Tuesday, 25 May 2021

ஹாசினி சந்திரா-8

 ஹாசினி சந்திரா-8 

           பெங்களூருவில் முதலமைச்சர் இல்லம். முதல்வரை சந்திப்பதற்காகத் தனது கஞ்சி போட்ட காக்கி உடுப்பில் விரைப்பாகத் தோளில் தாங்கியிருந்த பட்டையின் ,நட்சத்திரங்கள் அவர் அந்தஸ்தையும் பேட்ச்கள் வீரத்தைப் பறை சாற்ற மிடுக்காக வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் அந்த ஐபிஎஸ் அதிகாரி. பணியில் பத்து வருட அனுபவம், அவரது கம்பீரத்தை இன்னும் கூட்டியிருந்தது. முப்பத்தி எட்டு வயது என அவராகச் சொல்லிக் கொண்டாளே ஒழிய வயது தெரியாது. அதிலும் அவருக்குத் திருமணம் ஆனதை அறியாத பல பெண்கள் இன்றும் லுக் விட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

        ஆட்சிக்கோ, அதிகாரத்துக்கோ வளைந்து கொடுக்காமல், தனக்குச் சரியெனத் தோன்றியதைச் செய்யும் மறத்தமிழன், முறுக்கு மீசைக்காரன், கமிஷனர் கேடரில் இருக்கும் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ் , முதல்வரை பேட்டிக் காண வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.

         தற்போதைக்குக் காபந்து முதலமைச்சராக இருந்தாலும், முக்கியமான கேஜேபார்ட்டியின் தலைவர் எஸ்ஆர்சியின் மகள் படுகொலை என்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டி இந்தச் சிறப்பு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தார். அதுவும் பாஸ்ட் ட்ராக் போல் விசாரணையைத் துரிதப் படுத்திப் பத்து நாட்களுக்குள் குற்றவாளி கண்டுபிடிக்கப் பட வேண்டும் என அந்த அதிகாரியைக் கேட்டுக் கொண்டார் அந்த முதல்வர்.

        தற்போது ஆட்சியிலிருக்கும் ஆளுங்கட்சியோடு கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருந்தது கேஜேபார்ட்டி. இந்த முதல்வருக்கும் எஸ்ஆர்சிக்கும் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் ஒரு தேசிய கட்சிக்கு விலை போன நஞ்சப்பா, எஸ்ஆர்சிக்கு பிறகு சாதாரண விசயத்தைப் பெரிதாக்கி, கடைசி ஆறுமாத பதவிக்காலம் இருக்கும் போது கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

       அதில் முதல்வருக்குக் கோபம் இருந்தது, போதாத குறைக்கு ஹாசினியை வைத்து ஓட்டுப் பிரிக்கும் நஞ்சப்பா மீது தீராத வன்மத்துடன் இருந்தார். எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத ஐபிஎஸ் அதிகாரியை அழைத்தார்.

        " வாங்க மிஸ்டர். தங்கப்பாண்டியன்" என வரவேற்ற முதல்வர், "முந்தாநாள் நியுஸ் தெரியும்ல ஹாசினி சந்திரா படுகொலை. நீங்க நாலு வருஷம் முன்னாடி எஸ். ஆர். சந்திரா பாதுகாப்பை டீமை ஹேண்டில் பண்ணீங்க. உங்களுக்கு அவரைப் பற்றி ரொம்ப நல்லாத் தெரியும். அதனால் தான் இந்தக் கேஸ்க்கு உங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். கேஸ் ஜெட் ஸ்பீட்ல சால்வ் ஆகனும் " என அர்த்தமாகச் சிரித்தார் முதல்வர்.

          " யெஸ் ஸார். ஐ வில் டூ மை பெஸ்ட்" என வாக்குறுதி தந்தார் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ். மேலும் சில வாய் மொழி உத்தரவுகள், அதையும் தாண்டிய சிவராஜ் நஞ்சப்பாவைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் அடங்கிய கோப்பையும் கொடுத்தார் முதல்வர்.

      கிளம்பும் நேரம், " கலெக்டர் மேடம், ஒரு வழியா தமிழ்நாட்டில் செட்டில் ஆகிட்டாங்களா " எனக் கேட்டார். ஒரு புன்னகையோடு, " ஸார், அது உங்க பெருந்தன்மை ,என் மனைவியை  தமிழ்நாட்டுக்கு ரிலீவ் பண்ணீட்டிங்க. தாங்க்யு ஸார். " என்றார் தங்கப் பாண்டியன்.

       ஹாஹாவெனச் சிரித்த முதல்வர், " காவிரியைத் தான் அனுப்ப மாட்டோம். மற்றபடி ஆபீஸர் எல்லாம் சர்வீஸ் முடிச்சு கிளம்பிட்டே இருக்கலாம்" என்றார்.

" அதுவும் மழை நல்லா பொழிஞ்சு, எங்களை மாதிரியே காவிரியும் தமிழ்நாட்டுக்கு வந்துடும் சார்" என்றார் ஆபீஸர். " அப்படியே ஆகட்டும். குட் லக்" என அனுப்பி வைத்தார்.

      விசாரணை செய்யும் ஆணையை வாங்கியவர், அலுவலகத்திற்கு வந்து பொறுப்பெடுத்துக் கொண்டார். கிரிஷ் என்ற உதவியாளருடன் சந்திரபவனத்தை நோக்கிக் கிளம்பினார்.

        நான்கு வருடமாகக் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வருகின்றனர் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், மற்றும் அவரது மனைவி தான்வி ஐஏஎஸ். சென்ற வருடம் மனைவிக்கு மட்டும் சென்னைக்கு மாற்றல் கிடைத்துவிட அவர் தனது சொந்த பந்தத்தோடு அடையாரில் மகன் மகளைப் பள்ளியில் சேர்த்துச் செட்டில் ஆகிவிட்டார். இவர் மட்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ட்ரைனிலும், ப்ளைட்டிலும் சென்னைக்குப் பறந்து கொண்டிருக்கிறார்.

       கர்நாடகத்தில் முதல் போஸ்டிங்கிலேயே, எஸ்.ஆர்.சி துணை முதல்வராக இருக்கவும், அவரது பாதுகாப்பைத் தங்கப்பாண்டியன் கவனித்துக் கொண்டார். அதனால் வீட்டோடும் அங்கிருக்கும் வேலையாட்கள் வரை நல்ல பழக்கம் உண்டு. ஹாசினியையும் நன்றாகத் தெரியும். நேற்றைய நியுஸ் அவருக்கும் அதிர்ச்சி தான். உடனே மங்களூரு எஸ்பிக்கு போன் அடித்தார். அவர்கள் சொன்ன விவரத்தை மனதில் குறித்துக் கொண்டார்.

       சந்திர பவனம் ஆட்கள் போகவர இருந்தாலும், ஒரு சோகம் அப்பி இருந்தது. அந்த வீட்டையே கலகலப்பாக வைத்திருக்கும் அப்பாவும், மகளும் தான் அங்கு இல்லையே. அதன் வெறுமை தெரியத்தான் செய்தது.

        போலீஸ் வாகனத்தை அதுவும் பழக்கமான அலுவலரைப் பார்க்கவும் வாட்ச்மேன் சல்யூட் அடித்தவன், " சார் என்ன சார் இப்படி. சிக்கம்மாவுக்கா இந்த நிலமை. யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க சார். உங்க லத்தியை வச்சே அடிச்சு அவன் முட்டியைப் பேக்கனும் சார்" எனக் கண்கலங்கினார் அந்த விசுவாசமான காவலாளி. தங்கப்பாண்டியன் ஜீப்பை வெளியே நிறுத்த சொல்லிவிட்டு, வீட்டுப் பணியாட்களோடு பேசி, அவர்கள் மனநிலையை அறிந்தபடி, சமீப காலமான நடப்புகளையும் சாமர்த்தியமாகக் கறந்தபடி வீட்டுக்குள் சென்றார்.

       வரவேற்பறையைத் தாண்டிய பெரிய ஹாலில் ஹாசினி படத்தில் மாலையோடு சிரித்துக் கொண்டிருந்தாள். அதன் அருகில் சென்று நின்று பூங்கொத்தை வைத்தவர் ஒரு பெருமூச்சை வெளியிட்டார்.

       பசவைய்யா காலையில் வந்துவிடுவார். இன்றும் வந்து சேர்ந்தார். ஐபிஎஸ் அதிகாரியைப் பார்க்கவும், " சிக்கம்மாவை அநியாயமா பலி கொடுத்திட்டோம் சார்" என வருந்தினார். ஆபிஸரும் அவரின் கையைப் பற்றி ஆறுதல் செய்தவர்.

      " மேடம் ப்ளாஷ்ட் பற்றி விசாரிக்க, சீப்மினனிஷ்டர் என்னை ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்கார். மிசஸ் சந்திரா இங்கையா இல்லை ஹாஸ்பிடல்ல இருக்காங்களா?" என வினவினார்.

      " வீட்டில தான் சார். அண்ணனோட முதல் சம்சாரம் மகனுங்க, மருமகள், தம்பின்னு எல்லாரும் வந்திருக்காங்க" எனப் பசவய்யா விவரம் சொன்னார்.

       சற்று நேரத்தில் ஹாசினியின் குடும்பம், விசாரணைக்கு வந்த அலுவலரைச் சந்தித்தது. மேனகாவுக்கு வணக்கம் சொன்ன தச்கப்பாண்டியன், " ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேம். இப்படி ஒன்னு நடந்திருக்கவே கூடாது. எவ்வளவு அருமையான பொண்ணு. இப்பவும் காலேஜ் போகும் முன்ன , அப்பாவைக் கொஞ்சி சாக்லேட் வாங்கிட்டுப் போன ஹாசினி தான் கண் முன்னாடி நிற்கிது" என ஆபீஸர் தனது துக்கத்தை மேனகாவுடன் பகிர்ந்து கொண்டார்.

       " இப்பவும் அதே ஹாசினி தான் மிஸ்டர் பாண்டியன், உங்களுக்கே தெரியுமே, அவள் அப்பா மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தான்னு, அவருக்காகத் தான் அரசியலுக்கு வந்தாள். ஆறுமாசத்தில இப்படி ஆகும்னு கனவு காணலையே தம்பி , எலக்சன் முடியவும் அவங்க அப்பாவை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயி வைத்தியம் பார்க்கணும்னு சொன்னாலே " என மேனகா கண்ணீர் விட்டார்.

      " அம்மா, கண்ட்ரோல் யுவர் செல்ஃப். " என அதிபன் சந்திரா மேனகாவுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். அவர்கள் தமிழ் பேசும் குடும்பம் என்பதால் ரத்தின சிம்மதேவன், ப்ரதிபன், அதிபனோடு சுலபமாகத் தமிழில் பேசி கலந்து கொண்டார் தங்கப் பாண்டியன். மேனகாவுக்கு, பானுமதியிடமிருந்து போன் வந்தது, அவர் ஒரு எஸ்க்யூஸோடு உள்ளே சென்றார்.

            பசவைய்யாவிடமிருந்து தனது விசாரணையை ஆரம்பித்திருந்தார் ஆபீஸர். இதற்கு நடுவில் அவரது உதவியாளர் கிரிஷ் வீட்டை வலம் வந்து வேலையாட்களிடம் விசயத்தைக் கறந்து அவர்களது பேச்சுக்களை மொபைலில் பதிந்து வைத்திருந்தான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பாவும் மகனுமாக நஞ்சப்பாக்கள் வந்து சேர்ந்தனர்.

         சிவராஜ் வந்திருக்கும் அதிகாரி யாரெனத் தெரியவுமே, " நல்லா விவகாரம் புடிச்ச தமிழன், செல்வாக்கான குடும்பம், பொண்டாட்டி கலெக்டர், மாமனார் ரிடையர்ட் ஐஏஎஸ், பெரியப்பா ஸ்டேட் மினிஷ்டர். இவன் மேல கை வைக்கவும் முடியாதே. போதாத குறைக்குத் தலைவருக்குச் செல்லப்புள்ளை வேற. அப்பவே ஆடுவான். சிக்கம்மா படுகொலைனா கொலை காண்டில் இருப்பான்' என மனதில் யோசித்துக் கொண்டே தான் வந்தார்.

       அவர்களைப் பார்க்கவும் சம்பிரதாயத்துக்கு முகமன் கூறிய ஆபிஸர், தனக்கு ஹாசினி சந்திரா பாம்ப்ளாஸ்ட்டை விசாரணை அதிகாரியாகச் சிம் நியமித்து உள்ளதைச் சொன்னார். ஆனால் கடமையாற்ற வந்துள்ளவனின் முகத்திலிருந்து எதையும் அறியமுடியவில்லை.

          அதைக் கேட்ட சிவராஜ் முதலில் அதிர்ந்தவர் பின் , " பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரம் விசாரணை கமிஷன் போட்டாச்சா. முதலைமைச்சர் அதனால என்ன நிருபிக்க நினைக்கிறார்னு தெரியலையே" எனக் குதர்க்கமாகவே பேசினார். யுவராஜ் அமைதியாக நின்ற போதும், அவன் முகத்தில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியை அவனறியாமல் கண்டுவிட்டார் தங்கப்பாண்டியன்.

        " அவர் இந்தக் கேஸ்க்கு என்னை அப்பாயிண்ட் பண்ணலைனாலும், நான் இன்வஸ்டிகேட் பண்ணியிருப்பேன் ஸார். " எனக் கூலாகப் பதில் தந்தார் ஆபீஸர்.

        பிரதிபன், அதிபன், ரத்தன் மூவருமாக நஞ்சப்பாக்கள், பசவைய்யா ஆகியோரை வைத்துக் கொண்டே ஒரு கோரிக்கை விடுத்தனர். ரத்தன் தான் பேசினார், " ஸார் ஒரு ரிக்வெஸ்ட், ஹாசினியை படுகொலை செஞ்சவனுக்குக் கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுக்கனும். அதுக்கு எங்களுடைய முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அதே சமயம், எஸ்.ஆர்.சி யோட ஹெல்த் பாயிண்ட்டை வச்சு பார்க்கும் போது, இங்க இருந்தால் அவருக்கு ஆபத்து தான்" எனக் குண்டைத் தூக்கிப் போட்டார்.

        நஞ்சப்பா, பசவய்யா முதற்கொண்டு ஆபிஸருமே அதிர்ச்சியாகப் பார்க்கவும், " டோண்ட் மிஸ்டேங் ஹிம். மாமா என்ன சொல்ல வர்றார்னா, ஹாசினி இல்லைங்கிற செய்தி அப்பா காதுக்குப் போனால் அது அவருடைய உயிருக்கு ஆபத்துன்னு நேற்று டாக்டர் சொன்னதைத் தான் அப்படிச் சொல்றார்" என விளக்கம் தந்தான் ப்ரதிபன்.

        " ஆமாம், ஆமாம் அது தான். அதனால நாங்க எஸ். ஆர்.சியையும், மேனகாவையும் எங்களோட மஸ்கட் கூட்டிட்டு போறோம். அதுக்குள்ள உங்க விசாரணையை முடிச்சிக்குங்க. மீதி அங்கிருந்தே ஒத்துழைப்பு தர்றோம்" என்றார் ரத்தினம்.

     " கட்டாயம் சார். என் பக்கத்தில் எந்தப் பிரச்சனையும் வராது. நான் முழு ஒத்துழைப்பு தர்றேன்" என்றார் ஆபிஸர். சிவராஜ், " ஸார், அதெப்படி சட்டுனு எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்ப முடியும்" எனக் கேள்வி எழுப்பினார்.

         " ஏன் சார் இவ்வளவு காலம் அப்பா உழைச்சதெல்லாம் பத்தாதா. எல்லாத்தையும் உங்கள்ட்ட விட்டுட்டு அப்பாவை மட்டும் தானே கூட்டிட்டுப் போறோம்" என்றான் அதிபன்.

        " தம்பி அதுக்குச் சொல்லலை, கட்சி பாலிசி , சொத்து நிறைய விசயம் இருக்கு. பொதுக்குழு கூட்டித் தான் இதுக்கு முடிவு எடுக்க முடியும். தேர்தலை வச்சுகிட்டு அது முடியாது" என்றார் நஞ்சப்பா.

         " அப்பா இருக்கிற வரை அவர் தானே தலைவர். தேர்தலில் ஜெயிக்கிறவங்க சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுத்துக்குங்க. துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர் கள் சேர்ந்து மற்றதை முடிவு பண்ணுங்க" என ப்ரதிபன் சொன்னான்.

           பசவய்யா சிவராஜை அமைதியாக இருக்கச் சொன்னார். ஆபீஸரை வைத்துக் கொண்டு பேச அவர் விரும்பாமல் சிவராஜ் நஞ்சப்பா வாயை மூடிக் கொண்டார். அந்தப் பேச்சு அப்படியே நின்றது.

      மேனகா, போன் பேசி முடித்து வந்திருந்தார். " பாண்டியன் தம்பி உங்களுக்கு என்ன விவரம் வேணும்னாலும் எப்பனாலும் எனக்குப் போன் பண்ணுங்க. நான் சொல்றேன். ஆனால் ராம்ஜி கூட இருந்தால் எடுக்க மாட்டேன். நானே திரும்பக் கூப்பிடுறேன். அர்ஜெண்டா அவங்களைப் பார்க்க போகணும் " என்றவர்.

          " அதிபா, அப்பாவைப் பார்க்க வர்றீங்களா. அக்கா போன் அடிச்சிட்டாங்க." எனப் பானுமதி அழைத்த விவரத்தைக் கூறினார். அதிபனும் மற்றவர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பவும். தங்கப்பாண்டியன் சிவராஜிடம் அன்று நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டார். " காலையில் நானும் என் மகனுமா தான் வந்து சிக்கம்மாவை வழி அனுப்பி வச்சோம். இப்படிப் போகும்னு தெரியாமல் போச்சே" எனப் புலம்பினார். யுவராஜ் வாயையே திறக்கவில்லை.

         " ஓகே சார். நான் மேங்களூர் போயிட்டு வந்து உங்களைச் சந்திக்கிறேன்" எனத் தனது உதவியாளருடன் கிளம்பி விட்டார் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ். தனது உதவியாளர் கிரிஷ்க்கு சிலருடைய மொபைல் நம்பர்களின் கால் ஹிஸ்ட்ரி வேண்டும் எனக் கட்டளையிட்டார்.

         " ஸார், எதுவும் பிரச்சனை ஆயிடாதே. எல்லாம் பொலிடிகல் பேக்ரவுண்ட். அடுத்து ஆட்சிக்கு வருவாங்கன்னு பேசிக்கிறாங்க. நம்மளை ரவுண்டு கட்டிடப் போறாங்க" எனக் கவலையாகச் சொல்லவும், அவனைத் திரும்பி ஒரு லுக் விட்ட பாண்டியன், " கட்சி ஆட்சிக்கு வரட்டும். ஆனால் யாரு நாற்காலியில் உட்கார்றதுன்னு நாம முடிவு பண்ணுவோம். அப்பாவும் மகனும் பெரிய தில்லாலங்கடியா இருக்கானுங்க" என்றவர். அடுத்து ஒரு டாக்டருக்கு போன் செய்தார். அதன் பிறகு அன்று இரவு மங்களூரு செல்லவும், தங்குவதற்கு ஹாசினி தங்கியிருந்த ஹோட்டலில் ரூம் போட சொன்னார். மதுரைக்காரச் சிங்கம் கிளம்பிடுச்சு. இனி மாட்டப் போவது நஞ்சப்பாக்கள் மட்டுமா அல்லது சுஹானா தீவில் குடி அமர்ந்திருக்கும் அரக்கனுமா எனப் பார்க்க வேண்டும்.

        அதிபன் சந்திரா, மேனகா சந்திரா இருவருமாக மருத்துவமனையில் சந்திராவின் அறையை நோக்கிச் சென்றனர். இவர்கள் காரிடாரில் நடக்கும் போதே எஸ்.ஆர்.சி சிறுவனாக மாறி கதறிக் கொண்டிருந்தார்.

       " பானு இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது. என்னை விட்டுடு" எனக் கெஞ்சிக் கொண்டிருந்தார் சந்திரா.

        " சரி போங்க, நான் சொன்னதை எப்ப கேட்டு இருக்கீங்க. இந்தச் சாப்பாடு விஷயத்தில் கேக்குறதுக்கு. எல்லாம் உங்க பிடிவாதம் தான். உங்களுக்கு என்னைக்குத் தான் என்னைப் பிடிச்சிருந்தது. நான் தான் உங்களைக் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்து கல்யாணம் கட்டிக்கிட்டேன். நீங்க தான் முதல் இராத்திரியிலேயே, எங்க அண்ணனோட நட்புக்காகத் தான் என்னைக் கட்டினதா சொன்னீங்களே. அவள் வரட்டும் நான் வீட்டுக்கு போறேன்" என முறுக்கிக் கொண்டிருந்தார் பானு.

          " பானும்மா, அது விளையாட்டுக்குச் சொன்னது. நீ இன்னும் அதை மறக்கலையா , உண்மை சொல்லட்டா. வீரா கூட உன் வீட்டிலையே வந்து உட்கார்ந்து இருக்கிறதே, இந்தத் தேவதையோட தரிசனத்துக்குத் தானே. " எனக் குழைந்தார். மேனகாவும், அதிபனுமாக வெளியே நின்று இவர்கள் சம்பாஷனையைக் கேட்டு கண்ணால் பேசிக் கொண்டனர். அதி உள்ளே செல்ல முயன்றவனை மேனகா தடுத்து அங்கேயே நிறுத்தினார்.

      " சும்மா பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு என்னை விடச் சினிமாவும், அரசியலும் தான் முக்கியம்" என்றார் பானு. " உனக்கு இரண்டைக் குடுத்துட்டு உன்னைப் பிசியாக்கிட்டு தானே, அந்த இரண்டு பின்னாடியும் போனேன்" எனச் சிரித்தார் சந்திரா.

      " பேசற பேச்சைப் பாரு, சரி உங்க வழிக்கே வர்றேன். அந்த இரண்டும் இப்ப ரொம்பப் பிஸி ஆகிட்டாங்க. அவங்க குடும்பம் ஆகிடுச்சு. இப்ப என்ன செய்ய" என்றார் பானு.

       " மேனு நான் என்ன வேலை செஞ்சிட்டு இருந்தேன்" எனப் பானுவையே கேட்டார் சந்திரா. பானு சமாளிக்கத் தடுமாறினார், மேனகா சரியாக உள்ளே புகுந்து விட்டார். " ராம்ஜி, யாரு வந்திருக்கா பாருங்க" எனப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே உள்ள செல்லவும், இவர்களைப் பார்த்தவர் கேள்வியை மறந்தார்.

          "அதிக்குட்டி வாடா" எனத் தனது அருகில் உட்கார வைத்துக் கொண்டார். அவர் அப்போது தான் சாப்பிட்டுத் தட்டில் கைகழுவி இருந்தார். மேனகா அதனைச் சுத்தம் செய்ய எடுத்துச் சென்றார். பானுமதியும் மேனகா பின்னோடு சென்றார். அதிபனுக்கும் அறிவுறுத்திக் கூட்டி வந்திருந்ததால் அப்பாவை ஒத்தே அவனும் பேசினான்.

       சுஹானா தீவு அன்றைய பொழுது ஹாசினியை தேடுவதில் ஆரம்பித்து அவளைக் காப்பாற்றிக் குளிக்க வைத்து, மருந்து போட்டு எனச் சென்றது. காலையில் பவனை அழைத்துச் சென்ற அவர்களது பாஸ் அரக்கனும் மதியத்துக்கு மேல் திரும்பி வந்தனர். ப்ரீத்தி ரெடிமேட் புலாவ் போல் எதையோ பொங்கி வைத்திருந்தாள். நால்வருமாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

       ஹாசினி முகத்தை அவ்வப்போது சுழித்துக் கொண்டு இருந்தாள். "ஆர் யூ ஆல்ரைட்" எனத் தனது கூர்மையான கண்களை அவள் மேல் செலுத்திக் கேட்டான் அரக்கன்.

        " நாட் ஆல்ரைட், இட் இஸ் பெயினிங். " என எரிச்சலாகப் பதில் தந்தாள் ஹாசினி. " ப்ரீத்தி, மருந்து கொடுத்தேனே வச்சு கட்டுனியா" என்றான். ப்ரீத்தி தலையை ஆட்டினாள். இன்னும் கொஞ்சம் இலைகளைப் பறித்து வந்து தயார் செய்து வைத்தான்.

    "உன் மெடிக்கல் கிட்ல பெயின்கில்லர் இருந்தா எடுத்துக் கொடு. போட்டுட்டு தூங்கட்டும்" என ப்ரீத்தியிடம் அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அவனையே பார்த்திருந்தவள்,

         " அரக்கன் ஸார், நீ பாட்டுக்கு என்னை இந்தத் தீவுக்குக் கடத்திட்டு வந்திட்டியே. இந்தச் சின்னப் பூச்சிக்குப் பதில் பெரிய பூச்சி கடிச்சு பொட்டுனு போயிருந்தேன்னா என்ன செய்வ" எனக் கேள்வி எழுப்பினாள்.

          அவனுக்குக் கோபம் பலியாக வந்தது, " இடியட் மாதிரி நீ வேலை செய்யாமல் இருந்தாலே போதும். இங்கே வேற ஆபத்துக்கிடையாது. நான் மட்டுமே கூட இங்க வந்து போயிட்டு தான் இருக்கேன். உயிரோட தானே இருக்கேன்" எனக் கனலாக வார்த்தையைக் கொட்டினான். அவள் முகம் விழுந்து போனது.

        " ஆமாம் நான் ஒரு இடியட் தான். கூட இருக்கிறவங்களை நம்பி, நம்பி ஏமாந்து போற இடியட். எங்கப்பா மாதிரி சுத்தியிருக்கவங்களை நல்லவங்கன்னு நம்பறது எங்க முட்டாள்தனம் தான். " எனச் சிடுசிடுத்தவள் எழுந்து காட்டேஜூக்குள் சென்று விட்டாள். அவனும் அதே கோபத்தோடு தனது மலையிலிருக்கும் மர வீட்டுக்குச் சென்று விட்டான்.

      ப்ரீத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பவன் அவளுக்கு உதவி செய்து கொண்டே அவளை உற்சாகப் படுத்தினான். " பவன், என்னால தான் நீயும் கஷ்டப்படுற. ஐ யம் சாரிடா" என உருகினாள் ப்ரீத்தி.

          " ஹேய் பேபி, நானே அநாதையா திரிஞ்சவன், உன்னால எனக்கும் அம்மா, பேமலி எல்லாம் கிடைச்சிருக்கே. இட்ஸ் ஓகே. " என்றான்.

       "அப்புறம் ஏன் பாயி கூடச் சண்டை போடுற" என்றாள். " அது அப்படித் தான். அவர் சொன்னோன்ன ஒத்துக்கிட்டேன்னா எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிடும்" எனச் சிரித்தவன், மற்ற இருவரும் அருகில் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு ப்ரீத்தியை மற்றொரு காட்டேஜூக்கு கடத்திச் சென்றான்.

    " பவன் வேண்டாம் ப்ளீஸ், பாயி டக்குனு வந்திடுவார். எனக்குச் சங்கடமா போகும். " என ஆட்சேபித்தாள்.

     " ஹேய் பேபி, உன்னை என்னடி பண்ணப் போறேன். அந்த அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை. அதுவும் அரக்கன் ஸாரை பக்கத்தில் வச்சுக்கிட்டு செய்வேனா." எனக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

      அவன் கையில் அடித்தவள், "உனக்கும் அரக்கன் ஸாரா. அவங்க தான் தெரியாமல் சொல்றாங்க. உனக்கென்ன" என்றாள் ப்ரீத்தி.

       " ஹேய் பேபி , உசுரோட இருக்கிற பொண்ணை, பாம் ப்ளாஸ்ட்ல செத்துட்டதா ஊரை நம்ப வச்சு கடத்திருக்காரு. அவருக்கு இந்தப் பேரு சரியான மேட்ச் தான்" என அவள் காதில் கிசுகிசுத்தான் பவன

     ப்ரீத்தி அதிர்ச்சியில் வாயைப் பொத்திக் கொண்டாள். "நீ அன்னைக்கு, நாங்க தான் செத்துட்டமேன்னு சொன்னியே அதுக்கு இது தான் அர்த்தமா. அப்ப உலகத்தைப் பொறுத்தவரை நம்மளும் உயிரோட இல்லை"என அவள் கேள்வி எழுப்பவும்.

         " ஏய் பேபி, ப்ரீத்தி பவன் தான் இல்லை. நாம இருக்கோம்" என்றான். " ஆமாம்ல, நம்ம போனும் அதிலையே போயிடுச்சே. நீ கையில வச்சிருக்கிறது புதுசா" எனக் கேள்வி எழுப்பினாள். "ஹேய்  ஸ்வீட்டி பவனோட போன் போச்சு. என்னோடது இருக்கு" என்றான். "அப்புறம்" என்றாள் ப்ரீத்தி.

         "நான் என்ன கதையா சொல்றேன். உன் பாயி , இந்த மேடத்தை யார்கிட்டையோ, இவங்களை ஒப்படைக்கனும்னு சொல்றாரு. ஆனால் செய்யறதெல்லாம் வேறையா இருக்கு. மனுசன் மண்டைக்குள்ள என்ன ஓடுதுன்னே தெரியலை. போலீஸ் மோப்பம் பிடிக்கிறதுக்குள்ள இங்கிருந்து தப்பிக்கனும். பார்ப்போம்" என்றான்.

    " போலீஸா" ப்ரீத்தி ,"அப்புறம் கடத்துறது, ஆள் மாறாட்டம் ,இதெல்லாம் கேற்றம் இல்லையா, உன் பாயி எவ்வளவு செல்வாக்கான ஆளா இருந்தாலும் கம்பி எண்ண வச்சுருவாங்க. நம்மளையும் சேர்த்து தான். ' என்ற பவனின் வார்த்தகளை கேட்டதில் பயத்தில் ப்ரீத்தி அவனோடு ஒண்டிக் கொண்டு கொண்டாள் .பவனுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.

        ஹாசினி மாத்திரையைப் போட்டுப் படுத்தவளுக்குக் காய்ச்சல் அடித்தது. சந்திரன் உதயமான பிறகு, ஹாசினி சந்திராவின் உடல் வெப்பம் கூடிக் கொண்டே போனது. ப்ரீத்தி தண்ணீரில் துணி பட்டியை நனைத்து நெற்றியில் போட்டுக் கொண்டே இருந்தாள். காலிலும், தொடையிலும் புதிதாக அரைக்கப் பட்ட குப்ப மேனி இலையை வைத்துக் கட்டினர்.

     " பாயி, அவங்க சொன்னது மாதிரி எதுவும் ஆகாதில்ல" எனக் கண்ணீர் விட்டாள் ப்ரீத்தி. " ஹேய், என்னடா சின்னப் பிள்ளையாட்டம். அண்ணன் மேல நம்பிக்கை இல்லையா. எனக்கே ஒரு தடவை பூச்சி கடிச்ச அனுபவம் உண்டு. நீ பயபாபடாத" என்றான் அரக்கன் ஸார்.

        ப்ரீத்தியும் கொஞ்சம் தள்ளாடுவது போல் தெரியவும், பவனை அழைத்து அவளைக் கூட்டிக் கொண்டு செல்லச் சொன்னான். " இல்லை பாயி. நான் மேமோடையே இருக்கேன். அவங்களுக்கு எதாவதுன்னா என்னால தாங்க முடியாது" என்றாள் ப்ரீத்தி.

        " நைட் நான் பார்த்துக்குறேன். காலையில் நீ பாரு. நீயும் படுத்துக்கிட்டா எங்களுக்கு யாரு பார்ப்பாங்க" எனப் பவனோடு அடுத்தக் காட்டேஜுக்கு அனுப்பி வைத்தான். பவன் ஒரு பெரிய குவளையில் ஓட்ஸ் கஞ்சியைக் கொண்டு வந்து தந்து விட்டுப் போனான்.

          ஹாசினி ஒரு கட்டிலில் அடியற்ற மரம் போல் கிடந்தாள். பூச்சி கடித்ததின் விளைவு, தானே அனுபவித்து இருப்பதால் பயமின்றித் தான் இருந்தான் அரக்கன் ஸார். ஆனாலும் அவள் படும் வேதனை தாங்க முடியாமல் முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தான்.

        அவளை எழுப்பித் தன் மேல் சாய்த்துக் கொண்டு மெல்ல ஓட்சை குடிக்க வைத்தான். அவள் வேண்டாம் என மறுத்த போதும், சமாதானப் படுத்தி அதனைப் புகட்டி விட்டான்.

       " ம்ப்ச் , வேண்டாம்னா விடேன். எல்லாத்துலையும் உன் பிடிவாதம் தான் ஜெயிக்கனுமா" எனச் சலித்துக் கொண்டாள். " உன் பிடிவாதத்துக்கு விட்டா, எல்லாத்தையும் இழுத்து வச்சுக்குவ" எனக் கடிந்தான்.

       "ஆமாம், அரக்கன் பிடிவாதத்துக்குத் தான் நான் அவதிப்படனும். போடா" என அவன் மீதே மயங்கினாள். கன்னத்தைத் தட்டி, " மது ஒன்னும் இல்லை. சும்மா பூச்சி கடித்ததுக்குக் காய்ச்சல் அவ்வளவு தான். நீ நல்லா இருக்க. பயப்படாத. யூ ஆர் சேஃப்" என்றான்.

" அப்பா, அம்மா, சேஃபா" எனப் புலம்பலாக வந்தது வார்த்தை. " மது , எவ்ரித்திங்க் இஸ் பைன். பயப்படாத. அவங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க." என்றான்.

"அப்பாவை காப்பாத்தனும். " என உளறலாகவும் கூட மீண்டும் அந்த ஒன்றை மட்டுமே புலம்பினாள். அவள் மனரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

        காய்ச்சல் அதிகமாகவும், அவளின் உடல் தூக்கிப் போட்டது. அருகே அமர்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன், தனக்காக வைத்திருந்த போர்வையையும் போர்த்தி விட்டு, அழுத்திப் பிடித்துக் கொண்டான். குளிர் நீர் பட்டியை மாற்றி மாற்றி நெற்றியில் போடவும் சூடு இறங்கியது. சற்று நேரத்தில் அவள் மேனி சில்லென மாறியது. அரக்கனே பயந்து தான் போனான். 

        அவளது உள்ளங்கால், கையை மாற்றி மாற்றிப் பரபரவெனத் தேய்த்து விட்டான். சட்டெனக் குளிரும் உடல் சூட்டை ஏற்ற வேண்டும் என யோசித்தவன், தான் ஒரு முறை வந்த போது என்ன செய்தோம் என யோசித்தான். அந்தச் சமயம் அவன் தேவதாசாக மாறி வந்திருந்தான். ஆனால் அதுவே தான் இந்தக் குளிரைத் தாக்குப் பிடிக்க உதவியது என எண்ணியவன், தனது உடைமையிலிருந்து சிறு டின்னை எடுத்து வந்தான். அதிலிருந்த மதுவை மதுவுக்குப் புகட்டினான். அது உள்ளே போகவுமே உடலின் வெப்பம் சீரானது. அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தவன் அது சரியாக இருக்கவும் திருப்தியற்றவனாகத் தனக்கான படுக்கைக்குச் செல்ல முற்பட்டான்.

         "சந்திரா, நீ என்னை மறக்கவும் இல்லை, கைவிடவும் இல்லைல. எனக்குத் தெரியும் யு லவ் மீ" என்றாள் ஹாசினி. அவளை விட்டு விலகி தனது படுக்கைக்கு வர இருந்தவன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்து நின்றான் அரக்கன்.

        அவள் கண்ணைத் திறவாமலே தன்னவனோடு மகிழ்ந்திருந்தாள். "நீ என் கூடப் பேசினாலோ, விளையாடினாலோ மாமிக்குப் பிடிக்காதே சந்திரா. அப்புறம் ஏன் வந்த , மாமி உன்னைத் திட்டுவாங்க. நீ போயிடு. நான் சமாளிச்சுக்குவேன்" என்றாள் ஹாசினி. அவன் நம்ப இயலாத பாவனையோடு அவளருகில் கட்டிலில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்திருந்தான். அவன் கைகள் தன்னால் சென்று அவளின் முகத்தை வருடின. அந்தக் கையைப் பிடித்துக் கொண்டு, ஒருக்களித்துப் படுத்தவள், "சந்திரா. என்னோட சேர்ந்தா உனக்கும் கஷ்டம் தான். நீ போயிடு "எனப் புலம்பியபடியே நன்றாக உறங்கி விட்டாள்.

         அவன் மெல்ல தன் கைகளை உருவி கொண்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டவன் "போயிடு போயிடுனா, உன்னை விட்டுட்டு எங்கடி போவேன். உனக்குத் தான் வேற பக்கம் நினைப்பு போயிடுச்சு. நீயா நான் கிடைக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்ட. எங்க போய்ச் சிக்கியிருந்தேன்னு கூட உனக்குத் தெரியாது. பிரச்சாரம் பண்ணி எலக்சன்ல ஜெயிச்சா விட்டுடுவானுங்களா. நீ தங்க முட்டையிடுற வாத்துடி. ஆனாலப் பட்ட எஸ் ஆர் சந்திராவையே, அவனுங்க கஷ்டடில வச்சிருக்கானுங்க. நீ எம்மாத்திரம்.

        உன் முழு வாழ்க்கையையும் அவனுங்க கன்ட்ரோல போயிருக்கும். அதுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கனுமா. என் அடையாளத்தையே அழிச்சிட்டியேன்னு நாளைக்கு என் கூடச் சண்டை போடுவ. வெறுக்கக் கூடச் செய்வ. ஆனால் அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நீ நினைச்ச நிம்மதியான வாழ்க்கையை அமைச்சுத் தரவேண்டியது என் கடமை . அதுக்காக எந்த இல்லீகல் வேலை செய்யவும். இந்தச் சந்திரா தயங்க மாட்டேன்டி குண்டு கோஸ்" என்றவன்.

         "சின்னதில் கன்னமெல்லாம் கொழு கொழுன்னு ஆப்பிள் மாதிரி கடித்துச் சாப்பிட ஆசையா இருக்கும். இப்ப பாரு ஸ்டைலிஸ் ப்யூட்டியாகிட்ட. என்னை உயிரோட கொல்றதுக்கே பிறப்பெடுத்தவடி நீ " என அவளையே ஆசையாகப் பார்த்திருந்தான்.

       " அம்மாடி, உன்கிட்ட பேசவே கூடாது. ஒரு வார்த்தை தெரியாமல் வந்துடுச்சு அதுக்கே நான் யாருன்னு கண்டு பிடிச்சிட்டியே. " என அவளைச் சிலாகித்தவன் அவள் நெற்றியில் மீண்டும் முத்தமிட்டான். அவள் "ம்" எனச் சுயநினைவு இன்றியே மகிழ்ந்து திரும்பிப் படுத்ததில் அவனது தாடி பிய்ந்து கொண்டு வந்தது. அதை மொத்தமாக எடுத்தவன். தனது விழியில் இருந்த செயற்கை லென்ஸையும் எடுத்தான். அதே முகம் பெங்களூரு மங்களூரு விமானத்தில் பேப்பரை விரித்தபடி அவளை நோட்டமிட்டு வந்த, பேப்பர் படிக்கிற பரதேசி தான் அதே சி.பி தேவ். 


No comments:

Post a Comment