னார். இவ்வாறு பேசியபடியே , காலை உணவை முடித்தவர்கள், ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றனர். அமிர்தாவுக்காகச் சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்த பின்னர், காரில் சென்று பார்க்கக் கூடிய இடங்களைப் பார்வையிட்டவர்கள், எந்தந்த நிலம் எப்படி என மனதில் கணக்கிட்டனர்.

அமிர்தா, நகரத்தில் வாழ்ந்தவள், இது போலப் பல ஊர்களுக்குச் சென்று வந்தது மட்டுமே அவளுக்கும் கிராமத்துக்கும் உள்ளத் தொடர்பு. ஆனால் ஒரு விசயத்தைப் பாமர மக்களிடம் எடுத்துச் சொல்ல, அவளைப் போல் யாராலும் முடியாது. கையில் கேமரா செல் போன் சகிதமாக நான்கு மணிக்கெல்லாம் நீரஜ் உடனும், குமரனுடனும் கிராம வலம் கிளம்பி விட்டாள். இவர்கள் கிளம்பும் நேரம், சிந்தாவிடம் சொல்லி, முத்துவை தருவித்தான் குமரன்.

முத்து தயங்கியபடியே பெரியவீட்டின் தெற்கு பக்க வாசலில் வந்து நின்றவள், அங்கிருந்தே பெரியம்மாவிற்குக் குரல் மட்டுமே கொடுத்தாள். அன்று கங்கா சொன்ன விசயங்களில் ஒன்று, ' நீயெல்லாம் எங்க வீட்டுப் புழக்கடை பக்கம் வர மட்டுமே அனுமதிக்கப்பட்டவள்" என்பது , அது அவள் மனதில் முள்ளாகத் தைத்து இருந்தது. நாவினால் சுட்ட வடு.

சாப்பிட்டு முடித்து, தனது அறையில் ராஜேஸ்வரி படுத்திருக்க. மகளை அங்குள்ள தொட்டிலில் ஆட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்த மீனா தான் எட்டிப் பார்த்தாள். அன்று மதுரைக்குக் காரில் வந்தவள், சிந்தாவின் தங்கை என நினைவுக்கு வரவும், " உள்ள வா. உன் பேரு மறந்துட்டேனே " என அவள் ஸ்நேகமாகவே அழைக்கவும்,

" இல்லை இருக்கட்டும். நான் இந்த வாசல்ல இருக்கேன். வெளியூர்லருந்து வந்திருக்காங்களே, அந்த மேடத்துக்கு ஊரைச் சுத்திக் காட்டனுமாம். நான் வந்துட்டேன்னு உங்க கொழுந்தன் கிட்டச் சொல்லுங்க" என அங்கேயே நின்றாள். அன்று கூடத் தலைவாசல் வழியாகச் சிந்துஜாவுக்கு உடை மாற்ற வந்தவள் தான், ஆனால் கங்காவின் பேச்சும், குமரனின் எதிர்பார்ப்பும், அவனுக்கு , ஊருக்குள், அவர்கள் உறவுக்குள் தங்கள் நிலையை உணர்த்தி விடவே அப்படி நின்றாள். மீனாவுக்கு அதற்கு மேல் அழுத்திச் சொல்லத் தெரியவில்லை. பெரும்பாலான ஆட்கள், இப்படி நின்று பேசுவதால், அவளும் முன்னறையிலிருந்த குமரனிடம் சொல்லச் சென்றுவிட்டாள். குமரனுக்குத் தான் கோபம் பலியாக வந்தது.

வேகமாகத் தெற்கு வாசலுக்கு வந்தவன், "ஒருத்தர் வீட்டுக்கு இப்படித் தான் வருவாங்களா. நீ முன்னாடி வருவேன்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என அவன் சத்தத்தைக் குறைத்துப் பேசினாலும், குரலில் சீற்றம் இருந்தது.

" இந்த ஊர் பழக்கம் இது தான். பண்ணக்காரவுக இப்படித் தான் வருவோம். எங்க அப்பா, இன்னும் இப்படித் தான் வர்றார் " என அவள் விறைப்பாகவே பதில் தந்தாள்.

குமரன் சத்தமாக, " பெரியம்மா" என அழைத்தான். " இப்ப எதுக்கு அவுகளைக் கூப்புடுறீக" என அவள் பதறவும், அவளைச் சட்டை செய்யாமல், மீண்டும் அழைத்தான். ராஜேஸ்வரி சிரமப்பட்டு எழுந்து வந்தவர் . " என்ன குமரா, எதுக்குக் கூப்பிட்ட. வெளியே கிளம்புறீகளா. காபி வச்சுத் தரவா" என்றவர், முத்து வெளியே நிற்பதைப் பார்த்து, "நீ ஏண்டி வெளியவே நிக்கிறவ. உங்க அக்கா உள்ளே போகாதேன்னு சொல்லி விட்டாளாக்கும். இரண்டு பேரும் நல்ல ரோசக்காரிக தாண்டி" எனத் திட்டினார்.

" அப்ப, இது தான் பழக்கமா பெரியம்மா, நீங்க இன்னும் அதெல்லாம் பார்க்குறீங்களா" எனக் குமரன் கேட்கவும், ராஜேஸ்வரி கோபமாக முத்துவிடம், " கேக்குறான்ல சொல்லு. நான் உங்களை அப்படித் தான் வளர்த்தனா. " என அவளிடம் கேட்டவர், குமரனிடம் " உங்க அப்பத்தா இருக்கிற வரை, இது எல்லாமே இருந்துச்சு குமரு . எட்டு வருஷம் முன்ன அவுக போகவுமே, நானோ உங்க பெரியப்பாவோ இதெல்லாம் பார்க்க மாட்டோம். இதுகளும் ஆத்தாளைப் பறி கொடுத்துட்டு இருந்ததுகளை, பாசமாத்தான் பார்த்துக்கிட்டேன். என்னமோ, ஐஞ்சு வருஷம் முன்ன நடந்ததுக்கு நான் தான் காரணமுங்கிற மாதிரி, இந்தப் பக்கமே, இவுக குடும்பமே எட்டிப் பார்க்கிறது இல்லை. உங்க அக்காளுங்களை வளர்த்த மாதிரி தான் இதுகளையும் வளர்த்தேன். ஆக மொத்தத்தில ஒரு கழுதைக்கும் என் மேல பாசமில்லாமப் போச்சு. பெத்ததுகளும் கவனிக்கலை. வளர்த்ததுகளும் என்னான்னு கேக்கலை. போய்ச் சொல்லு உங்க அக்காட்ட, பெரியம்மா இன்னும் உசிரோடத்தான் இருக்கேன்னு" எனச் சிந்தா மீது உள்ள கோபத்தை ராஜேஸ்வரி முத்துவிடம் காட்டவும்,

" அம்மா, என் அக்கா ஒண்ணும் எதுவும் சொல்லலை, அன்னைக்குக் கூட உள்ள வந்து சிட்டுப்பாப்பாக்கு எல்லாம் தானே செஞ்சேன். இவுகளோட மருதைக்குப் போனதுக்கு, கங்கா அக்கா அம்புட்டு பேச்சு பேசுச்சு." என அவள் கண்ணீர் விட்டபடி கங்கா சொன்னவைகளைச் சொல்லவும், குமரனுக்குமே அந்தப் பேச்சுக்கள் அதிர்ச்சி தான். இவளை மாற்றத் தான் அதிகப் பிரயத்தனப்படவேண்டும் என அறிந்து கொண்டான்.

முத்து அழுவும் மனசு கேட்காத ராஜேஸ்வரி உள்ள வா, எனக் கையை நீட்டினார், அவள் அப்போதும் அங்கே நிற்கவும், "அடியே, நான் நொண்டி அடிச்சுக்கிடட்டேவா, அங்க வரைக்கும் வர முடியும். உள்ள வா" என்றவர், அவள் தயங்கியபடியே வரவும், தான் நிற்க முடியாமல் திண்ணையில் அமர்ந்திருந்தவர், அவளைப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டு, " இந்த வீட்டுக்கு நான் தான் எசமானி, கங்கா இல்லை. சும்மா வந்து போய் இருங்க" என்றவர் மீனாளையும் அழைத்து, " இந்த அக்காளோடையும் பழகிக்குங்க. எனக்கு அப்புறம் அவளுக்கு இந்த ஊர்ல ஒரு ஆதரவு வேணுமுள்ள. உங்க அக்காளையும் வரச் சொல்லு" என்றார்.

" நான் அப்பவே உள்ளக் கூப்பிட்டேன் அத்தை, அது தான் வரமாட்டேன்னு சொல்லிடுச்சு" என மீனாள் சொல்லவும்.

" அதெல்லாம் பெரிய ரோஷக்காரிக ஒரு வார்த்தை பொறுக்க மாட்டாளுங்க. உன் மகள் இதுக கிட்ட அப்படி ஒண்டிக்கிட்டா. சாய்ந்திரம் நீயும் ஒரு நடை உன் புருஷனோட போயிட்டு வா, நீயும் நாலு பேரை பழகிக்க, பெரியவீடு, குடும்பம் நடத்துறதுன்னா அம்புட்டுச் சுலபம் இல்லை " என மருமகளுக்கும் எடுத்துச் சொன்னார் ராஜி.

அமிர்தாவும், நீரஜும் வெளியே செல்லத் தயாராகக் கிளம்பி வந்தனர்.குமரன், முத்துவை இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். ஏற்கனவே அமிர்தாவிடம், அவன் சொல்லி வைத்திருந்ததால், முத்துவை ஊன்றி கவனித்தாள் அமிர்தா.

ஐந்தரையடி உயரமும், மாநிறத்துக்குச் சற்றே வெளுத்தும், லேசாகப் பூசிய உடல்வாகோடு, வட்டமுகம், திருத்தப்பட்ட புருவங்கள், கூர் மூக்கு, ஒரு பொட்டு மூக்குத்தி, கழுத்தில் வொயிட் மெட்டல் சங்கிலியும், நீண்ட தலைமுடியோடு, பாந்தமான சுடிதாரிலிருந்தாள். நகரத்தின் நாகரீகம், இந்த ஊர் பெண்களிடமும் இருப்பதைக் கண்டு கொண்டாள்.

" ஹாய் முத்து, க்ளேட் டு மீட் யு. எனக்கு உங்க கிராமத்தைச் சுத்திக் காட்டு, இந்த ஊரில எதுல்லாம் வ்பெஷல்னு சொல்லு. சாப்பிட என்ன நல்லா கிடைக்கும். இங்க என்ன விவசாயம் பண்றாங்க. இந்த மக்கள் எப்படி, நீ சொல்றதை வச்சு தான் உங்க ஊர் ஆளுங்களை ஒரு வழிக்குக் கொண்டு வரனும்" என அவள் வரிசையாகப் பேசவும், முத்து அரண்டு முழித்தாள்

" அமிர், கொஞ்சம் கேப் விடு. அந்தப் பொண்ணு முழிக்குது பாரு, உன் பேச்சி பார்த்தே பயந்தடிச்சு ஓடி போயிடும் " என நீரஜ் சொல்லவும் , முத்து ஓர் சிறு நகையோடு அவருக்கும் வணக்கம் வைத்தவள்,"இல்லை சார், எப்படி இவ்வளவு வேகமா பேசுறாகன்னு பார்த்தேன் " என்றவள் "மேடம் கிளம்பலாமா " எனக் கேட்கவும் , ராஜேஸ்வரி பலகாரம் சாப்பிட்டுக் கிளம்பச் சொன்னார்.

சமையல்கார சாமந்தியம்மா , மாலைச் சிற்றுண்டியாகக் கேசரி, பஜ்ஜி எனப் போட்டு வைத்திருந்தார். சிவநேசனும் வந்து சேர மீனாள் அனைவருக்கும் எடுத்துக் கொடுக்க முத்துவும், மற்றவரோடு அமர்ந்திருக்க மாட்டாமல், மீனாவுக்கு உதவி செய்யப் போனாள். அதைப் பார்த்த குமரனுக்கு மனதில் ஓர் திருப்தி வந்தது.

நீரஜ், சிவநேசனோடு, அவர்கள் வீட்டைச் சுற்றிக் காட்டி பொதுவான விசயங்களைப் பேசி அவ்விடம் விட்டு அகலவும் , அமிர்தா குமரனிடம், " அடேய், கிழவா. நீ மாடு மாதிரி வளர்ந்து உடப்பை தேத்தி வச்சிருக்க, அது சின்னப் புள்ளையா இருக்குது. அதுக்குப் போய் ரூட்டு விடுற. நீ சொல்லவும், அந்தப் பொண்ணு பெரிய தேவதையாக்கும்னு நினைச்சேன்" எனக் கிசுகிசுக்கவும், அவளை முறைத்த குமரன் ," உனக்கு, உலகத்திலையே நீ மட்டும் தான் அழகின்னு நினைப்பு. அவள் ட்ரெஸ் சிம்பிளா இருக்கிறதால உனக்கு அப்படித் தோணுது. பை த பை, நான் அக அழகைப் பார்த்துக் காதலிக்கிறவன். அவளுக்கென்ன, அகம்,புறம் எல்லா வித்திலையும் அழகி தான், முத்தழகி " என்றான்.

" முத்தி தாண்டா போயிருக்கு. அவளே கண்ல பயத்தோட வந்து நிற்கிறா. உன் காதால் கலவரத்துக்கெல்லாம் இவள் ஈடுகொடுப்பாகிற" எனச் சந்தேகம் எழுப்பவும்.

" நீ எதுக்கு வந்திருக்க. அவளுக்குத் தைரியம் சொல்லிட்டுப் போ" என்றான் குமரன்.

" டேய் கிழவா, சொல்றேனேன்னு தப்பா நினைக்காத, இது ஒரு ஃபீல், இதை ஃபோர்ஸ் பண்ணியெல்லாம் யாரும் வரவழைக்க முடியாது. அவரவர் மனசிலிருந்து, இவுங்க இல்லைனா, நம்ம இல்லைங்கிற உணர்வு வரனும். அப்பத் தான் அவுங்களுக்காகப் போராடும் மனோதைரியமும் வரும்" எனவும்.

" இதே தான் அம்மி கல்லு, இதே பேச்சை, அவகிட்டையும் பேசு. எல்லாம் சரியாகிடும்" எனவும் நண்பனை அமிர்தா முறைத்து நிற்க, சிற்றுண்டி வந்தது. ராஜியம்மாவை வானளாவ புகழ்ந்து, அதனை உள்ளே தள்ளிவிட்டுக் கிராமத்தைச் சுத்திப் பார்க்க நடைப் பயணம் கிளம்பினர். சிவநேசன், மகள் எழுந்தவுடன் வருவதாகச் சொல்லி விட்டான்.

முத்து அமிர்தாவோடு, சேர்ந்து , ஒவ்வொரு தெருவையும் பற்றி விளக்கி வந்தாள். அரைமணி நேரம் அங்கே, இங்கே சுத்தி, வள்ளி வீடு எல்லாம் காண்பித்து, மண்பானை செய்வதையும் கேட்டறிந்து சிந்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அமிர்தா சோர்ந்து தெரிந்தவள், இவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர, முத்துத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

சிந்தாவின் குடும்பத்தில் அய்யனாரும், சுப்ரமணியும் அவளுக்கு அறிமுகமானார்கள் , வேலு இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தான். அமிர்தா அமர்ந்திருக்கும் விதத்தில் அவளது நிலையை உணர்ந்த சிந்தா, அப்போது தான் கிண்டி வைத்திருந்த கேப்பை,கம்பு, சோளம் கலந்த கலி உருண்டையிலிருந்து, சிறிது எடுத்துக் காய்ச்சிய பால், சிறிதளவு வெல்லமும் , சுக்குப் பொடி சேர்த்து மணக்க, மணக்கக் கொண்டு வந்து இளஞ்சூடாக அமிர்தாவுக்குக் கொடுக்கவும், " இப்ப தான், அக்கா பஜ்ஜி கேசரி சாப்பிட்டேன். அது தான் டைஜசன் ஆகலைனு நினைக்கிறேன்" எனவும்.

" இதில் சுக்குச் சேர்த்திருக்கேன், சீக்கிரம் செமிச்சுரும் " எனவும், அவள் தயங்கினாள்.

" அமிர்தா, நீ தைரியமா குடிக்கலாம். சிந்தா அக்காவே பாதி வைத்தியர் தான். பாம்பு விசத்தை முறிக்கிற வித்தை எல்லாம் தெரிஞ்சவுங்க. கொஞ்சம் கொஞ்சமா குடி" எனக் குமரன் சொல்லவும், அதை வாங்கி அருந்தியவள், அதன் சுவையில் மடமடவெனக் குடித்தாள். சற்று நேரத்தில் ஏப்பமும் வந்து உடல் சீரானது.

" ஹேய், சூப்பர். கைவசம் இவ்வளவு பெரிய மேஜிக் வச்சிருக்கீங்க" எனச் சிலாகித்தவள், இடை விடாது பேசிக் கொண்டிருந்தாள். அவள் கணவர் நீரஜ் அவளை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, குமரனோடு வயலைப் பார்க்கச் சென்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆண்டிச்சி கிழவி வந்து சேர்ந்தது" இவுக தான் புதுசா வந்திருக்க ஆபிஸரா. ஊரைச் சுத்தி பார்க்கிறாகன்னு சொன்னாக, எப்படியும் உன் வீட்டுக்கு வந்திருப்பாகன்னு தான் இங்கனை வந்தேன்" என நீட்டி முழங்கவும்.

" ஆத்தி, இதோ வந்திடிச்சில்ல ரேடியோ பொட்டி. மேடம் இவுகள்ட்ட ஒரு விசயத்தைச் சொன்னீகண்டா, ஊர் பூராச் சொன்ன மாதிரி தான். " எனச் சுப்பிரமணி சொல்லவும், " யூ ஆர் ரைட் இவுங்க தான் நமக்கு வேணும்" என்றாள் அமிர்தா

" பல சமயம் எங்க அம்மாச்சி அது கற்பனை வளத்தையும் சேர்த்து சொல்லிப்புடும் பார்த்துக்குங்க" எனச் சிந்தாச் சொல்லவும்.

" அடியே, உன் விசயம் பேசினப்பெல்லாம், நான் தான் உனக்குச் சப்போர்ட் பண்ணுனேனாக்கும். " என்றவர், சிந்தா முறைக்கவும், " அதை விட்டுத் தள்ளுங்க. நீங்க சொல்லுங்க. எங்களுக்கு என்ன செய்வீக" எனக் கிழவி , அமிர்தாவிடம் விசாரணை நடத்தியது.

" உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க" எனத் திருப்பிக் கேட்டாள். " அம்மாச்சி, தெனாலி மாதிரி லிஸ்ட்டை எடுத்து விடப் போகுது" என முத்து கிண்டலடித்தாள். ஆனால் ஆண்டிச்சி கிழவி, ஐம்பது வருடப் பிரச்சனையை அழகாகச் சொன்னது. அதைப் பொறுமையாகக் கேட்ட அமிர்தா, அதற்கான தீர்வைச் சொன்னாள்.

" இந்த மாதிரி வானம் பார்த்த பூமியா இருக்கிற ஊர்ல, என்ன விவசாயம் பண்ணலாம், எப்படிச் செய்யலாம். அது உங்களுக்கு எவ்வளவு லாபம் தரும்கிறதுக்கான சோதனையைத் தான், உங்க ஐயா வீட்டு நிலத்தில செய்யப் போறோம். இது சரியா வந்துருச்சுன்னா உங்க ஊரே செழுமையா மாறிடும்" என நம்பிக்கையாகப் பேசி, " நாளைக்குக் கூட்டத்துக்கு, உங்க ஊரு பொம்பளைங்களை எல்லாம் கூட்டிட்டு வாங்க. குடிசை தொழில் மூலமா எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்னு சொல்றேன். நீங்களே சொந்தமா காசு பார்க்கலாம். அதுக்கான வழியைச் சொல்றேன்" என அமிர்தா சொல்லவும், சேகரித்த விசயத்தை ஒலிபரப்ப ஊருக்குள் ஓடியது.

" பரவாயில்லை, உட்கார்ந்த இடத்திலையே, கூட்டத்துக்கு ஆள் சேர்த்துட்டீங்க" எனச் சிந்தா பாராட்டவும். " பேசி பேசி மக்களை நம்ம வழிக்குக் கொண்டு வர்றது தானே நம்ம வேலையே" என்ற அமிர்தா, சிந்தா வாயிலாகவும் அந்த ஊரைப் பற்றிக் கேட்டறிந்தாள். சிவநேசன், குமரன் சொல்வதற்கும் சிந்தா சொல்வதிலும் அந்த ஊரைப் பற்றிய பார்வை கோணம் வேறு கிடைத்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சிவநேசன் மனைவியையும் மகளையும் பைக்கில் அழைத்து வர சிந்தாவுக்கு ஆச்சரியம். முத்துவுக்கு, சிந்துஜாவைப் பற்றித் தான் சற்றே கிலி பிடித்தது. ஆனாலும் தன்னை வரவேற்ற மீனாளை, முத்துவே சென்று வரவேற்றாள்.

மீனாவுக்கு, இத்தனை நாள் கங்காவின் வாயிலாகக் கேட்டறிந்த, அந்தச் சிந்தாவை பார்ப்பதில் ஓர் அச்சமும், ஆனால் செல்வம் சிவநேசன் சொன்ன சிந்தா நினைவில் வர அதனால் ஓர் பச்சாதாபமும், யாரிவள் என அறியும் ஆவலும் கலந்து சிந்தாவைப் பார்க்க வந்தாள்.

முத்து முதலில் வந்து வரவேற்று சிந்துஜாவைக் கையில் வாங்கிக் கொண்டு, வேடிக்கை காட்டுவதாக வேறு பக்கம் தூக்கிச் செல்ல, சிந்தா , சிவநேசன், மீனாளை வரவேற்றாள். ஈடு தாடாகச் சொர்னக்கா ரேஞ்சுக்கு கங்காவால் வர்ணிக்கப்பட்ட சிந்தா, சாந்தமான முகத்தோடு, பாசமாக அழைக்கவும், மீனாவும் ஓர் புன்னகையோடு வந்தாள்.

" நல்லா இருக்கீகளா, உங்களைச் சின்னையாக் கல்யாண பண்ணீட்டு வந்த புதுசுல பெருமாள் கோவில்ல, சாமி கும்பிட வந்தீகளே, அன்னைக்குப் பார்த்தேன். அம்புட்டு அம்சமா, பொருத்தமான ஜோடியா, உங்க பேருக்கேத்த மாதிரி சொக்கர், மீனாட்ச்சியா இருந்தீக, நீங்க இந்த ஊருக்கு வந்ததும், அதுவும் எங்க வீட்டுக்கு வந்தது ரொம்பச் சந்தோசம் " எனச் சிந்தா மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அதில் மீனாள் சற்றே வெட்கப்பட்டு, " நீங்க எனக்காகச் சொல்றீங்க" என அவள் பதில் தரவும்.

"அட சிஸ்டர், ஒரு லேடி இன்னொரு லேடியை பாராட்டினால் ஒத்துக்கனும். அனுபவிக்கனும், ஆராயக் கூடாது" என அமிர்தா சொல்லவும், சிரித்துக் கொண்ட மீனாள், " உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு. சின்ன வயசில் ட்ராயிங் போடுவோமே, ஓட்டு வீடு, கதவு, ஜன்னல், வெளியில் மரம். அதே மாதிரி இருக்கு" என மீனாள் கூட இரண்டு வார்த்தை பேசியதே, சிவனேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

" ஆமாம், நானும் வந்த உடனே நினைச்சேன்" என ஆமோதித்த அமிர்தா. " ப்ரோ உங்க கூட்டமெல்லாம், உங்க வயலைப் பார்க்கத் தான் போயிருக்காங்க. நீங்களும் போங்க. நான் லேடீஸ், ஏதோ பேசிக்கிட்டு இருப்போம்" என அமிர்தா சிவநேசனை அனுப்ப முயலவும், அவன் மீனாள் முகத்தை, அனுமதி கேட்பது போல் பார்க்கவும், அவள் தலையாட்டினாள்.

" ஆத்தாடி ஆத்தி, சின்னைய்யா, சின்னம்மா அனுமதி இல்லாமல் மூச்சுக் கூட விடுறது இல்லை போலிருக்கே" எனச் சிந்தா சொல்லவும்,மீனாள் முகம் செங்கொழுந்து ஆனது.

" அம்மா தாயிகளா, உங்க கேலி கிண்டலுக்கெல்லாம் என் பொண்டாட்டிக்கு ஈடு கொடுக்கத் தெரியாது. கொஞ்சம் பார்த்துப் பதமா செய்ங்க" என்று விட்டுப் போகவும்,

முத்துத் தன்னை மறந்து, "நல்லவேளை, கங்கா இங்க இல்லை. இல்லையினா, சின்னைய்யா, அவுக சம்சாரத்துக்கிட்ட சந்தோஷமா சிரிச்சு பேசறதுக்குக் கூடச் சண்டை கட்டும்" எனச் சொல்லவும், அதுவும் உண்மையோ, தங்கள் வீட்டில் , தன கணவனோடு தனித்திருக்கக் கங்கா விட்டதே இல்லையே என யோசித்தாள் ,சிந்தா தங்கையை அடக்கினாள்.

" முத்து, சட்டுனு அப்படியெல்லாம் பேசாத, அவுகளுக்கு ஒரு முறைக்கு நாத்தனாருன்னா, மறு முறைக்கு அண்ணி ஆகுறாக. ஒரே வீட்டுக்குள்ள இருக்கவுக மேல வன்மம் வர்ற மாதிரி பேசக் கூடாது" எனச் சிந்தா தங்கையைக் கடிந்து கொள்ளவும் மீனாள்,"விடுங்க, எனக்குக் கங்காவை தெரியாதா என்ன" என்றவள், அவள் தானே இல்லாததைப் பொல்லாததைச் சொல்லி தன மனதை கெடுத்தது, ஆனால அவள் சொன்னால் என் புத்தி எங்கே போனது எனவும் யோசித்தாள். கணவனின் அன்பையும் அனுபவிக்காமல் இருந்தோமே எனச் சுய பச்சாதாபமும் வந்தது.

அமிர்தா, " ஆகா, நீங்க ஒரு மதர் இண்டியா கேரக்டரா. அப்ப நீங்க தான் நம்ம பிராஜெக்ட்டுக்கு சரியான ஆளு. " என அமிர்தா சொல்லவும். " ஆரிய கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணா இருக்கீக. உங்களுக்குத் தேவையானதை கப்புனு எடுத்துகிறீகளே' எனச் சிந்தா அமிர்தாவைப் புகழும் போதே, வேலு மகன் மகளோடு டாட்டா ஏசில் வந்து இறங்கினான்.

" என்னடா, வீடு அமைதியா இருக்கேன்னு பார்த்தேன். இது இரண்டும் வெளியே போயிருந்ததாக்கும்" என முத்துக் கேள்வி எழுப்பும் போதே, வேலு மகளைத் தூக்கிக் கொண்டவன், தெரியாத பெண்களாக இருக்கவும், ரோட்டில் வைத்தே மகளைத் தந்துவிட்டு அவனும் வயல் பக்கம் சென்றான்.

சத்தியா, சித்தி கையிலிருந்த சிந்துஜாவைப் பார்க்கவும், தன் அம்மாவை இறுக்கக் கட்டிக் கொண்டது. சிந்துஜாவும் சிந்தாவிடம் பாய முற்பட முத்து கலவரமானாள். ஆனால் சிந்தா, மீனாளிடம், " நான் பாப்பாவுக்குக் கேப்பை பாலெடுத்துக் கூழ் கிண்டி வச்சிருக்கேன். அதைக் குடுக்கப் போறேன். உங்க பாப்பாவுக்கும் கொடுக்கவா" எனவும்.

" அத்தையைத் தான் கேக்கனும், அதுக்குச் சேறுமான்னு தெரியலை" என்றவளை , பார்த்த சிந்தா, "ஒண்ணும் செய்யாது பயப்படாதீங்க" என இரண்டு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டுக் கொண்டு வந்து மாற்றி, மாற்றி ஊட்டினாள். இரண்டும் போட்டிப் போட்டுச் சாப்பிட்டன. முத்து மனதில் அக்காளை மெச்சிக் கொண்டாள்.

மீனாள், வீட்டுக்குள்ளேயே இருப்பதற்குக் கணவனோடு வெளியே வர ஆசைப்பட்டு வந்துவிட்டாலும், சிந்தாவோடோ அல்லது அமிர்தாவோடும் கூட அவ்வளவு இயல்பாகப் பேசிக் கொண்டிருக்க இயலாமல், சிவநேசன் சென்ற வழியையே பார்த்திருந்தாள். அமிர்தா தான் இழுத்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். அடுத்தப் பத்து நாட்களில் அவர்கள் எங்கெல்லாம் செல்ல வேண்டும், எனச் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறித்து அமிர்தா கேட்கவும், சிந்தா தான் முக்கால் வாசி விளக்கினாள்.

வயலை பார்வையிட்டு வந்த ஆண்களிடம், அமிர்தா, " சிந்தா அக்காவுக்கு எல்லா விவரமும் தெரியுதே" எனச் சிலாகிக்கவும்.

" சுத்து வட்டார ஏரியாவுக்கு, அந்த மக்களைப் பழகனுமுன்ன நீங்க தாராளமா, எங்க சிந்தாமணியைக் கூட்டிக்கிட்டுப் போகலாம். அக்கம்பக்கம் பத்து ஊரு சனம், பாம்புகடின்டா, முதல்ல சிந்தாவுக்குத் தான் போன் போடும். நீங்க மூலிகை பன்னை போடும் முந்தியே, வீட்டைச் சுத்தி அதைத் தான் வளர்த்து விட்டிருக்கு. அதுனால, இதை முன்ன வச்சு பேசுனீகண்டா ஆளுக காது கொடுத்து கேப்பாக" என வேலு மனைவியின் பெருமை பேசவும், " அப்படின்னா, நீங்களும் எங்களோட வாங்க" என நீரஜ் , சிந்தாவை அழைத்தார்.

சிவநேசன், " இந்தக் கிராமத்துத் தலையாரியும், பிரசிடென்டும் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னா, ஏதாவது சாக்கு சொல்றானுங்க. " எனச் சொல்லவும்.

" அவுக எப்படி உங்களுக்கு உதவி செய்வாக. நீங்க சீமைக்கருவையை அழிச்சிட்டு, விவசாயம் பண்ணலாம்னு சொல்றீக. அவுக சீமைக்கருவ வெட்டி அனுப்புற காண்ட்ரேக்ட் எடுத்து வச்சிருக்காக. நீங்க முச்சூடும் அழிச்சுபுட்டீகண்டா அவுகளுக்கு வேலை, அவுக்கப் பொழைப்புக்கே இல்ல நீங்க ஆப்பு வைக்கிறீக " என வேலு கேட்கவும் தான் மற்றவருக்கு விசயமே புரிந்தது.

" சரி விடுங்க பார்த்துக்குவோம். " என்ற குமரன், உயர்மட்டத்தில், பெரியப்பா மகாலிங்கத்தை வைத்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் எனத் திட்டமிட்டான்.

இங்கே இவர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டிருக்க, இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிமூட்டம் போடும் கம்பெனியில், இந்த ஊர் பிரசிடென்ட் முனியாண்டி, தலையாரி சொக்கன், மற்றும் பெருமாயி மகன் சோமன் ஆகியோர், இதனை முளையிலேயே கிள்ள வேண்டும் என வட இந்திய முதலாளி தேவ்சந்த் சேட்டுடன் உட்கார்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

" ஐயா, நீங்க ஊம்னு ஒரு வார்த்தைச் சொல்லுங்க. அவுக கூட்டமே போட விடாமல் பண்ணிப்புடுறேன்" எனத் தலையாரி சொக்கன் சொல்லவும்,

" அது, நீங்கோ நினைக்கிற மாதிரி ஆசான் நஹி, அவங்களுக்குப் படா, படா காண்டேக்ட்ஸ் வச்சிருக்கு" என்றான் சேட்.

" அப்போ, கையைக் கட்டிக்கிட்டு சும்மா இருக்கச் சொல்றீகளா. பொழப்புக்கு வேற வழி இல்லாமல் தான், சீமை கருவையை வளர்த்து, வெட்டி நமக்குத் தர்றாக, இவுகளைக் கொஞ்சம் பேச விட்டோம், சனம் பூரா, அவுக பக்கம் சாய்ஞ்சுடும்" என ப்ரசிடென்ட் முனியாண்டி சொல்லவும்,

அதுவரை அமைதியாக இருந்த சோமன், “ கையைக் கட்டிக்கிட்டு இருக்க வேணாம், அவுக சீமை கருவையை வெட்டனுமின்னு சொன்னா, அது தான் நமக்குச் சோறு போடுது, அது இல்லையின்னா நீ போடுவியான்னு கேக்கச் சொல்லு. வருசத்துக்கு எம்புட்டு வருமானம் வருதுன்னும், அதை இல்லாத போயிடும், டவுனுக்காரவுக , பத்து நாள் கத்திட்டு போயிடுவாக, அவுகளை நம்பி உங்க பொழப்பு தனத்தையும் கெடுத்துக்கக் கூடாதுண்டு, யோசனையா சொல்லு. சீமை கருவைக்கு ஆதரவா நிறையச் சொல்லியிருக்காக , அதையும் அவுக பேசும் போது எடுத்து விடுங்க. நாமா கேக்குற கேள்விக்கு அவுக, பதில் சொல்ல முடியாத திணறனும். பிறகு என்ன செய்யறதுன்னு பாப்போம்” என அவன் வியாக்கியானமாகப் பேசவும், மற்ற இருவரும் தலையை ஆடி விட்டு, சேட்டிடம் மண்டையைச் சொரிந்து கொண்டு நிற்க, “ஆபீஸ் ரூம்ல காசு வாங்கிக்கோ” எனச் சேட்டு அனுப்பி விட்டான்.

சோமன், வெகு காலமாகாவே, இந்தச் சேட்டுடன் தான் இருக்கிறான், ஊருக்குள் ,அம்மா பெருமாயியைக் கூட எப்போதோ ஓர் முறை சென்று பார்ப்பவன், கரி மூட்டம் லோடு எத்திக் கொண்டு, பெரும்பாலும் வடக்கே பிரயாணத்தில் தான் இருப்பான்.

சிந்தாவிடம் அவன் முறை தவறி நடந்த பிறகு, அவன் அம்மாவே அவனைத் திட்டி தலை மறைவாய் இருக்கச் சொல்ல, சிந்தா மீது ஒரு கண் வைத்திருந்த அவனால் , அவளை அடையவேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் வேலுவை மனம் முடித்து அவனோடு குடும்பம் நடத்த ஆரம்பித்த சிந்தனை, வெளியின் மனைவியைத் தொட அவனுக்குத் தயக்கம் , பயம் வந்தது. அதன் பிறகு வடக்கத்திய பிரயாணங்களும் , உடல் பசிக்கு ரோட்டோர மங்கைகளுமாக , சேட்டுத் தரும் பணத்தில் தன வாழ்வை ஆனந்தமாக மாற்றிக் கொண்டான். இப்போது சேட்டின் தொழிலுக்கே ஆபத்து வருமோ, என அஞ்சி, தன் குயுக்தியை இதில் காட்டுகிறான்.

இரு தரப்பு மக்களின் வாழ்வாதாரம், அதையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய என்னும் தொண்டு நிறுவனம், இதனைச் சாத்தியமாக்க உழைக்கும் இளைய தலைமுறை, இதன் விளைவு எப்படி இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.




No comments:

Post a Comment