யார் இந்த நிலவு-38
மதியம், சாப்பிட்ட பிறகு, ஆயி, பாபா ஓய்வெடுக்க, அந்தச் சமயம் அலுவல் விசயமாகக் கேட்டுக் கொண்டு, ஆயிக்கு பாபாவோடு ரொமான்டிக் ஆகப் பேசிக் கொண்டிருக்க, யோசனை சொல்லி , பைரவி எதுவும் சொல்லும் முன் ஆதிரா ஓடிவிட, கைலாஷ் ராஜன் மகள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவர், “அருமையான பிள்ளைகளைப் பெத்துக் கொடுத்திருக்க அம்மணி , இதுக்கே, இருபது வருஷ பிரிவையும் மன்னிச்சிடலாம் “ என மனைவியைக் கொஞ்சவும், அவருக்கு இழைந்து கொடுத்தவர்,
“இப்ப, இப்படித்தான் சொல்லுவீங்க, அதுக்கப்புறம் முகத்தைத் தூக்கி வச்சுக்குவீங்க, நீங்க முகத்தை லேசா சுழிச்சாலும், இனிமே என்னால தாங்க முடியாது ராஜ்” எனப் பைரவி சொல்லவும், “அது தான் ஒரு டெமோ காண்பிச்சிட்டியே அம்மணி , இனிமே அம்புட்டு தகிரியமா நான் முகம் திருப்பிடுவேனாக்கும்” என அவர் வாயை விட, “க்யா ஜி “என்றார் .
“ஒண்ணுமில்லை அம்மணி, எந்தப் புருசனும், பொண்டாட்டிகிட்ட ரொம்பக் காலத்துக்கு முகத்தைக் காட்டிட்டு நிம்மதியா இருந்துடுவானாக்கும் , அதையே தான் சொன்னேன்” எனப் பேச்சை மாற்றியவர், அவரது கூந்தலை தொட்டு காட்டி ,
“ பாரு, அப்போ மில்லுக்கு வரும் போதெல்லாம், தளர பின்னல் போட்டு,முடி இடுப்பு வரைக்கும், இப்ப அதெல்லாம் காணோம், விஜயன் கல்யாண நாளுக்குத்தான் ஜடையாவது போட்டிருந்த, மத்தபடி, இந்த மடிச்சு கட்டின கொண்டை தானாக்கும் “எனக் குறை பட்டவரைப் பார்த்துச் சிரித்த பாரு, “ராஜ் இதெல்லாமா கவனிக்கிறீங்க” எனவும்
“இரண்டு மாசம் , உன்னோட வாழ்ந்த வாழ்க்கை, நீ என்ர மனசில நிறைஞ்சது தான் பாரு, இருபத்திரண்டு வருசமா என்னை வாழ வச்சது. கூபாகர், மட்டுமில்லை உன்னோடபாசம்,காதல், சிரிப்பு, கோபம், சிடுசிடுப்பு, கவலை, சந்தோசம், இந்த வெட்கம் எல்லாமே எனக்குள்ள இருக்கு அம்மணி” என்றவரின் மார்பில் சாய்ந்திருந்த பாருவின் கண்ணில் நீர் பெருக ,”இப்படி உணர்ச்சி வசப்பட்டு அழுதினாக்கும் , வேற எதையுமே சொல்லமாட்டேன் ” என அவர் மிரட்டவும்,
“இல்லை ராஜ் சொல்லுங்க, நான் எமோஷனல் ஆகலை, என்னை எவ்வளவு மிஸ் பண்ணினீங்கங்கிறதை கேட்டாவது மனசை தேத்திக்கிறேன்” எனவும் , அதன் பிறகு தான் செய்த லீலைகளையும், விஜயனும், சத்தியனையும் படுத்தி வைத்ததையெல்லாம் சொல்லி , அதற்கு எதிர்வினையாக மனைவியின் நவரசங்களையும் ரசித்திருந்தார்.
