சிந்தா-ஜீவா நதியவள்-3
முற்பகல் வேலையில் சிந்தாவின் தகப்பன் அய்யனார், பேரன் சத்திய மூர்த்தியை அழைத்துக் கொண்டு, ஊருக்கு நடுவிலிருக்கும் பெருமாயி டிபன் கடைக்கு வந்தார் . அங்குக் காலையில் பணியாரம், போண்டா, இட்லி, ஆப்பம் எனச் சுட ஆரம்பிக்கும் அந்த ஐம்பதைக் கடந்த பெண்மணி, மதியத்துக்குச் சாப்பாடு பொட்டலத்தோடு ஆமவடை, ஊறுகாய் வைத்துக் கட்டித் தரும். மாலை நேரம் வடை, பஜ்ஜி என எந்த நேரமானாலும் சாப்பிட ஏதாவது இருக்கும். அந்த ஊர் பொடிசுகளிலிருந்து, பெரிசுகள் வரை ஆண், பெண் அத்தனையும் எதையாவது வாங்கி வாயில் அதக்கிக் கொண்டு தான் செல்வார்கள்.
" ஏய் தாத்தோய், எனக்கு எல்லாத்திலையும் இரவ்வண்டு வாங்கிக் கொடு. இங்கனையே உட்கார்ந்து திண்டுட்டு போயிடுறேன். அம்மா பார்த்துச்சுனா வையும்" என்றான் சாமர்த்திய காரன் மகன் சத்தியமூர்த்தி.
" ஏலேய், நீ மதியத்துக்கு ஒழுங்கா சோறு சாப்பிடலையின்னாலே உங்க ஆத்தா கண்டுபிடிச்சிடும். இதில எங்கூடத் தானே ரகசியமா கூட்டணி போடுறவன்" எனப் பேரனைத் திட்டினாலும், அவன் கேட்டபடியே வாங்கிக் கொடுத்தார் பாசக்காரத் தாத்தா.
" ஏன் அண்ணேன் , பேரனுக்கு வாங்கிக் கொடுக்காம யாருக்குச் சேர்த்து வைக்கப் போற' எனக் கை தன்னைப் போல் வேலை செய்து கொண்டே அய்யனாரை வினவினார் பெருமாயி.
" அட நீ ஒருத்தி, உனக்கே தெரியும், நான் புள்ளைகளுக்கே செய்யவே கணக்கு பார்க்க மாட்டேன், பேரப் புள்ளைகளுக்கா திங்கிறதுக்கு வாங்கித் தர மாட்டேன்னு சொல்லுவேன். இவன் பொல்லாத வாலுப் பய, என் கூட இங்க வந்து வாங்கித் திங்கிறானா, மாமன் கூட வடக்காலப் போய்த் தின்னுட்டு வருவான். அவுங்க அப்பன் கூடப் போய் ரோட்டுக் கடையில பாக்கெட்ல அடைச்ச சமாச்சாரமா வாங்கித் தின்பான். கடைசியில் சோறு திங்க மாட்டேன்கிறான்னு, இவுங்க ஆத்தா எங்க எல்லாரையும் சேர்த்து பேசுவா" எனத் தங்கள் வீட்டுப் பஞ்சாயத்தைக் கடையில் பேசிக் கொண்டிருந்தார் அய்யனார்.
" எல்லாப் புள்ளைகளும் அப்படித்தான்னே இருக்குது. இந்தா நான் இத்தனை சுட்டு அடுக்குறேன், என் பேரன் நீ சொன்ன மாதிரி பாக்கெட்ல உள்ளது என்னதோ கிருக்கோ, முறுக்கோ அதை வாங்கித் தின்றான். " எனத் தன் பங்குக்கு அங்கலாய்த்தார் பெருமாயி
"அப்பத்தா கிழவி, அதுக்குப் பேரு குர்குரே " என்றான் சத்தியமூர்த்தி. “அப்படியா ராசா, நீ சொன்ன சரி தான் “ என்ற பெருமாயிக்கு, இவன் ஆத்தாளைக் கட்டியிருந்தாலும், என் மகன் உறுப்புட்டு இருப்பான், எங்க திரியிறான்னே தெரியலை, அவனால பொம்பளை புள்ளையுமில்லை வாழாவெட்டியா நிக்குது ‘ என மனதில் நொந்து கொண்டார்.
ஊருக்கே தெரியும், சண்டியராகத் திரிந்த சிங்காரவேலு, இப்போது குடும்பஸ்தனாக மதிப்போடு இருப்பது, சிந்தாவினால் மட்டுமே சாத்தியமானது என்பது தெரியும். அது மட்டுமின்றிப் பெருமாயி மகன் சோமு சிந்தாவிடம் வம்பு செய்ததும் தெரியும், ஆனால் நாள் போக்கில் சிந்தா பெருமயியிடமோ , அவரது மகள் ராசாத்தியிடமோ அதனைக் காட்டிக்கொள்ள மாட்டாள். மாறாக வாழாவெட்டியாய் நிற்கும் ராசாத்திக்கு மகளிர் குழு லோன் வாங்குவது, மற்ற அரசின் நலத்திட்டம் தொடர்பான வேண்டிய உதவிகளைச் செய்தாள்.
" பார்த்தியில்லை, முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள நம்மளை திருத்துங்க. காலங் கெட்டுக் கிடக்கு. " என்றார் அய்யனார்.
“ஆனால் விவரமா இருக்குதுங்க, நம்மளை மாதிரி வெள்ளந்தியா, வெளுத்ததெல்லாம் பாலுங்கிற சங்கதி இதுக்கங்க கிட்ட கிடையாது. அதுவும் நல்லது தான்.” எனப் பெருமாயி இந்தத் தலைமுறையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, ஆண்டிச்சி கிழவி , பெரிய வீட்டு விவரம் சேகரித்து , நாலு இடம் பரப்பி அங்கு வந்து சேர்ந்தது.
அய்யனார், பெருமாயிடமும், “ ஆறு மாசபுள்ளையோட சின்னவரு பொண்டாட்டியைத் தனியா விட்டுபுட்டு மதுரையிலிருந்து வந்திருக்காரு, என்னெண்டு தெரியுமா.“ என வினையமாகக் கேள்வி கேட்டது.
“ நீ தான் நம்மூரு ரேடியா பொட்டி, உனக்குத் தெரியாமலா எங்களுக்குத் தெரிய போகுது, அதையும் சொல்லிட்டு போ, இல்லையினா உனக்கு மண்டைக்குள்ள கொடையுமே” என்றார் பெருமாயி. அய்யனார் வேடிக்கை மட்டும் பார்த்தார், அத்தை முறையாகும் இந்தக் கிழவியிடம் எப்போது தள்ளியே இருந்து கொள்வார்.
“மகளை இங்க விட்டுட்டு போயி , பெண்சாதிக்கு ஏதோ வைத்தியம் பார்க்க போறாங்களாம், என்னாவா இருக்கும்” என அய்யனாரையும் ஆராய்ச்சி பார்வையோடு பார்த்தார் ஆண்டிச்சி.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, பெரிய வீட்டில் தற்போது பண்ணையம் பார்க்கும் கருப்பன் வந்தான். அய்யனாரிடம் , " ஏய் சித்தப்பு உன்னைப் பெரிய வீட்டு ஐயா கூட்டிட்டு வரச் சொன்னார்" என்றான். அதில் சற்றே குழம்பிய அய்யனார், "அவுகளுக்கும், நமக்கும் தான் ஒன்னும் இல்லையே, எதுக்குக் கூப்புடுறாங்க " எனக் கருப்பனிடமே கேட்டார்.
ஆண்டிச்சி காதை தீட்டிக் கொண்டார்,.“கிழவி, சீக்கிரம் வந்தா தான் சோறுன்னு, உன் மருமகள் சொல்ல சொல்லுச்சு, இல்லையினா பானையைக் கவுத்திடுமாம்” என ஒரு இளவட்டம் ஆண்டிச்சிக்குச் சொல்லிச் செல்ல, பெரு மாயியிடம்,இரண்டு வடையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டிய கிழவி, சாயந்திரம் ஒரு நடை சிந்தா வீட்டுக்குப் படையெடுக்கும் திட்டத்தை என மனதில் வகுத்துக் கொண்டார்
"அதெல்லாம் நமக்குத் தெரியாதப்பு, சொல்லச் சொன்னாக, சொல்லிப்புட்டேன். " என்றவன், "சோமன் எங்குட்டு இருக்காப்ல" எனப் பெருமாயியிடம் அவரது மகனைப் பற்றி விசாரித்தான் .
" ஏன் அவனையும் கூட்டிட்டு வரச் சொன்னாரா உங்க ஐயா. எங்களைக் கண்டா தான் ஆகாதே. " எனப் பேச்சில் அளந்தார் பெருமாயி.
"அந்தக் கதை எல்லாம் நமக்குத் தெரியாது. ரொம்ப வருசமா அவனை ஊருக்குள்ள காணமேண்டு தான் கேட்டேன்" எனப் பெருமாயியின் பதிலுக்கும் காத்திருக்காமல் நடையைக் கட்டினான் கருப்பன். அய்யனாருக்கு மனதில் பலவாறாக யோசனை ஓடியது. பேரனைக் கொண்டு போய் வீட்டில் விட்டவர், கூப்பிட்ட மரியாதைக்குப் போக வேண்டும் எனப் பெரிய வீட்டுக்கு விரைந்தார்.
அதே நேரம், தன் வேலைகளை முடித்துக் கொண்ட சிந்தா, மகளைத் தொட்டிலில் போட்டு விட்டுத் தங்கை முத்துவிடம் சொல்லி விட்டு, தன் சினேகிதி வள்ளியின் வீட்டுக்குச் சென்றாள். வேலு ஒரு சவாரிக்கு மானாமதுரை வரை சென்றிருந்தான்.
சிந்தாவின் வீட்டுக்கும், பெரிய வீட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு குறுக்குத் தெருவில் வேளாளர் வீடுகள் வரிசையாக இருந்தன. அங்கு ஐந்தாறு குடும்பங்கள் அப்பா, அம்மா, மகன் எனக் குடும்பங்கள் வழிவழியாக மண்பாண்டம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மானாமதுரை மண்ணுக்கும், மண்பாண்டத்துக்கும் நல்ல பெயர் இருந்தது. அதனால் ஒவ்வொரு ஊருக்கும், சில சமயம் நாடு தாண்டியும் வியாபாரம் செய்தனர்.
அந்தக் குடும்பத்தில் மானாமதுரையில் சிந்தாவோடு படித்த பள்ளித் தோழி வள்ளியைத் திருமணம் முடித்துக் கொடுத்து உள்ளார்கள். சிந்தா சிறுவயதிலேயே திருமணம் முடித்திருக்க வள்ளியை பன்னிரண்டு வரை படிக்க வைத்து இரண்டு வருடம் கழித்தே மணம் முடித்தனர். திருமணம் ஆகி நான்கு வருடம் ஆனது நடுவில் இரண்டு பிள்ளைகள் அவளுக்குத் தக்காமல் போனது. அதில் உடலும் மனமும் சோர்ந்து இருக்கும் வள்ளிக்குச் சிந்தா தான் ஆறுதல். சிந்தாவின் பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்வாள் வள்ளி. வள்ளியைத் தேடி வந்தாள் சிந்தா.
மண்பாண்டம் செய்வதற்காகக் கல் தூசு துரும்பு நீக்கி சலித்த நைசான களிமண்ணின் பெரும் பகுதியோடு, செம்மண், சிறிதளவு ஆற்று மணல் எனப் பக்குவமாக, கலந்து தண்ணீர் சேர்த்து குழைத்து வைப்பார்கள். மண்பாண்டம் செய்ய ஏதுவாகப் பிசைந்து வைத்த மண்ணை, ஒன்று சேர்த்து காலால் மிதித்து மென்மையாக்குவார்கள். அடுத்த அடுத்த நாட்களுக்காக முதலிலேயே மண்ணை ஒன்று சேர்த்து நெகிழ வைப்பார்கள். அப்படி மண்ணைக் காலால் குழைத்துக் கொண்டே சிந்தா வருவதைப் பார்த்து விட்டு
" இன்னைக்கு என்னமோ தெற்குத் தெருக்காரி காத்து நம்ம பக்கம் அடிச்சிருக்கு. மச்சான் சட்டி பானை பச்சையா இருக்கிறதெல்லாம் பத்திரப்படுத்தனும், மழை வரப் போகுது " என்றாள் வள்ளி தன் கணவன் கந்தனிடம்.
அவன் சக்கரத்தில் குழைத்து வைத்திருந்த மண்ணிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து வைத்து, ஒரு கையில் குச்சி கொண்டு சக்கரத்தைச் சுத்தி விட்டு அதன் ஓட்டத்தில் மண்ணில் இரண்டு கையையும் லாவகமாகக் கொடுத்துக் குழம்பு சட்டி செய்து கொண்டிருந்தவன், எட்டிப் பார்த்து விட்டு, " வாத்தா சிந்தா. உன்னையத்தான் வக்கணை பேசுறாலாக்கும்" எனத் தன் தொழிலில் கவனத்தைச் செலுத்திக் கொண்டே வரவேற்றான் வள்ளியின் கணவன் கந்தன்.
" ஆமாம் அண்ணேன். குழம்பு சட்டி தான் செய்யிறீங்களா. எனக்குக் கூட மீன்குழம்பு வைக்க ஒன்னு வேணும்" என்றபடி, இருவருக்கும் நடுவிலிருந்த மண் மேட்டில் அமர்ந்தாள்.
" ஏற்கனவே செஞ்சு வச்சது இருக்கு. போகும் போது எடுத்துட்டு போத்தா " என்றான் கந்தன். வள்ளி, " ஏண்டி சின்னக்குட்டியையாவது தூக்கிட்டு வந்திருக்கலாம்ல. நீ மட்டும் கையை வீசிக்கிட்டு வர்றவ " என்ற படி மண்ணிலிருந்து இறங்கினாள் வள்ளி.
" அது இப்பத் தான் தூங்குச்சு. முத்துகிட்ட விட்டுட்டு வந்தேன். நேத்து அம்மா வீட்டுக்கு, திருவிழா பார்க்க போனியே வந்திட்டியா இல்லையான்னு யோசிச்சுகிட்டே வந்தேன்" என்றவள், இடுப்பிலிருந்து ஒரு பாலீதின் பொட்டலத்தை எடுத்து நீட்டினாள்.
மண்ணை மிதிப்பதை முடித்து விட்டு இறங்கி காலை கழுவி வந்த வள்ளி முந்தானையில் துடைத்துக் கொண்டே, " நேத்து செத்த நேரம் இருந்துட்டு வந்துட்டோம். அத்தையும், மாமனும் கடையைப் போட்டு அங்கியே தங்கிட்டாங்க. எங்களுக்கு இன்னொரு ஆர்டர் இருக்கு. அது தான் நேரமே வந்துட்டோம்" எனப் பேசியபடியே, சிந்தா கொடுத்ததைப் பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்த மயில் டிசைன் கல் வைத்த கிளிப்பைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.
" சிந்தா நல்லா இருக்குடி, என்னத்தைச் சொல்லு உன் செலக்சன் நல்லா இருக்கும்டி" என மற்றவைகளையும் பார்த்தாள். " ஏண்டி உனக்குன்னு எதாவது வாங்குனியா, இல்லை சின்னவளுக்கும் எனக்கும் மட்டும் வாங்குனியா " எனக் கேள்வி எழுப்பினாள்.
" மூணு பேருக்கும் தான் எடுத்தோம். இப்போல்லாம் முத்துவே, வள்ளியக்காவுக்கு இது நல்லா இருக்கும்னு எடுத்துடுறா" எனப் பேசியபடியே வீட்டுக்குள் சென்றனர். வள்ளி மோர் கலயத்திலிருந்து இரண்டு டம்ளர்களில் சாய்த்தவள் கருவேப்பிலை, சீரகத்துடன் மணக்க மணக்க சினேகிதியிடம் கொடுத்து விட்டு , தான் ஒன்றை எடுத்துக் கொண்டாள். " அண்ணனுக்கு" எனச் சிந்தா, கந்தனைப் பார்த்துக் கேட்கவும்.
" அவரு குடிச்சிட்டாரு. குடிச்சிட்டு தான் சட்டி செய்ய உட்கார்ந்தார். அடிக்கிற வெயிலுக்கு, ஆளையே உருக்குதே. அப்பப்ப எதாவது குடுத்துடுவேன்" என்ற வள்ளி.
" சிந்தா, இந்தக் கல்லு தோடு வேலு அண்ணன் வாங்கிட்டு வந்துச்சே, அதுதானே. உன் முகத்துக்கு அம்சமா இருக்குடி" என வள்ளி பாராட்டவும், சிந்தாவுக்குச் சிறு வெட்கமும் வந்தது.
" ஆமாம், அவுக அம்மா சின்ன வயசில் இப்படிப் போட்டு இருப்பாங்கலாம். அந்த நினைப்புக்கு வாங்கியாந்து குடுத்துச்சு" என்றாள் சிந்தா.
" பாரப்பா, ஆத்தா இல்லாமல் வளர்ந்ததில தான், அண்ணன் முரடனா போச்சுன்னு வைவியே, அவுக ஆத்தாளையே உன்னுல பார்க்குது பாரு" என உசத்தி பேசினாள் வள்ளி.
" ஆமாம் பாவத்தில், அதுவும் எங்களையாட்டம் தாயில்லாத புள்ளைத் தான். எங்கப்பா மறுகல்யாணம் பண்ணிகிடலை. அவுங்க அப்பா பண்ணிக்கிட்டாரு" என்றாள் சிந்தா.
" உங்கப்பாவுக்குப் புள்ளைகளை வளர்க்க நீ கிடைச்ச. தம்பி தங்கச்சிக்கு அம்மாவா மாறிட்ட. மறு கல்யாணம் செஞ்சுகலை. பயலுங்க மட்டும் இருக்கிற வீடுன்னா சிரமம் தான்" என்றாள் வள்ளி.
" அது மட்டும் இல்லடி, அவுங்க சின்னாத்தா அதைப் பள்ளிக் கூடத்துக்குப் போற வயசுலையே வேலைக்கு அனுப்பிவிடுமாம். லேத் வேலைக்கெல்லாம் போயிருக்கு. கை எல்லாம் காய்ச்சு போய் அவதிபடுமாம். காசு கொண்டாந்தா தான் இடி சோறாவது கிடைக்கும். இல்லைனா அதுவும் இல்லையாம். அதிலையே வெளிய சுத்தியிருக்கு. அந்த மட்டும் எந்தச் சாமி புண்ணியமோ , தப்புத் தண்டாவுக்குப் போகலை" எனச் சிந்தா கணவனுக்காக வருந்தினாள்.
" எல்லாம், எங்க சிந்தா செஞ்ச புண்ணியம் தான். அவுக வேலனை கொண்டாந்து சேர்த்திருக்கு" என வள்ளியும் சிந்தா, வேலு கல்யாணத்தை எண்ணி பெருமையாகச் சொன்னாள். சிந்தாவுக்கும் பெருமை தான் இருந்தாலும் நொடித்துக் கொண்டாள்.
" உங்கண்ணனுக்கு வரம் கொடுக்கிறதுக்கு, அந்தச் சாமி என்னைப் போட்டு பார்த்துருச்சு போடி." என சிரித்தாள் சிந்தா.
" அடியே, எதுக்கு இப்படிச் சலிச்சுக்கிறவ, நீ நடந்தின்னா உன் கால் நோகுமுன்னு ,எங்கண்ணேன் உன்னைத் தாங்கிட்டு திரியுது" என்றாள் வள்ளி.
" வண்டி தானே சொமக்குது, ஏதோ உங்க அண்ணன் சொமக்குற மாதிரி பெருமை பீத்திக்கிற" எனச் சிந்தா சொல்லவும்,
" அடி இவளே, உன்னைய தூக்கி வேற சொமக்கனுமாக்கும். வெள்ளந்தியா ஒரு மனுசன் மாட்டிறக் கூடாதே, அவுக தலையில் மிளகாய் அரைச்சுடுவிங்கடி " எனத் திட்டினாள் வள்ளி.
" நான் ஒருத்தி தானே, எனக்குத் தெரியாமல் வேற எவ" என வேண்டுமென்றே கேட்டாள் சிந்தா. " உன்னைக் கட்டின பாவத்துக்கு உன்னைச் சொமக்குறது பத்தாதுன்னு, உன் தங்கச்சிக்குமில்ல பாடிகார்ட்டு வேலை பார்க்குது. வேலு அண்ணனுக்குப் பயத்துகிட்டு தான், நம்ம ஊரு இளவட்டப் பயிலுக வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்க" என்றாள் வள்ளி.
" அது என்னமோ நெசந்தாண்டி. எங்குப்பாவுக்கு ரோசத்தைக் காட்டுற அளவு கோபத்தைக் காட்டத் தெரியாது. அதனால் தான் நான் அவதிப் பட்டேன். ஆனால் முத்துவுக்கு அந்த நிலைமை இல்லை. மச்சான் இருக்கிறதால தகிரியமா போயிட்டு வர்றா. எனக்கும் கொஞ்சம் நிம்மதி" என ஒத்துக் கொண்டாள் சிந்தாமணி.
திருமணத்துக்கு முன் அவள் பட்ட பாடு யாருக்கும் வரக் கூடாது என நினைத்தாள் சிந்தா. அப்படி ஒரு இக்கட்டான நிலையில் தன் மானத்தைக் காப்பாற்றிய சிவநேசனின் நினைப்பும் வந்தது. காலையில் கிழவி சொன்னதும், நேற்றைய இரவில் குழந்தையோடு நின்றதும் மனதில் நிழலாட வள்ளியிடம் விவரம் கேட்டாள்.
"அது தானே பார்த்தேன் , கத்தரிக்கா சந்தைக்கு வந்திடிச்சில்ல , இதுக்குத் தான் வந்தியா " எனச் சிந்தாவிடம் பேச்சில் கிடுக்கு பிடி போட்டாள் வள்ளி.
" ஏண்டி உன்னைப் பார்க்க வரக் கூடாதா" எனக் கோபித்தவளைப் பார்த்து அழகு காட்டிய வள்ளி,
" அடியே, சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இம்புட்டுத் தொலைவு மெனக்கெட்டு நடந்து வந்திருக்கேன்னா. விசயம் அறியத் தானே. உனக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லை. உன் புருஷன் புள்ளைனு பொழப்பை பாரு. " எனத் திட்டினாள் வள்ளி. சிந்தாவின் முகம் வாடிப் போனது.
" நான் பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன், இந்த ஆண்டிச்சி கிழவி வந்து குட்டையில கல் எறிஞ்சிட்டு போயிடுச்சு. நினைக்கவே கூடாதுன்னு நினைச்சா, அதே நினைப்பா இருக்கு. என்ன பண்ணச் சொல்ற" எனத் தன்னிலை விளக்கம் தந்து , தனக்காகத் தன்நிலையைப் பற்றித் தோழியை விளங்கிக் கொள்ளச் சொன்னாள்.
" உனக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராதுடி. உன் மனசில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். ஊர்க்கார சிறுக்கிகளுக்குத் தெரியுமா. எவளாவது அசிங்கமா பேசுனாளுங்கன்னா, வேலு அண்ணன் மனசு நோகும். நீயாவது பொம்பளை கண்ணீர் விட்டுவிட்டுப் பேசாமல் இருந்துடுவ. அது தண்ணியைப் போட்டுட்டு வந்து அலப்பறையைக் குடத்துச்சுண்டா, அப்பவும் உனக்குத் தான் சங்கடம். பேசாத வீட்டுக்கு போ" என்றாள் வள்ளி.
சிந்தா தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கவும், மனசு கேளாதவளாக " சின்னையா, மகளை இங்க விட்டுட்டு போக வந்திருக்காரு. " எனவும் சிந்தா விழுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
" அவர் சம்சாரத்துக்கு ஏதோ மேலுக்கு முடியலையாம். மெட்ராஸ்ல கொண்டி வச்சு பார்க்கப் போறாறாம். அதுவரைக்கும் பெரியம்மாளை பார்த்துக்கச் சொல்றாரு. பிறகு வந்து இங்கையே ஏதோ தொழில் தொடங்குற யோசனை போல. அல்லி வந்து சொன்னா" என வள்ளி விவரம் சொன்னாள்.
" சின்னம்மாளுக்கு உடம்புக்கு என்னவாம். பால்குடி மறக்காத புள்ளையவா விட்டுட்டு போறாங்க" என விவரம் கேட்டாள் சிந்தா.
" இந்தா, இதுவே அல்லி சொன்னதை வச்சு தான் சொல்றேன். எனக்கு அதுக்கு மேலத் தெரியாது. இந்தக் கங்கா தன் நாத்தனாரைத் தான் அண்ணனுக்குக் கட்டனுமுன்ன அடப் பிடிச்சு கட்டி வச்சால்ல அனுபவிக்கட்டும்" என்றாள் வள்ளி.
" அப்படிச் சொல்லாத வள்ளி, அவுகளும் அத்தை மகள் மாமன் மகன் கட்டுற முறை தானே. சின்னையாவ கட்டனுமுன்னு, அவுகளும் மனசில ஆசையை வளர்த்தவுகன்னு சொல்லுவாங்க. என்ன நோவோ. பாவமில்ல. புள்ளை பெத்த உடம்பு, கை குழந்தை இருக்கு. அந்தப் பச்சை மண்ணு என்னா செய்யும். அது நம்ம சத்யாவுக்குப் பத்து பதினைந்து நாள் மூத்ததா இருக்கும் " என அங்கலாய்த்தாள் சிந்தா.
" இந்தா அவுகளுக்காகக் கவலைப் பட ஆரம்பிச்சுட்டியே, இதுக்குத் தாண்டி உன்கிட்ட சொல்றது இல்லை, ஊருக்குள்ள யாருக்கு என்னனாலும், அழகி மீனாவுக்குப் பதிலா நீதான் என்னெண்டு ஓடி வர்ற " எனப் பேசிக் கொண்டிருக்கும் போது தெருவில் வேலுவின் பைக் சத்தம் கேட்டது.
" இப்பத் தான் மானாமதுரை போறமுன்னு கிளம்புச்சு. அதுக்குள்ள வந்து நிக்குது " எனச் சிந்தா கணவனைப் பார்க்க வேகமாக வெளியே வந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு, மகளை முன் பேனட்டிலிருந்து தூக்கிக் கொண்டிருந்தான் வேலு.
" அடியாத்தி, இதுல உட்கார வச்சா தூக்கியாந்த" எனச் சிந்தா சத்யாவை நோக்கி வேகமாக ஓடினாள்.
" அது பாட்டுக்கு உட்கார்ந்து வருது. நீ பதறதா" என மகளைத் தூக்கி மனைவியிடம் கொடுத்தான். சத்யா அழுது வடிந்த கண்ணீரோடு இருந்த சத்யா , சிந்தாவைப் பார்க்கவும் கன்று போல் தாவியது. "உன்னைக் காணமுன்னு ஊரையே கூடிடுச்சு, சரியா நான் அந்த நேரம் வந்தவன் தூக்கிட்டு வந்தேன்" என விளக்கம் தந்தான் வேலு.
" வாங்கண்ணேன். மருமகளைத் தூக்கியாந்தீகளா" என வள்ளி சத்யாவைக் கொஞ்சவும், அது அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டது.
" அது வேலை ஆகாமல் உன்கிட்ட வராதுத்தா . இப்ப கூப்பிடாத வேஸ்ட் " என்றவன் கந்தன் எங்க எனக் கேட்டபடியே அவன் சட்டி செய்து கொண்டிருந்த இடத்தில் நிழலில் சென்று அமர்ந்தான். சிந்தா மகளோடு வள்ளி வீட்டுக்குள் சென்றாள்.
" வா மாப்பிள்ளை. மானாமருதை போயிருக்கேன்னு தங்கச்சி சொல்லுச்சு" என விசாரித்தான். " ஆமாம் கரி மூட்டையைக் கொண்டு போகக் கூப்புட்டானுங்க. இன்னும் மூட்டையையே கட்டலை. சரி அப்புறம் கூப்புடுச்கடான்னு வந்துட்டேன்" என்றான் வேலு.
" அது சரி, இன்னும் இரண்டு நாள்ல ஒரு லோடு காளையார் கோயில்ல கொண்டு போய் இறக்கனும் மாப்பிள்ளை, நீயா வந்துடு " என்றான் கந்தன்." ரெடியாகவும் சொல்லு போயிட்டு வந்துடுவோம்" என்றான் வேலு.
" ஆமாண்ணேன், நீங்களே பொறுமையா கூட்டிட்டு போங்க. மத்ததுங்க வந்தா மேடு பள்ளத்தில் விட்டு நாலு சட்டியை உடச்சிடுதுங்க" என்றாள் வள்ளி.
" சரித்தா. நீங்க கூப்பிடும் போது நான் வர்றேன். " என்றவன், " ஏன் மாப்பிள்ளை, இந்த ஏழைகளின் ப்ரிட்ஜ்னு ஏதோ சொல்றாங்களே. அது என்னாது. ஒரு ஆள் விவரம் சொல்லி கேட்டார். நான் உன்னைக் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்" என விவரம் கேட்டான் வேலு.
"அது ஒனும் இல்லை, இந்த மண்ஜாடி தான். இரண்டு அடுக்கா வரும். இரண்டுத்துக்கும் நடுவில் தண்ணீர் ஊத்தி வைக்கிறாப்ல கழுத்து பகுதில ரெண்டு மூணு ஓட்டை போடுவோம் . அதில சிலுசிலுன்னு தண்ணியை ஊத்திட்டு உள்ளுக்குள்ளே காய்கறி வச்சமுன்னா, ஒரு வாரம்னாலும், காய்கறி பச்சு, பச்சுன்னு இருக்கும்" என்ற கந்தன்,
" ஆனால் நிறைய வேலைப்பா. அது ஒன்னு செய்யற நேரத்தில் இதில் பத்து செஞ்சுடுவேன். இப்ப தான் ப்ரிட்ஜ் வந்துருச்சே. இதை யாரு தேடுறா" எனக் கேள்வி கேட்டான்.
" அதைத் தான் சொல்ல வந்தேன், இரண்டு நாள் முன்னே கமுதி பக்கம் போயிருந்தேன். வடநாட்டுச் சிங் ஆளுங்க வந்து விவசாயம் பண்றாக. அங்க ஆர்கானிக் காய் கறின்னு இயற்கை உரம் போட்டு விளைவிக்கிறாக. அதை வாங்கிறவுக எம்புட்டு விலையின்னாலும் கொடுத்து வாங்குறாக. அதே ஆளுங்களுக்குத் தான், இந்தக் குடுவையும் கேட்டாங்க. நீ விலை விவரம், வண்டி வாடகை எல்லாத்தையும் சேர்த்து எம்புட்டுக் குடுத்தா கட்டுபடியாகும்னு யோசிச்சுவை. அவுகள்ட்ட சொல்றேன். சரிபட்டு வந்தா செஞ்சு குடுய்யா மாப்பிள்ளை" என்றான் வேலு.
"சரிப்பா. எங்கய்யாகிட்டையும் கலந்துகிட்டு சொல்றேன். இந்த வேலை எல்லாம் அவருக்குத் தான் தெரியும்" என்றான் கந்தன். சிந்தா, சத்தியாவோடு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள். அது இப்போது சிரித்துக் கொண்டு வள்ளியிடம் சென்றது.
பெரிய வீட்டில் காலையில் சிவநேசனை வந்து குமரன் காலை உணவுக்காக எழுப்பினான். குளித்து முடித்துக் கீழே இறங்கியவன், புட்டிப் பால் கொடுத்தும் சிணுங்கிக் கொண்டிருந்த மகளைத் தூக்கிக் கொண்டான். அப்பாவிடம் போகவும் சிந்துஜா என்ற சிவகாமச்செல்வி சற்றே அமைதியானது.
" இங்க பாருங்க, அவுங்க அப்பன்கிட்ட போகவும் பேசாம இருக்கிறதை. " என இராஜி கணவனிடம் முறையிட்டார். முற்றத்தின் ஒரு ஓரத்தில் டைனிங்க் டேபிள் போட்டு அதில் தான் அப்பா மகன்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார் இராஜி.
" அவன் தான் பிறந்ததிலிருந்து தூக்கி வளர்க்கிறான். அப்புறம் பெத்தவன்கிட்ட போகாதா" என்றார் பெரியவர். "நேசா, உன் மகளுக்கு, எப்பப்ப என்ன குடுக்கனுமுன்னு சொல்லிடு. நான் பார்த்து குடுக்குறேன். நீ கவலைப் படாமல் மத்ததைப் பாரு" என்றார் தாய்.
"ஏன் பெரியம்மா, அண்ணனைப் பார்க்காமல் இந்தச் சிவகாமி கொஞ்ச நேரம் இருக்க மாட்டேங்குதே, தனியா எப்படிச் சமாளிப்பீங்க' என்றான் குமரன்.
"அது தான், இரண்டு பேரும் பத்து நாள் இருப்பீங்கல்ல, அதுக்குள்ள என் பேத்தியை பழக்கிடுவேன்" என்றார் ராஜி.
" அம்மா பாப்பாவை நாள் பூரா பார்த்துக்கிற மாதிரி, ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிக்குங்க" எனச் சிவநேசன் யோசனை சொன்னான்.
" இங்க என்ன ஆளுக்கா பஞ்சம், ஆனால் நம்ம புள்ளைய பொறுப்பா பார்த்துக்குற மாதிரி ஆள் வேணும்" என்றார் ராஜி,
சிவனேசனுக்குச் சிந்தாவை கேட்கச் சொல்லி வாய்வரை வந்து விட்டது. அவளை விடப் பொறுப்பாக யார் பார்ப்பார்கள். அந்தச் சிறுவயதிலேயே தம்பி, தங்கைகளையே தன் பிள்ளைகள் போல் பார்த்தவள். ஆனால் இன்றைய அவளின் நிலை, பண்ணைக்காரன் மகள் என்பதிலிருந்து உயர்ந்து விட்டது. சிங்காரவேலு நாலு பக்கம் திரிந்து சம்பாதிக்கும் உழைப்பாளி என்பதை அறிந்திருந்தான். சிறுக சிறுக ஊருக்குள் நிலத்தை வாங்கிப் போட்டுள்ளான் என்பது காற்று வாக்கில் அவன் செவிகளில் விழுந்திருந்தது. ஏன் அவன் தங்கை கங்காவே ஒருமுறை ' அவளுக்கு வந்த வாழ்வைப் பார்' என அங்கலாய்த்துச் சொல்லி இருக்கிறாள்.
குமரன் வேகமாகச் சாப்பிட்டு அண்ணன் மகளை வாங்கிக் கொண்டு ஹாலுக்குச் சென்று விட்டான், சிவநேசன் அதன் பிறகு அம்மாவின் கை பக்குவத்தில் அந்தச் சீய உருண்டையை ருசித்தான். சீய உருண்டை என்பது கடலை பருப்பு வெல்லம் சேர்த்துப் பூரணமாகக் கிண்டி அதை உருண்டைகளாக உருட்டி பச்சரிசி, உளுந்து கலந்து அரைத்த மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்து எடுப்பார்கள்.
இராஜேஸ்வரி, ஏற்கனவே பூரணம் கிண்டி வைத்திருந்தார் , அதனால் அதிகாலையில் பேத்தியைச் சமாளித்துக் கொண்டிருந்தவர் அரிசி, உளுந்தை ஊற போட்டு விட்டார். காலையில் ஆட்டி சுடசுட சுட்டு வைத்தார். மேல் வேலைக்கு வரும் அல்லியைத் தவிரச் சமையளுக்கு ஒரு சாமந்தியம்மாள் அவர்களது தூரத்து உறவினர் வீட்டோடு இருந்தார். அதனால் இராஜேஸ்வரி நினைத்த மாத்திரத்தில் பக்குவமாகப் பண்டங்களைச் செய்து விடுவார்.
சிவநேசன், பிரியமாகச் சாப்பிடவும், கூடவே உட்கார்ந்து மகனுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார். சாப்பிட்டு அறையில் வந்து அமர்ந்தவர்கள், அடுத்து அதே ஊரில் தொழில் ஆரம்பிப்பதைப் பற்றிப் பேசினார்கள்.
" ஏம்பா தென்வயலும் கருவேலமா தான் மண்டி கிடக்கு, அதுல போய் என்ன செய்யலாம்கிற" என யோசனையாகக் கேட்டார் பெரியவர்.
“ கருவேலம் மரத்தை வேரோட எடுக்கணும் பா, அது தான் முதல் வேலை. நிலத்தைச் சுத்த படுத்திட்டா, அதுக்கப்புறம் அதுலையே விவசாயம் செஞ்சுக்கலாம் . இடம் மட்டும் தான் நம்மளோடது. மத்தபடி மூலிகை பயிரிட்டு வளர்கிறதுக்கு ஒரு வெளிநாட்டு அறக்கட்டளை ஸ்பான்ஸர் பண்றாங்க. குமரன் அது விஷயமா தான் வந்துருக்கான் “ என அதன் விவரங்களைத் தெரிவித்தான் சிவநேசன்.
“இதைப் பொறுப்பா பார்க்க ஆள் வேணும் பா. எனக்கு அய்யனார் தான் சரியா வருவார்னு தோணுது “ என மகன் சொல்லவும், மகாலிங்கம் யோசித்தார், “அவன் ரோஷக்காரன் பா, திரும்ப வரமாட்டான்.“ என்றார்.
“நீங்க ஒரு தரம் கூப்பிட்டு விடுங்கப்பா, வந்தார்னா நான் பேசுறேன்” என்றான், மகனின் பேச்சைக் கேட்டு, மகாலிங்கம் அய்யா அய்யனாரை அழைத்து வர ஆள் அனுப்பினார். பெரிய வீட்டுக்கு வந்த அய்யனார், சிவநேசனிடம் வேலை பார்க்க ஒத்துக் கொள்வாரா, இந்த குடும்பங்களிடையே நடந்தது என்ன, நடக்கப் போவது என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment