சிந்தா- ஜீவநதியவள்-12
ஒரு விசயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனில், அதற்கான மெனக்கெடல் இருக்க வேண்டும். நல்ல விசயத்துக்காகச் செய்யும் முயற்சிகள், சில காலம் எடுத்தே நிறைவேறும், அதுவரை அதற்கான காத்திருப்பும், பொறுமையும் அவசியம். இதனை நன்கு உணர்ந்தவர் வேர்கள் அமைப்பை நடத்தும் இந்த ஜோடிகள்.
கிராம மக்களின் கவனத்தை ஈர்க்க, தங்கள் பிரச்சாரங்களில், புரொஜக்டர்கள் வைத்துப் படக் காட்சிகளாகவே விசயத்தை அவர்கள் மனதில் பதிய வைக்க முயல்வார்கள். அதே போல், தங்கள் அமைப்பின் பெயர் தாங்கிய காகித விசிறிகள், அவர்களது மற்ற தயாரிப்பு பொருட்களையும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கி, பொது மக்களைக் கவர்வார்கள்.
குமரன், " முந்தி காலத்தில நாடோடிகள், பெட்டி, படுக்கையோட போற மாதிரி, நீங்களும் செட்டப்பா தான் போறீங்க" எனக் கேலி செய்யவும், "அடுத்து நீயும் இதேமாதிரி சுத்த வேண்டியது தான், உன்னை மட்டும் விட்டுடுவோமா" என அமிர்தா பதில் தரவும், "அதுக்குத்தான், நமக்கு ஏத்த ஜோடியா வேணுமுன்னு முயற்சி பண்றேன், நீ தேத்தி விடு " என்றான் குமரன்.
"எது எப்படியோ, ஆசான் கிட்ட அடிவாங்கிக் குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்ட" என அமிர்தா கேட்கவும், "அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார், இதெல்லாம் நன்றி கடன் , திருப்பித் தரணும், என்ன ஆசானே சரிதானே" எனக் குமரன் நீரஜை கேட்கவும்,
" அப்பா சாமிகளா,எனக்கு அதில எல்லாம் திறமை பத்தாது, எதோ நீ இறுக்கப் போயி, இன்னைக்குக் குடும்பஸ்தனா இருக்கேன். நீயாச்சு, உன் அம்மிக்கல்லு ஆச்சு, என்னமோ பண்ணுங்க, நாம செய்யிற காரியத்துக்குத் தடை வராகிக் கூடாது ,அதை மட்டும் பார்த்துக்குங்க" என அவரும் நாசூக்காக ஒரு போடு போடவும்.
"கிழவா, உன்னைத் தெரிஞ்சு பேசுறார் டா. " என அமிர்தாவும் வம்பு பேச, நீரஜ் இருவரையும் விளையாட்டுத்தனத்தை விட்டு மும்மரமாக இதில் இறங்க வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்தவர்," விடுதலைப் போராட்டத்துக்குக் குறைஞ்சது இல்லை, இந்த விவசாயப் புரட்சி. அதுலையாவது கண்ணுக்கு தெரிஞ்ச எதிரி இருந்தான். இதில் எதிரி மக்களுடைய சிந்தனை தான்" என, அன்றைய கூட்டத்திற்கான க்ளிப்ஸ்ஸை சரி பார்த்துக் கொண்டார்.
அமிர்தா, குமரனிடம் முத்து இயல்பாக வரப்போக இருக்கட்டும், அவளுக்கான இடம் கொடுத்து சிறிது காலம் பொறுமை காக்கவும், அவன் தனது வேலைகளை அவளிடம் காட்டக் கூடாது எனவும் கண்டிசன் போட்டு விட்டாள். குமரனும் அவர்களது வேலை கெடக்கூடாது, என அடக்கியே வாசித்தான். சிவநேசன் , குமரன் ஏற்பாடுகளைப் பார்க்க மற்றவருக்கு முன்னாள் சென்றிருந்தனர்.
அமிர்தா, பெரிய வீட்டின் சுற்றுக்கட்டு முற்றத்திலிருக்கும் திண்ணையில் அமர்ந்து, முத்து, சுப்பிரமணி, நான்கு வயது சத்தியமூர்த்தி ஆகியோரையும் தனது பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, அவர்கள் செய்ய வேண்டியதை விளக்கிக் கொண்டிருக்க , அதனைப் பார்த்து "இதில இவ்வளவு இருக்கா" என வியந்தார்கள்.
சுப்பிரமணி ஐடி படித்தவனாதலால் , ஒளித்திரை அமைப்பது, ப்ரொஜக்டரை இயக்குவது போன்ற விசயங்களுக்கு உதவிக்கு வைத்துக் கொண்டனர். அமிர்தாவுக்கு முழு நேர உதவியாளராக முத்துவை வைத்துக் கொண்டாள். வயல் வேலைக்குச் செல்லும் மக்கள், சென்று வந்த பிறகு வர ஏதுவாக ஆறுமணியளவில் சிறிய மைக் செட் எல்லாமே செட்டப்பாக வந்திருந்தனர்.
ராஜேஸ்வரியைத் தவிர, மீனாளும் கூடக் கூட்டத்துக்குக் கிளம்பினாள். மருமகளை நான்கு பேர் பார்க்கட்டும் என மகனை அழைத்துச் செல்லச் சொல்லியிருந்தார். ஆனால் சிவநேசன் வேலையாக அலைவதால் முத்துவிடம், மீனாளை அழைத்து வரும் பொறுப்பையும் ஒப்படைத்தான். ராஜேஸ்வரியும் முத்து இருக்கும் பக்கத்திலேயே மீனாவை அமர்த்திக் கொள்ளச் சொன்னார்.
முத்துவை தனியாக அழைத்த ராஜேஸ்வரி, " உங்க அக்காவை நான் வரச்சொன்னேன்னு சொன்னியா" எனக் கேட்கவும்.
" நீங்க எங்க வரச் சொன்னீக, அது வரமாட்டேங்குதுன்னு வையத்தான் செஞ்சீக" என வம்பாகச் சொல்லவும். அவளை முறைத்தவர்,
" ஏன் உங்க அக்காளை வீட்டுக்கு வந்து வெத்தலை பாக்கு வச்சு அழைச்சா தான் வருவாளாக்கும். ரொம்பத் தாண்டி ஏத்தமா போச்சு" என நொடிக்கவும்,
" அது வரலைனா விடுங்களேன். நான் தான் வரேன்ல. " என அக்காவுக்கு வக்காலத்து வாங்கவும். அவளை முறைத்த ராஜி, " நானும் மானங்கெட்ட தனமா, ஐஞ்சு வருஷமா, ஆடி வெள்ளி, தை வெள்ளிக்குத் தாம்பூலம் வாங்க வரச் சொல்லி, ஆளு மாத்தி ஆள் விடுறேன். பார்க்குறேன்டி, எத்தனை நாளைக்கு அவளும் ரோசமா இருக்கா. இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்காமல் இருக்கான்னு பார்த்திடுறேன்" என முத்துவை கூட்டத்துக்கு அனுப்பி விட்டுத் தன்னைப் போல் புலம்பிக் கொண்டிருந்தார்.
சமையல் வேலை செய்யும் சாமந்தியம்மாள், " ஏக்கா, அவ தான் அம்புட்டு ரோசமா இருக்கான்னு தெரியுதுல்ல, நீங்க ஏன் விடாம கூப்புடுறீக. அந்தக் கழுதைக்குக் கற்பூர வாசனைத் தெரியலை. இதுக்குக் குறை பட்டுக்காதீக" என அவர் சமாதானம் சொல்லவும்.
" அவள் வாசம் தெரியாதவ இல்லை சாமந்தி. என் வீட்டுக்கு வரம் கொடுக்கிற அழகாயி. நீயே சொல்லு, ஒரு கன்னிப் பொண்ணு, நம்ம வீட்டிலிருந்து பழிச் சொல்லோட போனது. அறிஞ்சோ அறியமலோ, அதுக்கு நம்ம குடும்பம் தான் காரணம். அது என் மனசை உருத்திக்கிட்டே தான் இருக்கு. உனக்குத் தெரியாதது இல்லை, பெண் பாவம் பொல்லாதது. அவள் மனசால எம்புட்டு நொந்தாளோ, அதுக்குக் காரணமானவுகளும் அனுபவிப்போமுல்ல. அம்புட்டு நோவு என் வீட்டு பொண்ணுங்களும், அனுபவிச்சிருக்கு. இது மேலோட்டமா பார்த்தா தெரியாது. கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆச்சு, இன்னும் கங்கா வயித்தில ஒரு புழு, பூச்சி இல்லை" என அந்தப் பெரியவீட்டுக்காரம்மா, ஒரு அம்மாவாக வேதனைப் படவும்.
" திட்டு முறைப்பாடு இருக்கும், சிந்தா உன் புள்ளைகளுக்குச் சாபம் விட்டிருப்பான்னு நினைக்கிறியாக்கா. அவள் அப்படிப் பொண்ணு இல்லை" எனச் சாமந்தியும், சிந்தா குணத்துக்குச் சான்றிதழ் தர , ராஜி சட்டென மறுத்துப் பேசினார், " சிந்தா நல்ல மனசுக்காரி. அவள் சாபம் விட மாட்டா . ஆனால் சொல்லி அழ ஆத்தாளும் இல்லாமல், அவ என்ன வேதனைப் பட்டிருப்பா. அடுத்த நாள் ரயில்ல விழப் போயிருக்கா சாமந்தி. " என ராஜி கண்ணீர் நீர் வடியச் சொல்லவும்,
"அடியாத்தி" எனச் சாமந்தியே நெஞ்சில் கை வைத்தவர், உனக்கு எப்படிக்காத் தெரியும்" என அவர் கேட்கவும்,
" நேசன் தான் சொன்னான், இப்ப தம்பி ஊருக்குப் போகும் முன்ன, சம்சாரத்தைக் கவனிச்சிக்கச் சொல்லி புத்தி சொல்லி, புருஷன் அன்பு இருந்தா போதும், எப்படியா பட்ட பொம்பளையும் குணமாகிடுவா, எம் புருசனாலத் தான் நான் இன்னைக்கு உயிரோட இருக்கம்னு சொன்னாளாம். எந்தச் சாமிப் புண்ணியமோ, அந்தப் பையனைச் சரியான நேரத்துக்குக் கொண்டு போய் அந்த நேரம் சேர்த்திருக்கு, அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிடுச்சு. அவளுக்கு எதாவது ஆகியிருந்தா, எத்தனை ஜென்மத்துக்கு, நான் இந்தப் பாவத்தைச் சுமக்கிறது. " என நொந்தவர்.
" ஒருதரம் வந்து மஞ்சக் கயிறு வாங்கிட்டுப் போயிட்டான்னாக் கூட என் மனசு ஆறிடும். இந்தக் கழுதை வரமாட்டேங்குது" என மீண்டும் உரிமையாகத் திட்டினார் ராஜி.
" ஏக்கா , நீயே பழசை மறக்க மாட்டேங்குற, அவளுக்கு இந்தப் புழக்கடையைப் பார்க்கையில் நினைப்பு வராதா. அன்னைக்கு நம்ம வீட்டு பொம்பளைகளும், எம்புட்டு பேச்சு பேசுச்சுங்க " என இருவருமாக மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்த நேரம், சிந்தா இவர்கள் வீட்டுப் பக்கம் திரும்பவும் இல்லாமல், வேலுவோடு கூட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றாள்.
எதிர்பார்த்த அளவை விடக் கூடவே மக்கள் கூடியிருந்தனர். ஏற்கனவே , பெரிய வீட்டு தென்வயலை சுத்தம் செய்வது, அவர்கள் மகனும், தம்பி மகனும் மேற்பார்வை பார்ப்பது ஆகியவை ஒரே பேச்சாக இருக்க, என்ன செய்கிறார்கள் என ஆர்வக் கோளாற்றில் ஒரு கூட்டம் கூடியது எனில், சொக்கனும், முனியாண்டியும் ஏற்பாடு செய்த ஆட்களும், வசனத்தை எல்லாம் மனப்பாடம் செய்து கொண்டு அமர்ந்து இருந்தனர். சேர்கள் எல்லாம் போட்டு அவர்களை முறையாக உட்கார வைத்திருந்ததிலும் சற்றே மகிழ்ந்து இருந்தார்கள்.
முதலில் மகாலிங்கம் ஐயா, வேர்கள் அமைப்பு, நீரஜ், அமிர்தா ஆகியோரைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லி அறிமுகம் செய்து வைக்க, குமரன் நீரஜ்குமார் பார்த்த வேலை, வாங்கிய சம்பளம் அதை விடுத்து அவர் இந்த அமைப்பை ஏற்படுத்தியது. தம்பதி சமேதராக அவர்களது சேவையை எடுத்துச் சொன்னான்.
தற்போது நீரஜ் பேச ஆரம்பித்தார், அந்தப் பகுதி மக்கள், ஊர்த் தலைவர்கள், குமரன் குடும்பம் என விளித்துப் பேசியவர், " கை நிறையச் சம்பளம், ஏசி ரூம், கார் பங்களா வசதியான வாழ்க்கை. இதை எல்லாம் விட்டு, நான் ஏன் இதில் இறங்கினேன்னு யோசிக்கிறிங்களா" எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவும், அவர்கள் ஆம் எனத் தலையாட்ட, " ஏன்னா நான் ஒரு விவசாயியோட மகன். எனக்கும் விவசாயத்தைப் பத்திய கஷ்டமெல்லாம் தெரிஞ்சிருந்த போதும், மேல் தட்டுப் படிப்பை படிச்சு, முதல்ல பெரிய வேலைக்குத் தான் போனேன். ஆனால் நம்ம விவசாயிகள், ஆயிரமாயிரம் காலமா விளைவிக்கிற பொருட்களுக்கு, யாரோ ஒரு வெளிநாட்டுக் காரன், என்னதுன்ன உரிமை கொண்டாடும் போது, அந்தப் பொருளை, நாம் விளைவிச்சா அவனுக்கு அதுக்குக் காசு கொடுக்கனும்னு சொல்லும் போது எனக்குக் கோவம் வந்தது. அதுக்காக ஆரம்பிச்சது தான் இந்த அமைப்பு" என விளக்கியவர். விவசாயத்தை லாபகரமாகச் செய்வதைப் பற்றிப் பேசினார். அதற்கு ஏற்றார் போல் ப்ரொஜக்டரில் படங்களைக் காட்டினார்.
" இது போல உங்க ஊரிலும் விவசாயம் பண்ணலாம்" என அவர் நிறுத்தவும்.
" ஐயா, அதுக்கு நம்ம ஊரில் தண்ணீர் வசதி பத்தாதுங்க" என ஒருவர் சொல்லவும். சொட்டு நீர் பாசனத்துக்கான வீடியோக்களை ஓட விட்டவர், இது ஏதோ வெளிநாடுன்னு நினைச்சுக்காதீங்க. உங்களை மாதிரியே வானம் பார்த்த பூமியா பாலாறு வறண்டு போன தமிழ் நாட்டில் ஒரு இடம் தான்." எனச் சொல்லவும். வேறு சந்தேகங்களையும் கேட்டனர். குமரனும், அமிர்தாவுமாக விவசாயக் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.
" இப்ப நீங்க சொல்ல வர்றதைப் பார்த்தா, சீமைக் கருவையைப் பூரா வெட்டிப் போட்டு, இது விளைஞ்சு வர்ற வரைக்கும் வயித்தில ஈரத் துணியைக் கட்டிக் கிட்டு இருக்கிறதா" என முனியாண்டி ஏற்பாடு செய்த ஆள் கேட்கவும்.
" நான் எப்ப உங்களைச் சீமைக்கருவையை அழிக்கச் சொன்னேன். எப்படி எல்லாம் விவசாயம் செய்யலாம்னு தான் சொன்னேன். அப்ப உங்கள் வயல் எல்லாம் சீமைக்கருவை தான் இருக்கா" என நீரஜ் பதில் கேள்வி எழுப்பவும், அந்த ஆள் அடுத்துப் பேசத் தெரியாமல் தலையைச் சொரிந்து கொண்டு உட்கார்ந்தான்.
"அதுதாங்க ஐயா, ஒரு நேரம் வருமானம் தந்து, எங்களைப் பட்டினி போடாத காப்பாத்துது" என ஒரு பெண்மணிச் சொல்லவும், அமிர்தா " அக்கா, என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. உங்க நிலத்தில இருக்கச் சீமைக்கருவையை வெட்டி காசாக்கி அதில வாங்கிச் சாப்பிடுற சாப்பாடு உங்க வயிற்றை நிறைக்குமா. இல்லை அதே நிலத்தில நீங்களே விளைவிக்கிற தானியம் உங்கள் வயிற்றை நிறைக்குமா. எது நிறைய நாள் வரும்" எனக் கேட்கவும்.
" நாங்க விவசாயம் பண்றது தான். வியாபாரிகிட்ட வாங்குற அரிசியும் பருப்பும், எங்க விளைச்சலுக்குக் காணுமா" எனவும். " அவ்வளவு தான்கா விசயம்" என்றாள் அமிர்தா.
"ஆனால் தண்ணீர் இல்லையே" எனவும். " அதுக்குத் தான் நாங்க வந்திருக்கோம். அடுத்தடுத்து, எல்லாமே சொல்லுவோம். நீங்க சும்மா வரவேண்டாம். சிவநேசன் அண்ணன் வயல்ல விளைச்சலைப் பார்த்துட்டு, அது சரியா வரும்னு உங்களுக்குத் தோனுச்சுன்னா, உங்க நிலத்தைச் சுத்தம் பண்ணிட்டு எங்களைக் கூப்பிடுங்க. நாங்க அரசாங்க உதவியோட உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம்" என அமிர்தா பட்டும் படாமல் சொல்லவும், சேட்டு மூலம் ஏற்பாடு செய்யப் பட்ட ஆட்கள் , அடுத்து என்ன கேட்பது எனத் தெரியாமல் குழம்பினர்.
" இப்ப , நாங்க எதுவுமே செய்ய வேண்டாம்னா, எதுக்கு இந்தக் கூட்டம் போட்டிக" என ஒருவர் கேட்டார்.
" நல்ல கேள்வி " என்ற நீரஜ், " இது போலக் குறைந்த தண்ணீர் செலவில் விவசாயம் செய்யலாம், அதுக்கு வழிவகை இருக்கு. அதற்கான செலவுகளையும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒரு சில கட்டுப்பாடுகளோடு செஞ்சு தர்றாங்க. குமரனுக்கு அது தெரிய வந்த போது, தங்களுடைய சொந்த கிராமத்தில் தங்கள் நிலத்திலையே இதனைச் செயல்படுத்தாலாம்னு முன் வந்தார். நிலங்களைச் சுழற்சி முறையில் பயிரிட்டுக்கிட்டே இருக்கனும். இதைப் பற்றிய விவரம் தெரியனும்னா, குமரனைக் கேளுங்க. அவரும் சுகமான சிங்கப்பூர் வாழ்க்கையை விட்டுட்டு, அங்க பிழைப்பு தேடி வரும், கிழக்குச் சீமை மக்களுக்கு நல்லது செய்யனும்னு , விவசாயத்தைப் படிச்சு, உங்களுக்காக வந்திருக்கார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்னு ஒரு பழமொழி இருக்கே. இப்ப உங்க பக்கம் காத்தடிக்குது, பயன்படுத்திக்கச் சொல்லத் தான், இந்த மீட்டிங்க்" எனத் தனது உரையை முடிக்கவும்,
"இதே மாதிரி பெண்களுக்கான வேலை வாய்ப்பு பத்தி இதே இடத்தில் நாம பெண்களா பேசுவோம். வாங்க" என அமிர்தா அழைப்பு விடுத்தாள்.
சிவநேசன், எல்லாரும் வந்தமைக்கு நன்றி சொல்லி, தன்னுடைய வயலில் இந்தத் திட்டம் வெற்றியடைந்த பிறகு, மற்றவருக்கு உதவி தேவைப்பட்டால் செய்வதாக வாக்களித்தான். ஒரு மணிநேரத்தில் சட்டெனக் கூட்டத்தை முடித்தவர்கள், தனியாக வந்து கேள்வி கேட்கும் மக்களுக்குப் பொறுமையாக விளக்கம் தந்தனர்.
சிந்தா, தங்கள் மகளிர் குழு பெண்களிடம் நாளை குழுக் கூட்டம் வைத்துக் கொள்வோம் என்றும், அமிர்தாவிடம் தங்கள் வருமானத்துக்குத் தோதான விசயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். இவர்கள் சிபாரிசு இருந்தால் பேங்க் லோனும் சுலபமாகக் கிடைக்கும் என அடுத்த நாள் கூட்டத்துக்கு மகளிரைச் சேர்த்தாள்.
கூட்டம் மெல்லக் கலைந்தது, இங்குப் பேசிய அத்தனையையுமே, சோமனும், தேவ்சந்த் சேட்டும் முனியாண்டி போன் வாயிலாகக் கேட்டு அறிந்தனர். சேட்டு குழம்பிப் போகவும், சோமன் தான், " நம்ம நினைச்சதை விடப் பெரிய அனுபவசாலிகளா இருக்காங்க. நாமளும் அவுங்க அடுத்து என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்" என்றான்
" நம்ம பிஸ்னஸ்க்குப் பிரச்சனை இல்லாதே இன்னா வேணா செய்யட்டும்" என்றான் தேவ்சந்த் சேட்.
கூட்டம் முடித்து அவரவர் வீட்டுக்குக் கிளம்பும் நேரம், சிந்துஜா, தன் அம்மாவிடமிருந்து, சத்தியாவோட இருந்த சிந்தாவிடம் பாய்ந்தது. அவள் சேலையைப் பிடித்து இழுக்கவும், மீனாள், " ஏய், சிவகாமி, அவுங்களை இழுக்காத " எனத் தன்னை இழுத்துப் போடும் மகளைச் சமாளிக்க இயலாமல் சிவநேசனை அழைத்தாள்.
" வரவர , இவுகளுக்குச் சேட்டை ஜாஸ்தியா போயிடுச்சு. " எனத் தூக்கிக் கொண்டவன், மீனாளிடம், " பாப்பாவுக்குப் பசிக்குது போல, நீ முத்துவோட வீட்டுக்குப் போ. நான் ஏற்பாட்டை எல்லாம் பார்த்துட்டு வர்றேன்" எனவும், மீனாள் முத்துவை அழைக்க, அமிர்தாவிடம் சொல்லிவிட்டு வந்தவள், அருகில் நின்ற சிந்தாவிடம், " அக்கா, நீயும் வாயேன், பெரியம்மா உன்னை வரச் சொன்னாக. நீ வரலையின்னு ரொம்பக் குறை படுறாக" எனவும். சிந்துஜாவை மனதில் வைத்துக் கொண்டு சிந்தா வேண்டாம் என மறுத்தாள்.
" இல்லை முத்து, இந்தா சத்தியா தூக்கத்துல சாமியாடுது. இதுக்கும் பசிக்கும், நான் வீட்டுக்கு போறேன். நீ காலகாலத்தில சுப்புவோட வந்து சேரு. " என வேலுவை அழைத்து இவர்களுக்கு முன் அமிர்தாவிடம் கண்ணைக் காட்டிவிட்டுக் கிளம்பி விட்டாள். சத்தியமூர்த்தியை, அய்யனார், தான் அழைத்து வருவதாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரிடமும் " பகல் முழுசும் ஆடிருக்கான் பா, சீக்கிரம் கூட்டியாந்திரு. சாப்பிட்டுத் தூங்கட்டும். இன்னைக்கு எம்புட்டு மிதி மிதிக்கப் போறோனோ" எனப் புலம்பியபடியே வரவும்,
"ஏன் புள்ளை, என்னமோ, என் மவன் உதைக்கிறதைப் பூரா நீயே வாங்குற மாதிரி பேசு. நீ தான் விவரமா என்கிட்டத் தள்ளி விட்டுடுறியே. உன் புருஷன் கையில நிம்மதியா தூங்கிட்டுப் பேச்சைப் பாரு" என அவன் குறை படவும்.
" ஆமாம், அந்த ஸ்பீக்கரில போய்ச் சொல்லிட்டு வா. ஊருக்கே கேக்கட்டும்" என வேலுவின் முதுகில் ஓர் அடி வைக்கவும், அவன் வண்டியை ப்ரேக் அடித்து நிறுத்தினான், அதுவும் சரியாகப் பெரிய வீட்டு வாசலுக்கு முன் நிறுத்தவும், சிந்தா பதறி போனாள்.
வேலுவிடம், "ஏய் மச்சான், சீக்கிரம் வண்டியை எடு, அம்மா பாத்திரப் போறாக " என நெருங்கி அமர்ந்து அவன் காதில் அவசரமாகச் சொல்லவும், " நீ தான மைக்கிலச் சொல்லச் சொன்ன, அது தான் யூ டேர்ன் அடிச்சு போகலாம்னு பார்த்தேன்" என அவன் வம்பிழுக்கவும்
" நீ வண்டியை எடுக்கலைனா, வண்டியோட நான் குதிச்சிருவேன்" எனச் சிந்தா மிரட்டவும் வேலு அவள் எதுக்குப் பதட்டப்படுகிறாள் எனப் புரியாமல் வண்டியை எடுத்தான்.
வாசலில் ஒரு வண்டி நிற்பதை உள்ளேயிருந்து பார்த்த ராஜேஸ்வரி, மெல்ல வந்து, அது சிந்தா எனவும், வீட்டுக்குள் வரப் போகிறாள், என ஆவலாகப் பார்த்தவர், மீண்டும் வண்டி சீறிப் பாய்ந்ததில் முகம் வாடிப் போனார். ஆனால் பின்னாடியே மருமகளும், முத்துவும் வந்து சேர கூட்டத்தில் நடந்ததைக் கேட்டுக் கொண்டார்.
சிந்தா போகும் போது வள்ளியைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என நினைத்தவள், அதையும் மறந்து வீடு வந்து சேர்ந்தாள். பாதித் தூங்கிய நிலையிலிருந்த மகளுக்குப் பாலூட்டி தூங்க வைத்தவள், மீண்டும் கிளம்பப் போன வேலுவை உள் அறையிலிருந்து அழைத்தாள்.
அவன் ," என்ன புள்ளை" ,என மகள் தூங்குவதால் வாசல் கதவை ஒருக்களித்து விட்டு வரவும், அவனைக் கட்டிக் கொண்டவள், " வேற ஒண்ணும் கேக்காத. “ எனக் கணவனின் மார்பில் முகத்தை மறைத்திருந்தாள் . அவளது உடலில் ஒரு பதட்டம் இருப்பதை உணர்ந்தவன், அவளைத் தலை, முதுகில் வருடிக் கொடுத்து, சிறிது நேரம் அமைதியாக நின்றவன்.
“ஊருக்கெல்லாம், வைத்தியம் பார்க்கிற, தைரியமா இருக்குமுன்னு உபதேசம் பண்றவ , அந்த வீடு என்னா பண்ணிப்புடும், அதுக்கா இப்பிடி பயந்து நடுங்குறது, நீ பிறந்ததிலிருந்து இருந்த இடம், உங்க அம்மா இருந்திருக்கும், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்து சந்தோசமா இருந்திருப்ப, உனக்கு விசேஷம் வச்சிருப்பாக, இப்படி நல்லது நடந்ததையெல்லாம் நினைச்சுக்க” என அவளைத் தேற்றவும்.
“அதெல்லாமும் இருக்குத்தான், ஆனால் குரங்கை நினைக்காதேன்னா, அதைத் தான் நினைப்பாகலாம், என் மனசும், அன்னைக்கு என் நடத்தையைப் பத்தி பேசுனாகளே ,அதையே தான் நினைக்கிது “ என அவனிடம் முறையிடவும்,
" ஏன் புள்ளை, சிவநேசன், அவர் சம்சாரத்தோடவே பேச பழக ஆரம்பிச்சுட்ட, அப்புறம் என்ன , இந்த ஊர்ல எவனாவது தப்பா பேசுறாகளா சொல்லு, வகுந்துடுறேன்" என அவன் கேட்கவும், 'அதுக்கு ஒன்னும் இல்லை மச்சான், புத்திக்கு எம்பூட்டுத் தெரிஞ்சாலும், சட்டுனு மனசுல ஒரு பயம் வந்து, அந்த நாளுக்குக் கூட்டிட்டு போயிடுது" என அவள் சொல்லவும்,
“இதுக்கு என்னா மருந்துண்டு சொல்லு, எங்கிருந்தாலும் கொண்டு வாரேன் “ என அவள் முகத்தை உயர்த்திக் கேட்கவும் .
“என் மருந்தும் நீ தான், என் வைத்தியனும் நீ தான், இது உன்கிட்ட மட்டும் தானே கிடைக்கும், அது தான் , வைத்தியம் பார்த்துகிட்டு இருக்கேன் .நீ பேசாத நில்லு போதும்” என அவள் சொல்லவும்.
“மருந்து வேலை பார்த்தா தானே, நோவு சரியாகவும். “எனக் கேட்டபடி அவன் அவளை நோக்கிக் குனிய, “ஐயோ மச்சான், சும்மா இரு புள்ளைகள் வந்துரும். உன்னையைத் தெரிஞ்சு தான் , சும்மா நில்லு போதுமுன்னு சொன்னேன் “ என அவள் அவனை விலக்கவும்,
“அடியே , நீ தெளிஞ்சிட்ட, எனக்குப் பிடிச்சுடுச்சே , என் மருந்து எங்க “ என அவளை இழுத்தான். வெளியே அய்யனாரின் வண்டிச் சத்தம் கேட்கவும், அவசரமாக ,ஆறடியில் வளர்ந்திருந்த அவனின் மேனியில் தனக்கு எட்டிய தூரத்தில், தனது பல்லைப் பதிய வைத்தவள் , "போதுமா" என விஷமாகி சிரிப்போடு வெளியே சென்றாள் .
“அடியே, இந்த விஷக்கடிக்கும் ,நீதான் வைத்தியம் பார்க்கணும்” என்றபடி அவனும் வெளியே வர, “என்னா மாப்பிள்ளை , பூச்சி போட்டு கடிச்சிருச்சா “ என விசாரித்தபடி அய்யனார் வரவும்,
“ ஆமாம் மாமோய், ஒரு பொட்டை கொசு" என அவன் வேண்டுமென்றே மனைவியைப் பார்த்துச் சொல்லவும், புரிந்து கொண்ட அய்யனார், ஓர் சிரிப்போடு, "நீ ஒரு விவஸ்தை கெட்டவன், மாமனார்கிட்ட பேசுற மாதிரியா பேசுற, இந்தா உன் மகன் வயிறு நிறைஞ்சு தான் கிடக்கு, வர்ற வழியில், பெருமாயி கடையில இட்டிலி தின்னுட்டான், தூங்கி வழியறதப் பாரு" எனவும் மகனைத் தூக்கிக் கொண்ட வேலு தங்கள் அறைக்கு அவனைத் தூக்கிச் சென்றான்.
"மச்சான், அவனைப் பாத்ரூமுக்கு கொண்டுபோய் விட்டுட்டு படுக்க வையி. இன்னைக்கு ஆடின ஆட்டத்துக்குப் பாயை நனைச்சுப் புடுவான்" எனச் சிந்தா சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டே சத்தம் கொடுக்கவும், முத்துவும் சுப்புவும் வரவும் சரியாக இருந்தது.
அனைவருமாக , சிந்தா சமைத்து வைத்திருந்த இருங்கரிசி சோளம் சாப்பாட்டை, தட்டைப் பயறு குழம்பு ஊற்றி, சாப்பிடவும், முக்குடை ஆபுலெட், சுட்ட அப்பளம் எனக் கொண்டு வந்து சூடாக வைக்க, அன்றைய கூட்டத்தைப் பற்றிப் பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர்.
"அக்கா, இந்த அமிர்தா அக்கா கோயம்புத்தூரில் என்னை மேற்படிப்பு சேரச் சொல்றாக, அவுகளும் அங்க தான் இருகாக்கலாம், அங்க இருக்க ஒரு பெரிய யூனிவர்சிட்டி, பொண்ணுகளுக்காகவே நிறையக் கோர்ஸ் வச்சுருக்காகலாம், ஹாஸ்டெல் இருக்கு, அங்க அப்ளிகேஷன் போட சொல்றாக" எனவும்,
"அது என்னத்துக்கு அம்புட்டு தொலைவுல போயி படிச்சுக்கிட்டு, மருதையிலேயே பொம்பளைபுள்ளைக படிக்கிற காலேஜா பாரு. நல்ல மாப்பிள்ளை வந்துச்சின்னா பட்டுனு கட்டி கொடுத்துடுவோம் " என அய்யனார் சொல்லவும், "அப்பா " எனச் சிணுங்கிய முத்து, தனக்குப் படிக்க ஆசையாக இருப்பதாகவும், பெரிய படிப்புப் படித்துப் பெரிய வேலைக்குப் போகவேண்டும் எனக் கண்ணில் கனவோடு சொல்லவும், சிந்தா அதற்கு ஆதரவு தெரிவிக்க, வேலு, பேசாமல் இருந்தான்.
"மாமா, நீங்களும் சொல்லுங்க, அப்பத்தான் அப்பா சரின்னு சொல்லுவார் " என முத்து கேட்கவும், "அது தான் உங்க அக்கா சரின்னுட்டால்ல, இனி மாமன் வேற தனியா சொல்லனுமாக்கும்" என வேலுவே சொல்லவும், ஒருவழியாக அய்யனாரையும் சரிக்கட்டி கோவையில் முதுகலை சேர முத்து அனுமதி பெற்றாள் .
அன்றைய நாள், ராஜேஸ்வரி அம்மாவின் மனக்குறை தவிர மற்றவை நல்லதாகவே நிறைவேற, இவர்கள் படுக்கப் போகும் முன், . ராஜேஸ்வரி அம்மாவைப் பாம்பு கடித்து விட்டது எனச் சிவநேசனிடமிருந்து வேலுவுக்கு அவசரமான அழைத்து வந்தது. மொத்தக் குடும்பமும் கண்ணீரோடு நிற்க, என்ன செய்வாள் சிந்தா? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment