யார் இந்த நிலவு -33
கே ஆர் மாளிகையில், நெருங்கிய நட்புகள் சொந்தங்களுக்கு மட்டுமாக அழைப்பு விடுக்கப்பட்டு, விஜயன் கஸ்தூரியின் திருமண நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜனே முன்னிருந்து ஏற்பாடுகளைக் கவனிக்க, அதிலும் ஒரு செழுமை தெரிந்தது.
பைரவியின் ஹார்ட் அட்டாக்கு முன் ஸ்டார் ஹோட்டல் என்றெல்லாம் திட்டமிட்டவர்கள், அவரின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, கே ஆர் மாளிகையிலேயே கொண்டாடினார்கள்.
கைலாஷ், மனைவி, மகள், அம்மா மூவருக்குமான சேலையைத் தேர்ந்தெடுத்து, பரிசளித்து இருக்க, சௌந்தரி, கொட்டு அடிக்காத குறையாக, கணவரின் முறைப்பையும் மீறி ,மகன் எடுத்துக் கொடுத்த சேலையைக் காட்டி எல்லாரிடமும் தெரிவித்து விட்டார்.
ஆதிராவிடம், ஆறு வண்ணங்களில் சேலையைக் காட்டி, " பிடிச்சதை, பார்ட்டிக்கு கட்டுக் கண்ணு" எனக் கொடுக்கவும், " பாபா, ஸேரியா, எனக்கா, நான் கட்டினதே இல்லையே. ஆயி இங்க பாருங்க, மஹ்து ஹைனா, படியா மஹ்து. எதைக் கட்ட" என,கண்களை அகல விரித்து அதிசயித்தவள்,பாபாவுக்கு ஒரு முத்தத்தைப் பரிசளித்து விட்டு, மகிழ்ச்சி பொங்க ஆயியிடம் காட்டி நிற்க,
உடல் முழுதும் கொடிக் கொடியாய் ஜரிகை வேலைப் பாட்டோடு அமைந்த, அடர் பிங்க் வண்ணச் சேலையைக் காட்டி, " இது கட்டுடா ரஜ்ஜும்மா, உனக்கு நல்லா இருக்கும்" என்றவர், கௌரியை , ஆதிரா மேல் வைத்துக் காட்டச் சொல்ல, மாராப்பைப் போட்டு, கண்ணாடியில் பார்த்தவளுக்குப் பெருமை பிடவில்லை.
" நான் ரஞ்சிட்ட காட்டிட்டு வர்றேன்" எனச் சேலைகளைத் தூக்க முயல, " ரஞ்சிக்கிட்டையா, அவ அண்ணன்கிட்டையா கண்ணு" என ராஜன் கிண்டலுக்கு , " போங்க பாபா" என , வெட்கத்தோடு ஓட,கௌரி மீதியை எடுத்துக் கொண்டு பின் சென்றார்.
கைலாஷ், பாருவிடம் சேலையை நீட்டியவர், " இதைக் கட்டிக்கிறதில ஒண்ணும் சிரமமில்லையே" என நிஜமான அக்கறையோடே கேட்ட போதும், கேட்ட தொனி, கேலி செய்வது போலிருந்தது. " நீங்க வாங்கிக் கொடுத்து, நான் எப்ப வேண்டாம்னு சொல்லியிருக்கேனாம் . ஃபார் யுவர் இன்பர்மேஷன், இது தான் நீங்க எனக்கு வாங்கிக் கொடுக்கிற முதல் சேலை" என அந்த அடர் சிவப்பில் அடர் பச்சை கரையிட்ட பட்டை ஆசையாகத் தடவிப் பார்த்தவர், " தாங்க்ஸ்" என்றார்.
மனைவியின் முக மாற்றங்களையே பார்த்திருந்த ராஜன், " இருபது வருஷம், உன்ர கூடவே வாழ்ந்திட்டு, எதுவுமே வாங்கிக் கொடுக்காத விட்டுட்டேன் பார். ஊர் உலகத்துக்கே, வகை வகையா துணி நெஞ்சு கொடுத்தும், கட்டினவளுக்குச் சேலை எடுத்துக் கொடுக்க வக்கில்லாதவனாதான இருந்திருக்கேன். என்ன பண்ண சொல்ற" எனக் குத்தலாகவே பேசினார்.
அவர் கையைப் பற்றிய பைரவி," நான் அந்த அர்த்ததில சொல்லலை ராஜ். உங்க கையால சேலை வாங்கிக்க, இப்பதான் வாச்சிருக்கு. " என்றவர், "ரஜ்ஜும்மாவுக்கும், நான் சேலையே எடுத்ததில்லை. நீங்க எடுத்தது தான் முதல் சேலை. எவ்வளவு சந்தோஷமா வாங்கிட்டு போறா." என மகிழ்ந்தவர், மகளின் முகத்திலும் தான் எத்தனை மகிழ்ச்சி, அதுவும் கணவரோடு சேர்ந்து,மகளின் மகிழ்வில்,மகிழ்ந்தது அதனை இரட்டிப்பாகியிருந்தது. இது போல் பிறந்ததிலிருந்து, பெரும்பாலும் தானும் அவள் மகிழ்வில் பங்கெடுத்தது இல்லை என வருந்தியவர், அதையும் அவரிடம் சொல்லவும், தைரியம் வராமல்,
"ஐயம் சாரி. ஒரு நாளைக்கு ஆயிரம் தரம் சொன்னாலும் மீட்க முடியாத நாட்கள்" எனப் பாரு ஏக்கமாகச் சொன்னார். ராஜனும், அதையே தான் நினைத்திருந்தவர்,
" சரி விடுமா.போனதை நினைச்சு என்ன ஆகப் போகுது " என்றவர், " நீ கட்டுற மாதிரி நிறையச் சேரிஸ் எடுத்துட்டு வந்திருக்கேன். அன்னைக்குப் பூக் கொடுத்தாளே, சங்கீதாளு , அந்தப் பொண்ணு வரும். ப்ளவுஸ் எல்லாம் தச்சு வாங்கிங்க. மத்தவிகளுக்கும் துணி வந்திரும்" என விவரம் சொன்னார். கேட்டுக் கொண்டவர், நினைவு வந்தவராக, " நீங்க என்ன ட்ரெஸ் போட போறீங்க. " என ஆவலாகக் கேட்கவும்,
கைலாஷ் கண்கள் மின்ன, " என்ன போடட்டும், நீயே சொல்லு" என மனைவியின் முகத்தையே பார்த்திருந்தார் . " நானும், பத்து நாளா, உங்களைப் பார்க்கிறேன், அதென்ன ஸ்கூல் பையனாட்டமா வெள்ளை சட்டை ,ஏன் கலர் சர்ட் எல்லாம் போட்டா என்னவாம்" எனப் பாரு உரிமையாகக் குறைபடவும்,
“ஸ்கூல் பையனா, எங்கவூர்ல, வெள்ளை சட்டை போட்டாலே, அரசியல்வாதிம்பாங்க, சரி, சரி,உன்ர கண்ணனுக்கு நான் இன்னும், பையனாவே தெரியறனாட்டத்துக்கு” என நகைக்க, ‘இது கொஞ்சம் ஓவர் தான்,ஏன் நீங்க கண்ணாடியே பார்க்கிறது இல்லையோ “ எனப் பாருவும் பதிலுக்குக் கேலி பேச, “கண்ணாடி பார்க்கிறதினால் தானுங்க அம்மணி , தகிரியமா சொல்றேன் ,என்ர ட்ரஸிங் ஸ்டைலை பார்த்து, நிதம் ஒருத்தர் பொண்ணு கொடுக்கிறமுன்னு வர ஆரம்பிச்சிட்டாங்க, இது ஏதுடா தொல்லையின்னு, வெள்ளை டையெல்லாம் அடிச்சு , அப்பா இமேஜ்ஜை மெயின்டைன் பண்றனாக்கும் “ என அவர் பெருமை பேசிக் கொள்ளவும், பாரு அடக்க மாட்டாமல் சிரிக்க, கைலாஷ் அவரையே பார்த்திருந்தார்.
தன் மொபைலை தேடி எடுத்த பைரவி, " அப்பவும் உங்களைப் பீபீ மில்ஸ் யூனிபார்ம் ல தான் பார்த்திருக்கேன். இப்பவும் அதே மாதிரி, வொயிட் யூனிபார்ம்" எனக் குறைப்பட்டு ,பல வண்ணங்களில் சர்ட்களைக் காண்பித்து, தன் சேலையை ஒத்த நிறத்தில்," இந்தக் கலர்ல போடுங்க " எனக் காட்ட, தலையாட்டி ஓர் நமட்டுச்சிரிப்பு சிரித்தார். பார்வையாலே பாரு என்னவென்று வினவ,
" சந்தன்கட்ல , உன்ர தாத்தா சட்டையெல்லாம், எனக்குப் போட்டுவிட்டியே, அதெல்லாம் மறந்து போச்சாக்கும், அதுவும் இல்லாமல் " என ரகசியமாகக் காதிலும் விஷமமாக ஏதோ சொல்ல, பாரு கையில் வைத்திருந்த பட்டுக்கு இணையாக அவர் பட்டுக் கன்னங்களும் நிறம் கொள்ள, அவர் கையில் அடித்தவர், " சுப், சுப், சுப் ரஹியே" என முகத்தை ஒரு கையால் மறைத்துக் கொள்ள, " அப்பப் பார்த்ததுக்கு, இப்ப எதுக்குங்க அம்மணி கண்ணை மூடுறீங்க" என அவர் குலுங்கிச் சிரித்ததில்,
" ஷரம் நஹி ஆத்தி " வெட்கமாயில்லையா என ஹிந்தியில் கேட்க, " எனக்கு எதுக்குங்க அம்மணி வெக்கம், என்ர பொண்டாட்டிகிட்ட தான பேசுறேன்” என்றவர் திடீரென ஞாபகம் வந்தவராக “ ஆஹா , என்ர பொண்டாட்டி, ஹிந்தில பேசுறாளே" என அவர் சந்தன்கட், குகையை நினைவு படுத்த, " ராஜ், மில்லுக்கு நேரமாச்சு. கிளம்புங்க" என அந்தச் சேலையைக் கொண்டே தன் முகத்தை மறைத்தார் பாரு. ராஜன் நிறைவாக , மனைவியைத் தன்னில் நிறைத்துக் கொண்டு, அவரின் சிவந்த கன்ன குமடுகளைக் கிள்ளிக் கொஞ்சி சென்றார். பைரவிக்கும் அந்த நாள் இனிமையான நினைவுகளோடே கழிந்தது.
ராஜனே நேராகச் சென்று, விஜயன் குடும்பத்துக்கே சேலை துணிமணி வைத்துக் கொடுத்து, அழைத்து விட்டு வந்திருந்தார். அதில் விஜயனுக்கும் மற்றற்ற மகிழ்ச்சி. "நீ, என்னை மன்னிச்சு பேசறதே சந்தோசம் தாண்டா " என நெகிழவும், "ஓவரா பண்ணாத, என்ர தங்கச்சிக்காகத் தான் , இறங்கி வந்திருகனாக்கும், நீ செஞ்ச தப்புக்கு, அது நாலு நாள் தண்டனை அனுபவிச்சிடுச்சு " என உருவும்,
"மாம்ஸ், உங்க தங்ச்ச்சி, பேசாதத்துக்கு வீட்டில இருக்க அல்லாரும் தண்டனை அனுபவிச்சிருக்கோம், தெரிஞ்சுக்குங்க " என ரஞ்சி, அம்மா, அப்பா, நடந்து கொண்ட முறைகளைச் சொல்லி கிண்டலடித்தாள்
அபிராம், மாமனுக்கு உதவியாக, பெற்றவர்கள் , திருமண நாள் விழாவைக் கொண்டாட, சகல ஏற்பாடுகளிலும் துணை நின்றான். ஆதிரா சேலைக்குப் பொருத்தமாக நேவி ப்ளு சூட்டில் தயாராக நின்றான். நொடிக்க ஒரு முறை ஆதிராவின் அறைக் கதவைப் பார்த்திருந்தான்.ஆதிரா, அழகுக் கலை நிபுணர்கள் உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். ஆதர்ஷ் போனில் விஜயனுக்கு வாழ்த்துக்கள் சொன்னவன், அபிராமிடமும் , கைலாஷுக்கு உதவி செய்வதற்கு நன்றி சொல்ல, "நீ இல்லாதது மட்டும் தான் மச்சி குறை என உறவு கொண்டாடியவன், "உன்ர தங்கச்சி தான் , இரெண்டு மணி நேரமா ரெடியகுறா, இன்னும் ரூம்பத் தெரிந்த பாடில்லை " எனத் தன் மனக்குறையைக் கொட்ட, ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான்.
அபிராம், மாமன் மகளை எதிர் நோக்கியிருக்க, மாமன் தான், வெண்பட்டு வேஷ்டியும், அடர் சிவப்புச் சட்டையுமாக, மாப்பிள்ளை போல் தயாராகி வந்தார்.
" ஏனுங்க மாமா, இன்னைக்கு ,என்ர அப்பா, அம்மாவுக்குத் தானுங்களே கல்யாண நாளு . நீங்க மாப்பிள்ளையாட்டமா ரெடியாகி வந்திருக்கீங்க. வெள்ளை சட்டை கலரா மாறியிருக்கு, இன்னைக்குக் கதாநாயகன் நீங்க தானாட்டுத்துக்குங்கலே " என அவன் சந்தேகம் கேட்க,
“ஏனுங்க மாப்பிள்ளை , உங்களுக்கு டப் கொடுக்கிறானாக்கும். உன்ர மார்க்கெட்ல கை வைக்க மாட்டேன்,கவலைப் படாத கண்ணு”என அவர் நக்கல் விட, “ இப்பத்த புள்ளைகளெல்லாம் ரொம்ப விவரம் மாமா, அப்படியெல்லாம் ஏமாறாதுங்க” என மாமனை ஒரு லுக் விட,
" அட, மாமனைக் கண்ணு வைக்காத கண்ணு. இப்ப தான் என்ர மகன் ராசாவாட்டமே, வந்திருக்கான். " என்ற சௌந்தரி, கணவரிடம், " கிட்டத்தில ஒரு நல்லா நாளா பாருங்கோ, இவிகளுக்கும் கல்யாணத்தைச் செஞ்சு பார்த்திருவோம், இன்னும் பவானியை காணோம்" எனத் தேட,
" அட மேலுக்கு முடியாத மருமகள், நமக்காக ரெடியாகி வரோணுமில்ல உன்ர மாமியார் புத்தியைக் காட்டாத. பேசாத இரு" என்றார் நாயகம். “ அட, தங்கச்சி என்ன தப்பா சொல்லி போட்டுச்சுன்னு , இப்படி எகிறுற, பவானியை காணமேன்னு கேட்டுச்சு “ எனப் பன்னீர் சப்போர்டுக்கு வந்தார்.
கைலாஷ், ‘இவிக முன்ன, தப்பித் தவறி, பாருவை ஏதாவது சொன்னோம், தொலைஞ்சோம், எங்க இன்னும் அம்மணியைக் காணோம்’ என அவர் அறைக் கதவையே பார்த்திருக்க,
பவானி, வழக்கமான தன் பாணியில் ஒற்றைத் தலைப்பாகச் சேலையைப் பின் செய்து, இடது கையில் சேலை வழிய, வலது கையால் முந்தியைப் பிடித்தவாறு, " லேட்டாகிடுச்சா “ என வேகமாக எட்டுக்களை வைக்க,
நொடியில் மனைவியிடம் சென்ற ராஜன், " மெல்ல வா பாரு. வேகமா நடக்காத" எனத் தோளைச் சுற்றி அணைத்துக் கூட்டி வந்தார். வெகு நாட்கள் கழித்து, கௌரி தன் தீதிக்கு பின்னலிட்டு சௌந்தரி கொடுத்தனுப்பிய ஜாதி மல்லியைச் சிறிய பந்தாகக் கட்டி வைத்து விட்டிருந்தார், அதுவே கைலாஷை கிறங்கடிக்கத் தான் செய்தது, அவர் பிடித்த கைகளிலேயே அழுத்தத்தை உணர்ந்த பைரவி, " ராஜ்" என்றார். " ஒண்ணும் செய்ய மாட்டேன் வா" என ஹாலுக்கு அழைத்து வந்தார்.
விஜயன் குடும்பம் வரவும் , அவர்களை வரவேற்று . திருமண நாள் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ரஞ்சனி தான் பாவாடை தாவணியில் வந்தவள், ஆதிராவை கேட்க, “இன்னும் அம்மணி வரலை” என அபிராம் , அவளிடமும் குறைபட, “பொண்ணுங்க கிளம்ப நேரமாகும் கண்ணு “ எனக் கஸ்தூரியும் மருமகளுக்குச் சப்போர்டுக்குச் செய்தார்.
பெரியவர்கள் தங்களுக்குள் வழக்கம் போல் வம்பிழுத்துக் கொண்டவர்கள், பவானிக்கும் அட்வைஸ் செய்ய மறக்க வில்லை. கஸ்தூரி, “ அண்ணி, உங்களுக்கோசரம் தான், பெரியவிக எல்லாரும்,இந்த ஊர்ல இத்தனை நாள் இருக்காங்கங்க, இல்லைனா வருவங்களாக்கும். எப்பவும் உங்களைப் பத்தியே தான் பேச்சு, உங்களுக்குப் பயந்திட்டு, பெரியம்மாவும், அதையும் சுவீட்டை கூடத் தொடறது இல்லைங்க” எனச் சொல்லிக் கொண்டிருக்க,
“ அதுவும் தான் இனி இல்லையே, ஆறு மாசம் கழிச்சு புருஷன் வருவாருன்னு சொல்லிட்டு இருந்துச்சு, இனி, குன்னூருக்கு ஆள் தேடணும்” என்றார் சாரதா.
“அத்தை, நான் எங்க இருக்கேனா அங்க வந்து இருங்க, நான் உங்களைப் பார்த்துக்கறேன், இதுவும் உங்க மகன் வீடு தானே “ எனப் பவானி உரிமையாகச் சொன்னார் பைரவி.
“ எங்களுக்கு என்னமா, நீ உன் உடம்பை கவனிச்சிக்கிட்டு, மருமகனோட சேர்ந்து இருந்தா போதும், முடியாத காலத்தில் உன்கிட்ட தான் வருவோம்” என்றனர் பன்னீரும், சுப்பிரமணியும்.
ஒரு வழியாக, அபிராமின் பொறுமை எல்லை கடக்கும் முன், ஆந்திராவின் அறைக் கதவு திறந்தது. எல்லாருடைய பார்வையும் அங்கேயே இருக்க, ஆதிரா அடர் பிங்க் வண்ண சேலையில்,அதற்குத் தோதான நகைகளோடு, சிகையலங்காரம்,வண்ணம் தீட்டப் பட்ட பூக்கள் வைத்து அலங்கரிக்கப்பட்ட ஜாடை அலங்காரத்துடன், புதிதாகச் சேலை கட்டியிருந்ததால் தளர் நடையோடும், தன்னையே வெட்கியவளாக நடந்து வர, கையில் கேமராவுடன், வீட்டில் எல்லோரையும், தனியாக, சேர்த்து எனபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த அபிராம் , அவளை இமைக்க மறந்து பார்த்து நின்றான்.
" பாரு, ரஜ்ஜும்மா வைப் பாருவேன் . உன் ஜெராக்ஸ் தான். பஸ்ட் டைம் பார்த்தப்ப, ஷாக் ஆகிட்டேன்" என மகளைப் பார்த்த தருணத்தை மனைவியிடம் பகிர்ந்தவர் , அவள் இறங்கச் சிரமப் படுவதைப் பார்க்கவும், எழுந்திருக்க,
அதற்குள் அபிராம் , இரண்டு எட்டில் அவளை அடைந்தவன், " ஆரா பேபி யூ லுக், ஸோ காட்ஜியஸ்என் கையைப் பிடிச்சுக்கப் பேபி., " என அவளைக் கெட்டியாகப் பிடித்து அழைத்து வர, ஓர் வெட்கப் புன்னகையோடு அவனுடன் இறங்கி வந்தாள். பெரியவர்கள் அத்தனை பேருக்குமே, இவர்கள் பொருத்தமான ஜோடி எனத் தோன்றியது.
கைலாஷ், கீழ் படியில் மகளை எதிர் கொள்ள, “பாபா, நல்ல இருக்கா ” என அவர் கையைப் பற்றினாள் அவளை அனைத்து உச்சி முகர்ந்தவர், “கேக்கணுமாடா, பொண்ணு மயிலு, அப்பா கண்ணே பட்டுடும், உன்னாட்டம் இருக்கையிலே தான்,முதல் முதலா உன் ஆயியைக் கோவில்ல வச்சுப் பார்த்தேன், ஆனால் என்ர மகள் , அவள் ஆயியையும் விட அழகு “ என மனைவியைப் பார்த்துக் கொண்டே சொல்லவும், “ஆமாங்க மாமா “ என அபிராம் ஒத்து ஊத, “நான் சொல்லுவேன், நீ சொல்லக் கூடாது” என மிரட்டினார்.
ஆதிரா, விஜயன் கஸ்தூரிக்கு வாழ்த்துச் சொல்லி, ஆயியிடம் வந்து அமர, தன் கண்ணிலிருந்து மையை எடுத்து, மகளின் காது மடலில் திருஷ்டி பொட்டு வைத்தவர், " உன்னை இப்படிப் பக்கத்திலேயே வச்சு பார்த்துக்கனும்னு தான், ஆயிக்கு ஆசை. " எனக் கண் கலங்கவும், " ஆயி, நீங்க ப்ரேவ் லேடி. இதெல்லாம் உங்களுக்குச் சூட் ஆகவே இல்லை. எப்பவும் போல ஆர்டர் போடுங்க. இல்லை மாஸி" எனக் கௌரியையும் , பேச்சில் துணைக்மு அழைக்க,
" ஆமாம்டா முலே, என் தீதி தனியா போராடும் போது அயன் லேடி தான். இப்ப சாஞ்சுக்க உன் பாபாவோட தோள் கிடைச்சிடுச்சில்ல, இரும்பு உருக ஆரம்பிச்சிடுச்சு" எனவும், " ஓஹோ, இந்தப் பழியும் என்ர தலையில தானா நடக்கட்டும், நடக்கட்டும்" என்றார் கைலாஷ்.
" ரஜ்ஜும்மா, ரஞ்சி, பங்கசனை ஆரம்பிச்சு வைங்க" எனவும், ஓகே மாம்ஸ், என அபிராமுடன் சென்று நடுவில் நின்று கொண்டு, மாற்றி, மாற்றி அறிவிப்பு கொடுத்து, விஜயன், கஸ்தூரியை அழைத்தனர். சத்தியனும்,சங்கீதாவுமாக மேஜையைப் போட்டு, கேக்கை கொண்டு வந்து வைக்க, ஆரவாரமான அறிவிப்போடு, விஜயனின் திருமண நாள் கொண்டாட்டம் நடந்தது.
கைலாஷ், மனைவியைக் கை பிடித்து அழைத்துச் சென்றவர், கஸ்தூரியிடம், " இத்தனை நாள், பிறந்த வீட்டு சீர், ஒத்தையா நின்னு தான கண்ணு உனக்குச் செஞ்சிருக்கேன். இந்தத் தரம், உன்ர அண்ணி வந்துட்டா. இனி வருஷம், வருஷம், நாங்க சேர்ந்தே செய்வோம்" எனப் பெருமையாக அறிவித்தவர், விஜயனுக்குத் தான் ஒரு சங்கிலியையும், கஸ்தூரிக்கு பவானியை விட்டு நெக்லஸையும் பரிசளித்தவர், இரண்டு மோதிரங்களைக் கொடுத்து தம்பதியினரை மாற்றிக் கொள்ளச் சொன்னார்.
ராமசாமியும், பால நாயகமும் நெகிழ்ந்து தான் போனார்கள். "எங்களுக்கு அப்புறம், இந்த நட்பு தொடராதோன்னு, நானும், உங்க அப்பனுமே பயந்து இருந்தோம் மாப்பிள்ளை. இப்ப ரொம்பச் சந்தோஷம்" என ராமசாமி, கைலாஷ் கையைப் பிடிக்க,
" ஏனுங்க மாமா, விஜயனுக்கும், எனக்கும் உள்ள பழக்கம் தெரியாதுங்களா" எனக் கைலாஷ் சமாதானம் சொன்னார்.
பன்னீர், " நாங்க அந்தக் காலத்தில், எங்க நட்பு உறமுறையா மாறனும்னு நினைச்சோம். விஜயன், கஸ்தூரி கல்யாணம் நடந்தது. இன்னைய வரைக்கும் அது தான் எங்களைச் சேர்த்தும் வச்சிருக்கு. அதே மாதிரி தான், ராஜியை உங்களுக்குக் கொடுக்கனும்னு நினைச்சோம் மாப்பிள்ளை, ஆனால் ஒரு கல்யாணத்தை, சரியா நடத்தினவைங்க, உங்க விசயத்தில விருப்பத்தைக் கேட்காத விட்டுட்டோம்" என வருந்தியவர்.
" போனது போகட்டும். இப்ப எதுக்கு இதைச் சொல்றம்னு நினைக்கலாம். திரும்பவும் வரலாறு திரும்புது. நீங்களும், விஜயனும் சம்பந்தியாகனும்னு எங்களுக்கு விருப்பம். ஆனால் உங்க பையன்,புள்ளையை ஒரு வார்த்தை சம்மதமான்னு கேட்டுக்குங்க. " எனப் பன்னீர் முடிக்க,
பாலநாயகம், " பவானி, என்னம்மாசொல்ற" என மருமகளைக் கேட்டார். " எங்க மகளுக்கு, அபிராமை விட, நல்ல மாப்பிள்ளை , இப்படிக் குடும்பம் கிடைக்காது மாமா . பாய்சாப் முந்தியே என்கிட்ட கேட்டாங்க. நான் தான் என் குடும்பப் பின்னணியை நினைச்சு யோசிச்சேன்" என்றவர்,
"இப்பவும் கேக்கிறேன் தங்கச்சிமா, எதுவா இருந்தாலும், உங்களோட தோள் கொடுக்க நாங்க தயாரா இருக்கோம். தயக்கமில்லாமல் உங்க மக்களை, என்ர மகனுக்குக் கொடுங்க" என விஜயனும்,
"ஆமாங்க அண்ணி, எனக்கு அண்ணன் மகள், என்ர பொண்ணாட்டம் நான் பார்த்துக்குரேன்" எனக் கஸ்தூரியும் கேட்கவும், " எனக்கும் சந்தோசம் தான் பாபி, அப்பாவும், மகளும் முடிவெடுக்கட்டும்" என்றார் பைரவி. ராஜனும் முடிவு சொல்லாமல் யோசித்தார்.
ஆதிரா, “ பாபா,நான் ஏற்கனவே சொன்னது தான், ஆயி, பாபா, அஜ்ஜோ, ஆத்தாவோட சேர்ந்து ஒரு வருஷமாவது வாழனும். எனக்குன்னு ஒரு தனி ஐடென்டிட்டி வேணும்" என அவள் நிபந்தனையிட, முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகம் சுணங்கிய அபி, அவளது ஒரு ப்ளீஸில் கவிழ்ந்தான். " சுத்தம்டா,மாப்பிள்ளை, இதிலையும் மாமனாட்டமே இருக்கியே" எனக் கமெண்ட் அடித்த ராஜன் , விஜயன், கஸ்தூரியிடம், “ நானும் என்ர மகளை,பக்கத்தில வச்சுச் சீராட்டிக்கிறேன், ஒரு வருஷம் கழிச்சு உங்க மருமகளாக்கிங்க “ என்றார்.
No comments:
Post a Comment