அவளது அம்மா,”ஏங்க ,மில்டரில இருக்க பையன்கிறீங்க , நல்லா விசாரிச்சிங்களா “ என மாப்பிள்ளை பார்க்கும் போதே கேள்வி எழுப்ப,
“ மாப்பிள்ளை,மில்டரிங்கையில ஒழுக்கமா தான் இருப்பாப்ல, லீவுக்கு வந்து போனதை வச்சு நல்ல பையன்னு தான் சொல்றாங்க. அப்பா அம்மா கிடையாது, அப்பத்தா வளர்ப்பு, சித்தப்பா, பெரியப்பா குடும்பங்க பக்கத்திலிருந்தாலும் பெரிசா பிக்கல் , பிடுங்கல் இல்லை. நம்மளுக்கும் இரண்டும் பொட்ட புள்ளையா போயிடுச்சு, மாப்பிள்ளை சர்வீஸ் முடிஞ்சு வந்தாப்லையினா , இங்கிட்டே ஒரு தொழிலை ஆரம்பிச்சு, நமக்கு மூத்த மகனாட்டம் வச்சுக்கலாம். நாளைக்கு இளமதிக்கு கல்யாணம்னாலும் , வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளையா பொறுப்பா முன்ன நிற்பாப்லைல “ என ஆயுள் முழுமைக்கான திட்டமெல்லாம் தீட்டி, அவளது அப்பா மணிமாறனைப் பற்றி பெருமை பேச, அதைக் கேட்டிருந்த இளமதி அவன் போட்டோவை வாங்கி ஆராய்ந்தாள்.
அவளது அக்காள் பார்த்தாலோ இல்லையோ, இவள் அங்குலம், அங்குலமா பார்த்து “கலரு கொஞ்சம் மட்டு தான், மிடுக்கா மீசையை முறுக்கிக்கிட்டு போஸ் குடுத்துருந்தாலும், அம்புட்டு டெரர் இல்லைனு நினைகிறேன், கண்ணு சிரிக்கிது.” என்றவள். அக்காவுக்கு மட்டும் கேட்கும் விதமாக
“உதடு கருப்பா இருக்கு சிகரெட் பிடிப்பாரா இருக்கும், ஆனால் அங்கிட்டு இருக்க குளிருக்கு அது இருந்தா தான், உசிரு பொழைக்க முடியும்ன்னு சிவா அண்ணன் சொல்லுச்சு, அது ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றவள்,”மாம்ஸ் படா ஸ்டெயிலா இருக்காரு அக்காவ் “ எனச் சத்தம் கூட்டிச் சிலாகிக்க,
“ஏண்டி, அவளுக்குப் புருஷனா வரப்போறவனை, நீ இப்படிக் கண்ணு வைக்கிற, பெரியவளே பார்த்து சூதானமா இருந்துக்கடி, சின்னவ லவட்டிட்டு போயிடப் போறா” என இவளது அப்பத்தா எச்சரிக்க ,
“ சீ வாயைக் கழுவு அப்பத்தா, முறைக்கு மாமனா இருந்தாலும், என் அப்பாவுக்கு அடுத்து, எனக்கு ஒரு அண்ணன் இல்லாத குறையை அவர் தான் தீர்த்து வைப்பார், அப்படித் தான அக்கா. அவங்க வீடு நான் காலேஜ் படிக்கிற ஊர்ல பூவந்தில தான் இருக்கு. காலேஜ் போக வர மாமாவை ஐஸ் வச்சு, அவர் வண்டியிலையே பாடி கார்டா கூட்டிட்டு போயிடலாம். மிலிட்டரியை பார்த்தா யாரும் நம்மகிட்ட வாலாட்ட மாட்டாங்கல்ல" எனச் சந்தோசப் பட, அவளது அக்கா அமைதியாகத் தலை கவிழ்ந்திருக்க அதை வெட்கம் என நினைத்தனர்.
" ஏண்டி அறிவு கெட்டவளே, அக்கா புருஷனைப் போய் அண்ணேன்கிறவ, மாமா முறையோட தள்ளி நின்னு, மரியாதையா பேசனும், தெரிஞ்சிக்க" எனக் கடிந்த அப்பத்தாவை " போ உனக்கு வேற வேலையில்லை" என நொடித்துக் கொண்டவள், அக்காவின் திருமணத்துக்கு உற்சாகமாகத் தயாரானாள்.
திருமணம், பெண் வீட்டுச் சார்பாக, அவர்களது ஊரான திருபுவனத்தில் நடந்தது. மாப்பிள்ளை வீடு அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் பூவந்தியில் .இளமதி கல்லூரிக்கு டவுன் பஸ்ஸில் சென்று வருவாள், அவளது வகுப்பு தோழிகள் சிலர் அதே ஊர்க் காரர்கள் , அவர்களிடமும் அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை பற்றி இவள் புலனாய்வு செய்ய, திருப்தியான பதிலே கிடைத்திருந்தது.
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமாக மண்டப வாசலை வந்தடைய சக தோழிகள், உறவினரோடு, பதினோரு வகை ஆராத்தி தயார் செய்து, மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்து, " ஆராத்தி காசு கொடுத்தா தான், உள்ள விடுவேன்" என,
மாநிறத்தில், நல்ல வாட்டசாட்டமாக, கட்டான உடற்கட்டோடு, அப்பத்தாவின் ஆசைப்படி கோர்ட் சூட்டில், அளவான முறுக்கு மீசையோடு மணிமாறன் மிடுக்காக நிற்க, அவனை விட ஓரடி குட்டையாக, அக்காவை விடச் சற்று குறைவாகச் சிங்காரித்த போதும், பட்டுச் சேலையில் பேரழகியாகவே , ஆராத்தி பணம் கேட்டு மிரட்டி நின்றாள் இளமதி.
மணிமாறனும், சிரித்தபடி," இப்ப என்னத்தா, உனக்கு இல்லாததா, பர்சையே கூட வாங்கிக்க, ஆனால் என்ட்ரி டிக்கெட் கொடுத்திரு. உங்க வீட்டில பொண்ணு கட்டுறதுக்காக காஷ்மீர்லிருந்து வந்திருக்கேன்" எனக் கேலி செய்தபடி, நூறு ரூபாய் நோட்டை நீட்ட, “இந்த ஆரத்தி தட்டு செய்ய இரண்டு நாள் இராப்பகலா மெனக்கெட்டு இருக்கோம், என்னங்க மாமா “ என அவள் சிணுங்க “விட்டா , இதுக்கான செலவை பூரா என் பேரன்கிட்ட கறந்துருவ போலருக்கே” என அவனது அப்பத்தா எகத்தாளம் பேச,
“ இதுக்கு நான் செலவு செஞ்சதை விட, உங்கமேல வச்சிருக்க,மதிப்பு மரியாதை பிரியத்தைத் தான் பார்க்கணும்” என டயலாக் அடித்து பேரம் பேச, அவனும் சிரித்துக் கொண்டே இரண்டாயிரம் ரூபாயைத் தந்தான்.
" மாறா, அக்காளை விட, தங்கச்சிக்கிட்ட சூதானமா இருக்கனும் போலடா, இப்பவே இம்புட்டு கொள்ளையடிச்சிட்டு போறாளே, இவை கல்யாணத்துக்கு நம்ம சொத்தை கேட்டாலும் கேட்பா " என அவனது அப்பத்தாவும் பேரனை விளையாட்டாக எச்சரிக்க , “ பிரியமான கொழுந்தியா எத்தனை பேருக்கும் கிடைக்கும், தம்பி வாழ்ந்துக்கடா “ என அவன் பக்க ஆட்கள் கேலி செய்தனர்.
முதல் நாள், வரவேற்பில் நிறைமதி அமைதியாகவே வந்து நின்றாள். இளமதி தான், கூட்டம் கூட்டமாக தன் தோழிகளைக் கூட்டி வந்து, மாப்பிள்ளை அருகே நின்று, சிரித்தபடி போஸ் கொடுத்து அலப்பறையாக்கப் போட்டோ பிடித்துக் கொண்டாள்.
அதிகாலையில் அக்காவை எழுப்பி, அலங்காரம் செய்ய வைக்க வேண்டும், ப்யூட்டிசியன் வந்து விடுவார் என பக்கத்தில் தலையோடு போர்த்திக் கொண்டு படுத்திருந்த நிறைமதியை எழுப்பப் போக, அவள் படுத்திருந்த இடத்தில் தலையணை அடுக்கப்பட்டு, கல்யாணத்தில் விருப்பமில்லை, காதலித்தவனைக் கைபிடிக்கச் செல்கிறேன், எனக் கல்யாணப் பெண் கம்பி நீட்டியிருந்தாள். இளமதி அழுகையோடு, அப்பா, அம்மாவை அழைத்து விசயத்தைச் சொல்ல, அவர் தலையில் கை வைத்து அதிர்ந்து அமர்ந்து விட,அவளது அம்மா வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதார். இயலாமையோடு நின்ற இளமதிக்கு, தான் ஆராத்தி எடுத்து புன்னகையோடு மண்டபத்துக்குள் நுழைந்த மணிமாறன் கண் முன் வந்து போனான். அதற்குள் மணப்பெண் ஓடிய விசயம், மண்டபம் முழுதும் பரவ, மணிமாறன் அப்பத்தாலும், சொந்த பந்தங்களும், இளமதியின் தாய் தகப்பனைச் சூழ்ந்து ஞாயம் கேட்டனர்.
மணிமாறன் இறுகி நின்றவன், " அப்பத்தா, அவங்க பொண்ணு இப்படி செய்யும்னு அவங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க, விடுங்க கிளம்பலாம்" எனக் கூம்பிய முகத்தோடு சொல்லி, மற்றவரையும் சமாதானப்படுத்தினான்.
இளமதியின் தந்தை, அவன் பெருந்தன்மையைப் பார்த்து, " என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை" எனக் கதறி அழுதவர், " உங்களை மாதிரி, உசந்த மனுசனை கட்டிக்க, அவளுக்குத் தான் கொடுப்பனை இல்லை. ஆனால் எனக்கு நீங்க மருமகன் தான், குறிச்ச முகூர்த்ததில இந்த கல்யாணம் நடக்கும். அதில எந்த மாற்றமும் இல்லை. " என உணர்ச்சிப் பொங்கப் பேசியவர், இளைய மகளிடம் வந்து குடும்ப மானத்தைக் காக்கக் கையேந்தி நிற்க, இளமதி அதிர்ந்தாள். .
ஆனால் மணிமாறன், " இது என்னங்க மாமா, இந்த சரக்கு இல்லையினா, அந்த சரக்குனு மளிகைக் கடை வியாபாரமா. படிக்கிற புள்ளையை கட்டாயப் படுத்தாதீங்க" என அவளுக்காக வாதாடினான். இளமதியின், அம்மா, அப்பத்தா என மகளிர் கூட்டம், எடுத்துச் சொல்லி, அவளை மூளைச் சலவை செய்ய, அரை மனதாக அவளும் மண்டையை ஆட்டினாள்.
ஆனால், மணிமாறன் பிடிவாதமாக, இளமதியோடு பேசவேண்டும் எனத் தனிமையில் சந்தித்தவன், அவள் பெற்றவர்கள் சொன்ன காரணத்தை எல்லாம் புறம் தள்ளச் சொன்னவன், " இந்த காரணத்துக்காகவெல்லாம், நீ என்னை கட்டிக்க வேண்டாம். இப்ப இல்லைனா, அடுத்த லீவுக்கு நான் வர்றதுக்குள்ள எங்கப்பத்தா பொண்ணு தேடிரும். புருஷனா வர்றவன், இப்படி இருக்கனும்னு உனக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல, அதை யோசிச்சுக்கோ. கட்டாயத்தில் முடிவெடுக்க வேண்டாம். நான் இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிடுறேன்" என அறையை விட்டு, வெளியேறப் போனவனை, " உங்க எதிர்பார்ப்புக்கு, என் அக்கா தான் இருந்தாளா. நான் இல்லையா" என ஏதோ ஒரு உந்துதலில் கேட்டு விட்டாள்.
அவள் கேள்வியில் வாசல் வரை போனவன் திரும்பி நின்று, " உன் அக்காவையும் முதல் தரம் மணமேடைல தான் பார்த்தேன். எந்த பொண்ணா இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம், என் மனைவியை நேசிக்க முடியும்கிறது என்னோட நம்பிக்கை" என அவன் பதில் தர, தலையைக் குனிந்து நின்றவள்,
"என் அக்காவுக்கு கல்யாணம்னு தான் இருந்தேன். எம் ஏ தமிழ், உங்க ஊர் காலேஜ்ல தான் படிச்சிட்டு இருக்கேன். இன்னும் ஆறு மாச படிப்பு இருக்கு" என அவள் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லவும், முதலில் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தவன், " ம்" எனச் சுவாரஸ்யமாகக் கதை கேட்க,
"நான் என்ன கதையா சொல்றேன்" அவனை ஏறிட்டு முறைத்தவள், “நான் படிக்கனும், மனசளவுல ரெடியாகனும். தாலி வேணும்னா இப்ப கட்டுங்க. " என அவள் மறைமுகமாகச் சம்மதம் தர,
ஹ ஹஹா எனத் தன்னை மறந்து சிரித்தவன், " நான் இன்னும் பத்து நாளில் கிளம்பிடுவேன்,அதுவரைக்கும் நீ என்னை அடஜஸ்ட் பண்ணணும், என் அப்பத்தா கூட பூவந்தில என்வீட்டில் தான் இருக்கனும், உன்னை மணிமாறன் பொண்ண்டாட்டின்னு தான் சொல்லுவாங்க பரவாயில்லையா" என விஷமமாகக் கேட்கவும், அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,
" கிளம்பிடுவீங்களா. மொத்தமா முடிச்சிட்டு வந்துட்டீங்கன்னு சொன்னாங்க. " என விசாரித்தவள், அவன், அவளையே புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கவும், நாக்கை கடித்துக் கொண்டு, " என் காலேஜ், பூவந்தில தான். அதனால உங்க அப்பத்தா கூட இருக்கிறதில ஒண்ணும் சிரமம் இல்லை”எனச் சம்மதித்து அவள் சொன்ன வார்த்தைகளை விட, அவள் கண்கள் சொன்ன வார்த்தைகள் அவனைக் கவர்ந்து விட இளமதி மணிமாறன் ஆனாள் .
சொன்னது போலவே, பத்து நாள் வெளிப் பார்வைக்குக் கணவன், மனைவியாகத் திரிந்த போதும், வாக்கு மாறாமல் அவளுக்கான அவகாசத்தை அளித்தான். முதலிரவு அறையை அடைத்துக் கொண்டிருந்த கட்டிலைப் பார்த்துத் தவித்தவளை, “அந்த ஓரம் படுத்துக்கோ, கொடுத்த வார்த்தையை காப்பாற்றுவேன்.வெளியே போகவும் முடியாதில்லை” என்ற அவன் நியாயம் புரிய, தயக்கமாக ஏறி சுவரோரம் ஒட்டிப் படுத்தவள்,அதி காலையில் அவன் மேல்தான் கிடந்தாள், ஆயினும் அவலறியாமலே அவளைக் கொஞ்சியவன், அவள் கண் விழிக்கும் முன் அவளைச் சீராகப் படுக்க வைத்தான்.
இளமதி மருதப்பனாக இருந்த போது கிடைக்காத பல வசதிகளும், சுதந்திரமும் திருமதி இளமதி மணிமாறனாக அவளுக்குக் கிடைத்தது. பத்து நாளில் ஜாயிண்ட் அக்கவுண்டாக வங்கிக் கணக்கு ஆரம்பித்தவன், டெபிட் கார்டை அவளுக்குத் தந்தான். கல்யாண பெண் நிறைமதிக்கு புது அலைபேசி வாங்கியவர்கள், இவளுக்கு உபயோகித்த போனையே கொடுத்திருக்க, முதல் பரிசாக அலைபேசியை அளித்தான்.
கல்லூரி சென்று வர ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து, அவளின் ஆரம்ப தயக்கத்தைக் களைந்து, அவளுக்கு, பின்னால் உட்கார்ந்து வண்டி பழக்கியும் விட்டான். பெரியவள் நகையோடு ஓடியிருக்க, சின்னவளுக்குப் புதிதாக நகை வாங்கப் பெற்றவர்கள் விழி பிதுங்கி நிற்க, அதை மறுத்து அவனே மனைவிக்கு ஒரு செயினும், நெக்லஸும் வாங்கிப் போட்டான்.
ஒவ்வொரு விசயத்தையும், அவன் பார்த்துப் பார்த்துச் செய்ய, இளமதிக்கு, தன்னை அவனுக்கு முழுமையாகத் தரவில்லையே என்ற குற்ற உணர்வு மேலோங்கியது. அவளிடம் விடை பெற வந்தவன், "மதி" என அழைக்க, அவள் அதே குழப்பத்தோடே அவனை நோக்க, அவள் புருவ முடிச்சுக்களை நீவி விட்டவன்,
" உனக்குக் குற்ற உணர்ச்சியே வேண்டாம். படிக்கிற பிள்ளையைக் கல்யாணம் பண்ணது, என் தப்பு. ஆம்பளையா இருந்தாலும், கல்யாணம் நின்னா, அவமானம் தான். நான் அன்னைக்குப் பெரிசா டயலாக்கெல்லாம் அடிச்சாலும், உள்ளுக்குள்ள ஒரு வேதனை இருந்தது. ஒரே நிமிசத்துல இளமதி புருஷனாக்கி, என் வேதனையை போக்கினவ நீ " என அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்.
" இத்தனை நாள் கட்டுப்பாடா இருந்துட்டேன், ஒருதரம் இளமதி புருஷனா " எனக் கண்களால் இறைஞ்சியவன், அவள் விழி விரித்துப் பார்க்கும் போதே, இறுக்கக் கட்டியணைத்து, அவள் நெற்றியில் முத்தமிட, இளமதி கண்ணீரோடு அவனுள் புதைந்தாள்.
" தினமும் மறக்காமல் போன் போடுங்க மாமா. மிலிட்ரிகாரன் பொண்டாட்டி காத்திட்டு இருப்பா" என எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட, இருவருமே முதல் அணைப்பில் தங்களைத் தொலைத்து இருந்தனர்.
" எல்லா இடத்திலையும் சிக்னல் கிடைக்காது மதி. கிடைக்கும் போதெல்லாம் உன்னை கூப்பிடுறேன். நீ பரிட்சையை முடி, இந்த மதியில், மாறன் நிறைஞ்சிருக்கும் போது, நானே உன் முன்னாடி நிற்பேன்" என்று விட்டுச் சென்றான்.
ஆறு மாத காலம், அடை மழை, முன் பனி, பின் பனி, இலையுதிர்காலம், வசந்தகாலம், கோடைகாலம் என ஒரு சுற்று ஓட, இதோ இன்று பரிட்சை முடித்து விட்டாள். நாளை வந்துவிடுவான், அதற்குள் தங்கள் அறையை அலங்கரிக்க வேண்டுமென ஆவலாக மேலப் பூவந்தியில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல, அவள் வீட்டின் முன் கூட்டம்.
" மாமா வந்திட்டாரா, எதுக்கு கூட்டம் என நெஞ்சு குழி அடிக்க, பதட்டமாக வண்டையை நிறுத்த, ஒரு உறவினர் வந்து வண்டியை வாங்கிக் கொண்டார்.
வாயில் துண்டை புதைத்துக் கொண்டு, அவள் தந்தை கண்ணீரோடு நிற்க, " அப்பா, என்னப்பா" என அவள் பதறினாள்.
" அடி என் மகளே, நீ என் மகளாவே இருந்திருக்கலாமே, உன்னை இந்த நிலமையில பார்க்கத்தானா, அவசரகோலம், அள்ளித் தெளிச்ச கோலமா, உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன்" என அவள் அம்மா கதற.
" படுபாவிப் பய, போன தடவையே வேலையை முடிச்சிக்கிட்டு வந்திட்டேன்னு சொன்னவன் என்ன தேவைக்கு இன்னும் ஆறுமாசம் வேலையை ஒப்புக்கிட்டான். இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன்" என அவனது அப்பத்தாவும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ, அப்படியே கீழே விழுந்தவள், " மாமா, என் மாமாக்கு என்ன ஆச்சு" என நம்பமாட்டாமல் கேட்க,
" மாப்பிள்ளை இருந்த இடத்தில் நேத்து துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமா. எத்தனை பேர் உசிரோட இருக்காங்க, இல்லைனே தெரியலையாம். தந்தி வந்திருக்கு" எனவும்
" இல்லை, என் மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் ஆகலை, அவர் வருவார். இந்த மதியில் மாறன் நிறைஞ்சு இருக்கும் போது, நான் உன் முன்னாடி நிற்பேன்னு சொல்லியிருக்காரு. அவர் வருவாரு. அவர் வருவாரு" என உருப் போட்டவள், கரிசனையாய் அவளுக்கென அவன் செய்தவைகளை பட்டியலிட்டு. " வந்திரு மாமா. என் மனசில் நீதான் இருக்க" எனக் கத்தி கதறி உள்ளறையில் ஓய்ந்து கிடந்தாள்.
எதற்கும் இருக்கட்டும் என உற்றார், உறவினர், அவன் தந்திருந்த போன் நம்பர்களுக்குத் தொடர்பு கொண்டு கேட்டபடி இருந்தனர்.
" ஆறுமாசம் தான மாமா, அவகாசம் கேட்டேன். என்னை ஆயுசுக்கும் காக்க வச்சிட்டு போயிறாத மாமா" என அவன் படத்தை தன் மடியில் வைத்துக் கொண்டும், நெஞ்சோடு அணைத்துக் கொண்டும் வெறும் தரையில் மயங்கிக் கிடந்தாள்.
அடுத்த நாள் காலையில் ஒரு ராணுவ வண்டி வந்தது. அதிலிருந்து காவலர்கள், ஒரு பெட்டியை இறக்கி, அவர்கள் வீட்டின் முன் வைத்து, தேசியக் கொடியைப் போர்த்தி, குண்டுகள் முழங்க அந்த ராணுவ வீரனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். ஊர் மக்கள், உற்றார், உறவினர் ,ஊடகங்கள் என எல்லாம் அவனது வீரத்தைப் போற்றி தியாகத்தைப் புகழ்ந்து தலை வணங்குகிறார்கள்.
இளமதி, " இல்லை, இல்லை, என் மாமா வந்திருவாரு" எனக் கத்தியபடியே பூவந்தி வீதிகளில் அந்தி சாயும் வேளையில் ஓடுகிறாள். " இளா, இளமதி, அம்மா" என அவளது அப்பா முதல் உறவினர் ஆண்கள் அவளை பின் தொடர, ஒரு வண்டி முன் சென்று விழுகிறாள். சடன் ப்ரேக்கிட்டு அந்த ராணுவ வண்டி நிற்க, அதிலிருந்து குதித்து ஓடி வந்தான் மணிமாறன்.
" மதி, " எனப் பெருங்குரலெடுத்து, அவளிடம் பாய்ந்தவன், அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தவளை, தன் மடியில் போட்டுக் கொண்டு, " மதி, மதி, உன் மாறன் வந்திட்டேன்டி. கண்ணைத் திறந்து பாரு" என அவளை தன்னோடு இருக்க அணைத்துக் கதற , " சொர்க்கத்தில் இருக்கமா மாமா" என வினவினாள்.
" அடியே, ஒரு அடி விட்டேன்னு வையி, வாய் கோணிக்கும், சொர்க்கத்தில இருக்கமான்னா கேக்கிற. நீ என்னைக்குடி, எனக்குச் சொர்க்கத்தை காட்டின" என அவன் கோபப்பட, அவள் பின்னோடு வந்தவர்கள் அதிர்ந்து நின்றனர்.
" மாப்பிள்ளை, நீங்க இருந்த இடத்தில துப்பாக்கி சூடூ" என அவர் இழுக்க, " அது வேற ரெஜிமெண்ட் மாமா. அங்கயும் எல்லாரும் சேஃப். இது மாத்தி சொல்லிட்டானுங்க" என விளக்கம் தந்தவன்.
" மிலிட்ரிகாரன் பொண்டாட்டி, நடந்து வருவாளா, இல்லை தூக்கிட்டு போகனுமா" என தன் மடியில் கிடந்தவளைக் கேள்வியாக நோக்க, சுயம் தெளிந்தவள், சற்று முன் கண்டது கனவென உணர்ந்து உடல் சிலிர்த்து, " ம்கூம், மில்டிரிகாரர் தூக்கிட்டுத் தான் போகனும்" என அவன் கழுத்தைக் இறுகக் கட்டிக் கொண்டாள்.
இளமதியில் மணிமாறன் நிறைந்து விட்டான்.
No comments:
Post a Comment