Tuesday, 18 May 2021

ஹாசினி சந்திரா- 4

ஹாசினி சந்திரா- 4 

          பெங்களூரு சந்திரபவன் , ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தது. இந்த மாளிகையின் இளவரசி ஹாசினி சந்திராவின் படுகொலை மாநிலம் முழுவதும் மாறாத அதிர்ச்சியைத் தந்திருந்தது. கட்சி நிர்வாகிகள் தான் கூட்டத்தையும், ஊடகத்தையும், பார்வையாளர்களையும் சமாளித்தனர். எஸ் .ஆர்.சந்திராவின் தீவிர ஆதரவாளர்கள் ,தொண்டர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர், பொதுமக்கள் விஷயம் அறியும் ஆவலுடன் அவர்கள் வீட்டின் வழியாகக் கடந்து கொண்டிருந்தனர். காவல்துறையும் குவிக்கப் பட்டு இருந்தது.

         இன்று காலையிலேயே எஸ். ஆர். சந்திராவிடம் வீட்டுக்குச் சென்று வருவதாகச் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் மேனகா தேவி. மருத்துவமனையில் நம்பகமான செவிலியர் பொறுப்பில் கணவரை ஒப்படைத்து விட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி வீட்டுக்குச் சென்று வருவது மேனகாவின் வழக்கம் தான். ஆனால் மேனகா வரும் வரை தாயைத் தேடும் சேயாகச் சந்திரா பத்து நிமிடத்துக்கு ஒருமுறை கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் தன்னுடைய போட்டோ ஒன்றில், 'வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் ராம்ஜி' என வாசகம் ஒட்டியதை அவரிடம் கொடுத்து விட்டு வருவார். இன்றும் அதனைக் கொடுத்து விட்டுத் தான் வந்தார்.

      காலை பத்துமணியளவில் பானுமதி சந்திரா மகன்கள் பிரதீபன் சந்திரா, அதிபன் சந்திரா இருவருடனும் , மூத்த மருமகள் மற்றும் தம்பி ரத்தனதேவனுடன் பெங்களூரு வந்து சேர்ந்தார். நேராகச் சந்திரபவனுக்குத் தான் வந்தார்கள். மகன்கள் மட்டும் இந்தியா வரும் போது அப்பாவைப் பார்க்க இந்த வீட்டுக்கு வந்து செல்வார்கள். அதுவும் அதிபன் சந்திரா தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வருவான். இன்று எல்லாருக்குமே ஹாசியைப் பற்றிச் செய்தி அறிந்ததில் ஒரு அதிர்ச்சி. தாங்க இயலாத துக்கம் , பானுமதி இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து அந்த வீட்டுக்குள் வருகிறார்.

       காலப் போக்கில் எத்தனையோ மாற்றங்கள். ஆனால் அந்த வீடு இன்னும் கம்பீரம் கூடித் தான் நின்றது. அதன் மக்கள் தான் சரிந்து கொண்டிருந்தனர். சக்காளத்திகள் எதிர் எதிர் பார்த்தால் சண்டை போடுவார்கள் என்பது உலக மரபு. ஆனால் மேனகா தனியாகத் தத்தளித்த கடலில் துடுப்புக் கிடைத்ததைப் போல் பானுமதியைப் பார்க்கவும் உணர்ந்தார். மேனகா ஓடிவந்து பானுமதியைக் கட்டிக் கொள்ள இருவருமாக மகளுக்காகக் கதறினர்.

        ஹாசினி சந்திராவின் பெரிதுபடுத்தப்பட்ட படத்தை டேபிலில் வைத்து மலர்களைச் சூட்டியிருந்தனர். கன்னத்தில் குழி விழச் சிரிக்கும் ஹாசினி சந்திராவைப் பார்க்கவுமே, அவள் இல்லை என்ற நினைவில் மாற்றாந்தாய் மக்கள் அண்ணன்கள் இருவரும் கண்ணீர் சிந்தினர். ஆராதனா பெரியவர்கள் இருவரையும் ஷோபாவில் அமர்த்தித் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார். நேற்று சொன்ன அதே புலம்பல்களைச் சொல்லி மேனகா ஓயாது அழுதார். அவர் அழது ஓயட்டும், மனபாரம் ஆறட்டும் எனத் தனது மடியில் சக்களத்தியை தாங்கி இருந்தார் பானுமதி.

        கட்சியின் நிர்வாகிகள் ப்ரதிபன், அதிபன் சந்திராக்களை நெருங்கி நடந்ததை விவரித்தனர். பசவைய்யா இங்கே உள்ள ஏற்பாடுகளைக் கவனித்தார். ரத்தன் தேவ் அவரிடம் தான் நடந்ததை அறிந்து கொண்டார். அவர்களுக்கிடையில் நல்ல பரிட்சயம் இருந்தது.

      " எஸ்.ஆர்.சி ஹாஸ்பிடல இருக்கிறார். இதைச் சொல்லாமல் எப்படி இருப்பது " என மற்ற நிர்வாகிகள் கேட்கவும், மேனகா, பானுமதி இருவரும் சொல்ல வேண்டாம் என ஒரே சமயம் மறுத்தனர்.

       இவர்கள் வந்த பிறகு ஒரு மணி நேரத்தில் மங்களூரிலிருந்து ஹாசினி சந்திரா என்ற பெயர் தாங்கிய பெட்டியோடு சிவராஜ் நஞ்சப்பா வந்து சேர்ந்தார். யுவராஜ் சம்பிரதாயத்துக்காகத் தனது நடிப்பை வெளிப்படுத்தியபடி நின்றான். 

        பெட்டியில் மகளைப் பார்க்கவும் மேனகாவுக்குக் குலை நடுங்கியது . என்ன தான் அவளாக இருக்காதோ, என அந்த ஒரு மெசேஜை வைத்துச் சிறு நம்பிக்கை இருந்தாலும் நிதர்சனம் அவர் மகளுக்காகக் கூறும் வார்த்தைகள் அவரை அசைத்துப் பார்த்தது.

        எதிர் கட்சிக் காரர்கள், மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியத் தொழிலதிபர்கள், திரைத் துறையினர் என எஸ். ஆர். சிக்காகப் பெரும் படையே திரண்டு வந்தது. எல்லாரும் தலைவரைக் கேட்கவும், மேனகா பானுமதியோடு இரு மகன்களுமாக ஊடகத்தைச் சந்தித்து, அவரால் வர இயலாது என்பதைத் தெரிவித்தனர்.

         குடும்பத்துக்குள் குழப்பம், போட்டி பொறாமை எனக் கதை கட்டிவிட முயன்றவர்கள் எதிர்பாராமல் எஸ்ஆர்சி யின் முதல் குடும்பம் வரவும், அதுவும் அதிபன் மேனகாவைத் தாங்கி நின்ற விதத்தில் கேள்வியே இல்லாமல் மொத்த குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

      அன்று மாலையே பானுமதியின் வற்புறுத்தலில் ப்ரதிபன் சந்திரா அண்ணன் என்ற முறையில் ஹாசினியின் சடங்குகளைச் செய்தான். வெகு சீக்கிரத்தில் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின் இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப்படும். விசாரணைக்காக ஐபிஎஸ் ஆபீஸர் நியமிக்கப்படுவார் என அறிவித்தார் முதலமைச்சர். அடுத்தக் கட்ட வாக்குப் பதிவு அவருக்குப் பாதகமாக அமையக்கூடாதே என்ற பதட்டமும் இருந்தது.

        கோவாவிலிருந்து கடலில் வட மேற்கில் நூறு நாட்டிக்கல் தொலைவிலிருந்த ஒரு தனியார் தீவு, மலைக் குன்றுகளால் சூழ்ந்த பத்து கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நடுத்தரமான தீவு. இதனை ஒரு காலத்தில் சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சி செய்தனர். குடிநீர் கிடைத்தது இதன் முக்கியமான சிறப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பான்சர்கள் திடீரெனக் கைவிட்டதால் ஒரு சில கட்டமைப்புகளோடு பாதியில் நின்றது. அதை நோக்கித்தான் ருத்ரா, மயக்கநிலையில் ஹாசினி சந்திரா, ப்ரீத்தி பவன் சென்று கொண்டிருந்தனர். 

           சிறிய நான்குபேர் செல்லும் வசதியுடைய போட்டில் அரை மைல் தூரம் கடந்து சற்று பெரிய போட்டில் ஏறிக் கொண்டு இந்தப் போட்டையும் அதனுள் ஏற்றிக் கொண்டனர். பெரிய விசைப்படகைச் செலுத்த இரண்டு ஆட்கள் இருந்தனர். குறைந்தது பத்து மணி நேரம் இந்தப் பெரிய லாஞ்சில் செல்ல வேண்டும். பல முறை சென்று வந்தவன் போல் ருத்ரா லாஞ்சரின் ஓரத்தில் நின்று கடலை வெறித்திருந்தான். பவனும், ப்ரீத்தியும் முதலில் புது அனுபவமாகப் பார்த்திருந்தவர்கள் பின்னர்க் கடல் காற்று சிலுசிலுவென அடித்ததில் கண் அயர்ந்து விட்டனர்.

         முற்பகல் வேலையில் தான் ஹாசினி சந்திராவுக்கு முழிப்பு வந்தது. கண்ணைத் திறந்து பார்த்தவளுக்கு வித்யாமான உணர்வு, இன்னுமே கண் மங்கலாக இருந்தது. கண் விழித்ததோடு மூளையும் விழித்தது. சட்டென விமான நிலையம் செல்லும் போது மயங்கியதும், நடுவில் ஏதோ ஒரு பெட்டிக்குள் இருந்ததும் நினைவில் வந்தது. தன்னைச் சுற்றிப் பார்த்தாள். படுக்கை போல் தான் இருந்தது. சட்டென எழுந்து அமர்ந்தவள் சற்று நிதானித்து யோசித்தாள். தலையை உலுப்பிக் கொண்டு கண்ணால் அந்த அறையை அளந்தபடி , ஒரு படி தெரிய அதை நோக்கிச் சென்றாள். அதன் வழி மேலே ஏறியவள் ஒரு பெரிய மீன்பிடி போட்டில் இருப்பதை உணர்ந்தாள்.

          இரண்டு புறமும் திரும்பிப் பார்க்க ஒரு மூளையில் ஆறடி அரக்கன் தெரிந்தான். பார்த்தவுடன் அவன் தான் கடத்தியிருப்பான் என்பது புரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் நீலவானமும் மட்டுமே எல்லையற்று விரிந்திருந்தது. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்து, போட்டின் விளிம்பு இடுப்புக்கு மேலே இருந்தது, அதற்கு அப்பால் பார்த்தவளுக்கு எங்கெங்கு காணினும் நீலமடா, என நீல வண்ணமே தெரிந்தது. கடல் வாடையும் உப்புக் காற்றும் , மயக்க மருந்துமாகக் குமட்டியது. தலையைப் பிடித்து நின்றவள் அதன் அழுத்தம் தாங்காமல் அவன் நின்ற திசைக்கு எதிர் திசை ஓடினாள் . 

        அவள் காலடி சத்தத்தில் அவள் தான் என உணர்ந்திருந்தவன் திரும்பிப் பார்க்காமலே அசட்டையாக அவளைக் கவனித்துக் கொண்டு தானிருந்தான். அவள் ஓடும் சத்தத்தில் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் அவளது மனநிலையை யோசித்து இரண்டே எட்டில் அவளையடைந்து அவள் கையைப் பிடித்தான். அவள் உதறி விட்டு ஓட முயன்றாள். ஆனால் அவன் பிடி உடும்புப் பிடியாக இருந்தது. திரும்பியவள்,

       " யார் நீ, என்னை எதுக்குத் தூக்கிட்டு வந்த, உனக்கு என்ன வேணும். இடியட் என்னைக் காணாமல் எங்கம்மா பதறி போயிருப்பாங்க. யாருடா நீ" என ஆத்திரமாகக் கேள்விகளை அடுக்கினாள்.

       அதே பழுப்பு இளஞ்சிவப்பு கண்களால் அவளை உறுத்துப் பார்த்தவன், அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் " ரொம்பப் புத்திசாலித்தனமா தப்பிக்கிறதா நினைச்சு குதிச்சு வைக்காத. ஸ்விம் பண்ணி காப்பாத்துற மூட்ல நான் இல்லை. " என அவள் கையை விட்டவன், அவளைப் பார்க்க விரும்பாதவனாகத் தன் பழைய இடத்தை நோக்கிச் சென்றான்.

         அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டவள் பழைய படி அந்தப் போட்டின் ஓரத்தில் போய் நின்று கடலை வெறித்தாள் . அவள் கண் முன் அம்மாவின் பதட்டமும் அழுகையும், அப்பாவின் நிலையும் ஞாபகம் வந்தது. அதோடு சிவராஜின் மிரட்டல், " நீ கட்சிக்காக உழைக்கும் வரை எஸ்ஆர் சந்திரா உயிரோடு இருப்பார். இல்லைனா அவர் நினைவிடத்தில் மலர் வளையம் வச்சு நாங்க ஆட்சியமைப்போம் " என்ற வார்த்தைகள், முதன் முதலில் இவளை அரசியலுக்கு இழுத்து வருவதற்கே மேனகாவுக்குத் தெரியாமல் இதைச் சொல்லித் தான் மிரட்டினார். எல்லாருக்கும் முன் சிக்கம்மா என மரியாதையாகக் காட்டும் முகமே வேறு. ஆனால் தன் ஆத்திரத்தை அந்த நேரம் தான் தீர்த்துக் கொள்வாள். 

        இப்போது மயக்கம் தெளிந்ததில் யோசனை பலமாக ஓடியது, என்னையும் இவன் கடத்தி வந்துவிட்டால், அப்பாவை நஞ்சப்பா கொன்று விடுவானே எனத் தோன்றியது. அது தோன்றவுமே தன்னால் உடல் பதறியது. முதலிலேயே கையறு நிலையில் நின்றவள் , இன்று மேலும் எதிலோ சிக்கிக் கொண்டதாக நினைத்தாள். அப்பா, அப்பா என மனம் மீண்டும் மீண்டும் கூக்குரலிட அந்தப் பதட்டமே உக்கிரமாக மாறியது முகத்தை மட்டும் அவனை நோக்கித் திருப்பி, "உனக்கு என்ன தான் வேணும். என்னை எதுக்குக் கிட்னாப் பண்ண" எனக் காட்டுக் கத்தாகக் கத்தினாள். அவள் சத்தத்தில் அவளுக்குத் தெரியாமல் மேல் தலத்திலிருந்து ப்ரீத்தி பவன் எட்டிப் பார்த்தனர்.

      ருத்ரா அவள் கத்தவே இல்லை என்பதைப் போல் கையைக் கட்டிக் கொண்டு அவளையே வேடிக்கை பார்த்தான். அதுவே அவளுக்கு மேலும் ஆத்திரமூட்டத் தனது கட்டுப்பாட்டை இழந்து அவனை நோக்கி வெறி பிடித்தவள் போல் ஓடியவள், அவன் மேல் பாய்ந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, " எதுக்குடா என்னைக் கடத்தின. நான் அங்கே இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம் தெரியுமா. என்னைத் திருப்பிக் கொண்டு போய் விடு. உனக்கு எவ்வளவு பணம் எந்த நாட்டு கரன்சில வேணும் நான் தர்றேன்" என்றாள். அவனிடமிருந்து ஏளமான உதட்டுச் சுழிப்பே பதிலாக வந்தது. 

           அதில் அவளுக்கு முகம் ரௌத்திரமாக மாறி அவன் கன்னத்தில் சரமாரியாக அறையக் கையை வீசினாள். ஆனால் நொடியில் அதைத் தடுத்து அதே கையைச் சுழட்டியவன், அதைப் பின்னால் மடக்கி அவளின் முதுகுபுறம் தன் மேல் படுமாறு நிறுத்தி தன் பிடியில் வைத்துக் கொண்டவன். " நீ வாய், கை இரண்டையும் நீட்டாமல் இருக்கிற வரைக்கும் தான் உனக்கு நல்லது. நான் சொல்ற வரைக்கும் நீ என் கஷ்டடி தான் " எனக் காதில் சொன்னான். ஆனால் அவள் பதிலின்றித் துவள ஆரம்பித்தாள். ஹாசினி அவன் கைகளில்  மயங்கி இருந்தாள்.

         சரியாக ப்ரீத்தி மேலிருந்து பார்த்து விட்டு வேகமாக ஓடி வந்தவள் " பாஸ் , மேடத்தை விடுங்க. அவங்க மயக்கமாகிட்டாங்க. மூக்கிலிருந்து இரத்தம் வருது" என அவனிடமிருந்து அவளை விடுவித்தாள்.

ஒன்றும் புரியாதவனாக, "நான் ஒன்னுமே பண்ணலையே , கையை இலேசா தான் முறுக்கினேன் " என்றான்.

    "உங்களால இல்ல பாஸ் எமோசனலா ஆனாங்கன்னா இப்படி ஆகும். " என்றவளால் அவளைத் தூக்க முடியவில்லை. அவளை விலக்கி விட்டு ஹாசினியை தூக்கி வந்து பழையபடி அவள் படுத்திருந்த இடத்தில் படுக்க வைத்தான். ப்ரீத்தி தலையணையை அவள் கழுத்துக்கு அடியில் போட்டு அவள் மூக்கை அண்ணாந்து பார்க்கும் படி வைத்தாள். பாஸ் என்று அழைத்த அவனை ஹாசினியின்  தாடையைப் பிடித்துக் கொள்ளச் சொன்னவள், மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறாமல் அவளது மேல் உதட்டில் மூக்குக்குக் கீழே அழுத்திப் பிடிக்கச் சொன்னாள். பஸ்ட் எய்ட் பாக்சிலிருந்து பஞ்சை எடுத்து இரத்தத்தைச் சுத்தம் செய்தாள். பின்னர் ஒரு ஊசியைப் போட்டு விட்டாள்.

        அவனது பார்வை அண்ணாந்து படுத்திருந்த ஹாசினியின்  முகத்தில் தான் இருந்தது. சற்று நேரத்தில் எவ்வளவு கோபம், ஆத்திரம், எரிச்சல், பயம், இயலாமை , ரௌத்திரம் என அத்தனை தீவிரமான பாவனைகளையும் இந்த முகத்தில் கொண்டு வந்தவள் ,இப்போது மயங்கி இருப்பதை யோசனையாகப் பார்த்தான். குருவித் தலையில் பலாப்பழத்தை வைத்த கதை தான். 

       இருபத்தி ஒரு வயது நிரம்பாதவள், எத்தனையைச் சமாளிப்பாள் . ஆனால் பெரிய மனிதர்களின் மகளாய் பிறந்தால் எல்லாம் அனுபவித்தே ஆக வேண்டும். இவர்களைப் போல் வரம் வாங்கி வந்தவர்களோ, சாபம் வாங்கி வந்தவர்களோ யாரும் இல்லை என யோசித்தவன், ஆனால் இவை பிரச்சனை எனக்கு எதற்கு , நான் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் எனத் தலையை உலுக்கிக் கொண்டான். இந்தப் பெண்களின் அழகும், கண்ணீரும் மிகவும் ஆபத்துக்கு உரியது. இவள் கோபமே தனக்கு நல்லது என முடிவெடுத்தான்.


பாஸ்  விளக்கம் கேட்கவும், " நான் டுட்டிக்கு ஜாயின்ட் பண்ண பிறகே இது மாதிரி மூன்று நாலு தடவை இதுமாதிரி ஆகிடுச்சு. இந்தச் சிவராஜ் நஞ்சப்பா வந்துட்டுப் போனா தான் இப்படி ஆவாங்க. " என்றவள் இன்று உன்னால் தான் எனச் சொல்லாமல் விட்டாள்.

         " ம்ப்ச்" எனச் சலித்துக் கொண்டவன். " தேவையில்லாத சீன் போடுறா, இவ கத்தினாப்ல திருப்பிக் கொண்டு போய் விட்டுடுவேனா. இடியட். " என்றவன், "இன்னும் அரை மணி நேரத்தில் தீவுக்குப் போயிடுவோம். பார்த்துக்கோ. கடத்தல் வேலைக்கு வந்தா டாக்டர் வேலையும் சேர்த்து பார்க்கனும் போல" என்று கடுப்படித்து விட்டுச் சென்றான். 'இவர் கடத்துவாராம், மேம் கத்துக் கூடாதுன்னா எப்படி.' என மனதில் நினைத்தபடி தன் பாஸை பார்த்திருந்தாள் ப்ரீத்தி.

        பவன் வந்து பார்த்தான், " ப்ரீத்து, இது என்னடி இரண்டுமே டெரர் பீஸா இருக்குங்க. நம்ம இரண்டு டம்மி பீஸ் இதுங்களுக்கு நடுவில் என்ன ஆவோம். " எனக் கேட்டான்," ஸ்மேஸ்டு ' என்றாள் அவள். பாஸ் குரல் கொடுக்கவும் கவலையாக மேலே சென்றான்.

       பெரிய போட்டை இந்தத் தீவின் ஒரு பகுதிக்கு அருகில் கொண்டு செல்ல முடிந்தது.அந்தப் பகுதியில் கொஞ்சம் ஆழம் அதிகமிருந்தது. அங்கே அந்த விசைப்படகை நிறுத்தி விட்டுச் சமதளம் ஆக்கப்பட்ட அந்தத் தீவின் தரை பரப்பில் கயிறு கட்டி பொருட்களை இறக்கினர். இறக்கி வைக்கப்பட்ட பொருட்களைப் பார்த்து அதிர்ந்த பவன்,

         ' பாஸ், இது என்ன நாலு பேக் தான்னு நினைச்சேன். ஒரு மாசம் தங்கப் போறமா" என்றான். வழக்கம் போல் பதில் சொல்லாமல் தானும் கீழே குதித்தவன், படகைச் செலுத்தியவர்களை இறங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

      " பாஸ், குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா, பவர் இருக்குமா. தங்கச் சரியான இடம் இருக்கா" என வரிசையாகப் பவன் கேள்வி கேட்கவும் " பேசாமல் வா" என்றான் பாஸ் .

       " பாஸ் , போன் சிக்னல் கிடைக்குமா. சார்ஜ் பண்ண முடியுமா. ரொம்பப் போரடிக்குமே பாஸ்" என்றான் . படகைத் திரும்பிப் பார்த்தவன் " பாஸ் , ஒன்னு அட்டை பிகரு, இன்னோன்னு அழகான இராட்சசி. உள்ளுர்லையே என்னை மிரட்டி வேலை வாங்குங்க. இப்ப உங்க கிட்டையும் எதுவும் கேட்க முடியாது. என்னைய படுத்துவாங்களே பாஸ்" எனக் கண்ணீர் வராமல் கதறினான் பவன். பவன் நொய் நொய் எனக் கேட்கவும் , " ஷட்அப்" எனப் புலி உறுமியது. ஆனால் அதற்கும் அசராத பவன், "போங்க பாஸ்" என ஓரமாக ஒரு கல்லில் போய் அமர்ந்து கொண்டான்.

       ஆனால் அதையும் பொறுக்காத அவனின் பாஸ் , " பவன், அது இரண்டையும் கீழே இறக்கு. போட்டை அனுப்பனும் " என்றவன், போட் ஓட்டி வந்தவர்கள் ஏற்கனவே அங்குப் பழக்கமானவர்கள் போலிருந்தனர். அவர்களையே இரண்டு முறை சாமான்களை உள்ளே கொண்டு போய் வைத்து விட்டு வரச் சொன்னான்.

          ஹாசினி கண் திறந்தவளுக்கு அருகிலிருந்த ப்ரீத்தியைப் பார்க்கவும் மேலும் அதிர்ச்சி. அவளின் கவலையான முகத்தைப் பார்க்கவும், " உன்னையும் அந்த அரக்கன் கடத்திட்டானா" என ஓய்ந்து போன குரலில் கேட்டாள் . முதலில் முழித்த ப்ரீத்தி, பிறகு சுதாரித்து ஆம் எனப் பரிதாபமாகத் தலையாட்டினாள்.

         பவன் தன்னை நொந்து கொண்டே போட்டுக்குள் வந்தவன், ப்ரீத்தியைக் குரல் கொடுத்து அழைத்தான். அவன் குரலைக் கேட்ட ஹாசினி, " பவனா" என வினவினாள். ப்ரித்தி மண்டையை ஆட்டியவள், "வாங்க மேம். இறங்கனும் " என மெல்ல அழைத்தாள்.

       " யாரு, அந்த அரக்கன் ஆர்டரா. நோ முடியாது, நான் இறங்க மாட்டேன். இதே போட்டில திரும்பி போறேன்" என அடம் பிடித்து அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். ப்ரீத்தி மட்டும் மேல் தளத்துக்கு வந்தவள், பவன் துணையோடு கீழே இறங்கி விட்டாள். ருத்ரா பார்வையிலேயே ஹாசினியைக் கேட்கவும், " எங்க லிமிட் இவ்வளவு தான் பாஸ், ப்ளீஸ். நீங்களே கூட்டிட்டு வாங்க" என்று விட்டாள்.

      பாஸ் கோபம் கொண்டவனாகக் கயிற்றைப் பிடித்து மீண்டும் படகுக்குள் சென்றான். அவள் அதே பெட்டில் கையைக் கட்டிக் கொண்டு பிடிவாதமாக அமர்ந்து இருந்தாள்.

       " உன்னைச் சாஃப்டா ஹேண்டில் பண்றேன்னு , அட்வான்டேஜ் எடுத்துக்காத. கம் டவுன்" என்றான் அதிகாரமாக . அவள் அவனை அலட்சியப்படுத்தி முகத்தைத் திருப்பவும் அவளருகே இரண்டே எட்டில் வந்தவன், அவளை ஒரு கையால் தூக்கி தன் முகத்துக்கு நேரே அவள் முகத்தைக் கொண்டு வந்தவன், " நான் உன்னைக் கடத்தியிருக்கேன். உன்னை ஒரு ஆள்கிட்ட ஒப்படைக்கிற வரைக்கும். நீ என் கஷ்டடி. கை வாயை கட்டலைனு ஈசியா எடுத்துக்காத. என்னை அநாவசியமா வன்முறையில் இறங்க வைக்காத" எனப் பழுப்புச் சிவப்பு கண்களால் மிரட்டினான். ஆனால் அவள் அதற்கெல்லாம் அசருவதாகத் தெரியவில்லை.

       அவனை ஏளனமான பார்வை பார்த்து, " ஐ நோ, யூ ஆர் எப் பீஷ்ட். ஆனால் இன்னொருத்துனுக்காக வேலை செய்யிற அடிமை அரக்கன்னு இப்பத் தான் தெரியுது. உன் மிரட்டலுக்குப் பயப்பட வேற ஆளைப் பாரு" என அலட்சியத்தையும் காட்டினாள் ஹாசினி சந்திரா.

      அவளது பார்வையில் அவனுக்கு வெறி ஏறியது, ஆனால் அவளை வெல்ல விடக்கூடாது என உறுதிக் கொண்டவன் தாடிக்குள்ளிருந்த நமட்டுச்சிரிப்பை உதிர்த்து அவள் காதில் குனிந்து விஷமமாக

     " இந்த அரக்கன் தொட்டு தூக்கிறதை தான் இந்த அழகி விரும்புறான்னா எனக்கு ஒன்னும் அப்ஜக்சன் இல்லை. வித் ப்ளசர் ஐ யம் அட் யுவர் சர்வ்ஸ் பியூட்டி " எனச் சொல்லவும், அவனை முறைத்தாள் .

       " யூ யூ" என அவன் கழுத்தைப் பிடிக்கப் போனவள், " சை" எனக் கையை இறக்கிக் கொண்டு, பார்வையை அவனிடமிருந்து திருப்பிப் படியில் மேலே ஏறினாள். அவன் அதே சிறு கோடு புன்னகையுடன் அவளைத் தொடர்ந்தான்.

       ஓரிடத்தைக் காட்டி, " இந்தக் கயிற்றைப் பிடிச்சிட்டு இறங்கு " என்றான். அவள் அதிர்ச்சியாய் திரும்பி, "வாட், உனக்கு மரை கழண்டு போச்சா. படிக்கட்டும் இல்லை, ஒன்னும் இல்லை, எப்படி இறங்கிறது. அதுக்கு ஏதாவது அரேஞ்ச் பண்ணு. ஐ கான்ட் கெட் டவுன்" என மிடுக்காக நின்றாள். அவளை முறைத்தவன்.

     " உங்கப்பா வீட்டு ஃபோர்ட்டு(துறைமுகம் ), இந்தா ஸ்டெப்ஸ் அட்டாச்மெண்ட் வருது. இடியட் கயிற்றைப் பிடிச்சு இறங்கு" என உறுமினான்.

      " அதெல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை. இதே போட்ல என்னை ஃபோர்ட்ல கொண்டு போய் விடச் சொல்லு, நான் அங்கே இறங்கிக்குவேன். இவ்வளவு ரிஸ்க் எடுத்தெல்லாம் என்னால இறங்க முடியாது" என்றாள்.

        அவளை மீண்டும் முறைத்தவன், போட்டுக்கு வெளியே கயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு போட்டின் நீண்ட ஸ்லேபில் நின்று கொண்டு "கம் " எனக் கை நீட்டினான் . அவள் அதிர்ச்சியாக " ஹாங்" என்றாள். மாட்டேன் என அடம் பிடித்தவளைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான்.

          " மரியாதையா இறங்கு. இல்லைனா போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்" என்றான். அதற்குக் கொஞ்சம் அடங்கினாள். நூறு முறை தயங்கி, காலை விட்டு, விட்டுப் பார்த்தவள் ஒரு வழியாக அவன் கையைப் பிடித்துக் கொண்டு அந்த விளிம்பில் கால் வைக்கும் முன் அவனையும் ஆட்டி அசைத்து அவன் சற்றுமுன் நமட்டுச்சிரிப்போடு கூறிய வார்த்தையையும் மறந்து, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

        " உன்னைய எல்லாம் தலைவின்னு கொண்டாடுறானுங்க. சரியான பயந்தாங்கொலி" என்றவன், அவள் சுதாரிக்கும் முன், "நல்லா புடிச்சுக்கோ" எனக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே குதித்தான். ஆனால் அவள் கத்தும் சத்தத்தில் அவன் காது இனி கேட்காது தான்.

       அவளுக்கு அடி வயிறு கலங்கியது அவனோடு ஒன்றிக் கொண்டாள். லாவகமாகக் குதித்தவன் கங்காரு குட்டி போல் அவளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு, கால்களை ஸ்டெடியாக ஊன்றி தீவின் சமதளத்தில் குதித்து நின்றான். பின்னர்க் குனிந்த அவளைக் கீழே தன்னிலிருந்து உதிர்த்து விட்டான். அவள் பொத்தென இரண்டடி தொலைவில் விழுந்தவள் " பர்தமீஸ்" எனத் திட்டினாள்.

       அவன் கண்டு கொள்ளாமல் ஒரு பேகை தூக்கி நின்றான். விசைப் படகைச் செலுத்தி வந்தவர்கள், கிளம்பத் தயாரானார்கள். அவசரமாக எழுந்த ஹாசினி அவர்களிடம் பேரம் பேசினாள். "பய்யா, என்னைக் கரையில் கொண்டி விட்டுடுங்க. நான் எவ்வளவு பணம் வேணாலும் தர்றேன். இதோ இந்த வாட்ச், மோதிரம், சங்கிலி என எல்லாவற்றையும் கழட்டி அவர்களிடம் நீட்டியவள், " நான் ஊருக்குப் போகவும், இன்னும் நிறையப் பணம் தர்றேன். எங்கப்பா ஹாஸ்பிடல்ல இருக்கார். நான் போகலைனா அவரை ஏதாவது பண்ணிடுவாங்க. ப்ளீஸ், ப்ளீஸ்" என இவ்வளவு நேரம் அவனிடம் முறைத்து நின்றவள், அந்தச் சாதாரண மீனவர்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. இவள் அவர்களையும் ஏறவிடாமல் வழியில் நின்றாள்.

      " உன் ட்ராமா முடிஞ்சுதுன்னா வழியை விடு அவங்க கிளம்பட்டும்" என அசட்டையாகச் சொன்னான் அரக்கன். ஆனால் அவனுக்குப் பதில் அளிப்பதையும் விடத் தன் அப்பா முக்கியம் என நினைத்தவள், "பய்யா, ப்ளீஸ் என்னைக் கூட்டிட்டுப் போங்க. எங்கப்பாவை ஏற்கனவே தப்பான ஆப்பரேஷன் பண்ணி அவரைப் பாதி உயிரா ஆக்கிட்டாங்க. நான் போகனும். இந்த எலக்சன்ல கேஜே பார்ட்டி ஜெயிசாசா தான், நான் எங்கப்பாவை உயிரோட கூட்டிட்டுப் போக முடியும். ப்ளீஸ். நானே அப்புறம் இந்த நாட்டை விட்டு போயிடுவேன். இந்தியால என் பேரில் இருக்கச் சொத்தை பூரா உங்களுக்குத் தர்றேன். ப்ளீஸ்" என அழுதவள். " உங்க வீட்டு ஆளுங்கன்னா விடுவீங்களா. என்னை உங்க தங்கச்சியா, மகளா நினைச்சுக்குங்க. நீங்கள் நினைச்சா , இந்த அரக்கன்ட்ட இருந்து நீங்கள் என்னைக் காப்பாற்றலாம் ப்ளீஸ்" என அவர்கள் காலில் விழப் போனாள். " மேம்" என ப்ரீத்தி, பவன் சத்தமிட்டனர்.

      " மதுர ஹாசினி. ஸ்டாப்பிட்" என உறுமியபடி வந்தவன் அவளை ஒரு கையால் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, " நீங்க கிளம்புங்க. சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என அவர்களை அனுப்பியவன், திமிறியபடி நின்றவளை உடும்பாகப் பிடித்து நின்றான்.

     " டேய் விடு, என்னை விடு. நான் எங்கப்பாட்ட போகனும்" எனக் கத்தியவள் மூக்கிலிருந்து மீண்டும் இரத்தம் வந்தது, அடுத்து அவள் மயங்கவும், தன் கைகளில் ஏந்திக் கொண்டான். ப்ரீத்தி முதலுதவி செய்யவும், இரண்டு பேகுகளைப் பவன் ப்ரீத்தி தூக்கிக் கொள்ள, அவன் ஹாசினியைத் தூக்கிக் கொள்ளத் தீவுக்குள் சென்றனர்.

No comments:

Post a Comment