Saturday, 12 March 2022

யார் இந்த நிலவு- 35

யார் இந்த நிலவு- 35


பைரவி பாய் போஸ்லே, தைரியமா துணிந்து செயல்களைச் செய்யும் பெண்மணி, ஆனால், கணவர் குடும்பம் பாதுகாப்பு என வந்த போது, உற்றவருக்காக அவரைப் போல் பயந்தவரும் யாரும் இல்லை. பயத்திலே விலகி இருந்தவர், கணவனின் ஞாயமான கோபத்தையும் கூடத் தாங்க இயலாதவராக , விவேகம் மறந்து, பொறுமை இழந்து, புத்தி பேதலித்து நின்றார். தன் கணவன் மேல் வைத்த அபரிமிதமான காதலே அவரைப் பிச்சியாகவும் மாற்றி இருந்தது.



கைலாஷ் ராஜின் கோபம்,  ஜெயந்தின் மீது கடும் நடிவடிக்கைகளாகவும், அன்று சொன்ன பிள்ளை பிறந்தது கூட தெரியாதளவு பிச்சியாகுமளவு , அவன் சொன்னால் , என் பாரு எப்படி நம்பலாம், என  வார்த்தைகளாக இல்லாமல் புறக்கணிப்பாக இருக்க, அதைத் தாங்காத பைரவியின் கோபம் வார்த்தைகளைக் கொட்டி, வெட்டிக் கொண்டு செல்வதாக இருந்தது. மகளையே வெளியேற விடாதவர், இருபது வருடமாக , மீளா இயலாத இடத்தில் தொலைத்து விட்டதாக நினைத்த மனைவி என்னும் அரிய பொக்கிஷம், அகப்பட்ட பின் விடுவாரோ. ஆனாலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, மனைவி தன் மேல் வைத்திருக்கும் பிரியத்தை வெளிக் கொண்டு வர அவர் செய்யப் போகும் செய்கை, அவரையே கூர் பதம் பார்க்கும் என அறியாமல், கோபமாகச் செல்லும் மனைவி முன் கை நீட்டி நின்றார்.


பைரவி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தவர், மொபைலை நீட்டி “ ராஜ், ஆதர்ஷ் நம்பரை எடுத்து குடுங்க, இதில் எப்படிக் கூப்பிடுறது “ எனப் புத்தி பேதலித்தது போல் கேட்க, கௌரிக்கு ,' தீதி பழைய மாதிரி ஆகுறாங்களோ' என வயிற்றைப் பிசைந்தது.


ஆனால் அதைப் பற்றி அறியாத கைலாஷ் ராஜன், “அது அப்புறம்" எனப் பைரவியின் மொபைலை பிடுங்கி, தன் சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொள்ளவும், பைரவி புரியாமல் பார்த்தார். " நீ தான் சட்டப்படியும், தர்மப்படியும் என்ர பொண்டாட்டி இல்லையின்னு சொல்லிடையில்ல , நான் கட்டின தாலியை மட்டும் எதுக்குப் போட்டு இருக்கிற, அதையும் கழட்டி கொடு, இனிமே என்ர பேரைச் சொல்லி உன் நெத்தியில் குங்குமம் வைக்கக் கூடாது “ எனக் கண்டிஷன் போட, விழுக்கென நிமிர்ந்து, எதிரே நின்றவரை முறைத்தார். பைரவியின் நினைவலைகள் இருபது வருடங்களை நொடியில் கடக்க, கண் முன் கணவன் மறைந்து, அந்த அரக்கன் கேட்டது தான் நினைவில் வந்தது.


“ராஜா “ எனப் பெரியவர்கள் அதட்டினர், அபிராம் இவர்கள் பேச்சு ரசாபாசமாகப் போகவும், தந்தைக்குப் போன் அடித்து விட, விஜயன் வண்டியை விரட்டிக் கொண்டு வந்தவர்,கூடத்துக்கு வந்து விட்டார்.


“பாபா, வேண்டாம். ஆயி  இதில ரொம்பச் செண்டிமெண்ட், இந்த விசயத்தில்  விளையாடாதீங்க, ஆயி உயிரே நின்னுடும்” என மகள் நடுவில் வந்து மன்றாட,


“ போகட்டம்டா கண்ணு, தினம் தினம் என்னைச் சித்திரவதை பண்ற அந்த உசிரு போகட்டும். இவள் உசிர் போனதுக்கு அப்புறம், என்ர உசிர் இங்க இருக்கும்னா நினைக்கிற. அதுவும் கூடவே போயிடும். என்ர பாருவே இந்த உலகத்தில் இல்லாதப்ப, என்ர உசிர் மட்டும் எதுக்கு இந்த உலகத்தில் இருக்குனு, எத்தனை தரம் எனக்கு நானே கேட்டுருக்கேன் தெரியுமா கண்ணு . ஆனால் உன் ஆயி உசிரோட இருந்ததுனால தாண்டா , என்ர உசிரும் இருந்திருக்கு. அது புரியாதவளா நிக்கிறா பார்" என மனைவி எதிரே நின்று கண்ணீர் விட்டவர்,


" போதும், இந்தப் பந்தத்திலிருந்து விடுதலை தர்றேன்னு சொன்னேல்ல, அதையும் கழட்டி கொடுடி, கிறுக்கச்சி " என ராஜன் கண்ணீரோடு முறைத்து நிற்க, " சடோ" என ராஜனையே தள்ளி விட்டு, பைரவி அங்கிருந்து நகர , ராஜன் தாக்கப்பட்டவராய் அதிர்ச்சியில் நின்றார்.


விஜயன் வந்து " என்னடா" எனக் கையைப் பிடிக்க, " பாருடா உன்ர தங்கச்சியை, பித்துப் பிடிச்ச மாதிரி, எவ்வளவு பேச்சுப் பேசிட்டா தெரியுமா. எனக்கு அவள் பொண்டாட்டியே இல்லையாம். அவளை எந்தச் சூழ்நிலையில உசிர பணையம் வச்சுக் கல்யாணம் பண்ணேன்னு உனக்குத் தானே தெரியும். அது இல்லையாமாம். செல்லாதாம்." என வரிசையாக, பைரவி சொன்னதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினார். “ராஜா, அது ஏதோ பிரம்மை பிடிச்ச மாதிரி இருக்குடா, நீயும் அவசரப் படாத “ என விஜயன் சமாதானம் செய்யும் வேளையில்,


உண்மையில் பைரவி பிரமை பிடித்துத் தான், வாசலை நோக்கி நடந்தார். கௌரியும், ஆதிராவுமாக ஓடிப் போய்ப் பிடிக்க முயல, அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. " அபி தம்பி பிடிங்க, அவங்க சுய நினைவுலையே இல்லை" கௌரி கத்தவும், அபிராம் ஒரு எட்டில் பைரவியை அடைந்தவன் "ஆண்டி நில்லுங்க" என அவன் கையைப் பிடிக்க, " என்னைத் தொடாத" என அபியையும் தள்ளியவர், மராத்தியில் ஜெயந்த்தை திட்டுவது போல் திட்ட ஆரம்பிக்க, அதிர்ச்சியடைந்த ஆதிரா " ஆயி" எனப் பைரவியை இறுகக் கட்டிக் கொண்டாள்.


சற்றே நெகிழ்ந்து, "ரஜ்ஜும்மா, ஆயி தாலியைப் பறிக்க வராங்கடா" என நொடியில் சிறு பெண்ணாய் அழவும், அவள் ஆயியின் முகத்தில் வழிந்த நீரைத் துடைத்து , கட்டியணைத்து முத்தமிட்டு " இல்லை ஆயி, யாரும் உங்க தாலியைப் பறிக்க முடியாது. கைலாஷ், பாருவுக்குக் கட்டின தாலி. யாருமே பறிக்க முடியாது" என ஆயியின் குணமறிந்து, ஆதிரா சமாதானப் படுத்தி, அங்கேயே அமர வைக்க,


கௌரி , பைரவி கன்னத்தில் தட்டி, " தீதி என்ன செய்றீங்க. எல்லாம் சரியாகிட்டு இருக்கு தீதி. மனசை விட்டுறாதீங்க. " எனப் பதறியவர், "அபி தம்பி தண்ணீ எடுத்துட்டு வாங்க விட்டா பழைய படி ஆகிடுவாங்க. " எனப் பதறினார், அபிராம், தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.


ஷோபாவில் பைரவியை அமர்த்தி, "ஆதுமா, பின்னாடி பிடி, " எனக் கௌரி வேகமாகக் கட்டளைகளை இட," என்னமா செய்யிற" என வந்தார் சௌந்தரி.


" இப்ப தெளிய வைக்கலைனா, மனசை விட்டுருவாங்கம்மா, மாசமா இருக்கையில இப்படித் தான் கிடந்தாங்கன்னு, அவங்க ஆயி அடிக்கடி சொல்லியிருக்காங்க. " என்றவர், ஒரு டம்ளர் நிறையத் தண்ணீர் எடுத்து, பைரவியின் முகத்தில் வேகமாக அடிக்கவும் , பைரவி திடுக்கிட்டார். மேலும், இரண்டு மூன்று முறை சட்டெனத் தண்ணீர் தெளிக்க, சௌந்தரி, தன் சேலை தலைப்பால் மருமகள் முகத்தைத் துடைத்து விட்டார்.


கைலாஷ், நண்பனிடம் புலம்புவதை விட்டு, மனைவி பின்னால் வந்தவர் " மாஸிமா, என்ன பண்றீங்க' எனப் பதட்டமானார். " நீங்க, அவங்க கிட்டத் தாலியைக் கேட்டிருக்கக் கூடாது சாப். அது அவங்களை ரொம்பப் பாதிக்கும்" எனக் கௌரி சொல்லவும்,


மனைவி அருகில் அமர்ந்து, " பாரு, ஒண்ணும் இல்லடா,நான் கேட்டது தப்பு தான் மன்னிச்சிரு, பாரு, பாரு" என அவரைக் கைலாஷ் அணைத்துப் பிடிக்கவும்,


"கிட்ட வராத தள்ளி போ, என் தாலி, என் ராஜ் கட்டினது. தொடாத மார் டாலூங்கி" எனப் பைரவி சிம்மமாய்க் கர்ஜிக்க, அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர். எங்கே மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்திடுமோ எனப் பயந்தனர்.


" பாரு, உன் ராஜ் தாண்டா. நான் கேட்கலைமா. உன் தாலி உன் கழுத்தில் தான் இருக்கு" என்ற சமாதானம் அவரைச் சென்றடையவே இல்லை. அபிராம், ஏற்கனவே டாக்டரை வரவழைத்திருந்தான், அவர் வந்து ஒரு ஊசி போட்டு பைரவியை அமைதிப் படுத்தினார். சற்று நேரத்தில் பைரவி நித்திரைக்குச் செல்ல, ராஜன், தன் மடியில் படுக்க வைத்திருந்தார்.


ஆதிரா, கண்ணீர் வடித்தபடி, பூஜையறையிலிருந்து, திருநீரு, குங்குமத்தை எடுத்து வந்தவள், " மருதமலை கோவில் பிரசாதம், ஆயிக்காக வேண்டிக்கிட்டது" என அதை பூசி விட்டவள், துல்ஜா பவானி குங்குமத்தை நீட்டி பாபாவிடம்  " ஆயிக்கு வச்சுவிடுங்க. அப்படி எப்படி கேட்கலாம். ஆயி இதில ரொம்ப செண்டிமெண்ட்" எனவும், 


"சரி கண்ணு, பாபா கேட்டது தப்பு தான்" என்றவர், பைரவி எப்போதும் விரும்பும் குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றி வகிட்டை நிறைத்தார். 


" ஆயியை விட, நீ செண்டியாகிட்டடா, ரஜ்ஜும்மா" என்றவர், " இதென்ன மருமதலை விபூதி" என கேட்கவும், ஆதிரா முழிக்க, அபிராம், " சத்தியன், சங்கீதாளுன்னு, ஒரு க்ரூப்பே, உங்களுக்காக வாரம் வாரம் மருதமலை  போறாங்க மாமா. " என அபிராம், அவசரமாக இடை மறித்து , மற்றவர் அறியாமல் ஆதிராவை கண்ணால் எச்சரித்தபடி  சொன்னான். 

கைலாஷின் பார்வை, பைரவி மேல் இருந்ததால், இவர்களை கண்டு கொள்ள வில்லை. 


" எல்லாரும், நீங்க நல்லபடியா இருக்கோணும்னு தான் சாமிய வேண்டிக்கிறாங்க, இருக்கையிலையே திடீர்னு என்ர மருமகளுக்கு என்னாச்சு , இப்படியெல்லாம் இதை பார்த்ததே இல்லையே" என சௌந்தரி, கௌரியை வினவினார். 


கௌரி, கண்ணீர் வழிந்தபடி, தன் தீதியின் கதையை ரமாபாய் வரிகளில் சொல்ல ஆரம்பித்தார். கைலாஷ் ஏற்கனவே  மாமியாரிடம் அறிந்த விசயம் கௌரி மூலமாக அனைவருக்கும் தெரிய வந்தது. மனைவியையே பார்த்திருந்தவருக்கு, தான் கையோடு பாருவை அழைத்து வராததை தவிர, இரண்டு மாத காலத்தில், மனைவியிடம் தன் மேலான நம்பிக்கையையும் விதைக்க வில்லையோ என்ற ஐயமும், வந்தது. தான் எங்கு தவறு செய்தோம் என கௌரியின் வார்த்தைகளை மீண்டும் கவனமாக கேட்டார்.


சந்தன் கட்டில் , கைலாஷ் கிளம்பிய ஒரு வாரம் கழித்து, உடைகள் கிழிந்து, உடல் மெலிந்து, மூன்று நாள் பட்டினியாய் கிடந்த பிச்சியாகத் தான் அந்தக் குகை வீட்டிலிருந்து மகளை மீட்டார் ரமாபாய்.


அதற்கு முன் நடந்ததை அவரால் யூகிக்க மட்டுமே முடிந்தது. ஏனெனில் எதையும் சொல்லும் நிலையில் பைரவி இல்லை.


அதுவுமே ஜெயந்த் எள்ளலாக, நீ நல்லவன்னு நினைச்சு கட்டி வச்சியே, உன் தாமாத், அவன் உன் மகளை அனுபவிச்சிட்டு, விட்டுட்டு ஓடிட்டான். அது மட்டுமில்லை, அவன் சொந்த ஊருக்குப் போய், அவன் ஆயி, பாபா பார்த்த பொண்ணைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டான்" எனச் சிரிக்கவும்,


" இல்லை, என் தாமாத் அப்படிப் பட்டவர் இல்லை" என ரமாபாய் கத்த,


" இதே மாதிரி தான், உங்க மகளும் கத்தினா. போன் போட்டுக் கொடுத்தேன், உன் தாமாத்தோட பத்னியே பேசினா. அப்புறம் தான் நம்பினா. கிறுக்கி, அந்தப் போலி மங்கல் சூத்திரத்தைக் கழட்டி எறிஞ்சுட்டு வா, நான் வாழ்க்கை தர்றேன்னு சொன்னேன். கேட்கலை, அடம் பண்ணா" எனத் தன் பிரதாபத்தை ஜெயந்த் சொல்லவும், " என் மகள் எங்கடா" என ரமாபாய் ஒருமையில் இறங்க,


" மரியாதை சாஸும்மா. மரியாதை, ஏன்னா இந்தச் சொத்துக்கு ஏக வாரிசு நான் தான். உன் மகள் என் கண்ணில மண்ணைத் தூவிட்டு, அந்த அணைக்கட்டு மலை மேல ஓடினா. இந்நேரம் விழுந்து செத்திருப்பா, இல்லைனா புலி அடிச்சிருக்கும்" என இளக்காரமாகச் சொல்லவும் வெகுண்ட ரமாபாய். தூ என அவன் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு, “என் மகள் மட்டும் கிடைக்கலை, நீ அதுக்கும் கீழ் பட்ட நிலைக்குப் போவ" எனச் சவால் விட்டு, சந்தன்கட் நோக்கிக் கிளம்பினார்.


துக்காராமிடம் விசாரிக்க, அவன் அழுதபடி "குஃபால தான் ராணிமா இருக்காங்க. ஆனால் சொல்ற நிலமையில இல்லை" என ரமாபாயை அங்குக் கூட்டிச் செல்ல, அந்தக் கல் மேடையில் படுத்துக் கொண்டு, " ராஜ்" என அவர் இருப்பதாக நினைத்து வெட்கப்பட்டும், பேசிக் கொண்டும் இருந்த மகளைப் பிச்சியாகக் காணவும் ரமாபாய்க்கு, இரத்த கண்ணீர் வந்தது.


மகளை அழைத்து, தன்னுணர்வுக்குக் கொண்டு வர, " ஆயி, ராஜ் வேற பொண்ணை ஷாதி பண்ணிக்கிட்டார்" என அழுது புலம்பி மயங்கிச் சாய, ராணி போல் கம்பீரமாக இருந்த மகளை, இந்தக் காதல் என்ன பாடு படுத்துகிறது எனப் பார்த்தவர், மகள் கற்பனையிலாவது சந்தோஷமாக இருக்கட்டும் என நினைத்தார். ஏனெனில் நினைவு வரும் போது, தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டார்.


அங்கிருந்து மகளை அழைத்துக் கொண்டு, மும்பை சென்றவர், உள்ளடி வேலைகளாகச் செய்து, ஜெயந்துக்கு நெருக்கடி தரும் வேலைகளை ஆரம்பிக்க, பைரவியின் உடல் மெலிவு, சாப்பாடு ஒவ்வாமைக்குக் காரணம், அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்பதை அறிந்தார்.


அதன் பின் மகளைப் பராமரிப்பதையும் தனது சொத்தை பெருக்குவதிலுமே தனது கவனத்தைச் செலுத்தினார். மகளின் இந்த நிலைக்கு, அவளை அனாதரவாக விட்டுச் சென்ற மருமகனும் காரணம் என்ற முடிவுக்கு வந்தவர், கைலாஷ் பற்றிப் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் விட்டார்.


பைரவி சரியான சாப்பாடு போஷாக்கு எடுத்துக் கொள்ளாமல் போனதில் இரட்டை குழந்தைக்கான வளர்ச்சியே தெரியவில்லை. பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்த்த போது தான், இரட்டை குழந்தை என்பதே தெரிந்தது. இரண்டு குழந்தைகளும் இரண்டு கிலோவுக்கும் குறைவான எடையுடனிருக்க, அரும்பாடு பட்டு, பேரன் பேத்திகளைப் பிழைக்க வைத்தார் ரமாபாய்.


குழந்தை பிறந்த பின்னரும் பைரவி அதைத் தேட வில்லை. ராஜ், ராஜ் கணவன் நினைவிலேயே கிடந்தார். ஜெயந்தின் ஆட்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டு, இவர்களை முடிக்க வர, ரமாபாய் அவர்களைத் தாக்கி விட்டு, மகளோடும், பேரன் பேத்திகளோடும் , விசுவாசமான வேலையாட்களோடும் தலை மறைவானவர், லண்டன் செல்ல வந்த தங்கை மகளோ, தங்கள் குடும்பத்தின் ஆண் வாரிசை அனுப்பி வைத்தார்.


பெண் குழந்தையை மட்டும் மகளோடு வைத்துப் பராமரித்தார். பிஞ்சு குழந்தை, முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தது முதல், பைரவி, அந்தக் குழந்தை முகத்திலேயே ராஜைக் காண ஆரம்பித்தார். அப்போதே கௌரியைத் தாதியாக நியமித்தார் ரமாபாய்.


பைரவி சற்று தெளிந்தவர், ராஜைப் பற்றிக் கேட்கவும், தான் கேட்ட விசயங்களை மட்டுமே சொல்ல, மற்றொரு மணம் முடித்த கணவன் மேல் கோவிக்கவும் வழியின்றித் தன்னுள் உழன்றார்.


சில வருடங்களுக்குப் பிறகு, தங்கள் திருமணநாளின் போது சந்தன்கட் சென்ற போது தான், கைலாஷ் பாரு, பாருவென உருகியது தெரிந்தது. அதற்குப் பிறகும் ஜெயந்தால் தன் ராஜின் குடும்பத்துக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சியும், தன் மேல் உயிராக இருப்பவரைச் சந்தேகித்தோமே என்ற பச்சாதாபம், பயம் அவரைக் கைலாஷை நெருங்க விடவில்லை.


ரமாபாய், பைரவி தன்னால் சமாளிக்கும் வரை உடனிருந்தவர், அதன் பிறகு, தான் பைரவியோடு சேர்ந்து இருப்பதும் ஆபத்து எனத் தான் லண்டன் செல்வதாகவும், இனி மகளே உன் சமத்து என விட்டு விட்டு, மகளிடமிருந்து மறைத்து வளரும் பேரனை வளர்க்கச் சென்று விட்டார். ஆனால் நிழல் போல், ரமாபாய் ஆட்கள் பைரவியே பாதுகாத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.


" ஆதிரா, முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பிக்கும் போது தான், ராஜ், ராஜ்னு உங்க பேரைச் சொல்லி மீண்டு வர ஆரம்பிச்சாங்கன்னு சொல்லுவாங்க. " எனக் கௌரி சொல்லி முடிக்க, எல்லாருடைய கண்களிலும் இரத்தக் கண்ணீர். 


கைலாஷ் , பாருவையே பார்த்தபடி இருந்தவர், " மாஸிமா, உங்க தீதிக்கு, என்னை சந்தேகப்பட , அந்த பொம்பளை பொறுக்கி  சொன்ன ஒரு வார்த்தை போதுமா இருந்திருக்கு பாருங்க" என விரக்தியாக சிரிக்கவும்.


" இல்லை சாப், தீதி அவன் சொன்னதை நம்பியிருக்க மாட்டாங்க, வேற ஏதோ நடந்திருக்கு. அது அவங்களே தான் சொல்லனும்" என கௌரி, பைரவிக்கு வக்காலத்து வாங்கினார். 


அபிராம் தான் மாமனை புரிந்தவனாக, " ஏனுங்க மாமா, கௌரி ஆண்டி சொன்ன விசயமெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுங்களா, தெரிஞ்சும், அவிக கிட்ட,  அந்தாளாட்டமே எதுக்கு தாலியை கேட்குறீங்க" என வினவவும், மற்றவர்களும் கைலாஷை கேள்வியாக நோக்க,


" உன்ர மாமன், அத்தைக்கு அதிர்ச்சி வைத்தியம் செஞ்சிருப்பான். இவரு பெரிய ஹீரோல்ல, பைரவி இவரை எப்படி நம்பாமப் போகலாம். அந்த கோபத்தை காட்டியிருப்பான்" என விஜயன் நண்பனை குற்றம் சுமத்தவும், 


" ஒழுங்கா முறையா இவருக்கு  என்னைக்கு பேச தெரிஞ்சிருக்கு. அது தெரியாத, காரியத்தை கெடுக்கிறது தான் இவரு வேலை" என நாயகம்  தன் பங்குங்கு மகனை திட்டினார். 


கைலாஷ், தந்தையை முறைத்தவர், மகள் ஏதும் சொல்வாளோ, என அவள் முகத்தையே பார்க்கவும், " பாபாவோட கோபமும் ஞாயமானது தானே, ஆயி சந்தேகப்பட்டதால எவ்வளவு இழப்பு. ஆனால் அதுகாகாக ஆயி, நொந்து தனக்கு தானே கொடுத்துக்கிட்ட தண்டனையை , குடும்பத்தில எல்லாருமே அனுபவிச்சோம்" என வருந்திய மகளை, மறு புறம் கை வளைவில் அமர்த்தி, உச்சி முகர்ந்தவர், " இனி, எல்லாத்தையுமே ஈடு செய்வோம்டா" என ராஜன் உறுதி தர , அவர் தோளில் சாய்நாதுக் கொண்டவள், 


“ஆயி, கஷ்டப் பட்டாங்கன்னு தெரியும் பாபா.  ஆனால் இவ்வளவு கஷ்ட பட்டாங்கன்னு தெரியாது. எங்களை ஊர், ஊரா கூட்டிட்டு திரியிவாங்க, அதுவும் நானும் மாசியும் தான் ஒண்ணா போவோம், அவங்க அதுக்கப்புறம், யாருக்கும் தெரியாம ரகசியமா தான் வருவாங்க” எனத் தனக்குத் தெரிந்ததை ஆதிரா சொன்னாள். 


பக்கத்து சோபாவில் அமர்ந்திருந்த விஜயன், “இரண்டு வருசத்துக்கு முன்னாடி, பெங்களூர்ல , ஒரு மீட்டிங்கு போயிருந்தப்ப, எனக்கு ஒரு போன் வந்தது, உங்க நண்பனின் மனைவியைப் பத்தின விஷயம்னு சொல்லவும், அந்த இடத்துக்கு ஓடினேன். சோலாப்பூர்ல எப்பவுமே, இவங்களைப் பற்றிய கதை தான் இருந்ததே ஒழிய, உண்மை என்னனு யாருக்குமே தெரியாது.


தங்கச்சிமா, அன்னைக்கு என்னைச் சந்திச்சாங்க. என் நண்பனோட காதலுக்கு எவ்வளவு வலிமைனு அன்னைக்குப் புரிஞ்சுக்கிட்டேன். ஏன்மா இவ்வளவு நாள் நீங்க உயிரோட இருக்கிறதைச் சொல்லலை, ராஜா எவ்வளவு சந்தோசப் படுவான் தெரியுமான்னு , நானே அவ்வளவு சண்டை போட்டேன், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு, தன் நிலைமையையும் சொன்னாங்க" என்றவர், ராஜனை பார்த்து


"தன மகள் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லவும், மகளான்னு ஆச்சரியம், ஆமாம் பாய் சாப், உங்க நண்பரோட மகள்னு , இத பொண்ணு மயிலு போட்டோவை காமிச்சாங்க". என ஆதிராவின் முகத்தைத் தொட்டு வாஞ்சையாக தடவி,


" தங்கச்சிமா மாதிரியே இருந்தாலும் சிரிக்கும் போது, அப்படியே என் ராஜா தான். என்ர புள்ளைகளையே உருகி, உருகி வளர்கிறான், அவனுக்கு ஒரு மகள் இருக்கிறது தெரிஞ்சா, உலகத்தையே தலை கீழா மாத்துவான்னு சொன்னேன். அதுக்கான நேரம் வரலைன்னு சொன்னாங்க" என்று நிறுத்தியவர், பாலநாயகம், சௌந்தரியைப் பார்த்து,


"நம்ம குடும்பங்களைப் பத்தி விசாரிச்சி வச்சிருந்தாங்க மாமா. எனக்கு என் மாமியார், மாமனாருக்குச் சேவை பண்ணனும், அவங்க என்னை மனசார ஏத்துக்கிட்டா தான், நான் ராஜ்கிட்ட போக முடியும். எனக்கு அதுக்கு உதவி செய்ங்கன்னு கேட்டாங்க. குன்னூரில் கொண்டு வந்து விட்டேன். மகராசி ராஜ குடும்பத்தில் பிறந்தும், புருஷன் குடும்பம் முக்கியம்னு நினைச்சது பாருங்க” என்றார்.


ராஜன், மனைவியின் சிகையை வருடியவர்," ஏன்ரா, இத்தனை ப்ளான் போட்டவ, என்ரகிட்ட வரக் கூடாதுன்னும், ப்ளான் போட்டாலாக்கும்" என நண்பனைக் கேட்டார்,


" அடுத்து அதுக்குத் தாண்டா வர்றேன், உன்ர மகளை இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வச்சு, ட்ரைனிங் உன்கிட்ட தான் அனுப்பணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தாங்க, விதி, மாமனையும் மருமகனையும் பெங்களூர் அனுப்பி, உங்களை ஒன்னு சேர்த்திருச்சு” என்றார்


" அப்ப, உன்ர தங்கச்சி என்ரகிட்ட வர்ற ப்ளானே இல்லை, அது தான" எனக் கோபப்படவும், " அதுக்குத் தான், என்ர கல்யாண நாளை கொண்டாடலாம்னு இருந்தேன், அதுக்குள்ள உன்ர மகன் வந்து கேமை மாத்திட்டாப்ள" என விஜயன் விளக்கவும்


" ஏனுங்கப்பா, இது எதுக்கு, சுத்தி வளைச்சு மூக்கை தொடரது. மாமா என்னா அம்புட்டு டெரரா, பாவம் மனசன், அத்தை , ஒரு லுக் விட்டாங்கனாலே, மாமா சரண்டராகிடுறாரு. " என அபி மாமனுக்கு வக்காலத்து வாங்கவும்,


" ம்க்கூம், அதைச் சொல்றா மாப்பிள்ளை, உன்ர அத்தை இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டால்னா நான் சரினுட்டு போறேன். இங்க பாரு, இப்படிக் கிடக்கிறதை" என வருந்தவும்.


" ஆயியை அவ்வளவு பேச விட்டு கம்முன இருந்தீங்க பாபா.ரூமுக்கு கூப்பிடாததுக்கு ஒரு சமாதானமாவது சொல்லியிருக்கலாம் " என மகள் குறை சொல்ல, " அட என்ன கண்ணு, நீயும் இப்படிச் சொல்ற, படி ஏறக்கூடாதுன்னு தான பேசாத இருந்தேன், நீயே சொன்னியில்ல" என்றார். 


" அதுக்குன்னு, ஆஞ்சியோ செஞ்ச அம்மணியை, டென்ஷனாக விடலாமாக்கும்" எனப் பாலநாயகம் மகனை முறைத்தார்.


" அப்புச்சி, அது விசயமே வேற" என்ற அபிராமை, " என்ரா" என ராஜன் கேள்வியாக முறைக்க,


" ஏனுங்க மாமா, உங்க ரூம்பை சுத்தம் பண்ணாத,எப்படி அத்தையை உள்ள விடுவீங்க" எனக் கண்சிமிட்டிக் கேட்கவும். ராஜன் அவனை முறைக்க,


" செல்லி, தினமும் சுத்தம் செய்யத் தான செய்யிறா, பிறகென்ன" எனச் சௌந்தரி புரியாமல் பேச, ஆண்கள் மட்டும் ரகசியமாக நகைத்தனர்.


" பாபா, ஆயிக்கு எல்லாம் தெரியும். நீங்க ரொம்பப் பண்ணாதீங்க. " என ஆதிரா ஒரு குண்டை தூக்கிப் போட,


விஜயன், " உன்ர ஆயிக்கு, இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே, உன்ர அப்பன் என்ன செய்வான்னு தெரியும் மா. அரை மயக்கத்தில் இருக்கவனை, வழிக்குக் கொண்டு வர்றதே உங்க ஆயி தான்" என அணு குண்டைத்  தூக்கிப் போட,


" மாம்ஸ், அப்ப அடி கன்பார்மடு" என ரகசிய மொழி பேசினான் அபிராம். ராஜன், தூயில் கொள்ளும் மனைவியைப் பரிதாபமாகப் பார்த்தார்.


கத்தி,கதறி,ஓய்ந்து தூங்கும் மருமகளையே பார்த்திருந்த நாயகம்,“என்ர மகனை பத்தி, இல்லாததைச் சொல்லி மருமகளை, இந்தப் பாடு படுத்தினவன் யாரு “ என வெகுண்டார், “பைரவியோட அக்கா, பவானியோட புருஷன் “ என விஜயன் சொல்லவும், “அக்கா பேரைத் தான், தன் பெயரா சொல்லிகிடுச்சா” எனப் பன்னீர் கேட்டார்.


, “இல்லைங்க மாமா, ஆயி துல்ஜா பவானி, அவங்க குல தெய்வம், அம்மணி தெய்வ சங்கல்பம்ன்னு தான் எதையுமே செய்வாளுங்க , என்னை அந்த அம்மா கை காட்டுச்சுன்னு தான் கண்ணாலமே கட்டிக்கிட்டா” என ராஜன் சொல்லவும்.


“அந்த ஆயி, இப்ப என்ன சொல்லுச்சுன்னு, இந்த ஆட்டம் காட்டிச்சு, உன்ர பொண்டாட்டி “ எனக் குறை பட்டார் சௌந்தரி.


“ மருமகள், மருமகள்னு சொல்றீங்க, மகனோட சேர்த்து வைக்கணும்னு உங்களுக்குத் தோணலையே, விருந்தாடியா , அந்த அறையில தான இருந்தாங்க, வீட்டுக்கு உரிமை பட்டவளா , புருசனோட, அவங்க ரூமலையா இருந்தாங்க, அது தான் எங்க தீதிக்குக் கோபம், அருள் வந்து ஆடிட்டாங்க, இன்னும் பாக்கி இருக்கு” எனக் கௌரி ராஜனுக்குப் பயம் காட்டினார்.


" போதுமடா சாமி, என்ர பொண்டாட்டியை, நான் என்ர ரூமுக்கு தூக்கிட்டு போறேன். இனி அவள் என் கூடத் தான் இருப்பா. " எனத் தூக்க முயல, " மாமா, நான் தூக்கிட்டு வர்றேனுங்க" என்றான் அபிராம்.


" இல்லை கண்ணு, எனக்காக எத்தனைய சகிச்சு இருக்கா. நான் தான் அவளுக்கான சகலமும். " என மனைவியைக் கைகளில் தூக்கிக் கொண்டு, மாடி ஏறப் போனவர்,


பால நாயகத்தைப் பார்த்து, " அப்பா, எனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்னு சொல்லிப் போட்டு குன்னூரைப் பார்க்கப் போறேன்னா என்னா அர்த்தம். பொறுப்பான அப்பாவா இருந்து, மகனுக்குக் கல்யாணத்தை முடிச்சு போட்டு போங்க.ஒரு வாரத்தில ஒரு நல்ல நாள் பாருங்கப்பா, மறுக்கா, உங்க மருமகளைக் கல்யாணம் கட்டிக்கிறேன். இப்பவே, புருஷன் போஸ்ட்லருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டா. அடுத்து அருள் வர்றதுக்குள்ள சேர்த்து வைங்க" எனவும்.


"  உன்ர மகனுக்கு எகத்தாளத்தைப் பார்த்தியா, மருமகளை கீழ உலுக்காட்டிராத தூக்கிட்டு போ, கல்யாண வயசில, பையனும், புள்ளையுமிருக்குது, இவன் டீனேஜ் பயலாட்டம் ,லொள்ளு பண்ணிக்கிட்டு அலையிறான் " எனப் புலம்பிக் கொண்டே மகனின் திருமண வேலையை அந்தக் கணமே ஆரம்பித்தார் பாலா நாயகம்.


ஆனால் நாளை,கண் விழிக்கவும் மருமகள் என்ன செய்யக் காத்திருக்கிறதோ என்ற பயமும் இருக்க, சௌந்தரி வசந்த விலாச சகாக்களை அங்கே , காலை உணவுக்கே கூட்டி ,ஒரு திட்டத்தோடு இருந்தார்.


கைலாஷ்- பாரு சண்டை சமாதானம் ஆகுமா ,பார்ப்போம்.



நிலவு வளரும் .




No comments:

Post a Comment