மகள் மில்லுக்குள் தான், இருக்கிறாள், அபிராம் உடன் இருக்கிறான், என மனைவியோடு மதியப் பொழுதைக் கழித்தவர், பத்து நாட்கள் பராமுகமாக இருந்ததுக்கெல்லாம், சேர்த்து வைத்து , தன் வழக்கமான பாணியில் பேசிக் கொண்டிருக்க, பைரவியும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது சிறு மறுமொழிகளோடு சிரித்த மனைவியின் அழகில் மதி மயங்கி , நேரம் போனது தெரியாமல் கதைத்தவர், சௌந்தரி இன்டர்காமில் அழைக்கவும் தான் இறங்கி வந்தார்.
"ஏன் கண்ணு, இன்னைக்குப் பூஜையெல்லாம் செய்யலையாக்கும்" என மருமகளைக் கேள்வி எழுப்பவும், " இதோ அத்தை, உங்க மகன் பேசிட்டே இருந்தாங்களா, நேரம் போனது தெரியலை" எனப் பூஜை அறைக்குச் செல்ல, கைலாஷ் பின்னாடியே சென்றார்.
" சௌந்தி, நீதான் அவிக பூஜைக்கு நடுவில கரடியாகிட்டியாட்டத்துக்கு, உன்ர மகன், உன்னை அப்படித் தான் முறைச்சிட்டுப் போறான்" என நாயகம் மனைவியைக் கேலி செய்ய,
" நீங்க தான், என்ர மகன் மனசுக்குள்ற போய்ப் பார்த்திட்டு வந்திங்களாக்கும். அப்பாவும் மகனும், இன்னும் சரியா மூஞ்சி கொடுத்துங் கூடப் பேசறதில்லை. இந்த லொள்ளு பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" எனச் சண்டை கட்ட,
பன்னீர் ," இது உனக்குத் தேவையா, என்னத்துக்கு, வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற" என நாயகத்தை வம்பிழுத்து பேசிக் கொண்டிருக்க, கைலாஷ் பூஜையறையிலிருந்து திரும்பி வந்தவர் மற்றவர்களைக் கேட்டார்.
" ராமு குடும்பம், வீட்டுக்கு கிளம்பிட்டாங்க " என விவரம் சொல்ல, " இன்னும் ரஜ்ஜும்மாவை காணமே" எனப் பைரவி யோசனையாக வாசலைப் பார்க்க, "அட நம்ம மில்லுக்குள்ற தான இருக்குது , இன்விடேசன் கார்ட் செலக்ட் பண்ணி வைக்கிறேன்னு சொல்லுச்சு, அதைய செய்யுமா இருக்கும்" எனக் காரணம் சொன்னவர், நிதானமாகக் காபி டிபனை முடித்துக் கொண்டு, மகளுக்கும் எடுத்துக் கொண்டு, அலுவலகத்தை நோக்கிச் சென்றார்.
தனது அறையிலும், அவளுக்காக உருவாக்கப்பட்ட கேபின், அபிராம் அறை எங்குமே காணவில்லை என விசாரிக்க, சம்பத் , " மூணு மணிக்கு அபி சாரோட வந்தாங்க. அப்புறம் பார்க்கலைங்களே" எனவும் , சங்கீதா, சத்தியனும் அங்கு இல்லை, என விசாரித்து வந்து சொன்னவர், " ஒரு வேன் நிறைய வேலைப் பார்க்கிற பொண்ணுங்களும் , எங்கையோ கிளம்பி போனாங்களாம் சார்" உபரி தகவலையும் சொன்னார். கைலாஷ் மகளுக்குப் போன் அடிக்க, அழைப்பு சென்று கொண்டே இருந்தது, எடுக்கப்பட வில்லை.
மாலை மூன்று மணிக்கெல்லாம், மில்லுக்குச் சொந்தமான டெம்போ ட்ராவலரில் சங்கீதா உட்படப் பத்து பெண்களும், அவர்களோடு, ஆதிரா, அபிராம், சத்தியன் மேலும் இரண்டு ஆண்கள் என, ஆதிரா பயணிப்பதையே மறைத்து, அவளது வழக்கமான உடையின்றி, சாதாரணச் சுடிதாரில் தான் கிளம்பியிருந்தனர். வேலை செய்பவர்கள், இது போல் மற்றொரு யூனிட்டுக்கு செல்வது வழக்கம் ஆதலால் அது பெரிதாகக் கவனிக்கப்பட வில்லை.
வேனிலும், ஜன்னல் பக்கம் ஆதிராவை உட்கார வைக்காமல், கதவு ஜன்னல்களை அடைத்து, ஏசிப் போட்டபடி தான் பயணித்தார்கள். ஆதிரா ஒரு சீட்டிலும், எதிர் வரிசையில் அபி ஒரு சீட்டிலும் அமர்ந்து வர, பெண்கள் இருவரையும் சேர்த்து கேலி செய்து வந்தனர்.
" ஏனுங்க, அபி சார், நாங்க இருக்கிற பக்கமெல்லாம், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டிங்க, மிஷினோட நிற்கிற பொம்மையினு நினைப்பாராட்டத்துக்குன்னு நாங்களே பேசிக்குவோமுங்க, இன்னைக்குச் சின்ன அம்மணிக்காக எங்களோடவே வேன்ல வர்றீங்க" என ஆளாளுக்கு, கேலி பேச, ஆதிராவுக்குப் பெருமை தான்.
" அதுக்கென்ன செய்யறது, எனக்குன்னு, என்ர மாமன் பொண்ணைப் பெத்து வச்சிருக்கையில, வேற பொண்ணு என்ர வாழ்க்கையில வந்திட முடியுங்களா" என அவனும் சரிக்குச் சரி பதில் தந்தவன், " சத்தியா, இன்னைக்குப் படி ஏற வேண்டாம். வண்டியை மலைமேல் விடு" எனச் சொல்ல, ஆதிரா படி ஏறலாம் என்றாள்.
" மாமாவுக்குத் தெரியாத வந்திருக்கோம் பேபி, அவர் ஆபீஸ்க்கு வர்றதுக்குள்ற நாம திரும்பனுமாக்கும்" எனச் சாலை மார்க்கமாகவே மலை ஏறியவர்கள், நாலரை மணி நடை திறக்கும் போது, அங்கிருந்தனர். மீதமிருக்கும் கடைசி நிலைப் படிகளை மட்டும் ஏறியவர்கள், தேங்காய் பழத் தட்டு, பெரிய மாலை எனக் கே ஆர் மில்ஸ் சார்பாகவும், கைலாஷ், பைரவி பெயருக்கு அர்ச்சனை செய்தனர். இவர்கள் உடன் வந்த பெண்கள், அபிராம், ஆதிரா பெயருக்கும் அர்ச்சனை செய்தவர்கள், மாலை மாற்றி அபிராம் கையால் ஆதிராவுக்குப் பூவையும் வைத்து விடச் சொல்லலாம் எனத் திட்டமிட . அபிராம், பெரியவிக நிச்சயம் பண்ணாத எப்படி எனத் தயங்கினான்.
" அபிசார், அம்மணி கிடைக்கோணும்னு, மருத மலை முருகனைத் தான வேண்டுனீங்க, அவர் முன்னாடி மாலை மாத்திகிறதுக்கு என்னங்க தயக்கம். உங்களுக்கு அவிக தான்னு எழுதியிருக்கையில, யாரால மாற்ற முடியுங்க. அம்மணிக்கு ஆட்சேபனை இல்லையினா,மாலையைப் போட வேண்டியது தானுங்களே" என ஏற்றி விட்டனர்.
ஆதிரா, தன்னைச் சூழ்ந்த ஆபத்துக்கள், இன்னும் விலகியபாடே இல்லையே என முதலில் யோசித்தவள், குருக்கள் ஒரு மாலையைக் கொண்டு வந்து, அபிராம் கழுத்தில் போட்டு விட்டு, மந்திரம் சொல்லி அவன் கையில் கொடுத்து, ஆத்துக்காரி கழுத்தில் போடுங்கோ, எனச் சொல்லவும், அவன் அவளை ஏறிட்டுப் பார்க்க, அதுவே தெய்வ சங்கல்பம் எனத் தனது ஆயி, பாபாவை ஏற்றது போல், முருகன் சன்னதியில் அபிராமை, தன் கணவனாக மனதார ஏற்றுக் கொண்டு, கழுத்தை நீட்டினாள். அபிராம் சந்தோஷமாகவே மாலை போட்டவன், பூவையும் குங்குமத்தையும், தான் வைத்து விடாமல், அவளுக்குக் கையில் தான் கொடுத்தான்.
மற்றவர்கள், " ஏனுங்க அபிசார்" என வினவ, " மாலை போட்டது, ஆரா பேபியை, என்ர வாழ்க்கைத் துணையா ஏத்துக்கிட்டேன்னு அவளுக்கு உறுதி தர்றதுக்கு, தாலி, குங்குமம் எல்லாம், பெரியவிக ஆசீர்வாதத்தோட தான் நடக்கோணோம். " என்று விட, ஆதிராவுக்கு ,அபிராமின் இந்த எண்ணமும் மிகவும் பிடித்தது.
இவர்கள் சாமி தரிசனம் செய்து, சித்தர் கோவிலுக்குப் பக்கவாட்டில் இறங்கிச் செல்ல, இவர்கள் வேன் நிறுத்திய இடத்துக்கு அருகில், நிறைய வாகனங்களில், பக்கத்தில் ஆசிரமத்துக்கு வந்தவர்கள் இங்கும் வந்தனர்.
இவர்கள் கூட வந்த பெண்கள், அங்கிருந்த கடைகளில், கிராமத்துத் தின்பண்டங்கள், இலந்தவடை, புளிப்பாக்கெட், பொடி, ஜவ்வு மிட்டாய், பொரி உருண்டை ஆகியவற்றைப் பார்த்து விட்டு அங்கேயே நிற்க, ஆதிரா, அதைப் பார்த்து," ராம், இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை. எனக்கும் வாங்கிக் கொடுங்க" எனக் கேட்கவும், " உனக்கு இல்லாததா பேபி" எனக் கடையவே வேண்டும் விலை பேசியவன், கத்தை நோட்டை அவள் கையில் கொடுத்து, " அங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் போடு பேபி. நான் வாங்கிட்டு வரேன்" எனச் சத்தியன், சங்கீதாவை அவர்களோடு அனுப்பினான்.
ஆதிரா, மகிழ்ச்சியோடு, இயலாதவர்களுக்கு, ஐநூறு ரூபாய் நோட்டைப் போடவும், " தாயி, அம்மணி " எனச் சூழ்ந்து கொண்டனர். " எல்லாருக்கும் கொடுப்பாங்க இருங்க" எனச் சத்தியன் அவர்களை ஒழுங்கு படுத்த, அதற்குள், மற்றொரு கூட்டம் படி ஏறியது.
அபிராம் அவசரமாக ஆதிராவிடம் வந்தவன், அவள் கையிலிருந்த பண நோட்டுகளை வாங்கிக் கொண்டு, " நீ வேன்ல போய் உட்கார் பேபி. நான் கொடுத்துட்டு வர்றேன்" எனச் சத்தியனோடு அனுப்பி விட, அவர்களது டெம்போ வேன் கிளம்பத் தயாராக நின்றது, சத்தியன், சங்கீதாவையும், ஆதிராவையும் ஏற்றி விட்டு, அவனும் ஏற வர, அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு, வேன் கதவை அடைத்துக் கொண்டு, மலைப் பாதையில் வேகமாக இறங்கியது.
சத்தியன், " டேய்" எனக் கத்தியவன், வேன் பின்னாடியே ஓட முயன்று விட்டு, சுதாரித்து," அபிசார்" எனக் கத்தி விசயத்தைச் சொல்ல, " ஷிட் " எனக் கத்தி, படியில் மற்றவர்களை இறங்கச் சொல்லிவிட்டு , வேறு ஒரு வண்டியை அவசர உதவியாகப் பெற்று, கம்பெனி வண்டியைப் பிடிக்க முயல, வண்டி அடிவாரம் தாண்டி, ரோட்டில் நின்றது.
தாங் காட் என உள்ளே சென்று பார்க்க, சங்கீதாவையும், அவர்கள் ட்ரைவரையும் கட்டிப் போட்டு, ஆதிராவை கடத்தியிருந்தனர்.
அபிராம், " ஓ காட், நிஜமாவே கடத்திட்டான். மாமாவுக்கு என்ன பதில் சொல்லுவேன். ஆரா பேபி" எனத் துடித்தவன், கீழே இறங்கி விசாரிக்க அங்கு எவருக்கும் தெரியவில்லை.
அபிராம், கே ஆரின் பாதுகாப்புப் படைக்குப் போன் அடிக்க "நீங்க சொன்ன மாதிரி, கம்பெனி வண்டிக்காகத் தான் சார் வெயிட்டிங்" என அபிராம் நின்ற இடத்திலிருந்து, அரைக் கிலோமீட்டர் தொலைவில் நின்றவர்களிடம், அவசரமாக விசயத்தைப் பகிர்ந்து, வேற ஏதாவது வண்டி கிராஸ் ஆனதா என விசாரித்தான்.
கைலாஷ் மகளுக்குப் போன் அடித்து, எடுக்க வில்லை எனவுமே அபிராம்க்கு போன் அடித்து விட்டார். அந்த நேரம் தான் உச்சபட்ச டென்ஷனோடு அவன் ஆதிராவை தேடிக் கொண்டிருக்க, கைலாஷ் நம்பரைப் பார்க்கவுமே, வேறு வழியில்லாமல் எடுத்து அவசரமாக விசயத்தைச் சொல்லி விட்டான்.
மகள் கடத்தப் பட்ட விசயம் அறியவுமே, உடல் இறுகியவர், " இப்ப எங்கிருக்கிற " என விசாரித்தவர், வை நான் வாரென்" என்றவர், தன் போனில் மகளின் இருப்பிடம் அறிய, சில செயலிகளை இயக்கினார்.
கைலாஷ், "என்ர பொண்டாட்டியும் புள்ளைகளும் சொல்லும் போது கூட, அவிக எக்ஸாகிரெட் பண்றாங்கன்னு நினைச்சேனேடா, கடைசியில உங்க புத்தியை காட்டிட்டீங்க, என்ர மகளை என்ர இடத்தில வச்சேவா தூக்குனீங்க, வரேண்டா என்ர ஆட்டத்தைப் பார்க்க ரெடியா இருங்க" எனப் பொறுமியவர், வரிசையாகப் போன் போட, கோவையின் நான்கு புறங்களிலும் தேடுதல் வேட்டைத் தொடங்கியது.
"சிட்டிக்குள்ள வர்றது, சிடியிலிருந்து வெளிய போறது, பழைய மில்லு,கோடான் ,நமக்கு எதிரி கம்பெனி எவேன்னு பார்த்து, விசாரிங்க" எனச் சம்பத், மற்றும் அவரைப் போன்ற செக்யூரிட்டி ஆபீஸர்களுக்கும் போன் அடித்தவர்,மேலும் பல கட்டளைகளை இட்டவர்,சத்தியனிடம் போன் செய்து, கடத்தியவனைப் பற்றிய தகவல்களைக் கேட்க , அவன் தான் அறிந்தவரை சொன்னான்.
“ மற்ற புள்ளைகளையெல்லாம் பத்திரமா, மில்லுக்கு கொண்டு வந்து சேருங்க, என்ர மகளை நான் பார்த்துக்கறேன்.” என அப்போதும், தகப்பன் ஸ்தானத்திலிருந்து மில் தொழிலாளிகள் நலனை யோசித்து கட்டளையிட்டவர் , அடுத்து மனைவி, தாய், தந்தைக்கு தெரியக் கூடாது என முடிவெடுத்தார்.
பாரு, பாருவுக்கு எதுவுமே தெரியக் கூடாது என நினைத்து பைரவிக்குப் போன் செய்தவர், " ராஜ், ரஜ்ஜும்மா, இங்க தான இருக்கா. போன் போட்டேன், ரிங் போயிட்டே இருக்கு, எனக்குப் படபடங்குது" என எடுத்தவுடன் அவசரமாகக் கேட்க, நொடியில் சமாளித்தவர்,
" அதைச் சொல்றதுக்குத் தான், பாரு போன் போட்டேன். ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ண டின்னர் மீட் இருக்கு, அபியையும், ரஜ்ஜூம்மாவையும் கூட்டிட்டு போறேன். நீ என்னை எதிர்பார்க்காத, சாப்பிட்டு மாத்திரையைப் போட்டுத் தூங்கு" என இயல்பாய் சொல்ல,
பைரவி ஏகப்பட்ட குறுக்குக் கேள்விகளைக் கேட்கவும், " இனிமே வர்ற விசேசத்துக்கு எல்லாம் உன்னைக் கூட்டிட்டு போறேன், கைலாஷ்- பாருவா, ஜோடியா போய் இறங்குவோம். சரிங்களா அம்மணி. கல்யாணம் முடியவும், ஹனிமூன் போகோணும், எத்தனை நாள் என்னை ஏமாத்துவ. உடம்பை தேத்து" என அவர் சிரிக்க,
" ஓ, ராஜ்" எனவும், " ஆப் கோ ஷரம் நஹி ஆயி, " எனப் பைரவியைப் போலவே சொல்லிக் காட்டிய ராஜன், " இது தானுங்களே அம்மணி சொல்லுவீங்க . எனக்கு வெக்கமெல்லாம் கிடையாது. சாப்பிட்டுத் தூங்கு. லேட் நைட் தான் வருவேன்" என மனைவிக்குச் சந்தேகம் வராதபடி சரசமாகப் பேசியவரின் கைகளில் வண்டி நூற்றுச் சொச்சத்தில் பறந்தது.
கௌரிக்கும், பைரவியைச் சாப்பிட்டு, உறங்க வைக்க உத்தரவு வர, அவர் கவலையோடு வினவவும், " கொரில்லா போரில் வேணா போஸ்லேகள் எக்ஸ்பேர்டா இருக்கலாம் மாஸிமா. ஆனால் எதிர்த்து நின்னு அடிக்கிறதில, எங்களைத் தாக்குப் பிடிக்க முடியாது. பாருவுக்கு எதுவும் தெரியக் கூடாது. தூக்க மாத்திரையைக் கொடுத்தாவது, தூங்க வச்சிருங்க. " எனக் கட்டளையிட்டார்.
கைலாஷின் கைகளில் அவரது அந்த முரட்டு வாகனம், அரேபிய குதிரையின் வேகத்தில் பயணித்தது, அக்கணமே மகளை அரவணைக்க துடித்தது. “என்ர , கோட்டைக்குள்ள வந்து, என்ர மகளையே தூக்குற சூரன் யாருடா , பார்த்துருவோம் ஒரு கை “ என அவரது மனம் உலைக்களமாக கொதிக்க, ஆதர்ஷ் அதே ஆக்ரோஷத்தோடு போன் அடித்தான்.
“உனக்கும் தகவல் வந்துடுச்சா கண்ணு , அங்க தான் போயிட்டு இருக்கேன்” என்றவரின் குரலில் பதட்டத்தை உணர்ந்தவன், “பாபா, டென்ஷன் ஆகாதீங்க , உங்க ரஜ்ஜுமாவுக்கு ஒன்னும் ஆகாது, இந்த முறை நீங்க தான் அவளை காப்பாத்துவீங்க , இந்த முறை , அவள் உங்ககிட்ட இருக்கா,ஆதிரா கைலாஷ் ராஜ், இன்னும் துணிச்சலா எதிரியைச் சமாளிப்பா “ என அவன் தந்த தைரியமான வார்த்தைகளில், தன்னை சற்றே நிதான படுத்திக் கொண்டவர், அவன் பாஸ் எனாமல், பாபா என்று அழைத்ததையும் கவனிக்க மறந்தார்.
“ஆமாங்கண்ணு பாபா , என்ர ரஜ்ஜும்மாவை கூட்டிட்டு வந்துருவேன். ஆயிக்கு எதுவும் தெரியாது, அவகிட்ட விசாரிச்சிடாத “ என எச்சரித்தவர், அடுத்து அபிராமுக்கு போன் அடித்தார்.
ஆதிராவை கடத்தியது யார், அவளது அப்பாவும், காதலனும், அவளுக்குச் சேதாரம் எதுவும் வரும் முன் கண்டு பிடிப்பார்களா
பொறுத்திருந்து பார்ப்போம் .
நிலவு வளரும்.
No comments:
Post a Comment