யார் இந்த நிலவு-31
கே ஆர் மாளிகை, அன்று அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. சௌந்தரியும், நாயகமும், தங்கள் வயதை மீறி, சுறுசுறுப்பாக நடந்து திரிந்தனர். அவர்களுடைய மருமகள், முதல் முறையாக, அவருடைய புகுந்த வீட்டிற்கு வருகிறார். அதுவும் இருபத்தியோரு வருடங்களுக்குப் பின், இரு முறை செத்துப் பிழைத்து, மூன்றாம் பிறவி எடுத்து வருகிறார்.
மருத்துவர்கள், இப்போதும் பைரவியை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. கே ஆர் மில்லில் மருத்துவ உபகரணங்கள், டாக்டர், நர்ஸ் என மினி ஹாஸ்பிடல் இருப்பதாலும், ஆதர்ஷ் டீமின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்ற நோயாளிகளுக்குத் தொல்லை தருவதாலும் பைரவியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள்.
இதோ, ராஜனே அழைத்து வருகிறார். ஆஸ்தான ஓட்டுநரான சத்தியனைக் கூடக் காரை ஓட்ட விடாமல், தானே ஒரு ஜெர்க் இல்லாமல் பார்த்து மெல்ல ஓட்டி வர, அவருக்குப் பக்கவாட்டு முன் சீட்டை, பின் தள்ளி, தன் பாரு வசதியாக அமரும்படி செட் செய்தவர், வீல் சேரிலிருந்து காருக்கு கூட நடக்க விடவில்லை.
" இருமா, நான் தான் கூட்டிட்டு போறனில்ல" எனக் கடிந்தவர், சேரிலிருந்து அலாக்காகத் தூக்க, " ராஜ்" எனப் பதறியபடி அவர் கழுத்தை இறுக பற்றிக் கொள்ள, " ஏன் நான் உன்னைத் தூக்கினதே இல்லையாக்கும், அப்படியா கீழ போட்டுருவேன்." என மெல்லக் கடிய, அவர் காதோரத்தைப் பார்த்து, " இங்க டையடிக்க மறந்துட்டிங்க" என, அவருக்கு வயதாவதாக நரையைத் தொட்டுக் காட்டினார் பாரு , " ஹோய், நரையெல்லாம் ஒண்ணும் கிடையாது. பொய் சொல்லாத பிச்சு போடுவேன்" என்றவர், சத்தியன் கார் கதவைத் திறந்து பிடித்துக் கொண்டு நிற்க, முன் சீட்டில் உட்கார வைத்தார்.
" பாபா, மஸ்து, படியா மஸ்து." எனப் பின்னே வந்த மகள், கேலி பேச, " மஸ்து, இல்லைனா, நீ எப்படிக் கண்ணு வந்திருப்ப" என மகளின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவர், "பின்னாடி ஏறிக்கக் கண்ணு " என்றார். அவள் சிரித்துக் கொண்டே ஏறப் போகும் போது, அவள் கையை வந்து பிடித்த ஆதர்ஷ், " மாமா, நீங்க அத்தையோட ,தனியா ஜாலியா வாங்க, நான் ஆராவை கூட்டிப் போறேனுங்க" என அவர் பதில் சொல்லும் முன் தன் காரில் ஏற்றிக் கொள்ள, கௌரியை ஆதர்ஷ் ஏற்றிக் கொண்டான்.
" வசதியா இருக்குதில்ல அம்மணி, நல்லா உட்கார்ந்துட்டியா. கிளம்பலாமா" எனக் கேட்டு, பைரவி, " கிளம்புங்க" எனப் பதில் தரவும் தான் வண்டியை எடுத்தார். இவருக்கு முன்னாலும், பின்னாலும் வந்த ஆதர்ஷும் அபிராமும் தான் டென்ஷன் ஆனார்கள். ஏனெனில் அவ்வளவு மெதுவாகக் காரை செலுத்தினார் ராஜன்.
அன்று தானும், அவரும் மட்டும் செல்கையில் நூற்றுச் சொச்சத்தில் பறந்தவர், இன்று அதில் நூறு கிலோ மீட்டர் வேகத்தைக் குறைத்தாரோ எனச் சந்தேகம் வந்தது அபிராமுக்கு "மாமா, வண்டி எதுவும் பிரச்சினைங்களா, இந்த வண்டில வாங்க, அதைச் சத்தியன் எடுத்து வரட்டுமுங்க" எனச் சைட் வாங்கி வந்து ஹாரன் அடித்துக் கேட்கவும்,
"உன்ர அத்தையைப் பத்திரமா கூட்டிட்டு வரனுமுல்ல, அதுக்குத் தான். நீ முன்ன போறதுன்னா போ கண்ணு " என்றவரை, வேற்று கிரக வாசி போல் பார்த்தவன்,
" அதுக்குன்னு, சைக்கில்ல போறவனெல்லாம் முந்திட்டு போறானுங்க. " என அபிராம், சலித்துக் கொள்ள,
" பாபா, ரொம்ப ஸ்லோவா வர்றீங்க" என மகளும் குறை பட்டாள்.
" நீங்க போங்க கண்ணுங்களா , நான் உன் ஆயியைப் பத்திரமா கூட்டிட்டு வர்றேன்" எனவும்.
" உன்ர மாமன் , அத்தையைக் கூட்டிக்கிட்டு, பட்டணபிரவேஷம் வர்றானாட்டத்துக்கு. நீ துணை மாப்பிள்ளையா இருந்து கூட்டிக்கிட்டு வா. நான் முன்ன போய் ஆராத்தி கரைச்சு வைக்கிறேன்" என விஜயன், ஓவர் டேக் அடித்துக் கிளம்பி விட, ஆதர்ஷின் ப்ளாக் கேட்ஸ் நிலை தான் பரிதாபமாகப் போனது.
ஆனாலும் ஆதர்ஷ், இந்த ஒரு வாரத்தில் கே ஆரின் ரசிகனாகி இருந்தான். யாரும் எதிர் பார்க்காததைத் தான் செய்தார். அதனால் புன்னகையோடு மெல்லச் சென்றான்.
அன்று, "பாபாவோட, இந்த ஆட்டிட்யூட்ல தான் கவுந்திங்களா ஆயி' என ஆதிரா கேட்டே விட்டாள், பைரவிக்குச் சிரிப்பு வந்தாலும், " சுப்கர், ஆயிட்ட என்ன பேசறதுன்னு இல்லை" எனக் கடிந்து கொள்ளவும்,
" இதே பாபாவா இருந்தா, இந்தக் கேள்விக்கு மஸ்தா ஒரு பதில் சொல்லியிருப்பாங்க" என ஆதிரா சிலாகித்தாள்.
" ஓஹோ, பாபாவை ரொம்மப தெரிஞ்சவ" எனப் பைரவி கோவிக்க, " க்யூங் நஹி. மாஸி, அன்னைக்கு ஒரு நாள்" எனக் கௌரியையும் சேர்த்துக் கொண்டு, கைலாஷை பற்றிப் பேசி மகிழ ஆதர்ஷ் , கைலாஷ் புராணம் கேட்டான். அதிலும் அபிராம், ரஞ்சனி வந்து விட்டால் பேச்சு முழுதுமே அவர்கள் மாமன் தான்.
பைரவி தன் ராஜைப் பற்றி, அபிராம் சொன்னால் ரசிப்பாரே ஒழிய,பெண்களான கௌரி, ரஞ்சி, ஏன் ஆதிரா சொன்னால் கூட முறைப்பைத் தருவார். ஒரு முறை, எதார்த்தமாக இதனைக் கவனித்த கே ஆர், " மாஸிமா, புகையற வாடை வருதுல்ல" என வினையமாகக் கேட்டார்.
முதலில் கேள்வி புரியாமல் முழித்த கௌரி, தீதியின் முகத்தைப் பார்த்து விட்டு, " நானாசாப், நீங்க ஊருக்குப் போகும் போது, என்னையும் கூட்டிட்டுப் போய்விடுங்கள். தீதி இனிமே என்னைத் தங்க விடமாட்டாங்க" எனக் கேலி பேசவும்,
" ஏன் , நீ இங்கயே இருந்துக்கோ. நான் நேரா குன்னூர் போறேன். இங்க யார் என்னைத் தேடுறா. என்னை யாருக்கு வீட்டுக்கு கூப்பிடுறா " என, ராஜ் தன்னிடம், தனியாகப் பேசாத கோபத்தைக் காட்டினார் பைரவி.
" மாஸிமா, உறமுறையைத் தான், வூட்டுக்கு வரச் சொல்லி, அழைக்கோணும், வுட்டுக்காரியை இல்லை. உங்க தீதி என்னைப் புருஷனா நினைச்சாத் தான எம்பட ஊட்டை, தான் வூடா நினைக்கிறதுக்கு" எனப் பிள்ளைகள் இல்லாத நேரத்தில் அவரும் மனக்குறையைக் கொட்டி விட, பைரவி கண்களில் இரண்டு சொட்டு முத்துக்கள் துளிர்த்தது.
" இதை ஒன்னை நல்லா பழகி வச்சிருக்க. நான் வாயே திறக்கலை, உங்க தீதி எங்க போகோணுமோ, போய்க்கட்டும்" என வெளியேறி விட
," பார்த்தியா கௌரி. என் கூடச் சாதாரணமா பேசறதே இல்லை. இதுக்குப் பயந்திட்டு தான் வராமலே இருந்தேன்" எனப் பைரவி வாய் தவறிச் சொல்லி விட, கைலாஷ் மேலும் முறுக்கிக் கொண்டார்.
பைரவியோடு, கௌரி எப்போதும் இருப்பார், அவரைத் தவிர யாராவது இரண்டு நர்ஷ் , ஆதிரா ஆதர்ஷ், அபிராம் என யாராவது ஒருவர் கட்டாயம் இருப்பார்கள். கைலாஷ் வரும் நேரம், வாய்ப்புக் கிடைத்தால், மெடிக்கல் போறேன், கேன்டீன் போறேன்" எனக் கிளம்பி விடுவார்கள்.
அது போன்ற ஒரு சமயத்தில், நர்ஸை கூப்பிடுங்க" என்றார் பாரு. " என்ன வேணும்னு சொல்லு, ஏன் என்கிட்டச் சொல்லக் கூடாதா" என. அவர் கட்டாயப்படுத்தப் பொறுக்கமாட்டாமல் " பெட்பேன் வைக்கனும் ராஜ்" என எரிச்சலாக மொழிந்து விட, திரையை இழுத்து , கதவை அடைத்து விட்டு வந்தவர், தானே பெட்பேனை தேடி எடுக்க, " ராஜ் நோ" எனப் பதறினார் பைரவி.
" நான் இப்படி இருந்தா, நீ சும்மா விட்டுருவியா" எனக் கேட்கவுமே, அவர் வாயைப் பொத்தியவர், " உங்களுக்கு அந்த நிலைமையே வர வேண்டாம்" என்றவர், " என் தாலி எங்க" எனக் கழுத்தைத் தடவினார்.
" என்கிட்ட தான் பத்திரமா இருக்கு" என்றவர் மனைவிக்கான சிருஷைகளைச் செய்ய, முதலில் சங்கடமாக நெளிந்தாலும், ராஜன் அவரது சங்கடம் உணர்ந்து, நாசூக்காகப் பணிவிடை செய்ததில் வழக்கம் போல் அவரின் மேலான காதல் வளர்பிறை கண்டது. கையைச் சேனிடைஸ் செய்தபடி, குளியலறையிலிருந்து வந்தவர், திரையை மீண்டும் விலக்கி, கதவைத் திறந்து விட
" ராஜ், அந்தத் தாலியைப் போட்டு விடுங்க. சிந்தூர் வேணும். இரண்டும் இல்லாமல் ஏதோ மாதிரி இருக்கு" என்றார் பைரவி.
" இந்தத் தாலிலையும், குங்குமத்திலையும் தான், உன்ர புருஷன் உசிரோட புடிச்சு வச்சிருக்கியாக்கும். இதெல்லாம் வேணும், புருஷன் மட்டும் வேண்டாம்" என அவர் ஒரு சொல் சூடாகக் கொட்டி விட, பைரவி அமைதியாய் தலையைக் குனிந்து கொண்டார்.
சற்று நேர அமைதிக்குப் பிறகு, ' இவருக்கு முன், கண்ணீரும் சிந்தக் கூடாது' எனக் கட்டுப்பாடாக இருந்த பாருவின் கண்களிலிருந்து, அவரையும் அறியாமல் இரண்டு சொட்டு விழ, அதை உள்ளங்கையில் தாங்கிய ராஜன்,
" இது , என்ர கண்ணீர். வீணா சிந்தாத. தாலி கட்டும் போது, பிடிக்காத புருஷனா இருந்தாலும், சிரிச்ச மாதிரி போஸ் குடுங்க அம்மணி , போட்டோ புடிச்சு வச்சுக்குவேனில்ல. இருந்த ஒரு போட்டோவும், அன்னைக்குக் காணாமல் போச்சு" எனப் புலம்பினார்.
பாரு, ஏறெடுத்து முறைக்கவும், " இந்த முறைப்புகெல்லாம், நான் பயந்தவனில்ல, தகிரியமான ஆம்பளையாக்கும்" என்ற படி, மனைவியின் முகத்தை, தன் கைக்குட்டைக் கொண்டு சீர் செய்தவர், தனது சட்டை பாக்கெட்டிலிருந்து , பைரவியின் கருகுமணி தாலியை எடுத்தார். பைரவி ஆவலாக அவரைப் பார்க்க,
" இங்க பாரு, நோ செண்டிமெண்ட், நோ அழுகாச்சி. சிரிச்சா மாதிரி முகத்தை வச்சுக்க, இல்லைனா உங்கூட்டு வாரிசு, என்னைப் போட்டுத் தள்ளிடுவான்" என ஆதர்ஷ் வருகிறானா என வாசலைப் பார்த்தவர், தன மொபைலில் மனைவியைத் தனியாகப் போட்டு எடுத்துக் கொண்டவர், செபி எடுக்கப் போக, "தாலி கட்டிட்டு போட்டோ எடுங்க " என்ற மனைவியின் கட்டளைக்கு,
"சரிங்க அம்மணி" என வீடியோ ஆன் செய்து ஓரிடத்தில் மாட்டி விட்டு,காணொளியாகப் பதிவு செய்ய விட்டு, மனைவியிடம் வந்தார்.
"இது எதுக்காம்" என்ற பாருவிடம், "தனியா இருக்கையிலே சாய் அடிக்கனு வச்சுக்க' எனச் சிரிக்கவும், "ஓ, ஆயி பவானி,எனக்குன்னு,லட்ஜையில்லாதவரை புருஷனா அனுப்பியிருக்கப் பார்" என வழக்கம் போல் முறையிட, "உன் லிபிய,நான் தான் அம்மணி " என்றவர்,
தாலியை எடுத்து மனைவிக்கு, கட்டிலுக்கு அருகே நின்றபடி அணிவிக்க, அந்தக் கொக்கியை மாட்டுவதற்காக, கிட்டத் தட்ட, பைரவியை அணைத்தபடி மாட்டினார். எவ்வளவு கேலியாக, சாதாரணம் போல் பேசினாலும் , தாலியின் கொக்கியை மாட்டுவதற்குள் படாத பாடு பட்டார். இதில் பைரவியின், மகிழ்ச்சியில் விகசித்த முகம் வேறு, அவரைப் பாடாய்ப் படுத்த, பதட்டம் தொற்றியது.
" க்யா ஜீ, புட்டே ஹோ கை க்யா" எனப் பதட்டத்தில் நடுங்கிய அவர் கையைப் பிடித்து வயதாகி விட்டதா எனப் பாரு கேட்கவும், " சுப்கர், பதி தேவ்கிட்ட எப்படிப் பேசனுமானு தெரியாது" எனப் பைரவி மகளைத் திட்டியது போல் திட்டியவர், ஒரு வழியாக மாட்டி விட்டு அகலும் முன் பைரவியின் காது மடலிலிருந்த மச்சம் அவரைக் கவர்ந்து விட, வளைந்து அதில் தன் இதழ் பதித்தார்.
ஏற்கனவே, அவர் அருகாமையில் சிவந்து, குழைந்திருந்த பாரு, மீண்டும், தன் கணவர் கையாலே தாலி கட்டிக் கொள்வதில் மகிழ்ந்திருக்க, தற்போது வெட்கமும், காதலும் போட்டிப் போட, " ராஜ்" என்றார். " கொசு இருந்துச்சு, அதைத் தான் ஊதி விட்டேன்" என அவர் சமாளிக்க,
" ஹான், ஹான் ஏசி ரூம்ல எப்படி அந்தக் கொசு வரலாம். அதுவும், என் பாபாவோட, பருவைக் கடிக்கலாமா" எனக் கேலி பேசியபடியே ஆதிரா கையில் போனோடு உள்ளே வந்தவள், . சாவகாசமாக, திரும்பி, இடுப்பில் கை வைத்து நின்றவர், "ஆமாங் கண்ணு, நிசமாலுமே தான். " என அவர் கதைக்கவும்,
" மஸ்து, படியா மஸ்து. இப்படியே, அடிக்கடி கொசுவை ஊதி விடுங்க பாபா. ஆயி ஜல்தி டீக் ஹோ ஜாயகி" எனக் கேலி செய்தபடி, "ஸ்மைல் ப்ளீஸ்"என ஆயி பாபாவை போட்டோ பிடிக்க, ராஜ் மனைவி மீது கை போட்டபடி போஸ் கொடுத்தார்.
கையிலிருந்த குங்கும டப்பாவை நீட்டினாள். " இதையும் வச்சு விடுவீங்களாம், உங்க தாய் மாதா ஆர்டர்" என உள்ளே நுழைந்த சௌந்தரி, நாயகத்தைக் காட்ட, பைரவி பெட்டில் நீட்டியிருந்த காலை மடக்கப் போனார்.
" சும்மா இரு கண்ணு" எனச் சௌந்தரி காலை நீட்டி உட்காரச் சொல்ல, ஒவ்வொரு ஜோடியாக உள்ளே வந்தனர்.
சௌந்தரி மகனிடம், ஆதிரா நீட்டியிருந்த குங்குமத்தை, " தினம், பூஜை முடிஞ்சு, நாங்க மூணு பேரும் வச்சு விடுவோம். இன்னைக்கு , உடையவன், நீயே உன்ர பொன் சாதிக்கு வச்சிவிடு " மருமகள் நெற்றியில் வைக்கச் சொல்லிப் பணித்தார்.
" தாய் மாதா, உங்க வூட்டுகாரரு, எனக்கு ஊரறிய கல்யாணம் செஞ்சு வக்கிறேன்னு சொன்னாருங்க. இப்பவே, குங்குமம் வச்சு விட்டுறட்டுங்களா,பரவாயில்லைங்களா " என வேண்டுமென்றே வினவவும் பாலா முறைக்க,
" ராசா, இன்னைக்கு மட்டுமில்ல, உன்ர பொண்டாட்டி, பூஜை முடிச்சு போட்டு தினத்திக்கும் கொண்டு வந்து நீட்டும். அப்ப நெதம் கல்யாணம் கட்டுறதாவா அர்த்தமாகுது. பெரியவிக சொன்னா, சரின்னு கேட்டுக்கு கண்ணு. இதிலென்ன உனக்குச் சிரமம்" எனப் பொரிந்து தள்ள,
" தெரியாத கேட்டுட்டேனுங்க தாய் மாதா, ஒரு நாளைக்கு ஒரு தரம் என்ன, பத்துத் தரம் கூட, குங்குமம் வச்சு விடுறேன். என் கம்பெனியை மட்டும், உங்க ஊட்டுகாரரை பார்த்துக்கச் சொல்லுங்க" என ஒரு பிட்டை போட்டார்.
" அதெல்லாம் பார்த்துக்குவார், நீ மருமகள் நெற்றியில் குங்குமத்தை வை கண்ணு" என மருத்துவமனையிலேயே, மகள் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து மனைவியின் நெற்றி வகிட்டை நிறைத்தவர், " என்ர கையால, தினமும் இந்தக் குங்குமத்தை வச்சிக்கிட்டைனா தான், அது என்னைக்குமே நிலைக்கும். நூறு வருஷத்துக்கு நிலைக்கட்டும்" எனத் தங்களுக்குத் தானே ஆசீர்வாதமும் வழங்கிக் கொண்டு, மனைவி, இனி தன்னை விட்டுப் பிரியாமல் இருக்க, செக்கும் வைத்தார்.
இதோ, எல்லார் பொறுமையையும் சோதித்து, பிடித்த படி தளராமல், நாற்பதில் வண்டியைச் செலுத்தி ஊர்வலமாக ஒரு மணி நேரம் பயணித்து, நல்ல நேரத்தில் தன் மில்லுக்குள் நுழைந்தார் கே ஆர்.
கே ஆர் மாளிகை மட்டுமின்றி, மில் வளாகமே, தங்கள் அப்பாவின் மனைவியை, முதலாளியம்மாவை, ராஜனுக்கு ஏற்ற ராணியை, கைலாஷின் பாருவை வரவேற்க தயாராக நின்றது. வருக, வருக என வாசகங்களுடன் வண்ணக் கோலங்களும், ஒளி விளக்குகளும் மின்ன, பேண்ட் வாத்தியத்தையும் மெலோடியாக அடித்து, வரவேற்றனர்.
வழி நெடுக ஊழியர்கள், " வாங்கப்பா, வாங்கம்மா" என வரவேற்க, கார் கண்ணாடியை இறக்கி விட்டு, அவர்களுக்கு அவர்கள் அம்மாவை அறிமுகப் படுத்தியவர், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தபடியே, " இன்னைக்கு, நீங்க எல்லாரும், வேலை பார்த்திட்டே மேல படிக்கிறீங்களே, ஐடியா உங்க அம்மாளுது தான். இருபது வருசத்துக்கு முன்னாடியே, இந்த அம்மா சொன்னது தான்" எனப் பைரவியை அறிமுகப் படுத்த,
" நன்றி மா" எனச் சங்கீதா தலைமையில் , அவர்கள் கையால் தொடுத்த பிச்சி பூ சரத்தைக்கொடுத்து, "அம்மாவுக்கு வச்சி விடுங்கப்பா" என்றனர், "இது வேறையாக்கும்" என வாங்கியவர், பாருவின் பின்னலில், சங்கீத தந்த ஹேர்பின் கொண்டே வைத்து விடக் கரகோஷத்தோடு வரவேற்றனர்.
பைரவி, உணர்ச்சி வெள்ளத்தில், தலையசைத்தபடி அமர்ந்திருக்க, இடது கையால் அணைத்தவர், " அம்மாளுக்கு, உடம்பு சௌகரியமாகட்டும், என்னைய விட உங்களை நல்லா பார்த்துகுவா" என அவர்களிடமிருந்து விடை பெற்று, கண்ணாடியை ஏற்றி விட்டு, காரை செலுத்த, " ராஜ்" என அவர் தோளில் சாய்ந்தவர், " நீங்க என் ஒவ்வொரு வார்த்தையும் செயல்படுத்தியிருக்கீங்க. நான் தான் சுயநலமா ஓடிட்டே இருந்திருக்கேன்" எனக் கண்ணீர் விட,
" என்னை முழு மனுசனாக்க, இப்பவாவது விதி நம்மளை சேர்த்து வச்சிருக்கே. அதை நினைச்சு, மனசை தேத்திக்குவோம்" என அழைத்துச் செல்ல,
" இவ்வளவு பெரிய, மாளிகையோ, மில்லும் என்கிட்ட இல்லை. ஆனால் தங்கறதுக்கு வீடு இருக்கு, சின்ன அளவில் மில், தாங்குறதுக்கு என் குடும்பம் இருக்கு. இருபது வருஷம் முன்ன சொன்னீங்க ராஜ். அது இப்போ, எல்லாமே இருபது மடங்கா பெருகி இருக்கு. இந்தப் பாவிக்குத் தான், உங்க அன்பை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை" என உதட்டைக் கடித்து அவர் அழுகையைச் சமாளிக்க,
"விடுமா, என் ஆயுசுக்குள்ள, நீ என்கிட்ட வந்துட்டியே, அதுவே எனக்குப் போதும். வீடு வரப் போகுது, கண்ணைத் துடைச்சுக்கோ. இல்லையின்னா தாய் மாதா, எனக்கு டின்னு கட்டிடும். ஹிட்லர் பார்வையாலே எரிப்பார், உன்ர சிப்பாய் வேற இருக்கான். ஆயி கா சம்சம், உன்னாட்டமே தான். என்ர மகள் தான் நம்ம ஆளு. லேட்டா வந்தாலும் நிறைவா வந்திருக்கமா" எனக் கே ஆர் மாளிகைக்கு முன் தன் காரை நிறுத்தியவர்,
மற்றவர் அருகில் வரும், " பாருவுக்கான கைலாஷா. வாங்க மகாராணி" என்றவர், சட்டென, மனைவியின் கன்னத்தில் இதழ் பதிக்க, "ராஜ்" எனச் சிவந்தார். காரை நிறுத்தி விட்டு, சுற்றி வந்து கதவைத் திறக்க, " நானே இறங்கிடுவேன். நீங்க தூக்காதீங்க" என அதே செம்மையோடு கட்டளையிட்டார்.
" நான் தூக்குறதாவே இல்லைங்க அம்மணி, நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க. இல்லை வேண்டாம்னா வேணும்னு அர்த்தமா" என அவர் குனிய,
" ராஜ்" என்ற சிணுங்கலோடு, அவர் கை பிடித்து, காரிலிருந்து இறங்கினார். இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து, மூத்த தலைமுறை, சௌந்தரி, அபரஞ்சி, சாரதா மூவருமாக ஆராத்தி எடுத்து வாழ்த்துச் சொன்னார்கள்.
தலை வணங்கி நின்ற பைரவி, அடுத்து அவர்கள் காலில் விழுவார் என எதிர் பார்த்த கைலாஷ், மனைவியை இடையோடு வளைத்துப் பிடித்து, " கொஞ்ச நாளைக்கு, கால்ல எல்லாம் விழ வேண்டாம். பேசாத வா" என அழைத்துச் செல்ல, பெரிய ஆண்கள் பாலநாயகத்தைத் தவிர மற்ற மூவரும், " நாங்க தான் ஜெயிச்சோம். பணத்தை எடுறா" எனப் பாலாவிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
" என்னங்க மாமா. அட சொல்லிட்டு சிரிங்க" என அவர்களிடம் பேசினாலும், மனைவியை, " படி, பார்த்து ஏறுமா, வேகமா நடக்காது. மொல்ல, பத்திரம்"எனத் தாங்கியபடி அழைத்து வர, இவர்களைத் தவிர மற்ற அனைவருமே சிரித்தனர்.
ரஞ்சனி , " மாம்ஸ், தாத்தாங்களுக்குள்ள பெட் கட்டியிருந்தாங்கங்க. அத்தை வந்தவுடனே, பொசுக்கு, பொசுக்குனு எல்லார் கால்லையும் விழுவாங்கன்னு பாலா தாத்தா சொன்னாருங்களா, நீங்க விழுக விடமாட்டீங்கன்னு மத்த தாத்தாவெல்லாம் சொன்னாங்க. இதில பெட் ஓடிச்சு. பாலா தாத்தா தோத்து போயிட்டாருங்க" என விவரம் சொல்லவும். ராஜன் ஹாஹாவெனச் சிரிக்க,
" மாமா, நான் உங்க கட்சி தான். பெரியவுங்க, ஆசிர்வாதம் வாங்கிறதில என்ன தப்பு. நீங்க தோத்து எல்லாம் போகலை. நான் குனியத் தான் போனேன்" எனப் பைரவி மாமனாருக்காக வழக்காட
" இந்தப் பந்தயத்தில் தோற்கிறது தான் மருமகளே, எனக்குப் பெருமை. என்ர மகன், மருமகளைத் தாங்குறான்னா, நல்ல மகனை பெத்திருக்கோம்னு எனக்குப் பெருமை தானுங்களே" எனப் பாலநாயகம் ஒரே போடாகப் போட, "இனி பேச்சே இல்லை. என்ர அப்பா, என்னை நல்ல மகன்னு ஒத்துக்கிட்டாரு" என அதிலும் தன் பெருமையை நிலை நாட்டிக் கொண்டார் கைலாஷ்.
கீழே இருந்த அறைகளில் ஒன்றிலேயே பைரவிக்கு மருத்துவ வசதிகளோடு ஒரு அறையைத் தயார் செய்திருந்தார்கள். இப்படிப் பாதுகாப்பாக வந்த பயணத்திலேயே, பைரவி அசந்து போயிருக்க, அவரை ஓய்வெடுக்க அனுப்பினர்.
இரவு உணவு பரிமாற, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, " பாஸ், நான் கிளம்புறேன். அடுத்து நானிமாவை கூட்டிட்டு வர்றேன்" என ஆதர்ஷ் கைலாஷிடம் வந்து நிற்க, " சரி கண்ணு. பார்த்து போயிட்டு வா. நாம பார்த்துக்குவோம்" என அவனைக் கட்டியணைக்க, " பாவு, அதுக்குள்ள கிளம்புறீங்க" என ஆதிரா தான், அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
" ஹேய், பக்லி, ஆயியை பார்த்துக்கோ, உன் பாபா கொஞ்சிட்டே இருப்பார், தாத்தா, ஆத்தா, உன் ராம் சார், எத்தனை பேர் இருக்காங்க. அப்புறம் என்ன. உன்னைக் கொஞ்சறதுக்கு எக்ஸ்ட்ராவா, இன்னொரு ஆள் நானிமாவை கூட்டிட்டு வர்றேன்" என அவளை அணைத்துக் கொண்டு, அவள் நெற்றியில் முத்தமிட,
" பாவு, ஆயி பேமலி, டேஞ்சரஸ்னா, எதுக்கு அங்க போகனும். நானிமாவையும் கூட்டிட்டு இங்கையே வந்திடுங்க. அவங்க ஜாயிதாத் குச் நஹி சாஹியே. பாபாகிட்ட வந்திடுங்க, நாமளே அவுங்களை விட நிறையச் சம்பாதிச்சுக்கலாம். டீக் ஹை னா பாபா" என அவள் கைலாஷையும் சப்போர்ட்டுக்கு அழைக்க,
" ஆமாண்டா ரஜ்ஜும்மா, அவிக சொத்து யாருக்கு வேணும் கண்ணு, நீங்க தான் எம்படச் சொத்து" என இருவரையும் அணைத்துக் கொள்ள, ஆதர்ஷும் அவரை அணைத்து நின்றவன், " புலி வாலை பிடிச்ச கதை தான். அதெல்லாம் அப்படிச் சுலபமா விட முடியாது. நான் பார்த்துக்குறேன். நீ பாபா நிழல்ல சேஃபா இரு. அது போதும்" என்றவன், ஆயியிடம் சொல்லச் சென்றான்.
பெட்டில் கண் மூடி படுத்திருந்தவரிடம், " ஆயி" எனக் கையைப் பிடிக்க, வழக்கம் போல் இறுக்கப் பற்றிக் கொண்டார். " கிளம்புறேன் ஆயி, நானிமாவோட வர்றேன்" என்றவனை, கண்ணைத் திறந்து பார்த்த பைரவி, கையை நீட்டி அழைக்க, குனிந்த வாக்கில் கட்டிக் கொண்டவன், " என்னங்க ஆயி, ஜங், நமக்குப் புதுசா என்ன. நான் பார்த்துக்குறேன். நீங்க நிம்மதியா இருங்க." என அவர் கன்னத்தில் முத்தமிட, பைரவியும் அவனை உச்சி முகர்ந்து, நெற்றியில் முத்தமிட்டு,
" ஆயி பவானி, உன் முயற்சிக்கு எல்லாம் துணை இருக்கட்டும்" எனக் கௌரியைக் குங்குமம் கொண்டு வரச் சொல்லி, எழுந்து அமர, முயற்சிக்க," அப்படியே இருங்க ஆயி" என்றவனை, " என் உரிமைக்கு, தூ லட்தே ஹோ. யே க்யா" என்றவர், கணவரையும் அழைத்தார்.
" உங்க வாரிசு, எனக்கே தெரியாமல், என் ஆயி, தன் சிப்பாய் ஆக்கிட்டாங்க. இவனும் இருக்கிறது தெரிஞ்சிருந்தா, நான் சுயம் தெளியவுமே, உங்ககிட்ட ஓடி வந்திருப்பேன். ஒரு முல்கி தான, உயிரை காப்பாத்தி குடுத்தா போதும்னு நினைச்சிட்டேன். நீங்க அனுமதிச்சா தான், அவன் போவான். இல்லைனா, நான் ஆயிட்ட பேசிக்கிறேன்" என்றார் பைரவி.
" என்ர பொண்டாட்டி உயிரோ இருக்கான்னே இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். என் இரத்தம், வாரிசுன்னு, எப்படி உரிமை கொண்டாடச் சொல்ற. உன் வம்சமா தான வளர்ந்திருக்கான். நடக்கிறபடி நடக்கட்டும். அவனுக்கு நிழலா, நான் இருப்பேன்" என ஆதர்ஷ் தலையில் கை வைக்க,
பைரவியும் மகனுக்குத் திலகமிட்டவர், " கடமை முடியவும், எங்ககிட்ட வந்திடனும். உன் குடும்பம் உனக்காகக் காத்திருக்கு, அதை மட்டும் நினைப்பில் வச்சுக்கப் பாபா. பெற்றதே தெரியாமல் பிச்சியா கிடந்திருக்கேன். இந்த அபாக்கியவதியான ஆயியை மன்னிச்சிடு பாபா" என அவனைக் கட்டிக் கொள்ள, கைலாஷ், அன்று நடந்த விசயங்கள் புரியாமல் அதிர்ந்து நின்றார்.
" அப்படிச் சொல்லாதீங்க ஆயி. நம்ம இழந்ததுக்கு எல்லாம், ஜெயந்த் மஹராஜ் ஹிசாப் பராபர் செய்யனும். நான் செய்ய வைப்பேன். இது சத்தியம்" என்றவன், " உணர்ச்சி வசப் படாதீங்க. தைரியமான ஷேர்னியா, உடம்பை தேத்திட்டு வாங்க. அவனுக்குத் தண்டனை உங்க கைல தான். " எனத் தைரியம் தந்தவன், கைலாஷ் பாருவின் கைகளைப் பிடித்துக் கொண்டு,
" நீங்க இரண்டு பேருமே, விதியோட விளையாட்டில் விக்டிம்ஸ் பாஸ். ஆயியை மட்டும் ப்ளேம் பண்ணாலும், உங்களுக்கு ஞாயம் கிடைக்காது. உட்கார்ந்து பேசி மனக்காயங்களை ஆத்திக்குங்க . நானிமாவோட வர்றேன்" எனப் பெற்றவர்களுக்கு யோசனை கூறி புறப்பட்டான், பால் வடியும் முகத்தோடு காட்சி தரும், வீரமிக்க வம்சத்தின் சிப்பாய் ஆதர்ஷ் ராஜ் போஸ்லே.
No comments:
Post a Comment