ஹாசினி சந்திரா -6
மஸ்கட் சாந்த்தேவ் மஹால் மாலை நேரம் நிரஞ்சனா தேவியும், அனுசுயா தேவியுமாக ஓரகத்திகள் ஹாலில் அமர்ந்திருந்தனர். வீட்டில் ஆண்கள் ஒருவரும் இல்லை. பிரதிபனின் நான்கு வயது மகன் வீரேந்திரன் சந்திரா சுருக்கமாக வீரு அவன் மட்டுமே ஆடித்திரிந்தான். அப்பா, அம்மா இருவருமே அவனை விட்டுவிட்டு தான் இந்தியா சென்றிருந்தனர். அதிபன் மனைவி மயூரா, தன் பத்து மாதக் குழந்தை சுபாஷினி சந்திராவைத் தூக்கிக் கொண்டு லிப்டிலிருந்து இறங்கினாள். அவள் நிரஞ்சனாவின் அக்காள் மகள்.
" சித்தி, சித்தப்பாக்கு போன் பண்ணிங்களா" என்றவாறே வந்து அமர்ந்தாள்.
" போய் இறங்கவும் பேசினாங்க. இப்பவும் போன் பண்ணாங்க. ப்ரதி தான் காரியம் செஞ்சுதாம். உங்க மாமாவை இன்னும் போய்ப் பார்க்கலை. அவருக்குச் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்கலாம்." என்றார் நிரஞ்சனா. பெண்கள் மூவருமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
" சந்து அண்ணா ,ரஞ்சியாவது அவங்க ட்ரிப்பை முடிச்சிட்டு வரலாம்ல. எவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கா" என மயூரா புலம்பவும்.
" உலகத்தை விட்டே போனவளோடு நமக்கென்ன விரோதம். அது தான் சந்துவை அண்ணிகிட்ட பேசச் சொன்னேன். ஆனால் அதுக்கு முன்னாடியே பேசிட்டேன். ஊருக்கு வர்றதுக்குப் பத்து நாள் ஆகும்னு சொல்லிட்டான்" என்றார் அனுசுயா.
" சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க அக்கா. ஆனாலும், சந்துவுக்குக் கல் மனசு தான். வர வர எதிலையுமே பட்டுக்க மாட்டேங்குது" என நிரஞ்சனா குறை படவும்.
" என்ன ரஞ்சி அப்படிச் சொல்லிட்ட. நேத்து ஹாசினி நியூஸ் வரவும் சட்டுனு முடிவெடுத்தது அவன் தானே" என்றார் அனுசுயா .
" அக்கா, சந்து பொறுப்பான பையன் தான், அதிலே எல்லாம் குறையே சொல்லலை. ஆனால் கொஞ்ச நாளா எதிலையும் விருப்பமா கலந்துக்க மாட்டேங்குது. எல்லாமே கடமையா தான் செய்யுது" என்றார் பின்னவர்.
" என்ன பண்ணச் சொல்ற, பிஸ்னஸ் பிஸ்னஸ்னு திரிஞ்சு இப்படி ஆயிட்டான். அவன் அப்பாவும் போகவும் நினைப்புப் பூரா தொழில் மேல தான். கல்யாணத்துக்குக் கூடப் பிடி கொடுக்க மாட்டேங்குறான். அண்ணி சொல்லிட்டே இருக்காங்களேன்னு இந்த ஹாசினி யை கட்டிக்கிறியான்னு கூடத் தனிச்சுக் கேட்டுட்டேன். ஒரு முறைப்பு தான் பதில். இப்ப என்ன செய்யறது சொல்லு" என்றார் மூத்தவர்.
" பெரியம்மா, எனக்கு என்னமோ, சந்து அண்ணா மனசில வேற யாரோ இருக்காங்களோன்னு தோனுது. " என மயூரா தன் கருத்தைக் கூறினாள். அது எப்படிச் சொல்ற என வாதம் விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. அதே நேரம் போர்டிக்கோவில் கார் வந்து நிற்க ரத்தின சிம்மதேவன் நிரஞ்சனாவின் மகன் நிரூபன் ராஜ சிம்மதேவன் வந்து சேர்ந்தான். தொழில் வட்டாரத்தில் நிருபன் தேவ். வீட்டில் நிருபன், அம்மாவுக்கு மட்டும் ராஜா.
இவனை இதற்கு முன் பார்த்தது போலும் இருக்கிறது, இவன் அவனா, இல்லை. இவன் அப்பாவை தான் பார்த்தோம். ரத்தன சிம்மதேவன் போல் உயரமாக இருந்தவன், அன்னையின் சாயலில் இன்னும் அழகாக இருந்தான். வீட்டின் கடைக்குட்டி ,அண்ணனுக்கு மனமாகாததால் கால் கட்டு இல்லாமல் சுற்றித் திரிகிறான். பிரம்மச்சரிய வாழ்க்கையை அணுவணுவாக ரசிக்கும் ரசிகன்.
அவனோடு வீட்டினர் நடந்ததைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். "நான் அத்தான் இரண்டு பேர்கிட்டையும் பேசிட்டேன்மா. அந்த ஆன்டியை எனக்கு அறிமுகம் இல்லாததால பேசல" என்றவன். தான் போன வந்த லண்டன் துபாய் கதையைப் பேசி, லண்டனல பெரிய ப்ராஜெக்ட், அநேகமா அண்ணன் டீல் முடிஞ்சு தான் வரும். இங்கே பிஸ்னெஸ் பார்க்கனுமேன்னு நான் ஓடி வந்தேன் என விவரம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ராஜா, உன் அண்ணண் பின்னாடியே வால் பிடிச்சிட்டு போயிடுறடா, நீ இல்லாமல் வீடே வெறிச்சோடிப் போகுது” என்றார் நிரஞ்சனா.
“மம்மி, இனிமே பாரு, உனக்கு நேரமே பத்தலைன்னு சொல்ற அளவுக்குப் பிஸியாகப் போற “ எனப் பூடகமாகப் பேசினான் நிருபன். ‘டே தம்பி, எதுவும் வேலை செஞ்சு வச்சிருக்கியா, சித்தி இவன் சொல்ற மாடுலேஷன் சரியில்லை , கொஞ்சம் கவனிங்க” என்றாள் மயூரா.
“ஏய் மயிலு, அண்ணண் ,தம்பிக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சு, வர்றவளோட சண்டை போடுவோம், வீட்டைக் கலகலப்பா வச்சுக்குவோம்னு ஏதாவது பிளான் போட்டாலும் பரவாயில்லை. நீயும் எதுவும் செய்யாதா, அவனவன் ட்ரை பண்ணையும் போட்டு குடு. உனக்கெல்லாம் எவ்வளவு ஹெல் பண்ணேன்” என்றான் நிருபன்.
‘டேய் , நல்லவனே , நீ என்னடா ஹெல் பண்ண, நானெல்லாம் சொந்த முயற்சியில் கல்யாணம் பண்ணிக்கிட்டவளாகும்” என்றாள் மயூரா. “அப்ப , நான் ஒன்னும் செயலை “ என நிரஞ்சனா கேட்கவும்,
“சித்தி, நீங்க செஞ்சதெல்லாம் உங்க கடமை. இப்ப உங்க மகனை கவனிங்க” என மீண்டும் எடுத்துக் கொடுக்கவும், ‘அட போடி நீ ஒருத்தி, இது பேச்சு தான். சந்துவுக்கு ஆகாமல் இவன் எதுவும் செய்யமாட்டான். “ என்றார் அன்னை. “இன்னும் பத்து நாள் உங்க அண்ணனுக்கு என்னடா வேலை “ என்றார் அனுசுயா.
“ உங்க மருமகளைக் கடத்தி வச்சிருக்கார், சீக்கிரம் கரெக்ட் பண்ணி கூட்டிட்டு வந்துடுவார்” என வேடிக்கையாகச் சொன்னான் நிருபன். “அப்படி மட்டும் மருமகள் வரட்டும், நீ என்ன கேட்டாலும் நான் தர்றேன் “ என்றார் அனுசுயா.
சுஹானா தீவு ப்ரீத்தியின் அழுத கண்களைப் பார்த்து கோபமாகி ஹாசினி இருந்த காட்டேஜ் அறையை வேகமாகத் தட்டினான் ஆறடி அரக்கன். அந்தத் தட்டலே அவளுக்கு அது யார் என்பதைச் சொன்னது. அவள் சிறிது நேரம் கோபமாக அமர்ந்திருந்தவள், அவன் கதைவை உடைக்க முற்படவும் வேகமாக வந்து திறந்தாள். அவள் திறக்கவும், அவன் பாயவும் சரியாக இருந்தது. அவளையும் சேர்த்துக் கொண்டு போய்க் கீழே விழுந்தான். ஆனால் அவன் ஹாசினி மீது விழுந்திருந்தாள் அவள் சட்னி தான், குறைந்தபட்சம் இடுப்பாவது ஒடிந்திருக்கும்.
ஆனால் கீழே விழும் முன் அவளைத் திருப்பித் தான் கீழே விழுந்தான், அவன் மீது ஹாசினி கிடந்தாள். அவள் தலை அவன் தாடையில் இடித்து, முன்னும் பின்னும் ஆறடி அரக்கனுக்குச் சேதாரம் அதிகம் தான். அவன் முகச் சுழிப்பில் அவனது வலி தெரிந்தது. முகத்தைத் திருப்பி அவனை வெகு அருகில் பார்த்தவள்,தாடிக்குள் இருந்து உதட்டு சுளிப்பிலும், கனல் கண்களும் மூக்கும் சுருங்கியும் இருந்ததில் அவன் வலியின் அளவை உணர்ந்தவள்
"சாரி, சாரி, சாரி. ரொம்ப அடியா, வலிக்குதா.சாரி, சாரி " என நிஜமான அக்கறையுடன் கேட்கவும் அவன் கோபம், வலி இரண்டுமே குறைந்தது போல் இருந்தது. அவன் மட்டும் கவிஞனாக இருந்தால், அவள் பார்வைக்குக் கவிதை எழுதியிருப்பான். ஆனால் கடத்தல்காரன் என்ன செய்வான் பாவம். அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.
அவளது சேலை இவர்கள் சுற்றி விழுந்ததில் இருவரையும் சுற்றி இருந்தது. அதை எடுக்கும் முன் மீண்டும் அங்கப்பிரதட்சணம் தான். இருவருமே சங்கடமாக உணர, அவனின் கனல் விழிகள் முதல் முறையாகக் கனல் கக்கும் சிவப்பைக் குறைத்துப் பழுப்பைக் கூட்டி வேறு ஒரு பாவத்தைக் காட்டியது. அவனும் அவளும் எழுந்து நிலைப் பெற்று நின்றனர்.
அவள் தான் ஆரம்பித்தாள், " நான் தான் திறக்க வந்தேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம். நீ பாட்டுக்கு கடத்திட்டு வந்திருக்க, அதுக்கு ரியாக்ஸனா ஒரு மனுசிக்குக் கோவப்படக் கூடவா உரிமை இல்லை" என இப்போதும் ஹாசினிக்குக் கோபம் தான் ஆனால் ஒரு கட்டில் இருந்தது.
" எவ்வளவு நேரம் தட்டுறேன். திறக்கிறேன்னு ஒரு வார்த்தை சொன்னியா. எல்லாம் திமிர். " என்றான் விடாப்பிடியாக.
" என்ன திமிர், நம்பிக்கை துரோகம் பண்ணா கோபம் வராதா. இதுங்களைத் தான் ஆறு மாசமா பாடி கார்டா வச்சிருந்தேன் . ஒரு அரக்கனுக்குப் பலி கொடுக்க, என்னை நல்லா பாதுகாத்ததுங்க" என உச்சஸ்தாயில் ஆரம்பித்து ஸ்வரத்தை குறைத்தாள்.
அரக்கனிடமே, அரக்கன் என்று சொல்லத் தைரியம் வேணுமே. ஆனாலும் ஹாசினியின் அசட்டுத் தைரியத்துக்கு என்றுமே குறைவில்லை. " வாட், திருப்பிச் சொல்லு" எனப் புருவத்தை நெறித்தான்.
" எனக்கு என்ன பயமா, ஒரு பொண்ணைக் கடத்தனவனை அரக்கன்னு சொல்லாமல் வேற என்ன சொல்லுவாங்க ஹீரோன்னு சொல்லுவாங்களோ " என்றாள்.
அவளையே பார்த்திருந்தவன், " ஓகே நான் அரக்கனாவே இருந்திட்டு போறேன். அந்தப் பொண்ணு ப்ரீத்தி என்ன செஞ்சா . அவளை எதுக்கு ஹார்ட் பண்ற " என்றான்.
"ஹார்ட் பண்றேனா . அவள் என்ன வேலை செஞ்சிருக்கா. ஆறு மாசமா என் குடும்பத்தில் ஒருத்தியா வச்சிருந்தேன். என்னைக் கடத்த விட்டுக் கூடவே வந்திருக்காளே. அவளை என்ன சொல்றது. அவளுக்குச் சோறு போட்ட எங்கம்மா எப்படித் துடிப்பாங்கன்னு , கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தாளா. நான் சொன்னதெல்லாம் ரொம்பக் கம்மி" என அவள் சொல்லவும்.
" லுக், ப்ரீத்தி இதைச் செஞ்சதுக்கு அவள் பக்கமும் எதாவது ஞாயம் இருக்கும். சும்மா உன்னை வச்சு மட்டும் அவளை நோகடிக்காத. இனி அவளை எதாவது சொன்னா நான் மனசனா இருக்க மாட்டேன்" என அவன் உருமவும்.
இளக்காரமாய் உடலைக் குலுக்கி, "மஹூம், இது வரைக்கும் நீ என்கிட்ட மனுசனாவே நடந்துக்கலை அரக்கன் தான், நல்லா ஆறடிக்கு வளர்ந்த அரக்கன். அது இரண்டும் நம்பிக்கை துரோகம் பண்ண உன் அடியாள் அரக்கன், அரக்கி. உங்களுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு. " என அவள் பேசிக் கொண்டே போகவும், அடக்கி வைத்திருந்த அவனது கோபம் மீண்டும் இலக்கை அடைய ஆரம்பித்தது.
காட்டேஜின் கதவை அடைத்து விட்டு அவளை நெருங்க ஆரம்பித்தான்." வேண்டாம் வராத, மரியாதையா போயிடு" என்றாள்.
" நீதான் எங்களுக்கெல்லாம் மரியாதையே கிடையாது, அரக்கன், அரக்கின்னு பட்டம் குடுத்தியே. அது தான் அரக்கன் என்ன பண்ணுவான்னு ஒரு ட்ரையல் காட்டுறேன்" என அவளைப் படுக்கையில் தள்ளி அவளைச் சிறை செய்ததைப் போல் கைகளை ஊன்றி நின்றான். அவள் அவனைக் காலால் உதைத்து , கைகளால் தள்ளத் தயாராக இருந்தாள். ஆனால் இரண்டையும் அசைய விடாமல் அவள் மீதே கவிழ்ந்து இருக்கவும், முகத்தில் முதலில் பதட்டத்தைக் காட்டியவள், பின்னர் ஓர் கசந்த முறுவலோடு, " அவளைப் பேசினது தப்பே இல்லைனு ப்ரூப் பண்ற. அதிகப் பட்சமா ஒரு பொண்ணுகிட்ட உங்க மேன்லினெஸ்ஸை இப்படித்தானே காட்டுவீங்க. இதுக்குத் தான் என்னைக் கடத்துனேன்னா தாராளமா நடத்திக்கோ. அரக்கன் தானே நீ. இதைத் தவிர உன்கிட்ட வேற என்னத்தை எதிர் பார்க்க முடியும்" எனக் கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் படுத்திருந்தாள்.
அவளது எதிர்ப்பை எதிர் பார்த்தவன், அவள் திமிரும் போது அடக்கி, அடங்கிய பின் ஒரு மிரட்டலோடு அவளை எச்சரித்து விலக வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை அணுகியவன் தான் அடிவாங்கியவனாக அவளை விடுத்து எழுந்தான். அவன் மேலும் முன்னேறுவான் எனப் பார்த்தவள், அவனது விலக்கலைப் பார்த்து அவளும் பின்னோடு எழுந்தாள். அவன் வெளியே செல்லும் முன், அவள் அழைத்தாள், " ஒரு நிமிசம்" எனவும் அவன் திரும்பினான்,
" எங்கம்மாவுக்கு, நானும் எங்கப்பாவும் மட்டும் தான் இருக்கோம். என்னைக் கடத்தினதைக் கூட எங்கப்பாகிட்ட சொல்லி ஆறுதல் தேட முடியாது. எங்கப்பா சிங்கம் மாதிரி இருந்த மனுசன், இப்ப " எனச் சொல்லும் போதே அவள் கண்ணில் குளம் கட்டியது. திரும்பி நின்று சமாளித்தவள், தன் குரலைச் சீர் படுத்திக் கொண்டு,
" சரி கோபம் எல்லாம் இல்லாமல் நேராவே கேட்கிறேன். என்னை எதுக்குக் கடத்தின. உன்னைப் பார்த்தா காசு பணத்துக்காகக் கடத்தினவனா தெரியலை. சப்போஸ் நான் தான், என் உடம்பு தான்" என அவள் சொல்லும் முன் " ஷட்அப்" என உறுமினான் அவன்.
அவள் விடாப்பிடியாகத் தொடர்ந்தாள், " அதிகப் பட்சம் ஒரு பொண்ணுகிட்ட இருந்து இது இரண்டைத் தானே எதிர் பார்ப்பாங்க. இரண்டுக்குமே நான் ரெடி. டேக் மீ. " என அவள் மீண்டும் சொல்லவும், " ஐ செட் ஷட்அப், வாயை மூடு" என அவன் அந்த அறையிலிருந்து வெளியே கிளம்பினான்.
" எனக்கு எங்கப்பா அம்மாவோட சேஃப்டி முக்கியம்" என அழுகையோடு கத்தினாள். திரும்பி நின்றவன், " அவங்க பாதுகாப்பா இருக்காங்க, இருப்பாங்க. ஆனால் நீ தான் அதிகப் பட்ச விலை கொடுக்க வேண்டியிருக்கும். அது உன் சம்மதம் இல்லாமலே நடந்துக்கிட்டு தான் இருக்கு. ட்ரெஸ்ட் மீ. முடிஞ்ச வரை சீக்கிரம் இங்கிருந்து கொண்டு போய் விட்டுடுவேன்" என வெளியேறினான்.
ஹாசினி அதே இடத்தில் அமர்ந்து கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள். " அம்மா" என வந்த கேவலில் ப்ரீத்தி அவள் தன்னைச் சொன்ன வார்த்தைகளையும் மறந்து ஓடி வந்து அவளைத் தேற்றினாள். "மேம் எந்திரிங்க. இன்னைக்கே இரண்டு தடவை மயங்கிட்டீங்க. மயக்க மருந்து வேற சேர்ந்து உடம்பை அசத்தும். ரெஸ்ட் எடுங்க" என அவளைப் பெட்டில் அமர வைத்தாள் ப்ரீத்தி.
" சாரி, உன்னைக் கோபத்தில் அப்படிப் பேசிட்டேன் " என்றாள் ஹாசினி. " எனக்குக் கூடப் பிறந்த அக்கா இருந்தா, என்னை எப்படித் திட்டுவாங்களோ, அதே உரிமை உங்களுக்கு இருக்கு மேம். உங்க மானத்துக்கு ஒரு பிரச்சனைனா அதுக்கு முன்னாடி என் உயிர் போயிருக்கும்" என ப்ரீத்தி சொல்லவும், அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள் ஹாசினி சந்திரா.
மேனகா சந்திரா வீட்டுக்கு வரவுமே, ப்ரதிபனும் ஆராதனாவும் சந்திராவைப் பார்க்கக் கிளம்பினர். மருத்துவரின் ஆலோசனைப் படி ஒவ்வொருவராகச் சென்று பார்க்கத் திட்டமிட்டிருந்தனர்.
மேனகாவிற்குத் தனக்கு வந்த எஸ் எம் எஸ் ரகசியத்தை யாரிடம் நம்பிக்கையாகப் பகிரலாம், அதிலிருந்து ஒரு தெளிவு பிறக்குமா. மகள் உயிரோடு இருப்பாளா எனப் பேசவேண்டும் போலிருந்தது. மாடியிலிருந்த ஹாசினியின் அறைக்குச் சென்று சுற்றி வெவ்வேறு போஸ்களில் அவள் சிரிக்கும், சேஷ்டையோடு போஸ் கொடுத்த படங்களைத் தடவிப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கீழே ரத்தனதேவன் எல்லாவற்றையும் பார்த்தார். மேனகா அவர் வந்தவுடனேயே , " ராம்ஜி ஸ்தானத்திலிருந்து நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதம் தான் அண்ணா. அவளே போயிட்டா. அவரையாவது காப்பாத்தனும். என்னைக் கேக்கனும்னே இல்லை. பானு அக்கா இங்க இருந்தா என்ன முடிவு எடுப்பீங்களோ. அதைச் செய்ங்க" என்று விட்டார்.
ஹாசினி அறைக் கதவைத் திறந்து தான் வைத்திருந்தார். ஆனாலும் தட்டும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தார். சிறு வயது சந்திராவாக அதிபன் நின்று கொண்டிருந்தான். தலையை ஆட்டி உள்ளே வாவென அழைத்தார்.
" காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலையே. சாப்பிட வாங்கம்மா" என்றான் அதிபன். " பசியே தெரியலைப்பா. எந்தக் கூட்டத்தில் இருந்தாலும், நேரம் தவறாமல் போன் அடிச்சு கேட்டுருவா. இன்னைக்கு அவள் முகத்தைக் கூடப் பார்க்க முடியலையே" என அழுதார்.
மேனகாவை ஷோபாவில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்த அதிபன், " மது தான் என்னை அனுப்புனான்னு வைங்களேன். வாங்க சாப்பிட்டு வரலாம். நீங்க நல்லா இருந்தால் தானே அப்பாவைப் பார்க்க முடியும். அம்மா இன்னைக்கு ஒரு வேகத்தில போயிட்டாங்க. ஆனால் உண்மையில் அவங்களால அவங்க உடம்பையே பார்த்துக்க முடியாது. நீங்க தான் அப்பாவை தாங்கனும்" என நிறையப் பேசிய அதிபன். மேனகா தங்கள் குடும்பத்துக்கு மிகவும் தேவையான ஒருவர் என அவர் மனதில் பதிய வைத்தான்.
" அதி, அந்தக் கதவை சாத்திட்டு வா. உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்" என்றவர். மொபைல் போனை எல்லாம் அணைத்து வைத்துவிட்டு அதிபன் சந்திராவிடம், அன்று இரவு வந்த குறுஞ்செய்தி பற்றிச் சொன்னார்.
" நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா மதுவுக்கு அசம்பாவிதமா எதுவும் நடக்கலை." என்றவன், " அப்போ பாம்ப்ளாஸ்ட் செயற்கையானது " என யோசித்தான்.
" அம்மா இது மட்டும் உண்மைனா, நம்ம மது நமக்குத் திருப்பிக் கிடைச்சிடுவா. " எனச் சிறுவனாட்டம் மகிழ்ந்தவன், " ஆனால் என்கிட்ட சொன்னதை, அம்மா, மாமா யார்கிட்டையுமே சொல்ல வேண்டாம். அடுத்துப் போலீஸ் விசாரணை வரும். அவங்கள்ட்டையும் இதைப் பத்தி சொல்ல வேண்டாம்" எனத் தீவிரமாக யோசித்தபடி சொன்னான் அதிபன்.
" ஏம்பா அப்படிச் சொல்ற, போலீஸ்கிட்ட சொன்னா, அவங்க தேடி கண்டுபிடிப்பார்கள் . நமக்கு நம்ம மது கிடைப்பாளே" என்றார் மேனகா.
"இல்லைமா, எனக்கு இது என்னவோ பெரிய விசயமா தெரியுது. யார் இந்த விளையாட்டை விளையாடுறாங்கன்னு தெரியலை. போலீஸ் அவர்களா கண்டுபிடிச்சா கண்டு பிடிக்கட்டும் . நீங்க எதுவும் சொல்லாதீங்க. நம்ம இந்தக் கேஸை சீக்கிரம் முடிச்சிட்டு அப்பாவை இங்கிருந்து கூட்டிட்டுப் போகனும். இந்த நஞ்சப்பா மாதிரி ஆளுங்க ஏதாவது ஊழல் செஞ்சுட்டு அப்பா மேல அதைச் சுமத்துவாங்க. அவரோட இத்தனை வருச அரசியல் வாழ்க்கையையும் கலங்கப் படுத்திடுவாங்க. அதுக்கு நம்ம விடக்கூடாது" என்றான் மகன்.
" மது உயிரோட இருந்து, நம்மளை தேடி இங்க தானே வருவா" எனக் கேள்வி எழுப்பினார் மேனகா.
" மது உங்ககிட்ட வரனும்னா, நீங்க இருக்க இடத்துக்குத் தான் வருவா. நாம இங்கிருந்து எல்லாருக்கும் தெரியிற மாதிரி மீடியாவுக்குச் சொல்லிட்டு தான் போவோம். அவ எங்க இருந்தாலும் விசயம் தெரியும். நீங்க கவலை படாதீங்க. ஆனால் அப்பாவை இங்கிருந்து கூட்டிட்டுப் போக இது தான் சரியான நேரம்" என்றான். மேனகாவும் யோசித்தார்.
ஆனால் ஹாசினிசந்திராவின் படுகொலையை ஆராய நியமித்திருக்கும் அந்த ஐபிஎஸ் ஆபீஸர், அத்தனை ஏமாளி அல்ல இவர்கள் அறியாமலே இவர்களிடம் ரகசியத்தைக் கறந்து விடும் மறத்தமிழன் என்பதை இவர்கள் அறிந்தார்கள் இல்லை.
மாற்றாந்தாயும் மகனுமாகத் தங்கள் குடும்ப விசயத்தைப் பேசிக் கொண்டிருந்தனர். " அப்பா மினிஸ்டர், துணை முதல்லர்னு வந்த பிறகு, அவரோடா ஸ்பெண்ட் பண்ற ஒரு மாசம் இல்லாமல் போயிடுச்சு . அதனால நாங்க மதுவை ரொம்ப மிஸ் பண்ணோம். அத்திலையே அவளோடான உறவும் அப்படியே விலகிடுச்சு. " என்றவன்.
" எங்க கல்யாணத்துக்குக் கூட நீங்களும் மதுவும் ஏன்மா வரலை. முடி போட நாத்தனார் எங்கனு கல்யாணத்தில் ஐயர் கேட்கும் போது, நாங்க மதுவை ரொம்பவே மிஸ் பண்ணோம்" என்றான் அதிபன்.
" பெரியவன் கல்யாணத்தின் போது அவளுக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. அதிலிருந்து எமோசனலா ஆனாலே மூக்கில் ரத்தம் வரும். அதுனால அப்போ வரலை. உன் கல்யாணத்தப்போ ஸ்டேட்ஸ்ல இருந்தா " எனப் பதில் தந்தார். " நீங்க ஏன் வரலை" என்றான் அதிபன்.
" என்ன இருந்தாலும், உங்க அப்பாக்கு நான் இரண்டாந்தாரம். கல்யாணம்னா உஙாகச் சொந்தக்காரங்க எல்லாரும் வருவாங்க. நான் வந்தால் அக்காக்கு சங்கடமா இருக்கும்னே வரலை. அதுவும் போக, அந்தச் சந்தர்பம் அக்காவுக்கும், ராம்ஜிக்குமானது. அதை நான் கெடுக்க விரும்பலை" என்றார். " நீங்க கிரேட்மா" என்றான் அதிபன்.
" அதி இன்னொரு விசயம், நான் ஒரு மெசேஜ் வந்ததுன்னு சொன்னேனே அதே மாதிரி இன்னொரு ஆளும் ஆறுதல் சொன்னாங்க. " எனச் சந்திர தேவைச் சொன்னார் மேனகா.
" ஆனால் சந்து, லண்டனில் இருக்கான். இதைச் சொல்லனும்னா. ஏதோ ஏற்பாடு செஞ்சிருக்கனும். நான் பேசுறேன்மா. ஆனால் எமகாதகன். ஒரு வார்த்தை வாயிலிருந்து வாங்க முடியாது. அப்பா மாதிரி பத்து பங்கு. " என்றான் அதி.
" பேசும் போதே தெரிஞ்சது. ஆனால் அந்தத் தம்பிக்கு நம்ம மதுவைப் பிடிக்காதோ" என்றார்.
" அதெல்லாம் சின்னதில் மதுவை , ஐயா கூட்டிட்டே திரியிவான். இப்ப நிறைய நாடுகள் சுத்துறான். பெரிய பிஸ்னெஸ் மேகனெட். காலம் மாறும் போது எண்ணங்களும் மாறும். அதுக்கு அப்புறம் மதுவைப் பற்றி அவன் வாயிலிருந்து பேச்சே வராது. அம்மா விடாமல் கேட்பாங்க. அவன் பதிலே சொல்லாமல் போயிடுவான். நம்ம ஒரு அளவுக்கு மேல யாரையும் ஃபோர்ஸ் பண்ண முடியாதே. அப்கோர்ஸ் அதைச் செய்ய முடியாமல் தானே அம்மா அப்பாவை விட்டுட்டு வந்தாங்க. " எனப் பேசிக் கொண்டிருந்தவன் நடுவில் சாப்பாட்டைக் கொண்டு வரச் சொல்லி, அவரைச் சாப்பிட வைத்து, தானும் இரண்டு வாய் உணவை வாங்கிக் கொண்டான். மேனகாவுக்கு மகளுக்கு ஊட்டியது போலொரு நிறைவு இருந்தது.
முன் இரவில் ஹாசினி நன்றாக உறங்கி விட்டாள். பின்னிரவில் காடு மலை கடல் கடத்தல் கூட்டம் என அவள் வாழ்வில் தலை கீழாய் பிரட்டிய அந்த நாளின் அலைப்புறுதல் அவள் தூக்கத்தைப் பறித்தது. சுற்றி கடல் இருப்பதால் ஆதவன் மலை முகட்டிலிருந்து எட்டி ஹாசினியை கண்ணடிக்க வந்தான்.
அதிகாலை லேசான சிலுசிலுப்பும் புதிய காலையும் பெங்களூருவின் க்ளைமேட்டை விட இன்னும் நன்றாக இருந்தது. நேற்று அவளது தாய் தந்தையை நலமாக இருப்பார்கள் என்று சொன்னதே அவளுக்கு ஒரு தெம்பைத் தந்தது.
இந்த அரக்கன் பேச்சையா நம்புகிறாய் என ஒரு மனசாட்சி கேட்கவும், அவன் வார்த்தையைத் தானே நம்பி ஆக வேண்டும். வேறு வழி என மற்றொரு மனம் சப்பைக் கட்டுக் கட்டியது.
அதே எண்ணத்தோடு, எழுந்தவள், தன் சேலையைச் சரியாகக் கட்டிக் கொண்டு மெல்ல காட்டேஜை விட்டு வந்தாள்.
சுற்றி அரணாக மலைகள் சிறிதும் பெரிதும் மேடும் பள்ளமுமாகச் சூழ்ந்திருக்க , நடுவிலிருந்த பகுதியில் இந்தக் காட்டேஜ் இருந்தது. அதன் எதிரே ஒரு கிலோ மீட்டர் சமவெளியும் அதனைத் தாண்டி சின்னச் சின்னப் பாறைகளும் தூரத்தே கடலும் தெரிந்தது. வெளியே வந்து நடந்தவள் இலக்கின்றிச் சுற்றிப் பார்த்தாள். இதற்குப் பின்புறம் நேற்று ப்ரீத்தி அழைத்துச் சென்ற இடங்கள் நினைவில் வர அந்தப் பக்கம் ஒதுங்கி விட்டு பிறகு சுற்றிப் பார்க்கலாம் என நடந்தாள்.
ப்ரீத்தி உள்ளே தூங்கிக் கொண்டிருக்க, மற்ற இருவரும் இருக்கும் இடமே தெரியவில்லை. இதை அடுத்தக் காட்டேஜில் இருப்பார்கள் என எண்ணிக் கொண்டவள், அந்த அரக்கன் சொன்ன வார்த்தைகளை நினைத்தாள். கடத்தப்பட்டவள் எனில், கை கால்களைக் கட்டி போட்டல்லவா வைத்திருக்க வேண்டும் அந்த அளவு பரவாயில்லை என ஒரு மனமும். ஆமாம் இந்தத் தீவை விட்டு எங்கே தப்பித்துச் செல்ல இயலும், அந்தத் தைரியத்தில் தான் கட்டாமல் விட்டிருக்கிறான் என மற்றொரு மனமும் வாதாடியது. ஆனால் இவன் எதற்கு என்னைக் கடத்தினான், அப்பா, அம்மா பாதுகாப்பாக உள்ளார்கள் என்றானே. யார் இவன். இதற்கு முன் பார்த்து இருக்கிறோமா என அமைதியாக நடந்த அவளின் உள்ளே ஆயிரம் கேள்விகள்.
நேற்று பார்த்த சிற்றோடை வந்தது , அதனைப் பார்த்தவள் காலை நனைத்து, உள்ளே விட்டு ஆழம் பார்த்தபடி கெண்டைக்கால் அளவே இருக்கவும் தைரியமாக நடந்தாள்.
யோசனையில் நடந்தவளுக்கு, நூறு, ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் புடை சூழ எப்போதும் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழலிலிருந்து, தனது கோபத்தை, உணர்வுகளை வெளிக்காட்டவாவது முடிகிறதே என நினைத்தாள்.
அம்மா இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பார், நேற்று முன்தினம் தானா தனது அந்தரங்கத்தைக் கூட என்னிடம் பகிர்ந்து கொண்டாரே, எவ்வளவு சந்தோஷமான தருணம்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பத்தி பன்னிரண்டு வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கும். மணமானவர் என்று தெரிந்தும் எப்படி அப்பா மீது அம்மாவுக்குக் காதல் வந்தது என வியந்தாள். ஆனால் அடுத்தக் கனமே , என் அப்பாவைப் பார்த்தால் யாருக்குத் தான் ஆசை வராது. அவரது சிரிப்பே போதுமே என மெச்சிக் கொண்டவள், நீங்க நல்லா இருக்கனும்பா. அதுக்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார், என மனதில் உறுப்போட்டவள், இந்த அரக்கனும் கொஞ்சம் நல்லவனாக இருப்பானோ, வன்முறையாகக் கையாள வந்தவன் அதை விடுத்துப் போனானே. ப்ரீத்தியைச் சொன்னதற்கு எவ்வளவு கோபம். என எண்ணங்கள் தறிகெட்டு ஓட அவளும் நடந்தாள்.
காலை ஆறரை மணியளவில் எழுந்த ப்ரீத்தி, பக்கத்துக் கட்டிலில் ஹாசினி இல்லை எனவும் அவசரமாக எழுந்து வெளியே வந்தாள். சுற்றிலும் கண்ணைத் தேடுதல் வேட்டைக்குப் பணித்தவள், அதில் ஹாசினி சிக்கவில்லை எனவும் பதட்டம் தொற்றியது. காட்டேஜுக்கு பின்சென்று பார்த்து வந்தவள், எதிர்ப்பட்ட பவனிடம் கேட்டாள். அவன் மறுப்பாகத் தலையாட்டவும், இருவருமாகப் பாஸைத் தேடி வந்தனர்.
" பாஸ், மேடத்தைப் பார்த்திங்களா. " என்றான் பவன்.
ஒரு மூங்கிலைக் கத்தி வைத்து அறுத்துக் கொண்டிருந்தவன், " என்னடா சொல்ற. அதுக்குள்ள எந்திரிச்சிட்டாளா" எனப் பதில் கேள்வி எழுப்பினான்.
" பாஸ் மேடத்தைக் காணோம்" என ப்ரீத்தி பதட்டமாகப் பதில் அளிக்கவும், அவனும் எழுந்து கொண்டு, பேக் ஸைட் பார்த்தியா என விசாரணையுடன் இருவரையும் ஒவ்வொரு பக்கம் பார்க்கச் சொல்லி விட்டு, அவன் பின் பக்கம் ஓடினான். கவனமாக ஆராய்ந்ததில் அவளது கால் கொலுசு ஓடையின் முன்னே கிடந்தது. அதை எடுத்துக் கொண்டவன், குரல் எழுப்பிக் கொண்டே அவளைத் தேடிச் சென்றான்.
No comments:
Post a Comment