Friday, 7 May 2021

ஹாசினி சந்திரா-1

 ஹாசினி சந்திரா-1

HASINI CHANDRA -asscinated in Bomb blaste

ஹாசினி சந்திரா - குண்டு வெடிப்பில் பலியானார்.

         இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் நள்ளிரவில் பிரத்தியேக ஒலியுடன் ஹெட்லைன்ஸ் செய்தியை அலறிக் கொண்டிருந்தன. கர்நாடக மாநிலத்தின் அனைத்து பிராந்திய கன்னட ஊடகங்களும் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. பத்திரிக்கைகளும் கொட்டை எழுத்தில் செய்திகள் பதிப்பித்தன.

        கேஜேபார்ட்டியின் நிறுவனத் தலைவர் எஸ். ஆர். சந்திராவின் அரசியல் வாரிசு அவரது மகள் கேஜேபார்ட்டியின் கொள்கை பரப்புச் செயலாளர், ஹாசினிசந்திரா மங்களூரில் பாம் ப்ளாஸ்டில் பலியானார். இதன் முதல் கட்ட ஆய்வை போலீசார் செய்து வருகின்றனர். ஹாசினி சந்திராவுடன் பயணித்த கமாண்டோக்கள் ஆண், பெண் என இருவரும் அவரோடே பலியானார்கள்.

        செய்தி காட்டுத்தீ போல் பரவியது. கர்நாடக ஜனதா பார்ட்டியின் தலைமையகத்தில் அதன் துணைத் தலைவர் சிவராஜ் நஞ்சப்பா. பொருளாளர் பசவையா , கிருஷ்ணசாமி, ஹெக்டே, கௌடா என முக்கியமான தலைவர்கள் அவசரமாகக் கூடினர். அவர்களுக்கு இது அப்பட்டமான அதிர்ச்சி. எஸ். ஆர். சந்திராவுக்கு மகள் அரசியலுக்கு வந்ததே தெரியாது. மருத்துவமனையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கர்நாடக பொதுத் தேர்தலில் ஒரு கட்ட வாக்குப் பதிவு முடிந்திருந்த நிலையில் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹாசினி சந்திரா மங்களூர் சென்று திரும்பி வரும் போது தான் இந்த அசம்பாவிதம் நடை பெற்றது.

          பெங்களூருவில் கேஜேபார்ட்டியின் தலைவர் எஸ். ஆர். சந்திரா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் ஒரு செவிலிப் பெண் ஓடி வந்து தொலைக்காட்சி செய்தியை ஹாசினியின் தாய் மேனகா தேவியிடம் ரகசியமாய்  சொன்னாள். மகளுடன் ஒருமணி நேரம் முன்பு தான் பேசியிருந்தார். மீட்டிங் முடிந்து கிளம்புவதாகவும், விமானத்தில் போன் அணைத்து வைத்திருப்பேன். நள்ளிரவில் தான் வருவேன் காலையில் போன் செய்வதாகச் சொல்லி வைத்தாள்.

          அதற்குள் எப்படி என விளங்க இயலாத பாவனையில் அதிர்ந்து நிற்க, செவிலி மேனகாவை உலுக்கி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தாள். கணவர் அறையை சத்தம் வராமல் இழுத்துச் சாத்திவிட்டு செவிலியோடு அடுத்த அறைக்கு டிவியைப் பார்க்கச் சென்றார் மேனகா. தொலைக்காட்சியில் சம்பவம் நடை பெற்ற இடத்திற்குக் காவல்துறை யாரையும் அனுமதிக்கவில்லை என்ற செய்தியையே வாசித்துக் கொண்டு, ஹாசினியின் பழைய க்ளிப்பிங்சை ஓட விட்டுக் கொண்டு இருந்தனர்.

       நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்த மேனகாவை செவிலியர் ஆசுவாசம் செய்தார். அவர் தந்த தண்ணீரை ஒரு மடக்கு குடித்தவர் துடித்துக் கொண்டு, மகளின் போனுக்குப் பிச்சியைப் போல் , இந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் முயன்று விட்டு, அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ரெக்கார்டட் வாய்ஸ் சொல்லவும். நடுங்கும் கரங்களோடு கண்ணீர் வழிய , துணைத் தலைவர் சிவராஜ் நஞ்சப்பா வுக்குப் போன் செய்தார்.

           "அம்மா எனக்கும் இப்பத் தான் செய்தி வந்துச்சு. நானும் ஆடிப் போயிருக்கேன் இது உண்மையா இருக்கக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன். தலைவருக்குத் தெரியுமா அம்மா" என நடுங்கிய குரலோடு கேட்டார் சிவராஜ்.

         " இல்லை சிவராஜ்ஜி, நான் கன்பாஃர்ம் பண்ணாமல் சொல்லக் கூடாதுன்னு , எதுவும் சொல்லலை. மதுவுக்கு ஒன்னும் இல்லைல இது ஃபேக் நியுஸ் தானே" எனப் பயந்தபடி தன நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டார் மேனகா. அந்தப் பக்கம் சிவ்ராஜ்க்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "அம்மா" என் மட்டும் பதில் தந்து தொலைபேசியில் தன் இருப்பைக் காட்டிக்கொண்டார்.

          " சிவ்ராஜ்ஜி, அவ அப்பா ஆரம்பிச்ச கட்சி, இந்த எலக்சனில ஜெயிக்கனும்னு வெளிநாட்டில் படிச்சிக்கிட்டு இருந்த புள்ளையை இழுத்துட்டு வந்தேனே. அவளுக்கு அரசியலுக்கு வர விருப்பமே இல்லை. அரசியல் அப்பாவோட போகட்டும், நமக்கு வேண்டாம்மா ன்னு சொன்னா. நான் தான் அவர் வளர்த்த கட்சி, தொண்டர்களை நடுவில் விட்டுவிட்டுப் போகக் கூடாது, ஜெயிச்சு பொறுப்பானவங்க கையில கொடுத்துட்டு போவோம்ன்னு தேர்தல் வரைக்கும் இருக்கலாம்னு சொன்னேன். என் புருஷனைக் கூட்டிட்டு ட்ரீட்மெண்ட்க்கு வெளிநாட்டுக்குப் போகத் தெரியாமலா இருந்தேன். அவருக்காக அவருக்கான்னு, அவருக்கே தெரியாமல் அவர் மகளை அரசியல்ல இறக்கி விட்டு இப்பத் தொலைச்சிட்டு நிற்கிறேனே.

          ஒரு மணி நேரம் முன்னாடி, மீட்டிங் முடிஞ்சதுமா, அப்பாவைப் பத்தி எவ்வளவு பெருமையா பேசுறாங்க. எஸ். ஆர். சந்திரா மகள்னு எனக்கு ரொம்பப் பெருமைன்னு சொன்னாளே. அந்தப் பெருமையே எங்களுக்கு எமனா வந்திருச்சே. மூத்தவங்களை மாதிரி எனக்கு என் பொண்ணைக் காப்பாத்திக்கத் தெரியலையே நான் என்ன பண்ணுவேன். நாளைக்கு என் புருஷன் என் மகளைச் சின்னப் புள்ளையாட்டம் தேடுவாரே நான் என்ன பதில் சொல்லுவேன்.

         மதுமா இதெல்லாம் பொய்யினு சொல்லிட்டு அம்மாட்ட ஓடி வந்துடுடி. அம்மா உன்னை யார் கண்ணுளையும் படாமல் பொத்தி வச்சுக்குறேன். சிவராஜ்ஜி நீங்க எல்லாரும் பாத்துகுவீங்கன்ன தானே என் மகளை அனுப்பி வச்சேன்.

       அவள் பாதுகாப்பு உங்க பொறுப்புனு சொன்னீங்களே சிவ்ராஜ்ஜி, இப்போ அவ பாம் வெடிச்சு " என அதற்கு மேல் சொல்ல இயலாமல் விசும்பியவர் அடி வயிற்றிலிருந்து பிரட்டி வந்த கேவலை கூட அடுத்த அறையில் இருக்கும் தன கணவருக்குக் கேட்க கூடாதே என அடக்கி அழுதார் மேனகா தேவி.

        " அம்மா, அம்மா நாங்களே எதிர்பார்க்கலைமா. நம்ம கட்சி ஜெயிச்சிடும். சின்னம்மாவை மந்திரியாக்கி பார்க்கனும், என் மருமகளாக்கிக்கனும்னு கூட நினைச்சேன்மா. இப்படிப் பலி கொடுப்போம்னு தெரியலையே. இது உண்மையா இருக்காது. நான் நேராப் போறேன் சிக்கம்மா நம்மளோட விளையாடுறாங்களோ என்னவோ, நான் அங்க போய்ப் பார்த்திட்டு பேசுறேன்மா. சிக்கம்மாவுக்கு ஒன்னும் ஆயிருக்காது. நீங்க பயப்படாதீங்க. தலைவர்கிட்ட இப்ப எதுவும் சொல்லாதீங்க. அவருக்கு எதுவும் ஆகக் கூடாது " எனப் பலமுறை கெஞ்சி விட்டு தொலைப்பேசியை வைத்தார் சிவராஜ் நஞ்சப்பா. 

         சிவராஜ் தனது கட்சி ஆட்களுடன் விவாதித்தார், பசவய்யா ஹாசினி சந்திராவைப் பாதுகாக்கத் தவறியதற்காகச் சிவராஜ் மீது குற்றம் சுமத்தினார். அவரும் பல சமாதானங்களைச் செய்து விட்டு, தலையில் இடி விழுந்தது போல் மங்களூரை நோக்கிச் சென்றார்,

     மேனகா நெஞ்சில் அடித்துக் கொண்டு மகளை நினைத்து அழுதார். அவரின் கம்பீரத்தில் அவரிடம் நெருங்காத செவிலியர், மருத்துவர்கள் வரை ஒவ்வொருவராக வந்தனர். அவரது உடல் நிலையையும் பரிசோதித்தனர்.

        ஒரு பெண் மருத்துவர், "மேடம் எந்திரிங்க. நீங்க இப்ப தான் ரொம்பத் தைரியமா இருக்கனும்" என ஆரம்பித்து மேனகாவுக்கு ஆறுதல் தெரிவித்துக் கவுன்சிலிங் தந்தார். எஸ். ஆர். சந்திரா மனநிலையும், உடல்நிலையும் இந்தச் செய்தியைத் தாங்கும் அளவு இல்லை என அறிவுறுத்தினர்.

இன்று காலையில்….

           பெங்களூரு நகரின் பழைய கட்டமைப்புகள் ஏரிகளும், தோட்டங்களும் நிறைந்த அந்தப் பகுதியில் பசுமைக்கும் குளுமைக்கும் பஞ்சமில்லை. வழுக்கிச் செல்லும் தார் ரோட்டில் தாங்கி நிற்கும் பெரிய கோட்டை மதிற்சுவர் சூழ்ந்த வீட்டில், அதற்கேற்ற முரட்டு கேட்டும் கருப்பும் தங்கமுமாக முலாம் பூசி மிரட்டிக் கொண்டிருந்தது. அந்த வாசலிலிருந்து புல்வெளி விரிந்து நடுவே ஓடு பாதை. அதன் வழியே அரைகிலோமீட்டர் பயணித்தால் தான் வீட்டின் முகப்பைக் காணலாம்.

        கலாரசிகனான ஒரு மனிதனின் ரசனைக்கு அந்த மாளிகை சான்று, தேக்கு மரத்தால் ஆன பத்தடிக்குக் குறையாத நிலைப்படி. பெங்களூருவை ஆண்ட கங்க மன்னன், ஹொய்சாலர்கள், மைசூர் மகாராஜாக்கள், கெம்பே கௌடா போன்ற அந்தந்த காலத்தில் செழிப்பாய் ஆட்சி செய்த ராஜாக்களின் அரண்மனைகளையும் தூக்கிச் சாப்பிடும் கலையம்சத்தோடு ஓங்கி உயர்ந்து நின்றது அந்த வீடு. வீட்டின் ஒவ்வொரு அங்கமும் நாட்டின் பழமை வாய்ந்த கட்டிடக்கலையைப் பறைசாற்றி நின்றன.

        இந்த மாளிகை இரண்டு ஜாம்பவான்களின், இளமைக்கால நண்பர்களின் கனவு. கனவை நினைவாக்க அவர்கள் அரும்பாடு பட்டனர். அதில் ஒருவர் ஈடு கொடுக்க முடியாமல் துவண்டு தேசத்தை விட்டே வெளியேறி விட, மற்றொருவர் பிடிவாதமாக இந்தக் கனவு மாளிகை கட்டி முடித்தார். இதற்கு அவர் செய்த தியாகங்கள் ஏராளம். மாளிகையின் வரலாற்றைப் பிறகு பார்ப்போம்,அதோ உயர்சாதி குதிரை போல் தேஜசுடன் நிமிர்ந்து மிடுக்காக நடந்து வரும் அந்த மங்கையைக் காண்போம்.

       தக்காண பீடபூமியில் அமைந்த, இவ்விடத்தில் கிரானைட் கற்களால் இழைக்கப்பட்ட வீடு. தனது மாடியறையிலிருந்து மிடுக்காக இறங்கி வந்தாள் அந்த இளம் பேடு.

         ஐந்தே முக்காலடி உயரம், அகன்ற முகம், நேராகக் குத்தி நிற்கும் நாசி, அதில் வலது புறத்தில் சிறிய வளைய மூக்குத்தி. காதில் சிறிய தோடு. ஆனால் அதன் மதிப்பில் நடுத்தரவர்க்கம் ஆயுளைக் கழித்து விடும். முகத்தில் பொருந்திப் போகும் அகன்ற கண்கள், அதில் தெரிந்த ஆளுமை, செழுமையைப் பறை சாற்றும் கன்னங்கள் ,அதில் அவள் மலர்ந்து சிரிக்கும் போது இரு பக்கமும் கன்னக்குழி விழும் .அவள் தலைமுடியைப் படிய வாரி தனது வயதைக் காட்டாமல், முதிர்ச்சியைக் காட்டும் சிகை அலங்காரம்.

     க்ளோஸ் நெக் , கை நீளமான ப்ளவுஸ், உயர்ரகப் பட்டு ஆனால் பார்வைக்கு எளிமையாகத் தோன்றும். ஒரு கையில் அவள் தந்தை பாசமாகப் பரிசளித்த ப்ளாட்டினம் கோட்டட் வாட்ச். வலது கையின் சீராக வளர்க்கப்பட்ட நகங்களின் கூர்மைக்குப் பொருந்தமான மோதிரங்கள். அவளது உயரத்தை அளவாய் காட்டும் கட் ஷூக்கள் .

         தனது அறையிலிருந்து அலட்டல் இல்லாமல் முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத பாவனையில் கையில் சிறு டம்பப்பையோடு இறங்கினாள். அவளைப் பார்க்கவும், தன்னால் எழுந்து நின்றனர், அப்பாவும் மகனுமாகத் தெரிந்த அரசியல்வாதிகள் இருவரும், அவர்கள் உடன் வந்த கட்சிக்காரர்களும்.

         "சிக்கம்மா, நின்னை இட்ரி நோடிக்கே நன்கே தும்பச் சந்தோஷவாகிதே நிம்ம அப்பா நோடித்ரே தும்பக் குஷியாகி பிடித்தாரே (சின்னம்மா, உன்னை இப்படிப் பார்க்கிறதில் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. உங்கப்பா பார்த்தாரர்னா ரொம்பக் குஷியாகிடுவார்)" என நீலிக் கண்ணீர் வடித்தார் சிவராஜ் நஞ்சப்பா உடன் அவரது மகன் யுவராஜ் நஞ்சப்பா, ஓர் அலட்சியத்தோடு நின்றான். கர்நாடக ஜனதா பார்டியின்(கேஜேபி) துணைத் தலைவர்.

          ஆனால் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளாது, ஒற்றை ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் கேஜேபியின் நிறுவனத் தலைவர் திரு. சுரேந்திர ராமச் சந்திராவின் மகள் மதுர ஹாசினி சந்திரா.

          கேஜேபார்ட்டியினன் சுரேந்திர ராமச்சந்திரா மக்களால் அன்பாக எஸ்ஆர் சந்திரா என்றிழைக்கப்படுபவர்.ஒரு மாநிலக் கட்சியின் தலைவர், அந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அதனை முடிவு செய்யும் கிங் மேக்கர். அதோடு துணை முதல்வராக அதே ஆட்சியில் சட்டசபையிலும் பங்கேற்று கட்சியினரையும் பெரிய ஆளாக ஆக்கிவிட்டவர். மக்களிடையேயும் செல்வாக்கு மிக்கவர், ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு அறுவைசிகிச்சை செய்தனர், அதன் பின் மீண்டு வந்தவர் சில மாதங்களிலேயே நரம்பியல் மண்டலம் பாதிக்கப்பட்டு ஞாபகமறதி உள்ளிட்ட சில பிரச்சனைகள் வந்தது. பேச்சு குளற ஆரம்பித்தது. மீண்டும் சிகிச்சை வளையத்துக்குள் வந்தார்.

         அந்த நிலையில் சட்டமன்ற தேர்தலும் வந்தது. எஸ்ஆர்.சந்திரா என்ற முகம் கட்டாயம் தேவைப் பட்டது. வெளிநாட்டிலிருந்த அவரது வாரிசான ஹாசினியை வரவழைத்தனர். ஹாசினியை வைத்து கணக்குப் போட்ட சிவராஜ், அவளின் அம்மாவான மேனகா தேவியைப் பேசி சரிக்கட்டி, தனது மகன் யுவராஜ் நஞ்சப்பாவுடன் திருமண ஒப்பந்தம் எனப் பேசி அதனை அறிவிக்கவும் செய்தார். இதைச் சற்றும் எதிர்பாராத ஹாசினி முதலில் கடுமையாக எதிர்த்தாள். ஆனால் நிச்சயதார்த்தம் சடங்கு என எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் சிவராஜ் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்தார். எஸ்ஆர் சந்திராவுக்குப் பிறகு அவரது மகளும், தனது மகனுமாகக் கட்சியை வழிநடத்துவார்கள் எனக் கட்சியினரிடையே ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கினார்.

        எஸ்.ஆர். சந்திராவுக்குச் சிவராஜை விட நெருக்கமானர் பசவைய்யா. ராமனுக்கு ஏற்ற பரதனாய் இவரின் அத்தனையையும் அவர் தான் நிர்வகித்தார். ஆனால் அவரை விலக்கி வைக்கச் சிவராஜ் முயன்றார். இதனை அறிந்த எஸ்ஆர். சந்திரா தனது உடல்நிலை சரியில்லாததையும் உணர்ந்து பசவைய்யாவிடம் சில பர்சனல் வேலைகளை ஒப்படைத்தார்.தான் தனது நெருங்கிய உறவுகள், நண்பர்களிடமிருந்து தனிமை படுத்தப்பட்டுச் சிவராஜ் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்ததை உணர்ந்தவர், தனது மனைவி மேனகாவை அதற்குத் தயார் செய்தார். ஆனால் அறுவை சிகிச்சை அவரைப் புரட்டிப் போட்டது. மேனகா தானாகச் சிந்திக்க இயலாதவர், தனது பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விலகி கணவரே சகலமுமாக நிழலாக மாறியவர். எளிதாகச் சிவராஜ் வலையில் விழுந்தார். ஹாசினி அதற்குப் பலியானாள்.

        அவள் முதலில் எதிர்த்துத் திமிறிய போது, தனியாகக் கூப்பிட்டு மிரட்டிய சிவராஜ், தந்தையின் உடல் நிலையைக் காட்டியே அவளைத் தன் கைப் பாவையாக்கினார்.

         இந்த நடை உடை பாவனை அவளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. எதையும் சீக்கிரமாகக் கிரத்துக் கொள்ளும் சக்தியுடைய மதுர ஹாசினி தான் எஸ் ஆர். சந்திராவின் மகள் என நிரூபித்தாள். மேடைகளில் முழங்கினாள். பத்திரிக்கைகள் இவளைப் புகழ்ந்தன. கூட்டணி பேரம் சிவராஜுக்குப் படிந்தது.

      தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதோ எஸ் ஆர் சந்திரா மகள் பிரச்சாரத்துக்காக இன்று மங்களூருக்கு பறக்க இருக்கிறாள். அவளோடு சில கட்சிக்காரர்கள் செல்கின்றனர். சிவராஜ், அங்குப் பேசவேண்டியதை நினைவு படுத்த மகனோடு வந்தார்.

     "நான் அப்பாவை பார்த்துட்டு ஏர் போர்ட் சரி டைம் போயிடுவேன். கண்டன்ட் மெசேஜ் பண்ணுங்க. இப்ப எனக்குக் கேட்கிற மூட் இல்லை" என முகத்தில் அடித்தது போல் பதில் சொன்னாள்.

       " ஹாசினி" என யுவராஜ் கர்ஜித்தான். அவள் ஒரு பார்வையால் அவனை எரிப்பது போல் பார்த்தவள், " உங்க ட்ராமா வெளில தான். இங்க வாய்ஸ் உசத்தாத" என்றாள். அவன் மேலும் முறைத்து, "உன் மனசில பெரிய இவன்னு நினைப்பா" எனக் கன்னடத்தில் மிரட்டவும்.

       மேலும் சாய்ந்து தெனாவட்டாக அமர்ந்தவள், "பெரிய இவ தான். அதுக்குத் தான், இந்த முகம் , எஸ் ஆர் சந்திராவுடைய வாரிசு. அதுக்குத் தான் எல்லாரும் அடங்கிப் போறீங்க. நீங்க எலக்சன்ல ஜெயிக்க இந்த முகம் வேணும். ஓவரா பேசாத. எல்லாத்தையும் திருப்பிடுவேன்" என்றாள்.

      சிவராஜ் நடுவே புகுந்து, மகனைச் சத்தம் போட்டு, ஹாசினியிடம் நயந்து பேசினார். " சிக்கம்மா, அவன் புத்திக் கெட்டவன். நீதான் எஸ்ஆர்.சந்திரா வாரிசு, கட்சியையும், மக்களையும் காக்க வந்த சாமுண்டி. கோவப்படாதீங்க" என நயந்தவர். மகனைக் கண் காட்டி விட்டு.

        " நீங்க சொன்னது போலவே பேசவேண்டியதை அனுப்பி விடுறேன்மா. அப்பாவைப் பார்க்க நானும் வர்றேன். வாங்க இரண்டு பேரும் போவோம்" எனப் படிந்தார்.

       " இல்லை, நான் மட்டும் போயிக்கிறேன்.அப்பாவோட கொஞ்ச நேரம் ஸ்பண்ட் பண்ணனும். இல்லைனா என்னால வேற எதுலையும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. இல்லைனா மீட்டிங் கேன்சல் பண்ணுங்க" என அவள் கட் அண்ட் ரைட்டாகப் பேசவும்.

     " இல்லைமா, இல்லைமா. நீங்க கிளம்புங்க" எனப் பம்மினார் சிவராஜ் நஞ்சப்பா. ஹாசினி சந்திராவின் கார், முன்னே பின்னே எஸ்கார்ட்டுடன் பெங்களூருவின் சிறந்த மருத்துவமனை நோக்கிச் சென்றது.

       எஸ். ஆர். சந்திரா, சுரேந்திர ராம சந்திராவுக்கென விவிஐபி வார்டை ஒதுக்கி இருந்தது மருத்துவமனை நிர்வாகம். அவரின் ஒவ்வொரு நேரம் சாப்பாடு முதல் அவரின் உடல்நிலை பற்றிச் சிறிய, பெரிய அத்தனை விசயங்களையும் ஊடகங்கள் பெரிதாகப் பிரபலப்படுத்தும். எனவே இங்குப் பலத்த பாதுகாப்போடு தான் வைத்திருந்தார்கள்.

        ஹாசினி சந்திரா, எவ்வளவு மிடுக்காக வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றாளோ, அவ்வளவுக்குத் தந்தையை நோக்கிய ஒவ்வொரு அடியிலும் , அவரது நினைவில், உணர்வில் பாசத்தில் நெகிழ்ந்து கொண்டிருந்தாள். தாய் மடித் தேடும் கன்றாக , தந்தை மடித் தேடி ஓடினாள்.

        எஸ் ஆர் சந்திரா என மக்கள் வியக்கும் மாபெரும் சகாப்தம், அவளுடைய தந்தை, அவளுடைய தோழன், நண்பன், ஆசான் அனைத்துமாக இருந்தவர். அவருக்குள் இருந்த அத்தனை ரசனையும் இவளுக்குள்ளும் உண்டு. கூடுதலாக உணர்வைக் காட்டாத முகத்தை முன்னாள் நடிகர்களான பெற்றோரிடமிருக்குது பெற்றிருந்தாள்.

      விவிஐபி அறைக்குள் சென்றவள், அங்கிருந்த மேசை அருகே சேரில் அமர்ந்து ஏதோ எழுத முயன்று கொண்டிருந்த தந்தையிடம் சென்றாள். ஹாசினியின் ஆண் உருவமாக, உதடு, முக்கு இரண்டும் சற்றே தடித்தவராக ஆங்காங்கே கருப்புக் கலந்திருந்த வெள்ளை முடியோடு இருந்தார் எஸ்.ஆர்.சந்திரா.

         " அப்பா" என அழைத்துக் கொண்டு அவரருகே செல்லவும், வாவெனத் திரும்பி தலையை ஆட்டி அருகே அழைத்தவர் மகளின் வரவில் சோர்ந்த முகத்திலும் அவரது ட்ரேட் மார்க் புன்னகையைச் சிந்தினார். இந்தப் புன்னகையால் எவ்வளவு பேரை ஆண்டு இருப்பார். அவ்வளவு தேஜஸ். சிறுமியாய் ஓடி வந்து அப்பாவின் பின்னோடு அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

       " புட்டி, இது ஏனு மேக்கப் இது. ஏன் தொட்டு உடுக்கி தர இதியா , (பாப்பா இது என்னடா வேசம், பெரிய மனிசியாட்டம் இருக்க) என்றார். அவள் அரசியலில் தீவிரமாக இருப்பது அவருக்குத் தெரியாது. சிவராஜ் ஓர் முறை "சிக்கம்மா அரசியலுக்கு வரட்டும், கட்சிக்குப் பலம்" எனக் கேட்ட போது மறுத்து விட்டார். அதனால் அவருக்குத் தெரியாமல் இந்த வேலை நடந்தது. அவரது அறையில் தொலைக்காட்சி பெட்டியும் கிடையாது. பொழுது போக்காக நல்ல இசையை மட்டும் கேரவானில் கேட்பார். அதில் அவரது பாடல்களும் வரும். சிரித்துக் கொள்வார்.

          ஹாசினி பேசி சமாளித்தாள். இன்று கட்டாயம் அப்பா, அம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அவளது உள்ளுணர்வு சொன்னது. ஏதோ ஆபத்து நெருங்குவது போல , சிறைப்பட்டிருப்பது போன்ற கனவும், உணர்வும் மாறி மாறி வந்தது. அதனையும் இந்த ஓயாத அரசியல் கூட்டங்கள், தனக்குப் பிடிக்காததைச் செய்வதால் ஏற்படும் அயர்வு எனத் தனக்குத் தானே சொல்லி கொண்டாள்.அவள் த கிங் மேக்கர் எஸ்.ஆர்.சந்திராவின் மகள், எவ்வளவு போராட்டங்களை அவர் தனது வாழ்வில் சந்தித்தார், ஆனாலும் மகளைக் கண்டவுடன், அவளுக்கு இணையாக மலர்ந்து பேசுவார். இன்று தந்தையின் நிலையில் தான் இருப்பதாகவும், அவரைப் போலத் தான் நடந்து கொள்ள வேண்டும் என உறுதியோடு வந்தாள்.

       "சும்மா தான்பா. ஒவ்வொரு கெட்டப்பா ட்ரை பண்றேன், பொழுது போகனுமே" என்றாள் ஹாசினி.

      "பொழுது போகலையா, அப்பக் கல்யாணம் பண்ணிடுவோமா புட்டிமா ." எனச் சிரித்தபடி மகள் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்து ஷோபாவில் அமர்ந்தார்.

     " அப்பா, புட்டிமான்னு சொல்றீங்க. சின்னக் குழந்தைக்கு யாராவது கல்யாண பண்ணுவாங்களா" எனச் சிணுங்கியபடி கேள்வி எழுப்பினாள். ஹாஹாவெனச் சிரித்தவர்.

      " நீ அஜ்ஜி(பாட்டி) ஆனாலும் எனக்குப் புட்டிமா தான். ஆனால் கல்யாண வயசு ஆகுதில்ல, கல்யாணம் பண்ணிக்கோ. இது மாதிரி வயசான மேக்கப் போடாமல் நல்லாவே பொழுது போக்கலாம் " என்றார்.

      " அப்பா, பொழுது போறதுக்காக யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா " எனப் பதில் கேள்வி எழுப்பினாள்.

          " நிஜமா பேபி, அம்மாவைக் கேட்டுப் பாரு. " என அவர் சொல்லும் போதே, மேனகா தேவி உள்ளே வந்தார், ஐம்பதை எட்டிப் பிடிக்கும் வயது. ஆனால் உடலை நன்றாக வைத்திருந்தார். தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய அவசியம் அதிகமாக இருப்பதை உணர்ந்து, கணவரில் உடல் நலத்தோடு தன்னுடைய நலத்தையும் பேணினார்.

      " மதுமா, உன் வண்டியைப் பார்த்திட்டு வேகமா வந்தேன். என்ன இந்த நேரம்" என்றார். அவளது கெட்டப்பும் அவருக்கு உறுத்தியது.

        " ஹேய் மேனு, என் புட்டிம்மா வர்றதுக்குக் கூட அப்பாயின்மெண்ட் வாங்கனுமா. எனக்கு ட்ரீட்மெண்ட் பண்ற டாக்டர்ஸை விட என் பொண்ணு தான் பெரிய டாக்டர்" என்றார்.

        " ஓஹோ ராம்ஜி, நான் ஒன்னும் அந்த அர்த்தத்தில் சொல்லலை. உங்க மகளை இங்க வச்சுக்குங்க. நான் வேணா வீட்டுக்கு போறேன்" எனக் கோவித்தார் மேனகா தேவி.

      " புட்டிம்மா, நான் சொல்லலை, கல்யாணம் செய்துக்கிட்டினா பொழுது போயிடும்னு. இதோ பார் உன் அம்மா எப்படிப் பிஸியா இருக்கா" என்றார். ஹாசினி சிரித்து விட்டாள்.

         " அப்பா, நீங்க என்ன சொல்ல வர்றீங்க, வைப்னா பெட்டர் ஹாஃப் இல்லையா, பிட்டர் ஹாஃபா , சண்டை போடறவங்களா." என வேண்டுமென்றே கேட்டாள்.

      " பெட்டர் ஹாஃப்னா ஹஸ்பண்ட் தப்பு செஞ்சா, சட்டையைப் பிடிச்சாவது சண்டை போடனும், உங்க இஸ்டம்னு ஒதுங்கிப் போகக் கூடாது. " எனக் கண் கலங்கினார்.

      " ராம்ஜி, உங்க கூட எப்பவுமே சண்டை கட்டிட்டே, பெட்டர் ஹாஃபா நான் இருப்பேன். கவலையை விடுங்க" என அவர் தோளில் கை வைத்தார். சிறிது நேரம் யோசனையிலிருந்தவர், "பானு, என்ன சொன்ன" என்றார். ஹாசினி தான் அதிர்ந்து பார்த்தாள். ஆனால் மேனகா சமாளித்தவராக,

      " மார்னிங் டேப்லட் போடனும். இருங்க எடுத்துட்டு வர்றேன்" எனப் பாக்ஸ் திறந்து வகைக்கு ஒன்றாக நாலு டேப்லட்களைக் கொண்டு வந்து தண்ணீரோடு கொடுத்தார்.

         " கோசம்மா, இது எனக்கு வேண்டாம். முழுங்கவே முடியலை. வாய் கசக்குதே" எனச் சிறு பையனாக மாறி அடம்பிடித்தார். தனது அம்மாவை அழைக்கும் சிறுவன் மனநிலைக்கு மாறியிருந்தார்.

      " சுந்து இதைப் போட்டாத் தான், சாக்லேட் தருவேன்" என மேனகாவும் அவருக்குத் தாயாக மாறி மாத்திரையைப் போட வைத்தார்.

        ஹாசினி வந்ததற்குள் நான்கு உலகத்தில் பயணித்து வந்திருந்தார் எஸ்ஆர் சந்திரா. அப்பாவையே பார்த்திருந்த ஹாசினிக்குக் கண்ணைக் கரித்தது. எந்த ஊரிலிருந்து ரசிகனோ, கட்சி தொண்டர்களோ பார்க்க வந்தாலும், போனில் பேசினாலும், பொதுப் படையாக அல்லாமல் பர்சனலாகவே அவர்களை ஞாபகமா வைத்து அவர் சம்பந்தப்பட்ட ஆட்களையோ, சம்பவத்தையோ சொல்லி அவர்களைத் திக்குமுக்காட வைப்பார். ஞாபக சக்தியில் யானையை மிஞ்சுபவர் என அவருக்குப் பெயர் உண்டு.

        இந்த வருடத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் பெரும்பான்மை கிடைக்குமளவு கட்சியைக் கர்நாடகாவின் கிராமங்களில் கூடப் பலமான கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். அடிக்கடி தலைவலி உடல் சோர்வு, தலையில் கட்டி என மருத்துவமனைக்கு வந்தவருக்கே இந்த நிலை. அதை எண்ணி உருண்ட கண்ணீரை உள் இழுத்தவள், அப்பா பெட்டில் படுத்து உறங்கும் வரை கூடவே இருந்தாள். பின்னர் மேனகா மெல்ல இவள் தோளைத் தொட்டு முன்னறைக்கு அழைத்துச் சென்றார்.

        மேனகாவும், ஹாசினியுமாகச் சிறிது நேரம் பேசினார்கள். அம்மா மகளுக்குச் சமாதானம் சொன்னவர், "கொஞ்ச நாள் தான், அப்பாவை வெளிநாடு கூட்டிட்டுப் போயிட்டம்னா போதும். நமக்கு எந்தச் சொத்து சுகமும் வேண்டாம். எலக்சன் முடிஞ்சோனே நம்ம கிளம்பிடுவோம்" என்றார்.

       " அம்மா, நீயா ஏன் இவ்வளவு கஷ்டப்படனும், பெத்தம்மாவுக்கு ஒரு போன் போடு. அடுத்த நிமிசமே நம்மப் பிரச்சனை சரியாகிடும் " என்றாள்.

      "மது" என அதிர்ந்தவர், " நான் எந்த முகத்தோட அவங்க கிட்டக் கேட்பேன். ராம்ஜியோட சந்தோஷமான பொழுதை எல்லாம் நான் எடுத்துக் கிட்டு, கஷ்டத்தை அவங்களுக்குக் கொடுக்கச் சொல்றியா. என்னால அவங்க பட்ட துன்பம் போதும். அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும்" என்றார் மேனகா.

       " ஆனால் நான் பழகின வரை, பெத்தம்மா பாசமானவங்க. உன்னைப் பத்தியும் தப்பாவே சொன்னதில்லை. " என்றாள் ஹாசினி.

      " அது அவங்களோட பெருந்தன்மை. இதோட இந்தப் பேச்சை விடு மது. இன்னும் ஒரே மாசம். நாம அமெரிக்கா போயிடலாம். அது வரைக்கும் அம்மாவுக்காகப் பொறுத்துக்கடா" என்றார் மேனகா .

      " ஓகே மாம், நீயும் உடம்பைப் பார்த்துக்கோ. உங்க இரண்டு பேருக்காகவும் தான், அந்த இடியட்ஸ் ஸ சகிச்சிட்டு போறேன். அந்தச் சின்ன இடியட் என்னையவே மிரட்டுறான்" எனப் பொங்கினாள்.

      " மது, கொஞ்சம் பொறுமையா போ, அவனுங்க டேஞ்சரான ஆளுங்க. இந்தச் சிசுவேஸன்லருந்து கேர்புல்லா வெளிய வரனும்" என மகளுக்குப் பொறுமையைப் போதித்தார்.

         மேனகா ஒரு திட்டத்தோடு மகளை வைத்து ஆடிக் கொண்டிருக்க, நஞ்சப்பாக்கள் நயவஞ்சகமாய் ஒரு திட்டம் தீட்டினார்கள். இதற்கு நடுவில் ஹாசினி சந்திரா தனது விதியை நோக்கி மருத்துவமனையிலிருந்து கிளம்பினாள்.


No comments:

Post a Comment