Saturday, 7 August 2021

சிந்தா- ஜீவ நதியவள் -8

சிந்தா- ஜீவ நதியவள் -8 

மேலப்பூங்குடி, பெரிய வீட்டில், ராஜேஸ்வரி அம்மாள், அகமும், முகமும் மலர நிறைந்த மகிழ்வோடு மகன் சிவநேசன், மருமகள் மீனாள் மற்றும் பேத்தி சிவகாமசெல்வி என்ற சிந்துஜாவை ஒன்றாகச் சேர்த்து நிற்க வைத்து, ஆலம் சுற்றி வரவேற்றார். மீனாள் திருமணம் முடிந்து மணமகளாக வந்து, இரண்டு நாள் தங்கியிருந்ததோடு சரி. அதன் பின் வந்ததே இல்லை.

" மீனா, வாத்தா வா. நீ வந்து தான், இந்த வீடே நிறையனும்." என இன்முகமாக அழைத்த மாமியாரை அதிசயமாகப் பார்த்தபடியே உள்ளே வந்தாள். ராஜேஸ்வரியைப் பற்றி அவளது அம்மா, வேதாவின் பார்வையே அண்ணி என்ற ஸ்தானத்தில் வைத்து, சற்றே குறை பேசியபடியே தான் இருக்கும். இவளுக்கும் மாமியார் என்ற ஸ்தானத்தில் அவர் மீது ஓர் பயம் இருந்தது. எனவே அவரது பாசமான அழைப்பை ஆச்சரியமாகவே பார்த்து வந்தாள். மகாலிங்கமும் , " வாம்மா, உடம்புக்கெல்லாம் நல்லா இருக்குல்ல. நீ எதுக்கும் கவலைப் படாத நம்மூர்ல வீசுகிற இயற்கை காற்றிலேயே உன் உடம்பு தேறிடும். " என ஆதரவாகப் பேசி வரவேற்றார். வேலைக்காரர்கள் அவளது உடைமையை மாடியறைக்கு எடுத்துச் சென்றனர்

ராஜேஸ்வரி, மருமகளை அழைத்து, சாமியறையில் விளக்கேற்றச் சொன்னார். வீட்டில் சமையலுக்கு இருக்கும் சாமந்தியம்மாள், மேல்வேலைச் செய்யும் அல்லியை அறிமுகப் படுத்தியவர். அவளை அந்த வீட்டு எசமானியாக, உரிமை பாராட்டவும் , மீனாவுக்கு மனதில் ஓர் மகிழ்வு வந்தது.

" மீனா, அத்தைச் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோ. காலையில குளிச்சு முழுகி வந்து தினம் சாமி விளக்கு ஏத்திடனும். நல்லா அழகா சீலைக்கட்டி , தலை சீவி பூ, பொட்டு வச்சு, லட்சுமி கடாட்சமா இந்த வீட்டில வளைய வந்தையினாலே போதும். உன் புருஷன், புள்ளையைப் பார்த்துக்க. மத்தது எல்லாம் படிப்படியா கத்துக்கலாம். சரியாடா" எனப் பதின்மவயது பிள்ளைக் கேட்பது போல் கேட்கவும், " சரிங்கத்தை. " என் தலையாட்டினாள் மீனாள் .

இரவு உணவுக்குப் பின், வழக்கம் போல் சிந்துஜாவை ராஜேஷ்வரி தனது அறையில் தொட்டிலில் போட போனார். சிவநேசன், " அம்மா, எங்க ரூம்ல பாப்பாவைத் தூங்க வச்சிக்குறோம்" எனத் தூக்கிச் சென்றான். சிந்துஜாவும், அப்பாவோடு நன்றாக ஒட்டிக் கொண்டு விளையாட மீனாள் பார்த்துச் சிரித்தபடி நின்றாள். மாடியறைக்கு வரவும், " பாப்பாவைப் பிடிச்சுக்கோ. நான் தொட்டிக் கட்டுறேன்" என மகளை மனைவியிடம் தந்தான் நேசன்.

" மீனு, சிவகாமி உன் மகள், நீ எப்படி அதைக் கீழே போடுவ. நீ நல்லா வச்சுக்குவ " என அவளுக்கு நம்பிக்கை அளித்து மகளைத் தந்து விட்டு அவன் மனைவியிடம் ஒரு பார்வையோடே தொட்டிலைக் கட்டினான். மீனாள் மகளை ஒரு வித பயத்தோடே பிடித்திருந்தாள். அதுவும் சேட்டைக்கார சிட்டு, இப்போதெல்லாம் உடம்பை வில்லாக வளைத்து தனது வித்தையெல்லாம் காட்ட ஆரம்பித்து இருந்தது. "அத்தான், பாப்பா வளையுது " என மக்களின் செயலை பீதியோடு சொன்னவளை, " உன் மகள் தானே, சமாளி, எங்க ஊர்லே இரண்டாம் கிளாஸ் படிக்கிற புல்லை கூட ,தம்பி, தங்கச்சியைத் தூக்கிட்டு திரியுங்க " எனக் கேலியாகப் புன்னகைத்தான் சிவநேசன். "நானும் வச்சுக்குவேனே, அம்மா தான் என்னை நம்பி தரமாட்டாங்க" எனப் புகார் பட்டியல் வாசித்தாள் மீனு.

"இனிமே யார் என்ன சொல்லுவா, உன் புருஷன், உன் மகள், எங்களை வையவோ, கொஞ்சவோ உனக்குப் பூரண உரிமையிருக்கு " என நேசன் கண் சிமிட்டவும் ,செங்கொழுந்தனால் மீனா.

சிவநேசன், மகளோடும் மனைவியோடு மாகப் பேசி, விளையாடி அவர்கள் குடும்பச் சித்திரத்தைத் தீட்டியவன், மகளை மனைவி மடியிலேயே படுக்க வைத்து, பாட்டில் பாலை அதற்குப் புகட்ட வைத்தான். சிவகாமி, சிந்தாவிடம் குடிக்கும் ஞாபகத்துக்கு அவள் மார்பில் முண்டியது. மீனாவுக்கு , மகளுக்குத் தாய்ப்பால் கூடக் கொடுக்க முடியாமல் போனோமே என முதல் முறையாக மனதில் சங்கடம் தோன்றியது.

"மீனு, உன் மகள் உன்கிட்ட தான் இப்படிப் பண்ணுது. அதுக்குத் தெரியுது பாரேன்" என வியந்தவனாகச் சொல்லவும், அவளும் வருந்தினாள்.

" அதெல்லாம் நினைக்காத. இப்போலிருந்து, உன் மகளுக்கான எல்லா வேலையும் நீயே செய்" என உற்சாகப் படுத்தியவன், மகளுக்குத் தூக்கம் வரவும், தொட்டிலில் போட கத்துக் கொடுத்தவன், அவளைத் தாலாட்டு பாடச் சொன்னான்.

" அத்தான், எனக்குத் தாலாட்டு பாடத் தெரியாது" எனத் தயங்கியபடியே சொல்லவும்.

" முருகன் பாட்டு, சொல்லச் சொல்ல இனிக்குதடா , பாடுவியே அதைப் பாடு" என அவனே ஒருவரி எடுத்துக் கொடுக்கவும், மீனா மெல்லிய குரலில் பாடியபடியே ஆட்டினாள். நேசன் கட்டிலில் படுத்துக் கொண்டு, மனைவியையும், அவள் பாடலையும், மகளை அவள் ஆட்டுவதையும் மனநிறைவோடு ரசித்துக் கொண்டிருந்தான். காதில்" எப்படியாப்பட்ட பொம்பளையையும், புருஷனோட அன்பு மாத்திருங்க ஐயா" என்ற சிந்தாவின் குரல் ஒலித்தது. ' உண்மை தான், இந்தப் பத்து நாள்ல, மீனுக்கிட்ட எவ்வளவு மாற்றம்' என மனதில் மனைவியைச் சிலாகித்தான்.

சிவகாமி தூங்கவும், படுக்கைக்கு வந்த அமர்ந்த மனைவியைப் படுத்த வாக்கில், இடையோடு அணைத்தவன் ," மீனூ, நீ பாப்பாவுக்குச் செய்யறத பார்த்து எனக்கு ரொம்பச் சந்தோஷம். நீ ஆட்டவும் உடனே தூங்கிடுச்சு. நாங்க எல்லாம் ஆட்டினா, இராத்திரி பூரா ஆட்டச் சொல்லும். அதுவும் அவுக அம்மாவைத் தான் தேடியிருக்கும் போல " எனச் சிவநேசன் சொல்லவும், மீனா விழி விரித்துப் பார்த்தவள்,

" நீங்க எனக்காகச் சும்மா சொல்றீங்க" என்றாள். " அப்ப நான் பொய் சொல்றேனா" என அவன் கோபிக்கவும், பயந்தவளாக ," நான் எப்ப அப்படிச் சொன்னேன். எனக்காக அதிகமாச் சொல்றீங்க" என்றவள், கணவனாக நேசனின் தேடலில் உடல் சிலிர்த்து நெளிந்தாள். அவன் கையைப் பிடித்துக் கொண்டு, " அத்தான் கூச்சமா இருக்கு" என முணங்கவும்,

" ஏன் , நான் தொட்டா பிடிக்கலையா. வேண்டாம்னா விடு. " என அவன் நகர்ந்து திரும்பிப் படுத்துக் கொள்ளவும் , சிறிது நேரம் மௌனமே நிலவியது. அவளின் லேசான விசும்பலில் திரும்பியவன், " மீனூ, இப்ப எதுக்கு அழற" எனச் சட்டென எழுந்து அவள் முகத்தைக் கையிலேந்திக் கொண்டு கேட்டான்.

"அத்தான், எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். நீங்க கோவிக்காதீங்க" என அவள் கண்ணீர் விடவும், அவளை அணைத்துக் கொண்ட நேசன், " அத்தானை பிடிக்கும்னு அழுதிட்டே சொல்லுவாங்களா. யாராவது பார்த்தா, நான் உன்னைக் கொடுமைபடுத்துறேன்னு நினைச்சுக்குவாங்க. " என்றவன், அவள் கண்ணீரைத் துடைத்து , " என் மீனுக்குட்டிக்கு, என்னை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியலையே, நீ என்கிட்ட ஒரு தடவை கூடச் சொன்னதே இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடி முகத்தை மறைச்சுக்குவ. கல்யாணத்துக்கு அப்புறம், மனசையும் மறைச்சுக்கிட்டா எனக்கு எப்படித் தெரியும். சரி போன போகுது, மாமா மகன்னு பெரிய மனசு வச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சேன்" எனச் சிவநேசன் சொல்லவும்.

" நான் உங்களை விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க தான் என்னைப் பிடிக்காமல் வேண்டா வெறுப்பா கட்டிக்கிட்டிங்க" என அவள் தைரியமாகச் சொல்லிவிடவும். " அப்படினு யார் சொன்னா" எனக் கேள்வி எழுப்பவும், "கங்கா தான் சொல்லுச்சு. உங்களுக்கு வேற ஒரு பொண்ணு மேல நோக்கமிருக்குன்னு" என மீனா பதில் தந்தாள் .

" அதுக்கப்புறமும் எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட " என அவன் விடாமல் கேட்கவும்,

" அப்போ உங்களுக்கு, அந்தப் பொண்ணைத் தான் பிடிக்குமா" எனப் பாவமாகக் கேட்டவளை, பார்த்திருந்தவன் , " நம்மகிட்ட பண்ணைக்கு வழி வழியா வேலை செய்யறவுங்க, நான் பார்த்து வளர்ந்தப் பொண்ணை, ஒருத்தன் நாசமாக்கப் பார்க்கிறான். ஒரு ஆம்பளையா, அவங்களோட பாதுகாவலனா, அந்தப் பொண்ணோட மானத்தைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையா, இல்லையா" என அவளிடம் வினவியவன், சிந்தாவைப் பற்றி எடுத்துக் கூறி உண்மையைச் சொல்லவும், மீனாவின் கண்களில் கண்களில் கண்ணீர் தளும்பியது.

" அத்தான், நான், பாபாவை கீழே போடாமல் வச்சுக்குவேனா" எனச் சந்தேகம் கேட்டாள்,குழந்தையைப் பெற்ற இருபத்து மூன்று வயது தாய். ஏனெனில் மீனாள் எப்போதும் மோப்பம் குழையாத அனிச்சமாக வளர்ந்தவள், அதனாலேயே அவளது தாய் தன் அண்ணன் மகனுக்கே மணம் முடித்து , தன்னோடே வைத்துக் கொண்டார். சிவநேசன் மீது பிரியமிருந்தும் ,கங்காவின் கவனம், கவனம் என அண்ணனை வளைக்கவென மீனாவிடம் பேசிய அவளது மொழிகள், இவளுக்குள் மன உளைச்சலையே தந்தது. அதில் மசக்கையும் சேரவும் உடல் சோர்ந்தாள். ஏற்கனவே நலுங்கிய உடல்நிலை உடையவள் மேலும் பாதிக்கப்பட வேதா மகளைத் தாங்கத் தான் செய்தார். பிள்ளைப் பெற்றது முதல் , மாத்திரை மருந்துகளால் பாலும் சுரக்காமல் போக, "உன்னால தூக்க முடியாது, நீ பாபாவை கீழே போட்டுருவ, தலை நிக்காது, சேர்த்து பிடிக்கணும், நான் பார்த்துக்கறேன்" எனச் சொல்லியே வேதா மகளை , பேத்தியைத் தூக்கவிடாமலே தானே எல்லாம் செய்தார். அதனால் தான் அவன் சிவநேசனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு நின்றாள்.

" பாவம் அத்தான், அந்தப் பொண்ணு" என அவளும் பரிந்து பேசினாள்.

" நான் அன்னைக்கு, சிந்தாவோட மானத்தைக் காப்பாற்ற என்னோட சட்டையைக் கழட்டித் தந்தேன். ஆனால் அது என் சட்டையைப் போட்டதே அதுக்கு மானக் கேடா போச்சு. ஒரு உணர்வுள்ள மனுசனா, என்னை அது பாதிக்காத நீயே சொல்லு" என அவளிடமே கேள்வி பதிலாகக் கேட்டு அவளைத் தெளிய வைத்தான்.

" அத்தான், அந்தச் சிந்தா பாவம் தானே. அதுக்காக எப்படி முரடனா இருந்தவரை கட்டிக்கிச்சு. பாவம் என்ன கஷ்டபடுதோ" என மீனு கவலைப்படவும்.

" நீ ரொம்பத் தான், சிந்தாவைப் பத்தி கவலைப் படாத, அது , அது மச்சானை காதலிச்சிக்கிட்டு இரண்டு புள்ளையைப் பெத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கு. நான் தான் கஷ்டப் படுறேன். என் பொண்டாட்டி என்னைத் தொட கூட விடமாட்டேங்குறா. ஒரு ரொமான்டிக் லுக் இல்லை, கிஸ் இல்லை, ஐ லவ் யு இல்லை. உன் அத்தான் தான் காஞ்சு போய்ப் பாவமா இருக்கேன். ஊருக்குள்ள பலபேரு என்னைப் பரிதாபமா பார்க்குறாங்க" என ஏற்ற இறக்கத்தோடு, தான் சொன்ன வசனுங்களுக்கு ஏற்ப மனைவியையும் தொட்டுப் பேசவும், செங்கொழுந்தானாள் மீனாள். " போங்கத்தான்" என அவன் மார்பில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். சிவநேசன் மனம் நிறைந்து போனான்.

அண்ணன் சிவநேசன், மனைவியோடான மனம் திறந்த பேச்சில் நிறைந்திருக்க, முன்னறையில் குமரனின் மனமோ குமுறிக் கொண்டிருந்தது. " இந்தக் கங்கா அக்கா வாயில் வார்த்தையே விசமா தான் வருது. அவளை என்ன பேசிடுச்சு. இனி அவள் என் மூச்சிலையே முழிக்க மாட்டா. '" என வாய் விட்டே புலம்பிக் கொண்டிருந்தான்.

காலையில் முத்துவை ஆசையாக அழைத்துச் சென்றவன், அவள் பாந்தமாய்ச் சிந்துஜாவைப் பார்த்துக் கொண்ட பாங்கில், தன் குழந்தையோடு, முத்துவை மனையாளாகக் கற்பனையில் கண்டே மகிழ்ந்தான். முத்துவிடமிருந்து இறங்க மறுத்த அண்ணன் மகளை, வலுக்கட்டாயமாகப் பிரித்து அத்தை வீட்டில் இறக்கி விட்டு, பரிட்சை எழுதும் காலேஜில் இறக்கி விட்டு வந்தான்.

அப்போதும் மகேஷ்க்கு வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தவன், " உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை. சீக்கிரம் முடிச்சிட்டு வா. நான் வெளியே வெயிட் பண்றேன். மகேஷ் வரும் முன்ன ஒரு விசயம் பேசனும்" என்றவனை முறைத்து விட்டு வெளியே வந்தவள், தனது பரிட்சையை நன்றாகச் செய்து, மகேஷ் வந்த பின்னரே ஹாலை விட்டு வந்தாள். அதற்கே குமரன், முத்துவை முறைத்துக் கொண்டிருக்க , அவள் நகை முகமாகவே இருந்தாள்.

ஆனால் மதியம் சாப்பிட அத்தை வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது, கங்கா முத்துவை நடத்திய விதத்தில் அண்ணன் தம்பி இருவரும் கொதித்துப் போனார்கள். குமரன் சண்டைக்கு வரவும், " ஏன் அவ அப்பாவுக்கு, இப்படிக் கீழ உட்காரவச்சு தான் னே சோறு போடுவோம். ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாளும் ராஜாளி பறவையாக முடியாது. அது அதுக்குன்னு ஒரு பொறப்பு இருக்கு " என்றவள், முத்து பசியில்லையென மறுத்து, வீட்டின் வராண்டாவில் சென்று அமரவும், மகேஷ் வந்து மன்னிப்புக் கேட்டாள்

" பரவாயில்லை மகேஷு, நான் முன்னாடி கிளம்புறேன். நீ சின்னைய்யா கிட்டச் சொல்லிடு" எனத் துக்கம் தொண்டையை அடைக்கச் சொல்லவும், குமரன் அங்கே வந்தவன், " முத்து, நீ வா. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். அண்ணன் அண்ணியையும், மகேஷையும் கூட்டிட்டு வரட்டும்" என அவனும் சாப்பிடாமல் கிளம்பவும், ஓடி வந்த கங்கா, நாத்தனார் கிளம்பும் போது எந்தத் தகராறும் இருக்கக் கூடாது என நினைத்தவளாக, முத்துவை சாப்பிட அழைக்க அவள் வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

சிவநேசன், அங்கு வந்தவன், " குமரா, இவளையெல்லாம் எந்த ஜென்மத்திலையும் மாத்தமுடியாது. நீ முத்துவை கூட்டிட்டுப் போய், ஹோட்டல்ல சாப்பிட்டு வா. நான் அதுக்குள்ள கிளம்பி இருக்கேன்" என அனுப்பவும் முத்து அதற்கும் மறுத்தவள், " இல்லங்கைய்யா, நீங்க இருந்து வாங்க. நான் பஸ்ஸில காலேஜ்க்கு போய் வந்து தான் இருக்கேன். நானே போயிடுவேன். " என்றாள்.

" அதெல்லாம், அக்காளும் தங்கச்சியும் எல்லாம் தெரிஞ்சவுக தான். நீ தராதரம் இல்லாம இறங்காத" எனக் கங்காப் பேசவும், அவளிடம் திரும்பி ஒரு விரல் நீட்டி ரௌத்திரமாக எச்சரித்த சிவநேசன், " இத்தோட நிறுத்திக்க, இல்லைனா தொலைச்சுப் புடுவேன். அவ்வளவு தான் உனக்கு மரியாதை " என மிரட்டவும் அதிர்ந்து அப்படியே நின்றாள்.

அங்கிருந்து தப்பித்தால் போதுமெனக் கிளம்பிய முத்துவை, மகேஷ், குமரனோடு அனுப்பி வைக்க, என்னவெனக் கேட்ட மாமியாரிடம், "ஏதோ வாங்கனும்னு போகுதுங்க " எனச் சமாளித்தான். ஹோட்டலிலும் பெயருக்கு ஒரு தயிர்ச்சாதம் மட்டும் வாங்கிக் கொண்ட, முத்து வாடிய முகத்தோடே அமர்ந்திருக்க மகேஷ் தான் சமாதானம் செய்தாள். குமரனால் தனித்து எதுவும் பேச முடியவில்லை . திரும்பி வரும் போதும், இங்கு இறங்கிய பின்னும் அவசரமாக விடைபெற்று ஓடிவிட்டாள். அவள் வீட்டுக்குத் தின்பண்டங்களைக் கொடுக்கச் சென்று வந்தவனுக்கு அவளைக் காண இயலாமல் போனதே மனதை அறுத்தது.

அதே இரவில், இன்று மாமனை வெளியேற்றி விட்டு, முத்து அக்காளின் அறையில் குடி புகுந்தாள். அவ்வப்போது, தலைவலி , வயிற்று வலி என வரும் போது, இது நடப்பது தான். அந்த நேரத்தில் வேலு நொடித்துக் கொண்டே, மனைவியை , கொழுந்தியாளுக்கு விட்டுக் கொடுத்துச் செல்வான்.

முத்து, தனக்குத் தாயின் அரவணைப்புத் தேவைப்படும் நேரத்தில் அக்காவைக் கட்டிக் கொள்வாள். இரவு அதே போல், சிந்தாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தவளை, " முத்து என்னடி ஆச்சு, பரிட்சை நல்லா எழுதலையா. " எனவும் அவள் இல்லையெனத் தலையாட்ட, " அவுக வீட்டுக்கு போனீங்களா, கங்கா எதுவும் சொன்னாளா" எனவுமே மடைத் திறந்த வெள்ளமாகக் கண்ணீர் உகுத்தவள்.

" அசிங்கமா பேசுறாங்கக்கா. “ என்றவள் கங்காவின் வார்த்தைகளைப் படித்தாள் . குமரன் மகேஷோடு ,தயங்கியபடியே உள்ளே வந்த முத்துவை, சிவநேசன் வரவேற்க, “அய்யனார் மகளா, உங்க அக்கா அம்மா போகவும், படிப்பை நிறுத்திட்டா, அவ ஆசைக்கு உன்னைப் படிக்க வைக்கிறாளாக்கும்” என வேதா , கங்காவின் மாமியார் நிறுத்திக் கொள்ள, மகேஷ் , முத்துவை உள்ளே அழைத்துச் சென்றாள்.

சிந்துஜா , முத்துவைப் பார்க்கவும் தாவி கொண்டு வந்தது, அதைப் பார்க்கவுமே கங்காவுக்குப் பொசுபொசுவென வந்தது, போதாத குறைக்குக் குமரன் வேறு வந்து அவளருகேயே நிற்கவும் ,முத்துவை ஏதோ உதவிக்கு அழைப்பது போல் அழைத்துச் சென்றவள், தனியாக அடுப்படியில் வைத்து,

“இங்க பாருடி, நீ காலேஜ் போயி படிக்க வேணா செய்யலாம், ஆனால் மச்சு வீட்டுக்கு வரணுமுன்னு கனவு காணாத, உங்க அக்கா என் அண்ணனை மடக்கப் பார்த்தா, அது முடியலை, நான் நடக்க விடலை. இப்ப நீ என் தம்பியை மடக்கப் பார்க்குறியா. அதெல்லாம் கனவுளையும் நடக்காது. அவனுக்கு வைப்பாட்டியா இருக்கக் கூட நீ லாயக்கு இல்லை “ என வார்த்தைகளைத் திராவகமாகக் காட்டியவள், “இரு உன் இடம் எதுன்னு, அவனுக்கும் உறைகின்ற மாதிரி நான் காட்டுறேன்” என்றவள் தான் , பின்னர் முத்துவை மட்டும் அடுப்படி வாசலருகில் சாப்பாடு போட்டு உட்காரச் சொல்ல, அதைத் தான் குமரனும் மற்றவரும் பார்த்தனர்.

இதனைச் சொல்லி அழுத முத்து, “அக்கா, நம்ம என்னக்கா அவுகளுக்குத் தாழ்ந்து போயிட்டோம். இன்னைக்குப் பெரியம்மா கூட, சக மனுசியா அவுக சிட்டுவுக்குத் துணி மாட்ட உதவிக்குத் தான் கூப்பிட்டாக, இவுக ஏன்கா இப்படிப் பேசுறாக . அன்னைக்கு நீ எவ்வளவு வேதனைப் பட்டுருப்பேன்னு எனக்கு இன்னைக்குப் புரியுதுக்கா “ என அழுத்தவளை, எழுந்து அமர்ந்து மாடி தாங்கிய சிந்தா , தானும் கண்ணீர் உகுத்தவளாக,

“உன்னைய , அவுகளோட அனுப்பியிருக்கவே கூடாதுடி, என் தப்பு தான், பரீட்சைக்குத் தானே போறேன்னு நினைச்சேன்,இந்த கங்கா வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும்னு நினைச்சே பார்க்கலை “ என நொந்தவள்,

“இதுக்கெல்லாம் அழுவாதடி முத்து, நம்ம என்ன அவுக வீட்டில போயி காஞ்சி குடிக்கப் போறமா , இல்லா சம்மந்தம் கலக்கப் போறமா , வேண்டாத கழுதையை விட்டுத் தள்ளு. அதுங்க அப்படித்தான் பேசும். இன்னுமே சாதியைக் கட்டிக்கிட்டு அழகுற தற்குறீங்க. நீ பெரிசா எடுத்துக்காத. “ என அறிவுரை சொல்லவும்.

