யார் இந்த நிலவு நிலவு -32
முன்னதாக, விஜயன் குடும்பம் கிளம்பும் முன், அபிராம், விஜயனை மட்டும் தனியே அழைத்த ஆதர்ஷ், அதிகாலையில் கிளம்புவதாகவும், அவர்கள் , உதவிக்கு நன்றி தெரிவித்தவன், “ நாங்க , எங்கள் பாதுகாப்பைப் பத்தி சீரியஸா பேசுற விஷயத்தை, பாஸ் அசட்டையாவே எடுத்துகிறார். ஆதிராவையும், ஆயியையும் பார்த்துக்குங்க, மஹந்த் போஸ்லே வந்துட்டு போயிருக்கான், அது டேஞ்சர் தான், இவ்வளவு பெரிய மில்ஸ் உள்ளையே ஆள் வச்சிருப்பாங்க.ஆதிரா பேரில் இருக்கச் சொத்து மதிப்பு,நீங்க நினைச்சு பார்க்கமுடியாத அளவு அதிகம்” என வலியுறுத்தினான் ஆதர்ஷ்.
“நீங்க ,கவலை படாதீங்க மாப்பிள்ளை , ராஜன் இந்தத் தடவை, அவன் பொக்கிஷத்தைத் தொலைக்க மாட்டான். ஆள் அசால்ட்டா இருக்கிற மாதிரி தெரியும், ஆனால் என்க புடிக்கணுமோ புடிச்சிடுவான்”என விஜயனும்,
“ நீ கவலைப் படாத மச்சி, நான் பார்த்துகிறேன்” என அபிராமும் நம்பிக்கை தரவும், சற்றே சமாதானம் ஆனவன்,” பாஸ் ,உங்களை அப்படிப் பேசுறாரேன்னு,நீங்க மனசில வச்சுக்காதீங்க” என்றவனைப் பார்த்து, விஜயன் பலமாகச் சிரித்தார்.
“எங்க நட்புக்கு , எங்க வயசு ஆகுது மாப்பிள்ளை, ராஜா கோபமோ, சந்தோஷமோ என்ர கிட்டத் தான் காட்டுவாநுங்க. இதைப் பத்தியெல்லாம் நீங்க கவலை படாதீங்க. இரண்டு தலைமுறையா எங்க நட்பு தொடர்ந்து வந்திருச்சு, நீங்களும், அபியும் அதைத் தொடர்ந்தா , எங்களுக்குச் சந்தோஷம் “ என்றார் விஜயன்.
“கட்டாயம் மாமாஜி , மச்சானை பகைச்சுக்க முடியாதில்ல” என, ஆதர்ஷ் கையை விரிக்கவும், “நிச்சயமா” என அபிராமும், அவனைக் கட்டிக்கொண்டான், மறைந்திருந்து இவர்கள் பேச்சைக் கேட்ட ரஞ்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவும் அண்ணனும் உள்ளே சொல்லிக் கொள்ளச் சென்ற நேரத்தில் ஆதரஸை எதிர் கொண்ட ரஞ்சனி, “ என்கிட்டே சொல்லிக்காமலே போறீங்க ”என்றாள்.
“ஹேய் “ எனத் திரும்பியவன்,”நீதான, என்னை மிரட்டின ,உனக்குப் பயந்துட்டு தான், பெட்டி படுக்கையைக் கட்டிட்டேன்” என்றான்.
“நானும் நம்பிட்டேனுங்க “என்றவள், “ முதல்ல உங்க மேல கோபம் தான் வந்துச்சுங்க, ஆனால் இப்ப உங்களைய பார்த்தா பாவமா தான் இருக்கு.அதுனால என் கோபத்தை மூட்டை கட்டி வச்சுட்டேன்” என்றாள் .
ஹா,ஹாவெனச் சிரித்தவன், “என்னைப் பார்த்தா பாவமா இருந்துச்சா, நான் தான் பெரிசா நாட்டாமை பண்றேன்னு சொன்னியே” என்றான்.
