ஹாசினி சந்திரா - 9
மதுர ஹாசினி சந்திரா ,வீட்டில் பிரியமானவர்களுக்கு மது. பெற்றவர்க்கும் உற்றவர்க்கும் மதுரமாக இனிப்பவள் .அவளையே நினைத்திருப்பவனுக்கு மதுவாக மயக்குபவள். தான் சுயரூபம் தாங்கி வந்தால் , வேலைக்கு ஆகாது என, தன நிஜம் மறைத்து, நிழலாய் உலகைப் படைத்து, அதன் அரக்கனான வேஷம் பூண்டு இந்த அழகியைக் கடத்தி வந்த சந்திரன் அவன்.
ஹாசினி சந்திராவில், சந்திரா அவளது தகப்பன் மட்டும் அன்று, அவளது உள்ளக்கிடையில் அது அவனின் பெயர் அவளோடு பிணைந்து இருப்பது, அவள் முழு நினைவில் இருக்கும் போது, இதை ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டாள்.தனக்குள்ளான மனசாட்சியிடம் மட்டுமே மனம் திறப்பாள். அவள் பூட்ட நினைத்தாலும் மனசாட்சியிடம் திறவுகோல் உள்ளதே.
ஆனால் தன்னிலை மறந்த மதியிழப்பில் , அவன் நாமம் உச்சரித்து விட்டாள் .அதிலும் கூடச் சூதானமாகத் தன்னிடம் வராதே என்ற அக்கறை மட்டுமே. அவனிடம் தன மனம் சிக்கியதை மறந்தும் உரைக்க வில்லை. ஆனால் அவன் அவளைத் தனதாக நினைக்க ஆரம்பித்து வருடங்கள் உருண்டோடி இருந்தது. அவள் மனதையும் ,அவளுக்கு அரசியல் பிடித்தமின்மை என்பதையும் அறிந்தே, அதிலிருந்து அவளைத் தான் சிறையெடுத்தான்.
மயங்கிய பாவையின் இதழில் தன் பெயரை உதிர்க்கவும் , விதிர்த்தவன் அவளோடு தன் அரிதாரம் களைந்து, சுய முகவரியில் மயங்கியவளிடம் பேட்டி கண்டான். அவன் அவளுக்கு ஒரு முறையில் மாமன் மகன். பெத்தம்மாவின் ஆசை மருமகன். சிம்மதேவன் வம்சத்தின் வாரிசு. நினைப்பதை, வழிவகைத் தவறு ஆனாலும், விளைவு சுபமே எனில் அது தவறில்லை எனும் சித்தாந்தம் கொண்டவன். தன நோக்கத்திற்காக எதையும் வளைக்கும் வல்லமை பொருந்தியவன். அசாத்திய துணிச்சல். அதனினும் கோபம், பிடிவாதம் எல்லாம் நிறைந்த சந்திர பிரகாஷ் சிம்ம தேவன், என்ற சி பி தேவ்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பழங்கால மன்னர் பரம்பரை என வாழ்ந்தவர் ராஜசிம்மத்தேவன் .சிம்மதேவன் எனும் பட்டப் பெயர் கொண்ட இந்த வம்சம் நில உச்ச வரம்பு, ஜமீன்தார் முறை ஒழிப்பு ஆகியவை அமல்படுத்தப்பட்ட காலத்தில் நிலத்தை இழந்து, வீடு வாசலும் பராமரிக்க இயலாமல் வந்த விலைக்கு விற்று விட்டு ஒரு தலைமுறை முன்பே பெங்களூருவில் குடியேறினர்.
ராஜசிம்மத் தேவனுக்கு, வீரசிம்மதேவன், ரத்தனசிம்மதேவன் என்ற மகன்களும் இருவரும் நடுவில் பானுமதி தேவி என்ற மகளும் இருந்தனர்.
வீரசிம்மத்தேவனுக்குப் பால்ய கால நண்பர் தான் சுரேந்தர் ராமச் சந்திரா. இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தவர்கள், கட்டிடக்கலை பற்றிய படிப்பைப் படித்தார்கள். இருவரும் பழங்காலக் கட்டிக்கலைப் பற்றி அறிய இந்தியா முழுவதும் சுற்றினார்கள்.
சிறுவயதிலிருந்தே வரலாறு கலை என ஆர்வம் கொண்ட எஸ் ஆர் சந்திரா , கட்டிடக்கலையிலிருந்து ஆர்ட்ஸ் எனச் சொல்லப்படும் சினிமாவுக்குப் பெரிய வரலாற்றுப் படச் செட்டிங்க்ஸ் போட சென்றவரின் கலை தாகம் படத்தை இயக்குவதில் வந்து நின்றது. இதற்கு நடுவில் பானுமதியை இருவீட்டார் சம்மதத்துடன் மனம் முடித்திருந்தார். டைரக்ஸன் வரை போன போது கூடப் பானுமதி தடை சொல்லவில்லை. அடுத்த அவதாரமாகப் படத்தில் நாயகனாகவும் அவரே களமிறங்கும் போதே கருத்து வேறுபாடு வந்தது.
அதே சமயத்தில் வீரசிம்மன் இங்குக் காலூன்ற இயலாமல் ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். ஒரு சிறிய ப்ராஜெட்டுக்கு எஸ் ஆர் சந்திரா பண உதவி செய்தார். அதைப் பிடித்துக் கொண்டு வீரசிம்மன் குறுகியகாலத்தில் வளர்ந்து, தனது குடும்பத்தை அங்கே அழைத்துக் கொண்டார். தம்பி ரத்தனசிம்மாவும் அவருக்கு உதவியாகத் தொழிலைப் பார்க்கத் தொடங்கினார்.
இங்கு வரிசையாகப் பல படங்களில் வெற்றிக் கொடியை நாட்டவும், பிரச்சினைகளும் கூடவே வந்தது. இவர் அரசியல் களத்திலும் இறங்கினார். அதே சமயம் அடைக்கலமாக வந்த மேனகாவுக்குப் பாதுகாப்பாக நிற்க, இருவரையும் இணைத்துக் கதை பேசியது உலகம்.
பானுமதியை எல்லாமுமாகச் சேர்ந்து அழுத்தியது. அவர் சகோதரர்களுடன் போய்த் தங்கும் தனது முடிவை அறிவித்தார். சந்திரா இதில் கொஞ்சம் ஆடித்தான் போனார். ஆனால் தான் செய்து கொண்ட கமிட்மென்ட் விட்டு விலகவும் முடியாத நிலை. தற்காலிகமாகப் பானுமதியை நண்பனிடம் அனுப்பி வைப்பதாகக் கேட்டார் சந்திரா.
வீரசிம்மன் தனது கைகளை விரித்துக் கம்பெனியை விரிவுபடுத்த முதலீடுகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை பானுமதியின் பெயரில் மச்சினனிடம் முதலீடு செய்தார். வீரன் தங்கையையும் , தம்பியையும் பங்குதாரர்களாகச் சேர்த்து கம்பெனியை தரமுயர்த்தினார்.
பானுமதி கிளம்பும் முன், மேனகா , திரைத்துறையிலும், கட்சியின் கொள்கை பரப்பு கூட்டங்களிலும் எஸ்ஆர் சந்திராவுடன் பயணித்த தன்னால் தான் இவர்களது மணவாழ்க்கை பாதிக்கிறது எனப் பானுவிடம் பேச வந்தார்.
பானுமதி, தன் கணவன் தன்னை விட்டுச் சென்று வெகுகாலம் ஆகிவிட்டது. உன்னால் முடியும்னா அவரைப் பிடித்து வைத்துக் கொள் என்றார். மேனகா அதிர்ச்சியாகப் பார்க்கவும், அமைதியான குடும்ப வாழ்க்கை வேணும்னு தான், இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால் சந்திரா என்ற பெயர் இருந்தாலும் அவர் சூரியன். என்னால் ஈடு கொடுக்க முடியாது. அவரைத் தனியா விடவும் எனக்கு மனசு வரலை. நீ அவரைப் பார்த்துக்கோ, எனப் பொம்மையை வைத்துக் கொள் என்பது போல் விட்டுச் சென்றார் சூரியனின் பெயர் கொண்ட குளிர் நிலவு பானு.
சந்திரா கொஞ்ச நாள் இருந்துவிட்டு மனைவி தன்னிடம் திரும்பி விடுவார் என நினைத்தே தனது காலத்தை நகர்த்த, மேனகா அவரை நெருங்கினார். பானு தனது முடிவில் தெளிவாக இருக்க, இங்குத் தனிமைப் பட்டுப் போன சந்திராவும் மேனகாவை நாடினார். சேர்ந்து வாழத் தொடங்கினர். ஹாசினியை கருவுற்ற பிறகு, தாலி கட்டினார் சந்திரா.
எது எப்படி இருந்தாலும் மகன்களுக்கு விடுமுறை வரும் ஒரு மாதத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு, உலகத்தைச் சுற்றுவார். மகள் பிறந்து மூன்று வயதிலிருந்து அவளையும் இவர்களோடு அழைத்துச் செல்வார். ப்ரதிபன், அதிபன் மட்டும் போவதைச் சகோதரர் மக்கள் ஏக்கமாகப் பார்க்கிறார்கள் எனச் சொல்லி அடுத்தச் சில வருடங்கள் பானுமதியோடு சேர்த்து எல்லாக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு நாட்டில் பானுவின் கனவான அமைதியான குடும்ப வாழ்க்கையையும் அவருக்குத் தந்தார். அந்த ஒரு மாதம் பானுவுக்குச் சொர்க்கம் தான்.
ஆனாலும் சந்திராவின் அரசியல் வளர்ச்சி, அந்த ஒரு மாதத்தையும் அவர்களிடமிருந்து பறித்தது. ஆனால் மகன்களின் திருமணத்தைத் தானே வந்து நடத்தி வைத்தார். இதில் மகன்களுக்குமே தந்தை மீது பாசம் தான். மேனகாவால் தான் தந்தை பிரிந்தார் என அத்தையும் சிறிய மாமாவும் பேசும் வார்த்தைகளை அவர்களும் பிடித்துக் கொண்டனர். வீரசிம்மன் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பில் இறந்து விட, நண்பனின் பிரிவு சந்திராவையுமே பாதித்தது. உடலால் போதும், உள்ளத்தால் நெருங்கிய நண்பர்கள் அவர்கள். மெளனமாக தனக்குள்ளே நண்பனின் இழப்பை உணர்ந்த எஸ் ஆர் சந்திராவின் உடல் நிலையம் நாளடைவில் குன்றி இந்த நிலைக்கு வந்து விட்டார்.
தங்களது குடும்ப பந்தத்தை, விலகியே இருந்த போதும், தங்கள் தகப்பன்ங்களுக்கு இடையே நட்பும், தங்களுக்கு இடையே நேசமும் விந்தையை எண்ணி அமர்ந்திருந்த சந்திரப்ரகாஷ் தேவ், ஹாசினியை கண் சிமிட்டாமல் பார்த்திருந்தான்.
ஹாசினியின் போர்வையைச் சரியாகப் போர்த்தி விட்டவன், அவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து விட்டு, பனை ஓலை விசிறி எடுத்து அவளுக்கு வீசி விட்டான்
ஆறு மாதத்துக்கு முன் அவளை ஒரு பொதுக் கூட்ட மேடையில் பார்த்ததை நினைவில் கொண்டு வந்தவன், "ஆளையும், மண்டையையும், கொண்டையையும் பார்க்கனுமே, எனக்கே அக்கா மாதிரி இருந்தடி. அப்பவே தெரிச்சு ஓடியிருக்கனும் , போக முடியாமல் குண்டு கோஸ் இழுத்துடிச்சு. பானு அத்தையைச் சொல்லனும், இவ பன்னெண்டு வயசு இருக்கையிலேயே என் கையால மாலையைப் போட வச்சு. இவளை என் மனசில் ஏத்தி விட்டுட்டாங்க" என நெகிழ்ந்திருந்தான்.
அந்த நாள் அவன் நினைவில் வந்தது. ஒவ்வொரு முறையும் வரும் ஒருமாத விடுமுறை மாதம். ஹாசினியும் இன்டர் நேசனல் பள்ளியில் படித்ததால் லீவு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
அந்த வருட லீவுக்குச் சந்திரா மகளை அழைத்துக் கொண்டு லண்டன் வந்து சேர்ந்தார். பானுமதி இவர்கள் ஐவரையும் அழைத்துக் கொண்டு லண்டன் போய்ச் சேர்ந்தார். எல்லாருமே டீன் ஏஜ் பிள்ளைகள். அதனால் பானுவுக்குச் சிரமம் ஏதுமில்லை. நிருபனே ஹாசினியை விடப் பெரியவன். ஆராதனாவும் ஹாசினியுமாக ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ள, டீன் ஏஜ் பசங்களுக்கு ஓர் அறையும், பானுமதி, சந்திராவுக்கு ஒரு அறையுமென அந்தப் பழங்கால வீட்டில் ஒதுக்கி இருந்தனர்.
சந்திரா, அப்போதே அடுத்த விடுமுறைக்கு வர முடியுமா எனத் தெரியாது. அதனால் இந்த விடுமுறை முழுவதும் நன்றாக என்ஜாய்ச் செய்ய வேண்டும் என லண்டனில் உள்ள தியேட்டர்கள், பழங்கால மாளிகை, வளாகங்கள் அனைத்துக்கும் அழைத்துச் சென்றார்.
அதுவும் கட்டிடக்கலை, நாடகம், பழங்கால வரலாறு என வந்துவிட்டால் எஸ்ஆர்சிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அவரின் பேச்சை எல்லாருமே வாயைப் பிளந்து தான் கேட்பார்கள்.
இந்தச் சிறுவர்களுக்கு என்ன தெரியும் என்ற பாவனை இல்லாமல் ஒவ்வொரு சிறு விசயத்தையும் விளக்கிச் சொல்லி, கிட்டத்தட்ட எல்லாப் பிள்ளைகளையுமே, கட்டிடக்கலை பைத்தியமாக்கி வைத்திருந்தார். ஆராதனாவுக்கு இன்டீரியர் டெகரேசன் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தினார். மற்ற ஐவரும் சந்திரா பின்னாடி தெரிந்தால், ஹாசினி பெத்தம்மா என அழைத்துக் கொண்டு பானுமதி பின்னே திரிவாள். சாப்பாடு டைனிங்கில் அடுக்கி வைப்பது எனப் பெரியம்மாவோடு தான் முழு நேரமும். பானுமதியும் எந்த நேரமும் பூக்கத் தயாராக இருந்த மகளை நல்ல ஊட்டமான உணவாகக் கொடுத்துக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார்.
கிளம்ப ஒரு வாரம் இருக்கும் போது ஹாசினி பெரிய பெண் ஆனாள். ஆராதனா உடன் இருந்ததால் அவளுக்குப் பாதுகாப்பு முறைகளைச் சொல்லிக் கொடுத்தாள். மேனகாவை வரச் சொல்லி பானுமதி போன் போடவும். " அக்கா, அவள் உங்கள் மகள், அவளுக்குச் செய்கிற முறையை நீங்களே செய்ங்க" என்று விட்டார்.
வீட்டில் எளிமையாக ஹாசினிக்கு தலைக்கு ஊற்றிச் சிங்காரித்து, லெஹங்கா அணிவித்து ஒரு நகையையும் பூட்டி விட்டார். மங்களூர் பெண்மணியான மேனகாவின் மகள், மஞ்சள் அழகியாகச் செழுமையாகவே இருந்தாள். மாமன் முறைக்கு மாலை போட வேண்டும் என யோசித்த பானுமதி சந்திர தேவை மாலையிட அழைத்தார். அவனும் விடலைப் பையனாக முதலில் யோசித்தான்.
" மாப்பிள்ளை, இவ்வளவு யோசிக்காமல் மாலையைப் போடு. அப்பத்தான் உனக்கும் ஒரு சான்ஸ் கொடுப்போம். இல்லைனா ஜாக்பாட் கையை விட்டு போயிடும்" எனச் சந்திராவும் கேலி செய்தார். ஒரு வழியாகச் சந்திரதேவ் ஹாசினிக்கு மாலையிட்டான். சிறுவர் விளையாட்டாகப் போட்டோக்களும், வீடியோக்களும் எடுத்து வைத்தனர். அதன் ஒரு ஸ்நாப் இன்றும் சந்திரதேவின் பர்சில் ஓர் ரகசிய அறையில் உண்டு.
ஆனால் ஊருக்குச் சென்ற பிறகு, இதனைப் பார்த்த அனுசுயா , பானுமதியை வெகுவாகக் கோபித்தார். இனி ஹாசினி வருவாள் எனில் தன் மகனை அனுப்ப மாட்டேன் எனச் சண்டை போட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்குப் பிறகு சந்திரா மந்திரியானார். வரிசையாக அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடினார். அவர்களுக்கான விடுமுறையும் பிறகு வரவே இல்லை.
ஒரு முறை ஹாசினி, மஸ்கட் வீட்டுக்கு போன் செய்தாள், பானுமதி இல்லாத நேரம், அனுசுயா கடுமையாக வார்த்தையை விட்டார். " சந்திர தேவை மயக்கப் பார்ப்பதாகவும், கற்பனையிலும் அதை நடக்க விட மாட்டேன்" என அவர் சுடு சொல் சொன்னதில் ஹாசினி துடித்துப் போனாள். சந்திர தேவ் மாலையிட்டதிலிருந்த மயக்கமும் சட்டெனத் தெளிந்தது. ஆனால் அந்தப் பப்பி லவ் அவ்வப்போது அவளது உள்ளத்தை அசைத்துப் பார்த்தது மட்டும் உண்மை.
காலேஜ் யூஜியை இங்கே முடித்தவள், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்ளாள். அங்கே அவளை விட வயதில் மூத்த நண்பன் தான் மேத்யூஸ். அறிமுகம் இல்லாத ஊரில் ஆபத்பாந்தவனாய் அவளைக் காத்தான்.
ஆனால் விதி வலியது, சந்திரதேவ், அப்பாவின் வியாபாரத்தில் காலூன்றி உலகம் சுற்ற ஆரம்பித்தான். ஹாசினி தங்குமிடம் அறிந்து அவளைக் காணச் சென்ற போது, மேத்யூவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததைத் தான் பார்த்தான். ஹாசினியிடம் அறிமுகம் ஆகாமலே திரும்பியவனுக்கு மேத்யூவின் தந்தையோடு ஒரு பெரிய ப்ராக்ட் செய்ய ஒப்பந்தம் கிடைத்தது. அவள் அமெரிக்காவில் தங்கியிருந்த ஒரு வருடமும் அவளை நேரில் சந்தித்தான் இல்லை. ஆனால் அவள் இந்தியா கிளம்பிய விவரம் மேத்யூஸ் மூலமாகத் தான் அறிந்தான்.
சந்திரதேவ் மற்றும் ஹாசினியின் குடும்பத்து உறவை அறிந்த மேத்யுஸ், ஹாசினியின் நல் வாழ்வுக்குச் சந்திர தேவை நாடினான். ஆனால் அதற்கு முன்னரே அதே பொறுப்பு வேறு ஒருவரிடமிருந்து சந்திரதேவிடம் ஒப்படைக்கப் பட்டு இருந்தது.
சந்திரதேவின் செயல்கள், அதிரடியாகத் தான் இருக்கும். ஒரு வேலை ஆரம்பித்தால் தனக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நன்மை வருமோ, அதில் பத்து பங்கு தன் எதிரிக்கு எழ முடியாத அளவு அடியையும் கொடுப்பான்.
வீரசிம்ம தேவனோ, ரத்தின சிம்ம தேவனோ சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டனர். இதோ இன்றைய ஹாசினியின் நிலையும் சந்திரதேவின் கோணல் மாணலான மூளையில் உதித்தது தான். நஞ்சப்பாக்களை வேரறுக்க ஆட்களை ஏற்பாடு செய்து விட்டுத் தான், இந்தத் தீவில் பதுங்கி இருக்கிறான்.
ஹாசினியின் முகத்தை மெல்லிய ஒளியில் ரசனையாகப் பார்த்திருந்தவனின் காதில் " அட் எனி காஸ்ட் அண்ட் கண்டிசன், ப்ளீஸ் சேவ் மை ப்யுட்டி. ஐ வில் கிவ் மை எவ்ரிதிங் டூ யூ" என இவளுக்காக உருகிய மல்டி மில்லினரின் வார்த்தைகள் எதிரொலிக்க அவளை விட்டு காட்டேஜை திறந்து வெளியேறினான் சந்திரதேவ்.
ஹாசினி- சந்திராவுக்கு இடையில் உள்ள உறவு எப்படி. ஆசையும் காதலும் இருந்தும் இவர்களைச் சேர விடாமல் தடுப்பது எது. எதிலிருந்து ஹாசினியை காப்பாற்ற இந்த நாடகம் எதற்கு ,எல்லா கேள்விகளுக்கும் அந்த அரக்கன் சாரிடம் மட்டுமே பதில் உண்டு. கல்லுளிமங்கன் சாதாரணமாக வாயை திறந்து விட மாட்டான்.
ஹாசினி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, தங்கப்பாண்டியன் இரவு மங்களூருக்கு விமானம் ஏறும் முன் தனது உதவியாளருடன் விசாரணை சம்பந்தப்பட்ட மற்ற கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருடைய பர்சனல் போன் அடித்தது, குலாப் எனப் பெயரும், மகனையும் மகளையும் இருபுறமும் கட்டியணைத்த படி அவரது மனைவி தான்வி தங்கப்பாண்டியனும் திரையில் ஒளிர்ந்தனர். ஒரே பார்வையில் அவர் கண்களின் மிடுக்கு மறைந்து காதல் வழிய, பாசம் பொங்க போனை காதுக்குக் கொடுத்தார். மாற்றி மாற்றி நான்கு முத்தங்கள் அவர் காதில் ஒலிக்கப் பதில் சிரிப்போடு " பாண்டி மக்கள் என்னடா பண்றாய்ங்கே" என்றார்.
" ஊருக்கு வராத அப்பனோட மல்லு கட்றாய்ங்க" எனக் கோரஸ் பாடினார். "தங்கம் பாவமில்ல, அவனோட ஒரண்டை இழுக்கக் கூடாது” எனவும், “அப்பா சீக்கிரம் வாப்பா, இந்தத் தானிமாவோட ஒரே போர்.” என்றது மகள் ராகசுதா.
“ஏண்டா செல்லம், அம்மா என்ன செஞ்சா” எனத் தங்க பாண்டியன் வினவவும், விசாரணை அதிகாரியாக அப்பாவை மாற்றிய அவரது மகள் ,” அவ எதுவுமே செய்யறது இல்லை, மீட்டிங் போயிடுறா, இந்தப் பாட்டிஸ் ,பருப்பு, சாம்பார்னு வச்சு ஒரே போர், ஓமற்றது, நீ வாப்பா “ என மகள் அழைக்கவும், உருகிப்போனார் ஆபீசர், ஆனால் அந்த நேரம் போனில் கத்திய மகன்
‘அப்பா, அவ பொய் சொல்றா, இவள் அடம் பண்ணாலேன்னுட்டு , ரகு தாத்தா ரகசியமா ஸ்விகிலப் பிரியாணி ஆர்டர் பண்ணார், நம்ம ஆத்துல வச்சு பிரியாணியை நல்லா மொக்கிட்டா” என மகன் சாட்சி சொன்னான்.
‘நீ சாப்பிடலையா கௌசி “ என வினவவும், “நேக்கு வேண்டி வச்சதையும் சேர்த்து தின்னுட்டாப்பா, அதை மறைக்கத் தான் அம்மாவை கம்பளைண்ட் பண்றா” எனக் கௌசிக் பாண்டியன் , தங்கை ராகசுதாவை அப்பாவிடம் பேட்டுக் கொடுத்தான்.
“அப்பா, கௌசி பொய் சொல்றான், பார்சல் இத்துனூண்டு தான் வந்தது, நீக்கி பத்தலை “ என இரண்டு பிள்ளைகளும், சாப்பிடும் சரி, பாஷையும் சரி, அப்பாவையும், அம்மாவையும் கலந்து கலவையாக இருப்பார்கள். ஆனால் அம்மா வீட்டினரிடம் பிராமணப் பாஷையிலும், அப்பா வீட்டுக்குச் சென்றால் அசல் மதுரைக் காரர்களாக மாறிவிடுவர்.
இவர்கள் பஞ்சாயத்தைத் தீர்த்து, ”ஐ மிஸ் யூ டா செல்லக்குட்டீஸ்” என மகன் மகளோடு கொஞ்சிக் குலாவி ஒரு வழியாய் மனைவியிடம் போனில் பேசினார் .
" குலாப், சாப்பிட்டியாடி" என ஆரம்பித்தார் . “சாப்பிட்டேன், நீங்க” எனப் பதில் பெற்றவர், “உங்க மகளைப் பார்த்தேளா, எப்படிப் பேசுறான்னுட்டு, இரண்டு பிளேட் பிரியாணியும் தின்னுட்டு, நான் மீட்டிங் போயிட்டேன்னு குறை சொல்றா “ எனத் தான்வி ஆரம்பிக்கவும்,
“ ஏன் ,உனக்கும் கொடுக்காமல் சாப்பிட்டுருச்சாக்கும் , ரெட் சில்லி காரம் ஜாஸ்தியா இருக்கு” எனச் சிரித்தார்.
“அய்யா சாமி, சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு ட்ரென்சர் வாங்கிண்டு வாங்கோ. உங்க பிள்ளைகள், எங்காத்து மனுசாள் பிராணனை வாங்கிறதுகள், அப்பாவை சிக்கன் ஆர்டர் பண்ண வச்சுருக்கா, நம்ம அபார்ட்மெண்ட்ல டெலிவரி பண்ணிட்டு ,ஒரு மாதிரி பார்த்துட்டுப் போறான் “ எனத் தான்வி அங்கலாய்க்கவும் அவரது கோல்டுக்குச் சிரிப்பு தாங்கவில்லை, அதற்கும் சேர்த்துத் திட்டு வாங்கிக் கொண்டார் மீசைக்காரர்.
" ஐயே போறுமே, ஹாஸ்யம். ஹாசினி சந்திராவைப் பத்திச் சொல்லுங்கோ , கேஸை உங்களண்டை கொடுத்திருக்காளா. நேத்தே புலம்பினேளே" என்றார் தான்வி. " நீயும் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கியே. மறந்து போச்சா" என வினவினார்.
"நன்னா ஞாபகம் இருக்கு. மகள்னா எஸ்ஆர் சிக்கு உயிராச்சே. அவள் இல்லைனா ஒடைஞ்சு போயிடுவாறே" எனக் கவலையாக வினவினாள் தான்வி.
" அவருக்கு ஹாஸ்பிடல்ல அப்சர்வேஷன்ல இருக்கிறதால இன்னும் சொல்லலை. அது ஒரு வகைக்கு நல்லது தான். ஆனால் மனுஷன் இன்னொரு வகையில் கொடுத்து வச்சவர்" என்றார் பாண்டியன்.
" மகளையே தொலைச்சுண்டு உட்கார்ந்திருக்கார். என்னத்தைக் கொடுத்து வச்சார் போங்கோ. " எனப் பாசமிகு ஓர் மகளாகத் தன் தந்தையையும் தன்னையும் வைத்துத் தான்வி ஆதங்கப் பட்டார்.
" அவர் ஃபர்ஸ்ட், வைஃபும் வந்துட்டாங்க. இரண்டு பேரும், தங்களை மீறி யாரும் புருஷனை நெருங்க விடக்கூடாதுன்னு அவரைக் காவல் காக்குறாங்க. இதில அமேசிங் என்ன தெரியுமா, ஒரு சக்களத்தி சண்டை இல்லை,போட்டி, பொறாமை இல்லை, இரண்டுபேரும் சோகத்தை மறைச்சுட்டு அவரைச் சந்தோசமா வச்சுக்கிறாங்க " என்றார் தான்வியின் கோல்ட்.
"இப்ப எதுக்கு இதைச் சொல்றேள்" எனத் தான்வி கண்டித்துக் கேட்கவும், "ஏய் ரெட் சில்லி, உன் சந்தேகப் புத்தி போகுதா பாரு. ஹாசினி இறப்பால் யாருக்கு முதல் லாபம் , யாரு செய்திருப்பாங்கன்னு, சந்தேகப் படுவோம்ல. ஆனால் முதல் பேமலி, அப்பாவைக் காப்பாற்றிக் கூட்டிட்டு போகனும்னு பார்க்கிறாங்களே ஒழிய. இந்தச் சொத்துச் செல்வாக்கை கண்டுக்கவே இல்லை" என்றார் .
" முதல் மனைவி ஒதுங்கிப் போனதா தானே சொல்றா. பசங்களும் அப்படியேவா இருப்பா. சந்தேகமா இருக்கே" எனத் தான்வி சந்தேகமாகக் கேட்கவும்,
" நானும் எல்லா ஆங்கிள்லையும் தோண்டி துருவிட்டு தான் இருக்கேன். ஆனால் அந்தக் குடும்பத்துக்கிட்ட தப்பு செஞ்ச பதட்டம் இல்லை. அது தான் சொல்ல வந்தேன்" என்றவர் ,"தனுமா இந்தக் கேஸ் விஷயமா ,ரேப்பிட் பயர் கேள்வி கேளு, நான் பதில் சொல்றேன் , ஒரு ஐடியா கிடைக்கும் " எனச் சொல்லவும், அதைக் கேட்ட தான்வி, “அப்போ இந்த மாசம், என் அக்கவுண்டுக்கு உங்க சேலரியை கிரெடிட் பண்ண சொல்லுங்கோ. உங்க மைண்ட் வொர்க் புல்லா நான் செய்யறேன் “ எனச் சலித்துக் கொண்டாள் தான்வி .
“இப்ப மட்டும் காசு என்கிட்டே இருக்க மாதிரி, கார்டு மட்டும் தான் இருக்கு “ என அதற்கு ஒரு வம்பு பேசினர். ஓகே கம் டு த பாயிண்ட்.
“ஹாசினி சந்திராவை ,யார் கொன்னது, எதுக்கு” - தான்வி.
“ தேர்தலைச் சீர்குலைக்கத் தீவிரவாதி தாக்குதல் , ஹாசினி பிரச்சாரம் பண்றது பிடிக்காத எதிர்க்கட்சி சதி , சொத்துக்காகச் சொந்தகாரங்க செய்தது “ - பாண்டியன்.
“ஹாசினி படுகொலையால் ,தேர்தல் தள்ளி பேச்சா “ -தான்வி. ”இல்லை’- பாண்டியன்
“ஹாசினி சொத்து, அவளுக்கு இல்லைனா யாருக்குப் போகும்” - தான்வி
ஹாசினி அம்மாவுக்கு. அவுங்க பார்த்து யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம்.- பாண்டியன்
“ஹாசினி சொத்து மதிப்பு அதிகமா, மூத்த தாரத்து பசங்க சொத்து மதிப்பு அதிகமா”- தான்வி
எஸ்.ஆர்.சி , சொத்தில் பெரும் பகுதி,மூத்த தாரத்துக்குக் கொடுத்துட்டார். ஹாசினிக்கும் அதுக்குச் சமமான சொத்து, இந்தியாவில் உண்டு” -பாண்டியன்
“ஹாசினி படுகொலையால ,அனுதாப ஓட்டு யாருக்கு விழும்’ - தான்வி
நிச்சயமா கேஜே பார்ட்டிக்கு தான்'- பாண்டியன்
“அப்ப எதிர் கட்சி எதுக்கு ஹாசினியை கொல்லனும் ’ - தான்வி
“ஆமா தேவை இல்லை, ஆனால் கேஜே பார்ட்டிக்கு ஹாசினி , பொன் முட்டை இடும் வாத்து, அவங்க ஏத்துக்கக் கொல்லனும் , சிவராஜ் , ஹாசினியை தன் மருமகள் ஆக்கிக்கணும்னு ஆசைப் பட்டார் “ எனத் தங்கப் பாண்டியன் சொல்லவும்.
“இது அவர் சொன்னது தான், ஹாசினியோ, அவங்க அம்மாவோ கன்பார்ம் பண்ணலை” என ஞாபகப் படுத்தினார் தான்வி.
“ஆமாம், அப்பாவை காப்பாற்றத் தான் அரசியலுக்கு வந்ததா ,அந்த அம்மா புலம்புனாங்க , சோ ,கட்டாயத்தில் தான் அரசியல் பிரவேசம் “
“ கோல்டு, ஹாசினியை கட்டாயப் படுத்துற பிரமாஸ்திரம், சிவராஜ் கிட்ட என்ன இருந்தது” எனத் தான்வி கேள்வியை எழுப்பியவர், மேலும் தங்கப்பாண்டியன் சொன்ன விவரங்களையும் கேட்டுக் கொண்டாள்.
‘கோல்ட் , முதலமைச்சர், உங்களண்டை கேஸை எதுக்குத் தந்திருக்கார்” எனவும்,
“இது என்னமா இப்படி ஒரு கேள்வி” எனச் சிரித்தார் தங்கப் பாண்டியன்.
“இல்லை, உங்க பதில் அதை நோக்கித் தான் போறது” எனச் சூசகமாகத் தான்வி, சிரிக்கவும், தங்க பாண்டியன் சிரிப்பும் விரிந்தது.
‘போரும், உங்க சிரிப்பே, எல்லாம் சொல்லிடுத்து, உங்க கேஸ்க்கு ஒரு பெவர் நான் செஞ்சு தர்றேன். இவா ஆட்சிக்கு வந்தப்ப அந்தச் சிவராஜ் கீழே இருந்த துறையில் தான் நான் இருந்தேன். அந்தாளுக்கு நான் தொல்லையா இருந்தேனுட்டு பர்பஸா ட்ரேன்சர் செஞ்சான். நிலக்கரி காண்ட்ரேக்ட்ல ஏதாவது தில்லு முள்ளு இருக்கும். உங்க அசிஸ்டென்ஸ் இங்கே தானே இருப்பார் " எனத் தான்வி யோசனையாகக் கேட்கவும்,
"ஆமாம் " என்றார் கமிஷனர் சார். " நான் ஒரு ஆளிடம் பேசிட்டு சொல்றேன். உங்க ஆளை அனுப்பி விடுங்கோ. இந்தக் கேஸ்க்கு தேவையான இன்பர்மேஸன் நான் தர்றேன்" என்றாள் தான்வி ஐஏஎஸ்.
"சூப்பர் டி தங்கப் பொண்டாட்டி, பக்கத்து ஸ்டேட்ல உட்கார்ந்துகிட்டே, இங்க வேலை செய்யற பார். ஐ லவ்யூ தனுமா" என்றார் ஆபீஸர்.
" ம்க்கும், பொண்டாட்டிட்ட ஐ லவ்யூ சொல்றதுக்கு, உங்களுக்குன்னு கிடைக்கிற காரணத்தைப் பாருங்கோ. சரி, சரி, நான் தர்ற இன்பர்மேஸனுக்கு, சரியான சன்மானம் வந்துடனும்" என்றார் தான்வி.
' அடி, நீ நேர்மையான ஆபீஸர், என்னடி இப்படி லஞ்சம் கேக்குற" எனக் கேள்வி எழுப்பினார் பாண்டியன்.
" உங்களுக்குத் தான் கடமைனு வந்துட்டா, நேரங்காலம் கிடையாது. இந்த லஞ்சத்துல தான் என் பொழப்பு ஓடுறது" எனச் சலித்துக் கொண்ட தான்வி, ஆபீஸருக்கு ஐடியா தந்து போனை வைத்தாள் சிவராஜ் நஞ்சப்பாவூக்கான ஆப்பு இந்த ஆபீஸர் ஜோடிகளின் மேற் பார்வையில் பிரமாஸ்திரமாக உருவானது.
தங்கப்பாண்டியன் மங்களூருக்குத் துப்பு துலக்கக் கிளம்பினார். அவர் கேட்ட ஹாசினி , மேனகா,நஞ்சப்பாக்கள் , பசவய்யா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கால் ஹிஸ்டரி அவர் கைக்கு வந்தது.
மங்களூருவில் இறங்கிய தங்கப் பாண்டியன், வெடிகுண்டு நடந்த தினத்தில் ஹாசினி சந்திராவின், ஒவ்வொரு மணித்துளியையும் காட்சிப் படுத்தி ஆங்காகே அவளுடைய புகைப்படங்கள், காணொளிகள், சந்தித்த ஆட்கள், ஹோட்டல் சிசிடிவி என அத்தனையம் இணைத்து நிமிடத்திற்கு நிமிடம் ரிப்போர்ட்டை தயாரித்தார். இரண்டு வாகனங்கள் ஹாசினியின் வாகனத்தைத் தொடர்ந்தது தெரிய வந்தது. அதன் என்னை வைத்தும், கட்சிக்காரர்கள் கொடுத்த தகவல்கள் என ஒரு வடிவம் கிடைத்தது.
இதில் ஹாசினி யுவ்ராஜிடம் பேசியது ஏர்போர்ட் சிசிடிவ் போட்டேஜிலும், கால் ஹிஸ்டரி கொண்டும் உறுதி செய்தனர். அதன் பிறகு தங்கப் பாண்டியன் வேலை இன்னும் வேகமெடுத்தது. ஆனால் அதில் அதிசயமாக ,அவர் தேடிய ஆட்கள் திட்டமிடப் பட்டது போல் அவரிடம் சிக்கினர். அதில் அவருக்கு ஆச்சர்யமும், ஐயமும் ஏற்பட்டது.
மூன்று நாட்கள் மங்களூரை ஹாசினி கேஸ் விஷயமாகத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் தங்கப் பாண்டியன் ஐ.பி.எஸ்.
No comments:
Post a Comment