Tuesday, 4 May 2021

சிந்தா- ஜீவநதியவள் -1

 சிந்தா- ஜீவநதியவள் -1

       வானரவீரமதுரை ,வாணவன் மாமதுரை என விரித்து அதற்கென இதிகாச, வரலாற்றுப் பெயர்க் காரணங்களைக் கொண்டு மானாமதுரை என இன்றைய வழக்குப் பெயரைத் தாங்கி நிற்கும் ஊரின் சித்திரைத் திருவிழா.

       தனி ஒரு பூதகணத்தின் தாகம் தணிப்பதற்காக, வை கை என மாதேவன் பணிக்க, சிகையில் இடமளித்த சிவனுக்காய், கங்கையவள் வையையாய் புவியிலிருந்து வடிவெடுத்தாள். மலையாள கரையோரம் பிறந்தவள் நிலமடந்தையாய் ஓடி, மதுரையம்பதியை வளமாக்கி கிழக்குச் சீமையில் சரண் புகுந்தாள். ஐயன் மீது கொண்ட பற்றால் நஞ்சுண்டகண்டனுக்கு, நஞ்சு தந்த கடலை காண சகியாமல் இராமன் நாமம் தாங்கிய ஊரிலேயே பாற்கடல் போன்ற ஏரியில் சங்கமம் ஆனாள்.

       நல்ல மனதுடைய நங்கைக்கு ஏது மதிப்பு, வையையும் இன்று மானிடர் வஞ்சனையால் வறண்டு போனாள். ஆயினும் ஊற்றுக் கண்ணாய் இந்தப் புனித பூமியைச் சத்தமில்லாமல் ஆண்டுக் கொண்டு தான் இருக்கிறாள். அவ்வப்போது பொங்கி வந்து தரிசனம் தருவாள்.

       மண்டூக மாமுனிவர் தவளையாய் மாறி வையையில் தவமிருக்க, அவருக்கு மோட்சம் அளிக்கவெனக் கள்ளழகனாய் பெருமாளே இவளில் இறங்கி சாப விமோசனம் தந்தார். செவி வழி கதையாக , தங்கை மீனாட்சி கல்யாணத்துக்காகப் புறப்படும் கள்ளழகர் வழியில் பக்தர்களின் அன்பு உபசரிப்பில் மெய் மறந்து , முகூர்த்தத்தைத் தவற விடுகிறார். தன சகோதரன் வருகைக்காக மீனாட்சியம்மை ஆவலாக நோக்கியிருப்பதைக் கண்ட சுந்தேரேசர், தன்னிலிருக்கும் பெருமாளை திருமணத்துக்கு வரவழைத்துக் கன்னிகாதானம் பெற்றுக்கொள்கிறார். இந்தச் செய்தியை, கள்ளழகரிடம் சொல்ல கோவிந்தராஜ பெருமாள் செல்கிறார், அதனால் அவரைக் கோள்சொல்லிப் பெருமாள் என்றே மக்கள் அழைத்தனர். செய்தி கேள்வியுற்ற அழகர், புதிதாய் பாயும் வைகையில் கோபித்து இறங்குவதாகக் கர்ணபரம்பரை கதை உண்டு.

       இந்த விழாவை மாமதுரையில் கோலாகலமாகச் சித்திரா பௌர்ணமி அன்று விழாவாய் நடத்துவதை உலகம் அறியும். மதுரையில் மட்டுமன்று வையைப் பாயும் மானாமதுரையிலும், பரமக்குடியிலும் கூட இந்த விழாக்கள் நடக்கும்.

      சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் விழாவும், மானாமதுரையிலும் கோலாகலமாய் நடக்கும். காலையில் அக்கரையிலிருந்த கள்ளழகர் பெருமாள் வைகையாற்றில் எழுந்தருளி இருந்தார். அவரைத் தரிசிக்க அக்கம் பக்கமுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். 

    சித்திரா பௌர்ணமி இரவைத் தான் இந்த ஊர் மக்கள் ஆவலாக எதிர் நோக்கி இருப்பார்கள். வறண்ட வைகையின் மேல்கரையில் ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் ஆலயம், இங்கு இவர்களே மீனாட்சி, சொக்கர். அதிலிருந்து எதிர் கரையில் பெருமாள் கோவில். 

        அகன்ற வைகையில் ஓடையாய் வைகை ஒடுங்கி ஓட மீதியுள்ள இடங்கள் எல்லாம் சுத்தம் செய்து அதில் ராட்சத விளக்குகளால் இரவை பகலாக்கி, குடை ராட்டினம், ஜெயின்ட் வீல், கொலம்பஸ், சறுக்குமரம் என விளையாட்டு பொழுது போக்கு அம்சங்களை வைகை ஆற்றையே மைதானமாக்கிப் போட்டிருந்தனர்.ஒலி பெருக்கிகள் மூலம் சினிமா பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன.

      ஐஸ் வண்டி, அப்பளக்கடை, பஞ்சுமிட்டாய், சவ்வு மிட்டாய், மசிருமிட்டாய், சுண்டல், கடலை, பணக்கிழங்கு, சோளக்கருது, சுட்டது, வேக வைத்தது, மாங்காய் கீறியது என விற்பனை செய்பவர்கள், சாப்பிடப் பஞ்சமில்லாமல் ஒலி எழுப்பிக் கொண்டு கூட்டத்தோடு திரிந்தனர்.

       அக்கம், பக்கம் இருக்கும் கிராம மக்கள் குடும்பத்தோடு வந்து அமர்ந்து நிலாச்சோறு சிற்றன்னம் சாப்பிட்டுக் கொண்டு, திருவிழா கூத்தை ரசித்துக் கொண்டிருந்தனர் மக்கள்.

       அந்தக் கூட்டத்தில் தான் ஆற்று மணலில் தார்ப்பாயை விரித்து, அதில் தூக்குப் போணிகள், தண்ணீர் பாட்டில் இலை எல்லாவற்றையும் பரப்பி விட்டு, ஆறு மாத தனது மகள் சத்யாவை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் சிந்தா என்ற சிந்தாமணி. மாநிறம், வட்டமுகம் எடுப்பான நாசி, அகன்ற கண்கள் என இலட்சணமான முகத்துக்குச் சொந்தக்காரி. அவளது வயதை மீறிய தெளிவு.

       தனது அப்பா, தம்பி, தங்கை, நான்கு வயது மகன், கணவனோடு திருவிழா காண வந்திருந்தவள், இரவு உணவாகச் சோற்றை வடித்து, ஆட்டுக்கறி குழம்பு, முட்டை அவித்துக் கொண்டு வந்திருந்தாள்.

        வந்தவுடன் சாப்பாட்டை ஒரு கை பார்த்த அளவளது குடும்பம் , அப்பா அய்யனாரின் பாதுகாப்பில் ராட்டினம் விளையாடி, பொருட்காட்சியில் சுத்தி விட்டு வரச் சென்றுள்ளனர்.

       ஆங்காங்கே அறிந்தவர், தெரிந்தவர் உறவினர்கள் எனப் பரிச்சயமான முகங்கள் தெரிந்தது. ஓர் சிநேகப் புன்னகையோடும் , நல விசாரிப்போடும் கடந்து கொண்டிருந்தனர். இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்த அவளது ஆறுமாத மகள் தூக்கத்துக்குச் சிணுங்கவும் முந்தி மறைத்து தாய்ப்பால் ஊட்டி தூங்க வைத்திருந்தாள்.

             கணவன் எடுத்துக் கொடுத்த சிவப்பு வண்ண சேலை அவளுக்கு எடுப்பாகவே இருந்தது. அதே சேலைத் துணியில் தைக்கப்பட்ட ரவிக்கை அணிந்திருந்தவள், தூங்கும் மகளை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் அவளருகே இடித்துக் கொண்டு வந்து அமர்ந்தான் சிங்கார வேலு. நல்ல தேகக் கட்டுடன் அவளை விடச் சற்றே புது நிறமாக இருந்தான். ஆறடி உயரம் ,கொஞ்சம் அல்ல நல்ல முரடன், அவன் அருகிலிருந்தால் ஆண்கள் யாரும் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அந்தக் கட்டிளங் காளையும் அடங்குவது தன் ஆசை மனைவி சிந்தாவிடம் மட்டுமே.

         அவன் உரசிக் கொண்டு அமர்ந்த விதத்திலேயே புரிந்து கொண்டவள், அவனை முறைத்தாள். அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்து, "என்னா புள்ளைப் பார்க்கிற. திருவிழா கூட்டாளி பயலுங்க வந்தானுங்களா அது தான்." என அவன் இழுக்கவும், அவள் பதில் சொல்லாமல் முகத்தைக் கடுகடுவென வைத்துத் திரும்பிக் கொண்டாள்.

        " பாப்பா தூங்கிடுச்சா" என அவள் மடியில் கிடந்த மகள் தலையை வருடினான் வேலு. " போ அங்குட்டு,இந்த சனியனை குடிச்சிட்டு வந்து புள்ளைய கொஞ்சாதேன்னு சொல்லிருக்கேன்ல. உன்னை நம்பி வயசு புள்ளையை வேற கூட்டிட்டு வந்தேன் பாரு. என் புத்தியை " என அவள் பேசும் போதே இடையிட்டவன்,

         " ஏ புள்ளை, நான் நிதானமாத்தான் இருக்கேன்.நீ வேணா சோதிச்சு பாரு" என்றான். முகத்தில் அழகு காட்டி அவள் திருப்பவும், "அடி என் பனங்கருப்பட்டி, சீனி பாகே. முகத்தைத் திருப்பினாலும் அம்சமாத் தான் புள்ளை இருக்க " என வழிந்து அவள் முகத்தை வழித்துக் கொஞ்சினான். அரை இருளில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்றாலும் சிந்தாவுக்கு வெக்கம் வந்தது, அதை மறைத்து

        " அதுக்குத் தான் ஈ, எறும்பு கணக்கா ஒட்டிகிறியாக்கும். விலகுய்யா அங்குட்டு" எனக் கோபத்தை வீம்பாக இழுத்துப் பிடித்துச் சிடுசிடுத்தாள்.

       " ஊர்ல இல்லாததையா செஞ்சுட்டேன். இன்னைக்குச் சுத்தி திரியிற ஆம்பளை அம்புட்டு பயலும் இப்படித் தான் இருக்கானுங்க. எம்புட்டு சரக்கடிச்சாலும் நான் நிதானமா இருப்பேன்னு உனக்குத் தெரியாதா" எனத் தற்பெருமை பேசியவன் அவள் தோளில் கை போடவும், அவன் கையை இழுத்து விலக்கி விட்டவள்,

        " ஐயே, நாத்த மருந்தை குடிச்சிபுட்டு பெருமையைப் பாரு. எல்லா ஆம்பளையும் குடிச்சிருக்கான்னா, உன் வீட்டு பொம்பளைங்க மேல யாராவது கை வச்சா, என்ன பாதுகாப்பு. உன்னை நம்பி தானே என் தங்கச்சியையும் கூட்டிட்டு வந்தேன். இல்லையின்னா ஐஞ்சு மைல் தள்ளி வந்து விடியவிடிய திருவிழா பார்க்கனுமுன்ன என்ன தேவை" எனப் பொரிந்தாள்.

     " அதெல்லாம் நான் இருக்கும் போது எவனும் கை வைக்க மாட்டான். வகுந்திற மாட்டேன்" என நாக்கை துருத்திக் காட்டினான். "சரக்கு உள்ளப் போகவும் உள்ளுக்குள்ளே இருக்க ரவுடிப்பய தலை காட்டுறாராக்கும்" என்றாள்,

         " அட போ புள்ளை நீ ஒருத்தி, ஊருக்குள்ள கெத்தா நானும் ரவுடிண்டு திரிஞ்சிட்டு இருந்தேன். உன்னைய கட்டினேன். மீசையை மடக்குன்ன, தலை சீவுன்ன,கைலி கட்டதடாண்ட, சட்டையை மடக்காதடாண்ட என் அழகே போச்சு. இப்ப பொண்டாட்டிக்கு பயந்தவன்னு கேலி பண்றானுங்க" எனச் சோக கீதம் வாசித்தான் வேலு.

     சிந்தாவுக்கு ஒரு புறம் பெருமையாகச் சிரிப்பு வந்தது, இருந்தும் காட்டிக் கொள்ளாமல், "இப்பத் தான் உன்னை மனுசரா மதிக்கிறாகன்னு சொல்லு" என்றாள்.

       அதே நேரம் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி வந்தார் ஐம்பது வயது மதிக்கத் தக்க அய்யனார், சிந்தாவின் தகப்பன். அவர் நடையிலும் லேசான தள்ளாட்டம் இருந்ததோ எனச் சிந்தா ஊன்றிப் பார்த்தாள்.

      மகளுக்குப் பயந்து பல்லில் படாமல் ஒரு குவளை உள்ளே கவிழ்த்திருந்தவர், வெற்றிலை பாக்கைப் போட்டுக் குதுப்பிக் கொண்டே வந்தார். " சிட்டு, சின்னதை நான் பார்த்துக்குறேன், நீ மாப்பிள்ளையோட ஒரு வட்டம் சுத்திட்டு வா" எனத் தார்ப்பாயில் அமர்ந்து பேத்தியைக் கேட்டார்.

       " ஏன் அப்பு, வயசுக்கு வந்த பொட்டப்புள்ளையைத் தனியாவா விட்டுட்டு வந்த. அவளுக்கு என்ன தெரியும்" எனப் பெரிய மனுசியாக அப்பாவையும் கோவித்தாள் சிந்தா.

      " இளந்தாரிப் பயலை நிறுத்திட்டு தானே வந்தேன். அங்குட்டுப் போய்ப் பாரு, உன் மகன் குரங்காட்டாம் தாவிக்கிட்டே திரியிறான். நீ போனா தான் வழிக்கு வருவான். பாப்பாவை குடு" என்றார்.

        " இருப்பா, எம்புட்டு நேரம் மடியில வச்சிருப்ப. விரிப்பு எடுத்திட்டு வந்துருக்கேன். அதில போடுறேன். பக்கத்தில உட்கார்ந்து பார்த்துக்க. " எனக் கணவனை வேலை ஏவி பருத்தி சேலையை விரிக்கச் சொன்னாள். உண்மையில் இது தான் சிங்கார வேலுவுக்கு, அவன் செய்துக்கச் சொல்லிய சோதனை.

       சற்று நிதானமாகவே சரியாக விரிப்பை விரித்துவிடச் சிந்தா மனதில் தன் கணவனுக்குப் பாஸ் மதிப்பெண் தந்தாள். மகளைப் படுக்கப்போட்டு, மேலே மற்றொரு மெல்லிய துண்டை போர்த்தி விட்டு அப்பாவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிப் போனாள்.

    " சிந்தாமணி, இது தான் புள்ளை, நீ என்னோட சந்தோஷமா வர்ற மொத திருவிழா. இதுக்கு முன்னாடி இரண்டு தரம் வந்தப்பவும் மூஞ்சியைத் தூக்கி வந்சிருந்த. உன்னைக் கல்யாணம் கட்டின ஐஞ்சு வருசத்தில இன்னைக்குத் தான் புள்ளை மனசு இம்புட்டு நிறைஞ்சு கெடக்கு" என அவள் கையைப் பிடித்து அவளோடு ஒட்டிக் கொண்டே நடந்தான். 

       அவளும் அவனிடமிருந்து கையை உருவிக் கொள்ளவும் இல்லாமல் கூடவே நடந்தாள். அவள் தலையை வழித்துச் சீவி நீண்டபினன்னலிட்டு வீட்டில் பூக்கும் பிச்சிப் பூவையே பந்தாகக் கட்டி சடையைச் சுற்றி அதன் அடிவாரத்தில் வைத்துக் கொள்வாள். அதன் மணமே அவனைக் கிறங்கடித்து அவளிடம் இழுத்துச் செல்லும். மானாமதுரை மல்லிகைப் பூவுக்குப் பிரசித்தி நல்ல பெரிய மொக்குள்ள இருவாட்சி மல்லியைத் தொடுத்துச் சரம் சரமாக இவளது தோழிகள் வைத்தாலும், பிச்சியை இப்படிச் சூடுவதில் தான் அவளுக்கு விருப்பம். அதற்காகவே தனது வீட்டில் பந்தலிட்டுப் பிச்சிச் செடியை வளர்க்கிறாள்.

       ஆங்காங்கே சீரியல் மின் விளக்குகள் அம்மன், சுவாமி, குதிரையோடு அழகர், யானை பூப் போட்டுக் கொண்டு இருப்பது நந்தி என ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளிக் கற்றைகள் சிந்தாவின் முகத்தில் பட அந்தக் கருப்புத் தங்கம் அவனுக்கு வைரமாகவே ஜொலித்தது.

        அவர்களைச் சுற்றி ஆயிரம் ஒலி,ஒளிகளும், ஓசைகளும் இருந்த போதும், அவளின் அழுத்தமான உதடுகளிலிருந்து வரும் சொல்லுக்காகக் காதைத் தீட்டிக் காத்திருந்தான். இது போல் அவளோடு தனித்திருக்கும் தருணம் மிகவும் சொற்பமே. " எதுனா பேசு புள்ளை" என அவன் குழையவும், "என்னத்தைப் பேச அது தான் எனக்கும் சேர்த்து நீயே பேசுறியே" என்றாள்.

       "அப்பல்லாம் என்னைக் கண்டாலே உனக்கு ஆகாதுல்ல புள்ளை, இதே இடத்தில சந்தைக்கு வந்து போவும் போது எம்புட்டு முறைச்சிருப்ப, எனக்கு என்ன தெரியாதுன்னு நினைச்சியா. " என மலரும் நினைவுகளாய் தாங்கள் சந்தித்ததைச் சொல்லவும்,

      " நீ செஞ்ச சேட்டை அப்படி. வழியில போற வர்றவளை எல்லாம் வெறிச்சு பார்க்கிறவனை முறைக்காம கொஞ்சுவாகலாக்கும் " எனச் சிணந்தாள். அவன் கெக்ககெக்கவெனச் சிரிக்கவும், இவளுக்குச் சினம் ஏறியது. "இப்ப எதுக்கு மரகழன்ட மாதிரி இளிக்கிற" என்றாள்.

     "அது இல்லை புள்ளை, கொஞ்சவா செய்வோமுண்டியா, அது தான் நினைப்பு முந்தாநாள் இராத்திரிக்கு போயிடுச்சு." எனத் தலையைச் சொரிந்தபடி அவன் நன்றாக உரசவும், கருத்த முகமும் பளபளக்க, " இம்புட்டு ஆளுங்க சுத்தி இருக்கையில, என்ன பேசறதுன்னு உனக்குத் தெரியாது. இதே மாதிரி அப்பையும் தான் வெக்கமில்லாம பார்த்து வைப்ப" என அவள் திட்டினாள்.

         " உன்னைய மட்டும் தான் புள்ளை அப்படிப் பார்ப்பேன். உன் கண்ணாம் முழி உருண்டுகிட்டு அத்தனை சங்கதி சொல்லும், என்னைய மனசுக்குள்ள வையிவன்னு தெரியும். அப்படி என்னத்தச் சொல்லி வையிவையின்னு தெரிஞ்சுக்கத் தான் உத்து உத்துப் பார்ப்பேன் " எனச் சிரித்தான்.

       " ஆத்தாடி, அப்படியே உத்துப் பார்த்து அந்தச் சங்கதியை படிச்சுபுட்ட . பொம்பளைப் புள்ளையை வெறிச்சுப் பார்த்துக் காவாளித்தனம் பண்ணிட்டு, அதுக்கு விளக்கம் வேற. பாம்பு தீண்டினது கூடவா தெரியாமலா என்னை வெறிச்ச" என அவன் கைகளில் அடிக்கவும்.

        " அந்தப் பாம்பு தீண்டுனதுல தானே புள்ளை ,நீ என்னைத் தீண்டின. கெண்டக்கால்ல தடத்தைப் பார்க்கவும், பதறிகிட்டு வந்து உன் தாவணியைக் கிழிச்சு கட்டுப் போட்டு, வாயிலையை விசத்தை எடுத்தியே. அன்னைக்கே என் உசரு உனக்குண்டு முடிவு பண்ணிட்டேன்" என அவள் கையைப் பிடித்துக் கொண்டு மையலாகப் பார்த்தான்.

          அவன் வார்த்தையில் நெகிழ்ந்து போனவள், "அது தான், என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்கவும், யோசிக்காம சரின்னு சொல்லிட்டியாக்கும், இந்த ஆத்தா சன்னதியில் வச்சு தாலி கட்டுனியே. அன்னைக்கு மட்டும் நீ என் மானத்தைக் காப்பாத்தலைனா. நான் நாண்டுகிட்டுச் செத்திருப்பேன்" என்றாள்.

        " அட வாயக் கழுவு, நல்ல நாள் கிழமையில இப்படிப் பேசிக்கிட்டு உன்னை நம்பி அப்பா, மகன், மகள்னு இரண்டு ஜோடி,ஆறு உசிரு இருக்கோம். அதை நினைப்புல வச்சுக்க" என அவன் சொல்லும் போதே, அவர்களது மகன் சத்தியமூர்த்தி, என்ற சத்தி அவர்கள் முன் வந்து எங்கிருந்தோ குதித்து நின்றான்.

       மகனைப் பார்க்கவும், "அடேய், சுருட்டு கருப்பன் பேரா, எங்கருந்துடா தவ்விகிட்டு வர்றவன்" என மகனைத் தூக்கிக் கொண்டான்.

      " யப்போய், அந்தப் பெரிய சக்கரத்தில சுத்துவோம்பா, மாமா கூட்டிப் போகமாட்டேங்குது. நீ வந்தா தான் ஏத்துவாகலாம். வா" என்றான்.

      "கூட்டம் கும்பல்ல மாமாவை விட்டுட்டு எதுக்குடா ஓடியாந்த, எங்குட்டாவது காணா போயிட்டேனா. புள்ளை புடிக்கிறவன் தூக்கிட்டுப் போயிடுவான் சாக்கிரதை" எனச் சிந்தா மிரட்டினாள்.

      " அதெல்லாம் ஒருத்தரும் ஒன்னும் செய்யமாட்டாக. எங்கப்பன் பேரைச் சொன்னாலே தெரிச்சு ஓடிடுவாக, என்னாப்பா" என்றான் நான்கே வயதான சத்தியமூர்த்தி. மகன் கூறியதில் அப்பனுக்கும் பெருமை தான், ஆனால் இப்போது மகனுக்கு ஆமாம் சாமி பேட்டால் பொண்டாட்டி ஆடிவிடுவாள். எதுக்கு நல்லா போயிட்டு இருக்கிற உறவை கெடுக்கனும் எனச் சனத்தில் மனக்கணக்குப் போட்ட வேலு, தனது பெருமையையும் விடாமல், மகனுக்கு நல்ல தகப்பனாக அறிவுரை செய்தான்.

     "சத்தி, அப்பா பேரைச் சொன்னா பயப்புடுவாகத் தான். இருந்தாலும் நம்ம சூதானமா இருக்கனும். கூட்டத்தில தொலைஞ்சா தேடுறது சிரமம் சரியா தம்பி . மாமாவும், சித்தியும் எங்க இருக்குதுங்க காட்டு" என அவன் சொன்ன திசையில் சென்றனர்.

      பெரிய ஜெயின்ட் வீலில் ஏறுவதற்காக இருவரும் வரிசையில் நின்றனர். சிந்தாவிற்கு அடுத்து ஐந்து வருடம் கழித்துப் பிறந்தவள் முத்துமணி, அவளுக்கு ஒன்றரை வயது இளையவன் சுப்பிரமணி. மணிமணியாய் மூன்று பிள்ளைகளைப் பெற்ற அவர்களது அம்மா சொர்க்கவாசியாகி வெகு காலம் ஆனது. அதிலிருந்து சிந்தா தம்பி தங்கைக்குப் பெறாத தாயானாள்.

        அவர்கள் நின்ற வரிசையிலேயே இவர்களும் சென்று நிற்க, இவர்களுக்குப் பின்னால் நின்றவர்கள் சலசலத்தனர். " எங்க அக்கா, மாமா தான். நாங்க தான் மூனு பேரு நின்னோமுல்ல, ரொம்பப் பேசாதீக" என்றாள் முத்து.

     சிந்தா தங்கையை ," முத்து சரிக்குச் சரி பேசாத. விடு" என அடக்கினாள். "சுப்பு, டிக்கெட் எடுத்தாச்சாடா" என வேலு மச்சினனிடம் வினவினான். " அப்போலையே எடுத்துட்டோம் மாமா. கூட்டம் நிறைய இருந்துச்சு அப்பா தான், பாப்பாவை பார்த்துகிட்டு உங்க இரண்டு பேரையும் அனுப்புறோமுட்டு வந்தாரு." என விவரம் சொன்னான்.

        ஆண்களும் பெண்களும் ஒரே வரிசையாக நிற்பதால் , சுப்புவை முன்னே நிறுத்தி, அதற்கடுத்து முத்து, சிந்தாவை நிறுத்தித் தான் அரணாகப் பின்னால் நின்று கொண்டான். இவர்களுக்கெடுத்து அடுத்தக் குடும்பம் நின்றது. இவர்களுக்குப் பின்னே நின்ற ஒரு குடும்பத்தின் பெண்கள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டு, சிந்தவை பார்த்துப் பேசிக் கொண்டனர்.

        சிந்தாவிற்கு யாரோ தன்னைப் பார்ப்பது போல் உடல் குறுகுறுத்தது. ஆனாலும் அதனைக் கவனியாதவளாக வரிசையில் நகர்ந்து அடுத்த ரவுண்டுக்குத் தயாரான ஜெயிண்ட் வீலில் நான்கு பேர் அமரக்கூடிய இடத்தில் ஏற்கனவே ரவுண்டு முடித்தவர்களை இறக்கி , அடுத்தவரை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

         சுப்பு ஏறவுமே, சத்திய மூர்த்தி ஆவலாகத் தொற்றிக் கொண்டான். முத்து, சிந்தா, வேலு மூவரும் நின்றனர். அதற்குள் முத்துவோடு கல்லூரியில் படிக்கும் தோழி ஒருத்தி அழைத்தாள். முத்து சிந்தாவைப் பார்த்து, "அக்கா என் க்ளாஸ்மெட்டு அதோட வர்றேன், நீயும் மாமாவும் இந்தப் பெட்டியில் வாங்க " எனவும். சிந்தா யோசித்தாள் வேலு ," நீ போத்தா. இந்தப் பெட்டில நாம உட்கார்ந்து இருந்தா, அந்தப் பெட்டில அது உட்காரப் போவுது. எதுக்கு இம்போட்டு யோசனை நீ ஏறு புள்ளை" என ஏற்றி விட்டான்.

        முத்து சினேகிதிகளோடு அடுத்தப் பெட்டியில் ஏறினாள். அதே சமயம் ஏற்கனவே ஏறியிருந்த ஒரு பள்ளி படிக்கும் சிறுமி பயந்த அழவும், இவளது தோழியோடான மற்றொரு உறவுக்காரப் பெண் இறங்கிக் கொண்டு, தோழியின் அண்ணன் அதில் ஏறினான். முத்துவுக்கு உதறல் எடுத்தது. சிந்தா மிகவும் கட்டுப்பாடோடே வளர்த்து வந்தாள்.

       ஆனால் அடுத்தடுத்து பெட்டிகளை நிறைத்து, ஜெயிண்ட் வீல் சுற்ற ஆரம்பித்தது. சுப்புவும், சத்தியும் குதூகலமாகக் கத்தினர். சிந்தா பக்கத்திலிருந்த கணவனின் காலை இறுக பற்றிக் கொண்டாள்.

       " அடி சீனிப்பாகு , இம்புட்டு தான் உன் வீரமா " எனக் கேலி பேசியபோதும், அவள் கையைத் தன் கையோடு பிணைத்துக் கொண்டவன். எதிரே அமர்ந்திருந்த மகனை வலது கையால் பிடித்துக் கொண்டான்.

        "ஹே " என்ற சத்தத்தோடு சக்கரம் சுற்ற, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோவில் கோபுரங்களும், விளக்கு ஒளியும், ஆற்றின் இரு கரையிலிருந்த வீடுகளும், தூரத்தே செல்லும் ரயில் பாலமும் தெரிந்தது. கொண்டவன் துணையோடு உயரத்திலிருந்து சிந்தா அந்த ஊரைப் பார்த்தாள்.

        முத்து அடுத்தப் பெட்டியில் அமர்ந்திருந்தவள் எதிரில் அந்த இளைஞன் வந்து அமரவும் இவள் பதட்டமாக ,அவள் " எங்க அண்ணன், பெரியப்பா மகன் சிங்கப்பூர்லருந்து வந்திருக்கு" என அறிமுகப்படுத்தினாள். " இது முத்து, என் கூடத் தான் காலேஜ் படிக்குது. " என அண்ணனிடம் சொன்னாள் மகேஸ்வரி. ஒரே பரபரப்பாக, தன் வகுப்புத் தோழிகள் வேறு யாரெல்லாம் திருவிழாவிற்கு வந்துள்ளனர் எனப் பட்டியலிட்டு சலசலத்துக் கொண்டிருந்தாள். முத்துவுக்குத் தான் வேற்று இளைஞன் எதிரில் அவன் காலை இடித்துக் கொண்டு அமர சங்கடமாக இருந்தது.

       ஜெயிண்ட் வீல் சுற்றி இறங்கினார்கள். மகேஸ்வரியின் அண்ணன் கையைப் பிடித்து இறக்கிவிட முத்துக்குப் படபடப்பாக இருந்தது. அவன் இயல்பாக ஓர் சிரிப்புடன் கடந்து சென்று விட்டான். சிந்தா குடும்பமும் இறங்கி வர , தோழியிடம் சொல்லி விட்டு அக்காளோடு சேர்ந்து கொண்டாள் முத்து. அன்று இரவு பொழுதைப் பொருட்காட்சியில் சுற்றிக் கழித்துக் கொண்டிருந்தனர்.

        சத்தி, அங்கு இருக்கும் அத்தனை விளையாட்டு உபகரணங்களிலும் ஏறி இறங்க வேண்டும் என அடம் பிடிக்க, சுப்புவும், வேலுவுமாக அவனைக் கூட்டிக் கொண்டு திரிந்தனர்.

         சிந்தாவும், முத்துவுமாக வளையல், தோடு செயின் என வாங்கிக் கொண்டிருந்தனர். முத்து ஒவ்வொன்றாக அக்காளிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டு அவள் தலையாட்டியதை எடுத்துக் கொண்டிருந்தாள்.

       இவர்கள் நின்ற கடைக்கு அருகே உள்ளக் கடையில் மகேஸ்வரி குடும்பப் பெண்கள் நின்றனர். அவர் மானாமதுரையிலேயே வசிப்பவர்கள், அதில் ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க பெண்மணி, மகேஷை " ஏண்டி அறிவுகெட்டவளே, உன் கூடப் படிச்சவனா காலேஜோட நிறுத்திக்க, அவளோட சேர்ந்து ராட்டினம் சுத்துன சரி. குமரனையும் அவளோட சேர்த்து ஏத்திகிட்ட. இதுங்க எப்படின்னு உனக்குத் தெரியாது. குச்சு வீட்டிலிருந்து மச்சு வீட்டுக்கு ஆசை படுறவளுங்கடி. அவ அக்கா காரிகிட்ட இருந்து ஒருத்தனை காப்பாத்துனோம். திரும்ப ஆரம்பிச்சு விடாத" எனத் திட்டிக் கொண்டிருந்தார்.

        " அம்மா, நீ வேற யாரோன்னு நினைச்சு பேசுற. அவ இந்த ஊரே இல்லை. பக்கத்துக் கிராமம்" எனத் தனது தோழியை அம்மா தப்பாக நினைக்கிறார் என நிரூபிக்க நினைத்தாள்.

         " நல்லா தெரிஞ்சு தான் பேசுறேன். அந்தா நிக்கிறா பாரு, அவுங்க அக்காகாரி, சிந்தா… சிந்தாமணி. பெரிய ராங்கிகாரி. உன் பெரியம்மா வாக்கப்பட்டுப் போன ஊரு தான். மேலப் பூங்குடில இருந்து தான வர்றா. இவுங்க அப்பன் பெரியம்மா வீட்டுப் பண்ணைக்காரன். ஆள் தெரியாம ஒன்னும் பேசலை. " என அந்தம்மாள் பேசவும்

        " அம்மா நீ எதையாவது பேசாத அவ காதில விழப் போகுது. அந்தப் புள்ளை எங்க கிளாஸ்லையே நல்லா படிக்கிற புள்ளை. " எனப் பேசியபடி அவள் தன் அம்மாவை இழுத்துச் சென்றாள் மகேஸ்வரி.

       இத்தனை பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த சிந்தா இறுகிப் போய் நின்றாள். முத்துவின் கவனம் பேன்ஸி ஸ்டோரில் இருந்தது. அவள் அடுத்தக் கடையில் தன் தோழி நின்றதைக் கூடக் கவனிக்க வில்லை. ஆனால் அந்தம்மா பேச ஆரம்பித்ததுமே பழக்கமான குரலாக இருக்கிறதே என அந்தக் குரல் வந்த திசையில் தலையைத் திருப்பாமலே காதைத் தீட்டி கவனத்தை வைக்க, மகேஷ்வர் அம்மாவின் வார்த்தை அவள் காதில் வந்து ஒலித்தது.

       ஐந்து வருடத்துக்கு முன் அந்த ஊர் கொடுத்த அவப்பெயர், பெரிய வீட்டுச் சிவநேசனை அவள் மடக்கப் பார்க்கிறாள். அவனது ஆசை நாயகி என்றெல்லாம் கதை கட்டியிருந்தது. அதனைத் தவறென நிரூபிக்க அவள் எடுத்த அதிரடி முடிவு சிங்கார வேலுவை திருமணம் செய்து கொள்வது. தனது மகளை ஊர் பொல்லாப்பு பேசவும் , துடித்துப் போன அய்யனார், வேலுவைப் பற்றி விசாரித்து விட்டுக் கொஞ்சம் தயங்கினார். ஆனால் அவள் பிடிவாதமாக நிற்கவும். அடுத்த நாளே கோவிலில் வைத்துத் திருமணம் நடத்தித் தன் மகளை மருமகனோடு அழைத்து வந்தார்.

       பெரிய வீட்டுக்குப் பக்கவாட்டிலிருந்த தனது ஜாகையை , ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தனது சினேகிதன் கட்டிய வீட்டிற்கு மாற்றினார். அன்று முதல் தான் பண்ணையம் பார்த்த பெரிய வீட்டோடு அந்த உறவை முடித்துக் கொண்டவர். சுய தொழிலாகக் கிடைத்த வேலை எல்லாம் செய்தார். மருமகனும் அவர் நினைத்ததற்கு மாறாக அவருக்கு மூத்த மகனாகத் தோள் கொடுத்தான். நல்ல உழைப்பாளிகள், தங்களுக்கென ஒரு கவுரவத்தை உருவாக்கி அதே ஊரில் வசித்தனர்.

       முதலில் வேலுவோடு கடனே என வாழ்ந்த சிந்தாவும் , ஒரு நிகழ்வுக்குப் பிறகு அவனை மனதார ஏற்றுக் கொண்டாள். அதற்குப் பிறகு பிறந்தவள் தான் அவர்களது மகள் சத்யா. அவர்களின் காதலின் அடையாளமாக மகளைத் தான் பார்த்தான் சிங்கார வேலு.

       வேலு வந்து சிந்தாவின் தோளைத் தொட்டுக் கூப்பிடவும் தான் சில மணித் துளிகள் தான் தொலைந்ததை உணர்ந்தாள். ஆனால் கணவன் கையிலிருந்த மகளைப் பார்க்கவும் தாய்மை சுரந்தது. மற்றதை ஒதுக்கி "சின்னவுக எந்திரிச்சிட்டாகளா . " எனக் கையை நீட்டப் பொக்கை வாய் சிரிப்போடு , இரவிலும் கண்கள் மின்ன மினி சிந்தாவான சத்யா அம்மாவிடம் தாவியது.

      " உன் சித்திக்காரி இன்னும் தொழாவுறாப் பாரு. ஏய் முத்து, எடுத்து முடிச்சிட்டியா. பாப்பா முழிச்சிட்டா." எனக் குரல் கொடுத்தாள். அதற்குள் சத்யா சிரிப்பு மாறி சிணுங்க ஆரம்பிக்கவும்.

        " உங்க அப்பு அம்புட்டையும் சுருட்டிட்டாரு, நம்ம வண்டி அங்க நிக்கிது. அதுல போய்ப் பாப்பாவை அமத்து" என்றான். " ஐயே, மெல்லமா பேசு, நீ கத்துறதுலையே எவனாவது வேடிக்கை பார்க்க வந்திடப் போறான்" என அவள் சிடுசிடுக்கவும்.

       " ம் வருவாக, வருவாக. கண்ணை நோண்டிற மாட்டேன். என் வண்டில போய் உட்காரு புள்ளை ஒருத்தனும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டானுங்க" என அனுப்பினான். சிந்தா தங்கையிடம் சொல்லி விட்டு, ஆற்றிலிருந்து கரையை நோக்கி நடந்தாள்.

         " ஏ சின்னக்குட்டி, சீக்கிரம் எடு. என்ன உன் கல்யாணத்துக்கா சாமான் வாங்குற. உனக்காக என் பொண்டாட்டியைத் தனியா அனுப்பி விட்டுருக்கேன். சீக்கிரம் எடு" என ஐந்நூறு ரூபாய் நோட்டை அவளிடம் கொடுத்தான்.

      " மாமா, ரொம்பத் தான் பேசாதீக. எங்க அக்காவை காத்துக் கருப்பு கூட அண்டப் பயப்படும். ஏதோ நீரு புருஷனாப் போயிட்டதால கூட இருக்கீரு" என அக்காள் புருஷனைக் கேலி பேசினாள்.

        " அது தான் தெரிஞ்ச கதையாச்சே. கரையிலிருந்து இறங்குற இடம் சரிவா இருக்கு. புள்ளையை வச்சுக்கிட்டு ஏறச் சிரமப் படுவா. சீக்கிரம் பில்லை போட்டுக் கிளம்பு, அவளைப் பிடிச்சிடலாம்" என மனைவி சென்ற திக்கையே பார்த்திருந்தான்.

        முத்து மாமனை ஓட்டிக் குமித்தாள். சிந்தா புள்ளை அழவும் , சீக்கிரம் பால் புகட்ட வேண்டும் என வேக நடையிட்டுத் தங்கள் வண்டியை நோக்கிச் சென்றவள், சறுக்குப் பாதையில் கால் வைக்கும் போது மணலில் காலை அழுத்தமாக வைக்க, அது சறுக்கிக் கொண்டு போனது. மகளோடு விழுந்து விடுவோமோ எனத் தாய் பறவையாக மகளை இறுக்கிக் கொள்ள. அவளைக் கீழே விழாமல் மேலிருந்து கை கொடுத்துத் தாங்கியது ஓர் வலிமையான கரம். அதன் பிடியில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள், நிமிர்ந்து பாராமல் தன் மகளை மார்பில் புதைத்துக் காத்து நின்றவள், காதில் "சிந்தாமணி" என வேலுவின் பலமான சத்தமும் , அதைத் தொடர்ந்து சன்னமாக, " மொதல்ல மேலவா சிட்டு" என்றவரின் குரலும் கேட்டது. நடுங்கும் கரங்களோடு மேலே வந்தவள், சட்டென எதற்கோ பயந்து அவர் கையை விடுக்க , மீண்டும் சமதளத்தில் தடுமாறியவளை வேலு வந்து அணைத்துக் கொண்டான்.

   குழந்தை வீறிடவும் எதையும் கவனியாமல், விழாமல் காப்பாற்றியவனுக்கு நன்றியும் தெரிவிக்காமல், வேலுவின் டாட்டா ஏஸ் வண்டியை நோக்கி ஓடினாள். வேலு மட்டும் கண்ணில் நன்றியோடு, அவரிடம் தலையசைத்து விட்டு மனைவி பின்னாடியே சென்றான்.

        டாட்டா ஏசில் பின்னால் அவள் ஏறும் முன், குழந்தையை வாங்கிக் கொண்டவன். அவள் ஏறி வசதியாக அமர்ந்ததும். மகளோடு ஏறி அவளிடம் கொடுத்தான். திரும்பி அமர்ந்து மகளைப் பசியமர்த்தியவள் , வேலு இறங்கப் போகும் முன், " மச்சான் இங்குட்டே உக்காரு. அப்புறம் இறங்குவ" என அவன் கையைப் பிடித்தாள்.

       ஏதோ சரியில்லை என உணர்ந்தவன், அவள் அருகிலேயே திரும்பி அமர்ந்தான். முத்து வரவும். அவளைக் கைப்பிடித்து ஏற்றியவன். "சுப்பு , நீ வண்டியை ஓட்டு " எனச் சாவியைத் தந்தான். ஏற்கனவே, அய்யனார் முன்னே அமர்ந்திருக்க, அவர் மடியில் சத்தி சாமியாடிக் கொண்டிருந்தான்.

     சுப்புச் சந்தோஷமாகச் சாவியை வாங்கிப் போனான். " மாமா அவனுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா. நீங்க பாட்டுக்கு எங்க உசுரோட விளையாடாதீக" என்றாள் முத்து.

     "அதெல்லாம் என் சிஷ்ய புள்ளை நல்லா ஓட்டுவான். நீ கவலைப் படாத வா" எனத் தைரியம் சொன்னான்.

     சிந்தா அமைதியாக இருந்தாலும் ஏதோ சரியில்லை என உணர்ந்தவன், அவளுக்கு முட்டுக் கொடுத்து, அவளுக்குப் பின்னால் அமர்ந்தவன், கொழுந்தியாளை வம்பிழுத்துக் கொண்டே வந்தான். இன்னும் சற்றுத் தூரத்தில் ஊர் பெண்கள் வண்டியை கை மறிக்க, சுப்பு நிறுத்தினான். வேலு எட்டிப் பார்த்தவன்.

" அக்காளுக்குத் தப்பாத தம்பி , ஊர்காரைங்க அம்புட்டு பேரையும் ஏத்திட்டு தான் வண்டி எடுப்பான்" என்றான். அதே போல் இன்னும் நான்கு பெண்களும் குழந்தைகளுமாக உள்ளே ஏறவும், மனைவியோடு சேர்ந்து அமர்ந்து கொண்டு மற்றவர் உட்கார இடம் தந்தான். சத்யா பசியாறியபடியே தூங்கி விடத் தன் மடிக்கு மாற்றிக் கொண்டான்.

        பொழுது விடியும் முன் மானாமதுரையிலிருந்து கிழக்கே செல்லும் சாலையில் ஐந்தாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலப்பூங்குடிக்கு வந்திருந்தனர்.

   சிந்தாவின் வாழ்வில் நடந்தவை என்ன, நடக்கப்போவது என்ன. மேலப்பூங்குடி கிராமத்தின் மண்ணின் மக்களோடு இனி வரும் அத்தியாயங்களில் பயணிப்போம்.


No comments:

Post a Comment