Tuesday, 18 May 2021

ஹாசினி சந்திரா - 5

ஹாசினி சந்திரா - 5 

அடுத்த நாள் மாலை நேரம்.

         ஹாசினியின் பெயர் தாங்கிய சவப்பெட்டியைத் திறக்கவும் இல்லாமல் அப்படியே கொண்டு போய்க் கடைசிக் காரியங்களைச் செய்து திரும்பி இருந்தனர் ஆண்கள். வீட்டில் என்றும் இல்லாத மயான அமைதி. பெண்களும் குளித்து உடை மாற்றி அமர்ந்திருந்தனர். மேனகா திடீரென " ராம்ஜி தேடுவாங்க. ஹாஸ்பிடலுக்குப் போகனும்" என்றார்.

" இந்த நிலைமையில் நீ எப்படிப் போவ மேனகா. அவரைப் பார்த்தால் மனசு தாங்குமா" என வினவினார் பானு.

       " இல்லைகா, நியூஸ் வந்தப்பவே அங்க தானே இருந்தேன். அவங்களுக்குத் தெரியாமல் தான் சமாளிச்சேன்" எனக் கண்ணீர் உகுத்தவர், " கடவுளே, மகளைப் பறிகொடுத்து, அதைப் புருஷனுக்குத் தெரியாமல் மறைக்கிற கொடுமை, எந்தத் தாய்க்கும் வரக் கூடாது." என அழுதவர், " நீங்க ஒதுங்கிட்டீங்கன்னு நான் உங்க இடத்துக்கு வந்திருக்கக் கூடாதுக்கா. அந்தப் பாவம் தான், என் மகளைப் பறிச்சிடுச்சு" என்றார் மேனகா.

         " அடி போட்டேனா பார்த்துக்கோ. இப்படி எல்லாம் பேசாத. நீ இருந்ததால் தான் இந்தர் இத்தனை வருஷம் நிமிர்ந்து நின்னு இருக்கார்" என்றார் பானு.

            " ஆனால், நான் இல்லைனா, உங்கள்ட்ட திரும்பி வந்திருப்பார். உங்களையும் பசங்களையும் அவங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்" என்றார் மேனகா.

         " இல்லை மேனகா, அவர் வந்திருக்க மாட்டார். இது புலி வாலை பிடிச்ச மாதிரி, நாம விட்டாலும், புலி நம்மை விடாது. அவருக்கு அந்தப் புலி கூட விளையாடுறதில தான் விருப்பமே. ஒரு மனைவியாகவும், தாயாகவும் அவரை மாற்ற முடியாமல் தான் நான் கிளம்பினேன். ஆனால் நீ அவரோடு வாழ பழகிட்ட. என்னை விட நீ தான் அவருக்குச் சரியான ஜோடி" என்றார் பானு.

        "என் கூட வாங்க" என அழைத்துச் சென்ற மேனகா, பானுமதியின் அறையைத் திறந்து காட்டினார். மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு, அவர்களது படங்கள், நினைவுகள் கப்போர்டில் அவரது சேலை முதற் கொண்டு, அதே மணத்தோடு இருந்தது. பானு அழுத கண்களோடு மேனகாவைப் பார்த்தார்.

           " வாரத்தில் இரண்டு நாள் ராம்ஜி இங்க தான் படுப்பாங்க. நீங்க இங்க இருக்கிறதா நினைச்சிட்டு பேசி சிரிப்பாங்க." என்றவர் சில டைரிகளை எடுத்துக் காட்டி , " இது எல்லாம் உங்களுக்கானது. ராம்ஜி இரண்டு பேரோடையும் மூன்று புள்ளைங்களோடையும் வாழறாங்க. நீங்க அவங்களைக் கூட்டிட்டுப் போங்க. மதுர ஹாசினியை நான் அவங்களுக்காக இங்கே உயிரோட இருக்கிற மாதிரி காட்டிக்கிறேன். அவங்களுக்குத் தான் ஞாபகமறதிங்கிற வரம் இருக்கே. நீங்க கூட்டிட்டு போங்க. பேரன் பேத்தியோட கூட்டுக் குடும்பத்தோட சந்தோஷம் அவங்களுக்குக் கிடைக்கனும்" என்றார் மேனகா.

           அவரைக் கட்டியணைத்துக் கொண்ட பானுமதி, " எனக்குக் கூடப் பிறந்த தங்கச்சி இருந்தால் கூட எனக்காக இவ்வளவு செய்வாளோ என்னமோ. அவரைக் கூட்டிட்டுப் போகலாம். ஆனால் ஒரே கண்டிசன் நீயும் என்னோட வரனும். மஸ்கட் வந்துடு. இரண்டு பேருமா அவரைப் பார்த்துக்கலாம்" என்றார் பானு.

         மேனகா ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், " நான் வர்றதை அப்புறம் பார்க்கலாம் அக்கா. இப்ப வாங்க ஹாஸ்பிடல் போவோம். உங்களை அங்க விட்டுட்டு வர்றேன். நான் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இருக்கு. நீங்க ராம்ஜியைப் பார்த்துக்குங்க" என அழைத்தார்.

        சரியாக அதே நேரம் பானுமதியின் போன் அடித்தது. அவரது அண்ணன் மகன் சந்திரதேவ் அழைத்திருந்தான். நண்பரின் மேல் உள்ள பிரியத்தில் அவனது அப்பா வீரசிம்மதேவன் மகனுக்குச் சந்திர பிரகாஷ் சிம்மதேவன் எனப் பெயர் சூட்டியிருந்தார். சந்திர பிரகாஷ் தேவ் என அழைத்துக் கொண்டனர். தொழில் வட்டாரத்தில் சி.பி. தேவ்.

        " சந்து" எனப் பானு அழைக்கவுமே மேனகாவுக்கும் ஒரு கேவல் வந்தது. அவருக்குமே சந்திரா மருமகன் எனப் பேசுவதால், அவன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. மகளைப் பெற்ற தாய்க்கு இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு தான், ஆனால் தன் நிலையை எண்ணி அமைதியாக இருந்தார். ஆனால் அவனே அழைக்கவும் மேனகாவுக்குமே தாங்க முடியவில்லை.

           " அத்தை, பெங்களூர்ல தானே இருக்கீங்க. ஐயம் சாரி, என்னால வரமுடியலை" என்றான். " நீ அந்தக் கொடுமையைப் பார்க்காததும் நல்லது தான் பா. போட்டோல அவள் கன்னக்குழி விழச் சிரிக்கிறது நம்மளை நேரா பார்த்துச் சிரிக்கிற மாதிரி இருக்கு. அவள் முகத்தைப் பார்க்க கூடக் கொடுத்து வைக்கலை. " எனப் புலம்பினார்.

       " அத்தை நீங்களே இப்படிப் பேசுனா, அவங்க என்ன பண்ணுவாங்க. நீங்க தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லனும்" என்றான்.

         " என்னத்தை ஆறுதல் சொல்ல, அவள் இல்லைங்கிறதே, பெற்றவருக்குச் சொல்ல முடியாத நிலைமை. இதை விட என்ன கொடுமை இறுக்கப் போகுது " என்றார் பானு.

      " மாமாவை பார்த்துட்டிங்களா." எனக் கேட்டான். " இல்லைபா, இனிமே தான் போகனும். " என்றார் பானு.

     " மாமாட்ட எதுவும் சொல்லாதீங்க அத்தை" என்றான். " நாங்களும் அது தான் சந்து முடிவு செஞ்சோம். மேனகாட்ட பேசுறியா. பக்கதில தான் இருக்கு" எனக் கேட்டார்.

        " அவங்கள்ட்ட என்னத்த அத்தை பேச" எனது தயங்கினான் சந்திர தேவ்.. " நான் ஆசைப்பட்ட மாதிரி மதுவைக் கட்டியிருந்தாலும், இதே தான் சொல்லுவியா சந்து" என ஆட்சேபித்தார் பானு. " அத்தை, நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. சரி குடுங்க" எனத் தயங்கியபடியே சொன்னான்.

       பானு அறிமுகத்தோடு கொடுத்தார், "தம்பி, பார்த்திங்களா, என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டா பா" என அழுதார் மேனகா. அந்தப் பக்கம் சில நொடிகள் சத்தமே இல்லை. பின்னர்த் தன் குரலைச் சமன்படுத்தியவன், " நீங்க அப்படி நினைக்காதீங்க. வேற எங்கையோ பத்திரமா இருக்கான்னு நினைச்சுக்குங்க" என்றான். மேனகா அதிர்ச்சியாகி " என்ன தம்பி சொல்றீங்க" என்றார்.

      " ஐ மீன், போன வருஷம் வரை அமெரிக்காலத் தானே இருந்தா, அதைச் சொல்றேன்" என்றான்.

" பரவாயில்லை, அவளைப் பற்றி விவரம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. அவ பாட்டுக்கு அங்கேயே இருந்திருப்பா. நான் தான் பாவி அவளை இழுத்திட்டு வந்து பலி கொடுத்துட்டேன் " என்றார்.

     " அதையே நினைக்காதீங்க. நடக்கிறதை அதன் போக்குல விடுங்க. சீக்கிரமா அங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு மாமாவோட மஸ்கட்டுக்கு வாங்க. உங்களுக்கு எந்த இழப்பும் இல்லாமல் நான் பார்த்துக்கிறேன்" என்றான் சந்திரதேவ். மேனகாவுக்கு ஏதோ புரிவது போலும், புரியாதது போலும் இருந்தது.

     " நீங்க சொல்றது கேட்க நல்லா தான் தம்பி இருக்கு. என்னை விடுங்க. இந்த ஆளுங்களோட அரசியல்ல நானும் மீதி நாளை கருத்திடுவேன். நீங்க உங்க மாமாவை கூட்டிட்டுப் போற ஏற்பாட்டைப் பாருங்க. மதுவுடைய ஆசையும் அது தான். அவரைக் காப்பாற்றத் தான் இந்த வேஷம் கட்டுனா " என அழுதார் மேனகா.

      " அழாதீங்க ப்ளீஸ், பானு அத்தை மாதிரி, நீங்களும் எனக்கு அத்தை தான். உங்களைத் தனியாவெல்லாம் விட முடியாது. உங்கள் மகள் தன்னையே பலி கொடுத்திருக்கா. அதை வீணடிக்காதீங்க. அவள் தியாகத்துக்கு மதிப்பு இல்லாமல் போயிடும். நீங்க எதையும் யோசிக்காதீங்க. எங்க வீட்டில் உங்களுக்கு எல்லா மரியாதையும் கிடைக்கும். மாமாவைக் கூட்டிட்டு நீங்களும் சீக்கிரம் மஸ்கட் வரப் பாருங்க. எந்த உதவி, எப்ப வேணும்னாலும், எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுங்க. நான் என்னால முடிந்ததைச் செய்யறேன்" என ஆறுதல் வார்த்தைகள் கூறி போனை வைத்தான். மேனகாவுக்குத் தன் கணவரின் பழைய குரல் தரும் நம்பிக்கை வார்த்தைகள் போலிருந்தன.

       மேனகா, பானுமதி மட்டும் மருத்துவ மனைக்குச் செல்ல, வீட்டு வாரிசாகத் துக்கம் விசாரிக்க வருபவர்களை ப்ரதிபன், அதிபன், தன் மாமாவுடன் சேர்ந்து எதிர் கொண்டனர். பசவைய்யா கூடவே இருந்தார். ரத்தனதேவனுக்குப் பலரைத் தெரிந்திருந்தது. எஸ்.ஆர்.சி மகன்களா என ஆச்சரியப் பட்டனர்.

       மருத்துவமனையில் பானு முதலில் மேனகாவை அனுப்பிச் சந்திராவின் நிலையைப் பார்த்து விட்டுத் தன்னை அழைக்கச் சொன்னார். மேனகாவுக்கும் அதுவே சரி எனப் பட்டது. கதவைத் திறந்து கொண்டு மேனகா போகவுமே, சோர்ந்த அவரது முகத்தைப் பார்த்தவர், கையில் வைத்திருந்த அவரது படத்தைப் பெட்டில் வைத்துவிட்டு இறங்கி வந்தார். மேனகாவை அணைத்துக் கொண்டவர், " ஏம்மா இவ்வளவு நேரம்" என்றார். அவரது ஆதரவான அணைப்பில் கண்ணீர் கரித்தது. அதனை அடக்கியவர், அவரைக் கட்டிலில் அமர்த்தினார்.

       " வீட்டில் போட்டது போட்டபடி இருக்கு, அதெல்லாம் பார்க்க வேண்டாமா. எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி வச்சிருக்கீங்க. அதை மேற்பார்வை பார்க்கவே எனக்கு நேரம் பத்தலை" என அவரது நிறையைக் குறையாகச் சொன்னார்.

       சந்திரா சிரித்து விட்டு, " இது ஒரு பிரச்சனையா. இன்னும் இரண்டு ஆள் போட்டுக்கோ" என்றவர். "அதுக்காக அழுதியா. முகம் சரியில்லையே " என்றார்.

      " அதெல்லாம் ஒன்னுமில்லை. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். " என்றவர், " இப்பக் கண்ணை மூடிட்டு இப்ப யாரை உடனே பார்க்கனும்னு மனசிலிருந்து சொல்லுங்க" என்றார். சந்திரா சிரித்து விட்டு, " எனக்கு மந்த புத்தி ஆகிடுச்சு. இருந்தாலும் மனைவிகிட்ட எப்படிப் பேசனும்னு தெரியும்" என்றார்.

     " சரி சொல்லுங்க" என்றார். "பானுமா, அதெப்படி நீ இருக்கும் போது வேற ஒரு பொண்ணைப் பார்க்கனும்னு சொல்லுவேன்" என்றார் சந்திரா. வாசலில் நின்ற பானு அதிர்ந்து போனார். இது என்ன பேசும் போதே மேனகாவைப் பானு என்கிறாரே என நினைத்தார். அடுத்து மேனகா பசியது அதிலும் அதிர்ச்சி.

 " அக்காவை வரச் சொல்லவா ராம்ஜி" என்றார் மேனகா.

" யாரோட அக்கா. கோசம்மா நீ ரொம்பக் குழப்புற " என்றார்.

" ஆமாம், எனக்கும் வயசாகுதில்ல" என்றார் மேனகா.

" பரவாயில்லை , வயசாகுதுன்னு ஒத்துக்கிற மனைவி கிடைச்ச வரை நான் லக்கி தான்" என்றார்.

" ஓ, நான் சொன்னா. நீங்க ஒத்துக்குவீங்களா. எனக்கு வயசாகுதா அப்ப நான் போறேன்" என்றார். " தேவுடா. இப்ப உனக்கு என்ன வேணும்" என்றார்.

" நான் மெடிக்கல் சாப் வரைக்கும் போயிட்டு வர்றேன். அக்கா இங்க இருக்கட்டும்" என்றார் மேனகா.

" சரி இருக்கட்டும், நீ போயிட்டுவா" என அவர் சொல்லவும், தனது போட்டோவை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர்.

     " அக்கா அவங்க பேசறதுக்கு இணையாவே பேசுங்க. மறுத்து பேசவோ, வேற எதையும் ஞாபகப் படுத்தாதீங்க. உங்களை எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் பெரிசா காட்டிக்காதீங்க. நான் சொல்லிட்டு வர்றேன்" என்றார் மேனகா.

    " ம்கூம், நீயும் கூட இரு. இந்தர் இறுக்கம் ஆனால் நீ தான் சமாளிக்கனும்" என அவரோடே உள்ளே வரச் சொன்னார். பானுவை முன்னே விட்டு மேனகா பின்னே சென்றார். கூப்பிடுங்க எனப் பின்னிருந்து மேனகா சொல்லவும், சந்திராவின் மெலிந்து, தளர்ந்து வாடித் தெரிந்த உருவத்தைக் காண சகியாதவராக, "இந்தர்" எனக் குரலே நெகிழ்ந்து வெளியே வந்தது.

      சந்திரா நிமிர்ந்து பார்த்தவர், " பானு வந்திட்டியா, வாவா" என்றார் மேனகா கதவைச் சாத்தி விட்டு வெளியேறினார். பானு வயதை மீறிய நடையோடு வேகமாக அவரிடம் சென்றார். கை நீட்டி அவர் அழைக்கவும் வேகமாக ஓடிச் சென்று சந்திராவின் கையைப் பிடித்தார். அவர் இறங்கி நின்று இவரை அணைத்துக் கொண்டவர்.

      " என் மேல கோபம் இருந்தா, அதுக்காக வீரா வீட்டில் போய்த் தங்கிடுவியா பானுமா. உன்னையும் பிள்ளைகளையும் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா" என்றார். அவர் மார்பில் கண்ணீர் உகுத்தவர், " தப்பு தான். என்னை மன்னிச்சுக்குங்க" என்றார் பானு.

         இவை இருவருமே இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு பேசாமல் விட்ட வார்த்தைகள். அவர் அழுதது பொறுக்க மாட்டாமல், "சரி விடு, அது தான் வந்துட்டியே" என்றவர். மனைவியை ஷோபாவில் அமரவைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவ்வளவும் அன்றைய நினைவில் விட்டதிலிருந்து தொடர்ந்தார். ஆனால் பத்து நிமிடத்தில் " மேனுமா , ஏதோ மனசுக்குக் கஷ்டமா இருக்கே. எதாவது பிரச்சனையா" என்றார். பானு முதலில் முழித்தவர் மேனகாவின் பேச்சை நினைவில் கொண்டு வந்து சமாளித்தார்.

   சந்திராவின் பேச்சில் அவரது அறுபது வயது வாழ்வும் முன்னும் பின்னுமாக வந்தது. மேனகா மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு, தானும் சந்திராவின் அறைக்கு வந்தார்.

         " பானு, நான் மேனுவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு ஒரு மகள் இருக்கா, உனக்குத் தெரியாதில்லை. அதுக்காக மேனகாவை கோவிச்சுக்காத. நான் தான் அவளை மோசம் பண்ணிட்டேன்" எனத் தலை குனிந்தார். பானுவுக்கு இந்த ஞாபகமறதியிலும் இதனை மறக்காமல் வைத்து வருந்துகிறார் எனில் தன்னை எவ்வளவு த நேசித்திருப்பார் என்பது புரிந்தது. அவர் இருந்த திரைத்துறையாகட்டும் பிறகு வந்த அரசியலாகட்டும் வழி மாறி நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள். பானு உடனிருக்கும் போது மட்டுமில்லாமல் அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்தே சந்திரா மேனகாவை மணமுடித்தார். அதன் பிறகு பிள்ளைகளைப் பார்க்க வரும் போதே தன்னிலை விளக்கம் ஓரிரு வார்த்தைகளில் தந்துவிட்டார். ஆனாலும் இத்தனை வருடம் கழித்து அவருடைய சுயவிளக்கம் பானுவுக்குச் சங்கடமாகத் தான் இருந்தது. அதுவும் மேனகாவை வைத்துக் கொண்டே சொன்னார்.

      " ராம்ஜி, அக்காவுக்கு எல்லாமே தெரியும். நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க" என்ற மேனகா. " அக்கா, உங்களுக்கு ராம்ஜி மேல கோபம் இல்லைல" எனக் கேட்டார். கணவர் மூத்த தாரமானாலும் அவர் முன் வருந்தி நிற்பது பிடிக்கவில்லை.

     " இல்லை இல்லை. நல்லா சுப்பிரமணியர் மாதிரி வள்ளி தெய்வானையோட ஜோடியா இருந்துக்கட்டும் உன் ராம்ஜி, எனக்கு எதுக்குக் கோபம் வரப்போகுது " என்றார் பானுமதி. மேனகா முழித்தார். சந்திரா சிரித்து விட்டார்.

      " பானுமதி, உன் வாய் முகூர்த்தம் பழிச்சிடுச்சு. நீ சொல்லும் போதே நான் என்ன சொன்னேன். அஷ்ட திக்கு பாலர் ததாஸ்து சொல்லும். இரண்டு பொண்டாட்டி சொல்லாதேன்னு சொன்னேன்ல " எனச் சிரித்தார். கண்களில் கேலியும், குசும்பும் போட்டிப் போட பழைய சந்திராவாகத் தெரிந்தார்.

      " போதும், போதும், நான் சொன்னதை எல்லாம் கேட்டுட்டிங்க. அதனால தான் இதையும் கேட்டிருக்கீங்க. நான் வீட்டுக்கு போறேன். நீங்க மேனகாவோடையே இருங்க" எனச் சண்டைக் கட்டினார் பானுமதி. மேனகா செய்வதறியாமல் முழித்தார்.

     " சரி, சரி நான் சிரிக்கலை  ,நீ கோவிக்காத. மறுபடியும் அரசியல் வேணாம், சினிமா வேணாம்னு ஆரம்பிச்சுடுவ. அதெல்லாம் இல்லாமல் சந்திராவே இல்லைமா. பசங்களுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது. நான் பார்த்துக்குவேன். எஸ்ஆர்சி இருக்கும் போது யாராவது அவன் பசங்களை நெருங்க முடியுமா. தேவையில்லாத பயம். மேனு மது எங்க. கல்யாணம் கட்டிக்கிட்டா நல்லா பொழுது போகும்னு சொன்னேன். இப்ப வந்து பார்க்கச் சொல்லு அவ கிட்ட சொல்லனும்" என்றார். 

      பெண்கள் இருவருக்குமே அதிர்ச்சி தான், தாங்க முடியாத துக்கமும் கூட. சிங்கம் உலாவும் காட்டில் அதற்குப் பயந்தே மற்றவை உலாவும். அது ஊனப்பட்டு இருந்தால் சிறு நரிகளும் அரசாலும். அது போலத் தான் எஸ்.ஆர். சந்திரா நினைவோடு இருந்தவரை அடக்கி வாசித்த சிவராஜ் நஞ்சப்பா சிறுநரி போல் ஆட ஆரம்பித்து உள்ளான்.

        இவ்வளவு நம்பிக்கையோடு தன்னால் மக்களைக் காக்க முடியும் என ஆணித்தரமாகச் சொல்லும் கணவனைத் தான் பெண்கள் இருவரும் ஆச்சரியமாகவும், அவருக்கு ஞாபகமறதி வந்த தங்களது துர்ப்பாக்கியத்தையும், மகளை இழந்து நிற்கும் திக்கற்ற நிலையையும் எண்ணிக் கலங்கினர்.

       அவருக்கு எந்த விசயம் நினைவடுக்கில் இருக்கும், இருக்காது எனப் பகுத்தறியாதபடி இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் வாலிப பருவத்திலிருந்து அவர் மனதில் பதிந்த ஹாசியங்கள். அதனால் அவை அவரது மனதில் பதிந்தே இருந்தது. அவரை ஆழமாகப் பாதித்த விசயங்கள் மட்டுமே தற்போதைய நினைவடுக்கிலிருந்தது.

     " அது தான் மது அமெரிக்கால இருக்காளே, சொல்ல மறந்துட்டேன் பாருங்க. உங்க பசங்க இரண்டு பேரையும் அக்கா கூட்டிட்டு வந்திருக்காங்க. அனுப்பி வைக்கவா" எனக் கேட்டார் மேனகா.

      " ப்ரதி, அதி அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு தான் வரனுமா என்ன. வரச் சொல்லு" என்றார். " நான் வீட்டுக்கு போறேன். உங்க கூடப் பேச்சுத் துணைக்குப் பானு அக்கா இருப்பாங்க. அவங்களுக்கு இங்க எதுவும் தெரியாது. நீங்க அவங்களுக்கு வேணுங்கிறதை பார்த்துக்குங்க" எனச் சந்திராவிடம் பானுவின் பொறுப்பை ஒப்படைத்தார் மேனகா. பானுவில் பார்வையில் ஆச்சரியம் இருந்தது.

        " சரிமா உன் உத்தரவு" என்றார். பானுவை அழைத்துச் செவிலியருக்கு அறிமுகம் செய்து வைத்தார். " அக்கா, கட்சிக்காரங்க வந்தாலும், அவங்களைப் பார்க்க விடாதீங்க. கொஞ்சம் கடுமையாவே இருங்க" என வழிமுறைகளைச் சொன்னார் மேனகா.

     அவர் கிளம்பியவரை அழைத்த பானுமதி, " மேனகா, மது இல்லைனு நினைக்காத. இந்தர்கிட்ட சொன்ன மாதிரி அவ அமெரிக்கால இருக்கானு நினைச்சுக்கோ. அதே மாதிரி உனக்கு நானும் பசங்களும் இருக்கோம். நீ தனி ஆள் இல்லை" என அணைத்துக் கொண்டார். கண்ணீர் அருவி போல் கொட்டியது. மேனகா கிளம்பி விட்டார்.

பானு, செவிலியரிடம் கேட்டு விட்டுக் கணவரிடம் வந்தார். சந்திரா கதவைச் சாத்தி வந்த மனைவியிடம், "உனக்கு என் மேலக் கோபமில்லையே." என்பதையே கேட்டுக் கொண்டிருந்தார்.

     " இல்லை, இங்க வாங்க" என ஷோபாவில் அமர்ந்து, தனது மடியில் அவரைப் படுக்க வைத்துக் கொண்டார். அவரது மடியில் படுத்திருந்தாலும் , " உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்னு மனசில் ஒரே வலி பானுமா" என்றார்.

     " அதெல்லாம் நினைக்காதீங்க. " என்றவரை. " பானுமா, ஒரு பாட்டு பாடுவியே அதைப் பாடேன்" என்றார். " அதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களா" என்றார் பானு வாய் தவறி.

      " ஏன் எனக்கு மறதி வருமா இல்லையே. இரு பாடுறேன்" என யோசிக்க ஆரம்பித்து நெற்றியைப் பிடிக்கவும், பானு அவரது நெற்றியைப் பிடித்துக் கொண்டே பழைய தமிழ்ப் பாடலை பாடினார். சந்திரா நித்திரையில் சென்றார்.

           ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலின் நடுவில் அமைந்த ஜோரா தீவு. மாலை நேரம் சூரியன் அஸ்தமிக்கும் காட்சி, அவ்வளவு அருகில் முழுச் சூரிய பழம் கடலின் வாய்க்குள் மூழ்கிக் கொண்டிருந்தது. தீவின் மலைக் கூட்டத்திலிருந்த உயர்ந்த மரத்தின் மீதிருந்த மர வீட்டின் மேலிருந்து, போனில் பேசிக் கொண்டிருந்தான் ஆறடி அரக்கன். ஆம் நாமும் ஆறடி அரக்கன் என்றே ஹாசினியின் மொழியில் சொல்வோம். அவன் தான், தான் யாரெனச் சொல்லவில்லையே. போனில் பேசி முடித்து ஒரு பெரும் மூச்சுடன் அதை அணைத்தான். அந்தச் சூரியனின் அழகை ரசிக்கும் மனநிலை எல்லாம் அவனுக்கு இல்லை. ஒரு பொண்ணை அதுவும் அரசியல் வாதியை , படுகொலை செய்யப்பட்டதாக ஜோடித்துக் கடத்தி வருவது சாதாரணமான விசயமா என்ன.

         அவன் நின்று இருந்தது, ஒரு உயரமான மரத்தின் அகன்ற கிளைகள் கொண்ட இடம் அதில் ஆறுக்கு நான்கு என மரக்கட்டைகளால் உருவான ஒரு குடிலும் அதில் ஒரு மொபைல் ட்ரேன்ஸ்மிட்டர், ரிசீவரும் இருந்தது. மற்ற இடத்தில் சிக்னல் கிடைக்காது. எனவே இங்கே இது போல் அமைத்து வைத்திருந்தனர். அதிலிருந்து மேற்கில் மறையும் சூரியனைப் பார்த்தவன், " இந்தச் சூரியன் மறைந்தால் தான் அந்தச் சந்திரனுக்கே உதயம். ஆனால் சந்திராவும் அமாவாசை தினம் போல் மறைந்து அல்லவா உள்ளது" எனச் சொல்லிக் கொண்டான்.

        கீழிருந்து பவன் பாஸ் எனப் பதறிக் கொண்டு அழைக்கவும், " ஐயோ முழிச்சிட்டாளா" என நினைத்தவன் அவசரமாக இறங்கி வந்தான். வரும் போது சற்று முன்பிருந்த வருத்தமான மனநிலையைக் கோபம் எனும் முகமூடியில் மறைத்து இறங்கி வந்தான்.

      " மேடம் முழிச்சிட்டாங்க. சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம். போங்க " என்றான். " இதெல்லாம் சமாளிக்கத் தெரியலைனா, நீ என்னடா கமேண்டோ" எனச் சத்தமாக வசைபாடிக் கொண்டே வந்தான்.

         அவன் இருந்த இடத்திலிருந்து இறங்கி மலையின் ஒற்றையடிப் பாதை வழியாகக் கீழே இறங்கியவன் அதிலிருந்த சமவெளியில் அரைக் கிலோ மீட்டர் நடந்தான் , நடுவே ஓடிய ஓடையை ஆழம் குறைவாகக் கற்கள் நிறைந்த இடத்தில் கடந்தவன் மற்றொரு மேட்டைத் தாண்டி மற்றொரு சமவெளிக்கு வந்தான். அங்குச் சற்றே மலைப் பாங்கான இடத்தில் இரண்டு காட்டேஜ் இருந்தது. அதில் ஒன்றில் தான் ஹாசினி சந்திரா தர்ணா செய்து கொண்டிருந்தாள். தீவை பிறகு சுற்றிப் பார்ப்போம். இப்போது ஹாசினி சந்திராவைப் பார்ப்போம்.

      ஆறடி அரக்கன் முகத்தில் கோபம் கொப்பளிக்க வந்தவன், ப்ரீத்தியைப் பார்த்து, " இப்ப என்ன வேணுமாம் இந்த மகாராணிக்கு" எனக் கடுமையாகக் கேட்டான். ஹாசினி அவனை முறைத்து விட்டுத் திரும்பிக் கொண்டாள்.

      " மேடம், நேத்து மதியானம் சாப்பிட்டது தான், அதுக்கப்புறம் சாப்பிடவே இல்லை. அது தான் இந்தப் பிரட்டையாவது சாப்பிட சொல்றேன்" என்றாள் ப்ரீத்தி.

       " ஸோ வாட், உங்க மேடம் திங்கலைனா ஒரு நஷ்டமும் இல்லை. எனக்குத் தான் இலாபம், மகாராணிக்குக் கொஞ்சம் திமிராவது குறையும். என்னை எதிர்த்து நிற்க சக்தி இருக்காது . நாம இருக்கிறது தீவில் நமக்கே சாப்பாடு கம்மியா தான் இருக்கு. பொருள் எல்லாம் கரையிலிருந்து தான் வரனும். உங்க மேடம் சாப்பிடலைனா , அது மிச்சம் தான் பத்திரப்படுத்தி வை. இவளைத் தூக்கிட்டே சுத்துறதுக்கே நான் சேர்த்து சாப்பிடனும்" என இரைந்தவனின் குரலில் கோபமும், தூக்கிட்டு வருவேன் எனச் சொன்ன போது இளக்காரமும் இருந்ததோ என அவளுக்குத் தோன்றியது. அவளுக்குக் கோபம் ஆங்காரமாக மாறியது.

" பவன் இடியட், சும்மா சிறுப்பிள்ளை தனமா இதுக்கெல்லாம் கூப்பிடாத. மனுசன் பத்து நாள் சாப்பிடாமல் கிடந்தாலும் செத்து எல்லாம் போக மாட்டான். " என அலட்சியமாகச் சொல்லவும்,

       " ஆமாம் மனுசங்கன்னா பத்து நாள், உன்னை மாதிரி அரக்கன் பத்து மாசமானாலும் நல்லா தான் இருப்பான். நானா , என்னைக் கடத்தச் சொன்னேன். பணத்துக்காகக் கடத்துனேன்னா சொல்லு, உனக்கு யார் எவ்வளவு தர்றேன்னு சொன்னாங்களோ அதை விடப் பத்து பங்கு தர்றேன். " என நேராகக் கடத்தியவனிடமே பேரம் பேசினாள்.

       " எவ்வளவு பணம்னாலும் அரேஞ்ச் பண்ணிடுவ. ஓ ஆமாம் , ஆட்சியைப் பிடிச்சிட்டா நீயும் உன் வருங்கால மாமனாருமா சேர்ந்து கொள்ளையடிப்பீங்களே" என்றான்.

      " ஹேய், மைண்ட் யுவர் டங்க். நான் எஸ்ஆர் சந்திரா மகள், என்னைப் பத்தி பேசறதுக்கு , ஒரு கிட்னாப்பர் உனக்கு என்ன தகுதி இருக்கு. யாரோ விட்டு ஏறியிற காசுக்காக வேலை பார்க்கிறவன் தானே நீ. " என அவளும் வார்த்தை கங்குகளைக் கொட்டினாள். அவன் தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது மற்ற இருவருக்கும் தெரிந்தது.

      ப்ரீத்தி ஹாசினியை சமாதானம் செய்ய முயன்றாள். அவளுக்கு ஒரு முறைப்பைத் தந்தவள், " கமான் டெல்மீ, உன் தேவை என்ன. எதுக்காக என்னைக் கடத்தின. எனக்குக் காரணம் தெரியனும்" எனக் கத்தினாள்.

       பவன் மெல்ல பாஸின் காதில், " பாஸ் மறுபடியும் மயக்கம் போட்டுற போறாங்க. இன்னைக்கே இரண்டு தடவை ஆகிடுச்சு " என்றான்.

     அவனை ஒரு முறை முறைத்தவன் அவளை நோக்கிச் சென்றான், மற்ற இருவருமே நடக்கப் போகும் அசம்பாவிதத்தைப் பயந்தே எதிர் நோக்கி இருந்தனர். ஆனால் அவளருகே சென்று இடைவெளி விட்டு நின்றவன், " நீ எவ்வளவு கத்தினாலும் ஒரு வார்த்தை என்கிட்ட இருந்து வாங்க முடியாது. நான் நினைக்கிறதை தான் செய்வேன். உன்னால் தடுக்கவும் முடியாது. என்னை எதிர்க்கனும்னா கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணனும். சாப்பிட்டா தான் யோசிக்க முடியும். சும்மா கத்திட்டே இருக்காத. இதோட இரண்டு தடவை மயக்கம் போட்டுட்ட. போய்ச் சேர்ந்தேன்னா. இங்கேயே பொதைச்சிட்டு போயிட்டே இருப்பேன். " என அவளை ஓர் கீழ் பார்வையும் பார்த்து விட்டு, தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

         ப்ரீத்தியும் கெஞ்சுவதை விட்டுவிட்டாள். பெண்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்ட காட்டேஜில் ஒரு படுக்கை அறையும், சமையலறையும் இருந்தது. சில சமையல் பாத்திரங்களும் இருந்தன. அதிலிருந்து இறங்கினால் பின்னால் ஒரு ஓடை ஓடியது.

          பவனுக்கு இருட்டும் முன் அருவியில் குடிக்கத் தண்ணீர் பிடித்து வரக் கட்டளை இட்டான். பாஸ் அங்கிருந்த ஜெனரேட்டர் செட்டைப் பார்த்தவன், பேட்டரி கொண்டு இரண்டு அறைகளிலும் விளக்கு எரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ப்ரீத்தி தூசியாய் கிடந்த இடங்களைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டிருந்தாள்.

        ஹாசினி சந்திராவை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. அவளது தர்ணா போராட்டம் பரிதாபமாய்த் தோற்றுக் கொண்டிருந்தது. சாப்பாட்டைக் குறித்த அவனது வார்த்தைகள் அவளை உசுப்பேற்றியது. சாப்பிடாவிட்டால் இவனை எதிர்க்கத் தெம்பு இருக்காது என்பதும் புரிந்தது. அவனுக்குப் பலன் தரும் எதையும் தான் செய்யக் கூடாது. என யோசித்தவளுக்கு அப்பா அம்மாவைப் பற்றிய யோசனை போகவும் சாப்பிடவும் மனம் இல்லை. பலவித யோசனைகளோடு இருந்தவளிடம் ப்ரீத்தி தனித்துப் பேசினாள்.

       " மேம் நல்லா யோசிச்சு பாருங்க. நீங்களோ, நானோ, பவனோ ஏன் அந்தச் சாரே கூட இப்ப நினைச்சாலும் எங்கையும் போக முடியாது. அதுக்காக எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க. சாரையும், பெரிய மேடத்தையும் திரும்பிப் போய்ப் பார்க்கவாவது சத்து வேணும். அதனால சாப்பிடுங்க" என நயமாகச் சொல்லிச் சாப்பிட வைத்தாள்.

      உணவு உள்ளே போகவும் தான் ஹாசினி க்கு யோசிக்கவே முடிந்தது. இந்த அரக்கனிடம் தான் மட்டும் தான் கோபப்பட்டு, கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து மயக்கம் போட்டு எனச் சகல வித எதிர்ப்பையும் காட்டுகிறேன். பவனும், ப்ரீத்தியும் பயிற்சி பெற்ற கமேண்டோக்கள் எனில் இந்த அரக்கனை அடித்துப் போட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் அவர்கள் முதலாளிக்கு வேலை செய்யும் சேவகர்கள் போலே ஏன் அடி பணிந்து கிடக்க வேண்டும். இவர்களின் அவனின் ஆட்கள்.

       ஆனால் என்னை எதற்குக் கடத்த வேண்டும். பணம் கேட்டு மிரட்டல் எனில் இவ்வளவு தூரம் தூக்கி வரவேண்டிய அவசியம் என்ன. எதிர் கட்சிகளின் சதியா. சிவராஜ், யுவராஜ் எதுவும் ஆட்டம் ஆடுகிறார்களோ. ஆனால் நான் பிரச்சாரம் செய்தால் தானே அவர்களுக்கு நல்லது எனப் பலவாறு யோசித்தாள்.

         இருள் கவ்வத் தொடங்கியது. அவளிருந்த அறையில் இரண்டு கட்டில்கள் போட பட்டிருந்தது. இந்தக் காட்டேஜும் மரங்களால் தான் கட்டப்பட்டிருந்தது. இயற்கை உபாதைகளுக்குத் திறந்த வெளி தான். ப்ரீத்தி ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தில் ஹாசினியை அழைத்துச் சென்று வந்தாள்.

       திரும்பி வரும் போதே, " ஸோ நீயும் அவனோட கையாள். என்னைக் கிட்னாப் பண்ணதான் எனக்குப் பாடி கார்ட்ஸா இருந்தீங்க. எதுக்காக . என்ன காரணம் சொல்லு" எனக் கடுமையாக வினவினாள் ஹாசினி.

      " மேம், உங்களோட சேர்த்துத் தான் என்னையும்" என ஆரம்பித்தவளை, " போதும் உன் பொய். என் அம்மா உன்னை இன்னொரு பொண்ணா பார்த்தாங்க. அந்தப் பொண்ணை நிக்க வச்சிட்டே இருக்காத. அவளும் ஒரு பொண்ணு தானே, அவளுக்கும் உடல் கஷ்டம் எல்லாம் இருக்கும். முடிஞ்ச வரை ஓய்வு கொடு ன்னு சொல்லுவாங்க. அவ்வளவு பாசமானவங்க கையால் சாப்பிட்டு அவங்களுக்கே துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு.

        இப்ப என்ன செய்யப் போற, என் பாடியை கார்ட் பண்ணி அவன் கிட்டக் கொடுக்கப் போறியா. இதுக்கு என்ன பேர் தெரியுமில்லை" எனத் தீக்கங்குகளாய் வார்த்தைகளைக் கொட்டினாள் ஹாசினி சந்திரா. ப்ரீத்தி, " மேம், மேம் என மறுத்தவள், கடைசியில் கேட்ட கேள்வியில் உடைந்து போனாள். கண்ணீர் பளபளப்போடு வந்தவளையும் முகத்தில் இரத்தச் சிவப்பேறி காளி மாதாவாகக் கோபத்தோடு வந்தவளையும் ஆண்கள் இருவரும் பார்த்தனர்.

       ஹாசினி கோபமாகக் காட்டேஜுக்குள் சென்று விட, ப்ரீத்தியை அழைத்துப் பேசினான் அவளது பாஸ். அவளுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி, பவனிடம் விட்டு விட்டு ஹாசினியை நோக்கிச் சென்றான்.


No comments:

Post a Comment