“அதெல்லாம் நல்லா தான் செய்யிறீங்க, ஆனால் , நீங்க நிறைய மிஸ் பண்ணியிருக்க, கே ஆர் மாமா,மாதிரி ஒரு அப்பா கிடைக்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும் தெரியுங்களா, நாங்கல்லாம் அவிக அன்பை அனுபவிச்சிவிக, எங்க மேலையே அத்தனை பாசம் வச்சிருக்கவிக, உங்களை எப்படி வச்சுக்குவாங்க ,ஆயிரக் கணக்கான பேர் அவிகளை அப்பான்னு கூப்பிடுவாங்க. ஆதிரா அண்ணி கூடப் பாபா ன்னு கூப்பிடுராங்கலிங்க .ஆனால் நீங்க மட்டும் பாஸ் னு கூப்புடுறிங்கிங்க . என்ர அப்பாவை மாமான்னு முறை வச்சுக் கூப்பிடுறவிகளுக்கு ,உங்க அப்பாவை, அப்பான்னு கூப்பிடணும்னு ஆசையா இல்லைங்களா ” என அவன் மனதிற்குள் சென்று பார்த்தது போல் அவள் கேட்கவும், ஒரு நிமிடம் உணைர்ச்சி வயப்பட்டு, அவளைப் பார்த்த பார்வை, ரஞ்சி மனதில், அவனுக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற ஓர் உணர்வைத் தூண்டியது.
நொடியில் அதை மாற்றியவன், ஓர் பெருமூச்சுடன், “ எல்லாருக்கும், எல்லாமே கிடைச்சிடுமா என்ன, தி கிரேட் கே ஆர்க்கே, இப்ப தான , அவர் குடும்பம் கிடைச்சிருக்கு. எங்க வாழ்க்கை அப்படித் தான், முடிஞ்ச வரை, ஆதிராவை , இதுக்குள்ள வராமல், உன் அண்ணனோட செட்டில் பண்ணிடுவோம். நீ இந்த நாத்தானர் கொடுமை எல்லாம் செய்யாமல்,என் தங்கச்சியைப் பத்திரமா பார்த்துக்கோ” என்றவன்,
அவ்விடத்தை விட்டு நகரும் முன், “தாங்க்ஸ், எனக்காக யோசிச்சதுக்கு” என்று விட்டு ,கைலாஷ் ராஜனை பார்க்கச் சென்றான். அவன் சென்ற வழியை ரஞ்சனி பார்த்த படி நின்றாள். விதியின் விளையாட்டில் , கேஆரின் பிரியமான மருமகள் சிக்காமலிருந்தால் நலம்.
விஜயன் குடும்பத்தை , வழியனுப்பி விட்டு ஆபீஸ் ரூமில் நின்றார் ராஜன், " பாஸ், நான், அதிகாலையிலே கிளம்பிடுவேன். அடுத்து நானிமாவை கூட்டிட்டு வர்றேன்" என வந்து நிற்க, "
சரி கண்ணு. பார்த்து போயிட்டு வா. நாம பார்த்துக்குவோம்" என அவனைக் கட்டியணைதத்தார். " பாவு, அறைக்குள்ள கிளம்புறீங்க" என ஆதிரா தான், அழுதாள்.
" ஹேய், பக்லி, ஆயியைப் பார்த்துக்கோ, உன் பாபா கொஞ்சிட்டே இருப்பார், தாத்தா, ஆத்தா, உன் ராம் சார், எத்தனை பேர் இருக்காங்க. அப்புறம் என்ன. உன்னைக் கொஞ்சறதுக்கு எக்ஸ்ட்ராவா, இன்னொரு ஆள் நானிமாவை கூட்டிட்டு வர்றேன்" என அவளை அணைத்துக் கொண்டு, அவள் நெற்றியில் முத்தமிட,
" பாவு, ஆயி பேமலி, டேஞ்சரஸ்னா, எதுக்கு அங்க போகனும். நானிமாவையும் கூட்டிட்டு இங்கையே வந்திடுங்க. அவங்க ஜாயிதாத் குச் நஹி சாஹியே. பாபாகிட்ட வந்திடுங்க, நாமளே அவுங்களை விட நிறையச் சம்பாதிக்கலாம். டீக் ஹை னா பாபா" என அவள் கைலாஷையும் சப்போர்ட்டுக்கு அழைக்க,
" ஆமாண்டா ரஜ்ஜும்மா, அவிக சொத்து யாருக்கு வேணும் கண்ணு, நீங்க தான் எம்படச் சொத்து" என இருவரையும் அணைத்துக் கொள்ள, ஆதர்ஷும் அவர் அரவணைப்பில் நின்றவன்,
" புலி வாலை பிடிச்ச கதை தான் ஆது . அதெல்லாம் அப்படிச் சுலபமா விட முடியாது. நான் பார்த்துக்குறேன். நீ பாபா நிழல்ல சேஃபா இரு. அது போதும்" என்றவன், ஆயியிடம் சொல்லச் சென்றான்.
பெட்டில் கண் மூடி படுத்திருந்தவரிடம், " ஆயி" எனக் கையைப் பிடிக்க, வழக்கம் போல் இறுக்கப் பற்றிக் கொண்டார். " கிளம்புறேன் ஆயி, நானிமாவோட வர்றேன்" என்றவனை, கண்ணைத் திறந்து பார்த்த பைரவி, கையை நீட்டி அழைக்க, குனிந்த வாக்கில் கட்டிக் கொண்டவன், " என்னங்க ஆயி, ஜங், நமக்குப் புதுசா என்ன. நான் பார்த்துக்குறேன். நீங்க நிம்மதியா இருங்க." என அவர் கன்னத்தில் முத்தமிட, பைரவியும் அவனை உச்சி முகர்ந்து, நெற்றியில் முத்தமிட்டு,
" ஆயி பவானி, உன் முயற்சிக்கு எல்லாம் துணை இருக்கட்டும்" எனக் கௌரியைக் குங்குமம் கொண்டு வரச் சொல்லி, எழுந்து அமர, முயற்சிக்க," அப்படியே இருங்க ஆயி" என்றவனை, " என் உரிமைக்கு, தூ லட்தே ஹோ. நான் எந்திரிக்கிறதில என்ன இருக்கு " என்றவர், கணவரையும் அழைத்தார்.
" உங்க வாரிசு, எனக்கே தெரியாமல், என் ஆயி, தன் சிப்பாய் ஆக்கிட்டாங்க. இவனும் இருக்கிறது தெரிஞ்சிருந்தா, நான் சுயம் தெளியவுமே, உங்ககிட்ட ஓடி வந்திருப்பேன். ஒரு முல்கி தான, உயிரை காப்பாத்தி குடுத்தா போதும்னு நினைச்சிட்டேன். நீங்க அனுமதிச்சா தான், அவன் போவான். இல்லைனா, நான் ஆயிட்ட பேசிக்கிறேன்" என்றார் பைரவி.
" என்ர பொண்டாட்டி உயிரோ இருக்கான்னே இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். என் இரத்தம், வாரிசுன்னு, எப்படி உரிமை கொண்டாடச் சொல்ற. உன் வம்சமா தான வளர்ந்திருக்கான். நடக்கிறபடி நடக்கட்டும். அவனுக்கு நிழலா, நான் இருப்பேன்" என ஆதர்ஷ் தலையில் கை வைக்க,
பைரவியும் மகனுக்குத் திலகமிட்டவர், " கடமை முடியவும், எங்ககிட்ட வந்திடனும். உன் குடும்பம் உனக்காகக் காத்திருக்கு, அதை மட்டும் நினைப்பில் வச்சுக்கப் பாபா. பெற்றதே தெரியாமல் பிச்சியா கிடந்திருக்கேன். இந்த அபாக்கியவதியான ஆயியை மன்னிச்சிடு பாபா" என அவனைக் கட்டிக் கொள்ள, கைலாஷ், பிள்ளைகள் பிறந்த சமயம் நடந்த விசயங்கள் புரியாமல் நின்றார்.
" அப்படிச் சொல்லாதீங்க ஆயி. நம்ம இழந்ததுக்கு எல்லாம், ஜெயந்த் மஹராஜ் , கணக்கை நேர் செய்யனும். நான் செய்ய வைப்பேன். இது சத்தியம்" என்றவன், " உணர்ச்சிவச படாதீங்க. தைரியமான ஷேர்னியா, உடம்பை தேத்திட்டு வாங்க. அவனுக்குத் தண்டனை உங்க கைல தான். " எனத் தைரியம் தந்தவன், கைலாஷ் பாருவின் கைகளைப் பிடித்துக் கொண்டு,
" நீங்க இரண்டு பேருமே, விதியுடைய விளையாட்டில் விக்டிம்ஸ் பாஸ். ஆயியை மட்டும் ப்ளேம் பண்ணாலும், உங்களுக்கு ஞாயம் கிடைக்காது. உட்கார்ந்து பேசி மனக்காயங்களை ஆத்திக்குங்க . நானிமாவோட வர்றேன்" எனப் பெற்றவர்களுக்கு யோசனை கூறினான்.
சௌந்தரி, நாயகம் இருவரும் படுக்கப் போகும்முன் மருமகளை நலம் விசாரிக்க வந்தவர்கள், ஆதர்ஷ், பவானியிடம் காட்டும் அன்னியோனியத்தை வித்தியாசமாகவே பார்த்தனர்.
“தாத்தா, ஆத்தா, அதிகாலையில் கிளம்புறேன்.நீங்க தூங்குவீங்களே, அது தான் இப்பவே சொல்லிக்கிறேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என அவர்கள் காலில் விழ , “நல்லா இருயா” என வாழ்த்தினர்.
"எங்கிருந்தோ வந்து , என்ர குடும்பத்தைச் சேர்த்து வச்சிட்டியே, இதுக்கு நாங்க என்ன கைமாறு செய்வோம் கண்ணு, சம்மந்தியம்மா உன்னைப் பேரனா தத்து எடுத்திருக்காங்கன்னா, எங்களுக்கும் நீ பேரன் தான். அப்பப்ப வந்திட்டு போ கண்ணு " என்றார் நாயகம்,
"இந்த வார்த்தையே போதும் தாத்தா,நானும் உங்களுக்குப் பேரன் தான்" என்றவன், அவர்களை அங்கிருந்த சபாவில் அமர வைக்க, மருமகளிடம் ஆதர்ஷ் பற்றி, இக்கட்டான சூழலில் சாமர்த்தியமாகச் செயல்பட்டதைப் பெருமையாகப் பேசினர்.
ராஜன் பார்வையாளராக மட்டுமே இருந்தார்.இன்னும் பாருவின் பிச்சி என்ற வார்த்தை அவர் சிந்தையைக் குழப்பிக்கொண்டிருந்தது.
ஆதிரா, பூஜை அறையிலிருந்து , ஒரு ரட்சை கயிற்றையும் ,ஆரத்தி தட்டையும் கொண்டு வந்தவள், பாவு என அழைத்து, வட இந்திய முறைப்படி, ராக்கி கட்டுவது போல், "இது , ஆயி பவானி ரட்சை தாகா , இதைக் கழட்டவே கூடாது. நான் உங்களுக்காகத் தினமும் வேண்டிக்குவேன் " எனக் கயிற்றைக் கட்டி, ஆரத்தி காட்டி அவனுக்குத் திலகமிட்டு விட, பெற்றவர்கள் கண் கலங்கப் பார்த்திருந்தனர் .பால நாயகத்து அவள் செய்யும் செயல் புரிந்தது, போஸ்லே வம்ச வாரிசு, அதனால் அண்ணனாக ஏற்று இதைச் செய்கிறாள், என நினைத்தார்.
கௌரி, ஒரு சுவட்டைக் கொடுத்து, இருவரையும் ஊட்டிக் கொள்ளச் சொன்னார். அதே போல் ஊட்டிக் கொண்டவள், “பாவு, நீங்க போக வேண்டாம், நம்ம ஹாப்பிப் பெம்லியா இருந்துக்கலாம் “ என அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
“ரஜ்ஜுமா “ எனப் பெற்றவர் இருவரும் ஒரே நேரம் அழைக்க, “உங்க இரண்டு பேர் கூடவும் பேசமாட்டேன் பாவுவை,போக வேண்டாம்னு சொல்லுங்க” என அவள் குழந்தையாய் அழவும் , “ சோட்டி, இது என்ன பக்லியாட்டம் “ என இருவரும் அன்பு மலை பொழிய, ஆதர்ஷ் தங்கையை உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.
இவர்கள் மராத்தி.ஹிந்தியிலேயே பேசிக்கொள்ள,சௌந்தரிக்கு எதுவும் புரியவில்லை, பொறுக்க மாட்டாமல்
“இது என்ன கண்ணு பழக்கம் , பொம்பளை புள்ளையா லட்சணமா இல்லாத, வெளி ஆம்பளையைக் கட்டிக்கிட்டு நிற்கிறது, இதெல்லாம் நம்ம ஊர்ல பழக்கமில்லை கண்ணு” எனப் பேத்தியை கடிந்து கொள்ளவும், ஆதிராவுக்குக் கோபம் வந்தது. சும்மாவே ஆதர்ஷ் கிளம்புவதில் மூட் அவுட் ஆகி இருந்தவள் ஆத்தாவிடம் பொங்கி விட்டாள்.
“ஆத்தா, இதோ யாரோ இல்லை, என்னோட , அண்ணன் , எனக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி பிறந்த என்னோட இரட்டை, நாங்க, எங்க ஆயி வயிற்றுக்குள்ளையே இப்படித் தான் இருந்தோம் “ என உண்மையைப் போட்டு உடைக்க, “என்ன கண்ணு சொல்ற” எனப் பெரியவர்கள் இருவரும் ஆதர்ஸை சூழ்ந்து கொண்டனர்.
“ராஜா, உன் மகள் என்ன சொல்லுது, பவானி இரட்டை புள்ளைங்களையா பெத்த” எனச் சௌந்தரி,ஆதர்ஷ் முகத்தை, கையை ,உடலை வருடிப்பார்க்க,நாயகம்,அவன் தலையில் கையை வைத்து, “என்ர வம்சத்து வாரிசா நீயி. இதை என் கண்ணு இத்தனை நாளா சொல்லலை “ என அவனைக் கொஞ்சி தங்களுக்கு நடுவில் அமர்த்திக்கொண்டு ,பவானியிடம் விளக்கம் கேட்டனர்.
“எனக்கும், அன்னைக்குத் தான், அவனைப் பார்க்கவும் தான் சந்தேகம் வந்துச்சு அத்தை, இவன் பிறந்ததே எனக்குத் தெரியாது” என்றவரை ,
“அட , என்ன பொம்பளை நீயி, இம்புட்டு விவரமா இருந்தவப் பேசிய பேச்சா இது, ராஜா தெரியாதுன்னு சொன்னா, ஒத்துக்கிடலாம், பெத்தவளுக்கேவா தெரியாத போயிடும்” எனச் சௌந்தரி கேள்விகளை அடுக்கவும்,
“தாய் மாதா, அவ தான் தெரியலைங்கிறா இல்லை, விடுங்க. சும்மா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு” என ராஜன் அம்மாவைக் கடிந்தவர்,
“இவன் என்ர மகன்கிறதை யாருகிட்டயும் சொல்லாதீங்க” என்றும் சேர்த்துச் சொல்லவும். சௌந்தரி வரிசையாய் ஆரம்பித்து விட்டார்.
“அதென்ன கண்ணு, என்ர வூட்டு வாரிசை, என்ர பேரன்னு சொல்லிக்கக் கூடாதா, ஏன் இவிக அம்மத்தாளுக்கு மட்டும் தான் இவர் சொந்தமோ, அதெல்லாம் முடியாது. நீ இருப்பது வருஷம் முன்னாடியே, என்ர மருமகளை, எங்கிட்ட கூட்டிட்டு வந்திருந்தியாக்கும்,நானே பத்திய சாப்பாடு சமைத்துப் போட்டு, பிரசவம் பார்த்திருப்பேன்.அதெலாம், இவனை எங்கையும் அனுப்ப முடியாது. பவானி, உன்ர அம்மாட்ட கூப்பிட்டு, சொல்லிப்போடு.அவிக சொத்தும் வேணாம் , ஒண்ணும் வேணாம் என்ர மகன் சம்பாத்தியத்தை அனுபவிக்கவே இங்கே ஆளில்லாத கிடக்குது. அழகு போல, பேர புள்ளைகளை , அடுத்தவிகளுக்கு நெம்பப் பேர் தத்துக் கொடுப்பாகளே “ ஆதிரா கண்ணு, நீ இன்னும் ரெண்டு ஸ்வீட் எடுத்துட்டு வந்து, உன் உடன் பிறந்தவனுக்கு, ஊட்டிவிட்டுப் பக்கத்திலேயே கோர்ந்துக்க,இவன் எப்படி ஊருக்கு போறான்னு நானும் பார்க்கிறேன்” எனத் தன்னைப் போல் பேசிக் கொண்டே போக.
“சௌந்தி, கொஞ்சம் அமைதியா இரு, ராஜாவே பேசாத இருக்கான்னா , என்ன எதுன்னு யோசிக்க வேண்டாம் “ என மனைவியைக் கண்டித்தவர், மகன்,மருமகள்,பேரனிடம் விசாரித்தார்.
பைரவியை அதிகம் பேச விடாமல், கைலாஷ் , ஆதர்ஷ் இருவருமாகவே விவரம் சொன்னார்கள். ஆதர்ஷ், தாத்தா, ஆத்தா கையைப் பிடித்துக் கொண்டு, “ எனக்கு உங்க பாசம் புரியுது ஆத்தா, ஆயியையும், ஆதிராவையுமாவது உஙக்ளோட சேர்த்து வைப்போமேன்னு தான் தடாலடியா வந்தேன். ஆயி, போன் வழியா என்னைப் பார்ப்பங்கன்னு நான் யோசிக்கவே இல்லை. பாஸை தான், அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்தனும்னு நினைச்சேன்" எனவும்.
" அது, எந்தப் பாஸு" என ஆத்தா மீண்டும் இடைமறித்து, " ஏன் கண்ணு, அப்பனை, அப்பானு கூடச் சொல்லக் கூடாதா. அப்பானு இல்லைனா, உன்ர இரட்டை மாதிரி பாபான்னு கூப்பிடு. அது என்ன பாஸு, கீஸுன்னு. அதென்ன கொள்ளை கூட்டத் தலைவனா என்ர மகன். பவானி நீயும் இதையெல்லாம் பார்த்துக்கிட்டு தான இருக்க, ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாக்கும்" என மகனோடு, ஆயியையும் சேர்த்துப் பேச, ஆதர்ஷ் முழித்தான், ஆதிரா , அப்படிக் கேளுங்க ஆத்தா " என ஆத்தாளுக்குச் சப்போர்ட் செய்தாள்
" தாய் மாதா, போதும் விடுங்க. ஆயி தான், அப்பனை காட்டோணும்னு சொல்லுவாங்க, என்ர மகனுக்கு ஆயியே, அந்நியமாத் தான இருக்கா. அப்பனை என்ன சொல்றது. அவன் போகனும்னா போயிட்டு வரட்டும். இருக்கச் சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க. எந்த உறவையுமே கட்டாயப் படுத்தி ஒட்டி வைக்க முடியாது" என்றவர்.
" நேரமாகுது போய்ப் படுங்க. உங்க மருமகளும் ரெஸ்ட் எடுக்கட்டும். நீ கிளம்பும் முன்ன, ஒரு மெசேஜ் போட்டிரு கண்ணு" என ராஜன் அந்த அறையிலிருந்து கிளம்ப, ஒரு பெரும் மூச்சோடு பைரவியும் கண்ணை மூடிக் கொண்டார்.
பாலநாயகம், " சௌந்தரி, எண்ணெய் தடவிகிட்டு உருண்டாலும், ஒட்டுறது தான் ஒட்டும்பாங்க. ரூம்புக்கு போ. மருமகள் தூங்கட்டும். " என ஆதர்ஷின் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு அவரும் கிளம்ப, சௌந்தரி புலம்பிக் கொண்டே பின் தொடர்ந்தார்.
அவர்கள் செல்லவும், " பாபா, ஆயிக்குப் போனை போட்டுக் கிளம்பி வரச் சொல்லு, பேசி முடிவெடுத்திருவோம்" எனப் பைரவி வேதனையோடு சொல்ல,
" வெண்ணெய் திரண்டு வர நேரம் தாழியை உடச்சிடாதீங்க ஆயி. இத்தனை வருஷம் உங்க, தவத்துக்கு, தியாகத்துக்கு அர்த்தமே இல்லாத போயிடும். நான் எல்லாரையும் சமாதானப் படுத்திட்டு போறேன்" என்றவன், " எல்லாம் இவளால வந்தது, ஓட்ட வாய்" என ஆதிராவைத் திட்டினான்.
" ஆமாம், எல்லாரும் ஆயி, முல்கா மாதிரியே அழுத்தமா இருப்பாங்க. " எனக் குறை பேசியபடி அவளும் வெளியேற. மாஸி நீங்களும் எதாவது சொல்லுங்க" எனக் கௌரியைப் பார்த்து ஆதர்ஷ் சொல்லவும்.
" எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பிரச்சினையை முடிச்சிட்டு, ஒரே குடும்பமா வாழுங்க. அதைத் தான் அவுங்களும் சொல்லிட்டு போறாங்க. " எனப் பைரவிக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுக்க, " வர்றேன் ஆயி" என்றவன், பெரியவர்களைச் சமாதானப் படுத்தி, உடன் பிறந்தவளைச் சமாதானப் படுத்தி, தகப்பனிடம் வந்து நின்றான்.
பால்கனியில் நின்று நிலவை வெறித்துக் கொண்டிருந்தவர், கண்கள் கலங்கியிருக்க, கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றவன், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். நள்ளிரவைத் தாண்டியும் தகப்பனும் மகனும் பேசிக் கொண்டிருக்க, பீபீ மில்ஸின் தலையெழுத்தை, திருப்பி எழுதும் விதி அன்று எழுதப்பட்டது. ஆதர்ஷ் கடமைகளை முடித்து, தாய், தகப்பனோடு சேரும் கனவோடு சத்தாரா நோக்கிப் பறந்தான்.
கைலாஷ் , அபிராம் ஆதிராவை தனது கம்பெனி ,மில்ஸ் நிர்வாகத்தைப் பார்க்கவெனப் பழக்கப் படுத்த ஆரம்பித்தார். தான் செல்லும் முக்கியமா இடங்களுக்கு, இருவரையும் அழைத்துச் சென்று ஆட்களையும் பழக்கப்படுத்த ஆரம்பித்தார்.
ஆதிரா தனது பழைய வழக்கப் படி,கோவையின் ஏரியாக்கள், சாலைகளைத் தன நினைவில் , அவலறியாமலே பதிந்து கொண்டாள். பின்னொரு நாளில் அதுவே அவளுக்குக் கை கொடுத்தது. கைலாஷ் மகளை, பிறரிடமிருந்து யாரோ ஒருவர் தன்னைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவளது மனதில் புகுத்தாமல் , தானே சிங்கப் பெண்ணாய்ப் பாயவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார்.
பாபாவின் பாடங்களை மகள் படித்துக் கொள்வாளா, எதிர் வரும் காலத்தில் , எதிரிகளை எதிர் கொள்ள ஆயத்தம் ஆவாளா.பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment