Friday, 7 May 2021

ஹாசினி சந்திரா-3

 ஹாசினி சந்திரா-3

நள்ளிரவு…

        ஹாசினி சந்திராவின் வெடிகுண்டு நிகழ்வு நடந்து மூன்று மணி நேரங்கள் ஆகியிருந்தது. தேர்தல் நேரமானதால் அவள் பரப்புரை செய்தி வரும் முன் அவள் கொள்ளப்பட்ட நிகழ்வு சுடசுட செய்தியானது.

       சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த போலீஸ், முதலில் சாலையை அடைத்து, கயிறு கட்டினர். வெடிகுண்டு நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள், ஆம்புலென்ஸ் களப்பணியாளர்கள் என அவசியப்பட்டோரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். மங்களூர் நகரக் கமிஷனராக இருந்த அந்த ஐபிஎஸ் அதிகாரியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வேலையைத் துரிதப்படுத்தினார்.

        ஹாசினி சந்திரா பயணித்த காரும், மூன்று உடல்களும் சிதறிக்கிடந்தன. திட்டமிடப்பட்டுக் கூட்டம் நடந்த இடம், அவள் ஓய்வெடுக்கப் பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி ஆகியவற்றிலிருந்து, விமான நிலையம் செல்லும் வழியில் அருகில் கட்டிடங்கள் இல்லாத மரங்கள் நிறைந்த பகுதியில், இந்தச் சம்பவம் நிறைவேற்ற பட்டிருந்தது.

       கேஜே பார்ட்டியின் தொண்டர்கள், அப்போது தான் பிரச்சாரம் முடித்துச் சென்ற தங்கள் சிக்கம்மாவுக்காக உணர்வு கொதித்த நிலையில் நகரம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம், கல் எறிதல், எதிர் கட்சிக் கொடி பேனர்களைத் தீ வைத்தல் என வன்முறையில் ஈடுபட்டனர்.

       காவல்துறை மங்களூரு நகரெங்கும் குவிக்கப்பட்டு, இது யாருடைய சதியாக இருக்கும் என ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கி இருந்தது. கேஜே பார்ட்டியின் தஉணை தலைவர் சிவராஜ் நஞ்சப்பா மற்றும் சில தலைவர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர். அவர்கள் கட்சியினரைக் கட்டுக்குள் வைக்கக் காவல்துறை வேண்டுகோள் விடுத்தது.

       பாகங்களாகச் சிதறிக் கிடந்த உடலைத் தேடி எடுப்பதே சிரமமான காரியமாகக் கூறு கட்டி வைத்திருந்தனர் என்று தான் சொல்லவேண்டும். ஹாசினி சந்திரா கடைசியாக மேடையில் உடுத்தியிருந்த சேலை துண்டுகள் அவளது கடிகாரம், செருப்பு என இதை வைத்தே அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் மூன்று பேருமே முகங்கள் முதற்கொண்டு சிதைவடைந்து சதைக் கோலமாகத் தான் காட்சி தந்தனர்.

         மங்களூர் கோவா நெடுஞ்சாலையில் ஒரு கேரவன் பயணித்துக்குக் கொண்டிருந்தது. கோவாவை நோக்கி புயல் வேகத்தில் சென்ற கேரவான் இதுவரை வந்த பகுதியில் அதன் அனுமதிச் சீட்டைக் காட்டவும் சிரமமின்றிப் பணத்தைத் தொடர்ந்தது. ஆனால் இதற்கு முன்பான ஒரு செக் போஸ்டில் கேள்விகள் கேட்டுத் துருவி எடுத்தனர்.

       அதனால் ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கையில் ஆறடி உயரத்தில் விலை உயர்ந்த ஆடைகளோடு கருப்பு கண்ணாடி சகிதமாகப் பெரிய நடிகரின் காரியதரிசி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் வண்டியைத் திறவாமலே கடுப்புடன் , காவல் ஆய்வாளர்களிடம் " பேப்பர் எல்லாம் பக்காவா இருக்கு, ஒவ்வொரு டோல்லையும் பணம் கட்டிட்டு வர்றோம். நீங்க எங்களை நம்பாத மாதிரி தெரியுதே, கான் பாயிக்கு போன் போடவா" என மொபைலை எடுத்தவன் நேரத்தைப் பார்த்து விட்டு, " நாளைக்கு ஒரு ஹெவி பட்ஜட் ராஜா காலத்துப் படம் ஷீட்டிங் ஆரம்பிக்குது. பன்சாலி சாப் படம். மஹாராஷ்டிரா ஹில்ஸ் ஷீட்டிங். இந்த வண்டி வந்தே ஆகனும்னு சொல்லிட்டார். நீங்க இப்படி லேட் பண்றீங்களே" என விவாதித்தவன்

    " சரி தூங்கினாலும் பரவாயில்லை எழுப்புறேன், உங்கள் பேரென்ன " என அவர் சட்டையைப் பார்த்துக் கொண்டே வேகமாக மொபைலை ஆப்பரேட் செய்யவும், "சாப் விடுங்க, நான் ஒன்னும் கேட்கலை " எனப் பம்மியவர்,

      " சாப் கர்நாடகா கேஜே பார்ட்டி தலைவர் மகளைப் பாம்ப்ளாஸ்ட் பண்ணி கொண்ணுட்டாங்க. அதனால தான் அலார்ட்டா இருக்கோம்" என்றார் அந்தக் காவலர்.

    " யாரை சொல்றீங்க. " என ஒன்றும் அறியாமல் அவன் விவரம் கேட்டான். "அது தான் சாப் ஹாசினி சந்திரா. நல்லா சினிமா ஆக்ட்ரஸஸ் கணக்கா இருக்கும். பாரின்ல படிச்சது. ஆனால் கன்னடம், தமிழ் , ஹிந்தினு எல்லா லேங்க்வேஜும் பேசும். எவன் கண்ணு பட்டதோ. போட்டு தள்ளிட்டாய்ங்க. " என வருத்தமாகச் சொன்னார்.

      "சாப், அந்தம்மாவா, அவுங்க அப்பாவ மாதிரியே ரொம்பச் சிம்பிள்னு பேசிக்கிட்டாங்களே" என ஓட்டுனர் தன் பங்குக்கு ஆதங்கத்தைக் கொட்டினான்.

      அந்த நெடிந்து வளர்ந்த காரியதரிசியும் அய்யோ பாவமே உச்சுக் கொட்டினான். " சரி சாப் நீங்க போங்க, அடுத்தச் செக் போஸ்ட் என்னை மாதிரி புரிஞ்சுக்க மாட்டாங்க, பொறுமையா பதில் சொல்லுங்கோ, விவாதம் பண்ணாமல் வண்டியைத் திறந்து காண்பிச்சா வேகமா போயிடலாம். கான் சாப் சூட்டிங் முக்கியம் " என இலவச ஆலோசனையும் வழங்கிச் சென்றார்.

        "அடப் பாவி, இப்பத் தான் ஹாசினி சந்திராவுக்காக வருத்த பட்டான். அதுக்குள்ள கான் சாப் படம் லேட்டாகக் கூடாதாம். மனுஷனுக்கு மதிப்பே இல்லைப்பா" எனப் புலம்பினான் ஓட்டுநர். அவனை முறைத்த , தன்னைக் காரியதரிசி என அறுமுகப் படுத்திக்கக் கொண்ட ஆறடி அரக்கன், ருத்ரா "நான் உள்ளே போறேன், நீ ஓட்டிட்டு வா. ரொம்ப ஆர்க்யூ பண்ணாத வண்டியைத் திறக்கச் சொன்னாலும் திறந்து காமி. " என்றான்.

     " பாய் உள்ளே " என இழுத்தான். "ஐ வில் மேனேஜ்" நான் சொன்னதைச் செய் " எனக் கதவை உள் வழியாகத் திறந்து கேரேவேனுக்குள் சென்றான்.

         ஆயிற்று இன்னும் ஒரு செக் போஸ்ட் தாண்டி விட்டால் கடற்கரையில் உள்ள நடிகரின் சொகுசு பங்களாவிற்கு வண்டி சென்றுவிடும். மங்களூருவில் உள்ள ஒரு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம், பிரத்தியேகமாக வடிவமைத்த சொகுசு வாகனம். முன்னணி நடிகர் ஒருவரின் பெரிய பட்ஜெட் படத்திற்காக வடிவமைக்கப்பட்டது.

      கடைசிச் சோதனை சாவடிக்கு முன் வாகனம் வரிசையில் வந்து நின்றது. ஓட்டுனர் இருக்கையிலிருந்தவன், "பாயி, போலீஸ் வண்டியை செக் பண்ண வருது. மாட்டினோம்" என்றான் ஹிந்தியில்.

        " நீ சொன்னதை மட்டும் செய், யாரும் உள்ளே பார்த்தாலும் ஒன்னும் கிடைக்காது. நான் உள்ளே போறேன். நீ டென்ஷன் இல்லாமல் வண்டியை ஓட்டு" என்ற அறிவுரையோடு அடங்கியது அந்தக் குரல்.

         உயரமான ஆம்னி பஸ் போலிருந்த அந்தக் கேரவேன் உள்ளேயே ரெஸ்ட் ரூம், மேக்கப் ரூம், ஒரு படுக்கை, ஷோபா செட், பார் எனக் குட்டி வீடு போல் இருந்தது. குட்டகளோடு நடிகன் பொழுதைக் கழிக்கவும் ஏற்றவகையில் இருந்தது.

         ஓட்டுனர் சொன்து போலவே போலீஸ் வாகனத்தைச் சோதனையிட்டது. ஓட்டுனர், நடிகர் பெயரைச் சொல்லி அவருக்கு டெலிவரி கொண்டு போவதாகச் சொன்னான். பேப்பரெல்லாம் சரியாகவே இருந்தது. திடீரென, அந்தக் கான்ஸ்டபிளுக்கு, புகழ் பெற்ற நடிகனின் வண்டியைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. முதலில் தயங்கிய ஓட்டுநர் அவனுக்கு வந்த செய்தியில் சரி சாப் பாருங்க என்று விட்டான்.

       அவர்களோடே உள்ளே ஏறிய ஓட்டுநரும் அவர்களை விட ஆவலாக உள்ளே பார்த்தான். யாரும் இல்லை. காவலர்கள் உள்ளே ஏறி ஒவ்வொன்றாய் பார்த்து, சிலாகித்துக் கொண்டிருந்தனர். பாத்ரூம், மேக்கப் ரூம் என ஒவ்வொரு கதவாகத் திறக்கும் போது ஓட்டுநராக வந்தவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

        காவலர்கள் கேரவேனை நான்கு போட்டு வேறு எடுத்துக் கொண்டனர். டிரைவர் "சாப், இந்தப் போட்டோவை வெளியே விட்டடுறாதீங்க என் பிழைப்பு போயிடும்" என வேண்டினான்.

       போலீஸ்காரர்கள் கேரவேனை சிலாகித்து இருந்த போது, அந்த நடிகனின் கட்டில் போன்ற படுக்கை மெத்தைக்குக் கீழே இறங்கியிருந்தான் ஆறடி அரக்கன் ருத்ரா . இவன் இறங்கியதும் விசையை அழுத்த பெட் சாதாரணமாகக் காட்சி அளித்தது. நடிகரின் உடைமைகளை வைப்பதற்கான ஏற்பாடு. ஆனால் மற்றொரு படுக்கை அறை போல் இருந்தது. காற்று புகும் வகையில் துளைகள் சிலவும் போடப்பட்டுத் திரைச் சீலைகளால் மறைக்கப்பட்டு இருந்தது.

      அதில் தான் மயக்க நிலையில் பதுமையாகப் படுத்திருந்தாள் ஹாசினி சந்திரா. இவ்வளவு நேரம் மயக்க நிலையிலிருந்தவள் இருமும் சத்தம் கேட்டு, வேறு வழியின்றி அவனும் உள்ளே இறங்கினான். அவள் சுயம் தெளிந்தால் அவசியம் கத்துவாள். அதனால் மாட்டிக் கொள்வோம் எனக் ருத்ராவும் உள்ளே இறங்கினான்.

      அவள் அருகில் தன் உடலை ஒருக்களித்து இடவசதி இல்லாத காரணத்தால் தன் கையையே முட்டுக் கொடுத்து ரங்கநாதர் போஸில் படுத்திருந்தவனின் கால்களுக்கும் இடம் போதவில்லை. அதனால் வேறு வழியின்றிக் காலையும் மடக்கி அவள் மேல் தான் போட்டிருந்தான். வண்டி சற்று நகர்ந்து குலுங்கி நின்றதில் மற்றொரு கையையும் அவளின் இடை சுற்றியே போட்டிருந்தான்.

        மக்களின் பார்வையில் சொர்க்கத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்த அந்தத் தேவதை உண்மையில் , இந்த அரக்கனோடு தீவுக்குப் பயணித்துக் கொண்டிருந்தாள். ஆறடி உயரத்தில் கையையும் காலையும் அந்த மெத்தையின் அடிப்பாகத்தில் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தவன் வேறு வழியின்றி ஹசினியின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்திருந்தான். மயங்கிக் கிடந்த போதும் அவள் முகத்தில் ஓர் சுளிப்பு இருந்தது.

          மகாராணிக்கு ஏசி காற்று போதவில்லை போலும் என மனதில் குறைபட்டவன், மங்கிய ஒலியில் அவளையே பார்த்திருக்க. மயக்க மருந்தின் வீரியம் குறைந்த ஹாசினி மெல்லக் கண் விழித்தாள். கண் முன்னே மிக அருகில் நீண்ட முகம் புதர் போன்ற தாடி, மீசை புலியின் சீற்றம் மிகுந்த பழுப்பு இளஞ்சிவப்பு கலந்த தீயைக் கக்கும் கனல் விழிகள். அதிலேயே பந்தவள் , வாயைத் திறந்து கண்ணை மூடிக் கொண்டு அலற முயன்றாள். 

         அவளையே பார்த்திருந்தவன், அவள் சத்தம் வெளியே வரும் முன் வாயைப் பொத்தவும் அவனது பிடி அவளது பாதி மூச்சையும் தாடை எலும்புகளையும் அழுத்திப் பிடித்தது. அதன் வலியில் தன் அகலமான கண்களைத் தன்னால் திறந்தாள். அந்தக் கண்களே அவளுக்கு வலிப்பதை அப்பட்டமாக எடுத்துச் சொன்னது, ஆனாலும் அதை அசட்டை செய்த அந்த அரக்கன், அவள் திமிறியதில் அவள் அங்கங்கள் அவன் மீதே உரசி இரசாயன மாற்றம் செய்ய , சுவாசப்பாதையை மட்டும் மெல்லத் தளர்த்தி, முகவாயைப் பிடித்திருந்த அழுத்தத்தைச் சற்றே குறைத்தான். அதில் அவளுக்கு இருந்த வலியும் சற்றுக் குறைந்திருக்க வேண்டும். சிறு ஆசுவாசம் அவள் கண்களில் தெரிந்தது. அவளிடமிருந்த கவனத்தை அவன் வெளியே திருப்பிக் காதைத் தீட்டி அவர்கள் பேசுவதைக் கவனித்தான்.

        அவர்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று திறப்பதை யூகித்தான். பெட்டை மட்டும் திறக்காமல் இருக்க வேண்டும். அப்படித் திறந்தாலும் தாக்கி விட்டு ஓட வேண்டும் என மனதுக்குள் வேகமாகத் திட்டத்தைப் போட்டான்.

        அந்த நேரத்தை பயன்படுத்தி அவள் தன் கையைத் தேடி எடுத்து, தன் தைரியத்தையெல்லாம் ஒன்று கூட்டிச் சட்டென அவன் கழுத்தை நெரித்தாள் ஹாசினி. ஆனால் அதற்கு எதிர்வினையாக அனிச்சையாக அவனது கரம் அவளது முகவாயின் அழுத்தைக் கூட்டியது. அவளும் விடாமல் கழுத்தை நெரித்தாள். ஆனால் அவனின் பலம் வாய்ந்த கரத்துக்கும், அவளின் பூபோன்ற கரத்துக்கும் வித்தியாசம் உண்டு தானே. அவளே மெல்ல அவன் கழுத்திலிருந்த கையின் பிடியைத் தளர்த்தினாள்.

          தன் கழுத்தை நெரித்த அவளது கையை உணர்ந்தவன், "வா ரே வா. மான்குட்டி, புலியைக் கொள்ளப் போகுதா" என ஹிந்தியில் அவள் காதில் மொழிந்து கண்களில் எள்ளலைக் காட்டினான். அவள் போராட அவன் அடக்க மட்டுமே செய்தான். சற்று நேரத்தில் வண்டி ஓட ஆரம்பித்தது. சட்டென அவள் வாயிலிருந்து கையை எடுத்தவன், தன் கழுத்தைப் பற்றியிருந்த அவள் கரத்தை கீழாகப் பார்த்தான்.

        இவ்வளவு நேர மூச்சு அடைத்திருந்ததில் இருமலோடு மெல்ல மூச்சை அவசரமாக இரண்டு முறை வெளியிட்டவள், " கௌன் ஹை தூ. என்னைக் கிட்னாப் பன்றியா. நான் யாருன்னு தெரியுமா" எனக் கத்தினாள்.

         அவளைத் தீ பார்வை பார்த்தான், பின் அவள் கத்துவதை அலட்சியம் செய்தவனாகத் தலைக்கு மேலிருந்த விசையை அழுத்த அது திறந்தது. அவனின் அசட்டைப் பாவனை அவளுக்குக் கோபத்தை மூட்ட இடைஞ்சலாக ஏதோ ஒரு பெட்டிக்குள் தன் மீதே அவன் கவிழ்ந்து கிடந்ததை உணர்ந்து, முகம் கோபம் மாறி அருவருப்பைக் காட்டியபடி ," யார்டா நீ, எதுக்குடா என்னைக் கடத்துற. சை, பொம்பளைனா உரச வந்துருவீங்களே, பொம்பளைனா அவ்ளோ கேவலமாப் போச்சா. பொம்பளை பொறுக்கிங்க, உன்னைப் பெத்தவளும் பொம்பளை தானே " எனக் கன்னடத்தில் திட்டினாள். அவளுக்குக் காலையில் யுவராஜ் மீது வந்த கோபம், இவனிடம் காட்டிவிட்டாள்.

        மேலே பெட்டை திறந்து கொண்டிருந்தவன், " பொம்பளை பொறுக்கியா, பொம்பளை பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா. காட்டவா" என அவள் முகத்தை நோக்கி தீக்கண்களோடு குனிய, " வேண்டாம்" என அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவள் முகச் சுளிப்பில் கோபமானவன், மேலே பிடித்து ஒரு ஜம்பில் மேலே ஏறினான்.

       அவளும் அதே போல் ஏற முயலவும் , " சுப்" எனப் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை எடுத்து மீண்டும் அவள் திமிறி எழு முயன்ற போதே மயக்கமடையச் செய்தான். அந்தச் சொகுசு வாகனம் கோவாவிற்கு முன்பே ஒரு கடற்கரையில் சென்று நிற்க, அங்கே ஒரு படகு தயாராக இருந்தது.

        " பாயி, கட்டாயம் இதைச் செய்தே ஆகனுமா" என்றான் ஓட்டுநர். " இவ வேற ஒரு ஆளுக்குத் தேவை படுறா. நான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். அவர்கிட்ட ஒப்படைச்சா நம்ம வேவை முடிஞ்சது. மத்த இரண்டு பேர்" என்றான்.

       " இதோ வந்துட்டாங்க" எனக் காண்பித்த திசையில், பவனும், ப்ரீத்தியும் ஆளுக்கொரு பேகோடு நின்றனர்.

" பாஸ் , நாங்க தான் செத்துட்டோமே, கட்டாயம் தீவுக்கு வரனுமா" என்றான் பவன். " நீ தீவுக்கு வரலைனா மறுபடியும் நிஜமாவே செத்துப் போவ , பரவாயில்லையா" என்ற ருத்ரா ஓட்டுநர் பக்கம் திரும்பினான் . ப்ரீத்தி பவனை நக்கலாகப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பாஸ் அறியாமல் முறைத்தான்.

           " நீங்க கவனமா இருங்க பாய்" என அந்த ஓட்டுநர் மேலும் இரண்டு பேகுகளைப் பவன், ப்ரீத்தியிடம் கொடுத்தவன் அவர்களைப் போட்டுக்கு அனுப்பி வைத்தான்.

       " இந்தப் போட்டுக்கு லைசன்ஸ் இருக்கு. டைரக்சன் இன்டிமேட் பண்ணும். மத்தது ஏற்கனவே சொன்னது தான். ஆனால் ப்ளீஸ் ஹாசினி சந்திரா கிட்ட ஹார்சா நடந்துக்காதீங்க. " என்றான்.

        " அவளுக்கும் எனக்கும் என்ன இருக்கு. யார்கிட்ட ஒப்படைக்கனுமோ ஒப்படைச்சிட்டு. வந்துருவேன்" எனத் தீர்மானமாகச் சொன்னவன், "சரி நீ வேனை கொடுத்திட்டுக் கிளம்பு . நான் சொன்ன தேதிக்குச் சொன்ன இடத்துக்கு வந்திடனும்" என்றவன், கேரவேனிலிருந்து ஹாசினியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு போட்டில் கொண்டு வந்து படுக்க வைத்தான். அரபிக்கடலின் ஒரு தனியார் தீவை நோக்கி படகு சென்றது.

முன் தினம் மாலையில்..

        மங்களூரு, கர்நாடக மாநிலத்தின் தென் தலைநகராகக் கருதப்படும் ஒரு மாவட்டம். மங்கலாதேவி ஆலயம், கோகர்ணநாத் ஆலயம் ,மஞ்சுநாதா ஆலயம் எனத் தொன்மையான பல இந்து கோவில்கள் உள்ளது. போர்த்துக்கீசியர் வந்து இறங்கி வியாபாரம் செய்த தலமாதலால் பல புராதனமான தேவாலயங்களும், சுல்தான் மன்னர்கள் ஆண்டதால் மசூதிகளும் நிறைந்து காணப்படுகிறது.

          அரேபியக் கடல் ஒருபுறமும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றொரு புறமும் இரண்டு எல்லைகளாக இருக்க இரண்டு ஆறுகள் ஓடுவதால் செழிப்பாகவும், தென்னை மரங்கள் அதிகம் விளையக்கூடி ஊராகவும் உள்ளது. கடற்கரை பீச்சுகளும், தீவுகளும் முக்கியமான சுற்றுலாத் தலமாக இருக்கிறது. ஹாசினி சந்திரா பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்குப் பிற்பகல் வேளையில் சென்றடைந்தாள்.

         விமானப் பயணத்திலும் கூட நஞ்சப்பாக்களின் மேலுள்ள கோபம் தணியவில்லை. ' இவன் மகன், அந்தக் கரடி மூஞ்சியைக் கட்டிக்கிறேன்னு அனோன்ஸ் பண்றதாம். பள்ளிக்கூடம் தாண்டாதவனுக்கு  ஹாசினி சந்திரா கேக்குதோ. இருங்கடா அப்பாவையும், அம்மாவையும் வெளி நாட்டுக்கு பேக் பண்ணிட்டு , உங்க கண்ணுல விரலை விட்டு ஆட்ட நான் வர்றேன். அப்பனும் மகனும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓடனும்" எனப் பிசினெஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்தவள் யுவராஜை நன்றாகக் கெட்ட வார்த்தைகளாகச் சொல்லி தனது உணர்வுகளை நன்றாகவே வெளியே காட்டினாள்.

           பிசினெஸ் கிளாஸ் பகுதி ஆதலால் அதிகக் கூட்டமில்லை, அங்கொருவன் நியூஸ் பேப்பரே படிக்காதவன் போல் அதில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் விழியோட்டி, உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். "பேப்பர் படிக்கிற பரதேசி நம்மளை பார்க்காது" எனத் தமிழில் திட்டியவள், தனது அர்ச்சனையைத் தொடர்ந்து மனதை லேசாக்கிக் கொண்டாள்.

        ஹாசினி மனதில் உள்ள பாரத்தை ஆற்ற கண்ட ஒரே வழிமுறை இது தான். இந்தியாவில் இருந்தவரை அம்மாவைப் போலவே நெருங்கிய தோழிகள் என்று யாருமில்லை. பள்ளியில் வந்து சேருவது எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளாக இருக்கும் அவர்களின் அலட்டலில் இவள் யாருடனும் நெருங்க மாட்டாள் . ஆரம்பக் காலத்தில் தோழிகளைப் பிடிக்கும் முயற்சிகள் இவளுக்கே பிரச்சனையாக முடிந்ததால் நெருங்கிய நட்பு என யாரும் இல்லை. , ஒற்றைப் பெண்ணாக வளர்ந்ததால் தன கோபத்தைத் தனிமையில் தித்தித்த தீர்ப்பாள். 

           மேற்படிப்புக்கு அமெரிக்கச் சென்ற போது  தான், மேத்யூஸ் என்ற நண்பன் பழக்கமானான். இப்போதைக்கு நண்பன் எனில் அவன் மட்டுமே, அன்றாட நடப்புகளை மெசேஜ் செய்து விடுவாள், அவன் கேள்விக்குப் பதில் சொல்வதிலேயே இவள் பொழுது சென்று விடும். விமான நிலைய காத்திருந்த பொழுது அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது, அதனை வாசிக்க நேரம் கிடைக்க வில்லை. பயணத்தின் இந்தச் சில மணித் துளிகளில் பலவகை உணர்வுகளை வெளிப்படுத்தியவளை பேப்பர் மறைவில் ஒருவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

        விமானம் தரை இறங்கிய பின், அவளை முந்திக் கொண்டு கோட் சூட்டில் பாலிவுட் ஹீரோக்களுக்குச் சவால் விடும் தோற்றத்தோடு, கன்னம், மீசை என மொத்தமாக மழிக்கப் பட்டவன், அவளுக்கு முன் இறங்க முற்பட்டான் ,ஆனால் இறங்கும் முன் திரும்பி அவளை நோக்கி "உணர்வுகளைத் துடைத்த நகை முகம் தான் ,அரசியல்வாதியின் ஆயுதம்.குட் லக் " என ஆங்கிலத்தில் மொழிந்து விட்டுச் சென்றான். அதற்கும் அசராத ஹாசினி, " பேப்பர் படிக்கிற மாதிரி சைட் அடிச்சுட்டு, அட்வைஸ் வேறையா" என முறைத்தவள் சட்டென உணர்வை மாற்றி ஒரு மிடுக்கோடு குமாரி ஹாசினி சந்திராவாக தரை  இறங்கினாள்.

       முதலில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து விட்டு சாலையோர மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டியவாறு ஹோட்டல் அறைக்கு வந்தாள். மதிய உணவை முடித்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். வந்து இறங்கியதும் மேனகாவிடமிருந்து அழைப்பு வந்தது.

       " அம்மா, நான் என்ன சின்னக் குழந்தையா, போற பக்கமெல்லாம் எல் கே ஜி சேர்த்து விட்ட அம்மா மாதிரி கூப்பிடுற. " என வம்பிழுத்தாள்.

" ஹாசினி சந்திரா , உங்கள் பேரு வேணா, பெத்த பேரா இருக்கலாம். ஆனால் கேஜேபி ல எல்கேஜி தான் படிக்கிறீங்க. நான் உங்க சீனியர் நிர்வாகியாக்கும்" என மகளுக்குச் சமமாகப் பேசினார்.

       " என்ன மகளை ப்ளைட்ல ஏத்தி விட்டுட்டு புருஷனோடு ரொமான்ஸா, மிஸஸ் சந்திரா ரொம்ப ஹேப்பியா பேசுறாங்க " என்றாள் மகள். " அடி போடி நாக்குட்டி. இது இப்ப நடந்த ரொமான்ஸ்காக இல்லை, இருபத்தி இரண்டு வருசம் முன்னாடி நடந்த ரொமான்ஸோட நினைவு. நீ மேங்களூர் போறேங்கவும் மலர்ந்திடுச்சு " எனச் சிரித்தார்.

       " வாவ் மேனகா சந்திரா, எனக்குப் போரடிக்குது நீ உன் லவ் ஸ்டோரியை அவிழ்த்து விடேன்" என்றாள். மங்களூருவில் மகள் இருக்கிறாள் எனவும், தனது பிறந்த ஊருக்கு தானே சென்றிருப்பதாக ஓர் நினைவு. ஹாசினியும் அதை உணர்ந்து, எந்த ஏரியாவில் வசித்தார் எனக் கேட்டு அறிந்து கொண்டாள்.

           மேனகா தேவி தனது கதையை மகளிடம் சொல்ல ஆரம்பித்தார். மேனகா மங்களூருவை பிறப்பிடமாகக் கொண்டவர். பொதுவாக மங்களூரில் பிறந்து வளர்ந்த பெண்கள் இந்தியாவிலேயே வாளிப்பான மஞ்சள் அழகிகளாக இருப்பர். இந்தப் பெண்கள் தோற்றத்தில் சாமுத்ரிகா இலட்சணம் பொருந்தியவர்களாகப் பேரழகோடு திகழ்வார்கள்.

        மேனகாவும் நல்ல உயரம் ஹாசினியைப் போன்ற கண்கள், நீளமான முடி கூர் நாசி என இருப்பார். இவருடைய தந்தை கொஞ்சம் கலை பைத்தியம் பிடித்தவர், மும்பையில் நடிக்கிறேன் எனச் சுற்றித் திரிந்தவர், அதனால் மகளை ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகப் படுத்தினார்.இவருடைய அழகையும் நடிப்புத் திறமையும் எஸ். ஆர். சந்திரா கவனத்துக்கு வரவும் தனது படங்களில் நடிக்க வைத்தார். அதோடு தெலுங்கு சில தமிழ்ப்படங்களிலும் மேனகா பிசியாக இருந்தார். 

        இந்தச் சூழலில் எஸ்.ஆர்.சந்திரா அரசியலில் இறங்கினார், மேனகாவுக்குப் பிரச்சினை வரும் போது சந்திரா ஆபத்பாந்தவராக இருந்தார். அதற்குக் கைமாறாக அவரது கட்சிக்குக் கொள்கை பரப்பு செயலராக மாறினார் மேனகா. கட்சி பிரச்சாரக் கூட்டங்களுக்குச் செல்லும் இடத்தில் எல்லாம் சந்திராவுக்கு உணவைப் பார்த்துப் பரிமாறி நேரத்துக்கு உண்ண வைப்பார். அவரிடம் உரிமையாகச் சண்டை போடும் அளவில் நெருங்கி இருந்தார் மேனகா.

          சந்திரா பெண்கள் விசயத்தில் மிகவும் நேர்மையாக இருப்பார். மனைவியைத் தவிர மற்ற எந்தப் பெண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காத அவரது குணமே அவரைத் தனித்துக் காட்டியது. அதனாலேயே ராம்ஜி என அவர் பெயரில் இருக்கும் ராமவை குறிப்பிட்டு அழைத்தார் மேனகா.

        இவர்களைப் பற்றி அரசல் புரசலாகக் கிசுகிசு பரவிய போதும் மேனகா, பானுவை நினைத்துப் பயந்தாரே ஒழிய உலகத்தைப் பற்றிக் கவலைப்பட வில்லை. பானுமதியிடமே நேராகச் சென்று விளக்கம் தரும் நேர்மை மேனகாவிடம் இருந்தது. பானுமதி எங்கள் பிரிவுக்கு நீ காரணம் இல்லை என மேனகாவிடம் சொல்லி விட்டு, கணவரைக் கவனிக்கும் பொறுப்பையும் கொடுத்துச் சென்றார். பானுமதி விலகியபோது முழுமையாக அவரது வாழ்க்கையில் வந்தார்.

           மங்களூருக்கு சந்திராவோடு, அரசியல் கூட்டத்துக்குச் சென்றதைச் சொன்னார். பானுமதி பிரிந்து சென்றும் ராமராகவே இருந்தவர், மங்களூருவில் கட்சியினர் கூல்ட்ரிங்சில் கலந்து கொடுத்த மது பானத்தை அருந்தி விட்டார். மேனகா அவர்களோடு கிடந்த சந்திராவை தன் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பணிவிடை செய்தாள். மனைவியைப் பிரிந்த ஏக்கத்திலிருந்தவர் மனதிலிருந்த பாரத்தை மேனகாவிடம் இறக்கி வைத்து, அவளையே பானுவென அழைக்க ஆரம்பித்தார்.

        மேனகா , எஸ். ஆர். சந்திரா மேல் கொண்ட பக்தி, காதலாக மாறி அவருக்கு சேவகம் செய்யும் அடியாராக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அவளை ரட்சித்த இரட்சகனுக்கே தன்னைக் காணிக்கையாக்கினார்.

         காலையில் கண்விழித்த சந்திரா விதிர் விதிர்த்துப் போனார். ஆனால் மேனகா காதல் மனைவியாகவே அவரைத் தாங்கவும், அவருக்கும் தனது வேலைப் பளுவில் ஆதரவு தேட இடம் தேவைப்பட்டது. அவரோடு வாழ ஆரம்பித்தார். ஒரே மாதத்தில் தாய்மை சுமந்து நின்ற மேனகா, ராம்ஜி , இந்தப் பிள்ளையைக் காட்டி உங்களைப் பிடிச்சு வைக்க மாட்டேன். உங்களுக்குக் கெட்ட பெயர் வரும்னா, இதைக் களைத்து விடுவோம் என்றார் மேனகா. சந்திரா உருகித் தான் போனார். முறைப்படி தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார்.

           மேனகா தனது கணவன் மேல் வைத்த தனது காதலை , வயது வந்த மகளிடம் பெருமையாகவே சொன்னவர், அங்க தான் நீ என் வயிற்றில் வந்து சேர்ந்த என ரகசியத்தையும் சிறு வெட்கத்தோடு பகிர்ந்திருந்தார். ஹாசினி, " அட் த ரைட் சென்ஸ், இது தான் என் பிறந்த இடம்" எனக் கேலி பேசி சிரித்தாள். இருவருமே மகிழ்வாகப் பேசி சிரித்து, போனை வைக்கப் போன நேரம், யுவராஜிடம் பேசியதைக் கூறலாமா என யோசித்தாள். ஆனால் ஏற்கனவே டென்சனாக அம்மாவுக்கு மீண்டும் கவலைக்குள்ளாக்க வேண்டாம் என விட்டுவிட்டாள்.

           பின்னர் ஆறு மணி அரசியல் கூட்டத்துக்குக் கிளம்பிச் சென்றாள். கூட்டத்தில் சிக்கம்மா என அழைத்து அன்பாகப் பேசிய கட்சியினர். எஸ். ஆர்.சந்திராவின் புகழை வானுயரப் பேசினர். கடைசியாகப் பேசிய ஹாசினி சந்திரா, தான் இந்த ஊரின் மகள் எனத் தனது அம்மாவையும், அப்பாவையும் , அவர்கள் கலந்து கொண்ட இந்த ஊரின் கூட்டங்களையும் இந்த மக்களின் அன்பையும் பற்றி அன்பொழுக பேசினாள். அதன் பின்பு மங்களூருவின் பெருமை, மக்களின் பெருமையைச் சொல்லி, இந்த ஊரின் வளர்ச்சியில் கட்டுமானம் தொழில், சுற்றுலாத் துறை என நிறைய விசயங்களைப் பேசினாள். முற்பகலில் கட்சிக்காரர்களிடம் பேசிய போது அவர்கள் சொன்னதைக் கேட்டே இத்தனையும் அவளது அப்பாவின் பாணியில் எடுத்து விட்டாள். சிவராஜ் கொடுத்த கண்டெண்ட் அப்படியே தூங்கியது.

           கூட்டம் முடிந்து வரும் போதே சால்வைகள், மாலைகள் என அவளுக்கு ஏகப்பட்ட மரியாதை. அவள் இறங்கி வரும் போதே மங்களா தேவி அம்மன் பிரசாதம் எனக் குங்குமத்தை ஓடி வந்து நீட்டவும் காற்றில் அவள் சேலையெங்கும் அது படிந்தது. சிரித்துக் கொண்டே அனைவரிடமும் விடை பெற்ற ஹாசினி சந்திரா, இன்று தான் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் தன் மனம் போல் உரையாற்றினாள்.

        சிவராஜ் போனில் அழைத்து, "சிக்கம்மா நம்ம எழுதிக் கொடுத்ததைப் பேசவே இல்லையே" என்றார். " இனிமேல் இப்படித்தான். எனக்குத் தோன்றுவது தான் பேசுவேன்" என மீண்டும் முகத்தில் அடித்தார் போல் பதில் வந்தது.

       ஹோட்டல் அறைக்குச் சென்றவள், பரிசாக வந்த ஒரு சேலையை மாற்றிக் கொண்டாள். பெங்களூரு செல்லும் கடைசி விமானத்தில் செல்வதால் இன்னும் நேரமிருந்தது. ஹாசினி பெரிய பதவி எதுவும் வகிக்காததால் ப்ரைவேட் செக்யூரிட்டி மட்டுமே உண்டு. முன்னே எஸ்கார்டு வாகனம் ஒன்று செல்ல, அடுத்த வண்டியில் ஹாசினி தனது இரண்டு கமாண்டோகளுடன் வந்தாள்.

         யுவராஜ் மேடைப் பேச்சையும், தனது தந்தையுடன் அவள் பேசியதையும் கேட்டவன், மேலும் ஆத்திரமடைந்தான். தனது அடியாள் மூலமாகப் பாம் ப்ளாஸ்ட்டை ஏற்பாடு செய்தான். ஹாசினி பெங்களூரு வந்து இறங்கிய நேரத்திலிருந்து, அவள் காரை மற்றொரு வாகனம் தொடர்ந்தது. யுவராஜின் ஆட்கள் இரண்டு முறை ஹாசினியை கொள்ள முயன்ற போதும் அவளைக் காப்பாற்றி , அந்த ஆட்களைப் பிடித்தனர். அவர்களில் யுவராஜ் போன் செய்த ரவுடிகளின் தலைவன் ரெட்டியும் அடக்கம். அதன் பிறகு அவனும் ருத்ராவின் கைப்பாவை ஆனான்.

           ப்ரீத்தி பவனை வைத்து ஹாசினி வந்த வண்டியை ஓரிடத்தில் தடம் மாற்றியவர்கள், அதற்குப் பதிலாக ஆட்டோமேடிக் வாகனத்தில் மூவரின் ஆடைகள் அனுபவிக்கப்பட்ட மார்ச்சுவரியிலிருந்து எடுத்துவரப் பட்ட அனாதை பாடிகள் மாற்றப்பட்டன. அதன் பின்னர் யுவராஜ் திட்டபடி ரெட்டியை வைத்து சக்தி வாய்ந்த குண்டை வைத்து வெடிக்க வைத்தனர். இதனால் அவர்களது முகமும் சேதமடைந்தது. ரெட்டியை ருத்ரனின் ஆட்கள் கஷ்டடி எடுத்தனர். ஹாசினி சந்திராவை அடையாளம் தெரிந்தவர்கள் அதிகம் அதனால் பவன், ப்ரீத்தியைச் சாதாரணமாகப் பேருந்தில் அனுப்பியவன், ஹாசினியை கேரவேனில் கடத்தினான்.

         ஆனால் யார் இந்த ருத்ரா. யாரின் ஆனைப்படி இவன் ஹாசினியை கொன்ற நாடகத்தை அரங்கேற்றி , அவளைக் கடத்தி காப்பாற்றுகிறான். உன்மையில் அவள் காப்பாற்றப்படுகிறாளா இல்லை இதனிலும் யாரிடமாவது சிக்கப் போகிறாளா. ருத்ரா யாருக்கு வேலை செய்கிறான்.

       இத்தனை கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியவன் அரபிக்கடலின் நடுவில் இருக்கும் தனியார் தீவுக்குத் தான் சிறை எடுத்தவளைக் கடத்திக் கொண்டிருந்தான். அவள் மயக்க நிலையில் பயணமாகிக் கொண்டு இருந்தாள்.

     ஆனால் அதே நேரம் மங்களூரு அரசாங்க மருத்துவமனையில் சிதைந்து கிடைத்த பாகங்களை வைத்து உடலை ஆய்வுக்கு உட்படுத்தி, மூன்று பேரின் பெயரையும் தாங்கிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. பவன், ப்ரீத்தா அநாதைகள் ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சான்றிதழ் இருந்ததால், கேஜேபார்ட்டியே அவர்களது அந்திம காரியத்தை மங்களூரில் செய்து முடித்தது.

        ஹாசினியின் பெட்டி மட்டும் நேற்று அவள் கிளம்பி வந்த எஸ். ஆர். சந்திராவின் வீட்டை வந்தடைந்தது.

No comments:

Post a Comment