“இல்லக்கா, நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்லுவேயில்ல, இனிமே என் மனசை அலைபாய விடமாட்டேன். “ என முத்துத் தன்னை மறந்து சொல்லவும், அதைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாத சிந்தாவுக்கு மனதில் கருகி என இருந்தது, ‘ இனிமே, மனசை அலைபாய விட மாட்டேன்னு சொல்றாளே, யாரை மனசில நினைச்சா’ என யோசனை ஓடியது. அதோடு குமரன் பின் மாலைப் பொழுதில் வந்து சென்றதும் நினைவில் வர சிந்தாவுக்குக் கவலைப் பிடித்தது, இருந்தாலும் தங்கை மனதை படிப்பில் திசை திருப்பும் வழியைக் கண்டு பிடித்துப் பேசினாள் .

“நல்லா படிச்சு, நீ பெரிய உத்தியோகத்துக்குப் போகணும், பெரிய ஆபீசர் ஆயிட்டேன்னு வையி ,இதே ஆளுங்க எங்க ஊர் காரவுகன்னு , இளிச்சுகிட்டு வந்து நிக்குங்க. அந்தக் கருப்பசாமி அண்ணனை பார்த்தையிலே, நல்லா படிச்சு, டெல்லியில வேலையில இருக்காக,அவுகளுக்கு எம்புட்டு மதிப்பு” என எடுத்துச் சொல்லவும்

“ஆமாக்கா , அந்த அண்ணேன் பெரிய போஸ்டிங்கல இருக்காருன்னு , ஐய்யரூட்டுகாரவுகளே பொண்ணு கொடுத்து, இங்க வந்து கல்யாணம் முடிச்சுப் போனாகளே” எனப் பின் பாட்டுப் பாடினாள் முத்து.

“அடியேய், நீ படிக்கிற வேலையைப் பாருடினா, கல்யாணத்தைப் பத்தி பேசுற. வேணுமுன்னா சொல்லு, நம்ம ஆளுகலையே படிச்சு பெரிய ஆபீசர் மாப்பிள்ளையைப் பார்க்கச் சொல்லுவோம், நீயும் கங்கா வீட்டுக்கு பக்கத்திலையே, அவளை விடப் பெரிய வீடு கட்டி குடியேறு “ எனச் சமாதானம் சொல்லவும்.

சிரித்துக் கொண்ட முத்து, “போக்கா, அவ சங்காத்தமே வேண்டாம். மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம். நான் பெரிய ஆளா வந்து காட்டுறேன் “ என உறுதி எடுத்தவள், “அக்கா, எங்க காலேஜ் மேடம் ஒருத்தவுக, சென்னையில, கோயம்புத்தூர்ல எல்லாம் நிறைய நல்ல, நல்ல படிப்பு இருக்குன்னு சொன்னாக. நான் விசாரிக்கிறேன், என்னை ஹாஸ்டெல்ல சேர்த்துப் படிக்க வைக்கிறியா “ எனக் கேட்டாள் .

“இவ்வளவு தானடி, ஏன்னா ஏதுன்னு விசாரி, மச்சான் இருக்கு, நான் இருக்கேன், எந்த ஊரா இருந்தாலும் விசாரிச்சுக் கொண்டு போயி சேர்த்து விட்டுடுறோம். நீ பெரிய ஆபீஸரா வந்தா எனக்கு அத விட என்ன பெருமை வேணும்” எனத் தங்கையைத் தாங்கிப் பேசியவள் ,அவளைப் படிக்க வைக்க வாக்கும் தந்தாள்.

முத்து அக்காவின் பேச்சில் நிம்மதியாய் கண்ணுறங்க, தமக்கை மனம், தாய் மனமாய் , தங்கைக்காகத் தவித்தது. என்ன செய்வாள் சிந்தா பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment