ஹாசினி சந்திரா-2
பெங்களூரு ஹாஸ்பிடலில்,நள்ளிரவில் மகள் ஹாசினி சந்திரா குண்டு வெடிப்பில் கொல்லப் பட்டாள் , என்ற செய்தி அறிந்ததிலிருந்து தன் கணவரைச் சென்று பார்க்கத் திராணி இல்லாமல் செவிலியரிடம் அவரை பார்க்கும் பொறுப்பை அளித்துவிட்டு இரண்டு அறைத் தள்ளி ஓர் அறையிலமர்ந்து தன்னால் அழுது தவித்துக் கொண்டிருந்தார் மேனகா தேவி .
அவர் கதறியபடி அமர்ந்திருக்க, அவரது போன் அலறிக் கொண்டே இருந்தது. எல்லாமே தகவல் அறிந்து பல வித பாவனையில் செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ளவும், அனுதாபம் தெரிவிப்பது போல் எள்ளி நகையாடியதுமான பல குரல்கள். அழுது ஓய்ந்து போனார். இத்தனை வருடத்தில் தனக்கென யாரையுமே தான் நண்பர்களாய் சேர்த்துக் கொள்ளவில்லையே எனவும் சகலத்துக்கும் மகளையும் கணவரையுமே சார்ந்து இருந்ததும் புரிந்தது.
அதே நேரம் சந்திராவின் அலைப்பேசியும் மேனகாவிடம் தான் இருக்கும். வெளி நாட்டு அழைப்பு பானு என்று வந்தது. சட்டென எடுத்து விட்டார் மேனகா.
" மேனகா, இதென்ன கேள்விப்பட்ட செய்தி உண்மையா. மதுவுக்கு என்ன ஆச்சு" என்ற மற்றொரு தாயின் பரிதவிப்பான குரலில் மேனகா கதறிவிட்டார்.
" அக்கா, மொத்தமாப் போச்சுகா, என் மகளையே பலிக் குடுத்திட்டேனே. காலையில வந்து ஹாஸ்பிடல்ல பார்த்து பேசிட்டுப் போனா, ஒரு மணி நேரம் முன்னாடி ப்ளைட் ஏற போறேன், காலையில பேசுறேன்னு சொன்னாலே, இப்ப இப்படிச் சேதி வருதே. அவரைக் காப்பாத்தனும்னு மதுவை இந்தச் சாக்கடையில் இறக்கி விட்டேன். இப்படி மொத்தமா போவான்னு தெரியலையே. சொல்லி அழ கூட நாதி இல்லாமல் போயிட்டேன்கா " எனச் சொல்லிச் சொல்லி அழுதார். "மேனகா, அப்படியெல்லாம் பேசாத, நான் இருக்கேன், என் கடமையைத் தான் நீ பார்க்குற, இது எனக்கு விதிக்க வேண்டியது நீ தாங்கிக்கிட்டியே" என அழுதார் பானு.
“அக்கா, நீங்க ஏன் அரசியல் வேணாம்னு ஒதுங்குனீங்கன்னு , இப்ப அனுபவிச்சுத் தெரிஞ்சுகிட்டேன். புருஷனையும் படுக்கையில் தள்ளி, மகளையும் பறி கொடுத்து, எண்ணத்தைச் சாதிச்சேன்.
ஆனால் இதுக்கெல்லாம் சாத்தியமா நான் ஆசைப்படவே இல்லைகா, ராம்ஜி உங்களோட இருக்க வரைக்கும் கூட அவரைத் துணையா நினைக்கலை, காப்பாத்துற சாமியா தான் நினைச்சேன், உங்களுக்கு அப்புறம் அவருக்குத் துணையா நிக்கனும்னு நினைச்சேன், அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா .
இன்னைக்குக் காலைலே கூட மது, பெத்தம்மாட்ட பேசும்மா, நம்ம பிரச்சினை எல்லாம் தீரும்னு சொன்னாலே, நான் தான் சந்தோசமான பொழுதை எடுத்துட்டு வேதனையை உங்களுக்குக் குடுக்கறதான்னு வேண்டாம்னேன்.
அக்கா, ஆனா அவ சொன்னது தான் சரி, நீங்க வந்து அவரைக் கூட்டிட்டு போயிடுங்க, இங்கே இருந்தா அந்தப் பாவிங்க, ராம்ஜியையும் கொன்னுடுவாங்க." எனறவர் மீண்டும் 'மது, மதுமா ,அம்மாவை விட்டுட்டு எப்படிடா போனே, அப்பா ,அம்மாவுக்காக இந்தச் சாக்கடையில் கூட இறங்குனியே , அந்த எமன் கிட்டப் போகும் முன்ன போராடலையா” எனக் கதறினார் மேனகா தேவி. அவருக்குச் சமாதானம் சொல்லும் விதமாய்க் கேட்டிருந்த பானுமதி, அவள் அலுத்து ஓய்ந்த நேரம்,
"இந்தருக்குத் தெரியுமா" என அழுகையோடு கேள்வி எழுப்பினார்பானு.
" இல்லைகா, இல்லை ராம்ஜிட்ட சொல்லலை. ஒரே நேரம் என்னால என் மகளோட சேர்த்து புருஷனையும் இழக்க முடியாது" என மறுகினார். ஒரு மணி நேரம் போனில் அழுது ஓய்ந்த மேனகா அழுகையோடு எஸ். ஆர். சந்திராவின் நிலையையும் எடுத்துச் சொன்னார்.
" மேனகா, அடுத்த ப்ளைட்ல நான் வர்றேன். இந்தரை இங்க கூட்டிட்டு வந்துடுவோம். நாம இழந்தது எல்லாம் போதும். நீ தைரியமா இரு. மது உன் கிட்ட தான் இருப்பா. உன்னைச் சுத்தி தான் அவள் நினைப்பு பூரா இருக்கும், நீ அழுதா அவ தாங்குவாளா, தைரியமா இரு " என மேனகாவுக்குப் பேச இடம் தராமல் பேசி வைத்தார் பானுமதி.
செவிலி ஓடி வந்து, " சார் கூப்புடுறாங்கம்மா. கண்ணைத் தொடைச்சிட்டு வாங்க" என்றாள். அவசரமாக உள்ளே ஓடிய மேனகா, கட்டிலில் எழுந்து அமர்ந்திருந்தவரிடம் என்ன வென வினவவும், " புட்டிமா வந்துட்டாளா. இன்னும் படிப்பு முடியலைல, அமெரிக்காலத் தானே இருக்கா" என்றார் . வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆம் எனத் தலையாட்டினார் மேனகா.
" புட்டிமாட்ட பேசினியா நல்லா இருக்காளா. என் கூடப் பேசவே இல்லையே" என்றார். காலையில் தான் மகள் வந்து பேசி மகிழ்ந்து சென்றாள். அதுவும் அவருக்கு நினைவில் இல்லை. ஆனால் மனைவி மக்களை மட்டும் பசுமரத்து ஆணி போல் நினைவிலிருந்தது.
" இப்ப காலேஜ் ல இருப்பா ராம்ஜி, அப்புறமா பேசலாம் " துக்கத்தைத் தொண்டைக்குக் கீழேயே அடக்கியபடிச் சொன்னார். சிறிது நேரம் அவரைக் கட்டிலில் படுக்க வைத்து இவர் அருகில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டார். அவளுடைய ராம்ஜி வார்த்தைகளால் ஆறுதல் சொல்லாவிட்டாலும், அவர் கையைப் பற்றியதிலேயே ஒரு தெளிவு கிடைத்தது. போனை சைலண்டில் போட்டபடி அருகிலேயே வைத்திருந்தார்.
" ராம்ஜி, நம்ம மகளுக்கு எதுவும் ஆகியிருக்காதுல்ல. உங்களை மாதிரி எனக்கும் ஏன் கடவுள் மறதியைக் கொடுக்கலை. எனக்குச் சித்திரவதையா இருக்கே. ஏதாவது ஆறுதல் சொல்லுங்க" என மனதில் உருப் போட்டுக் கொண்டிருந்தார்.
சந்திராவின் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. "உன் மகளைக் கார் பாம்ப்ளாஸ்டுக்கு முன் ஒருவன் தோளில் போட்டுச் சென்றதைப் பார்த்தேன். ஒரு வேளை அவள் பிழைத்தும் இருக்கலாம். அவள் அவதிப்படும் அஞ்ஞாதவாசம். நடப்பவற்றை அதன் போக்கில் விடு. இதைப் படித்ததும் அழித்து விடவும். " என ஆங்கிலத்திலிருந்தது. அவசரமாக எழுந்து அதனைத் திரும்பத் திரும்ப வாசித்த மேனகா. அந்த வார்த்தைகளை மனதில் உரு போட்டார். பின்னர் அலைபேசி எண்ணை அறிய முற்பட்டார். பிரைவேட் நம்பர் என்று இருந்தது. அழைத்தும் பார்த்தார், ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது.
மகள் இந்தப் பாழாய்ப் போன நயவஞ்சக கூட்டத்தில் இல்லாமல் பிழைத்து வந்தால் போதும் என்று தோன்றியது. எங்காவது உயிரோடு இருப்பாள் என நம்ப ஆரம்பித்தார். ஆனால் நடப்பவை அதன் போக்கில் நடக்க விடு என்ற வாசகம் அவர் மனதைத் தைத்தது. அதன் படியே அடுத்த அறைக்கு வந்தவர் மீண்டும் சிவராஜ் நஞ்சப்பாவைத் தொடர்பு கொண்டார்.
" மேனகாம்மா, நான் மங்களூரு வந்துட்டேன். சிக்கம்மா சிதறிக்கிடக்குதம்மா. " என அழுதார் . அதைக் கேட்ட மேனகா பெருங்குரலெடுத்து அழவும், "தலைவர் பக்கத்தில் இல்லையே" எனப் பதறினார். " நான் கிளம்பி வர்றேன்" என மேனகா கேட்ட போது , மறுத்தவர், மருத்துவமனையில் பாதுகாப்பைப் பலப்படுத்த சொல்லியிருப்பதாகவும், பார்மாலிட்டிகளை முடித்துத் தான் ஹாசினி சந்திராவின் உடலை வாங்கிப் பெங்களூரு வீட்டுக்குக் கொண்டு வருவதாகவும், எஸ்.ஆர்.சி மருத்துவ மனையில் இருக்கட்டும், நாம் சமாளித்துக் கொள்ளலாம் என்றார். மேனகா, நடப்பவை அதன் போக்கில் நடக்கட்டும் என நினைத்து அதற்கும் சரி என்றார்.
இன்று காலையில்…
ஹாசினி சந்திரா பெங்களூருவில் உள்ள விமான நிலையத்துக்குள் மங்களூருக்கு செல்வதற்காகக் காலை பத்துமணியளவில் உள்ளே சென்றாள். அவளுக்கான பாதுகாப்புப் படை மற்றவர் இங்கே நின்றுவிட , இருவர் மட்டும் கூடவே செல்வர், பவன், ப்ரீத்தி என்ற இருவரில் ஒருவர் பெண் கமேண்டோ . அவளே ஹாசினியின் உதவியாளராகவும் செயல் படுவாள்.
இவர்கள் இந்த ஆறுமாதமாக ஹாசினியுடனே இருபத்து நான்கு மணி நேரமும் தொடர்ந்து இருப்பவர்கள். தங்களுக்கு என யாரும் இல்லாமல், அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள், இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தோம் எனத் தங்கள் கதையைச் சொன்னார்கள். அதிலிருந்து ஹாசினியின் சந்திரபவனத்தில் அவர்களும் உறுப்பினர்கள் ஆனார்கள். ஆனால் பொதுவெளியில் ஹாசினியின் கோடியை தூக்கி பிடித்து, அவளின் பிம்பத்தை உயர்த்துவதும் இவர்கள் தான்.
அவர்களோடு உள்ளே சென்றவள், விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணிநேரம் உள்ளது. அவள் இருக்கையில் கண் மூடி அமர்ந்தாள். " மேம், நீங்க மீட்டிங்கில் பேச வேண்டிய மேட்டர். ஒரு தரம் பார்த்துடுங்க. " என்றாள் ப்ரீத்தி. அவளது பாதுகாப்பு கமேண்டோ.
" அதே ப்ளா, ப்ளா, ப்ளா தானே. நான் பேசிக்கிறேன்" என்றாள் ஹாசினி. வழக்கமாக ஒவ்வொரு மீட்டிங்கிலும், தனது தந்தை பஉகழ் பாடி(அதுக்காகவே ஒத்துக் கொண்டாள்) அதன் பின், அவருடைய வாரிசு, என் மேல் உங்களுக்கு உள்ள நம்பிக்கையை நான் அறிவேன். " என வரிசையாக வசனங்கள் மாறுமே ஒழிய விஷயம் அதே தான். எனவே தான் ஹாசினி அசட்டையாக இருந்தாள்.
" மேம், இதில வேற ஒரு முக்கியமான அனோன்ஸ்மென்ட் இருக்கு" என மெல்ல நீட்டினாள் ப்ரீத்தி. " ம்பச்" என அசட்டையாக வாங்கியவளின் கண்கள் உள்ளே கறுப்பு கண்ணாடிக்குள் மிளகாய் வண்ணத்துக்குச் சிவந்தன.
" ஹௌட் டேர், *** பெல்லோஸ்" எனக் கெட்ட வார்த்தையை உதிர்த்தவள், போனை எடுத்து நேராக யுவராஜ்க்கு அடித்தாள். அவன் அதற்காகவே காத்திருந்தவன் போல் போனை எடுத்தான்.
போனில் பேசியவள் உதடுகள் அசைந்தன. அடுத்து நின்ற ப்ரீத்திக்கே அவ்வளவாகக் கேட்கவில்லை. ஆனால் யுவராஜ் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் உள்ளே இறங்கியது. அவனும் அந்தப் பக்கம் அசிங்கமாக வார்த்தைகளை விட, " வந்து மேடையிலேயே வச்சு என் காலை கழுவி பாதை பூஜை செய். போனா போகுதுன்னு வாழ்க்கைப் பிச்சை போடுறேன். " எனக் கடுமையான வார்த்தைகளை அவள் உதிர்க்கவும் கொதிநிலை உச்சத்துக்குப் போனான்.
இவள் போனை வைத்த நொடி, "ரெட்டி" என மற்றொருவனுக்கு அழைத்துத் தனது தந்தைக்குத் தெரியாமல் அவளை முடிக்க ஏற்பாடு செய்தான்.
மங்களூரு விமானத்துக்கான அறிவிப்பு வந்தது. கோபத்தைக் குறைக்கக் கண்ணை மூடி அமர்ந்திருந்தவள், " பொம்மைக்குத் தாலி கட்டிட்டு. எங்கடா ஒளிஞ்சுக்கிட்டு. கண்டவனெல்லாம் என்னைக் கூறு போட ஆசைப் படுறானுங்க. சந்திரா , என்னை வந்து எங்கையாவது கூட்டிட்டு போயேன். " என மனதிற்குள் தன்னோடு சிறுவயதில் பொம்மை கல்யாணம் செய்தவனை அழைத்தாள். ஆனால் அவளை இந்த உலகை விட்டே அனுப்ப ஒருவன் மங்களூருவில் காத்துக் கொண்டிருந்தான்.
அரேபியக்கடலின் கிழக்கு எல்லையில் இந்தியாவின் மேற்கு கடற்கரை, வடக்கே கட்ச் பாகிஸ்தான், மேற்கே ஓமன், ஏமன் எனச் சுற்றி இந்தியாவின் பெரும்பகுதிகளைத் தம் எல்லைகளாகக் கொண்ட இந்தக் கடல் பெயரை மட்டும் அரேபியாவைச் சார்ந்து வைத்துக் கொண்டது. ஆம் பெருங்கடல் இந்தியாவின் பெயரைச் சேர்த்துக் கொண்டதால் இது அரேபியர் பக்கம் சாய்ந்து விட்டது.
அரேபியக்கடல் மிகுந்த ஆர்ப்பரிப்பு நிறைந்தது, அழகிய பல தீவுகளைத் தன்னுள் கொண்டது. ஹாசினி சந்திராவின் வாழ்வைப் புரட்டிப் போடும் வல்லமையும் இதற்கு உண்டு. அவளும் இதன் கரையிலமைந்த மங்களூருவை நோக்கித் தான் வந்து கொண்டிருக்கிறாள். அவளின் விமானம் தரையிறங்கித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குச் செல்லும் போது அவளைத் தொடர்வோம்.
அரேபியக் கடலின் மேற்கு பகுதியில் அமைந்த முக்கியமான நாடு ஓமன். இதன் தலைநகர் மஸ்கட். ஒரு புறம் வறண்ட மலைகளையும் , பாலை வனத்தையும் மறுபுறம் அரேபியக் கடலையும் கொண்டு அமைந்த செல்வம் கொழிக்கும் பூமி.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட். மிக நீண்ட நகரம். எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த நாட்டில் அரேபிய மொழி பேசப்படுகிறது. நிறைய வெள்ளை உடை தரித்த ஷேக்குகளைப் பார்க்கலாம். நம் நாட்டிலிருந்து வேலைத் தேடிப் பிழைப்புக்காக இங்கே வந்தவர்கள் ஏராளம்.
மஸ்கட் வளைகுடாவில் உள்ள மலைப் பாங்கான பகுதியில் வறண்ட பகுதியை வம்பாக வளமாக்கி புல்வெளி வளர்த்துத் தேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் வடிவமைத்த மாளிகை நிமிர்ந்து நின்றது. தார் ரோடு முதல் கோல்ஃப் மைதானம், வில்லா வீடுகள் என அந்த மலைப் பகுதியின் லேண்ஸ்கேப்பிங்கை அழகாக வடிவமைத்தவர்கள் அதன் ஒரு கோடியில் தங்களுக்காகவே பல நூறு கோடி செலவில் அந்த மாளிகையை நிர்மாணித்து இருந்தார்கள். பணமிருந்தால் வறண்ட பாலைவனத்தையும் பசுமையாக்கலாம். அவ்வளவு எழில் கொஞ்சும் நிலமாக மாற்றியிருந்தனர்.
அந்த ஊருக்குப் பொருத்தமற்றுத் தேவன்சந்திரா மாளிகை என தமிழிலும், தேவ்சாந் மஹல் என ஆங்கிலத்திலும், அரபி மொழியிலும் வெவேறு முகப்பில் கலையம்சத்தோடு பெயர் தாங்கி நின்றது. முகப்பு ஸ்டார் ஹோட்டலின் நேர்த்தியோடு மிரட்டியது. செக்யூரிட்டி ஆட்களின் விசாரணை, வீட்டினருக்கு விருந்தினரின் புகைப்படம் அனுப்பப்பட்டு அவர்கள் ஒப்புதல் தந்த பின்பே அந்த இடத்தைத் தாண்ட விடுவார்கள். ஆனால் காத்திருப்பு அறையே, லெதர் ஷோபாக்கள், அழகான மாடர்ன் ஓவியங்களோடு ஒய்யாரமாக இருக்கும்.
உள்ளே சென்றவுடன் ஒரு பொது ஹால் ,மையத்தில் பெரிய வட்ட வடிவ வெண்ணிற ஷோபாக்கள், அதற்குப் பொருத்தமான லைடிங்க், சாண்டிலியர், வெளிர் சந்தன வண்ணச் சுவர்கள் கண்ணாடி அலங்காரப் பொருட்கள் எனச் செண்டரைஸ்டு ஏசி செய்யப்பட்ட வீடு. ஆங்காங்கே இருவர், மூவர் அமரும் விதமாக ஷோபாக்களும் கலையழகோடு இருந்தன. வீட்டின் மின்ஒளி அமைப்பு ஒவ்வொரு நேரத்துக்கும், அவர்களது மனநிலைக்கும் ஏற்றார் போல் ஒளிருமாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது.
மற்றொரு ஹாலில் நீண்ட டைனிங் ஒரே நேரத்தில் இருபது பேர் வரை அமர வசதியான மேஜை நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. சமையலறை, சாமியறை எனப் பாரசீக கட்டிட முறையோடு, இந்திய ரசனைக்கு ஏற்ப கட்டப்பட்ட வீடு.
ஹாலிலிருந்தே மூன்று கண்ணாடி கூண்டு லிப்ட்கள் மூன்று பகுதிக்குச் சென்றது , பொதுவாக ஒரு மாடிப்படி மேலே சுற்றி இணைத்தது. காலை உணவு நேரம், இந்தியாவின் கடிகார நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதம் எனவே , அந்த நேரம் தான் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வீட்டு அங்கத்தினர் இறங்கி வந்தனர்.
வீட்டின் நிர்வாகத்தைப் பார்க்கும் நிரஞ்சனாதேவி எல்லாருக்கும் முன் இறங்கி வந்தவர், வீட்டு காரியதரிசி மணிமேகலையை அழைத்தார்.
" சின்னம்மா, நீங்க சொன்ன மெனு ரெடி. அவரவர் வரும் போது நான் பரிமாறிடுறேன். உங்கள் திருப்திக்கு நீங்க ஒருதரம் ருசிப் பார்த்திருங்க" என்றார் நல்ல தமிழில். ஆம் இவர்கள் தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதனால் வீட்டு வேலைக்கும் அங்கிருந்தே ஆட்களைப் பணியமர்த்தி இருந்தனர்.
" மேகலைச் சொன்னா, தப்பா இருக்குமா. இருந்தாலும் என் திருப்திக்கு" எனச் சிறு நகையுடன் அவர் தந்த சிறு கிண்ணங்களிலிருந்த பதார்த்தங்களை ருசி பார்த்தார். அவர் கடைசிப் பதார்த்தத்தை ருசிப் பார்க்கும் முன் அந்தக் கிண்ணத்திலிருந்த ஸ்பூனை எடுத்துத் தான் ருசிப் பார்த்தார் வயது ஐம்பத்தைந்தைத் தாண்டிய ஒரு பெண்மணி.
" அண்ணி ஸ்வீட்டை வைங்க. அதையும் நானே பார்த்துக்குவேன். நீங்க ஒன்னும் கஷ்டப் பட வேண்டாம்" என்றார் நிரஞ்சனா.
" ரஞ்சி, இதை மட்டும் டேஸ்ட் பார்க்கிறேன். எப்படியும் என் ப்ளேட்ல வைக்க விட மாட்ட " என்றார் நிரஞ்சனாவால் அண்ணி என அழைக்கப்பட்ட பானுமதி சந்திரா. எஸ். ஆர். சந்திராவின் முதல் மனைவி.
" அதெல்லாம் முடியாது அண்ணி. நீங்க என்னைத் தாஜா பண்ணி சாப்பிட்டுடுவீங்க. அப்புறம் உங்க மருமகள்கிட்ட யாரு திட்டு வாங்கிறது. ஒருத்திக்கு இரண்டு பேர், என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்க" என்றார் ரஞ்சனா.
" ரஞ்சி இனிமே இந்த உடம்பை கட்டிக் காத்து என்ன பண்ணப் போறேன். என் கடமை எல்லாம் முடிச்சிட்டேன். இருக்கிறவரைக்கும் மனசாரச் சாப்பாடாவது சாப்பிட்டுப் போறேனே" என்றார் பானு.
" எந்தக் கடமையை முடிச்சிங்க, உங்க பசங்க கல்யாணத்தை நடத்திட்டா வேலை முடிஞ்சதா. மருமகனுங்களுக்குச் செஞ்சு வைக்க வேண்டாம்" என்றபடி வந்தார் அனுசுயா தேவி . பானுமதியின் அண்ணி, நிரஞ்சனாவின் ஓரகத்தி.
" நல்லா சொல்லுங்க அக்கா. உங்க பேச்சு மட்டும் தான் இங்க எடுபடும்" என்றார் நிரஞ்சனா.
" அண்ணி, அதையும் முடிக்கலாம்னு பார்த்தா, இப்த சந்து பிடி கொடுத்தா தானே. முக்கால் வாசி நாள் உலகத்தையே சுத்துது. உலகத்தில் இருக்க எல்லாப் பில்டிங்கையும் நாமே கட்டனும்னு என்ன அவசியம். இந்த நாட்டில் பார்த்தா பத்தாதா. " என அலுத்துக் கொண்டார் அத்தையம்மா.
" அக்கா, அதுக்கு நீங்க ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருந்திருக்கனும். இன்னும் ஒரு சந்திரா இருந்தா, எங்க சந்திரா இப்படி உலகம் சுற்றும் வாலிபனா இருப்பானா" எனக் கேலி பேசியபடி வந்தார் ரத்தன் தேவ் நிரஞ்சனா தேவியின் கணவன்.
" ஏன் ரதா, ஒரு பொண்ணும் தான் இருக்காளே, மது, மதுர ஹாசினி, மதுர ஹாசினி சந்திரா. " என அவளது பெயரையே அன்பொழுகச் சொன்னவர், " அவ அம்மாவோட அழகும், அப்பாவோட அறிவும் சேர்ந்து பிறந்தவ, சின்னதில் பார்த்திருக்கியே, எனக்கு அவளைச் செய்யனும்னு ஆசை. மருமகன் தான் பிடிகொடுக்க மாட்டேங்கிறார்" என ஹாசினியை நினைத்து நெகிழ்ந்து, தன் அண்ணன் மகனைக் குற்றம் சாட்டி பானு சொல்லவும். ரத்தன் தேவுக்குக் கோபம் ஜிவுஜிவு என ஏறியது என்றால் அனுசுயா தேவி திராவக வீச்சாக வார்த்தைகளைக் கொட்டினார்.
" அண்ணி, உங்க வாழ்க்கை சந்தோஷத்தை பறிச்சு, தன் வாழ்க்கை சந்தோஷமா மாத்திக்கிட்ட அந்த நடிகையோட மகளை , உங்க மகள்னு சொல்லாதீங்க. அவ மேலப் பட்ட காற்று கூட இந்தப் பக்கம் வீசக் கூடாது. மாளிகையிலிருந்தாலும் அதுங்க ரோட்டில கிடக்கிற குப்பை தான். காசுக்காக, பதவிக்காக எதையும் செய்யுங்க. " எனக் கடுமையாகச் சாடவும், பானு அவசரமாகப் பதில் தந்தார்.
" அண்ணி, மேனகா வரும் முன்னாடியே எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு வந்திருச்சு. அவள் ஒன்னும் என் வாழ்க்கையைத் தட்டி பறிக்கலை. நான் தான் விட்டுட்டு வந்தேன். அதுவும் இல்லாமல், நீங்க மதுவை இப்படிப் பேசாதீங்க ப்ளீஸ் . அவளும் இந்தர் மகள் தான். " என்றார் பானுமதி.
" ரொம்ப நம்பிக்கை வைச்சுச் சப்போர்ட் பண்ணாதீங்க அண்ணி. உங்களுக்குத் தான் மனசுக்குச் சங்கடம். இதோ அடுத்த வாரிசா , அம்மா மாதிரியே வேஷம் கட்டிட்டு வந்திட்டா பாருங்க. உங்களுக்குத் தெரிய வேணாமேன்னு இத்தனை நாள் மறைச்சு வச்சிருந்தோம்" எனச் சுவர் ஓரமிருந்த டேபிள் ட்ராயரிலிருந்து, சில இந்தியப் பத்திரிக்கைகளை எடுத்துப் போட்டார் அனுசுயா.
அதனை வேகமாகப் பிரித்துப் பார்த்தவர், அங்கே வந்த பெரிய மகன் ப்ரதிபன் சந்திராவிடம் பதறியபடி காட்டியவர் , " ப்ரதி மது அரசியல்ல இறங்க உங்க அப்பா ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். அவள் இத்தனை கூட்டத்தில் வந்திருக்கான்னா, ஏதோ சரியில்லை. " எனக் கண் கலங்கப் பேசினார்.
" அம்மா, காம்டவுன், அப்பாவுக்கு நினைப்பு இல்லைனாலும், அந்தப் பொம்பளைக்கு மகளைப் பெரியாளா ஆக்கனும்னு ஆசை இருந்திருக்கும். அந்தப் பொம்பளை ட்ராமா போட்டாதான், எஸ்ஆர்சந்திரா உருகிடுவாறே. அவ்வளவு தான் விசயம். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க" என்றான் மூத்த மகன்.
" இல்லைடா நான் ரொம்ப நாளாவே, என் மனசே சரியில்லை அவருக்கு என்னமோன்னு சொன்னேன். நீங்க தான் நம்ப மாட்டேங்கிறீங்க. அதி கல்யாணத்துக்கு வந்தப்பவே ரொம்பத் தளண்டு இருந்தார். ஒவ்வொரு நேரமும் இவ்வளவு மாத்திரை சாப்பிட்டார். அதுக்கப்புறம் ஆப்பரேஷன் நடந்தது. அப்பவும் பார்க்கனும்னு கேட்டேன். நீங்க எல்லாரும் விட மாட்டேன் னு சொல்லிட்டீங்க. அவருக்கு என்னமோ முடியலை. எனக்குப் பயம்மா இருக்கு" எனப் புலம்பியவரை,
" அக்கா, அவருக்கு ஒன்னுன்னா இந்தியப் பத்திரிக்கைகள் எழுதாமல் இருக்காது. நீங்கள் மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. அந்தப் பொண்ணைப் பத்தி சொன்னீங்களே, கேஜே பார்ட்டியோட துணைத் தலைவர் சிவராஜ் நஞ்சப்பா மகனுக்கு இந்த ஹாசினியை கல்யாணம் பண்றதா பேச்சு. அதனால் அவளை இந்த வீட்டில் சம்பந்தப் படுத்திப் பேசறதையும் விடுங்க " என்றார் ரத்தன் தேவ்.
" எங்கயோ அவ மனசுக்கு பிடிச்சு நல்லா இருந்தா சரி தான். பெத்தம்மானு சின்னதுல காலை சுத்தி வந்து கொஞ்சும், அந்த ஒரு மாசம் அம்மாவை விட்டு இருந்தாலும், இதுவும் உன் அம்மாதான்னு இந்தர் சொன்னதிலிருந்து அவ்வளவு பாசமா இருப்பா சரி விடு , இந்தருக்கும் தான் எதுவும் ஆனால் தான் , நம்ம வாழ்க்கையில் என்ன பெரிய மாற்றம் வந்திடப் போகுது. இந்த மஞ்சள் கயிற்றை மட்டும் கழட்டிப் போட போறேன், அவ்வளவு தான். நான் தான் இருபத்தி மூனு வருஷம் முன்னாடியே தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேனே. ஆனால் அந்த மனுசன் தன் கடமையிலிருந்து தவறினதே இல்லையே. " என்றபடி கண்ணில் நீரோடு அந்த மாடர்னான வீட்டில் அமைக்கப் பட்டிருந்த சாமியறையை நோக்கிச் சென்றார்.
இவர் புலம்பலில் பெரியவர் இறுகி அமர்ந்திருக்க. வீட்டின் மற்ற அங்கத்தினர், ப்ரதிபனின் மனைவியும், அனுசுயா மகளுமான ஆராதனா, அவளது நான்கு வயது மகனுடனும், அதிபன் அவன் மனைவி மயூராவும் பத்து மாதமான பெண்குழந்தையுடன் இறங்கி வந்தவர்கள் கண்ணில் கேள்வியோடு வந்தனர்.
டேபிள் மீது கிடந்த, பத்திரிக்கைகளைப் பார்க்கவும் புரிந்து கொண்ட அதிபன் சந்திரா. "இதை அம்மா பார்த்துட்டாங்களா. சந்து மறைச்சு வைக்கச் சொன்னானே" எனக் கேள்வி எழுப்பினான்.
" நான் தான் காட்டினேன். அந்தப் பொண்ணைச் சந்துவுக்குக் கட்டனும்னு அண்ணி பேசவும், அவளோட புத்தி எப்படினு காட்டினேன்" என்றார் அனுசுயா.
" சரி விடுங்க, நிருபன் வந்துட்டானா அத்தை" என நிரஞ்சனாவிடம் கேள்வி எழுப்பினான் அதிபன். " இன்னும் வரலைபா , சந்துவும் அவனும் சேர்ந்து தானே போனாங்க" என அவர் பதில் கேள்வி எழுப்பினார்.
" ஆமாம்ல மறந்துட்டேன். சரி நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் அம்மாவோட வர்றேன்" எனப் பூஜை அறையை நோக்கிச் சென்றான் அதிபன். அம்மாவைச் சமாதானம் செய்து சாப்பிட வைத்தவன் , வெகு சீக்கிரத்தில் இந்தியா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி தந்தான்.
ஆனால் இரவு உணவுக்குப் பின் அவரவர் அறைக்குச் செல்ல எத்தனித்த வேளையில், யாரோடோ போனில் பேசிய அதிபன் சந்திரா அவசரமாக வந்து டிவியைப் போட்டான். அவரவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். அதிபனிடம் கண் காட்டி அம்மாவைப் பிடித்துக் கொள்ளச் சொன்னான்.
பிரதிபன் சொன்ன திணுசில் அப்பாவுக்கு எதுவுமோ என அதிபன் அதிர்ந்தான். ஆனாலும் அண்ணனின் பார்வைக்குக் கீழ் படிந்து அம்மாவின் அருகில் ஷோபாவில் அமர்ந்தான்.
சரியாக இந்திய ஊடகங்கள் ஹாசினி சந்திராவின் கார் வெடிகுண்டால் தகர்க்கப்பட்டதை ப்ளாஸ் நியூசாகப் போட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ப்ரதிபன், அதிபன், ஆராதனா இவர்கள் கண்களிலிருந்தும் கண்ணீர் திரண்டு உருண்டது. ஹாசினி சிறுவயதில் ஒவ்வொரு ஆண்டும் இவர்களோடு விடுமுறையைக் கொண்டாடிய பேபிடால்.
பானுமதி அதிர்ச்சியிலிருந்து விலகி விசும்பி அழுதார் " உங்களுக்கெல்லாம், இந்த மாதிரி நிலைமை வந்திடக் கூடாதுன்னு தான், அவரை விட்டு விலகி வந்தேன். கடைசியில் அந்தச் சின்னப் புள்ளையைப் பலிகொடுத்துட்டமே" என அழுதார்.
செய்தி அறிந்து வீட்டின் மூத்த வாரிசு, யாருக்கு ஹாசினியை மனம் பேச பானுமதி முனைந்தாரோ ,அதே சந்திரதேவிடமிருந்து அத்தையம்மாவுக்குப் போன் வந்தது. "சந்து, இனிமே அவளைக் கட்டிக்கனு உன்கிட்ட சொல்லவே மாட்டேன்." எனச் சொல்லி அழுதார். அத்தையைச் சமாதானம் செய்தவன், தான் லண்டனில் இருப்பதாகவும் மேனகாவுடன் போனில் பேசச் சொன்னான்.
ரத்தன்தேவ், அனுசுயா இவர்களும் மௌனம் காத்தனர். நிரஞ்சனா பானுமதிக்கு ஆறுதல் சொன்னார். அவரது அழுகை ஓய்ந்து கொஞ்சம் தேறியவுடன் எஸ். ஆர்.சந்திராவுக்குத் தனது போனிலிருந்து அழைப்பு விடுத்தார். ஸ்பீக்கரில் இருந்த உரையாடலை மற்றொரு போன் மூலம் சந்திர தேவும் கேட்டுக் கொண்டிருந்தான். நிமிடத்தில் முடிவெடுத்தவன் ப்ரதிபனிடம் பேசி எஸ். ஆர். சந்திராவை மஸ்கட் அழைத்து வரும் முடிவைச் சொன்னான். அதையே பானுமதி மூலமாக மேனகாவிடம் தெரிவித்தனர்.
காலையில் இந்தியா செல்லும் விமானத்தில் பானுமதி சந்திரா, ப்ரதிபன் சந்திரா, அதிபன் சந்திரா மற்றும் ரத்தன்தேவ் நால்வருக்கும் டிக்கெட் எடுக்கப்பட்டது.
ஹாசினி சந்திரா பெங்களூரில் விமானம் ஏறியவள், மங்களூருவில் படுகொலை செய்யப்பட்டாளா அல்லது முகம் இல்லாத மனிதன் சொன்ன செய்தி போல் அவள் காப்பாற்றப் பட்டாளா அல்லது கடத்தப்பட்டாளா. என்ன காரணம் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment