Saturday, 12 March 2022

யார் இந்த நிலவு-34

யார் இந்த நிலவு-34 


பைரவி நடமாட ஆரம்பிக்கவுமே, வேலை செய்தே பழகியவர், பெரியவர்கள் சாப்பிடும் நேரம் பரிமாற ஆரம்பித்தார். கௌரி செய்த வேலைகளில் சிலதை தான் எடுத்துக் கொண்டார். அதுவும் கைலாஷ்க்கு கௌரி பரிமாறுவதை விரும்பாதவர், அதற்காக இரண்டு நாள் இன்ன எனச் சொல்லாமலே கணவரோடு மல்லுக்கட்ட, புரிந்தும் புரியாதது போல் இருந்த கைலாஷ், மகளிடம் மில் விசயமாகச் சொல்வது போல், " நமக்கு உரிமையை, நம்மளே தான் எடுத்துக்கனும் கண்ணு. " என மனைவியை ஒர விழியால் பார்த்துக் கொண்டே சொல்ல, அந்த நேரம் முதல் பைரவி கைலாஷ்க்கு பரிமாற ஆரம்பித்தார். அவரும் மனைவி கையால் சாப்பிடவே நேரத்துக்கு வீட்டுக்கு வர ஆரம்பித்தார் .

பைரவி மாலையில் பூஜையறையில் மணியடித்துச் சாமி கும்பிடும் நேரம், ஆராத்தி தட்டையும் அவரைத் தூக்க விடாமல் தானே ஆஜராபவர், குங்குமத்தை மனைவிக்கு வைத்து விட்டுத் தான் கிளம்புவார். வீட்டில் இருக்கும் நேரமெல்லாம், மனைவியோடு பொழுதைச் சுவாரஸ்யமான பேச்சிலும், பைரவியை வம்பிழுத்து பேசுவதிலுமே கழித்து வர, பைரவி சகலத்தையும் மறந்து, கணவரின் அன்பில் குளிர் காய்ந்தார்.

ஒரு நாள், பைரவிக்கு அவரது அக்கா, உண்மையான பவானியிடமிருந்து போன் வந்தது, "பையூ, உனக்கு முடியலையாமே, உடம்பப் பார்த்துக்கமா. புருஷன் வீட்டில் இருக்கேனு பேசிகிட்டாங்க, இப்பவாவது ஒண்ணு சேர்ந்தியே எனக்கு ரொம்பச் சந்தோஷம் பையு." என உண்மையான மகிழ்ச்சியைத் தெரிவித்தவர். " இங்க ஏதேதோ நடக்குதுமா. எனக்கு ஒண்ணும் புரியலை. நீ உன் மகளோட பத்திரமா இரு. சோட்டி ஆயி மேல எல்லாரும் கோபமா இருக்காங்க. " எனத் தகவல்களைச் சொல்லி, யாரோ வருவதாகச் சொல்லி, அவசரமாகப் போனை வைத்து விட்டுச் சென்றார்.

அன்று இரவு கணவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது ," பவானி தீதி பேசுனாங்க ,இந்த ராட்சஸன் கிட்ட மாட்டிட்டு கஷ்டப் படுறாங்க, இத்தனை வயசாகியும் அவன் அட்டகாசம் குறையலை. நான் உங்களோட இருக்கிறதில் சந்தோசம் னு சொல்றாங்க “ என அக்காவோடு பேசிய விஷயத்தைப் பரிமாறினார்.

“குடியைக் கெடுத்தவன் வீட்டுலையெல்லாம் உறவு கொண்டாடியிருக்க, நான் தான் ஆகாதவனாக்கும்” என்றார் கைலாஷ், அதில் அதிர்ந்தவர், “ராஜ் , தீதி தான் , இரண்டு மூணு தரம் தகவல் தந்து என்னையும், ரஜ்ஜும்மாவையும் காப்பாத்தினாங்க. அவங்க என்னோட வெல் விஷ்ஷர், தீதி என் கிட்ட பேசுறது, அவங்க குடும்பத்தில் யாருக்குமே தெரியாது.” என வாயை விடவும், கைலாஷுக்கு மகள் சொன்னதும் நினைவுக்கு வர, " அவிக வெல் விஷ்ஷர்னா, நான் யாரு" என அதற்கு மேல் எதுவும் பேசாமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ,கிளம்பிச் சென்று விட்டார். அது முதல் இருவருக்குள்ளும் இருந்த சுமூக உறவு , சற்றே பாதித்தது, ஆனாலும் செக்கப்புக்கு பைரவியைத் தானே தான் அழைத்துச் சென்றார்.

“ராஜ், அன்னைக்குத் தீதிட்ட பேசினேன்னு சொன்னதிலிருந்து கோபமா இருக்கீங்களா” என மறுபடி விளக்கம் சொல்ல வரவும், “என்ர கோபம் உன்னை என்ன செய்யப் போகுது, கண்டதையும் மனசில போட்டு ஒலப்பிக்காத , உடம்பத் தேத்துற வழியைப் பாரு” என எதார்த்தமாகச் சொன்னதை,பாரு சற்று விகற்பமாகவே எடுத்துக் கொண்டார், அதே நேரம் ஆதரசிடமிருந்து , அவரது, செக்கப் சென்ற விவரம் கேட்டு , கைலாஷ்க்கு போன் வந்தது. அவர் ட்ரைவிங்கில் இருந்ததால், அப்படியே ஸ்பீக்கரில் போட்டவர், “ உன்ர ஆயி பக்கத்தில தான் கண்ணு இருக்கா,நீயே கேட்டுக்க” எனப் பேச வைத்தார், பைரவியும் விவரம் சொன்னவர், “ஆயி இருந்தா குடு பாபா, நான் அவங்க கிட்ட பேசணும்” என்றார்.

, “நானிமாவுக்கும் கொஞ்சம் உடம்பு முடியலை ஆயி, மூச்சுத் திணறல், அதிகமா இருக்கு, அதுனால தான் கூட்டிட்டு வரமுடியலை “ எனக் காரணம் சொல்ல,”போன்லயாவது பேசச் சொல்லு” என மீண்டும் வற்புறுத்தினார் பைரவி.

ஆதர்ஷ் , இதோ வர்றேன், எனப் பேச வைக்கக் கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் பேசினார் ரமா பாய். “ பையு, நல்லா இருக்கியா, பயமுறுத்திட்டியேடி, இத்தனை வருஷம் போராடினவளுக்கு, ஒரு ஆறு மாசம் பொறுக்க முடியலையா, உன் ஹெல்த்தை பார்த்துக்கோ, நானா சாப் கிட்டத் தான் எல்லா விஷயத்தையும் கேட்டுக்கிட்டேன், நீ தாமாஜியோட சேர்ந்தது எனக்கு நிம்மதியா இருக்கு , உடம்பை பார்த்துக்கமா ” என இந்த வார்த்தைகளைப் பேசும் முன்னே, வெகுவாகச் சிரமப் பட்டர்.

பைரவிக்கு,கணவரின் பாராமுகத்தை யாரிடமாவது காட்ட வேண்டும் போலிருந்தது. ராமா பாய் சிக்கவும் கொட்டி விட்டார், “ஆயி, இவ்வளவு சிரமப் பட்டுப் பேசி, எனக்குச் சமாதானம் சொல்ல வேணாம். எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த காரணமே நீங்க தான். எனக்கு ஒரு மகன் இருக்கிறதையே மறைச்சுட்டிங்களே” என ஆதங்கப் பட்டு அழவும் ,

“ஆயி” என ஆதர்ஷ் ஒரு பக்கம் பதற, “பையு, அப்படி இல்லடி, நீ ஆதிரா விஷயத்தை ,தாமாதஜிகிட்ட எந்தக் காரணத்துக்காக மறைச்சியோ, அதே காரணம் தான். நம்ம வம்சத்துக்கு அவனாவது மிஞ்சட்டும்ன்னு நினைச்சேன்” என ரமா பாய் இருமாளோடு பேச,

கைலாஷ், “ ஆதர்ஷ், நீ போனை வை, இரண்டு பேரும் எமோஷனலா அழுது அழுது உடம்பை கெடுத்துகிறாங்க . இதெல்லாம் இப்ப பேச வேண்டாம்” என்றார் கைலாஷ்.

கைலாஷின் குரலைக் கேட்கவும், “தாமாத்ஜி, நமஸ்தே, நான் உங்க கிட்ட, நேர்ல வந்து மன்னிப்பு கேட்கணும்னு இருந்தேன், உடம்பு படுத்துது, நீங்க , என் மகளை எப்படிப் பார்த்துகிறீங்கன்னு, நானா சாப் சொன்னார்,ரொம்பச் சந்தோசம், உங்க கிட்டப் போகச் சொல்லித் தான் , பையுவை ரொம்பக் காலமா சொல்லிட்டு இருந்தேன், அவள் இப்படித் தான் வரணும்னு இருந்திருக்கு, இன்னும் கொஞ்ச நாள், இங்க எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, உங்க மகனையும் உங்க கிட்ட ஒப்படைச்சுடுறேன் “ என்றார் ரமாபாய் .

“சாசு மா,நீங்களும் அமைதியா இருங்க, அப்புறம் பேசிக்கிடலாம். உங்க மகள் ஒரு விஷயத்தை மறைச்சா, நீங்க இன்னொன்னை மறைச்சு இருக்கீங்க. அதே சமயம் கஷ்டப் பட்டு வளர்த்தும் இருக்கீங்களே, அதுக்கே உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேன். சீக்கிரமே உங்களை வந்து சந்திக்கிறேனுங்க ” எனப் பேசி போனை வைத்தவர், மனைவியை, தண்ணீர் எடுத்துக் கொடுத்துச் சமாதனம் செய்து விட்டு,

“வயசானவிகள்ட்ட என்ன பேசறதுன்னு இல்லையா, அவிகளே சிரமப்பட்டுப் பேசுறாங்கல்ல” எனக் கடியவும்,

“எனக்கு அப்படிப் பேசணும்ம்னு ஆசை பாருங்க. நான் மறைச்சதும், ஆயி மறைச்சதும் எப்படி ஒண்ணாகும். ரஜ்ஜும்மாவை ,அவளோட ஆயி நான் வளர்த்தேன், அவளோட பாபா யாருன்னு சொல்லைனாலும்,உங்களைப் பத்தி உயர்வா தான் சொல்லி வச்சிருக்கேன்” எனக் கண்ணீர் விட, அவரை,தன் தோளில் சாய்த்துக் கொண்டவர்,

“ ரஜ்ஜும்மா, கண்ணால பார்க்காத அப்பன் மேல, அவ்வளவு பாசமா இருக்கும் போதே, புரிஞ்சுக்கிட்டேன் பாரு. நானே அவள் அப்பாவைத் திட்டினாலும் விட்டுக் கொடுக்காது. எனக்காக என்ர கிட்டையே , வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கு ” என்றவரின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டவர்,

“ஆதர்ஷ் , உங்களை அப்பான்னு கூப்பிடாமல், தவிர்க்கிறதைப் பார்க்கும்போது, எனக்கு ரொம்பக் கில்டியா இருக்கு ராஜ். அன்னைக்கு அத்தை, அவன் உங்களைப் பாஸ்னு கூப்பிட்டத்துக்கு , சத்தம் போட்டாங்களே, அது என்னால தானே.” என நொந்தவர்,

“அந்த ஆயி பவானி, எதுக்குத் தான் உங்க வாழ்க்கையில் சேர்த்து விட்டாளோ , நானும் வாழாமல் , உங்களையும் வாழ விடாமல் வச்சிருக்கேன். பன்னீர் அப்பா பொண்ணு, ராஜியை கட்டியிருந்தீங்கனா, விஜயன் பாய்ச்சாப், பாபி மாதிரி நீங்களும்,நல்ல வாழ்க்கை வாழ்த்திருப்பீங்க. எல்லாம் என் லிபி” என் நெற்றியிலடித்துக் கொள்ள,

”பாரு” என்ற உறுமலோடு மனைவியின் கையைப் பற்றியவர், “இனி ஒரு வார்த்தை பேசக்கூடாது, பேசாமல் வா”எனக் கூட்டிச் சென்றார்.

சோலாப்பூரில், பைரவி, ஆதிராவின் இருப்பு தெரிந்த பிறகு, ஆதர்ஷுக்கு நெருக்கடி கூடியது. அசல் வாரிசு இருக்க, ரமாபாயிக்கு தத்துப் பிள்ளை எதற்கு என , திடீரெனப் பைரவி மேல் பாசம் கொண்டு, அவளது அண்ணன் மகன்கள் போர்க் கொடி தூக்கினர். "ஆதர்ஷ், தேவைப் பட்டா, நான் கிளம்பி வர்றேன். உண்மையைச் சொல்லிடுவோம்" என்றார் ராஜன்.

" இல்லை பாஸ், பிரச்சனை இப்படியே, டைவர்டாகி இருக்கட்டும். ஆயி உடம்பு சரியாகவும், அவங்களைக் கூட்டிட்டு வாங்க" என்றவன், " நீங்க சொன்ன மாதிரி, ஜெயந்த் மஹராஜ்க்கு, வலை விரிச்சாச்சு. சீக்கிரம் சிக்கிடுவார்" எனச் சிரித்தான்.

" அவருக்கு, வலை பத்தாது கண்ணு, குழி தான் தோண்டோனும். தோண்டிடுவோம்" என வைத்த ராஜன், பீபீ மில்ஸ் சப் காண்ட்ராக்ட் களில், ஜெயந்த் கொள்ளை அடித்ததை, தோண்டித் துருவச் சொன்னார். அதோடு, புதிதாக ஒரு வாய்ப்பையும், ராத்தோட்ஸ் க்ரூப் மூலமாகச் செய்ய வைத்தார். பெங்களூரில் சந்தித்த தமிழ் நாட்டு மருமகன், ரகுவீர் சிங் ராத்தோட், " மில்ஸ், அசோசியன்லையும், போஸ்லேஷா, நிறைய லீலைகள் செய்திருக்கார். பிரச்சனையை நான் கையில் எடுக்கிறேன்." என வாக்களிக்க, ராஜன் இங்குத் தன் கம்பெனி நிர்வாகத்தை , தான் இங்கு இல்லாவிட்டாலும் தடையின்றி நிர்வாகம் செயல்பட, தன் மகளை ஆயத்தம் செய்தார்.

அடுத்து வந்த நாட்களில், ராஜனிடம் பெரிய மாற்றம். ஏதோ ஒரு குறிக்கோளோடு செயல் படுவதாகத் தோன்றியது. சும்மாவே ஆதிராவை ட்ரில் வாங்கியவர், தன்னோடு கூடிக்கொண்டே அலைந்தார்.

அவளது, நடை உடை பாவனைகளைத் திருத்தம் செய்தவர், இன்னைக்கு ஒரு கிளைன்ட் மீட், இந்த ட்ரேஸ்ல இப்படி வா. இதைப் பேசணும், எனக் குருவாய் நின்று சொல்லித் தந்தார். ஆதிராவும்,மிகுந்த சிரத்தையுடன் பழகினாள் , அவள் ஆசைப்பட்டதும் அதற்குத் தான் ,அதுவும்,தன் பாபாவே குருவாகிக் கற்றுத்தர, மனமுவந்து கற்றாள் . அதிலும் ஓர் சுகமாக, அபிராம கூடவே வரும் போது , சக மாணவன், நண்பன் போல, பழகுவதில் அவளுக்கு அலாதி இன்பம் கிடைத்தது.

மில்லுக்குச் செல்லும் நேரம் தவிர்த்து இடைப்பட்ட சிறிது நேரத்தில், அஜிஜு, ஆத்தா, ஆயி, மாஷி எனச் செல்லம் கொஞ்சியவள், “ பாபா வர்றதுக்குள்ள கிளம்பனும்” எனப் பறக்க,

சௌந்தரியும், நாயகமும் , ‘இப்ப என்ன அவசரம் போகுதுன்னு, புள்ளையை இந்த வேலை வாங்குற, மெல்ல பழகிகட்டும்” என மகனைப் பேசினர். “தாய் மாதா, சொத்துச் சேர்க்கிறது பெரிசில்லா, அதைக் கட்டிக் காக்கா வாரிசுகளைத் தயார் பண்ணணோம் “ என்றவரை, “அப்ப உன்ர மகனை கூப்பிட்டு வச்சுக்க, அடுத்த ஊட்டுக்கு போற புள்ளையை, அதுக்கு ,எதுக்குப் படுத்தினோம்,இல்லை உன்ர மருமகனுக்குப் பழக்கி விடு” என்றார் சௌந்தரி. “மருமகனையும் சேர்த்துத் தான் பழகிட்டு இருக்கேன்” என மகளை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினார்.

பைரவி, கணவரும்,மகளும் ஒன்றாகத் தங்கள் தொழிலைப் பார்க்கச் செல்வதைப் பார்த்தவருக்கு, தன இளமைக் காலமும், தான், தன் தந்தை, கணபத்ராய் போஸ்லேயிடம் பழகியதும் நினைவில் வந்தது, பெருமையாகவே அதைச் சொல்லி மகளை வாழ்த்தி அனுப்பினார். ஆனால் அப்பாவும்,மகளும் வேலையில் மும்மரமாகி , பைரவிக்கான நேரத்தில் கை வைக்கவும், அவர்களோடு அளவளாவ முடியாத தனிமை அவரை வாட்டியது. அதோடு மனைவி அன்று ராஜியை , தன்னோடு சம்பந்தப் படுத்திப் பேசியதில் கோபம் கொண்டும் இருந்தார்.

மதிய சாப்பாட்டை, ராஜன் பிஸ்னஸ் லன்ச் மகளோடு சேர்ந்தே என வெளியே சாப்பிடுவதும், பூஜை நேரத்துக்கு வராததும், சௌந்தரி, “ ஏன், உன்ர பொண்டாட்டிக்குக் குங்குமம் வைக்கக்கூட நேரம் இல்லாத ,வேலையோ” எனக் கடிந்து கூட, “ இத்தலை நாள், நீங்க அவள் நெத்திலியை வச்ச குங்குமத்தில் தானே,நான் உசிரோடிருந்தேன், அதே மாதிரி நீங்களே வைங்க” என்று விட்டு ஒரு நாள் , அவசரமாகக் கிளம்பிச் செல்ல, பைரவி பெரிதும் தாக்கப் பட்டார்,

கௌரியிடம் சொல்லிப் புலம்பவும்.”தீதி, நீங்களா கற்பனை பண்ணாதீங்க,எனக்கென்னமோ, இங்க செட்டில் பண்ணிட்டு, மகனுக்கு உதவப்போக்கனும்ம்னு ஜீஜு நினைக்கிற மாதிரிதான் தோணுது”என்றார் கௌரி.

சாதாரணமாக, பைரவியே இப்படித் தான் யோசிப்பார். ஆனால் கௌரி சொன்னது போல், வாழ்க்கை முழுதும் ஓடியவர், சாய்த்துக் கொள்ளக் கைலாஷின் தோள் கிடைக்கவும், காதல் மனைவியாக மாறி, அதிகமாக எதிர் பார்த்தார்.

ஆனால், கைலாஷ், நினைத்ததை நடத்தி முடிப்பவர், ஜெயந்த் விசயத்தில் இவர்கள் நினைத்ததை விட வேலை சூடு பிடிக்க, உற்சாகமாகத் திரிந்தார். அதில் மனைவியோடு கொண்ட ஊடலில், ,' ஹார்ட் அட்டாக் வரலையினா, என்ர கிட்டத் திரும்பியே வந்திருக்க மாட்டாலாட்டத்துக்கு, இருக்கட்டும், தன்னால என்ரகிட்ட வரவைக்கிறேன்' எனப் பைரவி, தனக்காக இறங்கி வர வேண்டும், என வீம்பாகக் காத்திருந்தார்.

ஆனால் இது புரியாத பைரவி, கணவர் தன்னைப் புறக்கணிக்கிறார், என மட்டுமே கோபம் கொண்ட பைரவி பொறுத்து, பொறுத்துப் பார்த்தவர், மாமன் மாமியை, குன்னூருக்குப் போய் வரலாம் என யோசனை சொல்லிக் கிளப்பினார்.”உன்ர புருஷன் ஏதாவது சொல்லுவானே கண்ணு” என நாயகமே பம்மினார்.

“அப்படி, அப்படியே போட்டு வந்துட்டேன் மாமா, எல்லாம் பார்க்கணும்” எனக் குன்னூர் நிலவரத்தைச் சொல்ல, அவரும் போய், ஒரு பத்து நாளில் திரும்பலாம் என நினைத்தார்.

அன்று இரவில் சாப்பிட்டு முடித்த பின், " ராஜ், பெரியவங்க குன்னூர் போகனும்னு சொல்றாங்க. எனக்கும் இனி மாத்திரையைத் தொடர்ந்தா போதும், நானும் அவங்களோட போறேன் " எனத் தைரியத்தைக் கூட்டி ஒரு வழியாகச் சொல்லி விட, ' இவிகளுக்குப் பத்து படி ஏறி, மாடிக்கு வர முடியாதாம், மலை ஏறி குன்னூர் போக முடியுமோ. அம்மணிக்கு ரொம்பத் தான் ஏத்தம், சும்மாவா, ராச பரம்பரை ஆச்சே, இரு வச்சுக்கிறேன்' என மனதில் கருவியவர், ஒரு மேகசினை புரட்டிக் கொண்டிருந்தை நிறுத்தி விட்டு பார்வையை மனைவியிடம் திருப்பி,

" உன் இஷ்டம்" என்று விட்டு, போனை எடுக்க , பைரவி, ' போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரே' எனக் கடுப்பானார். அது மட்டுமின்றிக் கைலாஷ், மனைவியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் முன்னாலேயே யாரிடமோ பேசவும், ' என்னை அனுப்பி விடுதலைத் தான் குறியா இருக்கார். நான் எதுக்கு அவருக்கு, இத்தனை வருஷம், தனியா இருந்தவருக்கு, இனிமே நான் எதுக்கு' என விபரீதமாகவே யோசித்தார்.

சௌந்தரி, நாயகம், பன்னீர் என மூவருமே, ராஜனிடம் பேசி ஒப்புக்கொள்ளவைக்க வேண்டும், என ஒத்திகை எல்லாம் செய்து விட்டு வர, ராஜன் ,”அப்பா, நாளைக்கு மதியத்துக்குள்ள செக்கியூரிட்டி ஆட்கள் வந்துருவாங்க, உங்களோடையே வசந்த விலாஸ்ளையும் வந்து தங்கிக்குவாங்க, நீங்க மட்டுமா, இல்லை ராமு மாவும் வர்றாரா “எனக் கேட்கவும் , சௌந்தரி ஏதோ வில்லங்கம் என யோசித்தார்.

ஆதிரா , அபிராமோடு வந்தவள், “எங்க போகப் பிளான்” வினவினாள் , சௌந்தரி , மகனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விவரம் சொல்லவும்,

“நிஜமாவா, ஆயி நீங்களுமா போறீங்க, ஏன் , என்ன ஆயி, எல்லாரும் ஹாப்பிப் பேமலியா இருக்கலாம்னு சொல்லிட்டு, ஒவ்வொருத்தரா கிளம்புறீங்க. முதல்ல பாவு, இப்ப நீங்க , ஆத்தா நீங்களுமா" எனச் சரமாரியாக எல்லோரையும் ஒரு வாங்கு வாங்கினாள் ஆதிரா.

“ரஜ்ஜும்மா, நீதான், சின்னப் பிள்ளையாட்டம் போகாதேன்னு அடம்பிடிக்கிற , உன் பாபா, நான் கிளம்பறேன்னு சொல்லவும் முதல் ஆளா, தொல்லை விட்டுதுன்னு செக்யூரிட்டி அரேஞ் பண்ணி கொடுத்துட்டார். நீயும் அதே மாதிரி அனுப்பி விடு, உனக்குத் தான், ஆயியை பிரிஞ்சு இருந்து பழக்கம் இருக்கு, கௌரி கூடவே இருப்பா “ எனக் குத்தலாகவே பதில் சொல்ல, ராஜன் , 'தொல்லையா' என அமைதியாகப் பார்த்தபடி ஷோபாவில் அமர்ந்திருந்தார்.

“ஆயி , என்ன பேச்சு பேசுறீங்க, உங்களைப் பிரிஞ்சு பழகி இருந்தா, இனிமேலும் அப்படியே இருக்கணுமா, போங்க ஆயி,நான் உங்களைப் போக விடமாட்டேன் “ என அவள் தன் ஆயியைக் கட்டிக்கொள்ளவும்,

“ஆது கண்ணு, பத்து நாள் தாண்டா போயிட்டு ஓடி வந்துருவோம். வந்து கல்யாண வேலையெல்லாம் பார்க்கனும்ல கண்ணு' எனச் சௌந்தரி பேத்தியை சமாதானம் செய்தவர், “ ஆயிக்குத் தான், அங்க எல்லா விவரமும் தெரியும், அதுக்குத் தான் கூட வருது” எனச் சமாதானம் சொன்னார்.

“ஆண்டி, குன்னூரில், வேலை ஆகனும்னா, அதுக்கு நீங்க எதுக்குங்க அலைஞ்சுகிட்டு. எல்லாரும் இங்க இருக்குறாங்க, அப்பாட்ட சொன்னாக்க, வேற ஆளை ஏற்பாடு செஞ்சிருவாருங்க, நீங்க அலைய வேண்டாம்” என அபிராமும் சமாதானம் சொல்ல,

“ நான் ஏத்துக்கிட்ட வேலையை சரியா செய்யனுமில்லை, பேட்டாஜி. இந்த வீட்டில நான் யாரு, குன்னூர் வீட்டுக்கு கேர் டேக்கர் தான் பா , ஏதோ முடியாமல் கிடந்ததால் வச்சு பார்த்தாங்க, இதோ சரியாகிட்டேன், கமிட்மென்ட் இருக்கு, வேலையைப் பார்க்கக் கிளம்ப வேண்டியது தான்” எனப் பைரவி , சுய பச்சாபத்தில் பொங்கினார். ' கேர் டேக்கரைத் தான், நடக்க விடாத, கைல தூக்கிட்டு வாறான், கைலாஷ் ராஜன். இவளுக்கு ஏத்தத்தைப் பாரு. எவ்வளவு தூரம் போறையின்னு நானும் பார்க்கிறேன்' என ராஜன் அமைதி காக்க,

“பவானி, உன்னை இப்ப மருமகளா தான் மா கூட்டிட்டு போறோம்” எனப் பாலா நாயகம் பதற,

”அதெப்படி, நீ இந்த வார்த்தையைச் சொல்லப் போச்சு, உன்னை வேலை பார்க்கிறவளாட்டமா நடத்தினோம், நீ யாருன்னு தெரியும் முன்னையே மருமகள்னு உரிமை கொடுத்து வச்சிருந்தோம் .நீ அந்த நினைப்போடு எல்லாம் வரவேண்டாம் அம்மணி. எங்களை நாங்களே பார்த்துக்குவோம்” எனச் சௌந்தரி கோபப் பட்டார்.

‘சரிங்க அத்தை, உங்களுக்கும் நான் வேண்டாதவளா போயிட்டேன், என்னால ஆபத்துன்னு யோசிக்கிறீங்க போல , நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பலை.” எனவும்

, “ஆயி, என்ன பேசுறீங்க “ என ஆதிரா அவர் கையைப் பிடித்தாள் . "பவானிமா,உனக்கு என்னடா ஆச்சு” எனப் பன்னீர் மறுபுறம் வந்து பிடித்துக் கொள்ள, பாலநாயகம் , " ஏம்மா இப்படியெல்லாம் பேசுற. மனசில் எதாவது குறையிருந்தா கொட்டிடுமா. இருபது வருஷத்துக்கு முன்னாடி தப்பு பண்ணிட்டோம், அதுக்காக இப்ப தண்டிக்காதமா " என ஒரு புறம் ஓய்ந்து உட்கார,

" உங்களைத் தண்டிக்க, எனக்கு எங்க மாமா உரிமை இருக்கு, பெரிய குடும்பத்தில் பிறந்தா போதுமா, புருஷன் புள்ளை, மாமன், மாமின்னு வாழக் கொடுத்து வைக்கனும், ஆயி பவானி, குங்கமத்தை கொடுத்தவ, மத்த கொடுப்பினையைப் பறிச்சுக்கிட்டா. உங்க மகனும், தனியாவே வாழ்ந்தவருக்கு, அந்த வாழ்க்கையே பழகிடுச்சு, இனி நான் தேவையில்லை மாமா. உங்களுக்கெல்லாம் பார்த்த கேர் டேக்கர் வேலையைப் பார்க்கவும், இனி மனசிலையும், உடம்பிலையும் தெம்பு இல்லை. அது தான் பொறுப்பை முடிச்சுக் குடுத்திட்டு போகலாம்னு பார்க்கிறேன் " என்ற மருமகளிடம், வாக்கு வாதம் செய்ய இயலாமல் நாயகம் ஒரு புறம், தலையில் கை வைத்து உட்கார, பன்னீர் தான் பறந்து துடித்தார்.

கைலாஷ், பைரவி பேச, பேச, ' தனியா வாழ்ந்து பழகிட்டனா. நான் ஆசைப் பட்டு அப்படி இருந்தேன் பாரு, இருபது வருச தண்டனையும் அனுபவிச்சிட்டு உட்கார்ந்து இருக்கேன், வேண்டாம் ராஜா, வாயைத் திறக்காத, அவள் உன்னை நோகடிக்கிறதை விட, பல மடங்கு நீ அவளை நோகடிச்சிருவ. அவள் உசிருக்கே ஆபத்தா போயிடும்' என இறுகி தன்னை அடக்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்.

“அம்மணி, என் பேரன் எங்கிட்ட இல்லையேன்னு, கூடக் குறைய ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அதையெல்லாம் திரும்ப வாங்கிக்கிறேன். என்ர மகனை , திரும்ப நட்டாத்துல விட்டுட்டு போகாத “ என மருமகள் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார் சௌந்தரி.

‘நீங்க தான் அத்தை , என்னை உங்க மருமகள்னு சொல்றீங்க, உங்க மகன் அப்படி நினைக்கலை , நான் கிளம்பறேன்னு சொல்லவும் செக்யுரிட்டிக்கு தான் போன் பண்ணாரு, இத்தனை நாள் நீங்களும்,மாமாவும் மருமகளா தான் பார்த்தீங்க, ஆனால் உங்க மகன் என்னை நோயாளியா தான் பார்த்தார், இரண்டாவது செக்கப் போயிட்டு வந்து, நல்லா இருக்கேன்னு தெரியவும், விசாரிக்கிறதை கூட நிறுத்திக்கிட்டார். இன்னும் நோயாளியா கீழ் ரூம்ல தான் இருக்கேன், உங்க மகன், மனைவின்னு அந்தஸ்து குடுத்து, தன் ரூமுக்கா அழைச்சுகிட்டார் .” எனத் தன மனதின் ஏக்கத்தையெல்லாம் பைரவி வார்த்தைகளில் கொட்டவும்,

' அந்த உரிமை, உன்னது இல்லையா, அன்னைக்கே, சொன்னேன்ல. அட போடி, நீ தான் என்னைக்குமே, என்கிட்ட வரவே ஆசைப் படலை' என மனதில் நொந்து கொண்டார்.

“ஆயி, நீங்க படி ஏற கூடாதுன்னு , டாக்டர் சொன்னதினால் தான், பாபா தன் ரூமுக்கு கூட்டிட்டு போகலை, இதெல்லாம் பெரிய இஸ்யூவா ஆயி” எனப் பாபாவுக்கு வக்காலத்து வாங்கிய மகளை,

“உனக்கும் தான் ரஜ்ஜும்மா, ஆயியைப் பார்க்க கூட நேரமில்லை, அது சரி நான் உன்னைப் பார்த்திருந்தா தானே, மூணு வயசிலிருந்து கௌரி தான வளர்கிறா, அவளே உன் கூட இருக்கட்டும், என்னைக்குமே இந்த ஆயி, இதைச் செய்யாத, அதைச் செய்யாதேன்னு கட்டளை தான போட்டேன்.” எனவும்,

“தீதி , நான் உங்களுக்குத் தான் வேலைக்காரி, எனக்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. உங்களுக்காகத் தான், ஆதி முலேவை பார்த்துக்கிட்டேன், நீங்களே கிளம்பும் போது, எனக்கு இங்க என்ன வேலை , என்னை உங்களோடையே கூட்டிட்டு போங்க” எனக் கௌரி உணர்ச்சி வயப்பட்டார். "மாஸி நீங்களும் ஆரம்பிக்காதீங்க" என ஆதிரா கௌரியைக் கட்டிக் கொண்டாள்.

பைரவி ஒரு முடிவோடு ராஜனிடம் வந்து, “ஆதிரா, உங்க வாரிசு, நான் இல்லாமலே அவள் சமாளிச்சுக்குவா, குன்னூர்ல பெரியவர்களுக்கும், விஜயன் பாயிஸாப் , வேற ஏற்பாடு பண்ணிடுவாங்கன்னு, அபி சொல்லிடுச்சு, வயசு காலத்தில , வராத பொண்டாட்டி, வயசான பிறகு வந்தாலும் ஒரு பிரயோஜனமுமில்லை, பத்தாததுக்கு ஆபத்தையும், ஆஸ்பத்திரி செலவையும் தான் கொண்டு வந்திருக்கேன். தாலி கட்டின மனைவி ஏழு வருஷம் வரலைனாலே , அந்த விவாகம் ரத்துன்னு சட்டம் சொல்லுது, ,பதினாலு வருஷம் ஆகியிருந்தா, அந்த விவாகம் செல்லாதுன்னு தர்மம் சொல்லுது, சட்டப்படியும் , தர்மப்படியும் நான் உங்களுக்கு மனைவி இல்லை. நீங்க அந்தப் பந்தத்திலிருந்து விடுதலை அடைஞ்சவர் தான். 

என் நினைவுக்கு, ரஜ்ஜும்மா தான் உங்க மகள், அவளை உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். ஆதர்ஷ் உங்க மகன்னு ஆயி சொல்லித் தான் எனக்கே தெரியுது. நான் ஆயிக்கிட்ட நேரா உறுதி படுத்திக்கிறேன். அவன் உங்க வாரிசுன்னா, கட்டாயம் உங்க கிட்ட அனுப்பிடுவேன். இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிறதுக்கு அனுமதி குடுங்க, நாளைக்குப் போஸ்லே குடும்ப வாரிசு வந்து கூட்டிட்டுப் போயிடுவான்” என்றவர், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, மொபைலில் ஆதர்சின் நம்பரைத் தேடினார். ராஜன் அப்போதும் அசைந்தாரில்லை.

“பவானிமா,எல்லாம் நல்லதானடா போச்சு, திடீர்னு என்னடா கண்ணு, எடுத்தோம், கவிழ்த்தோம்னு, என்ர மகளாட்டமே நீயும் முடிவெடுத்திடாதா . எவ்வளவு அருமையா யோசனை சொல்லுவா, என்னடா ஆச்சு , பாலா என்னடா பேசாம உட்கார்ந்திருக்க, ராஜன் ஒரு வார்த்தை சொன்னா , பவானிக்கு ஏத்துக்கிட்டு அப்படிச் சண்டைக்கு வருவ, இன்னைக்கு உன் மருமகளுக்காகப் பேசமாட்டியா “ என அழைக்கவும்,

“என்னை என்னடா பேச சொல்ற, இது யாருன்னு தெரியும் முன்னையே மருமகள்னு உறவு கொண்டாடினோம், கடைசில கேர் டேக்கர்ன்னு சொல்லிடுச்சே. போதும் சாமி, என்ர குடும்பத்தைப் பெண் பாவம் தாண்டா பிடிச்சு ஆட்டுது , என்ர குடும்பத்துக்கு விமோசனம் கிடையாது “என நாயகம் விரக்தியாய் பேச,

சௌந்தரி, மகனிடம் வந்தவர் , “ராஜா, உன்ர பொண்டாட்டி தான் புத்தி பிசகி ஏதேதோ பேசுதுன்னா, நீயும் என் கண்ணு குத்துக் கல்லாட்டமா உட்கார்ந்திருக்க, உன்ர பிள்ளைகளை வயித்தில சுமந்து, நெஞ்சில தாலியைச் சுமந்து, தலைமறைவான சுத்தி , உன் மக்களை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்தியிருக்கு, இந்த மகராசியைத் தவிர, வேற யாராலயும் இதைச் செய்யமுடியாது. நீ ஒரு வார்த்தை சொல்லு, உன்ர காலடியிலேயே கிடைக்கும், பொம்பளை மனசு அதைத் தான்யா எதிர்பார்க்குது. என்ர குடும்பத்து மகாலெட்சுமியைப் போக விட்டுறாத. மறுபடியும் நீ தனிமரமா நிற்கிறதை என்னால பார்க்க முடியாது கண்ணு” என எடுத்துச் சொல்ல,

ராஜன் ஒரு முடிவோடு எழுந்தவர், ஆதர்சின் எண்ணை இன்னும் கண்டு பிடிக்க இயலாமல் கை நடுங்க, தவித்துக் கொண்டிருந்த மனைவி முன் சென்று நின்று, கையை நீட்டி ஒன்றைக் கேட்டார், பைரவியின் நினைவுகள் நிமிடத்தில் இருபது வருடத்தைக் கடந்தது. அதன் பின் விளைவு சகிக்க இயலாததாக இருந்தது.


நிலவு வளரும்.

No comments:

Post a Comment